மூணாறில் "அம்புலி 3D"
யாரோ சென்ற வருடம் (2010) எனது பிறந்தநாளுக்கு வாழ்த்தும்போது, 'அடுத்த பிறந்த நாளுக்கு நீ நல்ல உயரமான இடத்தில் இருக்க வேண்டும்' என்று வாழ்த்தியிருப்பார்கள் போல... அதனாலோ என்னவோ, இந்த முறை எனது பிறந்த நாள் 6600 அடி உயர மலைப்பிரதேசமான 'மூணாறில்' கொண்டாடப்பட்டது. அதுவும், எனது "அம்புலி 3D" படப்பிடிப்பு குழுவினருடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடிய அனுபவம் என்றென்றும் மறக்கமுடியாது. என்ன ஒரே வித்தியாசம் 'ஹேப்பி பர்த்டே டு யூ' பாடலுக்கு பதிலாக, நாங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த டூயட் பாடல்தான் பின்னனியில் ஒலித்து கொண்டிருந்தது.
↑ தயாரிப்பு நிர்வாகி திரு. சக்திவேல் கத்தியை கொடுக்க...
↑ ஹரியுடன்...
↑ கேமிராமேன் சதீஷூடன்...
↑ டான்ஸ் மாஸ்டர் தினாவுடன்...
கேக் வெட்டும்போது முகத்தில் கரி பூசுவது போல் கேக்-ஐ பூசும் பழக்கத்தை யார் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை... கேக் வெட்டி, கொண்டாடி முடித்து பார்க்கும்போது, எல்லோர் முகத்திலும் ஹுரோயின் முகத்தில் போடும் மேக்கப்-ஐ காட்டிலும் அதிகமான க்ரீம் பூசப்பட்டிருந்தது.
↑ சாமிக்கு வெண்ணை சாற்றியது போல் தெரிபவர்
துணை இயக்குனர் தினேஷா
↑ வெட்கத்துடன் கேக்-ஐ பெற்று கொள்பவர் சாம் (இசையமைப்பாளர்)
↑ கேக்கினால் நலுங்கு வைத்து கொள்பவர்
துணை இயக்குனர்
↑ அன்புத்தொல்லையால் அவதிப்படுபவர்
உதவி இயக்குனர் தளபதி (பெயரே தளபதிதான்)
↑ லைட்மேன் சீஃப் மோகன் அவர்களுடன்...
↑ கொண்டாட்டத்திற்கு பிறகு
எங்கள் திறந்தவெளி டெம்பரவரி ரெஸ்டாரண்ட்-ல்
மூணாறு... கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் கடவுளுக்கு அருகில் நம்மை கொண்டு செல்லும் பூலோக சுவர்க்கம். மலைப்பாதையில் பயணம் செய்யும் போது 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்...' பாடல் ஞாபகம் வரும், சில சிகரங்களைப் பார்க்கும்போது இயற்கையை பற்றி க(வி)தை எழுத தோணும். இங்கு வாழும் மலைவாழ் மக்களை பார்க்கும்போது 'கொடுத்து வைத்தவர்கள் ' என்று போற்ற தோன்றும். 'வருடத்தில் ஒரு மாதமாவது வந்து தங்கிவிட்டு போக வேண்டும்' என்று உறுதிமொழி எடுக்க தோன்றும். கடமைக்கென்றில்லாமல், கண்ட நேரத்தில் பெய்யும் மழையின் சாரல்கள் நம்மை அடிக்கடி மயிர்கூச்செரிய செய்யும்.
"அம்புலி 3D"-ன் நான்கு இசையமைப்பாளர்களில் ஒருவரான 'சாம்' அவர்களின் பிறந்த ஊர் மூணாறுதான் என்பதால், அவர்மூலமாக நல்ல லொகேஷன்களை கேட்டு தெரிந்து கொண்டோம். 'மைனா' புகழ் திரு. மூணாறு சுப்பிரமணி அவர்கள்தான் லொகேஷன் மேனேஜர்... அவரிடம் இடங்களை கூறி லொகேஷன்களை தேடிப்பிடிப்பதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை...
மூணாறில் இன்னொரு விஷயம் மிகவும் பிரசித்தம். அது இங்கிருக்கும் 'அட்டை பூச்சிகள்'... காட்டுமிருகங்களான புலி, சிங்கம்,கரடி போன்றவைகள் நம்மை மிரட்டாத அளவுக்கு ஒரு மிரட்டலை இங்கிருக்கும் அட்டை பூச்சிகள் நமக்கு கொடுக்கின்றன. எங்கள் படப்பிடிப்பு குழுவில் இருந்த அத்தனை பேரும், புல்தரையில் பணிபுரியும்போது, பரதநாட்டியம் கற்றுக்கொண்ட பெருமை இந்த அட்டைபூச்சிகளையே சாரும். (ஒரு சின்ன சீக்ரெட் : மேலிருக்கும் பர்த்டே ஃபோட்டோவில் நன்றாக உற்று பாருங்கள்.., அனைவரும் பேண்ட்-ஐ முட்டிவரை தூக்கிவிட்டிருப்பதை காணலாம்... எல்லாம் அட்டை பயம்தான்.)
அன்று மூணாறு ஷெட்யூலில் கடைசி நாள்... ஒரு கோல்ஃப் கிரவுண்டில் டூயட் பாடல் எடுத்துக் கொண்டிருந்தோம்... நடன இயக்குனர் திரு. தினா மாஸ்டர் நேர்த்தியாக பாடலை முடித்து கொண்டிருந்தார். ஆனால், வழக்கமாய் மாலை மட்டுமே பெய்யும் மழை அன்று கொஞ்சம் முன்னாலேயே வந்துவிட்டது. மழை நிற்கட்டுமே என்று அனைவரும் ஒரு பெரிய டார்பாலின் விரிப்பிற்குள் கமுக்கமாய் நின்று கொண்டோம். மழை நிற்காமல் வந்து கொண்டேயிருந்தது. நேரம் அதிகமாகவே, ஷூட்டிங் தாமதமாய்க்கொண்டிருப்பதால்... எங்களுக்குள் கலக்கம் கொஞ்சமாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. எங்கள் கலக்கத்தை குறைப்பதற்காக, கேமிராமேன் சதீஷ்... தனது அஸிஸ்டென்ட் மொபைலில் 'ஊரவிட்டு ஊருவந்து...' என்ற பாடலை போட்டு, அந்த செல்ஃபோனை மைக்-ல் பிடித்தார். அந்த பாடல் ஸ்பீக்கரில் நல்ல சத்தமாக கேட்க ஆரம்பித்தது. ப்ரொடக்ஷன் டீமில் ஜெகதீஷ் என்ற ஒருவர் திடீரென்று பாடலை கேட்டதும் நடனமாட ஆரம்பித்தார். மழையில் அவர் ஆடிய ஆட்டம்... கதகளியும் குத்தாட்டமும் கலந்து ஒரு புது மாதிரியாக இருந்தது. அனைவரும் அவரை ரசித்து ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர். பாட்டு முடியவும் மழை நிற்கவும் சரியாக இருந்தது. அன்று மாலைக்குள் பாடல் படப்பிடிப்பும் நல்லபடியாக நடந்து முடிந்தது.
மூணாறு படப்பிடிப்புடன் அவுட்டோர் ஷூட்டிங் மொத்தமும் நல்லபடியாக நிறைவுபெற்றது. அன்றே யூனிட் அனைத்தையும் பேக்-அப் செய்து அனுப்பிவிட்டு... அடுத்தநாள், எங்கள் முதல் படமான 'ஓர் இரவு' படப்பிடிப்பு நடத்திய வீட்டை சென்று தரிசித்துவிட்டு வந்தோம்.
'ஓர் இரவு' வீடு...
'ஓர் இரவு' ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட நண்பர்களில், லொகேஷன் மேனேஜர் திரு.நிக்ஸன் மற்றும், சரவண பவன் ஹோட்டலில் உணவு உபசரிப்பாளர் திரு.அழகர்சாமி ஆகியோரை சந்தித்தோம். மூணாறில், வியூபாய்ண்ட் என்னும் இடத்திலுள்ள டீகடையில் (நாங்கள் வழக்கமாக டீ அருந்தும் இடத்தில்) ஏலக்காய் வாசனையுடன் டீ குடித்துவிட்டு... கிளம்பினோம்... சென்னைக்கு அல்ல... வரும் வழியில் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது...
அதை அடுத்த பதிவில் பகிர்கிறேன்...
(தொடரும்)