Sunday, March 27, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 3


பழனியில் 'அம்புலி 3D' படப்பிடிப்பு

ரயில் பயணத்தில் அனைவரும் கோறும் குட்டி வரம், ஜன்னலோர சீட்டு..! அந்த ஜன்னலோர சீட்டுக்கு அழகு சேர்ப்பது, பயணத்தில் அதன்வழியே தெரியும் மலைமுகடுகள்.

எனது சிறுவயது முதலே மலைகளை  பார்த்தால் ரொம்பவும் பிடிக்கும். லீவில் உறவினர்கள் வீட்டுக்கு போவதாய் இருந்தால், அவர்கள் ஊரில் மலை இருக்கிறதா என்று உடனே மனம் எதிர்ப்பார்க்க ஆரம்பிக்கும், அந்த ஆசையாலோ என்னமோ, நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பழனி ஊர் மிகவும் பிடித்துவிட்டது.  காரணம், ஊர் எல்லையில் தெரியும் கொடைக்கானல் மலைத்தொடரும், பழனி மலையும், எங்களுக்கு உடனிருந்து உதவிய நண்பர்களும்..!
பழனியை பற்றி சங்க காலத்தில் எத்தனை பாடல்கள் இருந்தாலும்,, 'பழம் நீயப்பா..! நியானப்பழம் நீயப்பா..!' என்ற அவ்வையின் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் பாடல் சட்டென நினைவுக்கு வருவதால், இதை பாடல் பெற்ற ஸ்தலம் என்றே கூறலாம்.

பழனியில் எங்கள் குழு தங்கியிருந்த ஹோட்டல் (Temple View)லிருந்து தினமும் பழனி மலையை பார்த்தபடி லொகேஷன் ஸ்பாட்டுக்கு கிளம்பியதை மிகவும் மங்களகரமாக கருதினோம்.

பார்த்திபன் கனவுபார்த்திபன் சாரை வைத்து படத்தை இயக்குவேன் என்று கனவிலும் நினைத்தது கிடையாது. அந்த கனவு பலித்த(துக்கொண்டிருப்ப)தில் மகிழ்ச்சி. இயக்குநர் மற்றும் நடிகர் என்பதால் காட்சியை உள்வாங்கி கொண்டு கலக்குகிறார். 3D படம், வித்தியாசமான கதாபாத்திரம், என்ற அம்சங்களை நன்றாக புரிந்து கொண்டு அட்டகாசப்படுத்துகிறார். அவருடன் வேலை செய்யும் போது களைப்பு தெரியாதபடி கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தது எங்கள் குழுவினருக்கு உற்சாகமளித்தது.



உதாரணம், அவர் ஒரு கட்டை ஏணியில் ஏறி கீழே இறங்குவது போன்ற காட்சி எடுக்க வேண்டும், எடுக்கப்பட்டது..! எங்கள் உதவி இயக்குநர் தினேஷிடம் 'சார் பத்திரமாக இறங்க கை கொடுக்கும்'படி கூற, 'நல்லா நடிச்சா மட்டும் கை கொடுங்க சார்..! இல்லண்ணா வேணாம்..' என்று கூறிவிட்டு அவரே இறங்கிவிட்டார். இது போல் வார்த்தைக்கு வார்த்தை அவரது பாணியில் பேசி நடித்து கொடுத்தார்.
ஷூட்டிங் பழனிக்கு வெளிப்புறமாய் இரவு நேரங்களில் மட்டுமே நடந்ததால், வேடிக்கை பார்க்கும் கூட்டம் கம்மியாகவே இருந்தது, நாங்களும் இருந்த கூட்டத்தை சுலபமாக கன்ட்ரோல் செய்து கொண்டோம், ஆனால், பார்த்திபன் சார் வந்தபிறகு கூட்டம் அதிகமாகிவிட்டது, காவலர்கள் தேவைப்படுமளவிற்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. அதுவும் குறிப்பாக, பழனியாண்டவருக்கு மாலையணிந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்தான் அதிகம்.

பாஸ்... என்கிற பாஸ்கி..!
அரி கிரி அசெம்ப்ளியில் ஆரம்பித்து இன்று இண்டர்நேஷனல் க்ரிக்கெட் மேட்ச்க்கு தமிழ் கமெண்ட்ரி கொடுக்குமளவிற்கு பிஸியானவர். இவர் எங்களது திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்பாட்டில் இவரை நகைச்சுவை வங்கி என்றுதான் சொல்வோம். எங்கே உள்வைத்திருக்கிறாரோ தெரியவில்லை, ஜோக்குகளை Withdrawal செய்துகொண்டேயிருக்கிறார்.

சாப்பிடும்போது அதிகம் பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இவர் சாப்பிடும்போது பேசுவதை கேட்க, ஒரு கூட்டமே கூடும். இவருக்கு டாக்டர் பட்டம் தாராளமாக கொடுக்கலாம், காரணம், வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழி மட்டும் பலிக்கிறதாயிருந்தால், இவரால் பலபேரை குணமாக்க முடியும்.

'நான் கடவுள்' ராஜேந்திரன்
வில்லனாய் சினிமாவில் தெரிபவர்கள் நேரில் மிகவும் மென்மையானவர்கள் என்ற கூற்றை நம்பியார் சார் காலத்திலிருந்தே சொல்வார்கள், கேள்விப்பட்டிருக்கிறேன். அது எந்தளவுக்கு உண்மை என்று இவரை நேரில் சந்தித்து தெரிந்து கொண்டேன். மிகவும் ஒரு எளிமையான ஒரு மனிதர். நல்ல நண்பர்..! கடும் உழைப்பாளி..! இவரது உழைப்பை யாரும் எள்ளளவும் குறை கூற முடியாது. தேவையான காட்சியை, எந்தளவுக்கும் சிரமம் எடுத்தும் நடித்து கொடுக்க கூடியவர். கடந்து வந்த பாதையை மறக்காதவர் அனைவரிடம் அன்பாக பழகுபவர்.



கேமிராமேன் சதீஷ், இவரிடம் சென்று, சமீபத்தில் இவர் நடித்த வெற்றிப்படமான 'பாஸ் என்கிற பாஸ்கரனில்' இவர் கூறும் 'வாப்பா தலதளபதி..' என்ற வசன உச்சரிப்பில், 'வாப்பா ஹரி ஹரீஸ்ஸே..!' (என்னையும் ஹரியையும்) என்று பேச சொல்லி கேட்டு, அதை மொபைலில் ரெக்கார்ட் செய்து இடைவேளைகளில் போட்டு காட்டி வெறுப்பேற்றி கொண்டிருந்தார்.

அம்புலி 3D, த்ரில்லர் படம்தான் என்றாலும், என்னதான் இரவு முழுக்க களைப்புடன் பணிபுரிந்தாலும், காலையில் மீண்டும் அறைக்குவந்து படுக்கும்போது, தூரத்தில் பழனிமலையில் ஸ்பீக்கரில் ஒலிக்கும் திருப்புகழ் பாடல்களை கேட்டபடி தூங்கும் சுகம் மிகவும் பிடித்துப்போய்விட்டது. மீண்டும் ஒருமுறை கண்டிப்பாக இந்த வரம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படப்பிடிப்பின் போது எங்களை சொந்த பிள்ளைகளாய் எண்ணி உதவிய 'பழனி ஆறுமுகம்' ஐயா அவர்களுக்கும், படப்பிடிப்பு முடிந்ததும் பழனி மலைக்கு அழைத்து சென்று வழிபாட்டிற்கு வழிகாட்டிய ராம்குமார் என்ற நண்பருக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது, அம்புலியில் கிராமத்து காட்சிகளை மேட்டூர் அணை அருகேயுள்ள கொளத்தூர் மற்றும் பண்ணைவாடி கிராமத்தில் படம்பிடித்து வருகிறோம். இங்கு நேர்ந்த அனுபவங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன். இப்போதைக்கு நிறைய வேலை இருப்பதால்... குட்பாய்..!


'தம்பீ..! ஷாட் ரெடியா..?'


(தொடரும்)



Signature

Thursday, March 03, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 2



அம்புலி : மகளிர் ஸ்பெஷல்

"டாவின்ஸி கோட்" புத்தகத்தில், பெண்கள் இவ்வுலகினில் எப்படி எக்கலாஜிக்கலி பேலன்ஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பற்றி சில விளக்கங்கள் வரும். இந்த பேலன்ஸை, மோனலிஸா ஓவியத்தில், டாவின்ஸி எப்படி சூட்சமமாக சொல்லியிருக்கிறார் என்பதை பற்றி மிக சுவாரஸ்யமாக டான் ப்ரௌன் அவர்கள் விளக்கியிருப்பார்... அதே போல், திரு. கல்கி அவர்கள் தனது கதைகளின் கருவை ஒரு பெண்ணின் சபதத்தையோ அல்லது வைராக்கியத்தையோ முன்வைத்து எழுதியிருப்பார்.

அம்புலியிலும், ஒரு பெண்ணின் கருவே, கதையின் கரு... அப்படிப்பட்ட கதையின் கருவாக இடம்பெறும் முக்கிய காட்சிகளை கலைராணி, உமா ரியாஸ்... ஆகியவர்கள் ஒத்துழைப்பில் சமீபத்தில் ஒரு கிராமத்தில் படம்பிடித்து முடித்தோம்...

கலைராணி மேடம்... பெயருக்கு ஏற்றார் போல், கலையில் ராணிதான்.... மிக தத்ரூபமான நடிப்பு... நல்லதொரு இன்வால்மெண்ட். அம்புலியில் தனது கதாபாத்திரத்தை பற்றி அவர் கேட்டு தெரிந்து கொள்ளும்போது, கண்களை மூடிக்கொண்டு உள்வாங்கி பிறகு ஷாட் எடுக்கும்போது, மிக அழகாக அந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்தினார். ஓன் டேக் ஆர்டிஸ்ட் என்று சொல்வது மிகவும் பொருந்தும். இவர் நடிக்கும்போது மட்டும் ஷூட்டிங் வேடிக்கை பார்க்கும் கிராமத்து பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.


படப்பிடிப்பின் போது இவருக்கு கடும் காய்ச்சல் அடித்து கொண்டிருந்தது, ஷூட்டிங் நடத்தமுடியுமோ என்று நாங்கள் ஐயுறும்போது, துளியும் தடங்களின்றி எடுக்க, அவர் கொடுத்த ஒத்துழைப்பை என்றும் மறக்க முடியாது. காட்சிகளுக்கு மத்தியில் ஒரு சின்ன இடைவேளையிலும், கயிற்று கட்டிலிலும், தரையிலும் அவர் படுத்து உறங்கி குட்டி குட்டி ஓய்வுகள் எடுத்து கொண்டு நடித்து கொடுத்தார். அவரது காட்சிகள் முடிந்ததும், தான் அம்புலியில் பங்கேற்று நடித்த பாட்டி கதாபாத்திரத்தின் உடைகளையும், அணிகலன்களையும் அடையாளமாக வைத்து கொள்ளப்போவதாக கூறி கேட்டு வாங்கி சென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து உமா ரியாஸ் அவர்கள்... இவரை நல்ல நடிகை என்பதைவிட, எங்கள் குழுவுக்கு கிடைத்த நல்லதொரு தோழி என்றுதான் சொல்ல வேண்டும். தோழி மட்டுமின்றி ஒரு வெல்விஷரைப் போல், படப்பிடிப்பில் துளியும் முகம் கோணாமல், எத்தனை முறை காட்சியை மாற்றியமைத்து எடுத்தாலும், மிகவும் இயல்பாக நடித்து கொடுத்தார். இவரிடம் டைரக்டராக கூடிய தகுதி அதிகம் உள்ளது. இவரது ஸ்பெஷாலிட்டியான மிமிக்ரி கலையை (குறிப்பாக திரு. தேங்காய் சீனிவாசனின் உச்சாடனங்கள்) படப்பிடிப்பு இடைவேளையில் செய்து காட்டி ஒட்டு மொத்த குழுவின் கவனத்தையும் ஈர்த்து கைதட்டு வாங்கினார்.

 
என்னதான் ஷாட் எடுக்கும் முன்பு மிகவும் ஜாலியான முகபாவத்தில் இருந்தாலும், கேமிரா ரோல் ஆனதும், சட்டென்று தனது கதாபாத்திரத்தின் முகபாவத்துக்கு வந்து விடுவது கண்டு வியந்தேன். இவர் நடித்த 'அன்பே சிவம்' எனக்கு பிடித்த படங்களில் ஒன்று, அதில் அவரது நடிப்பை கண்டு வியந்திருந்ததால், நம் படத்தில் இவரை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணம் ஈடேறியதில் மகிழ்ச்சி..!

அம்புலியில் அடுத்த பெண், போன பதிவிலேயே நான் அறிமுகம் செய்துவைத்த எங்களது திரைப்படத்தின் கதாயாகியான சனம். புதுமுகம்தான் என்றாலும் ஆங்கில ஸ்டேஜ் ப்ளேக்களில் அதிகம் பங்கேற்றவர் என்பதால் நடிப்பிற்கு பஞ்சமில்லை... தமிழ் நன்றாகவே பேசுகிறார். (ஆச்சர்யம்..!)


தன்னுடைய காட்சிகளில் மட்டுமில்லாமல், மற்ற காட்சிகள் எடுக்கும்போதும் ஆர்வமாக படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி கவனித்து வருகிறார்... நடிகை என்று அலட்டிக் கொள்ளாமல் குழுவில் அனைவரிடமும் இதமாய் பேசி வருவதால், இவர் நன்றாய் வர வேண்டும் என்று பலரும் நினைக்கும்படி நடந்து கொள்வது மகிழ்ச்சி..!

இப்படத்தில் இன்னும் ஒரு கதாநாயகியான திவ்யா நாகேஷ்... அவரது காட்சிகள் இன்னும் எடுக்கப்படாததால் அவரை பற்றி இப்பதிவில் சொல்ல முடியவில்லை...

மகளிர் தினம் சமீபத்தில் இருப்பதால், அன்று பதிவிட நேரம் இருக்குமோ இல்லையோ என்று இன்றே பதிகிறேன். மேலும் அதிக விவரங்களோடு "அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவத்தை அடுத்த பதிவில் பதிகிறேன்.



Signature

Popular Posts