டிஸ்கி : போன மாதமே எழுதி... எழுதி... முடிக்க முடியாமல் இப்போதுதான் முடிந்தது...
ஐதராபாத்...
எனது நண்பரும் அம்புலி படத்தின் ஒளிப்பதிவாளருமான சதீஷ்.G பணியாற்றியுள்ள தெலுங்குப்படம் 'புண்ணமி ராத்ரி 3D'.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்ற மாதம் ஐதை சென்றிருந்தேன்...
அந்த ஊரில் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ள இசை விழா சிறப்பாக நடந்தேறியது... விழாவின் வெளியே வழக்கம்போல் பலரும் 3D எஃபெக்ட்-ஐ சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர். அம்புலி படத்தை பற்றி பலரும் அறிந்திருந்தது மகிழ்ச்சியளித்தது... அம்புலியை தெலுங்கு டப்பிங்கில் பார்த்த ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் நீண்ட நேரம் தெலுங்கில் பாராட்டிக் கொண்டிருந்தார்..
அவர்களும் அப்படித்தான்
இசை வெளியீட்டு விழா முடித்துவிட்டு, அங்கிருந்த திரையரங்குகளில் 3D கான்ஃபிகரேஷன்களை பார்க்க போயிருந்தோம். தமிழ்நாட்டை காட்டிலும் அங்கு 3D தியேட்டர்கள் சற்று குறைவாகவே இருக்கிறது. மேலும், இங்கு நம்மூரிலிருந்த அதே பிரச்சினைதான் அங்கும்.. அதாவது 3D படங்களை காட்டுவதற்கு தியேட்டர்காரர்களும் சற்றே நல்ல தரம் வேண்டும் என்று மெனக்கெட வேண்டும், தொழில்நுட்பத்தை பற்றி அடிப்படை விஷயத்தை புரிந்து கொள்ளாமல் மலிவாய் முடித்துக் கொள்ள விரும்பினால்.. ரொம்ப கஷ்டம்தான். (படம் பார்ப்பவர்களுக்கு). இதற்கு சான்றாய் அங்கும் ஒரு சில சம்பவங்கள் நடந்தேறின... எனவே 3Dயை திரையிட தேவையான சப்போர்ட்டிங் விஷயங்களை எங்களுக்கு தெரிந்தவரை பகிர்ந்து விளக்கி புரிய வைத்தோம்...
கெஸ்ட் ஹவுஸ்
விழா முடிந்ததும், ஒரு கெஸ்ட் ஹவுசில் 5 நாட்கள் தங்கியிருந்தோம். அங்கே கணேஷ் என்ற ஒரு பதின்ம வயது பையனும் அவனுடன் சேர்ந்து ஒரு சிறுவனிடமும் அந்த கெஸ்ட் ஹவுஸின் முழு மெயிண்டனென்சும் ஒப்படைக்கப்பட்டுள்ளது... 'சிறுவர்களை பணியில் அமர்த்தாதே' என்று தெலுங்கில் எந்த ஆட்டோவிலும் எழுதவில்லை போல... அவனிடம் 'படிக்கிறியா..?' என்று கேட்டால் அதற்கு தெலுங்கில் ஏதோ சொன்னான்.. 'நாக்கு தெல்லிது' என்று சும்மா இருந்துவிட்டேன்.
பனிவிழும் இரவில் ஆந்திரா ஷூட்டிங்
ஒரு நாள் இரவு, தெலுங்கு பட படப்பிடிப்பை பார்க்க ஒரு பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தோம்... இரண்டு பெரிய ஹிட் கொடுத்த டைரக்டர் மாருதி என்ற தெலுங்குப்பட இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது... 3Dயில் அம்புலி உருவானதைப் பற்றி நிறைய விசாரித்தார்... துரிதமாக நடந்துக்கொண்டிருந்த ஷூட்டிங்கை கண்டு களித்தோம். இரவு டின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்டோம்... நல்ல குளிரில் ஆந்திரக்காரமான அசைவ உணவு... (குட் காம்பினேஷன்)
ஐதராபாத் பிரியாணி
இந்த முழு ட்ரிப்பிலும் நான் மறக்கமுடியாதது.. ஐதராபாத் பிரியாணிதான்... அதிக quantityயுடன் வயிறு முட்ட சாப்பிட்ட அந்த மட்டன் பிரியாணி... நம்ம கேபிளார் பாணியில் சொல்லவேண்டுமானால் 'டிவைன்'
ஆச்சர்யம்
சினிமேக்ஸ் மல்டிப்ளெக்சிலுள்ள KFCயின் கிளை... வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் நடத்துவதை கண்டு மகிழ்ச்சியாய் இருந்தது... அதுவும்... அவர்கள் மெனு கேட்கும் விதமும், அதை அவர்களுக்குள் convey செய்து கொள்ளும் முறையும்... விரைவில் டெலிவரி கொடுக்கும் வேகமும் எல்லாமுமாய் சேர்ந்து என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது..
ஏமாற்றம்
ஒருநாள் காலை டிஃபன், இதே காம்ப்ளெக்சின் பின்னால் இருந்த ஒரு கூரை ரெஸ்டாரெண்டில் சென்று சாப்பிட்டோம்.. நான் பெசரெட் சொல்ல வாயெடுக்க.. அவர்களின் ஸ்பெஷல் என்று நெல்லூர் தோசையை குறிப்பிட்டார்கள். சரி என்று அதையே சாப்பிட்டேன்... அந்த நெல்லூர் தோசையை மறக்கவே முடியாது.. ஏனென்றால் அது தோசை போலவே இல்லை.. ஒழுங்காய் பெசரெட்டே சாப்பிட்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது.. தோசையில் இன்னும் தமிழும் கர்நாடகமும்தான் டாப் என்று தோன்றுகிறது...
குறையொன்று உண்டு
வழக்கமாக ஐதராபாத் போனால் எப்படியாவது பிரசாத் iMax தியேட்டரில் ஒரு படம் பார்த்துவிட்டுத்தான் வரவேண்டும் என்பது எங்கள் குழுவின் எழுதப்படாத கொள்கை. ஆனால் இம்முறை அந்த கொள்கை ஆட்டம் கண்டுவிட்டது. வேறொரு காரணமாய் சில மீட்டிங் அமைந்துவிட்டதால் கடைசிவரை ஐமேக்ஸ்-ல் அதுவும் HOBBITஐ பார்க்க முடியாமல் போனது சின்ன வருத்தமே...
காத்திருந்து காத்திருந்து
திரும்பி வருவதற்கு ஆயத்தமானபோது, வழக்கத்திற்கு மாறாக ஏர்போட்டிற்கு இரண்டு மணிநேரம் முன்னால் சென்று அடைந்துவிட்டதால் பயங்கர கடுப்படித்தது. உள்ளே போகாமல் வெளியே இருக்கும் McDயில் பர்கரை கடித்தபடி தமிழுக்கும் தெலுங்கிற்கும் சேர்த்து கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். அதுவும் போரடித்துவிட அங்கிருக்கும் Go Kartஐ சிறிது நேரம் ஓட்டலாம் என்று சதீஷ் அடம்பிடிக்க, அங்கே சென்றால், Go Kartடினர் 5.30 மணிக்குமேல்தான் பணிகள் துவக்கம் என்றார்கள்.. எவ்வளவோ மன்றாடிப் பார்த்தும், கம்பெனி பாலிசி கராரானது என்று மறுத்துவிட்டார்கள்.. பிறகு அங்கே இருந்த ஹைபர் டென்ஷன் துப்பாக்கி சுடும் ஸ்டாலில் மூவரும் சேர்ந்து ரப்பர் பந்துகளை சுட்டுத்தள்ளினோம்.. 20 குண்டுகளுக்கு தலா ஒரே ஒரு பந்து மட்டுமே கீழே விழுந்தது. இந்த வீர விளையாட்டுகளுக்கு பிறகு சென்னை பறந்துவந்தோம்.
விமானம் சரியான நேரத்திற்கு திரும்ப கொண்டு வந்து சேர்த்தாலும், சென்னை டிராஃபிக் 'அதெப்படி சீக்கிரம் வீட்டுக்கு போக விட்டுடுவேன்..' என்று கூறவே ஒன்றரை மணிநேரம் தாமதாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன்.
விமானம் சரியான நேரத்திற்கு திரும்ப கொண்டு வந்து சேர்த்தாலும், சென்னை டிராஃபிக் 'அதெப்படி சீக்கிரம் வீட்டுக்கு போக விட்டுடுவேன்..' என்று கூறவே ஒன்றரை மணிநேரம் தாமதாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன்.
"மெட்ராஸ் மாதிரி வருமா..!?!"