Monday, April 12, 2010

கள்ளிக்காட்டு இதிகாசம் [புத்தகம்] - ஒரு பார்வை


ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. 'இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள் இந்த இதிகாசம் நடக்கும் காலத்துக்குள் நம்மை அழைத்து செல்கிறார்.

பசுமையாய் இல்லையென்றாலும் பாசமுள்ள மனிதர்களைக் கொண்ட ஒரு வெயில்காட்டு பிரதேசம் - கள்ளிப்பட்டி, இந்த ஊர், அரசாங்க அதிகாரத்தாலும், அணைக்கட்டு அலைகளாலும் ஆட்கொள்ளப்படவிருக்க, அங்கு வசிக்கும் மக்கள் சொந்த ஊரை விட்டு தாய்நாட்டிலேயே அகதிகளாய் அலைந்து திரியப்போகும் கொடுமையை எண்ணியபடி வெளியேறும்போது, அந்த  மண்ணை விட்டுப்பிரிய மனமில்லாத ஒரு 70வயது விவசாயிக்குள் நடக்கும் எண்ணப்போராட்டமே இந்த கள்ளிக்காட்டு இதிகாசம்.

கடைசிப் பக்கத்தை படித்து முடித்த, ஒரு கனத்தமனத்தோடு, இந்த புத்தகத்தை இன்னும் பலர் படிக்கவேண்டும் என்று பரிந்துரைசெய்ய ஆவல் எழுப்பியது இந்த நூலின் சிறப்பேயன்றி வேறென்ன சொல்ல... வைரமுத்து அவர்களின் முத்தான வரிகளைப்பற்றி நான் சொல்லித்தான் இனி யாரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனகிற அவசியமில்லை என்பதால் இந்த நூலின் சில சிறப்பம்சங்களை மட்டும் கூறிச்செல்கிறேன்.

இதுவரை சினிமாவில் நாம் பார்த்த பசுமையான கிராமங்களைப் போலில்லாமல், கத்தாழைச்செடிகளும், மொட்டைப்பாறைகளும், ஓணான்களும் மட்டுமே அடையாளங்களாக இருக்கும் கள்ளிப்பட்டி என்ற ஊரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

70 வயது 'பேயத்தேவர்' - இந்த கதையின் நாயகன். கள்ளிக்காட்டு வெயில்வரப்பில், உழுதுண்டு வாழும் விவசாயி. இவரது காதல், உழைப்பு, அனுபவம், சோகம், நேர்த்தி, நிபுணத்துவம் இப்படி எல்லாவற்றையும் பற்றி கூற, ஒரு விவசாயியின் வாழ்க்கையை நாம் உடனிருந்து வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை நமக்கு இந்த நூல் கொடுக்கிறது.

சாராயம் காய்ச்சுவது, முகச்சவரம் பண்ணுவது, சுடுகாட்டில் பிணத்தை எரிப்பது, கிணறு வெட்டுவது, அணை கட்டுவது, கோழிச்சாறு சமைப்பது இப்படி பல தகவல்களை அனாசயமாக அள்ளித்தெளிக்கிறார் கவிப்பேரரசு. இதற்காக அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை முன்னுரையில் தெளிவாய் விளக்கியுள்ளார்.

நூலில் ஒரு அத்தியாயத்தில், வெளியூரில் இருக்கும் ஒரு கணவன், தன் மனைவியின் இறந்த செய்தியை தெரிந்துக் கொண்டு, வீட்டை நோக்கி பயணிப்பான். அப்படி அவன் பயணப்படும்போது அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையை ஒவ்வொரு கிலோமீட்டரிலும் எண்ணி எண்ணி அழுதபடி தனது நண்பனிடம் புலம்பிக்கொண்டு போவது மிகவும் கனமான ஒரு பகுதியாக இருந்தது.

உதாரணம் :
"அவ சொன்ன பக்குவம் கேட்டுக் கோழிக்கொழம்பு வச்சிர்லாம்... ஆனா மீன்குழம்பு அவதான்ய்யா வக்கணும். மீன் வாங்கியாந்து குடுத்தா உடனே ஒரசிட மாட்டா. மீனக் கவுளத்தூக்கிப்பாப்பா. உள்ள ரத்தப்பச இருந்தாத்தான் நல்லமீனும்பா... இல்லாட்டி செத்த கழுதைக்குச் சிங்காரம் எதுக்குன்னு தூக்கிப் போட்டுருவா. ஒத்தமீன்ல கொழம்பு வச்சாலும் வந்தது போனதெல்லாம் தின்னதுபோக யாருக்குந் தெரியாம ஒருகை சாறெடுத்து உறியில வச்சிருவா. மறுநா காலையில 'இந்தா ஆம்பள... ஒனக்குத்தான்'னு சொல்லி உறிக்கொழம்பெடுத்து ஊத்துவா. அதுல பாருங்க... அவ ஒளிச்சுவச்ச குழம்புலயும் ஒரு துண்டு கெடக்கும். குழம்புவச்ச பெறகுங்கூட மீனு குட்டிகிட்டி போடுமா..? இப்படி வீட்டுக்கு வேலைக்காரியா வந்த தெய்வம் செத்துக் கிடக்குது... இதோ... இன்னும்... அரைமைல் தூரத்தில்.."
இதுபோல் தன் மனைவியின் அருமையை சொல்லிப் புலம்பும் பகுதி நெஞ்சை வருடுகிறது.



இந்த புத்தகத்தைப் பற்றி திரு.வைரமுத்து அவர்கள் கூறியுள்ளது...
"1958இல் வைகை அணை கட்டி முடிக்கப்பட்டு, அதன் நீர்பிடிப்புப் பகுதிக்குள் இருந்த சிற்றூர்கள் இந்திய வரைபடத்திலிருந்து துடைக்கப்பட்டபோது அழுது கொண்டே ஊரைவிட்டு வெளியேறும் அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டே இடுப்பளவுத் தண்ணீரில் கையைப் பற்றிக்கொண்டே இடுப்பளவுத் தண்ணீரில் நனைந்த கால் சட்டேயோடு தானும் அழுது வெளியேறுகிறார் ஓர் ஐந்து வயதுச் சிறுவன்.

இடம் பெயர்த்து நடப்பட்டதில் அவன் வாழ்க்கை வாடிக்கொண்டே வளர்கிறது.

அவன் வளர வளர தண்ணீர்ச் சமாதியில் புதைந்துபோன தனது ஊரை, பாறைகளில் அமர்ந்து பெருமூச்சோடு பார்த்துவிட்டு வருகிறான்.

வறண்ட கோடைகளில் தண்ணீர் வற்ற வற்ற புதைக்கப்பட்ட ஊர் லேசாய்க் கை, கால், முகம் காட்டும்; அப்போதெல்லாம் அந்தச் சுவடுகளைத் தடவித் தடவிப் பார்த்து ஆசைதீர அழுதுவிட்டு வந்திருக்கிறான்.

நிறைபெருக்காக நீர் நிறைந்திருக்கும் கால்ங்களில் வைகை அணையின் தமகுமேடுகளில் ஏறி நின்று கொண்டு, ' அதே! அங்கே கொக்கோ குருவியோ பறக்கிறதே! அதற்குக் கீழ்தான் எங்கள் ஊர்' என்று நண்பர்களுக்கு ஆசையோடும் துயரத்தோடும் அடையாளம் காட்டியிருக்கிறான்.

42 ஆண்டுகளாய் நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரத்தை ஆனந்தவிகடனின் பவளவிழாவில் இறக்கி வைக்குமாறு காலம் அவனுக்கு கட்டளையிட்டது.

எழுதினான்; அவன் பெயர் வைரமுத்து.
எழுதப்பட்டது; அதன் பெயர் - 'கள்ளிக்காட்டு இதிகாசம்' "

இப்படியாக முன்னுரைப் பகுதியில் திரு.வைரமுத்து அவர்கள், இந்த புத்தகம் எழுதிய மனநிலையை சொல்கிறார்.

இதைப் படிப்பவரின் கண்ணீர்துளியின் உப்புச்சுவையை புத்தகத்தின் ஒருசில பக்கங்களாவது கண்டிப்பாக சுவை பார்க்கும்.  புத்தகம் படித்து முடிக்கும்போது, அணைக்கட்டில் புரண்டோடும் வெள்ளத்தில் நம் உணர்வும் புரண்டோடும். நம மனமும் கள்ளிக்காட்டு தடயங்களை தேடும்.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வாசித்துப் பாருங்கள்!

இந்த நூலை சிறப்பிக்கும் வகையில், 2003ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

புத்தகம் கிடைக்குமிடம்
திருமகள் நிலையம்
16, வெங்கட்நாராயணா சாலை
தி-நகர், சென்னை - 17
போன் : 24342899, 24327696
ரூபாய் : 130/-


Signature

17 comments:

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு.ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது படித்தது. உள்ளூர்காரர்கள் உயிரையும், உடமைகளையும் எடுத்துதான் பல ஊர்களுக்கு நீர் கொடுக்குது அணையும், அரசாங்கமும்.... எங்கள் ஊருக்கும் இந்த வரலாறு இருக்கிறது. :((

நாடோடி said...

ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌ம்.... ப‌டிக்க‌ வேண்டிய‌ நூல்க‌ளுல் இதுவும் ஒன்று....

சீமான்கனி said...

நல்ல பகிர்வு ஹரீஷ்,
நான் மிகவும் ரசித்து படித்த புத்தகம்...நானும் அந்த மண்ணை சேர்ந்தவன் என்று சொல்லிகொள்வதில் பெருமை...இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் பொது நானும் கருவாச்சியோடு ஒரு வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தை தந்து விடுகிறார் கவிபேரரசு...ஒவ்வொரு பாத்திரமும் இன்னும் நெஞ்சில் இல்லை கண்ணிலும் நிற்கிறது... மின் புத்தகம் வேண்டுவோர் மெயில் பண்ணவும்...
seemangani@gmail.com

சீமான்கனி said...

பகிர்வுக்கு நன்றி ஹரீஷ்...
மின் புத்தகம் வேண்டுவோர் மெயில் பண்ணவும்...
seemangani@gmail.com

DREAMER said...

நன்றி ராஜா சார்,
உண்மைதான் சார், நல்ல நீர்களை தாங்கி நிக்கிற எல்லா அணைக்களுக்கு பின்னாடி இப்படி ஒரு கண்ணீர் கலந்த கதைகள் இருக்குன்னுதான் நினைக்கிறேன்..!

நன்றி நாடோடி நண்பரே! நேரம் கிடைக்கும்போது கட்டாயம் இந்த நூலை படியுங்கள்..!

நன்றி சீமான்கனி, நீங்களும் இந்த மண்ணை சேர்ந்தவர்தானா..! மகிழ்ச்சி..!

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல பகிர்வு,
நன்றி ஹரீஷ்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

விகடனில் வரும்போது உருகி உருகிப் படித்த நாவல்.
மணியம் செல்வன் படம்னு நினைக்கிறேன்.
அந்த கதை நாயகர்கள் ம.செ ஓவியத்தில் மனதில் பச்சக் என்று ஒட்டி இருக்கிறார்கள்.

Ramesh said...

மிக நல்ல பகிர்வு நன்றி

Raghu said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு ஹ‌ரீஷ்

//இப்படி பல தகவல்களை அனாவசியமாக அள்ளித்தெளிக்கிறார் கவிப்பேரரசு//

அனாவ‌சிய‌மாக‌?

//வீட்டுக்கு வேலைக்காரியா வந்த தெய்வம் செத்துக் கிடக்குது//

ந‌ச் வ‌ரி இது...

பொதுவாக‌ வைர‌முத்து அவ‌ர்க‌ளின் பாட‌ல்க‌ளை விரும்பும‌ள‌வுக்கு, அவ‌ரின் க‌தைக‌ளை/தொட‌ர்க‌ளை விரும்பி ப‌டிப்ப‌தில்லை. நீங்க‌ள் ப‌ரிந்துரைப்ப‌தால் அவ‌சிய‌ம் வாசிக்கிறேன் :)

ஜெட்லி... said...

இன்னைக்கு காலையில் தான் பெசன்ட் நகரில் வைரமுத்து
அவர்களை பார்த்தேன்......இங்கே உங்க பதிவு....
இந்த புக் படிச்சதில்லை.....அறிமுகத்துக்கு நன்றி!!

DREAMER said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா நண்பா..!

வாங்க நாய்க்குட்டி மனசு,
விகடனில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்லவேளையாக தொகுப்பாக படித்தேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஓவியம் இந்நூலில் மிஸ்ஸிங்...

நன்றி றமேஷ்-RAMESH, தொடர்ந்து வாருங்கள்..!

வாங்க ரகு,
மன்னிக்கவும், அது அனாசயமாக-ன்னு எழுத அனாவசியமாக-ன்னு எழுதிட்டேன். மாற்றிவிட்டேன். இந்த நூலை படிங்க ரகு, definitely worth reading. நான் இதற்குமுன் இவரது 'தண்ணீர் தேசம்' படித்து வியந்திருக்கிறேன். இனி இவரது பிற நூலகளை தேடிப்ப(பி)டிக்க வேண்டும்.

வாங்க ஜெட்லி நண்பா, ஆமா, உண்மையிலேயே ஒரு நல்ல co-incidenceதான்..! வருகைக்கு நன்றி!

-
DREAMER

பெரியசாமி said...

மிக அருமையான புனைவு நாவல். இது சுவரசியமான வரலாற்றுப்புத்தகமும் கூட.

KVPS said...

நீங்க எந்த அளவுக்கு இந்த இதிகாசத்த படிச்சிருக்கிங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்...

DREAMER said...

வாருங்கள் திரு.பெரியசாமி அவர்களே..! வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி!

வாங்க பிரபு (kvps)
நன்றி! இயக்குனர் பாரதிராஜா இந்த நாவலை படமா எடுக்குறேன்னு ஒரு மேடையில சொல்லியிருக்காராம்..! நடந்தா நல்லாயிருக்கும்..!

-
DREAMER

priyamudanprabu said...

நான் இரண்டு முறை படித்த ஒரே புத்தகம்
மீண்டும் சில வருடம் கழித்து படிப்பேன்
கடைசி பக்கங்களில் நம் கண்களில் நீர் வருவது தவிர்க்க முடியத்து
பகிர்வுக்கு நன்றி
தொடர்ந்து புத்தகம் பற்றி எழுதுங்கள்

DREAMER said...

வாருங்கள் பிரியமுடன் பிரபு,
நான் ஒருமுறைதான் படித்திருக்கிறேன். உங்கள் மறுமொழி மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. நன்றி..!

-
DREAMER

Vigkey said...

நாகரிகம் என்ற பெயரில் நாம் இழ்ந்தவற்றை வாடடார வழக்கில் சொல்லி இருப்பது மிகவு அருமை.

படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டி நூல்

Popular Posts