கடவுள்கள் வாழும் பிரதேசத்தில்... ஒரு நாள்...
'தேவி..??', என்று கடவுள் தன் துணைவியை அழைக்க....
'சொல்லுங்கள் மஹாபிரபு..?'
'கலி முத்திவிட்டது...'
'எதை வைத்து சொல்கிறீர்கள்..?'
'இன்னுமா உனக்கு புரியவில்லை..?'
'உலகம் வெப்பமயமாதல் அதிகரித்துவிட்டது.. விவசாயம் அழிந்தேவிட்டது.. மனத்தைவிட பணம்தான் முக்கியம் என்றெண்ணுபவர்கள் எண்ணிலடங்காமல் போய்விட்டனர்... மனிதநேயம் வெறும் வெற்றுச்சொல் ஆகிவிட்டது... எமனின் தரகர்களான கொலைகாரர்கள் அதிகமாகிவட்டார்கள்... பேரழிவுகள் பெருகிவிட்டது... நம் பெயர் சொல்லி ஊரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்... குழந்தையும் நாமும்(தெய்வமும்) ஒன்று என்று தெரிந்தும்.. குழந்தைகளுக்கு எதிராய் பாலியல் வன்முறைகள் தலைவிரித்தாடுகிறது.... தீவிரவாதம் எல்லாம் மிக சிறிய குற்றமென எண்ணுமளவிற்கு சமுதாயத்திற்குள்ளே ஆபத்துகள் அதிகரித்துவிட்டது...'
'சரிதான் பிரபு... இப்போது என்ன செய்வது...'
'முத்திவிட்ட கலிக்கு 'முற்றும்' போட வேண்டிய நேரம் வந்துவிட்டது..'
'பிரபு... அப்படியென்றால் தாங்கள் புதிய அவதாரமெடுத்து போய் பூவுலகை அழிக்க போகும் நேரம் வந்துவிட்டதா..?'
'ஆமாம்..'
'ஆனால்...'
'என்ன ஆனால்..?'
'உங்களுக்கு நீங்கள் அவதாரம் எடுக்கப்போகும் நிபந்தனைகள் தெரியும்தானே..'
'ஏன் தெரியாமல்..? அனைத்தும் யாம் அறிவோம்...'
'இருந்தாலும் எனக்காக ஒருமுறை என்னிடம் அந்த நிபந்தனைகளை கூறுங்களேன் பிரபு..?'
'ஹ்ம்ம்.. ஆகட்டும்... ஆண்டவனே ஆனாலும் அண்டசராசரத்தை ஆளும் ஆதிசக்தியின் ஆட்சிக்கு கட்டுப்பட்டவனான நான்... அவதாரமெடுப்பதற்கு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவனாகிறேன்... கேள் தேவி...'
'நிபந்தனை #1 மகாவதாரமென்றாலும்... மனிதியின் வயிற்றில்... மாதங்கள் ஈரைந்து கருச்சிறையுற்றுத்தான் பிறக்க வேண்டும்...'
'நிபந்தனை #2 நான் மனிதியின் வயிற்றில் கருவுற்றதும்... 'கடவுள்' என்ற எனது அந்தஸ்து பறிக்கப்படும்.. அதாவது நான் வயிற்றில் இருக்கும் நாட்கள் வரை எனது மந்திர தந்திர ஜாலங்கள் பலிக்காது... நான் பிறந்த பிறகு.. அதாவது.. என் பூத உடலின் மீது சூரிய ஒளி பட்டபிறகே எனது அவதாரம் மீண்டும் முழு சக்தியை பெறும்...'
'அதுவரை நான் உங்களை பிரிந்திருக்க வேண்டுமே சுவாமி..?'
'கடமையின் பொருட்டு இந்த பிரிவை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும் '
'ஆகட்டும் பிரபு... மனிதனாய் பிறந்ததும் தங்களுக்கு மீண்டும் அனைத்தும் சக்திகளும் வசமாகிவிடும்... பிறகு தாமதமில்லாமல் சட்டுபுட்டென்று வேலையை முடித்துவிட்டு திரும்பிவிடுங்கள்... அவதாரத்தை காரணமாக வைத்து இன்னொரு திருமணம் செய்து கொள்ளக் கூடாது.. நியாபகம் இருக்கட்டும்...'
கடவுள் தொண்டையை செருமியபடி.. 'ஆகட்டும் தேவி... சென்று வருகிறேன்...'
சில விநாடிகளுக்கு பிறகு..
ஸ்தூல உருவில் கடவுள் பூலோகத்தில் அங்குமிங்குமென்று டிராவல் ஆகி... முட்டி மோதி... எங்கெங்கோ அலைந்து திரிந்து... முடிவில் ஒரு கருவறைக்குள் நீந்திச்சென்று முந்தியடித்துக் கொண்டு கருமுட்டையை உடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்துக் கொண்டார்...
சுற்றிலும் காரிருள்.... முற்றிலும் மரண அமைதி...
வயிற்றுக்குள் கேட்கும் விநோத சப்தங்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தன...
கடவுளின் மைண்ட்வாய்ஸ்
'ஒருவழியாக கருமுட்டையில் இடம் கிடைத்தது... சே...எத்தனை போட்டி... நான்கு கோடி ஆன்மாக்களை முந்தியடித்துக் கொண்டு... உள்ளே புகுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...'
அப்போது வெளியே ஒரு பெண்குரல் கேட்டது...
'ஐ லவ் யூ டா..?'
'லவ் யூ டூ டார்லிங்..?'
கடவுளின் மைண்ட்வாய்ஸ்
'இதோ இப்பிறவியில் என் அன்னை மற்றும் தந்தையின் குரல்... கடவுளே தமக்கு மகனாய் வந்து சூலுற்றிருப்பதை பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்... தெரிந்தாலும்.. சந்தோஷப்படுவதற்கில்லை.. காரணம்... இம்முறை நான் பிறக்க போவது... உலகை அழிக்க என்று தெரிந்தால்... யார்தான் மகிழக்கூடும்...'
இரண்டு வாரங்களுக்கு பிறகு...
அந்தர்யாமியாய் அணுவுக்குள் நுழைந்த கடவுள்... அணுசக்தியின் வீர்யம் விஸ்தரிக்க... மெல்ல மெல்ல... பல்கி பெருகி.. பல அணுக்களாய் பிரிந்து.. கடவுளுக்கு இயற்கை... பிறப்புக் காரியம் நடத்திக் கொண்டிருந்தது... கருவறை எனும் காரிருள் பிரதேசத்தில்... கடவுளுக்கே பயம் வருமளவிற்கு இருள்படர்ந்திருந்தது
கடவுள் மைண்ட்வாய்ஸ்
'நான் இம்மாதர் மடியில் பிறக்கும்வரை.. எனது தேவியுடன் தொடர்பு கொள்ள இயலாது... என்ன செய்ய.. மனதினாய் பிறக்கும்போது கர்மாக்களுக்கு கட்டுண்டு நடக்க வேண்டியது என் கடமையாகிறது...'
இப்படி அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது.. திடீரென்று கருவறையில் நில அதிர்வு போன்றதொரு நடுக்கம்...
'அது என்ன இப்படி ஒரு நடுக்கம்..?'
அந்த நடுக்கத்தை தொடர்ந்து.. வெளியிலிருந்து 'உவ்வேக்க்...உவ்வேக்க்...' என்று சத்தம்...
'கருவுற்றிருப்பதால் என் தாய் ஒவ்வாமையின் காரணமாய் வாயிலெடுக்கிறாள்...'
சிறிது நேரத்திற்குப்பின் அந்த பெண்மணி யாரிடமோ ஃபோனில் பேசும் குரல் கேட்டது...
கடவுளின் தாய் குரல் - 'ஹலோ..?'
ஃபோனில் தந்தையின் குரல் - 'எதுவாயிருந்தாலும் வாட்சப்ல வா...'
கடவுளின் தாய் குரல் - 'உங்கிட்ட ஒரு முக்கியமான மேட்டர் பேசனும்..'
ஃபோனில் தந்தையின் குரல் - 'பரவால்ல வாட்சப்ல வா..?'
கடவுளின் தாய் குரல் - 'நான் சொல்றதை கொஞ்சம்...'
ஃபோனில் தந்தையின் குரல் - 'ஜஸ்ட் கம் ஆன்லைன்...'
ஃபோன் துண்டிக்கப்படும் சத்தம் கேட்டது.. அதன்பிறகு... வேறெந்த குரலும் கேட்கவில்லை.. தொடர்ந்து மொபைலில் சேட் செய்யும் ரிங்டோன் மட்டும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தது...
கடவுளின் புதிய அவதாரத்திற்கான ஆயத்தப்பணிகள் அதிவேகமாய் அரங்கேறிக்கொண்டிருக்க... ஐந்து வாரங்கள் கடந்திருந்த வேளை...
'இதோ... என் இதயம்... உருவாகி... துடிக்க துவங்கிவிட்டது.. இதயம்... கருணையும் காதலும் கலந்து செய்த கருவி... காலமெல்லாம் குருதியோட்டத்திற்கு
வழிவகுக்கும் வரப்பிரசாதம்... இனி யாரும்.. என்னை இப்பிறவியில்.. இதயமற்றவனா நீ.. என்று திட்டுவது தர்க்கரீதியில் பொருந்தாது...'
இப்படி நாட்கள் நகர நகர... நாசி... நாபிக்கமலம்... கண்.. காது.. மூக்கு... என்று ஒவ்வொரு உறுப்புகளையும் எண்ணி... கடவுள் சிலாகித்துக் கொண்டிருந்தார்...
மேலும் ஒரு வாரங்கள் இருளோடிருளாய் கடந்தோடின
ஒரு நாள்... வெளியில் மிகவும் சத்தமாய் இருந்தது...
'எங்கோ கூட்டநெரிசலான இடத்திற்கு என் தாய் வந்தடைந்திருக்கிறாள். இது போன்ற வேளையில் அங்குமிங்கும் அலையலாமா... என் தந்தைதான் இதை அனுமதிக்கலாமா..? மகப்பேறு-ன் மகத்துவம் தெரியாமல் மாணிடர்கள் ஏன்தான் இப்படி நடந்து கொள்கிறார்களோ..?'
அதே நேரம் வெளியில் தந்தையின் குரல் மூச்சிரைத்து ஓடிவந்து பேசுவதுபோல் கேட்டது..
'ஹே சாரிப்பா.. போலாமா..?'
'என்னடா.. இவ்ளோ லேட்டா வர்ற... எனக்கு இங்க தனியா நிக்கிறதுக்கு எவ்ளோ பயமாயிருக்கு தெரியுமா.. யார்னா பாத்துட்டாங்கனா..?'
'அதான் வந்துடேன்ல..'
சிறிது நேரத்திற்கு பிறகு...
டாக்டர் குரல் - 'வாங்க... வாங்க.. ரிப்போர்ட்ஸ்லாம் பாத்தேன்... ட்ரெமெஸ்டர் சார்ட்படி ஒண்ணும் பிரச்சினையில்லதான்..?'
தந்தை குரல் - 'தேங்க்ஸ் டாக்டர்...'
டாக்டர் - 'நல்லா டிசைட் பண்ணிட்டுதான் வந்திருக்கீங்களா..?'
தந்தை குரல் - 'யெஸ் டாக்டர்..'
'ஓகே... உங்க ஹஸ்பெண்ட்-கிட்ட அஃபிஷியலா நான் கொஞ்சம் கவுன்சிலிங் கொடுக்கனும்..? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..?' என்று கூறியபடி டாக்டர் வெளியேறும் சத்தம். அதை தொடர்ந்து...
என் தாய்... தந்தையிடம், 'என்னடா... ஹஸ்பெண்ட்-னு சொல்லியிருக்க..?'
'பின்ன.. உன் ஃப்ரெண்ட் ஹஸ்பெண்ட்-னு உண்மைய சொல்ல சொல்றியா..? கண்டுக்காத... என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு வந்துடுறேன்...' என்று கூறி... தந்தையும் வெளியேறும் சத்தம் கேட்டது...
கடவுளின் மனம் குழம்பியிருந்தது... இப்படி தப்பான ஒரு உறவுமுறையில் கலந்திருக்கும் ஆண் பெண்ணிடம் வந்து பிறக்கவிருக்கிறோமே.. என்றவர் உள்ளம் கலங்கியிருந்தது...
நரகமாய் சில மணித்துளிகள் நகர்ந்தது... மருத்துவ அறையில் மரண நிசப்தம்... ஆங்காங்கே ஏதோ எலக்ட்ரானிக் கருவிகள் எழுப்பும் பீப் சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது.. அதை தவிர.. ஹம்ம் என்று ஏசியின் சத்தம் கருவறைக்குள் இருக்கும் மௌனத்தை ஒத்தேயிருந்தது... அந்த அம்மாவுடன் சேர்ந்து கருவுக்குள்ளிருந்து கடவுளும் காத்திருந்தார்...
டாக்டர் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் சத்தம் கேட்டது..
'உங்க ஹஸ்பெண்ட் ரொம்ப அடமண்ட்டா இருக்காரு... நீங்களும் இதுக்கு ஓகே-ன்னு சொல்றார்... உண்மைதானே..?' என்று டாக்டர் கேட்க...
என் தாய், 'ஆமா... டாக்டர்.. நானும் அவரும் இதை பத்தி நிறைய பேசிட்டோம்... எங்களுக்கு இந்த குழந்தை வேண்டாம்... ஐ வான்ட் டு அபார்ட்..'
கடவுளின் தலையில் இடி விழுவுது போல் உணர்ந்தார்... கத்த வேண்டும் போல் இருந்தது..
'குழந்தை வேண்டாமா... அம்மையே நான் யார் தெரியுமா..? தெரிந்தால் இப்படி செய்வாயா..? நான் உன் வயிற்றில் பிறக்க மட்டும் வரவில்லை... அவதாரமெடுக்க வந்திருக்கிறேன்.. இந்த உலகையே அழித்து புத்துயிர் கொடுத்து புதிதாய் துளிர்விட இயற்கை என்னை ஏவி விட்டிருக்கிறது... என் அழித்தல் கடமையிலிருந்து என்னை கலையச் செய்யாதே... மாதர்குல தெய்வமே.. உன்னை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்... என்னை மரணிக்காதே.. நான் பிறந்ததும் கடவுள் சக்தி பெற்றுவிடுவேன்... உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் தருகிறேன்... என்னை கொலைக்காதே..?'
ஆனால், கடவுள் தனது தேவியின் துணையின்றி... இரண்டில் ஒரு பேட்டரி கழற்றிய கடிகாரம் போல் செயலற்று போயிருந்ததால் அவரது குரல்... அந்த பெண்ணிற்கு எட்டவில்லை... அந்த டாக்டருக்கும் எட்டவில்லை...
அண்டத்தையே ஆளும் ஆண்டவன் அந்த பெண்ணின் வயிற்றில் பிண்டமாய் உழன்று கொண்டிருப்பதை யாரரிவார்...
டாக்டர் - 'ஓகே.. இப்படி படுத்துக்கோம்மா... சிஸ்டர் வாக்யூம் ஆஸ்பிரேஷன் ப்ரொசிஜருக்கு தயார் பண்ணுங்க..?'
எமனாவது பிறந்த உயிர்களையே கொல்வான்... பிறப்பதற்கு முன்பு பிண்டத்தையே கொல்லும் எமனிடமும் இல்லாத கொலைக்கருவிகள் இந்த டாக்டர்களிடமிருந்தது...
சில நிமிடங்களில் ஒரு வெளிச்சப்புள்ளி கடவுளுக்கு தெரிந்தது... அதன் வழியே ஏதோ ஒரு புதுவிதமான உலோகம் உள்நுழைந்து கடவுளை அண்டியது...
ஒரு ஸ்விட்ச் தட்டும் சத்தம்... அதை தொடர்ந்து... அந்த கருக்குடத்திற்குள் ஒரு மாபெரும் சுனாமி அரங்கேறியது...
கடவுள் கண்களை மூடி அமைதியாய் மனதிற்குள் புன்னகைத்து கொண்டார்
'இனி என்னை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது..'என்று தர்க்கமற்ற வார்த்தைகளை நினைத்துக் கொண்டார்..
கலியுகத்தில் ஆண்டவனே அவதரிப்பதென்றாலும் ஆபத்துதான்...
என்று அவர் மேலிடத்தில் கொடுக்க வேண்டிய ரிப்போர்ட்டின் வெர்டிக்ட்-ஐ நினைத்துக் கொண்டார்...
***நிறைவு***
Womb Pictures Courtesy : www.babycenter.com