Tuesday, July 09, 2019

ஹெலிகாப்டர் [சிறுகதை]


Triplicane ஏரியாவில்... ராத்திரி 11 மணிக்கு எந்த Dental Clinic திறந்திருக்க போகிறது என்று பாதி மனதுடன்தான் தேடினேன்... ஆனால், என் அதிர்ஷ்டம் மேன்சன்கள் நிறைந்திருந்த ஒரு மூத்திரவாடை சந்தில்... வெயிலில் சாயம் போன ஒரு போர்டு தொங்கியபடி ஒரு க்ளினிக் திறந்திருந்தது... சந்தேகத்துடன்தான் நெருங்கினேன்... SMILE PLEASE DENTAL CLINIC...  என்ற பெயரோடு ஒரு SMILEY-யும் போட்டிருந்தார்கள்...

SMILE செய்ய முடியாமல்... உள்ளே நுழைந்தேன்... மிக சிறிய ஒரு அறையில் பழைய டைப் டேபிள் ஒன்றை போட்டு... அதன் மேலே முந்தைய ஆட்சியில் கவர்மெண்ட் இலவசமாக கொடுத்த டிவி ஒன்றில் IPL LIVE க்ரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தது...

மேட்சில் இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்க எதிர் அணியினர் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்... நான் அங்கிருக்கும் டேபிளில் பெல் ஏதாவது இருந்தால் அடிக்கலாம் என்று தேடிக்கொண்டிருக்க... ஒரு சட்டை பேண்ட் போட்ட நபர்... உள்ளே நுழைந்தார்...

வாங்க சார்.. என்ன ஸ்கோர் பாக்கணுமா..? இன்னும் செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கல... சே.. ஃபர்ஸ்ட் இன்னிங்க்ஸ் லாஸ்ட் ஓவர் மிஸ் பண்ணிட்டேன்.. செம்ம மேட்ச்சாம்ல... தோணி கலக்கிட்டாராம்...

என்று அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருக்க... நான் அவரை நெருங்கி ஒரு அடி முன்னே நகர்ந்தேன்... அப்போதுதான் அவருக்கு.. நான் என் கன்னத்தில் ஒரு கை வைத்திருப்பதும்.. உதட்டின் ஓரமாய் ரத்தம் வருவதையும் கவனித்தார்...

ஓ.. பேஷண்ட்டா... சாரி...

நான் கன்னத்தை குதப்பிக்கொண்டு.. பற்களை கடித்தபடி சிரமத்துடன்... 

தாக்தர் இருக்காரா..?

என்று கேட்க... நான் சொன்னது அந்த நபரின் மூளைச்செல்களுக்கு போய்... பின் அது Decode ஆகி.. நான் கூறியது.. 'டாக்டர் இருக்காரா?' என்று புரிந்து பின் பதிலளித்தார்..

ஓ.. யெஸ்.. நான்தான் டாக்டர் பரிதி... B.D.S..

என்று நான் நம்பவேண்டும் என்ற தோரணையில் டிகிரியெல்லாம் சேர்த்து கூறினார்... நான் நம்பினேன்.. ஏனென்றால்.. அந்த அறையிருட்டிலும் அவர் முகத்தில் ஒரு ஒளிவீசியது... அது டாக்டர்களுக்கே உண்டான ஒளி...

உள்ள வாங்க...

என்று கூறியபடி ஒரு திரையை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றார்... நானும் அவரை தொடர்ந்து சென்றேன்... 

அதுவும்... சிறிய அறைதான்... பேச்சிலர் தங்கும் ஒரு சின்ன வீட்டை க்ளினிக்காக மாற்றியிருந்தார்... 

பேஷண்ட் சாய்ந்து உட்காரும் பெரிய சைஸ் நாற்காலியில் என்னை கிடத்தினேன்.. வாயில் வலி உயிர் போய்க்கொண்டிருந்தது... எனக்கு முன்னாலிருக்கும் ஒரு கண்ணாடியில்.. எனக்கு பின்னால் இந்த அறையிலு ஒரு டிவி இருப்பதை கவனித்தேன்... அதே கவர்மெண்ட் டிவி...

என்னாச்சு..?

என்று கேட்டப்படி... அவர் என் வாயை திறந்து டார்ச் அடித்து பார்த்தார்...

நான் வாயை திறந்தபடி எப்படி பதில் சொல்வது என்று காத்திருந்தேன்..

இதற்குள் பின்னால் நடக்கும் மேட்ச்-ல் ஒரு விக்கெட் விழுந்துவிட... இதை கவனித்த டாக்டர்..

யெஸ்... ஒரு விக்கெட் அவுட்...

என்று தொடர்ந்து என் வாயை பார்த்தார்.. நான் அவரை முறைத்துக் கொண்டிருக்க... அவன் என் கண்களை பார்த்து அதை புரிந்துக் கொண்டு...

சாரி.. சார்.. கோச்சுக்காதீங்க... நான் கிரிக்கெட் ஃபேன்... பக்கத்துலியே சேப்பாக்ல மேட்ச் போயிட்டிருக்கு.. ஆனா, என்னால டிக்கெட் வாங்கி போய் பாக்க முடியல... ஊர்ல டாக்டர்லாம் பணக்காரனா இருக்கான்.. ஆனா, நான் இந்த க்ளினிக் லோன்-ஏ இன்னும் அடைக்கல... என் கூட படிச்சவங்கள்லாம்.. கார்ப்பரேட் ஹாஸ்பிட்டல்ல போய் வேலைக்கு சேந்துட்டானுங்க... ஆனா, எனக்கு மனசு வரல சார்.. அங்க போய்ட்டா.. நம்ம தொழிலே மாறிடும்... சார்...

என்று பேசியபடி... என் வாய்க்குள் ஒரு டூல்-ஐ நுழைத்து... உள்ளே கன்னத்தை ஒட்டியபடி இருக்கும் ஒரு பல் ஆடிக்கொண்டிருப்பதை ஆட்டிப் பார்த்தார்... நான்... வலியால் ஆஆஆஆ என்று அலறினேன்...

சாரி சார்... பல் உடைஞ்சி ஆடிட்டிருக்கு... எடுத்துடுறது பெட்டர்.. என்ன சொல்றீங்க..

என்று என்னை பார்த்துக் கொண்டிருக்க.. நான் சரி என்று தலை ஆட்டினேன்...

இன்னொரு டூல்-ஐ எடுத்து... அருகிலிருக்கும் ஒரு ஸ்டேண்ட்-ல் டார்ச்-ஐ சொறுகி.. என் வாயில் வெளிச்சம் படும்படி ஃபோகஸ் வைத்துவிட்டு... மீண்டும் வேலை செய்தபடி பேச்சை துவங்கினார்...

இது என்னதான் சின்ன க்ளினிக்கா இருந்தாலும்.. இங்க நான்தான் டீன்.. நான்தான் டாக்டர்.. நான்தான் ரிசப்ஷனிஸ்ட்... இதோ... இப்படி மேட்ச் பாத்துக்கிட்டே வேலை செய்யிற ஃப்ரீடம் இதெல்லாம் கிடைக்குமா சார்... 

என்று கூறியவரை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தேன்...

ஆனா... தொழில்ல சுத்தம் சார்... என்னடா சந்துக்குள்ள க்ளினிக் வச்சிருக்கேனேன்னு நினைக்காதீங்க... இந்த டைம்ல உங்களுக்கு எங்கேயும் க்ளினிக் திறந்திருக்காது... நானுமே திறந்திருக்கமாட்டேன்... இன்னைக்கு மேட்ச் அதுவும் சூப்பர் கிங்க்ஸ் மேட்ச்-ங்கிறதால திறந்து வச்சேன்...

என்று என் பல்-ஐ வலி தெரியாமல் பிடுங்கி எடுத்தார்...

ஒரு வாட்டர் பாட்டிலை கொடுத்து... அதிலிருக்கும் நீரை குடிக்க செய்தார்..

முழுங்காதீங்க.. கொப்பளிச்சி துப்பிடுங்க

என்றார்... நானும் கொப்பளித்து துப்ப முயன்றபோது... ஒரு ட்ரேயை எடுத்து நீட்டி..

இதுல துப்புங்க.. 

என்றார்.. நான் தண்ணீரை கொப்பளித்து துப்பினேன்..

ரத்தம் நின்னுடிச்சி... ஒண்ணும் பயப்படுறதுக்கில்ல.. ரெண்டு டேப்ளட் தர்றேன்... போட்டுக்கோங்க நல்லா தூக்கம் வரும்...

என்று ப்ரிஸ்க்ரிப்ஷனில் எதையோ எழுதி... அவரே ரெண்டு மாத்திரையை எடுத்து கத்திரிக்கோல் வைத்து கட் செய்து கொடுத்தார்...

பிடுங்கிய எனது பல்-ஐ ஒருமுறை நான் பாவமாக பார்த்தேன்... வாய் இப்போது கொஞ்சம் வலி குறைந்திருந்தது...

தொண்டையை செறுமிக் கொண்டு.. பேச முயன்றேன்..

சார்.. அப்போ...

என்று கூற எத்தணிக்க.. டிவியில் எதையோ போடுவதை ஆர்வமாக பார்த்தபடி... டாக்டர்... எழுந்தார்..

சாரி சார்.. ஒரு நிமிஷம்... போன இன்னிங்க்ஸ்ல... தோணி லாஸ்ட் பால் சிக்ஸ் ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சாராம்... மிஸ் பண்ணிட்டேன் சார்... ஹைலைட்ஸ் காட்றான்.. பாத்துட்டு வந்துடுறேன்.. என்று டிவியில் கவனம் செலுத்த...

எனக்கு கோபமாக வந்தது...

அந்த கடைசி பால்-ஐ தோணி தூக்கியடிக்க.. அந்த பந்து ஆடியன்ஸ் மத்தியில் போய் விழுந்ததை காட்டப்பட்டது... திரும்பிய டாக்டர்..

சேன்சே இல்ல சார்.. என்னமா தூக்கி அடிச்சிருக்கார் பாருங்க.. தல தோணி சார்...

என்று மிகவும் Excite ஆகி பேசிக்கொண்டிருக்க.. நான் ரியாக்ட் செய்யாமல் அவரையே பார்த்து முறைத்துக் கொண்டிருக்க... அவர் புரிந்துக் கொண்டு..

சாரி சார்.. நீங்க ஏதோ சொல்லிட்டிருந்தீங்க..

ஃபீஸ் எவ்ளோ...

300 சார்...

என்று கூற.. நான் பர்ஸ் திறந்து பணத்தை எடுக்க முயலும்போது... பர்சிலிருந்து ஒரு துண்டு அட்டை கீழே விழுந்தது.. அதை நான் எடுக்க முயல்வதற்குள்... டாக்டர் குனிந்து எடுத்தார்.  அது மஞ்சள் கலராய் பெரிய சூப்பர் கிங்ஸ் லோகோ போட்டிருக்க.. அதை புரட்டி பார்த்தபடி...

இது மேட்ச் போறதுக்கான டிக்கெட் இல்ல..?

ஆமா...

மேட்ச் போயிருந்தீங்களா..?

ஆமா..

இந்த மேட்ச்சுக்கா..

ஆமா..

ஓ.. அப்புறம் ஏன் பாதிலியே வந்துட்டீங்க... ஓ... அடிப்பட்டதால வந்துட்டீங்களா..

ஆமா

ஆமா..? எப்படி உங்களுக்கு அடிப்பட்டத்து..

இப்பயாவது கேட்டீங்களே..? தோணி அடிச்ச அந்த லாஸ்ட் பால் சிக்ஸ்.. என் மூஞ்சிலதான் வந்து விழுந்தது..

என்று கூற... அந்த டாக்டர் கண்கள் அகல விரிந்தது... 

விழுந்த போர்சுக்கு கடவாப்பல்லு உடைஞ்சி ரத்தம் வர ஆரம்பிச்சுது...

ஸ்டேடியம்ல... ஃபர்ஸ் எய்ட் பண்ணினாங்க.. அப்புறம் கிளம்பி வெளிய வந்துட்டேன்... வலி அதிகமாயிட்டேயிருந்தது... நல்ல வேளை உங்க க்ளினிக்க பாத்தேன்...

என்று கூறியபடி 300 ரூபாயை நீட்டினேன்... அதை பார்க்காமல் டாக்டர் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்...

இந்தாங்க ஃபீஸ்

வேண்டாம் சார்..

ஏன்..?

இந்த பணத்தை ஒரு பெரிய விஷயம் நீங்க எனக்கு கொடுத்திருக்கீங்க..

என்ன..?

உங்க பல்..

என்று திரும்பி ட்ரேயில் போட்டிருந்த பல்-ஐ பார்த்தார்...

நான் குழப்பத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருக்க..

பின்ன என்ன சார்.. தோணி அடிச்ச பால்... எவ்ளோ பெரிய விஷயமோ.. அதே மாதிரி.. தோணி உடைச்ச உங்க பல்லு.. ரொம்ப பெரிய விஷயம் சார்.. எனக்கு இதுதான் ஃபீஸ்.. நீங்க போங்க சார்..

என்று கூற.. நான் குழப்பத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறினேன்... போகும்போது.. திரும்பி பார்க்க.. அவர் அந்த பல்-ஐ தனது டூலில் பிடித்து ஒரு கண்ணாடி குடுவைக்குள் போட்டுக்கொண்டிருந்தார்...


- நிறைவு -




Signature

No comments:

Popular Posts