Showing posts with label 3D. Show all posts
Showing posts with label 3D. Show all posts

Friday, August 29, 2014

"ஜம்போ 3D" : புள்ளையார் சுழியுடன் இன்று புதிய ப்ராஜெக்ட்


நண்பர்களுக்கு வணக்கம்... இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில்... அம்புலி 3D மற்றும் 'ஆ' படத்தை தொடர்ந்து... 'ஜம்போ 3D' என்ற புதிய படத்தை உங்கள் வாழ்த்துக்களுக்கடன்... இன்று இனிதே துவங்குகிறோம்.. 

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Monday, May 26, 2014

"ஆ"மயம் 04 - அடுத்த படம் பற்றிய முன்னறிவிப்பு


'ஆ' படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்ததுமே, நண்பர்கள் சிலர், "முதல் படம் 'அம்புலி' அடுத்த படம் 'ஆ' என்று நீங்கள் அகரவரிசைப்படி தலைப்பு வைத்துவருகிறீர்கள்... சூப்பர்..." என்று வாழ்த்தினர்... அப்போதுதான், எங்களுக்கே தெரியாமல், அகர வரிசையில் எங்கள் படங்களின் தலைப்புகள் அமைந்திருப்பது தோன்றியது. ஆனால், உண்மையில் அகரவரிசைப்படி வைக்கவேண்டும் என்று வைக்கவில்லை.. காரணம், ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது என்பதே ஒரு பெரிய வேலை... அதுவும், ஏற்கனவே தலைப்பு வைப்பதற்கு சில எழுதப்படாத விதிகள் சினிமாவில் உண்டு...

1. பாசிடிவ் டைட்டிலாக இருக்க வேண்டும்
2. கதைக்கு சம்மந்தப்பட்ட டைட்டிலாக இருக்க வேண்டும்
3. எல்லா வயது மக்களுக்கும் பிடிக்கும்படியும், வாயில் சுலபமாக நுழையும்படியும் இருக்க வேண்டும்
4. இதில் மூன்றெழுத்து, இரண்டெழுத்து... போன்ற Seasonal Sentiments
5. புரியும் வார்த்தையாக இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் சங்க கால தமிழில் புரியாத வார்த்தையாக இருந்தால் அதற்கு தனியாக விளக்கம் கொடுத்து புரிய வைக்க மெனக்கெட வேண்டும்
6. ஏற்கனவே பலருக்கும் தெரிந்த அல்லது விளம்பரப்படங்களில் வந்த ஃபேமசாக சொற்றொடராக இருத்தல் நலம்...
7. கேளிக்கை வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழில் இருக்க வேண்டும்... இது அனைவருக்கும் பொருந்தாது,  தமிழ்ப்பற்றாளர்கள் விதிவிலக்கு

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தலைப்பை தேடுவதற்குள் தலை சுக்குநூறாய் வெடித்துவிடும். இதில், அகர வரிசை என்ற வரையறைக்குள் சிக்கிக்கொண்டால், மேலும் கஷ்டமாகிவிடும் என்பதால், அடுத்த படத்திற்கு 'இ' என்ற முறையில் தலைப்பு அமையுமா என்று தெரியிவில்லை.. ஆனால், நிச்சயமாக 'இ' என்ற எழுத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது மட்டும் தெரிகிறது...

இதையெல்லாம் தாண்டி ஒரு கூடுதல் சமாச்சாரம் உண்டு, அதாவது, எனது முதல் 'அம்புலி' இல்லை... 'ஓர் இரவு' தான் (இந்த படத்திற்கு முதலில் 'இரா' என்று தலைப்பு வைத்து பிறகு 'ஓர் இரவு' என்று மாற்றியது தனிக்கதை)... 'ஓர் இரவு'-ஐ தொடர்ந்து அகரவரிசைப்படி வைத்திருந்தால், 'ஔ' எழுத்தில்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும்... யோசித்து பாருங்கள் 'அம்புலி' படத்திற்கு 'ஔ'வில் தலைப்பு வைத்திருந்தால் என்ன வைத்திருக்க முடியும்.... இந்த எழுத்தில் ஏதாவது மாற்றுத்தலைப்பு தோன்றினால் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Tuesday, May 20, 2014

"ஆ"மயம் 03 - அதென்ன ஹாரர் ஆந்தாலஜி?


All time classic திருவிளையாடல் படத்தில் சிவபுராணக்கதைகளை ஔவை பாட்டி சொல்ல சொல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிக்கதையா வரும்... தருமியின் கதை ஒன்று, தட்சண் யாகம் நடத்திய கதை ஒன்று, ஹேமநாத பாகவதர் கதை ஒன்று, இப்படி பல கதைகள் வரும்... இதுதான் Anthology Film அல்லது Omnibus Film என்பார்கள்.




இது போன்ற கதைகூறும் பாணி நமது தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பக்திப்படங்களுக்கே இருந்து வந்தது... திருமால் பெருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் இப்படி பல படங்கள் உதாரணத்திற்கு கூறலாம். ஹாரரில் இதை முதல் முயற்சியாக செய்துள்ள படம்தான் 'ஆ'.

ஆந்தாலஜி என்ற வார்த்தைக்கு தமிழ்ச்சொல் என்ன என்று ஒரு நண்பர் கேட்டார்... உண்மையில் எனக்கும் தெரியவில்லை... யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து பகிருங்கள். ஆங்கிலத்தில் உள்ள வார்த்தையைத்தான் தமிழ்ப்படுத்த வேண்டும் என்று இல்லை.. அவர்களே OmniBus Film என்று புதுவார்த்தையில்தான் இதை alternateஆக கூறுகிறார்கள். எனவே, தமிழில் என்னவாக சொல்லலாம் என்று வல்லுனர்கள் பரிந்துரைத்தால், அவர்களுக்கு MY SINCERE THANKS.

பிறமொழிகளில் இந்த திரைக்கதைவடிவம் பலவாறு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக ஹாலிவுட்டில் 80களில் ஆந்தாலஜி ஹாரர் படங்கள் மிகவும் பிரபலம். ஹிந்தியில் Ram Gopal Varma ஆந்தாலஜி ஹாரர் படமான "Darna Mana Hai" என்ற படத்தின் மூலம் ஹாரர் ஆந்தாலஜிக்கு வித்திட்டார், அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும், அதன் இரண்டாம் பாகமாக "Darna Zaroori Hai" என்று வெளியிட்டார். அதுவும் ஹிட்.



அம்புலி 3D படத்திற்கு இயக்குநர் திரு.ஸ்ரீதரன் சாரை, எங்கள் கலையுலக ஆசானாக உணர்ந்து செயல்பட்டோம், அதுபோல் இப்படத்திற்கு எங்கள் ஆசான் இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்தான். காரணம், அவரது திரைப்படங்கள் அத்தனையும் ஒருவகையில் ஆந்தாஜியாகத்தான் இருக்கும். நவராத்திரி, நவரத்தினம், மேலே குறிப்பிட்ட பக்தி படங்கள் என்று பல படங்களில் இதே பாணியை கையாண்டு வெற்றிப்பெற்றவர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்.

Ace Film Director Mr. A. P. Nagarajan (ImageCourtesy thehindu.com)

பொதுவாக ஒரு படத்தை ஃபுல் மீல்ஸ் என்று கூறினால், ஆந்தாலஜியை வெரைட்டி மீல்ஸ் என்று கூறலாம். ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன், நாயகி, வில்லன், க்ளேமேக்ஸ் என்று கொண்டு போவதால், படம் விறுவிறுவென்று ஓடும்.. மேலும் படத்தில் நிறைய திருப்பங்கள், நிறைய சிறப்பம்ச காட்சிகளோடு திரைக்கதை வடிவமைக்கும் வசதி இந்த ஆந்தாலஜி படங்களில் உண்டு. 

50 ஓவர்கள் மேட்ச் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் 20 ஓவர்கள் மேட்ச்சும் ஹிட் ஆனது போல், இந்த ஆந்தாலஜி பாணி படங்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப்பெற்று ஆந்தாலஜி படங்கள் நிறைய வரும் என்ற நம்பிக்கையுடன் 'ஆ'வை உங்கள் முன் விரைவில் சமர்ப்பிக்கின்றோம். 


Signature

Friday, May 16, 2014

"ஆ"மயம் 02





'ஆ'கு பெயர்

சில வருடங்களுக்கு முன்பு, சுஜாதா அவர்களின் நாவல்களை back to back வாசித்துக்கொண்டிருந்த சமயம், தேடித் தேடி அவரது நாவலை வாங்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒருமுறை ஒரு நாவல் வாங்கி வந்து ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தேன்... அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், நாவலின் தலைப்பை ஏதாவது ஒரு கதாபாத்திரம் உச்சரிப்பார்கள். அந்த தலைப்பு 'ஆ'...


அட்டகாசமான அமானுஷ்ய நாவல்... எனக்கு அந்த நாவலின் கதை பிடித்திருந்தாலும், மற்ற சுஜாதாவின் நாவல்களின் தலைப்பை தாண்டி இந்த நாவலின் தலைப்பு அப்படி பிடித்து போனது... 'ஆ'... இதைவிட ஒரு ஹாரர் கதைக்கு தலைப்பு வைக்க முடியுமா என்று தெரியவில்லை... தலைவர் எப்படி யோசித்தாரோ... அவரது ரசிகன் என்ற முறையில் தலைவர் சுஜாதாவிற்கு நன்றி... அந்த தலைப்பு, வெகுநாட்களாகவே என்னுள் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியிருந்தது... அம்புலியை தொடர்ந்து அடுத்த ஹாரர் கதை.. அதுவும், உலகில் உள்ள வெவ்வேறு ஊரில் நடக்கும் ஹாரர் என்று முடிவானதும்... நீண்ட நாட்களாகவே என் மனதிலிருந்த இந்த தலைப்பை எனது நண்பர் ஹரியிடமும் தயாரிப்பாளர் V. Loganathan அவர்களிடமும் கூற, ஒருமனதுடன், அனைவருக்கும் பிடித்துப்போய் 'ஆ' என்று வைத்துவிட்டோம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இத்தலைப்பை பதிவு செய்ய முயன்ற போது ஏற்கனவே இதை வேறொரு கம்பெனியினர் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறவுஉம்... ஒரு வாரமாக யோசித்தும் வேறெந்த தலைப்பும் சிறப்பாக தோன்றவில்லை.. தோன்றியதும் 'ஆ' அளவிற்கு ஈர்க்கவில்லை.. பிறகு, அந்த முன்பதிவு செய்த கம்பெனிக்காரர்களிடமே பேசி... சம்மதிக்க வைத்து.. தலைப்பை பெற்றுக்கொண்டோம்...

டிஸ்கி : தலைப்பு மட்டுமே தலைவரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதே தவிர, அந்த கதைக்கும் இந்த திரைப்படத்தின் கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்... 


Signature

Wednesday, May 14, 2014

"ஆ"மயம் 01



'ஆ' திரைப்படம் குறித்து வெளியான செய்திகளையடுத்து, நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்... மிக்க நன்றி..

குறிப்பாக வலையுலக நண்பர்களில், 'மெட்ராஸ்பவன்' சிவகுமார் முதலில் ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்ததோடு படத்தை பற்றிய செய்தியை ஜில்மோரில் எழுதி வெளியிட்டார்... மேலும் அவர் கூறியபோதுதான் உண்மைத்தமிழன் அவர்கள் Tamilcinetalkல் ஏற்கனவே படத்தை பற்றி எழுதிவிட்டது தெரியவந்தது. அவருக்கும் நன்றி... நண்பர் ரஹீம் கஸாலி ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.. அவரோடு ஏற்கனவே இத்திரைப்படத்தை குறித்து ஓர் இரவு ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன்... கதைப்படி, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் அமானுஷ்ய அனுபவங்களை தொகுத்து திரைவடிவம் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து கொண்டிருந்தபோது, மலேசியாவில் இந்த நம்பிக்கைகள் அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டேன், கஸாலி அவர்கள் ஏற்கனவே மலேசியாவில் வசித்தவர் என்பதால், அவருடன் கலந்தாலோசித்து கொண்டிருந்தேன். அந்த உரையாடல நடந்த நாட்களை அழகாய் நினைவுகூர்ந்தார்...

பிறகு, Bingleguy, என்ற நண்பர் எங்கள் குழுவின் நலன்விரும்பி வசந்தராமன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்... படத்தின் பெயர்விளக்கத்தை பற்றி எழுதும்படியும் கேட்டுள்ளார்.. நிச்சயம் எழுதுகிறேன்...

மேலும் சில நண்பர்களிடமிருந்து, கேணிவனத்தை எப்போது திரைப்படமாக எடுப்பீர்கள் என்ற கேள்வியும் எழுந்தது... வழக்கம்போல், முயற்சிகளை கைவிடாமல் மேற்கொண்டு வருகிறேன்... இம்முறை பல வலையுலக நண்பர்கள், வலைப்பூவில் வாழ்த்தாமல், ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்... ஃபேஸ்புக்கில் 'ஆ' படத்தை பற்றிய செய்திகளையும், புகைப்பட பகிர்வுகளையும் தெரிந்துக்கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன்...




இதுவரை நாளிதழ்களிலும், இணையத்திலும் வெளியான 'ஆ' பற்றி செய்திகளின் தொகுப்பினை இப்பதிவில் இணைத்துள்ளேன்...









Signature

Monday, January 21, 2013

ஐதை குறிப்புகள்

டிஸ்கி : போன மாதமே எழுதி... எழுதி... முடிக்க முடியாமல் இப்போதுதான் முடிந்தது...

ஐதராபாத்...
எனது நண்பரும் அம்புலி படத்தின் ஒளிப்பதிவாளருமான சதீஷ்.G பணியாற்றியுள்ள தெலுங்குப்படம் 'புண்ணமி ராத்ரி 3D'.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்ற மாதம் ஐதை சென்றிருந்தேன்...


கொண்டாட்டம்
அந்த ஊரில் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ள இசை விழா சிறப்பாக நடந்தேறியது... விழாவின் வெளியே வழக்கம்போல் பலரும் 3D எஃபெக்ட்-ஐ சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர். அம்புலி படத்தை பற்றி பலரும் அறிந்திருந்தது மகிழ்ச்சியளித்தது... அம்புலியை தெலுங்கு டப்பிங்கில் பார்த்த ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் நீண்ட நேரம் தெலுங்கில் பாராட்டிக் கொண்டிருந்தார்..

அவர்களும் அப்படித்தான்
இசை வெளியீட்டு விழா முடித்துவிட்டு, அங்கிருந்த திரையரங்குகளில் 3D கான்ஃபிகரேஷன்களை பார்க்க போயிருந்தோம். தமிழ்நாட்டை காட்டிலும் அங்கு 3D தியேட்டர்கள் சற்று குறைவாகவே இருக்கிறது. மேலும், இங்கு நம்மூரிலிருந்த அதே பிரச்சினைதான் அங்கும்.. அதாவது 3D படங்களை காட்டுவதற்கு தியேட்டர்காரர்களும் சற்றே நல்ல தரம் வேண்டும் என்று மெனக்கெட வேண்டும், தொழில்நுட்பத்தை பற்றி அடிப்படை விஷயத்தை புரிந்து கொள்ளாமல் மலிவாய் முடித்துக் கொள்ள விரும்பினால்.. ரொம்ப கஷ்டம்தான். (படம் பார்ப்பவர்களுக்கு). இதற்கு சான்றாய் அங்கும் ஒரு சில சம்பவங்கள் நடந்தேறின... எனவே 3Dயை திரையிட தேவையான சப்போர்ட்டிங் விஷயங்களை எங்களுக்கு தெரிந்தவரை பகிர்ந்து விளக்கி புரிய வைத்தோம்... 

கெஸ்ட் ஹவுஸ்
விழா முடிந்ததும், ஒரு கெஸ்ட் ஹவுசில் 5 நாட்கள் தங்கியிருந்தோம். அங்கே கணேஷ் என்ற ஒரு பதின்ம வயது பையனும் அவனுடன் சேர்ந்து ஒரு சிறுவனிடமும் அந்த கெஸ்ட் ஹவுஸின் முழு மெயிண்டனென்சும் ஒப்படைக்கப்பட்டுள்ளது... 'சிறுவர்களை பணியில் அமர்த்தாதே' என்று தெலுங்கில் எந்த ஆட்டோவிலும் எழுதவில்லை போல... அவனிடம் 'படிக்கிறியா..?' என்று கேட்டால் அதற்கு தெலுங்கில் ஏதோ சொன்னான்.. 'நாக்கு தெல்லிது' என்று சும்மா இருந்துவிட்டேன்.

பனிவிழும் இரவில் ஆந்திரா ஷூட்டிங்
ஒரு நாள் இரவு, தெலுங்கு பட படப்பிடிப்பை பார்க்க ஒரு பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தோம்... இரண்டு பெரிய ஹிட் கொடுத்த டைரக்டர் மாருதி என்ற தெலுங்குப்பட இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது... 3Dயில் அம்புலி உருவானதைப் பற்றி நிறைய விசாரித்தார்... துரிதமாக நடந்துக்கொண்டிருந்த ஷூட்டிங்கை கண்டு களித்தோம். இரவு டின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்டோம்...  நல்ல குளிரில் ஆந்திரக்காரமான அசைவ உணவு... (குட் காம்பினேஷன்)

ஐதராபாத் பிரியாணி
இந்த முழு ட்ரிப்பிலும் நான் மறக்கமுடியாதது.. ஐதராபாத் பிரியாணிதான்... அதிக quantityயுடன் வயிறு முட்ட சாப்பிட்ட அந்த மட்டன் பிரியாணி... நம்ம கேபிளார் பாணியில் சொல்லவேண்டுமானால் 'டிவைன்'

ஆச்சர்யம்
சினிமேக்ஸ் மல்டிப்ளெக்சிலுள்ள  KFCயின் கிளை... வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் நடத்துவதை கண்டு மகிழ்ச்சியாய் இருந்தது... அதுவும்... அவர்கள் மெனு கேட்கும் விதமும், அதை அவர்களுக்குள் convey செய்து கொள்ளும் முறையும்... விரைவில் டெலிவரி கொடுக்கும் வேகமும் எல்லாமுமாய் சேர்ந்து என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது..

ஏமாற்றம்
ஒருநாள் காலை டிஃபன், இதே காம்ப்ளெக்சின் பின்னால் இருந்த ஒரு கூரை ரெஸ்டாரெண்டில் சென்று சாப்பிட்டோம்.. நான் பெசரெட் சொல்ல வாயெடுக்க.. அவர்களின் ஸ்பெஷல் என்று நெல்லூர் தோசையை குறிப்பிட்டார்கள். சரி என்று அதையே சாப்பிட்டேன்... அந்த நெல்லூர் தோசையை மறக்கவே முடியாது.. ஏனென்றால் அது தோசை போலவே இல்லை.. ஒழுங்காய் பெசரெட்டே சாப்பிட்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது.. தோசையில் இன்னும் தமிழும் கர்நாடகமும்தான் டாப் என்று தோன்றுகிறது...

குறையொன்று உண்டு
வழக்கமாக ஐதராபாத் போனால் எப்படியாவது பிரசாத் iMax தியேட்டரில் ஒரு படம் பார்த்துவிட்டுத்தான் வரவேண்டும் என்பது எங்கள் குழுவின் எழுதப்படாத கொள்கை. ஆனால் இம்முறை அந்த கொள்கை ஆட்டம் கண்டுவிட்டது. வேறொரு காரணமாய் சில மீட்டிங் அமைந்துவிட்டதால் கடைசிவரை ஐமேக்ஸ்-ல் அதுவும் HOBBITஐ பார்க்க முடியாமல் போனது சின்ன வருத்தமே...

காத்திருந்து காத்திருந்து
திரும்பி வருவதற்கு ஆயத்தமானபோது, வழக்கத்திற்கு மாறாக ஏர்போட்டிற்கு இரண்டு மணிநேரம் முன்னால் சென்று அடைந்துவிட்டதால் பயங்கர கடுப்படித்தது. உள்ளே போகாமல் வெளியே இருக்கும் McDயில் பர்கரை கடித்தபடி தமிழுக்கும் தெலுங்கிற்கும் சேர்த்து கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். அதுவும் போரடித்துவிட அங்கிருக்கும் Go Kartஐ சிறிது நேரம் ஓட்டலாம் என்று சதீஷ் அடம்பிடிக்க, அங்கே சென்றால், Go Kartடினர் 5.30 மணிக்குமேல்தான் பணிகள் துவக்கம் என்றார்கள்..  எவ்வளவோ மன்றாடிப் பார்த்தும்,  கம்பெனி பாலிசி கராரானது என்று மறுத்துவிட்டார்கள்.. பிறகு அங்கே இருந்த ஹைபர் டென்ஷன் துப்பாக்கி சுடும் ஸ்டாலில் மூவரும் சேர்ந்து ரப்பர் பந்துகளை சுட்டுத்தள்ளினோம்.. 20 குண்டுகளுக்கு தலா ஒரே ஒரு பந்து மட்டுமே கீழே விழுந்தது. இந்த வீர விளையாட்டுகளுக்கு பிறகு சென்னை பறந்துவந்தோம்.

விமானம் சரியான நேரத்திற்கு திரும்ப கொண்டு வந்து சேர்த்தாலும், சென்னை டிராஃபிக் 'அதெப்படி சீக்கிரம் வீட்டுக்கு போக விட்டுடுவேன்..' என்று கூறவே ஒன்றரை மணிநேரம் தாமதாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன்.


"மெட்ராஸ் மாதிரி வருமா..!?!"


Signature

Saturday, December 22, 2012

3D சினிமாவில் புதிய தொழில்நுட்பம் :HIGH FRAME RATE

ஒரு ரசிகர், திரைப்படம் பார்க்கும்போது, தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து பார்த்தாலேயொழிய அந்த திரைப்படம் வெற்றிப்பெறாது...

இந்த 'மெய்மறந்து' என்னும் உணர்வை கொடுக்க, சினிமாவின் ஆதிகாலத்தில் பிம்பங்கள் உதவி வந்தது... பிறகு சத்தம், இசை, ஜாலம், வண்ணம், அதிலேயே துல்லியம் என்று மாறி மாறி பரிணமித்து வந்த சினிமாவில், சில ஆண்டுகளுக்கு முன் 3D என்னும் தொழில்நுட்பம் மேலும் ஒரு மைல்கல்-ஆக அமைந்தது... அந்த வரிசையில் தற்போது, HIGH FRAME RATE 3D (சுருக்கமாக HFR 3D) என்னும் மேலுமொரு தொழில்நுட்பம் தலைதூக்கியுள்ளது.

இதை முதலில் முயன்ற பெருமை, கிங்-காங், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற வெற்றித் திரைப்படங்களின் இயக்குனர் திரு.பீட்டர் ஜாக்ஸன் அவர்களை சேர்ந்துள்ளது...

இவர் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட THE HOBBIT திரைப்படம் HFR3Dயில் வெளியிட்டுள்ளார்.


இந்த HFRஐப் தெரிந்துக் கொள்வதற்கு முன் FRAMES PER SECOND (FPS) பற்றி ஒரு சிறு விளக்கம் இதோ...

ஒருவர் கை அசைப்பது போல் ஒரு வீடியோ இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்... அந்த கை அசைக்கப்படுவதை 24 ஃபோட்டோக்களாக எடுத்து, அந்த 24 ஃபோட்டோக்களையும் ஒரு நொடியில் சேர்த்து ஓட்டிக்காட்டும்பொழுது, அந்த கை அசைவது போல் அந்த ஒரு விநாடியில் தெரியும்... இப்படியே ஒவ்வொரு விநாடிக்கும் 24 ஃபோட்டோக்கள் ப்ரொஜெக்டரில் ஓடும்... இந்த ஃபோட்டோக்களை FRAMES என்று அழைப்பார்கள்... இதை, 24FPS (Frames Per Second) என்று சொல்வார்கள்... ஆக ஒவ்வொரு திரைப்படமும் 24FPS என்ற விகித்ததில்தான் அகில உலகிலும் திரையிடப்பட்டு வந்தது... (டெலிவிஷனுக்கு தனிக்கணக்கு..)

தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த HFR மூலம் ஒரு விநாடிக்கு 48 FRAMEகள் ஓடும்... 24ல் கிடைக்கும் துல்லியத்தைக் காட்டிலும் மேலும் துல்லியம் காட்ட விழையும் ஒரு புது தொழில்நுட்பம்.

ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் ஒரு குறைபாடு இருக்கிறது... சினிமா என்பது ஒரு நவீன நிழல் நாடகம்.. ஒரு 'மாயை' என்றுகூட சொல்லலாம். அந்த மாயையில் படம் பார்க்கும் ரசிகர்களை ஒரு டிரான்ஸ் நிலைக்கு கொண்டு சென்று கதை கூறி அவர்களை எண்டர்டெயின் செய்ய வேண்டும். அந்த மாயையிலிருந்து விலகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால், அவர்களால் தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து போக முடியாது.

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த 48FPSல் காட்டப்படும் துல்லியம் சிறு சிறு துரும்புகளின் நிஜ வண்ணத்தை காட்டிவிடுவதால், ஒரு விஷயத்தை பொய் என்று ரசிகர்களை நம்பவைப்பது சிரமமாகிவிடுகிறது. இப்படியிருக்கும்போது, ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட அட்டைக்கத்தியை தங்கம் என்று நம்பவைக்க, திரையில் முடியாமல் போகிறது. பிறகு எப்படி மக்கள் படத்தில் லயிக்க முடியும்?

ஈஸ்ட்மேன் கலரில் வந்த சரித்திர படங்களுக்கும் தற்போது எடுக்கப்படும் சரித்திர படங்களையும் பார்க்கும்போது, ஈஸ்ட்மென் கலரில் இருக்கும் சரித்திர நம்பகத்தன்மை தற்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. (உதாரணம், கர்ணன் படத்தின் சரித்திரத்தன்மையையும், பொன்னர் சங்கர் படத்தின் சரித்திரத்தன்மை.. நான் படத்தின் தரத்தை ஒப்பிட்டு கூறவில்லை... தொழில்நுட்பத்தை மட்டுமே கூறுகிறேன்)

நான் 48FPSயில்  வெளியாகியிருக்கும் THE HOBBIT திரைப்படத்தை சத்தியம் சினிமாஸ்-ல் HFR3Dயில்தான் பார்த்தேன்... இந்த தொழில்நுட்பம் பிடித்துப்போனால் இதை நான் இயக்கவிருக்கும் அடுத்த 3D படத்தில் உபயோகிக்கலாம் என்ற ஆசைதான் காரணம்... ஆனால், இந்த HFR3Dயின் விளைவு, படம் பார்க்கும்போது சற்றே கவனச்சிதறலாய்த்தான் எனக்கும் எனது நண்பர்களுக்கும் பட்டது...

இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், இந்த தொழில்நுட்பத்தை ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டபோது, சில பத்திரிகையாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் இந்த தொழில்நுட்பம் கவனச்சிதறலாய் பட்டுள்ளது... எனவே, இன்னமும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காத நிலையில்தான் இந்த HFR3D இருக்கிறது. ஆனால், இதை இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன் பரிணாமம் என்றே கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பம் பழக மக்களுக்கு நிச்சயம் அவகாசம் தேவைப்படும் என்றும், இந்த முறையில் 3D படம் பார்க்கும்போது, கண்களில் ஏற்படும் சிரமம் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் தேவையோ என்றுகூட குழப்பம் ஏற்படுகிறது...

நீங்கள் இந்த படத்தை HFR3D தொழில்நுட்பத்தில் பார்த்திருக்கிறீர்களென்றால், நிச்சயம் உங்கள் கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்...




Signature

Monday, April 09, 2012

அபிராமி தியேட்டிரில் அம்புலி 50வது நாள்

அம்புலியின் 50வது நாளன்று ஆஃபீசில் கேக் வெட்டி கொண்டாடினோம்... 3D படம் என்பதால் கேமிராமேன் சதீஷ்.Gயைத்தான் கேக் வெட்ட சொன்னோம்... வெட்டினார்... அன்று காலையில் USலிருந்து வந்திருந்த எனது நண்பர் திரு.வசந்தராமன் அவர்களது பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்திக்கு குழுவாய் சென்று அவர்களிடம் ஆசி பெற்று வந்தோம்.





மனதிற்கினிமையாய் மாலை திருப்போரூர் முருகர் கோவிலுக்கு போகலாம் என்று எண்ணியிருந்தபோது... உதவி இயக்குநர்கள் அனைவரும் குழுவாக போய் படத்தை பார்க்கலாம் என்று மாற்று யோசனை சொன்னார்கள். சரி 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று எஸ்கேப் தியேட்டரில்  4 மணியாட்டம் சென்று படத்தை பார்க்கலாம் என்று முடிவெடுத்து புக் செய்ய நினைத்தோம் 'ஹவுஸ் ஃபுல்' என்று காட்டியது.. சந்தோஷமாய் இருந்தது... அடுத்த அபிராமி தியேட்டிரில் 'P'ரோவில்தான் டிக்கெட் கிடைத்தது. 10 டிக்கட் பதிவு செய்துக்கொண்டு கிளம்பினோம்.

படத்தை 50ஆவது நாள்தான் பார்ப்பேன் என்று 'வேணி' என்ற எங்கள் குழுவின் தோழி ஒருவர் கூறியிருந்தார். ரிஸ்க் வேண்டாம் பார்த்துவிடுங்கள் என்று நாங்கள் முதல் வாரம் அழைத்ததற்கு... 'நிச்சயம் 50ஆவது நாள் படம் ஓடும் அப்போது பார்க்கிறேன்' என்று திண்ணமாக கூறியிருந்தார்... அவர் வாய் முகூர்த்தம் பலித்ததால், மறக்காமல் அவரையும் அழைத்திருந்தோம்.
அங்கும் ஹவுஸ் ஃபுல்லாக காட்சி துவங்கியது... கைதட்டல்கள்... ஜாலி கிண்டல்கள் என்று மக்கள் சந்தோஷமாக படம் பார்த்தது மனதிற்கு தெம்பாய் இருந்தது...

படம் முடிந்ததும் ரோபோ அபிராமி தியேட்டரின் ஹால் சூப்பர்வைஸர், ஹால் செக்யூரிட்டி, டிக்கெட் கிழிப்பவர், அரங்கில் டார்ச் அடித்து சீட் காட்டுபவர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் நண்பர்கள் என்று அனைவருடனும் நின்று குழுவாய் ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.




ஹால் சூப்பர்வைஸருடன் பேசுகையில், 'நீங்கள் நிச்சயம் 100வது நாளுக்கும் இங்கேயே வரவேண்டும் அதுவே என் விருப்பம்' என்றார்... அவர் வாய் முகூர்த்தமும் பலிக்க வேண்டும். மேலும் அரங்கை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஹவுஸ்கீப்பிங் நண்பர்களுடன் வினவினோம்... அவர்களும் '50வது நாள் உங்கள் படம் ஹவுஸ்ஃபுல் ஆகுது.. இதுக்கு மேல உங்களுக்கு என்ன சார் பப்ளிக் ரெஸ்பான்ஸ் வேணும்... நாங்கதான் தினம் பாக்குறோமே கூட்டம் உங்க படத்துக்கு நல்லா வந்துட்டிருக்கு... இப்போ லீவுதானே... இன்னும் வருவாங்க பாருங்க...' என்று நம்பிக்கை தெரிவித்தனர்.


Signature

Friday, March 23, 2012

திருட்டுச்சந்தைக்கு எதிராய் 3D திரைப்படம்


இன்று சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துக் கொண்டிருக்கும் கரையான் திருட்டு விசிடி/டிவிடி/ப்ளூ ரே/டோரண்ட் டவுண்லோடுகள்தான்...

ஒரு படம் வெளிவந்த அடுத்த நாளே சில இணையதளங்களில் சுடுச்சுட இலவசமாக ஆன்லைனில் காணும் வசதி வந்துவிடுகிறது... டவுண்லோடும் செய்து கொள்ளலாம்... அதை டவுண்லோடு செய்து சில நல்லவர்கள் சுடச்சுட டிவிடியும் போட்டுவிட்டு சந்தையில் புழக்கத்திற்கு விட்டுவிடுகிறார்கள்....

18 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்குள் ஒரு டிவிடி, சந்தையில் கிடைத்துவிடுகிறது... இதில் சில விசேஷ திருட்டு வியாபார வல்லுனர்கள் வீட்டிற்கே கொண்டுவந்து ஹோம் டெலிவரி செய்தும் விடுகிறார்கள்... இப்படி இந்த வியாபாரம் அசுரத்தனமாய் வளர்ந்துள்ளது... யாரையும் குறிப்பிட்டு குறைகூறுவதற்கல்ல...

இந்நிலையில் எங்கள் அம்புலி திரைப்படத்தை முதல் வாரம் 3Dயில் மட்டுமே  சுமார் 130 திரையரங்குகளில் வெளியிட்டிருந்தோம்... முதல் வாரம் ரிசல்ட் நன்றாக இருக்கவே, இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் நம் படத்திற்கு 7 கூடுதல் திரையரங்குகள் கிடைத்தது... அதுவும் நாங்கள் வெளியிட்ட முதல்தர போலாரைஸ்டு 3Dக்குத் தேவையான மாற்றங்ளுக்கு ஒப்புக்கொண்ட 4 திரையரங்குகள் உட்பட... இதனால், 2ஆம் வாரம் திரையரங்குகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக வர ஆரம்பித்தார்கள், குறிப்பாக குழந்தைகள் பட்டாளத்தை அதிகம் அரங்குகளில் காணமுடிந்தது... இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரம் நாங்கள் வெளியிட்ட திரையரங்குகள் அனைத்திலும் போலாரைஸ்டு மற்றும் ஆனாக்ளிஃப் என்ற இரண்டு ஃபார்மெட்டிலும் 3Dயில் மட்டுமே படத்தை வெளியிட்டிருந்ததால் திருட்டுச்சந்தைக்கு எதிரான போரில் அம்புலி வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்...

நாங்கள் படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் வியாபார டிசைன்களை வடிவமைக்கும்போது, படத்தின் திருட்டு டிஸ்க் வரவில்லையெனில், கீழ்காணும் விளம்பரத்தை 2ஆவது வார தொடக்கத்தில் (2ஆவது வெள்ளியன்று) வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தோம்...



ஆனால் இந்த விளம்பர டிசைனை உங்களால் வெளியிட முடியாது, உங்கள் படத்தின் டிஸ்க் நிச்சயமாய் வெளிவந்துவிடும் என்று எங்கள் குழுவுக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள்...

ஆனால், 'அம்புலி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 36 நாட்களாகிறது.. இதுவரை தெளிவான ப்ரிண்ட் அல்லது 5.1 ப்ரிண்ட் என்று திருட்டுச்சந்தையில் புழங்கும் வார்த்தையில் சொல்லக்கூடிய சுத்த ப்ரிண்ட்டுகள் வெளிவரவேயில்லை...

இதுவரை இண்டர்நெட்டில் வெளியாகியிருக்கும் அம்புலியின திருட்டுப்ரிண்ட்டின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் இதோ...  இதுதான்...




இது போல் மழுங்கலான இரட்டைப் பிம்பங்களை எந்த மனிதராலும் 10 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியாது... நல்ல தரத்தை எதிர்பார்க்கும் உண்மையான சினிமா விரும்பிகள் இதை பார்க்கவும் மாட்டார்கள்... அதையும் மீறிப் பார்ப்பவர்களுக்கு இது இண்டர்நெட்டில் இலவசமாகத்தான கிடைக்கிறது கூகிளாரை கேட்டு பார்த்துக் கொள்ளலாம்...

திருட்டு டிவிடியில் தெளிவான ப்ரிண்ட் வெளிவராமலிருப்பதற்கு 2 முக்கிய காரணங்கள்
1. அம்புலி திரைப்படத்தை 3Dயில் மட்டுமே வெளியிட்டது
2. கேபிள் சங்கர் அவர்களின் 'சினிமா வியாபாரம்' புத்தக உத்திகள்

முதல் காரணத்திற்காக, எங்கள் தயாரிப்பாளரான திரு.கே.டி.வீ.ஆர். லோகநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்... காரணம், அவர் நினைத்திருந்தால் கூடுதல் வருமானம் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிக திரையரங்குகளில் 2Dயிலும் இப்படத்தை வெளியிட்டிருக்க முடியும்... 2D திரையரங்குக்காரர்கள் படத்தை கேட்கவும் செய்தார்கள்... ஆனால் அவர் அப்படி செய்யவில்லை... அவரது துணிவு, இப்படத்தை மக்கள் சில நாட்களுக்கு 3Dயில் மட்டுமே கண்டு களிக்கட்டும்... படத்திற்கான டிமாண்ட் சில நாட்களுக்காவது நிச்சயம் இருக்கும், அப்போது சாவதானமாக 2Dயில் விட்டுக் கொள்ளலாம் என்று ஸ்திரமாய் நம்பினார்...

இரண்டாவது காரணத்திற்காக, கேபிள் சங்கர் அவருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்... அவரது "சினிமா வியாபாரம்" புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல் படத்தி்ற்கான வெளிநாட்டு உரிமையை (2Dயில்) கொடுத்திருந்தால் இந்நேரம் தட்டு ரெடியாக இருந்திருக்கும்.. அவர் அந்த புத்தகத்தில் விளக்கியிருந்த சில உத்திகளை தெரிந்துக் கொண்டதில், 3Dயில் மட்டுமென்றால் வெளிநாடுகளில் உடனே வெளியிடலாம், இல்லையெனில் 2Dயை இப்போது வெளியிட வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்துக் கொள்ள அவரது புத்தகம் வழிவகுத்தது...

தமிழ் சினிமாவின் எதிர்காலம் 3Dதான் என்று நான் கூறவில்லை.. சில காலமாவது 3D படங்கள் தொடர்ந்து வந்தால், மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பத்தோன்றுகிறது... அம்புலி போன்ற புதுமுகங்களை வைத்து எடுத்த 3D படத்திற்கே மக்கள் இந்த ஆதரவு கொடுத்தபோது, பெருநட்சத்திரங்களின் படங்கள் 3Dயில் வந்தால் மக்கள் நிச்சயம் திருவிழாவாய் கொண்டாடுவார்கள்...  நாமும் தியேட்டர்களுக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவோம்...


Signature

Monday, March 19, 2012

"அம்புலி 3D" : விமர்சனக்கோவை


நண்பர்களுக்கு வணக்கம்,


அம்புலி வெளியாகி வெற்றிகரமாக இன்று 32வது நாள்... பரீட்சைக் காலத்திலும் அம்புலி நன்றாக போய்க்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் குழந்தைகள்... நண்பர்கள் பலரும் ஃபோன் செய்யும்போது அவரவர் வீட்டுக் குழந்தைகள் அம்புலியைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பதாய் தெரிவித்தார்கள்... உச்சக்கட்டமாய் பெரம்பூரைச் சேர்ந்த எனது தந்தையின் நண்பர் அமரவாணன் என்பவரின் குழந்தை தனது பெயரை 'ஆர்த்தி'யிலிருந்து 'அம்புலி' ஆர்த்தி என்று மாற்றிக் கொள்ள விரும்பி அடம்பிடிப்பதாய் புலம்பினார்... தாங்க்ஸ் அம்புலி ஆர்த்தி...!



படத்தை பார்த்த நண்பர்கள் பலரும் நிறைகளை நிறையவே சொல்லியும் குறைகளை கூடுமானவரை பக்குவமாயும் எடுத்துரைத்தனர்...



A, B, C என்று அனைத்துத் தரப்பிலும் படம் சென்றடைந்திருப்பதாக எங்கள் அலுவலக அக்கௌண்டன்ட் எடுத்துரைத்தார்... மகிழ்ச்சி..!



அம்புலி குறித்து வெளியான ஆஹா ஓஹோ என்ற விமர்சனங்களும்... அய்யய்யே..! சே..! த்தூ..! போன்ற விமர்சனங்களும் எல்லாம் வந்தாகிவிட்டது... இதுவரை நான் பதிவெழுதாததற்கு முக்கியக் காரணம்... படம் வருவதற்கு முன்பு அதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சுயவிளம்பரம் செய்யலாம். ஆனால் படம் வெளிவந்ததும் அந்தப்படத்தின் தரம்தான் விளம்பரம்... அது பார்வையாளர்களின் வழியே பரவும் வாய்வழி விளம்பரம்... அந்த வகையில் 'அம்புலி 3D' படத்திற்கு மிக நல்ல Mouth Publicity கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..!



எனது எழுத்துப்பயிற்சி பதிவுலகிலிருந்து தொடங்கியதால், பதிவுலகில் நம் படம் எப்படி பேசப்படுகிறது என்ற ஆவல் எனக்கு தனிப்பட்ட முறையில் படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே இருந்து வந்தது...



பதிவுலக நண்பர்கள் 'அம்புலி'யை விமர்சித்து எழுதிய பதிவுகளை முடிந்தவரை திரட்டியிருக்கிறேன்... இவை தவிர உங்களுக்கு தெரிந்து வேறு விமர்சனங்கள் இருந்தாலும் தெரிவியுங்கள்...



கேபிள் சங்கர் http://www.cablesankaronline.com/2012/02/3.html

ரிலீசுக்கு முன்பே படத்தைப் பார்க்க கேபிளாரைஅழைத்திருந்தேன்... அவரும் குடும்பத்துடன் வந்து சத்யம் ப்ரீமியரில் கலந்துக் கொண்டார்..! நன்றி ஜி..!



ரஹும் கஸாலி http://www.rahimgazzali.com/2012/02/ampuli-3d-review.html

அரசியல் பதிவுகளுக்கு மிகவும் பிரசித்தமான நண்பர் ரஹும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி பாராட்டினார்..! அவருடன் சேர்ந்து படம் பார்த்த மற்ற புதுக்கோட்டை நண்பர்களையும் டெலிஃபோனில் பேச வைத்தார்... அவருக்கும் இந்நேரத்தில் மிக்க நன்றி..!


குறும்புகள் ரகு http://www.kurumbugal.blogspot.in/2012/02/3d.html

என் நெருங்கிய நண்பர்... நான் BPOவில் பணிபுரியும்போது இவரும் என் சக ஊழியர். பணி இடைவேளைகளில் நானும் இவரும் நள்ளிரவு 1.30மணிக்கு எடுக்கும் ப்ரேக்கில் என் கதைகளை கேட்டுக் கொண்டே தூக்கம் தொலைப்பவர். கதையை கேட்டதோடல்லாமல், ஊகத்தோடு ஊக்கத்தொகையும், நட்புக்கரத்தோடு கரண்ஸியும் கொடுத்து என் முதல் குறும்படத்திற்கு தயாரிப்பாளராய் மாறியவர். இவருக்கு இந்த பதிவின் மூல(மு)ம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் திரைப்படங்களுக்கு நண்பனாய் மட்டுமில்லாமல் நடுநிலை விமர்சனங்கனாய் எழுதுவது எனது எதிர்ப்பார்ப்புக்குறியது...


எழுத்தாளர் சுப்ரஜா http://www.nanumcinemavum.blogspot.in/

சமீபத்தில் அறிமுகமான இவர் மிக நல்ல நண்பர்... படத்தை பார்த்து பாராட்டியதோடு தன்னுடைய குருநாதர் (எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான ஸ்ரீதர் சார்) அவர்களின் படத்தோடு சில காட்சிகளை ஒப்பிட்டு கூரியதில் மெய் சிலிர்த்தது...! ரொம்ப நன்றி சார்..!



உண்மைத்தமிழன் http://truetamilans.blogspot.com/2012/02/3-d.html

பத்திரிகை நண்பர்களுக்கான பிரத்யேக காட்சியில்தான் இவரை சந்தித்தேன்... தானும் ஒரு பதிவர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்... இவரது வலைப்பூவின் பெயைரக் கேட்டதும்... 'நீங்கதானா அது..' என்று நான் காட்டிய ஆச்சர்யத்தை அவர் படத்தைப் பார்த்து என்னிடம் காட்டினார்... அப்போதே பாராட்டி... அன்றே பேட்டி பதிவு செய்து... உடனே தன்னுடைய சேனலில் (NDTV HINDU) அம்புலி குறித்த செய்திகள் வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்...



'மெட்ராஸ்பவன்' சிவகுமார்

நான் முதல் வாரம் அம்புலி குழுவுடன் தியேட்டர் ரவுண்ட்ஸ் போகும்வழியில் ஒரு ஃபோன் வந்தது... 'தன்னை சிவகுமார் என்று அறிமுகம் செய்துக் கொண்ட ஒரு பதிவர்... இதற்கு முன் தனக்கு த்ரில்லர் வகையில் தமிழில் பிடித்த படம் 'அதே கண்கள்'தான் எனவும், அதன் பிறகு 'அம்புலி'தான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறி மனம் நெகிழ வைத்தார்...' அவர் எழுதிய அம்புலி விமர்சனம் இதோ... http://www.madrasbhavan.com/2012/02/3d.html



கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் சில பதிவர்களுக்கு நான் Passive Reader... நான் விரும்பி படித்த பதிவர்களும் சில புதியவர்களும் (எனக்கு) அம்புலி படத்துக்களித்த விமர்சனம் இதோ...


சி.பி. செந்தில்குமார் http://www.adrasaka.com/2012/02/3_19.html

'யாவரும் நலம்' வெங்கட் http://www.yaavarumnalam.com/2012/02/3d.html

'லக்கிலுக்' யுவகிருஷ்ணா http://www.luckylookonline.com/2012/02/blog-post_21.html

'பிலாஸஃபி' பிரபாகரன் http://www.philosophyprabhakaran.com/2012/02/3d.html

'வாங்க ப்ளாகலாம்' அனந்து http://pesalamblogalam.blogspot.in/2012/02/blog-post_19.html

'தகவல் களஞ்சியம்' கார்த்திக் http://atozthagavalkalangiyam.blogspot.in/2012/03/3.html

'வீடுதிரும்பல்' மோகன் குமார் http://veeduthirumbal.blogspot.in/2012/03/79.html



நண்பர் ரஹும் அம்புலி பற்றிய விமர்சனத்தை மற்றும் போட்டதோடல்லாமல் இமெயில் மூலமாய் சில கேள்விகளையனுப்பி அதற்கான விடைகளை தொகுத்து எனது பேட்டியையும் வெளியிட்டார்...

பேட்டி இதோ... http://www.rahimgazzali.com/2012/02/interview-with-ampuli-director-hareesh.html



இவையெல்லாவற்றையும் தாண்டி வழக்கமாக ஒரு படத்தின் தரத்தை மதிப்பிடக்கூடிய சினிமா சம்மந்தப்பட்ட இணையதளங்களில் வெளியான அம்புலியின் சில முக்கிய விமர்சனங்கள் இதோ..!



Behindwoods

"Ambuli is definitely a pioneer in Tamil Cinema. It has the grip of a thriller and the charm of a grandmother’s tale or folklore..."



Indiaglitz

"Call it a visual treat and a unique experience for the audience. One gets the feeling that the entire story unfolds almost in front of him /her! To Tamil audience for whom 3D films would mean those from Hollywood, here comes 'Ambuli'..."



Galatta

"Director duo Hari Shankar and Hareesh Narayan, who amazed us with their technical brilliance in Orr Iravu, is once again back with yet another supernatural thriller titled Ambuli. This is in fact a good 3D watch for Kollywood fans..!"



தினத்தந்தி

"3டி தொழில்நுட்பத்துடன் கூடிய மிரட்டலான படம் அம்புலி..."



குங்குமம்

"ரசிகர்களின் எந்த கணிப்பையும் தாண்டிவிடும் கதைப் பின்னல் இயக்குநர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றிகள்..."



விகடன்

40/100... கதை நடக்கும் காலம், இரவு நேர 3டி எஃபெக்ட், திகிலூட்டும் பின்னனி இசை ஆகியவை அம்புலியை ரசிக்க வைக்கிறது...



அம்புலி பற்றி மேலும் தகவல்களுக்கு...

http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.youtube.com/ambuli3d



அங்கிங்கென்று எங்கும் அம்புலி அலை சுனாமியளவுக்கு இல்லையென்றாலும் சுமாரான அளவில் நல்லமுறையில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது என்ற திருப்தி...



இனி பதிவுகள் எழுத தொடரலாம் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் நான்...



அன்புடன்

ஹரீஷ் நாராயண்


Signature

Saturday, January 28, 2012

அம்புலி 3D : திரை ஜாலம் இதோ...

வணக்கம் நண்பர்களே,

எங்கள் படத்தின் சார்பாக ஒரு SCREEN MIMING எனப்படும் திரைஜால ப்ரெசென்டேஷன் இதோ...




பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Sunday, December 25, 2011

'அம்புலி 3D' : முதல் ட்ரெய்லர்

வணக்கம் நண்பர்களே,
அம்புலி படத்தின் டீசர் ட்ரெய்லரை இப்பதிவுடன் இணைத்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்...

AMBULI FIRST TEASER

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Sunday, November 20, 2011

'அம்புலி 3D' : அமுதனின் டைரி... (பக்கம் 3)







அமுதன் வாசித்த புல்லாங்குழல் மெட்டு இதுதான்...

CLICK HERE FOR AMUDHAN'S LOVE FLUTE



Signature

Tuesday, November 15, 2011

'அம்புலி 3D' : அமுதனின் டைரி... (பக்கம் 2)

அமுதனின் டைரியில் பக்கம் 2ல் எழுதியிருந்தது...




Signature

Monday, November 14, 2011

'அம்புலி 3D' : அமுதனின் டைரி...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...
இந்த வாரத்திலிருந்து அம்புலி படத்தில் வரும் ஹீரோ கதாபாத்திரமான அமுதன் எழுதிய டைரியை இன்று முதல் ரிலீஸ் வரை தினமும்...அனைத்து சமுதாய வலைத்தளங்களிலும்  பகிரலாம் என்று முடிவு செய்தோம்... இதோ உங்களுக்காக...


உங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Thursday, March 03, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 2



அம்புலி : மகளிர் ஸ்பெஷல்

"டாவின்ஸி கோட்" புத்தகத்தில், பெண்கள் இவ்வுலகினில் எப்படி எக்கலாஜிக்கலி பேலன்ஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பற்றி சில விளக்கங்கள் வரும். இந்த பேலன்ஸை, மோனலிஸா ஓவியத்தில், டாவின்ஸி எப்படி சூட்சமமாக சொல்லியிருக்கிறார் என்பதை பற்றி மிக சுவாரஸ்யமாக டான் ப்ரௌன் அவர்கள் விளக்கியிருப்பார்... அதே போல், திரு. கல்கி அவர்கள் தனது கதைகளின் கருவை ஒரு பெண்ணின் சபதத்தையோ அல்லது வைராக்கியத்தையோ முன்வைத்து எழுதியிருப்பார்.

அம்புலியிலும், ஒரு பெண்ணின் கருவே, கதையின் கரு... அப்படிப்பட்ட கதையின் கருவாக இடம்பெறும் முக்கிய காட்சிகளை கலைராணி, உமா ரியாஸ்... ஆகியவர்கள் ஒத்துழைப்பில் சமீபத்தில் ஒரு கிராமத்தில் படம்பிடித்து முடித்தோம்...

கலைராணி மேடம்... பெயருக்கு ஏற்றார் போல், கலையில் ராணிதான்.... மிக தத்ரூபமான நடிப்பு... நல்லதொரு இன்வால்மெண்ட். அம்புலியில் தனது கதாபாத்திரத்தை பற்றி அவர் கேட்டு தெரிந்து கொள்ளும்போது, கண்களை மூடிக்கொண்டு உள்வாங்கி பிறகு ஷாட் எடுக்கும்போது, மிக அழகாக அந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்தினார். ஓன் டேக் ஆர்டிஸ்ட் என்று சொல்வது மிகவும் பொருந்தும். இவர் நடிக்கும்போது மட்டும் ஷூட்டிங் வேடிக்கை பார்க்கும் கிராமத்து பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.


படப்பிடிப்பின் போது இவருக்கு கடும் காய்ச்சல் அடித்து கொண்டிருந்தது, ஷூட்டிங் நடத்தமுடியுமோ என்று நாங்கள் ஐயுறும்போது, துளியும் தடங்களின்றி எடுக்க, அவர் கொடுத்த ஒத்துழைப்பை என்றும் மறக்க முடியாது. காட்சிகளுக்கு மத்தியில் ஒரு சின்ன இடைவேளையிலும், கயிற்று கட்டிலிலும், தரையிலும் அவர் படுத்து உறங்கி குட்டி குட்டி ஓய்வுகள் எடுத்து கொண்டு நடித்து கொடுத்தார். அவரது காட்சிகள் முடிந்ததும், தான் அம்புலியில் பங்கேற்று நடித்த பாட்டி கதாபாத்திரத்தின் உடைகளையும், அணிகலன்களையும் அடையாளமாக வைத்து கொள்ளப்போவதாக கூறி கேட்டு வாங்கி சென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து உமா ரியாஸ் அவர்கள்... இவரை நல்ல நடிகை என்பதைவிட, எங்கள் குழுவுக்கு கிடைத்த நல்லதொரு தோழி என்றுதான் சொல்ல வேண்டும். தோழி மட்டுமின்றி ஒரு வெல்விஷரைப் போல், படப்பிடிப்பில் துளியும் முகம் கோணாமல், எத்தனை முறை காட்சியை மாற்றியமைத்து எடுத்தாலும், மிகவும் இயல்பாக நடித்து கொடுத்தார். இவரிடம் டைரக்டராக கூடிய தகுதி அதிகம் உள்ளது. இவரது ஸ்பெஷாலிட்டியான மிமிக்ரி கலையை (குறிப்பாக திரு. தேங்காய் சீனிவாசனின் உச்சாடனங்கள்) படப்பிடிப்பு இடைவேளையில் செய்து காட்டி ஒட்டு மொத்த குழுவின் கவனத்தையும் ஈர்த்து கைதட்டு வாங்கினார்.

 
என்னதான் ஷாட் எடுக்கும் முன்பு மிகவும் ஜாலியான முகபாவத்தில் இருந்தாலும், கேமிரா ரோல் ஆனதும், சட்டென்று தனது கதாபாத்திரத்தின் முகபாவத்துக்கு வந்து விடுவது கண்டு வியந்தேன். இவர் நடித்த 'அன்பே சிவம்' எனக்கு பிடித்த படங்களில் ஒன்று, அதில் அவரது நடிப்பை கண்டு வியந்திருந்ததால், நம் படத்தில் இவரை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணம் ஈடேறியதில் மகிழ்ச்சி..!

அம்புலியில் அடுத்த பெண், போன பதிவிலேயே நான் அறிமுகம் செய்துவைத்த எங்களது திரைப்படத்தின் கதாயாகியான சனம். புதுமுகம்தான் என்றாலும் ஆங்கில ஸ்டேஜ் ப்ளேக்களில் அதிகம் பங்கேற்றவர் என்பதால் நடிப்பிற்கு பஞ்சமில்லை... தமிழ் நன்றாகவே பேசுகிறார். (ஆச்சர்யம்..!)


தன்னுடைய காட்சிகளில் மட்டுமில்லாமல், மற்ற காட்சிகள் எடுக்கும்போதும் ஆர்வமாக படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி கவனித்து வருகிறார்... நடிகை என்று அலட்டிக் கொள்ளாமல் குழுவில் அனைவரிடமும் இதமாய் பேசி வருவதால், இவர் நன்றாய் வர வேண்டும் என்று பலரும் நினைக்கும்படி நடந்து கொள்வது மகிழ்ச்சி..!

இப்படத்தில் இன்னும் ஒரு கதாநாயகியான திவ்யா நாகேஷ்... அவரது காட்சிகள் இன்னும் எடுக்கப்படாததால் அவரை பற்றி இப்பதிவில் சொல்ல முடியவில்லை...

மகளிர் தினம் சமீபத்தில் இருப்பதால், அன்று பதிவிட நேரம் இருக்குமோ இல்லையோ என்று இன்றே பதிகிறேன். மேலும் அதிக விவரங்களோடு "அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவத்தை அடுத்த பதிவில் பதிகிறேன்.



Signature

Sunday, February 13, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 1





முதல் நாள் எங்களது தயாரிப்பாளர் திரு. KTVR லோகநாதன் சார் அவர்களின் கல்லூரியில் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஒரு சின்ன விழாவோடு படப்பிடிப்பு துவங்கியது. வந்திருந்த அனைவரும் வாழ்த்தி படப்பிடிப்பை துவங்கி வைத்தனர்.

ஷூட்டிங் என்றாலே வேடிக்கை பார்ப்பவர் கூட்டம் அதிகமிருக்கும், அதுவும் 3D படம் என்றதும் இன்னும் ஆர்வமாக மானிட்டர் அருகில் வந்து பலரும் சூழ்ந்து கொண்டு மானிட்டரை எட்டிப் பார்க்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்த செக்யூரிட்டிக்களை போட்டால், அவர்களும் சேர்ந்து கொண்டு மானிட்டரை ஆர்வமாக பார்க்கின்றனர். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் மானிட்டரில் தெரியும் பிம்பம் போதையில்  பார்ப்பது போல் இரண்டிரண்டாக தெரியும். பிரத்யேக கண்ணாடி அணிந்து பார்த்தால் மட்டுமே அவை 3D எஃபெக்ட் தரும். நானும் ஹரியும் கண்ணாடிகளை அணிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, பின்னால் நிற்கும் பலரும் எங்களிடம் வந்து கண்ணாடியை போட்டு பார்க்க ஆர்வம் தெரிவிக்கின்றனர்.



நாங்கள் இப்படத்தை குழந்தைகள் படமாக எடுத்துவிடக்கூடாது என்ற முடிவில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இன்னமும் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் பெரியவர்களை காட்டிலும் பல குழந்தைகள்தான் ஆர்வமாக பார்க்கிறார்கள்.

கல்லூரியில் ஒரு காதல் காட்சி படம்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன், 'அங்கிள்... அங்கிள்...? இது 3D படமா..?' என்று ஆர்வத்துடன் கண்கள் விரித்து கேட்டது மிகவும் மகிழ்ச்சியளித்தது, ஆனால் கூடவே எங்கள் இருவரது (நானும் ஹரியும்) மனதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது ஏன் என்று பதிவின் முடிவில் சொல்கிறேன்.

எங்கள் படத்தின் கதாநாயகி சனம்
 
, படப்பிடிப்பில் இடைவேளையின்போது ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதை ஒரு நிருபர் படம் பிடித்து கொண்டிருந்தார். 'சாப்பிடும்போது படம் எடுக்க வேண்டாமே ப்ளீஸ்' என்று அவர் சொல்லி அந்த நிருபரை அனுப்பிவிட்டார். ஆனால், அன்று மாலையே, அவர் ஒரு கையில் ஆப்பிளுடன் பார்த்து சிரித்து கொண்டிருப்பது போன்ற அந்த புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியாகிவிட்டது, அனைவரும், கையில் ஆப்பிள் வைத்து கொண்டு அவர் முன்னே சென்று நின்று, அந்த புகைப்படத்தை காட்டி, அவரை வெறுப்பேற்றி கொண்டிருந்தோம்.


நேற்று ஒரு வெள்ளைக்காரர், ஒரு பெண்ணைப் பார்த்து 'நீ கேர்ப்பமாயிருக்கே..!'  (நீ கர்ப்பமாயிருக்கே) என்று சொல்ல வேண்டிய காட்சி, ஆனால் அவர் அந்த பெண்ணுக்கு அருகில் நிற்கும் ஒரு ஆணிடம் 'நீ கேர்ப்பமாயிருக்கே..' என்று கூற, அவர் பதறியடித்து 'நானில்ல... நானில்ல..' என்று அலறவும். கூடியிருந்த குழு மொத்தமும் சிரித்துவிட்டது.

நேற்று திரு. பாலா சிங் அவர்கள், தான் நடித்து முடித்த காட்சியை 3D-யில் கண்டுகளித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உடன் வந்திருந்த வெள்ளைக்கார துரையும் இப்படத்தை 'அங்கு அனுப்புங்கள் இங்கு அனுப்புங்கள்' என்று ஏகத்துக்கும் பரிந்துரைத்து கொண்டிருந்தது மகிழ்ச்சியளித்தது..!

Out of Topic
கேணிவனத்திற்கு தகவல்களை சேகரித்த விவரங்களை எழுதுவதாக கூறியிருந்தேன். அதை எழுதுவதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை..! ஆனால் கண்டிப்பாக அந்த விவரங்களை 'கேணிவனம்' புத்தக வடிவில் வரும்போது இணைத்து எழுதுகிறேன். பிறகு பதிவிலும் பதிகிறேன்.

(அந்த சிறுவன் கேட்டதில் மகிழ்ச்சி + அதிர்ச்சி என்று சொல்லியிருந்தேன்.
மகி்ழ்ச்சி = அவன் ஆர்வத்துடன் கண்கள் விரித்து கேட்டது.
அதிர்ச்சி = 'அங்கிள்' என்று அழைத்தது.)

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!

ஹரீஷ் நாராயண்

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவம் 2-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்


Signature

Saturday, February 05, 2011

"அம்புலி - 3D" A Steroscopic Thriller : எனது அடுத்த திரைப்படம்




வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இன்று உங்களுடன் ஒரு நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று முதல்... "அம்புலி" என்ற 3D திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். 20 வருடத்திற்கு  பிறகு வரும் இந்த 3D திரைப்படத்தை குழந்தைகள் படம் போலல்லாமல், வளர்ந்த குழந்தைகளும் பார்க்கும் விதத்தில் படமாக்கவிருக்கிறோம்.

இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, திரு. ரா. பார்த்திபன் அவர்கள், இதில் ஒரு பெரும்பங்காற்ற இருக்கிறார்.

KTVR CREATIVE REELS சார்பில் திரு. V. LOGANATHAN அவர்கள் தயாரிக்கிறார். நானும் எனது நண்பர் ஹரி ஷங்கரும் இப்படத்தை இயக்குகிறோம். எங்களது முந்தைய திரைப்படத்தை வித்தியாசமாக படம்பிடித்து கொடுத்த நண்பர் சதீஷ். G இப்படத்தின் ஒளிப்பதிவாளர். 

நீண்ட நாட்களாக பதிவை எழுத முடியவில்லையே என்றிருந்தேன். இனி, 'அம்புலி' படப்பிடிப்பில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Popular Posts