சென்ற வாரம் பிறந்த ஊரில் (சென்னையில்) ஷூட்டிங் நடந்ததால், ஆர்வத்தில் அதை பற்றி முதலில் எழுதிவிட்டேன். மீண்டும் ரீவைண்டு செய்து, அவுட்டோம் ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களின் pending இதோ...
அவுட்டோர் ஷூட்டிங்கில் கோவை, பழனி, மேட்டூரைத் தொடர்ந்து அவினாசியில் கருமத்தம்பட்டியில் ஒரு புல்வெளியில் ஸ்டண்ட் காட்சிகள் நடந்தது. அங்கு புதுமுகங்களோடு திரு. பார்த்திபன் அவர்களும் இடம்பெறும் காட்சிகள் எடுத்து கொண்டிருந்தோம். வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் , வேறெங்குமில்லாத அளவுக்கு இங்கு மிகவும் அதிகமாக கூடிவிட்டது. சுமார் 2000 ஆட்கள் கூடிவிட்டபடியால் காவலர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் நல்லபடியாக ஷூட்டிங் நடத்தி கொண்டிருந்தோம். கூடுதலாக பார்த்திபன சாரின் ரசிகர் மன்ற ஆட்களும் வந்திருந்து படப்பிடிப்பை நல்லபடியாக நடத்த உதவினார்கள்.
நான்கு திசையிலும் 80 அடி உயரத்தில் லைட் வைப்பதற்கு பயன்படும் கோடாக்கள் சுற்றிலும் வைக்கப்பட்டிருக்க, கேமிராமேன் ரொம்ப நாளாகவே என்னிடம் அந்த கோடாவில் ஒருமுறை ஏறி பார்க்கும்படி கூறியிருந்தார். நானும் பிறகு, பிறகு என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சீக்கிரமாகவே போய்விடவே, அவர் கோடாவில் ஏறுமாறு அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். சரி ஏறித்தான் பார்ப்போமே என்று ஏற ஆரம்பித்தேன். அந்த இடம் புல்வெளி, ஏற்கனவே பரந்து விரிந்து கிடக்கும் மைதானம் என்பதால் காற்று பலமாக அடித்து கொண்டேயிருக்க... பாதி தூரம் ஏறிவிட்டேன். ஆனால் அதற்குமேல் கால்கள் நடுக்கம் காட்ட ஆரம்பித்தன. அப்படியே பாதியில் அமர்ந்துவிட்டேன். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று எண்ணியிருக்க, கீழே பார்த்திபன் சாரின் கார் வந்து நின்றது. இதுதான் சாக்கு என்று கூறி, சரசரவென்று இறங்கி வந்துவிட்டேன். கேட்டதற்கு, பார்த்திபன் சார் வந்துவிட்டார் என்று சொல்லி சமாளித்து வைத்தேன். மீண்டும் அந்த கோடாவை அண்ணாந்து பார்க்க, இதில் தினமும் இரவு முழுவதும் நின்று வேலைபார்க்கும் லைட்மேன்களை எண்ணி மிகவும் வியந்தேன். இதை உணரவைத்த கேமிராமேன் சதீஷூக்கு நன்றி..!
கோடாவில் ஏறும் முயற்சியை கைவிட்டு பாதியில் அமர்ந்தபடி
பார்த்திபன் சார் அடித்த ஜோக்கிற்கு சிரித்து, கோடாவிலிருந்து இறங்கிய களைப்பகன்றபடி...
வழக்கமாக வரும் கூட்டத்தைவிட கடைசி நாளான 4ஆவது நாள், கூட்டம் மிகவும் அதிகமாக வந்தவண்ணம் இருந்தன. கூட்டத்தை சமாளிக்கவே பெரும்பாடு படவேண்டியிருந்தது. இதில் காட்சியை எப்படி படம்பிடிப்பது? என்று எண்ணி வருந்தி கொண்டிருக்க, படப்பிடிப்பு குழுவிலிருந்த பலரும் உதவ முன்வந்தார்கள். குறிப்பாக லைட்மேன் சீஃப் திரு.மோகன் அவர்கள், கையில் மைக் பிடித்தபடி கூட்டத்தினரிடம் நகைச்சுவையாக பேசி அவர்களை குதூகலப்படுத்தி நட்பு கொண்டு அவர்களை சமாளித்து கொண்டிருந்தார். குழந்தைகளை "A for AMBULI" (இதிலும் ஒரு பப்ளிசிட்டி பாருங்கள்..!) என்று மேக்கிங்க ஷூட் செய்யும் கேமிராவை பார்த்து கூறும்படி விளையாட்டு காண்பித்து கொண்டிருந்தார்.
கூட்டத்திற்கு மத்தியில் நான், ஹரி மற்றும் எங்கள் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட். பின்னால் நடுவில் நின்றிருப்பவர் லைட் சீஃப் திரு. மோகன்
ப்ரொட்யூஸர் திரு. KTVR லோகநாதன் சாரும் (வலமிருந்து 2ஆவது நபர்) அவரது நண்பர்களும். வலதுபக்கமிருப்பவர் அவரது மகன் டாக்டர். அருண்
குறிப்பாக வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில் ஒருவர், குடித்துவிட்டு வந்து, படத்தில் நடித்தே தீருவேன் என்று அடம்பிடித்து கொண்டிருந்தார். தண்ணியடித்தால் சிலர் குழந்தைகளாகிவிடுகின்றனர். சாக்லெட் வாங்கித்தருவதாக ஏமாற்றுவது போல் சான்ஸ் வாங்கி தருவதாக ஏமாற்ற வேண்டியதாய் உள்ளது. அவர், யார் சொல்லியும் கேட்காமல் குறுக்கே சுற்றிக்கொண்டிருக்கவே, உதவி இயக்குனர்கள் அவரை தனியாக தள்ளி கொண்டு போய், மேக்கிங் கேமிராவை கொண்டு அவரை பாடச்சொல்லி பேச சொல்லி படம்பிடித்து கொண்டிருந்தனர். அவரும் திருப்தியாக வீடு திரும்பினார். அனேகமாக அடுத்த ப்ராஜெக்டுக்கான முதல் ஆடிஷன் ஃபூட்டேஜ் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
லைட் யூனிட்டில் திரு.பாண்டு என்று ஒரு மும்பைக்காரர் வந்திருந்தார். ஓய்வு நேரங்களில் இவரிடம் தமிழ் வார்த்தைகள் சொல்லி அதை திரும்ப சொல்லக்கேட்டு அவர் கூறும் மழலை தமிழை ரசித்து விளையாடிக் கொண்டிருப்போம். அவரும் இதை ரசித்து விளையாடுவார். பாம்பேவில் ஷூட்டிங்கின்போது கண்டிப்பாக அவரது வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்பு பொழிவார். அவினாசியில் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது, இவருக்கு கோடாவில் தேள் கடித்துவிட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று குணப்படுத்தினார்கள். அடுத்த நாளே அவரும் சகஜமானார். ஆனால் இவருக்கு தேள் கடித்த சமாச்சாரம் எங்களுக்கு அடுத்தநாள் காலைதான் தெரியவந்தது. அவினாசியில் கடைசி நாள் ஷூட்டிங் என்பதால் தடங்கல் ஏற்படாமல் இருக்கும்பொருட்டு இந்த விஷயத்தை மேனேஜர்கள் எங்களிடம் கூறாமல் இரகசியமாக கையாண்டுள்ளனர். நல்லவேளையாக அவருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று தெரிந்த பிறகே நிம்மதியானோம்.
ஆனால் நாங்கள் தேனிக்கு அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு பயணப்படும்போது இன்னொரு விஷயம் கேள்விப்பட்டு பீதிக்குள்ளானோம். அவினாசியில் நாங்கள் ஷூட்டிங் நடத்திய புல்வெளியில், ஆங்காங்கே புல்களினூடே தேள்கள் ஏராளமாக சுற்றித்திரிந்துக் கொண்டிருந்ததாக குழுவில் பலரும் தெரிவித்தனர். நாங்கள் படம்பிடித்தது ஸ்டண்ட் காட்சி என்பதால் புல்வெளியில் சில இடங்களில், தரையில் உட்கார்ந்து, படுத்து, உருண்டு என்று ஷூட்டிங் செய்திருந்தோம். நல்லவேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை..!
அடுத்த பதிவில் தேனியில் நடந்த பகிர்வுகளை பதிகிறேன்...
(தொடரும்..!)