கடந்த டிசம்பர் மாதம் எங்கள் திரைப்படத்திற்காக ஒரு பங்களா லொகேஷன் பார்க்க, ECRல் அலைந்துவிட்டு வரும் வழியில் 'நம்ம வீடு வசந்த பவன்'ல் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, எனது நண்பர் அஷோக் ஃபோன் செய்து அன்று மாலை திரையிடப்படவிருக்கும் ஒரு ஸ்பெஷல் ஷோவிற்கு வருமாறு அழைத்தார்... என்ன படம் என்ற கேட்க, பயங்கர சஸ்பென்ஸ் வைத்தார்... நானும் ஏதோ ரிலீசாகாத படமாய் இருக்குமோ என்றெண்ணியிருக்க.. இது ஒரு மைல்ஸ்டோன் மூவியின் ரீ-ரிலீசுக்காக போட்டப்படும் ஸ்பெஷல் ஷோ என்றார்... என்ன என்று ஒருவாறு சஸ்பென்ஸ் வைத்தபடியிருக்க, அன்று மாலை, எனக்கும், என் நண்பர்களுக்கும் (ஹரி, சதீஷ்) உண்மையிலேயே ஒரு ஸ்பெடஷல் ட்ரீட்டாய் அமைந்தது. காரணம், அன்று மாலை திரையிடப்பட்ட அந்த மைல் ஸ்டோன் படம் 'சங்கராபரணம்' (டிஜிட்டல் வர்ஷன்).
ஒரு உண்மை என்னவென்றால், நான் இதுவரை இந்த படத்தை பார்த்ததில்லை. எனது மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான திரு.K. VISWANATH அவர்களின் இயக்கத்தில் வந்த இத்திரைப்படத்தை வெகுநாட்களாகவே பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன், அதை டிஜிட்டல் வர்ஷன் வடிவில் காணக்கிடைத்தது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் மிகவும் ரசித்து பார்த்தேன்.
ஏற்கனவே வந்த 'சங்கராபரணம்' தமிழ் வெர்ஷனில் பாடல்கள் அனைத்தும் தெலுங்கிலேயே இருந்தது ஒரு அழகென்றால், இம்முறை அதையே தமிழ்ப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருந்தனர்.
பொதுவாக இது போன்ற மாஸ்டர் பீஸ்களை டிஜிட்டைஸ் செய்யும்போது கெடுத்துவிடுவார்கள்... ஆனால், இக்குழுவினர், மாஸ்டர் பீஸை நேர்த்தியாக கையாண்டிருந்தில் உறுத்தாத கிரேடிங், காது கிழிக்காத டிஜிட்டைசேஸன் ரசிக்கும்படியாக இருந்தது.
சிறுவயதில் நான் பார்த்த அல்லது பார்க்காத படங்களுக்கு பெரும்பாலும், டெக்னிக்கல் ப்ரொஃபைலை உற்று நோக்கியதாய் எனக்கு நினைவில்லை, அப்படித்தான் இந்த படத்திற்கு பாலு மகேந்திரா சார் கேமிரா என்று டைட்டிலில் பார்த்தபோது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது... சென்ற வாரம், உஅவரது மறைவை கேட்டு வருந்தியபோதும், எனக்கு சமீபத்தில் நான் பார்த்து ரசித்த இந்த படம்தான் நியாபகம் வந்தது. இப்படத்தில் BMசார் டச் நிறைய இடத்தில் சற்று குறைவே என்றாலும் இயக்குனர் ரசனைக்கேற்ப அழகாக கையாண்டிருந்தார்...
அதே போல் இப்படத்தின் இசை நான் இத்தனை நாளாய் இளையராஜா சார் என்றுதான் நினைத்து வந்தேன், டைட்டிலில் KV MAHADEVAN சார் பெயரை பார்த்ததும் மேலும் ஆச்சர்யம்...
படத்திற்கு STANDING APPLAUSE கிடைத்ததொன்றும் பெரிய விஷயமில்லை... தன்னை மறந்து கைதட்ட படத்தில் நிறைய காட்சிகள் இருந்தது உதாரணத்திற்கு சங்கரா சாஸ்த்ரிகள் ஒரு இடத்தில் எதிர்வீட்டில் மேற்கத்திய இசையை பழகும் ஒரு இளைஞர் கூட்டத்தை எதிர்கொள்வார்... அவர்கள், WESTERN MUSIC மிகவும் கடினம், கர்நாடக சங்கீதத்தை யார் வேண்டுமானாலும் பாடிவிடலாம் என்று சவடால் விடும் இடத்தில், சங்கரா சாஸ்த்ரிகள் அனாயசமாக மேற்கத்திய இசையை பாடிகாட்ட, பதிலுக்கு ஒரு இளைஞன் ஒரு ஆலாபனையை முயன்று வராமல் தோற்கும் காட்சி... Chanceless...
அந்நியன் படத்தில் விக்ரம் ட்ரெய்னில் தூங்கும்போது, 'மானஸசஞ்சரரே' என்று பாட ஆரம்பிப்பார்... அந்த பாடலின் ஒரிஜினல் இந்த படத்தில் பார்க்கும்போதுதான், என்ன ஒரு அருமையான பாடல் என்பது புரிந்தது. காட்சிப்படுத்திய விதமும் அருமை...
குறிப்பாக ஒருவரை பற்றி சொல்லியாக வேண்டும், இந்த படத்தில் சங்கரா சாஸ்த்ரிகளிடம் சிஷ்யனாய் வந்து சேரும் ஒரு சிறுவனின் நடிப்பு அபாராமாய் இருந்தது, அன்றே அப்படியென்றால், இன்றுவரையும் அந்த சிறுவன் அபாரமாய் நடித்து வருகிறான்.. அது யார் தெரியுமா..? சமீபத்தில் வெளியாகிய பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பண்ணையாரின் மனைவியாய் வந்து தனது தனிப்பெரும் நடிப்பால், பலரது இதயத்தை கொள்ளை கொண்ட துளசி அவர்கள்தான்.
நமது பாரம்பரிய இசையை பற்றி தெரிந்து கொள்ள இந்த ஒரு படம் நிச்சயம் யாருக்கும் ஒரு உந்துதலாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை...
பார்த்த அனைவரும் இந்த அற்புதமான திரைப்படத்தை தற்போது எடுத்து டிஜிட்டைஸ் செய்த தயாரிப்பாளரை மிகவும் பாராட்டினார்கள்... அவர்களிடம் நாங்கள் பேசியபோது, படத்தை சங்கீத சீசனில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாகவும், ஆனால், வேலைகள் அதிகம் இருந்ததால் 2014ல், பிப்ரவரிக்கு பிறகே ரிலீஸ் செய்யவிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
ரிலீஸ் ஆனதும், நிச்சயம் மீண்டும் ஒருமுறை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும்...
இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அழைத்த எனது நண்பர் அஷோக்கிற்கு மீண்டும் எனது நன்றிகள்...
Image Courtesy : www.flixcart.com, www.top10cinema.com
அன்புடன்
ஹரீஷ் நாராயண்