அனைவருக்கும் வணக்கம்,
ஆகஸ்டு 6ஆம் தேதி நான் 'கேணிவனம்' எழுத ஆரம்பித்திலிருந்து, நவம்பர் 24ஆம் தேதி வரை மொத்தம் 111 நாட்கள் தொடர்ந்து இக்கதையை பொறுமையாக காத்திருந்து 30 பாகங்களையும் படித்து வாழ்த்து தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..!
கேணிவனம் குறித்து சில வாசக நண்பர்கள் மறுமொழியில் தொடர்ந்து கேட்ட கேள்விகளை இங்கு தொகுத்து பதிகிறேன்.
கேணிவனம் குறித்து உங்களது விமர்சனங்களையோ அல்லது வேறு சந்தேகங்களோ இருந்தால் தவறாமல் கேளுங்கள்..! (Email:- imhareeshnarayan@gmail.com)
கேணிவனம் குறித்து சில பொதுவான கேள்விகளும் அதற்கான பதில்கள்
கேள்வி:- தாஸூக்கு வயசாகும்போது அவர் மறுபடி டைம் டிராவல் செய்வாரா..? அவருடைய பிரதிதான் தாத்தா என்றால், அவர் இறந்தபின் அந்த வயதை எப்படி தாஸால் எட்ட முடியும்..? அல்லது சுருக்கமாக, 64 வயதுக்குப்பின் தாஸின் வாழ்வில் என்ன நடக்கும்?
விடை:- தாஸின் 64ஆவது வயதில் மீண்டும் இதே நடக்கும் என்று அர்த்தமில்லை..! ஏனென்றால், இப்போது நாம் கதையில் 1ஆம் மற்றும் 2ஆம் காலக்கட்டத்தை பார்த்ததுபோல், தாஸ் தாத்தாவாக பின்னோக்கி பயணித்து வந்தது என்பது மறைமுகமான 3ஆவது காலக்கட்டம். இப்போது நீங்கள் க்ளைமேக்ஸை தெரிந்து கொண்டு மீண்டும் இந்த கதையைப் படித்துப் பார்க்கும்போது, உங்களுக்கு இந்த மறைமுக காலக்கட்டம் பற்றி நன்றாகவே தெரியவரும். தாத்தாவின் ஒவ்வொரு வசனமும் இந்த 3ஆம் காலக்கட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டவை...!
கேள்வி:- கேணியில் விழுந்து தொலைந்து போன ப்ரொஃபஸர் கணேஷ்ராம் என்னவானார்..? அவர் இப்போது எந்த காலக்கட்டத்தில் இருக்கிறார்..?
விடை:- ப்ரொஃபஸர் கணேஷ்ராம் (1ஆம் காலக்கட்டத்தில் இருந்தவர்) தப்பான நோக்கத்தோடு வெற்றி பெற முயன்றபோது, கேணிக்குள் விழுந்து தொலைந்து போய்விட்டார்..! Lost in Time..! அவர் திரும்பி வருவது அசாத்தியம்.
கேள்வி:- நள்ளியைப் பற்றியும் இராஜசேகர வர்மனைப் பற்றியும் தாஸிடம் சொன்ன சித்தர், தாத்தாவைப்பற்றிய இரகசியத்தை சொல்லாமல் விட்டது ஏன்?
விடை:- நள்ளியைப் பற்றியும் இராஜசேகரவர்மனைப் பற்றியும் சொன்ன சித்தர், தாத்தாவை பற்றி சொல்லாததற்கு காரணம், நள்ளிக்கும்-தாஸூக்கும், இராஜசேகரவர்மனுக்கும்-தாஸூக்கும், எந்த ஒரு உணர்ச்சிகரமான சொந்தமுமில்லை..! அவனது முந்தைய பிறவிகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் தாஸூக்கு ஆச்சர்யமே தவிர வேறு எதுவும் உணர முடியாது. ஆனால், தாத்தாவைப் பற்றி சித்தர் சொன்னால், அவனுக்கு தாத்தாவுக்குமான Emotional Bonding பாதிக்கப்படும், இதனால், தாத்தா உயிருடன் இருக்கும்போதே அவன் அனாதையாக உணரக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று முக்காலமும் உணர்ந்த சித்தர் ஊகித்திருந்ததால் இதைப்பற்றி தாஸிடம் கூறவில்லை...
கேள்வி:- தாத்தாவாகவும் தாஸே இருந்தும், தனது இளைய தாஸிடம் கேணிவனத்தை பற்றி முழுமையாக கூறாததற்கு காரணம் என்ன..?
விடை:- இதற்கு வெவ்வேறு காரணங்கள் உண்டு,
1. தாத்தா எதிர்காலத்தைப் பற்றி எதையும் கூறக்கூடாது என்று உறுதியெடுத்துக் கொண்டதனாலும்.
2. எதையும் தேடிக்கண்டுபிடிப்பதுதான் தாஸின் இயல்புத்தன்மை. அது மாறாமல் இருக்கவும் வேண்டும் என்றும்.
இருந்தாலும், தாத்தா பூடகமாக சில விஷயங்களை அவனுக்கு உணர்த்தி வந்திருப்பார் என்பது நீங்கள் மீண்டும் படித்துப் பார்த்தால் புரியும்.
கேள்வி:- தாஸ் காலத்துக்கு பின்நோக்கி வந்து வாழ்ந்தாரா அல்லது தன் காலத்துக்கு தசதரனை எடுத்துக் கொண்டு வந்தாரா?
விடை:- தசரதன் தாஸ் காலத்துக்கு பின்நோக்கி வந்து வாழ்ந்தார்.
கேள்வி:- தசரதன் மற்ற ஏழு கேணிகளையும் கண்டுபிடித்துவிட்டார் என்றால் அது அத்தனையுமே இந்தியாவில்தான் இருக்கிறதா..?
விடை:- இந்த கேள்விக்கு விடை அடுத்த பாகத்தின் கதை..!
கேள்வி:- மற்ற கேணிகளை உருவாக்கியவரும் சித்தர் தானா?
விடை:- ஆம், இந்த சித்தர்தான் அமைத்தார்... ஆனால் எப்படி என்பதற்கு விடை முந்தைய கேள்வியின் விடையே..!
கேள்வி:- அடுத்த பாகம் எப்போது..?
விடை:- இந்த பாகத்தை எழுத நான் எடுத்துக் கொண்ட 111 நாட்களில் பெரும்பாலும் முழுநேரமாக தகவல் சேகரிப்பு செய்திருக்கிறேன். ஆனால், தற்போது புதிய திரைப்படம் ஒன்றை துவங்கவிருப்பதால் (திரைப்படத்தின் விவரங்களை விரைவில் வெளியிடுகிறேன்), ஒரு நியாயமான இடைவெளிக்கு பிறகு, மே-2011-ல் அடுத்த தொடர்கதையை கண்டிப்பாக கேணிவனத்தைப் போலவே சுவாரஸ்யமாக எழுதுகிறேன்.
மேலும் கேள்விகள் திரண்டால், அதையும் தொகுத்து போடுகிறேன். அடுத்த பதிவில் வாசகர்கள் இமெயிலில் அனுப்பிய விமர்சனங்களை தொகுத்து போடுகிறேன்.
இக்கதைக்கான தகவல் சேகரிப்பில் எனக்கு பேருதவியாய் இருந்த புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், நண்பர்கள் போன்றவற்றின் தொகுப்பையும் விரைவில் போடுகிறேன்.
நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!
-
DREAMER

