டிஸ்கி : Post Production வேலை முழுமூச்சில் நடந்துவருவதால் தொடர்ந்து துரிதமாக பதிவிட முடியவில்லை..!
தேனியில் அம்புலி
படத்தின் முக்கியமான காட்சிக்காக காட்டுக்குள் இருக்கும் ஒரு பழைய கோவில் போன்ற அம்மைப்பு தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியை தேர்வு செய்து வைத்திருந்தோம். அதுவும், அந்த இடம் இதுவரை எந்தவொரு ஷூட்டிங்கும் எடுக்கப்படாத கன்னிநிலம். எப்படியாவது அனுமதி வாங்கிவிடலாம் என்று பெரும்பாடுபட்டும் கடைசிவரை அங்கு ஷூட்டிங் பர்மிஷன் கிடைக்கவில்லை..! வேறு இடம்தான் பார்க்க வேண்டும் என்றானது.
தொடர்ச்சியாக நடத்த எண்ணிய ஷூட்டிங் தடைபடக்கூடாது என்பதால், இரவெல்லாம் ஷூட்டிங் முடித்துவிட்டு, பகலில் நானும் ஹரியும், மானேஜர்களுடன்... காட்டுக்கோவில்களை தேடும் படலம் நடத்தினோம்.
பகலில் ஓய்வெடுக்காமல் இரவில் ஷூட்டிங் நடத்துவது கஷ்டமாக இருந்ததால், எங்களது ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் திரு. சந்தனபாண்டியன் அவர்கள், காரை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக... இல்லையில்லை... காடு காடாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். பார்க்கும் பழைய கோவில்களையெல்லாம் வீடியோ பிடித்து வந்து எங்களிடம் காட்டிக் கொண்டிருந்தார்... ஆனால் இடம் சரியாக மாட்டவேயில்லை..!
ஒருவழியாக, ஆண்டிப்பட்டிக்கு அருகே தெப்பம்பட்டியில், பளியர்கள் வழிப்படும் வேலப்பன் கோவிலுக்கு அருகாமையில் மலையடிவாரத்தில் ஒரு பழைய கோவில் கிடைத்தது. உடனடியாக அந்த கோவிலை, கலை இயக்குநர் திரு. ரெமியன் அவர்களிடம் ஒப்படைத்தோம். அவரும் story board drawingல் வரையப்பட்டிருந்த பழைய கோவிலுக்கு நிகராக, இப்படத்திற்கு தேவையான செட் வேலைகளை துரிதமாகவும் துல்லியமாகவும் முடித்து கொடுத்தார்.
மேட்டூரிலிருந்து தேனிக்கு வந்து சேர்ந்ததும், முதல் வேலையாக அக்கோவிலை சென்று பார்த்தோம். 'கண்டமனூர் ஜமீன்' அவர்களால் கட்டப்பட்ட அந்த கோவில் இன்றும் தன்மை மாறாமல் கலைச்சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்டுக்கு நடுவே கம்பீரமாக நின்றிருந்தது. அடுத்த சில நாட்கள்(ஆவது) இக்கோவிலில் படப்பிடிப்பு நடத்த போவதை எண்ணி நானும் மகிழ்ச்சியடைந்தேன். கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல்லாம், அக்கோவிலின் சுற்றுப்புறங்களை சுற்றிப்பார்த்து கொண்டும், அருகிலிருக்கும் கிராமவாசிகளிடம் கோவிலைப் பற்றிய தகவல்களை சேகரித்து கொண்டும் இருந்தேன்.
'செட்' வேலை சம்மந்தமாக, அந்த கோவில் சிற்பங்களை மோல்டிங் எடுக்க வந்திருந்த நிபுணர்களும், அக்கோவிலின் சிற்பக்கலையை பார்த்து வியந்தார்கள்.
கோவிலின் மூலக்கிரகத்துக்குள் ஏகப்பட்ட குழிகள் தென்பட்டன, விசாரித்ததில், அந்த கோவிலில் புதையல் இருப்பதாக எண்ணி, ஒரு காலத்தில் எங்கெங்கிருந்தோ மக்கள் வந்து கோவிலை சூறையாடியுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும் அக்கோவிலிலிருந்து ஆண்டிப்பட்டியிலிருக்கும் இன்னொரு கோவிலுக்கு சுரங்கம் இருப்பதாகவும், அது காலப்போக்கில் மூடிக்கொண்டதாகவும் குமுதம் நிருபர் ஒருவர் தெரிவித்தார்.
கோவிலைச்சுற்றிலும் புதர்க்காடு மறைத்திருக்க, அந்த பகுதியில் இரண்டு பெரிய ராஜநாகம் இருப்பதகாவும், பணிபுரியும்போது ஜாக்கிரதையாக வேலைசெய்யும்படியும் மக்கள் பயமுறுத்தினார்கள். முதலில் இதை கண்டுகொள்ளாமலிருந்த எங்கள் குழு, ஒரு நாள் (இரவு) கோவில் மண்டபத்தின் மேலே 40 அடி கிரேனை ஏற்றும்போது, பெரிய பாம்புத்தோல் ஒன்று கிடைத்தது.
"தேளையே பார்த்தாச்சு, After All ஒரு பாம்புத்தோல்தானா நம்மை பயமுறுத்தும்" என்று வீர வசனம் பேசியபடி (உள்ளுக்குள் உதறலெடுத்தாலும்) பணியை தொடர்ந்து நல்லபடியாய் நடத்தி முடித்தோம். நாங்கள் பாம்புக்கு பயப்படவில்லை என்பதற்கு கீழ்கண்ட ஃபோட்டோவே சாட்சி.
படத்திற்குள் : படமெடுக்கும் பாம்பும், நானும், ஹரியும் மற்றும் நடுவில்
மதுரை மணிகண்டன் (Snakeman)
ஃபோட்டோ எடுக்கும்போது, அந்த பாம்பு என் காதில் எழுப்பிய ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் இருக்கிறதே..! யப்பா..! நல்லவேளை ஃபோட்டோவில் ஆடியோ கேட்காது...
அடுத்த பதிவில், மூணாறு படப்பிடிப்பு அனுபவத்தை பற்றி பகிர்கிறேன்.
(தொடரும்...)