Monday, August 30, 2010

"கேணிவனம்" - பாகம் 09 - [தொடர்கதை]



 பாகம் - 09

'என்ன லிஷா சொல்றே... குணாவைக் காணோமா..? எங்கே போனான்...?' என்று சந்தோஷ் அதிர்ச்சியாய் கேட்க...

'ஆமா சாண்டி(Sandy), சாப்பிட்டு முடிச்சி கூடவே வந்த ஆளு, கை கழுவிட்டு, கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் போயிட்டிருந்தாரு... அப்புறம் ஆளக்காணோம்... தேடிப்பாத்தா எங்கேயும் இல்ல..?' என்று லிஷா குழப்பமாக கூற...

தாஸ் சட்டென்று எழுந்து... கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் வேகமாக நடந்தான்... லிஷா அவனை பின்தொடர்ந்து போக, சந்தோஷ் வாசலை நோக்கி ஓடினான்.

கான்ஃபரன்ஸ் ஹாலில், பழையபடி ஆரஞ்சு கலர் வெளிச்சமும், லேப்-டாப்பும், அதிலிருந்து ப்ரொஜெக்ட் செய்யப்பட்ட ஃபோட்டோவும் இருந்தது.

தாஸ் லேப்டாப் அருகில் சென்று அதை இயக்கிப் பார்த்து, ஒரு நிம்மதி பெருமூச்சுடன், 'நல்ல வேளை, அவன் லேப்டாப்-ஐ ஆக்ஸஸ் பண்ணலை..' என்றான்.

சந்தோஷூம் உள்ளே நுழைந்தவனாய், 'பாஸ், வெளியே செக் பண்ணிட்டேன். ஆள் எஸ்கேப்...' என்று கூற

தாஸ், முகத்தை குழப்பமாக வைத்துக் கொண்டு, யோசித்துக் கொண்டிருக்க... சந்தோஷ் மீண்டும்...

'விடுங்க பாஸ், நீங்க எங்கே மறுபடியும் காட்டுக்குள்ள கூட்டிட்டு போயிடுவீங்களோன்னு பயந்து ஓடிப்போயிருப்பான்'

'இல்ல சந்தோஷ்... அவன் நம்ம கிட்ட ஒழுங்கா சொல்லிட்டு போயிருக்கலாம்... ஆனா, சொல்லிக்காம ஓடிப்போயிருக்கான்னா..! இதுல ஏதோ இருக்கு..'

ஒரு சின்ன இடைவெளி விட்டு, சுவற்றிலிருந்த ஓவியத்தை பார்த்தபடி தாஸ் மீண்டும் தொட்ர்ந்தான்...

'அவன்கிட்ட தெரிஞ்சிக்கிட்ட டீடெய்ல்ஸைவிட, அதிகமான டீடெய்ல்ஸ் நாமதான் சொல்லியிருக்கோம்...' என்று வருத்தத்துடன் கூறினான்.

லிஷாவும் குழப்பத்துடன்... 'மே பி... அவன் நமக்கு முன்னாடி அந்த கோவிலுக்கு போய் ஏதாவது பண்ணிடலாம்னு ஸ்டுபிட்டா யோசிச்சியிருந்தா..?'

'அந்தாளு அவ்ளோ யோசிக்கிறவனா தெரியில லிஷா... ரயில்வே ஸ்டேஷன்லருந்து உன்கூட கார்ல அவன் கொண்டுட்டு வந்த லக்கேஜ்-ஐயே விட்டுட்டு ஓடியிருக்கான்...' என்று சந்தோஷ் நக்கலாக கூறினான்.

'அவன் அந்த கோவிலுக்கு மறுபடியும் தனியா போகமாட்டான்னுதான் நானும் நினைக்கிறேன்.' என்று தாஸூம் கூற, அந்த அறையில் ஒரு சின்ன மௌனம் நிலவியது.

'சரி..! சரி..! பாஸ், அந்தாளை விடுங்க... நம்ம அடுத்த ஸ்டெப் என்ன..?  அதச் சொல்லுங்க.. ' என்று சந்தோஷ் கூற... தாஸும் அடுத்தது என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு ரம்யமான வீணை ஒலி, அந்த அறையின் சீலிங்கில் பொருத்தபட்டிருக்கும் ஸ்பீக்கரில், மெலிதாக கேட்டது. அது தாஸின் ஆஃபீசின் காலிங் பெல்...

தாஸ் எழுந்து சென்று அறையின் கதவின் அருகிலிருக்கும், செக்யூரிட்டி அலாரம் மானிட்டரில் பட்டனை அழுத்திப் பிடிக்க... அதில்... கீழே ANCIENT PARK கதவருகில், ஒரு 60 வயது மதிக்கத்தக்க நபர் நின்றிருப்பது தெரிந்தது...

தாஸ், முகத்தில் மகிழச்சியுடன், 'ப்ரொஃபஸர்..?' என்று சொல்லிக்கொண்டான்.

------------------------

ப்ரொஃபஸர் கணேஷ்ராம்... வயது 63, கண்ணாடியணிருந்தார். ரிடையார்டு தொல்லியல் ஆய்வாளர். தற்போது, பார்ட் டைம் ப்ரொஃபெஸர். அரிய புத்தகங்களை தேடிப்பிடித்து குறிப்புகள் எடுத்துக் சேகரிப்பதில் ஆர்வலர். 
 
தாஸ்-க்கு ஒரு வகையில் குருவைப் போன்றவர்.
நலன்விரும்பி, நண்பர், ஆலோசகர் இப்படி பல வகையில் நெருங்கிய அவரை இந்நேரத்தில் சந்திப்பதில் தாஸ் மிகவும் சந்தோஷப்பட்டான்.

கீழே ஹாலுக்கு இறங்கி வந்து அவரை வரவேற்றான்.

'வாங்க ஃப்ரொஃபஸர் சார்...'

'என்னய்யா தாஸ்.. எப்படி இருக்கே?'

'நல்லாயிருக்கேன் சார்... என்ன 2 மாசமா லைப்ரரிக்கு வரவேயில்ல... நீங்க கேட்ட புக்ஸையெல்லாம் கஷ்டப்பட்டு கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன்.' என்று தாஸ் கூற, ப்ரொஃபஸர் ஆச்சர்யமாக...

'என்னது கிடைச்சிடுச்சா... ரொம்பவும் ரேர் புக்ஸ் ஆச்சேய்யா..?'

'கிடைச்சிடுச்சு சார்... வாங்க உட்காருங்க' என்று இருவரும் அந்த கூடத்தில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்தனர்.

'நானே உங்களை வந்து சந்திக்கலாம்னு இருந்தேன். ஒரு ஹெல்ப் வேணும் சார்..?'

'என்னய்யா... உன் அடுத்த புக் எழுத தொல்பொருள் தகவல்கள் ஏதாவது வேணுமா..?'

'தகவல் வேணும், ஆனா, தொல்பொருள் பத்தியில்ல... ஒரு ஓவியத்தை பத்தி..'

'என்ன ஓவியம்.. கண்ணுல காட்டு... சொல்லிடுவோம்..' என்று அவரும் ஆர்வமாக...

'ஒரு நிமிஷம் இருங்க சார்... நான் போய், அந்த ஓவியத்தை கொண்டு வர்றேன்..' என்று தாஸ், ஆர்வத்தோடு எழுந்து சென்றான்.

மேலே ஏறிவந்து தாஸ் மீண்டும் கான்ஃபரன்ஸ் ரூமுக்குள் நுழைய, அங்கே... சந்தோஷ் லிஷாவிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தான்.

'இப்போ நீ போயே ஆகணுமா..?' என்று அதட்டலாக பேச...

'ஏண்டா இப்படி இருக்கே..! நான் ஒரு காரியமாத்தானே அவனை பாக்க போறேன். நீ ஏன் அனாவசியமா பயப்படுறே..?' என்று அவள் சந்தோஷூடன் சண்டை போட... இதை கவனித்த தாஸ்

'எக்ஸ்யூஸ்மி என்ன பிரச்சினை..?' என்று இருவரையும் பார்த்தபடி கேட்க

'பாஸ், நீங்களே நியாயத்தை கேளுங்க... எவனோ ஒரு வெள்ளைக்காரனாம், இண்டர்நெட் ஃப்ரெண்டாம், அவன் இண்டியா வந்திருக்கானாம்... இவ, அவனோட ஹோட்டல் ரூம்லியே போய் அவனை பாக்க, தனியா கிளம்பி போறா... நானும் கூட வர்றேன்னா கேட்க மாட்டேங்குறா...'

'நீ வேண்டாம் சேண்டி (Sandy), சில விஷயம் தனியா போனாத்தான் காரியமாகும்டா...' என்று லிஷா, தனது ஹேண்ட் பேக்-ஐ எடுத்தபடி பேச...

'யாரு லிஷா அது..?' என்று தாஸ், லிஷாவிடம் கேட்க...

'பேரு ரிச்சர்ட்... என் ஃபேஸ்புக் ஃப்ரெண்டு...' என்று தீர்க்கமாக கூற

'பாருங்க பாஸ், இந்த மாதிரி இண்டர்நெட் ஃப்ரெண்ட்ஸையெல்லாம் நம்பி தனியா போறது ரிஸ்க்-னு சொன்னா கேக்க மாட்டேங்குறா..!'

'வேலையில்லாம நான் ஏன் அவன்கிட்ட போவப்போறேன்' என்று லிஷா சத்தமாக கூறிவிட்டு, திரும்பி தாஸிடம்...

'தாஸ், நீங்க என்கிட்ட, உங்க டைம் டிராவல் விஷயத்தை ஃபோன்ல சொன்னவுடனேயே நான் இதைப் பத்தி நிறைய டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதுல இந்த ரிச்சர்ட்-டோட ஹெல்ப்பும் ஒண்ணு, அவன் ஒரு ஜியாலஜிஸ்ட் எக்ஸ்பர்ட். அவங்கிட்ட நிறைய தகவல்கள் கிடைக்கும்னுதான், மறைமுகமா அந்த கிணறு பத்தி விசாரிச்சிட்டிருக்கேன். அவன் இப்ப ஏதோ தகவல் கிடைச்சிருக்கு நேர்ல வா சொல்றேங்குறான். இதுல என்ன தப்பு..?' என்று கேஷூவலாக சந்தோஷ் பக்கம் திரும்பியபடி கேட்க

'எனக்கு பயமாயிருக்கு லிஷா, நீ இப்படி அடிக்கடி தனியா போய் எங்கேயாவது ஏடாகூடமா மாட்டிப்பியோன்னு ரொம்பவும் பயமாயிருக்கு' என்று கூற, அந்த அறையில் ஒரு சின்ன அமைதி... பிறகு லிஷா, சந்தோஷை நெருங்கி வந்து, மலர்ந்த முகத்துடன்...

'எனக்கு எதுவும் ஆகாதுடா... நான் எப்பவும் உன் லிஷாதான்... பயப்படாதே' என்றவள், அவன் கன்னத்தில் அவசரமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, யாருடைய பதிலுக்கும் காத்திராமல் அங்கிருந்து கிளம்பினாள்...

சந்தோஷ் அவளையே பார்த்துக் கொண்டிருக்க... தாஸ், அவனருகில் வந்து...

'சந்தோஷ்..! அவ ரொம்ப உஷாரான பொண்ணு, அவளுக்கு எதுவும் ஆகாது.. ரிலாக்ஸ்...' என்று கூற அவன் சகஜமாகிறான். இருவரும் தாஸின் ஆஃபீஸ் அறைக்கு வருகின்றனர்.

'நீ அந்த ஓவியத்தோட ப்ளோ-அப் ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்தியே அதை எடு... quick..?' என்று சந்தோஷை ஏவிவிட்டு, அவன் தனது அறையிலிருக்கும் தனது பர்சனல் புத்தக அலமாறியிலிருந்து சில புத்தகங்களை எடுத்து கொண்டிருந்தான்...

சந்தோஷ் அந்த ஓவிய ப்ரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ள, தாஸ் தனது கையில் 4 புத்தகங்களை அள்ளிக் கொள்ள... இருவரும் அறையிலிருந்து வெளியேறினார்கள்.

சந்தோஷ் நடந்தபடி கேட்டான்...

'இந்த ஓவியத்தை இப்ப என்ன பண்ணப் போறோம் பாஸ்..?' என்று கேட்க

'அடுத்த ஸ்டெப் என்னன்னு கேட்டேல்ல... இந்த ஓவியத்தை ரீட் பண்றதுதான் நம்ம அடுத்த ஸ்டெப்...'

'அதான், மணிக்கணக்கா, இந்த ஓவியத்தை உத்து உத்து பாத்துட்டோமே... இதுல வேற என்ன இருக்க போகுது..?'

'நாம பாத்ததுக்கும், ஒரு எக்ஸ்பெர்ட் இந்த ஓவியத்தை ரீட் பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...' என்று கூற

'என்ன வித்தியாசம்..?' என்று கேட்க

'நீயே பாத்து தெரிஞ்சுக்கோ..' என்று தாஸ் கூறிக்கொண்டே படியிறங்கி, கூடத்தில் அமர்ந்திருந்த ப்ரொஃபஸர் கணேஷ்ராமை நெருங்கினான்.

'சாரி ப்ரொஃபஸர் சார்... ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா..?' என்று கேட்டபடி, கொண்டுவந்த புத்தகங்களை அவர் கையில் கொடுத்தான்..

அவர் கையில் வாங்கியபடி, வாயெல்லாம் பல்லாக, 'இந்த புத்தகங்களை படிக்க எத்தனை வருஷமா வெயிட் பண்ணியிருக்கேன் தெரியுமா..? தாஸ், இதெல்லாம் எங்கேயா புடிச்சே...' என்று ரகசியம்போல் கேட்க...

'ப்ளீஸ் சார், அதைமட்டும் கேக்காதீங்க..'

'சொல்லமாட்டியே... உன் வாயிலருந்து ஒரு விஷயத்தை பிடுங்கவே முடியாதே..' என்று அவர் தாஸை கலாய்த்தபடி, 'சரி ஏதோ ஓவியம்னியே எங்கே..?' என்று கேட்க

தாஸ் சந்தோஷைப் பார்த்து, 'சந்தோஷ், அதை டேபிள்ல ஸ்ப்ரெட் பண்ணு..' என்றதும், சந்தோஷ் அந்த ஓவியத்தை எதிரிலிருந்த டேபிளில் விரித்தான். மூவரும் அந்த ஓவியத்தை சுற்றி நின்று கொள்ள, ப்ரொஃபஸர் கணேஷ்ராம், தனது கண்ணாடியை கூர்மையாக பிடித்தபடி, அந்த ஓவியத்தை ஏற இறங்க பார்த்தார்.

'க்ளேரிட்டி தெளிவில்லாம இருக்கே..?' என்று அலுத்துக் கொண்டார்...

'மொபைல் கேமிராவுல, ரொம்பவும் டல் வெளிச்சத்துல எடுத்த ஃபோட்டோ... அதான்..!'

'எங்கேய்யா எடுத்தே..?'

'ஒரு கோவில்ல ரூஃப்ல இருந்துச்சு...' என்று கூற, அவர் தாஸை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு, மீண்டும் அந்த ஓவியத்தில் கண்களை மேயவிட்டார்.

சந்தோஷ் அலுப்புடன் அருகில் நின்றுகொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு 5 நிமிடத்திற்கு பிறகு, அவர் பேச தொடங்கினார்.

'ரொம்ப பழங்காலத்து ஓவியம்தான்... கலர்ஸ் அதிகமா யூஸ் பண்ணலை... கருப்பு, வெள்ளை, மஞ்சள், காவி நாலு நிறம்தான் யூஸ் பண்ணியிருக்காங்க...' என்றவர் சற்று இடைவெளி விட்டு, தாஸை ஏறிட்டு பார்த்து...

'இந்த ஓவியம், கலையம்சத்துக்காக வரையப்பட்டதில்லை... லாவண்யம், பாவம் எதுவும் சரியா இல்ல... அதாவது அலங்காரங்கள் இல்ல... பார்டர் கூட, பர்பஸ்ஃபுல்லா வச்ச மாதிரிதான் இருக்கு...' என்றதும், தாஸ் சந்தோஷை பார்க்கிறான்.

அவர் தொடர்ந்தார்...

'சித்திர லட்சணப்படி இந்த ஓவியம் 'சித்திர பாசம்'ங்கிற ஸ்டைல்ல வரையப்பட்டிருக்கு... அதாவது, தட்டையான 2D இமேஜிங் ஸ்டைல்... இந்த ஸ்டைல்லதான், எஜிப்ஷியன் ஓவியங்கள்லாம் அதிகமா வரைஞ்சிருக்காங்க... அதுமட்டுமில்ல, இந்த ஓவியத்தை 'நாகரம்'-ங்கிற வகையறைக்குள்ள சேக்கலாம்.

'அப்படின்னா..?'

'இந்த ஓவியம், ஒரு குழுவினர் சேர்ந்து ஏதோ சாங்கியம் செய்றதை சொல்லுது... அதாவது ஒரு சாரார்களுடைய நாகரிகத்தை காட்டுது... Cultural Depiction... இதை 'விஷ்ணு தர்மோத்தரம்'-ங்கிற ஓவிய சாஸ்திரப்படி, 'நாகரம்'-ங்கிற கேட்டிகரில வரும்...'

அந்த ஓவியத்தை இன்னும் குனிந்து நெருங்கி பார்த்து, ஒரு இடத்தில் கையை சுட்டிக்காடியபடி தொடர்ந்தார்...

'இவருதான் இந்த ஓவியத்துக்கு தலைவன்  or மூல நாயகன் or கடவுள்' என்று ஓவியத்தில், வட்டவடிவ பெரிய கருப்பு புள்ளிக்குள் நடுநிலையாக அமர்ந்திருக்கும் ஒரு உருவைத்தை காட்டினார். தொடர்ந்து, இன்னொரு உருவத்தை சுட்டிக்காட்டி, 'இவருக்கு அடுத்ததா இந்த உருவத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க...' என்று இன்னொரு அரசன் போன்ற உருவத்தை காட்டினார்.

'எப்படி சொல்றீங்க சார்..?' என்று இம்முறை சந்தோஷ் கேள்வி கேட்க

அவர், தனது சட்டைப்பையிலிருந்து, ஒரு பேனாவை எடுத்து, மூடி திறக்காமல், அந்த ஓவியத்தில் அந்த பேனாவை வைத்தபடி, ''ம்ம்ம்... கற்பனையா, இந்த ஓவியத்துக்கு உள்ளே 2x2ன்னு 4 கட்டம் போட்டுக்கோங்க...' என்று ப்ளஸ் குறி போல் கோடு போட்டு காட்டினார்.

'இப்ப, இந்த நாலு கட்டத்துக்குள்ள இருக்கிற ஓவியங்களையும், வேற வேற ஆளு வரைஞ்சதா நினைச்சிக்கோங்க..!'

'சரி?'

'இந்த நாலு ஓவியத்துல எது பெட்டரா, அதிக நுணுக்கத்தோட வரையப்பட்டிருக்குன்னு பாருங்க... உங்களுக்கே வேரியேஷன்ஸ் தெரியும்...' என்று கூற, சந்தோஷ் அந்த 4 கட்டங்களையும் உற்றுப்பார்த்து...

'இந்த 3-வது கட்டத்துல, டாப்ல இருக்கிற இந்த உருவம்தான் கொஞ்சம் போல்டா நல்லாயிருக்கு...'

'அவருதான் இந்த ஓவியத்துல தலைவன்... அதுக்கடுத்ததா போல்டா இருக்கிற இந்த அரச உருவம் இரண்டாவது நாயகன்-னு சொன்னேன்...  இன்னும்  உன்னிப்பா பார்த்தா, நிறைய விஷயம் சொல்ல்லாம்.' என்று கூற, சந்தோஷ் அவரை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் ஆர்வம் தாங்காமல், 'சார், இந்த ஓவியத்துக்குள்ள இத்தனை விஷயங்கள் இருக்கா..?' என்று கேட்க

'இந்த ஓவியம்னு இல்லப்பா, எந்த ஒரு ஓவியத்துலயும், ஏகப்பட்ட தகவல்கள் புதைஞ்சிருக்கும்... இன்னைக்கு, நம்ம காலகட்டத்துல, தகவல் பறிமாற்றம்-ங்கிறது  சாட்டிலைட் அளவுக்கு முன்னேறியிருக்கலாம். ஆனா, அந்த காலத்துல, ஓவியங்கள்தான் தகவல் பறிமாற்றம்... ஒரு குழந்தை பேப்பர்ல கிறுக்கிறதை உத்து பாத்தீங்கன்னா, அதுல அந்த குழந்தையோட எண்ணங்கள் பதிவாகியிருக்கும். அதே மாதிரிதான், மொழி இல்லாதப்போகூட, அந்த காலத்து மனுஷங்க, ஓவியங்கள் மூலமா அவங்களோட எண்ணங்களை பதிவு செஞ்சிட்டு போயிருப்பாங்க...' என்று கூற, சந்தோஷ் அவரையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

தாஸ் அவரிடம், 'சார், இந்த ஓவியம் எந்த காலக்கட்டத்துல வரையப்பட்டதுன்னு சொல்ல முடியுமா..?' என்று கேட்க

'இந்த ஓவியத்தோட தொனிப் பொருளையும்,  டிஸைன் பேட்டர்ன்ஸையும் அனலைஸ் பண்ணா சொல்லிடலாம்... அதுக்கு, நான் இதை ஒரு நைட் ஃபுல் உக்காந்து ஸ்டடி பண்ணனும்' என்று கூற, தாஸ் சிறிது யோசித்துவிட்டு, அந்த ஓவியத்தை சுருட்டி அவரிடமே கொடுத்தான்...

'சார், இந்த ஓவியம் எனக்கு ரொம்ப முக்கியம். இதுல, உங்களால வேற என்னல்லாம் தகவல் திரட்ட முடியுமோ திரட்டி கொடுங்க...' என்று கேட்க, அவர், அந்த ஓவியத்தை ஆர்வத்துடன் வாங்கி கொண்டு, தாஸ் கொடுத்த புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு தாஸையும் சந்தோஷையும் திரும்பி பார்த்தபடி அங்கிருந்து கிளம்பினார்.

அதே நேரம்...

லிஷா, ஒரு ஹோட்டல் அறையில், ரிச்சர்டுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க... ரிச்சர்ட் அவளிடம் கூறும் தகவல்களை கேட்டு, அவள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துக்கொண்டிருந்தாள்.

இதுவரை, அவளும், தாஸும், சந்தோஷும்... 'டைம் டிராவல் கிணறு' என்று நினைத்துக் கொண்டிருந்தது... கிணறே இல்லை என்பது தெரிந்தது.

(தொடரும்...)


Signature

Friday, August 27, 2010

"கேணிவனம்" - பாகம் 08 - [தொடர்கதை]



இக்கதையின் பாகம்-01-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-02-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-03-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-04-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-05-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-06-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
இக்கதையின் பாகம்-07-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்

பாகம் - 08

சுவற்றில் ப்ரொஜெக்ட் செய்யப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்த தாஸ்... எழுந்து அந்த ஓவியத்தை நெருங்கி சென்றான்.

'சந்தோஷ், நாங்க ரெண்டு பேரும் எப்படி வெவ்வேற காலக்கட்டத்துக்கு வந்து சேர்ந்தோம்னு தெரிஞ்சிடுச்சி...'

'எப்படி பாஸ்...' என்று சந்தோஷ் கேட்டுக் கொண்டிருக்க...

தாஸ் அந்த ஓவியத்தை நெருங்கி வந்து உற்றுப் பார்த்தான்.  இதுவரை அந்த ஓவியத்தில் பார்க்காத ஒரு விஷயம், தாஸ் கண்களுக்கு தெரிந்தது. அது... அந்த ஓவியத்தை சுற்றி வரையப்பட்டிருந்த பார்டர்.

ஓவியத்தின் மையப் பகுதியிலேயே இதுவரை தனது கவனம் இருந்துவந்ததால், அந்த பார்டரில் இருக்கும் டிஸைனை அவன் கவனிக்காமல் விட்டிருந்தான்.


அந்த பார்டர், பார்ப்பதற்கு அலங்காரத்திற்காக வரையப்பட்ட ஒரு சாதாரண பொருளாகவே  தெரிந்தது. ஆனால், அதை உற்று நோக்கையில், அதில் வரிசையாக குட்டி குட்டி வளையங்கள் இருப்பது தெரிந்தது. அந்த வளையங்களை எண்ணினான்.

'1.2.3.4.....60... யெஸ்... நான் நினைச்சது சரிதான்...' என்று மீண்டும் குதூகலித்துக் கொண்டிருக்க...

'என்னது 60...? ' என்று லிஷாவும் ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.

'சொல்றேன்... குணா அங்க நடந்ததை சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுது... அநேகமா நீங்களும் நோட் பண்ணியிருப்பீங்க... அதாவது, குணா, புலிக்கு பயந்துக்கிட்டு, அந்த கிணத்தோட மூடியா இருந்த வட்ட வடிவ கல்-ஐ, வேறு திசையில திறந்து கிணத்துக்குள்ள குதிச்சதா சொன்னார்..'

'ஆமா..'

'அப்போன்னா, அந்த கிணத்தோட மூடிதான், வெவ்வேற காலக்கட்டத்துக்கு போறதுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கு... அதாவது டைம்-ஐ ப்ரிசெட் செய்றதுக்கு, இல்லைன்னா, கோ-ஆர்டினேட்ஸ் செட் பண்றதுக்கு பயன்பட்டிருக்கனும்..'

'ஓ..' என்று லிஷா ஆச்சர்யம் காட்டினாள்.

'இருந்தாலும், அந்த மூடி-யோட ஃபோட்டோ கையில இல்லாததால, வெறும் அனுமானத்தின் அடிப்படையில, இதை எப்படி எடுத்துக்கிறதுன்னு குழம்பிட்டிருந்தேன். ஆனா, குழப்பமே இல்லாம இந்த ஓவியத்துல அதுக்கான விடை கிடைச்சுடுச்சு..'

'என்ன இருக்கு அந்த ஓவியத்துல..' என்று சந்தோஷ் கேட்க

'இதோ, இந்த ஓவியத்தோட பார்டரை பாருங்க...' என்று கூற, அனைவரும் அந்த சுவற்றில் இருக்கும் ஓவியத்தை பார்க்கும்படி தாஸ் சற்று விலகி நின்றான்.

குணாவும் ஒன்றும் புரியாமல் ஆர்வமாக அந்த ஓவியத்தை உற்று பார்த்துக் கொண்டிருக்க, தாஸ் தொடர்ந்தான்...

'இந்த பார்டர்ல, வரிசையா அடுக்கப்பட்டிருக்கிற குட்டி குட்டி வட்டங்கள் எல்லாம், அந்த மூடி கல்லோட வெவ்வேறு பொசிஷன்ஸை காட்டுது... இது மொத்தமா கூட்டினா அறுபது வருது..'

'60 என்ன கணக்கு..?' மீண்டும் லிஷா...

'தமிழ் வருஷங்களோட மொத்த எண்ணிக்கை 60... 'பிரபவ'-ங்கிற வருஷத்துல தொடங்கி, 'அக்ஷய' வருடம் வரைக்கும் இந்த 60 வருஷங்கள்தான் மாறி மாறி சைக்கிளாயிட்டு இருக்கும். இப்போ நாம இருக்கிறது 23ஆவது ஆண்டு, 'விரோதி' ஆண்டு... இந்த ஓவியத்துல இருக்கிற மாதிரி ஒவ்வொரு பொஸிஷன்ல, அந்த கல்-ஐ ஃபிக்ஸ் பண்ணி வச்சிட்டு கிணத்துக்குள்ள இறங்குனா.. அந்த வருஷத்துக்கு போயிடலாம்... இப்ப புரியுதா..?' என்று கூறி, மூவரையும் பார்க்க, அவர்கள் ஆச்சர்யமாக அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

'வாவ்... பாஸ்... அந்த கிணறு உண்மையிலேயே பயங்கரமான கிணறுதான்...' என்று சந்தோஷ் வாயைப் பிளந்து அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருக்க...

லிஷா முகம் இன்னும் குழப்பத்தில் இருந்தது.

'தாஸ், அப்படிப் பாத்தாலும், குணா, குதிச்சது, நீங்க இறங்கின இடத்துக்கு வேறு திசையிலதானே..? அப்படிப்பாத்தா, இவரு வேற ஏதோ ஒரு வருஷத்துக்குத்தானே போயிருக்கணும்..?'

'இருக்கலாம், ஆனா, குணா முழு பலங்கொண்டு அந்த கல்லை தள்ளியிருக்காரே தவிர அந்த கல்லை சுத்திவிடல... சுத்தியிருந்தாருன்னா, இந்நேரம் அவர் எங்கே இருந்திருப்பாரோ தெரியல... அவர் தள்ளுனதுல ஒரு சின்ன வேரியேஷன் ஏற்பட்டு, அவர் அட்வான்ஸா 30 மணி நேரம் முன்னாடி வந்து சேர்ந்திருக்காரு... அந்த வகையில அவர் சொன்ன மாதிரி, அவரோட அப்பா அம்மா செஞ்ச புண்ணியம்தான்..' என்று கூறி, குணாவைப் பார்க்க, அவன் இன்னும் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தான்.

லிஷா, அந்த ஓவியம், இருந்த தாஸின் லேப்-டாப் அருகில் சென்று அமர்ந்து, அந்த ஓவியத்தை சூம்(ZOOM) செய்தாள், அதில், அந்த பார்டர்களிலிருந்து வெவ்வேறு வட்ட வடிவங்களை மேலும் மேலும் சூம் செய்ய, அதில் தெளிவில்லாமல், சில எழுத்துக்களும் தெரிந்தது...

'லிஷா, குட் வர்க்... அந்த எழுத்துக்களோட ஷார்ப்னஸ்-ஐ கொஞ்சம் கூட்டினேன்னா, ஓரளவுக்கு படிக்க முடியும். ப்ளீஸ் ட்ரை இட்..' என்று கூற, லிஷா அதை செய்தாள்.

அந்த எழுத்துக்களைப் படிக்க...

'நா..டி...'

'விநா...டி...'

'த... த... தற்பரை...' என்று மிகுந்த சிரமத்துடன் சந்தோஷ் அந்த எழுத்துக்களை படித்து காட்டினான்.

மேலும் ஏதேதோ எழுத்துக்கள் நீண்டுக்கொண்டே போனது.

'ஓ மை காட்...' என்று அந்த எழுத்துக்களை பார்த்துக் கொண்டிருந்த தாஸ் வாயைப் பிளந்தான்.

'என்ன தாஸ்... என்னாச்சு..?' என்று லிஷா கேட்க...

'லிஷா, யு நோ வாட்... இதெல்லாம், தழிழ் காலசாஸ்திரப்படி இருக்கிற டைம் யூனிட்ஸ்...' என்று கூறி அதை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

'இதெல்லாம் எதுக்கு பாஸ் இதுல போட்டிருக்கு..?'

'இது எல்லாத்தையும் பேஸ் பண்ணி, அந்த மூடியில கோ-ஆர்டினேட்ஸ் செட் பண்ணா, எந்த காலத்துக்கும் போயிட்டு வரலாம்..' என்று தாஸ் கூற...

'அப்படியா..' என்று சந்தோஷும் இப்போது ஆர்வமாக அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருக்க...

தாஸ், சந்தோஷை திரும்பி பார்த்தபடி, 'அப்படித்தான் நினைக்கிறேன்..' என்று தீர்க்கமாக கூறினான்.

குணா இதுவரை மூவரும் பேசிக்கொண்டிருப்பதை வாயைப்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

'எக்ஸ்யூஸ்மி..? நீங்கள்லாம் என்ன பேசிட்டிருக்கீங்கன்னு எனக்கு புரியல..?' என்று கூற மூவரும் அவனை திரும்பி பார்க்கின்றனர்.

அவன் தயக்கத்துடன், 'சாரி, என்னனென்னவோ சொல்றீங்க... எனக்கும் இன்னமும், அந்த கிணத்துல குதிச்சதும், எப்படி பாம்பேவுக்கு திரும்பி வந்தேன்னு தெரியல..? ஏதோ விளக்கம் சொல்றதா சொன்னீங்க..?' என்று தயக்கமாய் கேட்க... தாஸ், தனது கடிகாரத்தை பார்த்தான்... பிறகு அவனை நெருங்கி வந்து...

'குணா, உங்களுக்கு பசிக்குதா..?' என்று கேட்க...

ஆமாம் என்று தலையாட்டினான்.

'அப்ப வாங்க... சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்..' என்று கூற... அங்கிருந்து அனைவரும் எழுந்தனர்... லிஷா அந்த ஓவியத்தை திரும்பி திரும்பி பார்த்தபடி, நடந்து சென்றாள்...

------------------------------------

தாஸின், ஆஃபீஸில், 10 பேர் அமர்ந்து சாப்பிடும்படி ஜன்னலோர டைனிங் ஹால் இருந்தது. அதில், இவர்கள் நால்வரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தாஸ் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

'மிஸ்டர் குணா... அந்த கிணறு, ஒரு டைம் மெஷின்..?' என்று கூற, அவன் சாப்பிடுவதை நிறுத்தி தாஸையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு சுதாரித்துக் கொண்டு...

'என்ன தாஸ்... இதையெல்லாம் நம்புறீங்களா..?' என்று நக்கலாக கேட்க...

'பின்ன? எப்படி நீங்க 23ஆம் தேதியிலருந்து, 25ஆம் தேதிக்கு வந்து பாம்பே ஹோட்டல் ரூம்ல இருந்தீங்க..' என்று சந்தோஷ் குணாவை கேட்க...

'அது... நான் ஏதோ சுரங்கம் வழியா வெளிய வந்து விழுந்திருப்பேன்னு நினைச்சேன்... அப்ப யாராவது என்னை காப்பாத்தி கொண்டு போய் ஹோட்டல்ல படுக்க வச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்'

'நல்ல வச்சிருப்பாங்க... இருக்கிறதை புடுங்கிக்கிட்டு, துரத்திவிட்டிருப்பாங்க.. நீங்க பாம்பேல, ஒவ்வொருத்தரையா பார்த்து, சார்.. நான் சென்னையிலருந்து வந்தேன், என் பர்ஸ் பொருள் எல்லாம் காணாம போயிடுச்சி, ஒரு 500 ருபீஸ் கொடுத்தீங்கன்னா திரும்பி போயிடுவேன்-னு கெஞ்சிக்கிட்டு சுத்தியிருப்பீங்க..' என்று சந்தோஷ் குணாவை நக்கலடிக்க

'சந்தோஷ்..?' என்று தாஸ் அவனை கண்டித்தான்.

குணா, சந்தோஷை முறைத்துக் கொண்டிருக்க... தாஸ் அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று யோசித்தவன், சட்டென்று ஒரு யோசனையுடன் தொடர்ந்தான்

'குணா, நீங்களும் நானும் ட்ரெயின்ல முத முதல்ல சந்திச்சிக்கிட்டது 'பாயிண்ட்-A'ன்னு வச்சிக்குங்க..' என்று கூறி, ஒரு கண்ணாடி க்ளாஸை எடுத்து முன்வைத்தான்.

'நீங்களும் நானும், அந்த கிணத்துல இறங்கினது 'பாயிண்ட்-B'... இப்ப நாம இருக்கிறது 'பாயிண்ட்-C'... இப்ப, நான் சொல்றதை தெளிவா கவனிங்க..' என்று 3 டம்ளர்களை A B C என்று வரிசையாக அடுக்கியபடி, ஒரு ஸ்பூனை எடுத்து அந்த க்ளாசுகளுக்கிடையில் நுழைத்தபடி விவரித்தான்.

'நான் அந்த கிணத்துல இறங்கி, B-க்கும், A-க்கும் முன்னாடி வந்து சேர்ந்தேன்' என்று ஒரு ஸ்பூனை A டம்ளருக்கு அப்பால் வைத்தான்.

'நீங்க அந்த கிணத்துல இறங்கி B-க்கும், C-க்கும் நடுவுல வந்து சேர்ந்திருக்கீங்க...' என்று இன்னொரு ஸ்பூனை எடுத்து, B-க்கும் C-க்கும் இடையில் வைத்தான்.

'இப்ப புரியுதா..?' என்று கேட்க, குணா தாஸை உற்றுப் பார்த்து...

'புரியிற மாதிரி இருக்கு...' என்று சற்று யோசித்து, மீண்டும் ஒரு கேள்வி எழுந்தவனாய், 'அப்ப என் சூட்கேஸ், மொபைல் எல்லாம் எப்படி பாம்பேல ஹோட்டல் ரூமுக்கு வந்தது?' என்று கேட்டான்.

'நான் பாயிண்ட்-Aக்கு வந்துட்டதால, எனக்கு பாயிண்ட்-Bல நடக்கப்போற விஷயம் தெரிஞ்சுபோச்சு, அதாவது, நாம ட்ரெயினை மிஸ் பண்ணிட்டு காட்டுக்குள்ள அலையப்போறோம்னு தெரிஞ்சு போச்சு, அது நடக்கக்கூடாதுன்னு நினைச்ச நான், அடுத்த ஸ்டேஷன்லியே இறங்கிட்டேன். அதனால, அந்த சம்பவம் நடக்கலை... பாயிண்ட்-A-ல ட்ரெயின்ல இருந்த குணாவுக்கு இது  எதுவுமே தெரியாது. அவர் வழக்கம்போல, ஆஃபீஸ் விஷயமா, பாம்பேவுக்கு போய், ரூம் போட்டுக்கிட்டு, க்ளையண்ட்-ஐ சந்திக்கிற நினைப்புல இருந்திருப்பாரு... அப்பதான், நீங்க அந்த இடத்துக்கு டைம் ட்ராவல்-ல திரும்பி வந்தீங்க..' என்று கஷ்டப்பட்டு நடந்ததை கூற முயல...

குணா மீண்டும், 'அப்ப அந்த குணா எங்கே..?' என்று கேட்க...

தாஸ் சிரித்தபடி, 'குணா டபுள் ஆக்ஷ்ன்லாம் கிடையாதுங்க... டைம் ட்ராவல் ஆகி திரும்பி வந்ததும், அந்த குணா, ரீப்ளேஸ் ஆகி நீங்க அவர் இடத்துக்கு வந்துடுவீங்க...'

'அப்போன்னா, நீங்க பாயிண்ட்-Aக்கு திரும்பி வந்து ட்ரெயின் பர்த்-ல படுக்கிறதுக்கு முன்னாடி, அங்கே ஏற்கனவே ஒரு தாஸ் படுத்துக்கிட்டு இருந்திருப்பாரு இல்லியா..?' என்று குணா கேட்க...

'பரவாயில்லியே... நீங்க புரிஞ்சிக்கிட்டீங்க...' என்று கூறி தாஸ் மீண்டும் சாப்பிட துவங்கினான்.

'எனக்கு தெரிஞ்சு உலகத்துலியே டைம் ட்ராவல் பண்ணது நீங்க ரெண்டு பேருதான்னு நினைக்கிறேன்..' என்று லிஷா கூற சந்தோஷ் மறுத்தான்

'ஏன், தெலுகு ஹீரோ பாலகிருஷ்ணா கூடதான் டைம் ட்ராவல் பண்ணியிருக்காரு..'

'எப்போ..?'

'ஆதித்யா 369-ன்னு ஒரு தெலுகு படத்துல... சூப்பர் படம் அது..'

'என்ன ஜோக்கா... நான் நிஜ லைஃப்ல சொல்லிக்கிட்டிருக்கேன்டா..' என்று லிஷா அவனை செல்லமாக திட்டினாள்.

'நிஜத்துலயும், டைம் ட்ராவல் பண்ண ஒரு ஆள் இருக்காரு லிஷா..' என்று தாஸ் கூற, மூவரும் அவனை ஆவலோடு பார்த்தார்கள்

'அவர் பேரு ஜான் டைட்டர் (John Titor)..'

'யாரவரு... உங்களுக்கு தெரிஞ்சவரா..?' என்று சந்தோஷ் கிண்டலடிக்க, தாஸ் அவனை பார்த்தபடி தொடர்ந்தான்.

'2036-ஆம் ஆண்டுலருந்து வந்திருக்கிறதா இவர் சொல்லிகிறாரு.. இங்க வந்ததும், அவரோட டைம் ட்ராவல் மெஷின் ரிப்பேர் ஆயிடுச்சாம்... அதனால, திரும்பி போறதுக்கு ரொம்புவம் சிரமப்பட்டுக்கிட்டு இருக்கிறதா சொல்றாரு... எந்நேரமும் நான் திரும்பி போயிடுவேன்னு உறுதியளிக்கிறாரு... இண்டர்நெட்டுல ரொம்ப ஃபேமஸ்... Google-ல அவரைப்பத்தி தேடிப்பாருங்க ஏகப்பட்ட கதையிருக்கு'

'உண்மையா இருக்குமா பாஸ்..?'

'தெரியல... ஆனா, அவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருக்காங்க, ஏகப்பட்ட ஸ்பான்ஸர்ஸ் இருக்காங்க... பயங்கர பப்ளிசிட்டி... அவர் பேரை வச்சி படமெல்லாம் எடுக்க போறாங்களாம்...' என்று தாஸ் கூற, மூவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

'அப்போ உங்க ரெண்டு பேர் பத்தியும் இண்டர்நெட்ல போட்டுடலாமா..?' என்று சந்தோஷ் ஆர்வமாக கேட்டான்.

'வேண்டாம் சந்தோஷ்... தயவு செஞ்சி அப்படி எதுவும் பண்ணிடாதே..? இந்த கிணறு பத்தின விஷயத்தை சீக்ரெட்டா மூவ் பண்ணாதான், இதைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க முடியும். அவசரபட்டு இதை பப்ளிசிட்டி பண்ணிட்டோம்னா... பிரச்சினையாயிடும். இப்போதைக்கு இந்த கோவிலை பத்தி வெளியே எந்த நியூஸும் வரக்கூடாது' என்று தாஸ் கூறுகிறான்.

இதற்குள் அனைவரும் சாப்பிட்டு முடிக்க... அங்கிருந்து எழும்போது தாஸின் மொபைல் ஃபோன் ஒலித்தது..

பழைய பாடல் ரிங்டோன்
ஆண்டவன், உலகத்தின் முதலாளி
அவனிடம் நானொரு தொழிலாளி...


மற்ற மூவரும் எழுந்து கைகழுவ சென்றுவிட, தாஸ் தனது மொபைல் டிஸ்ப்ளேவில் "OLD FRIEND" என்று வருவதைப் பார்த்து, முகம் மலர்ந்தபடி.. ஃபோனை எடுத்தான்.

'தாத்த்த்தா.. எப்படி இருக்கீங்க..?'

'நல்லாயிருக்கேம்ப்பா... நீதான் இந்த தாத்தாவை மறந்துட்டே...'

'உங்களை மறப்பேனா தாத்தா..? நீங்கதான் என் இன்ஸ்பிரேஷன்..'

'சந்தோஷம்ப்பா... உன் அடுத்த புக் எப்போ..?'

'அடுத்து இனிமேதான் எழுதனும் தாத்தா..'

'எழுதினதும், எனக்குதான் ஃபர்ஸ்ட் கொடுக்கணும்... மறந்துடாதே...'

'கண்டிப்பா தாத்தா... நீங்கதான் என் ஃபர்ஸ்ட்டு ரீடர்..' என்று கூற, சந்தோஷ் கைகழுவிவிட்டு அங்கு வந்தான்.

தாஸ் ஃபோனில் தொடர்ந்தான்...

'தாத்தா, நானே உங்களுக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன்... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...' என்று கூற

'என்ன விஷயம்ப்பா..?'

'நேர்ல வந்து சொல்றேனே..?'

'முதல்ல கிளம்பி வா... உன்னை பாத்து ரொம்ப நாளாச்சுப்பா..?' என்று அந்த கிழவர் கெஞ்சுகிறார்

'சீக்கிரமா வரப்பாக்குறேன் தாத்தா... நிறைய பேச வேண்டியிருக்கு...' என்று தாஸ் கூற

'சரிப்பா... நீ வேலையப்பாரு... நான் அப்புறமா ஃபோன் பண்றேன்... வச்சிடட்டுமா..?'

'சரி தாத்தா..' என்று ஃபோனை கட் செய்தான்

சந்தோஷ், ஆர்வமாக டிஷ்யூவால் கைதுடைத்தபடி... 'யாரு பாஸ்...?'

'என் தாத்தா, சின்ன வயசுலேர்ந்து என்னை இவருதான் வளத்தாரு... யு ஷூட் மீட் ஹிம்... பயங்கர நாலெட்ஜ்... எந்த டாபிக் பத்தி கேட்டாலும், ரொம்ப நேரம் பேசுவாரு... அவ்வளவு தகவல்கள் கையில இருக்கும். எனக்கென்னமோ இந்த கேணிவனத்தை பத்தி இவருகிட்ட சொன்னா, ஏதாவது தகவல் தெரிய வரும்னு நினைக்கிறேன்.' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, லிஷா ஓடி வருகிறாள்...

'தாஸ்...' என்று ஓடி வந்து மூச்சு வாங்கியபடி நின்றவள், தாஸையும் சந்தோஷையும் பதற்றத்துடன் பார்த்தபடி...

'குணாவை காணோம்... எங்கே தேடியும் கிடைக்கல...' என்று அவள் கூற... சந்தோஷூம், தாஸூம் லிஷாவை கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்...

(தொடரும்...)


Signature

Monday, August 23, 2010

"கேணிவனம்" - பாகம் 07 - [தொடர்கதை]



பாகம் - 07

'யோவ் ரைட்டர்... எல்லாம் உன்வேலதானா..? நீ என்ன வில்லனா..?' என்று குணா, தாஸை முறைத்துக் கொண்டிருந்தான்...

'சாரி குணா... என்னை வில்லன் மாதிரி நடந்துக்க வச்சிட்டீங்க...'

'நான்தான் உன் சகவாசமே வேண்டாம்னு சொல்லியிருக்கேன்ல..? அப்புறம் ஏன்யா எனக்கு தொல்லை கொடுக்குறே..?' என்று குணா கோபப்பட

'குணா... நான் உங்களை இங்க வரவழைச்சதே நம்ம நல்லதுக்குதான்...'

'என்ன நல்லது..?'

'நாம மறுபடியும், அந்த காட்டுக்கோவிலுக்கு போக வேண்டியிருக்கும்...' என்று கூற, உடனே குணாவிற்கு, அவன் அந்த காட்டுக் கோவிலில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும், கணநேரத்தில் கண்முன் வந்த மறைந்தது.

'உனக்கென்ன பைத்தியமா... அங்கிருந்து தப்பிச்சு வந்ததே, எங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம்னு நான் நினைச்சிட்டிருக்கேன்... இந்த நேரத்துல போய், மறுபடியும் அந்த கோவிலுக்கு போலாம்னு சொல்றியே..? நீ சொல்றதே எனக்கு வயித்த கலக்குதுய்யா..? ஆளைவிடு... இல்லன்னா... நான் போலீஸ் கிட்ட போவேன்..'

'குணா, பயப்படாதீங்க.... போனதடவை மாதிரியில்ல... இந்த வாட்டி, பக்கா ப்ரொடக்ஷனோட போகப்போறோம்...' என்று கூற...

குணா அவனை தீர்க்கமாக ஒருமுறை முறைத்துவிட்டு, 'உனக்கு வேணுன்னா எத்தனை தடவை வேணுமின்னாலும், அங்க போ... என்னை ஆளவிட்டுடு..' என்று கூறி அங்கிருந்து விறுவிறுவென வெளியேற முயன்றான்.

சந்தோஷ் வழிமறித்து நின்றான்.

தாஸ், அவனை நெருங்கி வந்து, 'குணா... நான் உங்களை அந்த காட்டுல தனியா விட்டுட்டு வந்தது தப்புதான்... என்னை மன்னிச்சிடுங்க... நீங்க என்கூட மறுபடியும் அந்த கோவிலுக்கு வரலைன்னாலும் பரவாயில்ல... உங்ககூட கொஞ்சம் பேசவேண்டியிருக்கு... ஜஸ்ட் ஒரு 1 மணி நேரம் என்கூட ஸ்பெண்ட் பண்ணுங்க... போதும்..' என்றுகூற...

லிஷா, அவனை நெருங்கி வந்து... 'குணா... நீங்க 4 நாள் முன்னாடி அனுபவிச்ச விஷயங்களுக்கு என்ன காரணம், என்ன விளக்கம்னு தெரிஞ்சிக்க வேண்டாமா..? ப்ளீஸ், கோ-ஆப்ரேட் பண்ணுங்க.. நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்' என்று கேட்க...

குணா மௌனமாக சரி என்று தலையசைத்தான்...

---------------------------

அனைவரும், தாஸின் ஆஃபீஸில், பெரிய வட்ட வடிவ கான்ஃபரன்ஸ் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

ஒரு மிதமான ஆரஞ்சு கலர் லைட், அந்த அறைக்கு மந்தமான வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்க... கோவிலில் எடுக்கப்பட்ட ஓவியத்தின் ஃபோட்டோ, அந்த அறையில் டிஜிட்டல் ப்ரொஜெக்டரின் வாயிலாக, ஸ்க்ரீனில் பிரம்மாண்டமாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

குணாவை, அந்த ஃபோட்டோவுக்கு நேரே அமர்த்திவிட்டு, ஒரு பக்கம் தாஸ் அமர்ந்திருக்க, மறுபக்கம், லிஷாவும், சந்தோஷூம் அமர்ந்திருந்தனர்...

தாஸ் பேச்சை ஆரம்பித்தான்.

'குணா... நாம போயிட்டு வந்த அந்த கோவில்.... சாதாரண கோவிலில்ல... அது இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்... இருந்தாலும், என்னைவிட அந்த கோவில்ல அதிக நேரம் இருந்தது நீங்கதான். நான் அங்கேயிருந்து கிணத்துக்குள்ள இறங்குனதுக்கப்புறம். என்ன நடந்தது..? நீங்க என்னென்ன பாத்தீங்க..? என்ன செஞ்சீங்க?-ன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க...' என்று கேட்க, குணா அந்த அறையில் பரவியிருந்த அரையிருட்டில் மூவரையும் ஒருமுறை பார்த்தான்.

'ப்ளீஸ்...' என்று தாஸ் மீண்டும் வலியுறுத்த...

குணா, அந்த ஓவியத்தை ஆர்வத்துடன் பார்த்தபடி நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்.

---------------------------

அன்று கோவிலில் நடந்தது...

தாஸ் கிணற்றுக்குள் இறங்குவதை கலவரத்துடன் குணா கையில் தீக்குச்சியை ஏந்தியபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக, தாஸ்-ன் உருவம் இருட்டில் மறைந்து கொண்டிருந்தது. குணா கையிலிருந்த தீக்குச்சியின் வெளிச்சம், அந்த கிணற்றுக்குள் பத்தடிக்கு மேல் பாயவில்லை... இப்போது தாஸின் உருவம் முழுவதுமாக மறைந்து, அவன் கழுத்தில் கட்டியிருந்த, மொபைல் டார்ச்சின் வெளிச்சம் மட்டும், ஒரு புள்ளி போல குணாவுக்கு தெரிந்து கொண்டிருந்தது.

இப்போது அதுவும் மறைந்து போனது. இதற்குள் குணா கையிலிருந்த, தீக்குச்சியும் அணைந்து போனது.

குணா செய்வதறியாமல் அந்த கருவறையை விட்டு வெளியேறி, மண்டபத்தில், தீ மூட்டியிருந்த இடத்துக்கு வந்தான்.

மீண்டும், அந்த காட்டில் கனத்த மழை பிடித்தது.

குணாவிற்குள் ஏதேதோ எண்ணங்கள் வந்து மறைந்து கொண்டிருந்தது.

அசைந்தபடி எரிந்துக் கொண்டிருக்கும் அந்த தீ-யையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த தீ-யும் முழுவதுமாக அணைந்து போனது. நிலா வெளிச்சம் கூட புகமுடியாத அடர்ந்த காட்டில், செய்வதறியாது திணறியபடி குணா, அந்த மண்டபத்தில் இருட்டில் அமர்ந்திருந்தான்.

சுற்றிலும், மழை கொட்டோ கொட்டென்று பெய்யும் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது.

இப்போது, அவனது கண்கள் இருட்டில் கொஞ்சம் ஊடுருவி பார்க்க பழகியிருந்தது. சுற்றிப் பார்த்தான். மண்டபத்தின் பாழடைந்த தூண்களும், அந்த தூண்களை ஒட்டி ஊடுருவியிருக்கும் மர வேர்களும் கொஞ்சமாக கண்ணுக்கு தெரிந்தது.

பயத்தின் காரணமாக, தொண்டை கணத்து, தண்ணீர் தாகமெடுத்தது.

சற்று நேரத்திற்கு முன், தாஸ் அவனுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்த, அந்த உடைந்த, பெரிய சைஸ் அகல் விளக்கு அவனக்கருகில் இருப்பதை நினைவுக்கூர்ந்து, தடவிப் பார்த்து கண்டெடுத்தான்.

மண்டபத்தின், ஓரத்தில், மழை நீர் சொட்டிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கவே, அந்த சத்தம் வந்த திக்காக மெதுவாக நடந்து சென்று, அந்த அகல்விளக்கில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஒரு பயங்கர இடி... காது கிழிந்துவிடும் சத்ததுடன் இடித்தது.

'ஆஆஆஆ...' என்று பயத்தில் குணா அலற, அந்த இடிச்சத்தம் கேட்ட நடுக்கத்தில், அவன் கையிலிருந்த, அகல்விளக்கு நழவி கீழே விழுந்து உடைந்தது...

'சே..!' என்று அலுத்துக் கொண்டான்.

பிறகு, அங்கு சொட்டிக் கொண்டிருக்கும் தண்ணீரை, அப்படியே வாய் வைத்து குடித்தான். தாகம் தீர்ந்து, உடம்பில் குளிரெடுக்க ஆரம்பித்தது.

இம்முறை, சத்தமில்லாமல், ஒரு மின்னல் வெளிச்சம் வந்து போனது.

அந்த கண நேர வெளிச்சத்தில், மண்டபத்துக்கு வெளியே தெரியும் காடு, வெளிச்சமாக அவன் கண்களுக்கு முன் தெரிந்து மறைந்தது. அந்த வெளிச்சத்தில் அவன் கண்ட காட்சியில், ஏதோ ஒன்று தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்ததை கண்டான். அது என்ன என்று நினைவுக்கூற, அது ஒரு புலியின் முகமோ என்று சந்தேகம் எழுந்தது அவனை கலவரப்படுத்தியது.

அவன் அப்படி நினைத்த மாத்திரத்தில், அந்த மின்னல் வெளிச்சத்துக்கு உண்டான இடிச்சத்தம் கேட்டது.

பயந்து போனான். தடவி தடவி நடந்து போய், அங்கிருந்த ஒரு தூணுக்கு பின்புறம் மறைந்துக் கொண்டான்.

அங்கிருந்து எட்டிப்பார்த்தபடி, காட்டுக்குள் நோட்டம் விட்டான். இருட்டு... ஒன்றும் தெரியவில்லை...

மீண்டும் ஒரு மின்னல் வெளிச்சம் தெரிந்தது. இம்முறை, அந்த வெளிச்சத்தில்... கூர்ந்து பார்க்க...

அது... புலிதான்...

ஆம்... புலியேதான்... சந்தேகமேயில்லை...

அது ஒரு இடத்தில் நின்று மண்டபத்தையே கோபத்துடன் உற்று நோக்குவதைக் கண்டான்.

இடிச்சத்தம்...

தூணில் முழுவதுமாக மறைந்துக் கொண்டான்.

குணா தனது வாழ்நாளில் இப்படி பயந்ததில்லை... நடுக்கத்துடன், செய்வதறியாமல், மீண்டும் இருட்டில், அந்த புலி நின்றிருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆபத்து நேரத்தில், மனிதனுக்கு, புலன்கள் மிகவும் கூர்மையாக வேலை செய்யும்... இது இயற்கை மனிதனுக்கு கொடுத்த வரத்தில் ஒன்று...

அப்படித்தான், குணாவுக்கு அப்போது நேர்ந்தது. கண்கள் இருட்டை துழாவியது... காது மழை வரும் சத்தத்தை தாண்டி கூர்மையாக அதிர்வுகளை கேட்க முயன்றது...

மீண்டும் மின்னல் வெளிச்சம் சற்று அதிகநேரம் நீடித்த படி ஃப்ளாஷடித்தது... கண்களை கூர்மையாக்கிக் கொண்டு, அந்த புலி நின்றிருந்த இடத்தைப் பார்க்க, அங்கே புலியில்லை... எங்கே போனது..? ஒருவேளை மழைக்கு பயந்து திரும்பி போயிருக்குமோ... என்று எண்ணியபடி, கணநேரத்தில் கண்களை அங்குமிங்கும் அலையவிட்டு துழாவிக் கொண்டிருக்க... காணக்கூடாத காட்சியை அவன் கண்கள் கண்டது.

அந்த புலி, குணா நின்றிருக்கும் மண்டபத்தில் தாவி ஏறிக்கொண்டிருந்தது... இதற்குள் மின்னல் வெளிச்சம் மறைந்துவிட... மீண்டும் இருட்டு...

'ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்...'  என்று பயத்தில் எழுந்த பெருமூச்சை உள்ளிழுத்துக் கொண்டான்.அப்படியே உள்ளடக்கி, மூச்சுவிடாமல் நின்றிருந்தான். இப்போது, அந்த புலி அந்த மண்டபத்துக்குள் நடந்து முன்னேறிக்கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. சிறுவயதில், அவன் வண்டலூர் உயிரியல் பூங்காவில், புலிக்கூண்டுக்கு அருகில் நிற்கும்போது, அவன் உணர்ந்த புலியின் நாற்றத்தை இப்போது அவனால் உணர முடிந்தது.

என்ன குணா என்ன செய்யப் போகிறாய்... புலியோடு சண்டைபோடமுடியுமா... அது நடக்கிற காரியமில்லை... வேறென்ன வழி இருக்கிறது... என்று குழப்பமாக அவன் மனது ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தது...

'குணா, மே பி இந்த கிணறுதான் நாம வெளியே போறதுக்கான வழியோ என்னமோ..?' என்று தாஸ் அந்த கிணற்றில் இறங்குவதற்கு முன் சொன்னது நினைவுக்கு வந்து போனது... அவன் கூறியது போல், கிணற்றுக்குள் இறங்கிவிடுவோமா..? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்த புலி அலட்சியமாக உறுமியது...

'க்க்க்ர்ர்ர்ர்ர்...' என்று அந்த புலியின் கர்ஜனை மண்டபத்தையே உலுக்குவது போல் கேட்டது... அதைத் தொடர்ந்து ஒரு இடியும் இடித்தது.

அந்த கர்ஜனை சத்தமும் இடிச்சத்தமும் ஒன்றாக கேட்க, அவன் உடம்பில் நூறு மொபைல் ஃபோனை வைத்து, வைப்ரேட் செய்வது போல் இருந்தது.

இதற்குமேலும் தாமதித்தால் மரணம் நிச்சயம். எப்படியும் சாவதென்று முடிவான பிறகு, புலியின் வாயால் உயிருடன் துடிதுடித்து சாவதை விட, அந்த கிணற்றில் குதித்து செத்துவிடலாம். என்று யோசித்து அந்த தூண்மறைவிலிருந்து வெளியேறினான்...

அவன் வெளியேறிய அடுத்த நொடி, மீண்டும் ஒரு மின்னல் வெளிச்சம் அடித்து மறைந்தது. அந்த கண நேர வெளிச்சத்தில் அந்த புலியும், குணாவும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர்.

யோசிக்காமல் குணா ஒரே ஓட்டமாக அந்த கருவறைக்குள் ஓடினான். புலி அவன் ஓடிய திசையை கணித்தபடி பயங்கர உறுமலுடன், இருட்டில் அவனை துரத்தி வந்தது.

குணா கருவறைக்குள் ஏற்கனவே நுழைந்து பழக்கப்பட்டிருந்ததால், சுலபமாக நுழைந்தான். அவனை துரத்தி வந்த புலி, சுவற்றில் மோதி, விழுந்தது. அது எழுந்து சுதாரிப்பதற்குள் அவன் கிணற்றுக்குள் குதித்து விட முயன்று, அந்த கிணற்றுக்குள் இறங்க எத்தணிக்க, அந்த கிணற்றில் தாஸ், ஏற்கனவே கொஞ்சமாக திறந்திருந்த துவாரம், இப்போது அவன் நின்றிருந்த பக்கத்துக்கு எதிர் திசையில் இருப்பது தெரிந்தது. அவன் அந்த துவாரத்தை நெருங்கி உள்ளே இறங்குவதற்குள், புலி வந்து தன்னை கவ்வி விடுமே என்ற நடுக்கத்தில், பயத்தில் மனிதனுக்கு ஏற்படும் அசாத்திய பலத்தில், அவன் பக்கமிருந்த, அந்த கிணற்றின் மேல்பக்க மூடி போன்ற வட்ட வடிவ கல்லை ஒரே தள்ளில் தள்ள, அது எதிர்பக்கமாக தள்ளிக்கொண்டு அவனுக்கு வழிவிட்டது.

இருட்டில் பார்க்க பழகிய அவனது கண்ணுக்கு, புலி எழுந்த தன்னை நோக்கி தாவ முனைவது தெளிவாக தெரிந்தது. சரியாக அது பாயும்போது, அவன் கிணற்றுக்குள் குதித்துவிட்டான். புலி அந்த கருவறை சுவற்றுக்குள் மோதி கீழே விழுந்து எழுந்து, அந்த கிணற்றை எட்டிப் பார்த்தபடி கோபமாக உறுமியது.

'இந்த சம்பவத்தை, என் லைஃப்ல நான் மறக்க முடியாது..' என்று குணா, மூவரிடமும் நடந்த விஷயத்தை கூறிமுடித்தான்.

அந்த அறையில் சிறிது நேரம் நிசப்தம்...

மூவரும் குணா சொல்லி முடித்ததை அவரவர் கற்பனையில் காட்சிப்படுத்தி கொண்டிருந்ததை அந்த நிசப்தம் உணர்த்தியது.

லிஷா தொடர்ந்தாள்... 'குணா, நீங்க அந்த கிணத்துல குதிச்சதுல தப்பே இல்ல... இல்லன்னா.. இந்நேரம் நீங்க அந்த காட்டுப்புலிக்கு இரையாயிருப்பீங்க...' என்று கூறியபடி தன்னருகிலிருந்து தண்ணீர் டம்ளரை எடுத்து குணாவிடம் கொடுத்தாள்...

'தேங்க்ஸ் மஞ்சரி..' என்று குணா வாங்கிக் கொண்டான்.

'குணா... நான் மஞ்சரியில்ல... லிஷா..' என்று தீர்க்கமாக கூற... குணா அமைதியாக தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான்.

சந்தோஷ் தொடர்ந்தான்... 'பாஸ், இவரு இடத்துல நான் இருந்தாலும், உங்ககூட, மறுபடியும் அந்த காட்டுக்கோவிலுக்கு வரமாட்டேன்னுதான் சொல்லியிருப்பேன்' என்று கூற...

தாஸ் அங்கே ப்ரொஜெக்டர் வெளிச்சத்தில் சுவற்றில் பிரம்மாண்டமாய் தெரிந்து கொண்டிருக்கும் ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சந்தோஷ், குணாவிடம் திரும்பி, 'மிஸ்டர் குணா..! நீங்க ரெண்டு பேரும் இறங்கினது ஒரே கிணறுதான், ஆனா, எப்படி வெவ்வேற காலகட்டத்துக்கு வந்து ரீச் ஆனீங்கன்னு தெரியலியே..?' என்று கூற

குணா, டம்ளரிலிருந்த தண்ணீரை முழுவதுமாய் குடித்து முடித்துவிட்டு சந்தோஷிடம்...

'நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல..' என்றான்.

இத்தனை நேரம் அந்த ஓவியத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்த தாஸ்...

'யெஸ்...' என்று குதூகலித்தபடி...

'எனக்கு புரிஞ்சிடுச்சி...' என்று மூவரையும் பார்த்தான்...

மூவரும் அவன் சொல்லப் போவதை கேட்க ஆர்வமயாயிருந்தனர்...

(தொடரும்...)



Signature

Sunday, August 22, 2010

"கேணிவனம்" - பாகம் 06 - [தொடர்கதை]



பாகம் - 06

'குணா, ஏன் கோவமா பேசுறீங்க..?' என்று மறுமுனையில் குணாவை தாஸ் சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.

'பின்ன என்ன உங்கிட்ட கொஞ்சுவாங்களா..?' என்று குணா கோபம் குறையாமல் பேசினான்.

'ப்ளீஸ் குணா, காம் டவுன்...'

'யோவ், நீ அந்த கோவில்ல விட்டுட்டு போனதும், ஒரு மணி நேரம், கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி ஆயிடுச்சி...! எப்படி தனியா துடிச்சேன் தெரியுமா..?'

'அங்கே என்ன நடந்து... நீங்க எப்படி தப்பிச்சு வந்தீங்க... அதை சொல்லுங்க..' என்று பேசியபடி, தாஸ் தனது மொபைலை ஸ்பீக்கர் ஃபோன் மோடில் போட்டான். இப்போது, அருகில் நின்றிருக்கும் அவனது அஸிஸ்டென்ட் சந்தோஷூம், இந்த உரையாடலை ஆர்வமாக கேட்டான்.

'எப்படி தப்பிச்சேனா..? யோவ், தற்கொலை பண்ணிக்கலாம்னு அந்த கிணத்துல குதிச்சேன்... முழிச்சு பாத்தா பாம்பேல இருக்கேன்... அதுவும் கரெக்டா நான் என் க்ளையண்ட்-ஐ பாக்குறதுக்காக புக் பண்ணியிருந்த ஹோட்டல் ரூம்ல இப்ப இருக்கேன்.... கூடவே என் பேக், மொபைல், பர்ஸ் எல்லாம் சேஃபா இருக்கு... கண்முழிச்சு 2 மணி நேரமாச்சு...  எப்படி... எப்படின்னு ஒண்ணும் புரியாம மண்டையப் பிச்சிக்கிட்டிருக்கேன்...'

'ரொம்ப சந்தோஷம்...'

'யோவ், நான் மண்டைய பிச்சுக்கிறது உனக்கு சந்தோஷமா இருக்கா...'

'குணா, you are in a trauma... ரிலாக்ஸ் பண்ணுங்க, மண்டையப் போட்டு குழப்பிக்காதீங்க... நீங்க எப்போ சென்னைக்கு வர்றீங்க..?'

'இன்னைக்கு நைட் மெயில்ல வர்றேன்... ஏன்..?' வேண்டாவெறுப்பாக சொன்னான்.

'இல்லை, நீங்க சென்னை வந்ததும், முதல் வேலையா... என்னை வந்து பாருங்க... உங்ககிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு...'

'முடியாதுயா... நான் ஏன் உன்னை வந்து பாக்கணும், உன் சகவாசமே வேணாம்...'

'இல்ல குணா... நான் சொல்றதை...'

'யோவ், உன்னை திட்றதுக்குத்தான், ஒரு பப்ளிகேஷனுக்கு ஃபோன் பண்ணி, உன் கதைகளோட தீவிர விசிறி நானுன்னு பொய் சொல்லி, உன் மொபைல நம்பரைப் பிடிச்சேன். திட்டிட்டேன்... இதுக்கு மேலயும், உங்கூட பேசிட்டிருந்தா, எனக்கு கெட்ட கெட்ட வார்த்தையா வரும்... வை ஃபோனை..' என்று கடுமையாக பேசி, குணா ஃபோனை கட் செய்தான்.

தாஸ் அருகில் நின்றிருக்கும் சந்தோஷை ஏறிட்டுப் பார்த்தான்.

அவன், 'என்ன பாஸ்... இவன் இவ்ளோ லோக்கலா பேசுறான்..'

'You know what..? இவன் ஒரு சாஃப்டுவேர் ப்ரொஃபஷனல்...' என்று கூற, சந்தோஷ் சிரித்துக் கொண்டான்.

'இப்பவாவது நான் சொன்ன விஷயங்களெல்லாம் உண்மைன்னு நம்பறியா சந்தோஷ்..'

'நம்பறேன் பாஸ்...'

'ஒரு வகையில இந்தாளு திட்றதுல அர்த்தமிருக்கு, நான் பண்ணதும் தப்புதானே... என்ன நடக்கும்னு தெரியாம, பயந்துப்போயிருக்கிற ஒருத்தரை தனியா விட்டுட்டு வந்தது... என் தப்புதான்..' என்று தாஸ

'பாஸ், எனக்கு ஒரு விஷயம் இடிக்குது..'

'என்ன..?'

'நீங்க, அந்த கிணத்துக்குள்ள இறங்கினதும், 30 மணி நேரம் பின்னாடி பாஸ்ட்-க்கு வந்து, 24ஆம் தேதிலருந்து, 23ஆம் தேதிக்கு வந்ததா சொன்னீங்க..?'

'ஆமா..'

'இப்ப ஃபோன்ல இந்தாளு சொன்னதை வச்சி பாத்தா, நீங்க இறங்குன கொஞ்ச நேரத்துல, அதே கிணத்துல 24ஆம் தேதி இறங்கியிருக்கான். ஆனா, பாம்பேல, ஹோட்டல்ல இப்ப 2 மணி நேரம் முன்னாடி, 25ஆம் தேதி கண்முழிச்சியிருக்கான்.'

'ஆமா..?'

'அப்படின்னா, அதே கிணறுல முன்னாடியும், பின்னாடியும் டைம் டிராவல் பண்ண முடியுமா..?'

'அட ஆமா..? இதை நான் யோசிக்கலையே..? அவன் மட்டும் எப்படி ஃப்யூச்சர்ல வந்து சேர்ந்தான்..?'

'ஆச்சர்யமா இருக்கு பாஸ்... நீங்க சொல்றதை மட்டும் வச்சி எப்படி நம்புறதுன்னு குழம்பிட்டிருந்தேன்... ஆனா, இப்ப இன்னொருத்தனும் அதே கிணறுல மூலமா டைம் டிராவல் பண்ணியிருக்கான்னு கேட்டதும்... இனிமே எனக்கு சந்தேகமே இல்ல...'

'At any cost, அந்த கிணறு, என்னவா இருக்கும்னு கண்டுபிடிச்சாகனும் சந்தோஷ்...'

'கண்டிப்பா பாஸ்...'

'அதுக்கு நான், எப்படியாவது இந்த குணாகிட்ட பேசியாகனும்... அதுவரைக்கும், இந்த விஷயத்தை குணா யார்கிட்டயும் சொல்லாம இருக்கணுமே..?' என்று டேபிளில் விரித்து வைத்திருந்த, அந்த காட்டுக்கோவில் ஓவியத்தை வெறித்துப் பார்த்தபடி தாஸ் வருந்தி கொண்டிருந்தான்...

----------------------

2 நாளைக்கு பிறகு...

குணா, தனது க்ளையண்ட் மீட்டிங்கை குழப்பமாக முடித்துவிட்டு, களைப்புடன் சென்னைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தான்.

பேஸின் ப்ரிட்ஜ் ஜங்கஷனை கடந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சமீபித்துக் கொண்டிருந்த அவனது ரயில், அவனைப் போலவே குழப்பமாக, நிற்பதா, வேண்டாமா..? என்று குழம்பியபடி, ஒரு ப்ளாட்ஃபார்மில் வந்து நின்றது.

நீண்ட பயணத்துக்குப்பிறகு, மக்கள் களைப்புடன், தமது உடமைகளை சுமந்தபடி இறங்கிக் கொண்டிருந்தார்கள். குணாவும் சோர்வாக இறங்கிக் கொண்டிருந்தான்.

ஒரு அழகான இளம்பெண், தனது சூட்கேஸை இரண்டு கையால், இழுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டே குணாவை கடந்து சென்றாள்.

குணா, அவளைப் பார்த்தான். அசத்தும் அழகு...

சே..! கிடத்தட்ட இரண்டு நாட்களாக இந்த பெண் தன்னுடன் இதே ரயிலில் பயணித்திருந்தும், இவளை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று அலுத்துக் கொண்டான்.

மாம்பழக் கலர் டீ-ஷர்ட்டும், கருப்பு ஜீன்சும் அணிந்திருந்த அவளை ரசித்தபடி, அவளையே பின்தொடர்ந்து, அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்துக் கொண்டிருந்தான்..

அந்த பெண்ணின், மொபைல் ஃபோன் ஒலித்தது... you're my honeybunch என்ற குழந்தையின் பாடல் ரிங்டோன்...  அதை ஆன் செய்து பேசியபடி அவள் அழகாக நடந்து சென்றதில், அவளுக்கு பின்னால் வந்த குணா, மெய்மறந்து நடந்து கொண்டிருந்தான். அவள் ஃபோன் பேசியபடி, தனது ஹெவி சூட்கேஸை தள்ள மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். இதுதான் சமயம் என்று அவளை நெருங்கி...

'மே ஐ ஹெல்ப் யூ..?' என்று குணா, அவளிடம் கேட்க... அவள் குணாவை ஒரு ஆழப்பார்வை பார்த்துவிட்டு...

'ஓகே..' என்று ஏளனமாக கூற... குணாவுக்கு, ஏன்தான் இவளுக்கு உதவுகிறோமோ.. என்று ஒரு சின்ன எண்ணம் வந்து போனது. இருப்பினும், அவள் அழகுக்காக இதைச் செய்யலாம் என்று தன் மனதுக்குள் தீர்ப்பளித்தபடி நடந்தான். அவள் அவனுக்கு பின்புறம், ஹிந்தியில் ஃபோனில் பேசியபடி கைவீசி நடந்து வந்தாள்.

சென்ட்ரல் மெயின் வாயிலை கடந்து, 'ப்ரிபேட் ஆட்டோ ரிக்ஷா' புக்கிங் கவுண்டருக்கு நீளும் க்யூவில், குணா நிற்க, அவள் ஃபோனை அவசர அவசரமாக கட் செய்து... 'நோ... நோ... ஐ ஹேவ் எ கார்..' என்று கூறி அவள் வேறு திசையில் நடக்க...

'ஓ... ஓகே..' என்றபடி, குணா அவளைப் பின்தொடர்ந்தான்.

இருவரும் காரை சமீபித்தனர்... குணா, அவளது பெரிய சூட்கேஸை கார் டிக்கியில் வைத்தான்.

'ஓகே... பாய்...' என்று அவன் நாகரிகமாக கிளம்ப எத்தணிக்க... அவள், 'ரொம்ப தேங்க்ஸ்..' என்று கூற... நின்றான்

'உங்களுக்கு தமிழ் தெரியுமா..?' என்று குணா ஆச்சர்யமாக கேட்டான்.

'நான் தமிழ்தான்...'

'இல்ல, ஃபோன்ல ஹிந்தியில பேசிட்டிருந்தீங்களே..?'

'எனக்கு 7 லாங்குவேஜஸ் தெரியும்... ஆனா, அக்மார்க் தமிழ் பொண்ணு... மஞ்சரி' என்று கைநீட்டினாள்...

குணா மனதிற்குள் அவள் அழகுக்கு அந்த பெயர் கச்சிதமாக பொருந்தியிருப்பதை ரசித்தான். அவள் இன்னும் கைநீட்டியபடியே இருக்க, அவன் சட்டென்று அவளுடன் கைகுலுக்கினான். கையா அது... உலகத்திலுள்ள மிகவும் மெல்லிய பொருள் என்னவென்று கேட்டாள், அவள் கைதான் என்று பதலளிக்க குணாவிற்கு தோன்றியது...

'ஐ அம் குணா..' என்றான்.

அவள், 'நீங்க எந்த ஏரியா போறீங்க..?'

சொன்னான்...

'நானும் அந்த வழியாத்தான் போறேன்... வாங்க உங்களை ட்ராப் பண்ணிடுறேன் என்று கூற, அவன் சற்றே தயங்கி, பிறகு ஏறிக் கொண்டான்.

அவர்களது கார்... சிட்டியின் கலங்கலான டிராஃபிக்கில் கலந்து நீச்சலடித்துக் கொண்டிருந்தது...

'மறுபடியும் தேங்க்ஸ், இவ்ளோ பெரிய சூட்கேஸ்... எப்படிடா கார் வரைக்கும் தூக்கிட்டு போறதுன்னு இருந்தேன். நல்லவேளை நீங்க ஹெல்ப் பண்ணீங்க...'

'இதுலென்னங்க இருக்கு... ஜஸ்ட் ஒரு சின்ன ஹெல்ப்..' என்று குணா வழிந்தான்.

'ஆனா, நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நான் எதிர்ப்பார்த்தேன்' என்று கூற, அவன் அவளை குழப்பமாக எப்படி என்பது போல் பார்த்தான்.

'ஏன்னா, நீங்க என்னை சைட் அடிச்சிக்கிட்டே பின்னாடி நடந்து வந்துட்டிருந்தது எனக்கு தெரியும்..' என்று கேஷூவலாக சிரித்துக்கொண்டாள்.

குணா வெட்கப்பட்டான், 'இல்லன்னு பொய் சொல்ல விரும்பலை மஞ்சரி... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... அதான்..' என்று அவன் இழுக்க...

அவள் முகம் திடீரென்று சோகமாக மாறியது... ஒரு சின்ன மௌனத்துக்கு பிறகு 'ஆனா, என் அழகு எனக்கு அலுத்துப்போச்சு...' என்று விரக்தியாக சொல்ல...

'ஏன்..?' என்றான்

'உண்மைய சொல்லனுமா..?'

'உங்களுக்கு ஆட்சேபனையில்லன்னா சொல்லுங்க..?' என்று குணா கூற

ஒரு சின்ன இடைவெளி விட்டு, 'நான் ஒரு எஸ்கார்ட்...' என்றாள்

'அப்படின்னா..?'

'இந்த வார்த்தைக்கு லிட்டரல்லா அர்த்தம் வேறதான்... ஆனா, இங்க அதுக்கு அர்த்தம், ஹை ப்ரொஃபைல் ப்ராஸ்டிட்யூட்...' என்று கூற, குணாவுக்கு அதிர்ச்சி... இதை வண்டி ஓட்டியபடி அவள் கவனித்தாள். மீண்டும் வண்டியில் கவனம் செலுத்தியபடி தொடர்ந்தாள்...

'பெரிய பெரிய  பணக்காரங்களுக்கு, அவங்ககூட பார்ட்டிக்கு போகவோ... வெளியூருக்கு டூர் போகவோ... எங்களை மாதிரி ஆளுங்களை புக் பண்ணுவாங்க... அவங்களுக்கு, எல்லா வகையிலயும் கோ-ஆப்பரேட் பண்ணனும்...' என்று கூறிய மஞ்சரி ஒரு சின்ன இடைவெளிவிட்டு, குணாவைத்திரும்பி பார்த்தபடி 'எல்லா விதமாவும்...' என்றாள்...

குணாவின் முகத்தில் ஏக மாற்றங்கள்...

'என்ன குணா, ஏண்டா என்கூட கார்ல வந்தோமோன்னு இருக்கா..?'

'இல்லை... இல்லை... உங்களை மாதிரி ஒரு பொண்ணு இப்படியா..ன்னு கொஞ்சம் கலவரமாயிருக்கு' என்றான்.

'ம்ஹ்ம்...' என்று சிரித்தபடி அவள் தொடர்ந்தாள், 'என் ஃபேமிலில கூட யாருக்கும் இது தெரியாது...'

'எங்கிட்ட ஏன் இதை சொன்னீங்க..? சொல்லாமலேயிருந்திருக்கலாம்...'

'அப்பப்போ, சில பேர்கிட்டயாவது நெஜமா நடந்துக்கனும்னு தோணுது...' என்று கூற, அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிர்ப்பதை குணா கவனித்தான்.

'ஹலோ... ஏன் அழறீங்க... ப்ளீஸ்... காரை நான் ட்ரைவ் பண்ணவா..?'

'இல்ல வேண்டாம்... ஐ கென் மேனேஜ்...' என்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ஒரு 2 நிமிட மௌனம் அந்த காரை நிறைத்திருந்தது.

'என்ன பேச்சையே காணோம்..?' என்று மீண்டும் அவளே பேச்சை ஆரம்பித்தாள்...

'இல்லை மஞ்சரி... ஏன்னே தெரியல, கடந்த 4 நாளாவே, எனக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி, ஏகப்பட்ட குழப்பம்... ஏன்தான் வாழ்க்கை இப்படி இருக்கோன்னு கவலையாயிருக்கு..' என்று குணாவும் புலம்ப ஆரம்பித்தான்

'அப்படி என்ன நடந்துச்சு..'

'சொன்னா நம்பமாட்டீங்க... நான் 2 நாள் முன்னாடியே சாக வேண்டியவன்... இன்னிக்கி உங்களை மாதிரி ஒரு அழகான பொண்ணு கூட கார்ல போயிட்டிருக்கேன்..'

'என்ன சொல்றீங்க... 2 நாள் முன்னாடி சாக வேண்டியவரா..?' என்று அவள் வண்டி ஓட்டியபடி அதிர்ச்சி காட்டினாள்.

'ஆமாங்க... 2 நாள் முன்னாடி நான் ஒரு கோவிலுக்கு போயிருந்தேன்... அது ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள இருக்கு..' என்று குணா 2 நாளுக்கு முன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை தெள்ளத்தெளிவாக விவரிக்க ஆரம்பித்தான்.

கார் இப்போது கோட்டூர்புரம் பாலத்தில் ஏறிக்கொண்டிருக்க... குணா முழுவதுமாக கூறிமுடித்திருந்தான். அவன் கூறியதை கேட்ட மஞ்சரி, எதுவும் பேசாமல், வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க...

'என்னை நீங்க நம்பலையா..?' என்று கேட்டான்.

'நம்பாம இல்ல... இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லுறீங்கன்னு தோணுச்சு..'

'இல்லை... நீங்க உங்களைப் பத்தின விஷயத்தை, நம்பிக்கையோட என்கிட்ட சொன்னீங்க... அதான் நானும் சொன்னேன்...  நாம இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கலாமேன்னு சொன்னேன்...'

'ஆமாமா... நாம சந்திச்சிக்கிட்ட இந்த சில நிமிஷங்களாவது லைஃப்ல உண்மையா இருக்கலாம்... எப்படியும் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல, ரெண்டு பேரும் பிரியப் போறோமில்லியா..?' என்று அவள் விரக்தியாக கூற

குணா, சற்று மௌனமாக இருந்து, பிறகு கோபமாக 'ஏன் அப்படி சொல்றீங்க... நாம ஏன் பிரியணும்..?' என்று சத்தமாக கூறினான்.

மஞ்சரி சிரித்தபடி, 'ஏன் குணா, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, எனக்கொரு வாழ்க்கை கொடுக்கப்போறேன்னு டயலாக்கெல்லாம் பேசபோறீங்களா..?'

மீண்டும் ஒரு சின்ன இடைவெளி விட்டு, 'ஏன் கூடாதா..? எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மஞ்சரி... ஓபனாவே சொல்றேன்... உன்னை கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி..' என்று குணா தீர்க்கமாக சொல்ல, மஞ்சரி வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினாள். அவனை குழப்பமாக பார்த்தாள்...

'குணா... உங்களுக்கென்ன பைத்தியமா..?' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

'அதெல்லாமில்ல... இதைவிட தெளிவா நான் இருந்ததேயில்ல... எனக்கு மாசத்துக்கு 40 ஆயிரம் சம்பளம், சொந்த வீடிருக்கு.. பேங்க்ல எந்த லோனும் இல்ல...' என்று அவன் தனது விஷயங்களை அடுக்க ஆரம்பிக்க, மஞ்சரி அவனை நிறுத்தினாள்.

'நிறுத்துங்க குணா... யு ஆர் மேட்..' என்றாள்... மீண்டும் சிரித்துக் கொண்டாள்...

'ஏன் மஞ்சரி... உனக்கு என்னை பிடிக்கலியா..?' என்று கேட்க... அவள் சற்று யோசித்துவிட்டு...

'பிடிக்காம இல்ல குணா... நாம சந்திச்சு முழுசா ஒரு மணி நேரம்கூட ஆகலை... என் அழகு உங்களை பாதிக்குது... அவ்ளோதான்... அதுக்காக கல்யாணமெல்லாம் டூ மச்... நான்... நான் யாருன்னு தெரியுமில்ல... எப்படி என்கூட நீங்க உங்க லைஃபை ஷேர் பண்ணிப்பீங்க...'

'நான் பண்ணிப்பேன்... நான் ரெடி...' என்று கூற...

'This is impossible... We need to talk.. எங்கேயாவது போய் பேசலாமா..?' என்றாள்...

'நான் ரெடி... எவ்ளோ நேரம்னாலும் பரவாயில்ல..' என்றான்

அவனையே பார்த்திருந்துவிட்டு, 'குணா... நீங்க ரொம்ப எமோட் ஆகுறீங்க...'

'அதெல்லாம் இல்ல...' என்று குணா திடீரென்று அவள் கைக்களை அழுத்தமாக பற்றினான்... அவள் அதிர்ந்தபடி அவனைப் பார்க்க, 'மஞ்சரி, Listen to me... நான் ரொம்ப நிதானமாத்தான் இதை சொல்றேன்... பாத்ததும் உன்மேல பயங்கர க்ரஷ் வந்திடுச்சு... I don't want to miss you...' என்று அவளை கூர்ந்து நோக்கியபடி கூறினான். அவன் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு, அவனையே பார்த்தாள்.

'சரி, எங்கே போய் பேசலாம்... சொல்லுங்க' என்று கேட்டாள்.

'நீயே சொல்லு... உன் சாய்ஸ்தான்.. Somewhere Private?' என்றான்

மஞ்சரி சற்று நேரம் யோசித்துவிட்டு, 'Then lets go...' என்று  வண்டியை கிளப்பினாள்.

திருவான்மியூர் ரெஸிடென்ஷியல் ஏரியாவுக்குள் அவள் கார் நுழைந்தது...

'இங்க என் ஃப்ரெண்டு ஒருத்தியோட அண்ணன் ஆஃபீஸ் இருக்கு, அதுக்கு பின்னால ஒரு பீச் வியூ பார்க் இருக்கு... அங்கே போய் பேசலாம்.. ஈவ்னிங் வரைக்கும் எந்த ஒரு டிஸ்டர்பென்சும் இருக்காது..' என்று கூறியபடி, ஒரு கட்டடத்திற்கு முன் நிறுத்தினாள்.

காரிலிருந்து இறங்கிய மஞ்சரி, காருக்குள் இருக்கும் குணாவை குனிந்து பார்த்து

'இங்கேயே இருங்க, நான் என் ஃப்ரெண்டோட அண்ணன்கிட்ட, பேசிட்டு வந்துடுறேன்...' என்று கூறியபடி அந்த கட்டட்டத்திற்குள் நுழைந்தாள்.

2 நிமிடம்...

குணாவிற்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது...

அவசரப்பட்டு வாக்கு கொடுத்துவிட்டோமோ..?

முதலில் நன்றாக பழகுவோம், கல்யாணமெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்...

மஞ்சரி அழகான பெண்... வாக்கு கொடுத்ததில் தப்பில்லை... இருந்தாலும், கல்யாணம் செய்து கொள்வது சாத்தியமா... சாத்தியமே இல்லை. ஆனால், ஒரு அந்தரங்க தோழியாக பழகிக்கொ ள்ளலாம்...

அந்தரங்க தோழியென்றால்... வைப்பாட்டியா?

சே! என்ன எண்ணங்களிது..! மஞ்சரி போன்ற ஒரு அழகான பெண்-ஐ இப்படியா நினைப்பது..?


இப்படியெல்லாம், குணாவிற்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, மீண்டும் மஞ்சரி கார் கதவு வழியாக குனிந்து பார்த்தாள்

'என்ன குணா, அவசரப்பட்டு வாக்கு கொடுத்துட்டோமேன்னு குழம்பிட்டு இருக்கீங்களா..?' என்று சரியாக கேட்க, குணா ஆடிப்போனான்

'சே! என்ன மஞ்சரி, என்னை அப்படி நினைச்சிட்டே' என்று சமாளித்தான்

அவள் சிரித்தபடி, 'சாரி, சும்மதான் கேட்டேன்... வாங்க, நான் பேசிட்டேன். இந்த கேலரிக்கு பின்னாடி பீச் வியூ பார்க்ல உக்காந்து பேசுவோம்..' என்று அழைக்க, குணா காரிலிருந்து வெளியேறினான்.

இருவரும் கட்டடத்துக்குள் நுழைந்தனர்.

உள்ளே... மியூஸியம் போன்றதொரு கூடம். ஆங்காங்கே மிகவும் பழைய கலைப்பொருட்களும் ஓவியமும் நிறைந்திருந்தது. கூடத்தை கடந்து, பின்வழியாக படிக்கட்டில் இறங்கியதும், அங்கே ஒரு மிக அழகான பார்க் தெரிந்தது. சற்றே தூரத்தில் கண்ணுக்கு இனிமையாக கடல் தெரிந்தது.

'உட்காருங்க குணா..' என்று அவள் கை காட்ட, ஒரு பெஞ்சில் அமர்ந்தான்.

'நீயும் உக்காரு மஞ்சரி; என்று  தன்னருகிலேயே கைகாட்டினான்.

அவள் அவனுக்கு எதிரில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்தாள்..

'நடக்கிறதெல்லாம் கனவா இல்ல நினைவான்னு குழப்பமா இருக்கு...'  என்று குணா பேசிக்கொண்டிருக்க, அவனுக்கு பின்புறமாய் ஒரு குரல் கேட்டது

'கனவே இல்ல குணா... எல்லாம் நிஜம்தான்...' என்ற அந்த ஆண்குரல் குணாவுக்கு மிகவும் பரிச்சயமாக பட்டது... திரும்பிப் பார்த்தான்.

பின்வாசல் வழியாக இப்போது, தாஸும், அவன் அஸிஸ்ட்டென்ட் சந்தோஷும் அந்த பார்க்குக்குள் இறங்கிக் கொண்டிருந்தனர்.

'மை டியர் குணா.. வெல்கம் டு மை ஏன்ஷியன்ட் பார்க்...' என்று அவன் முன் வந்து நின்றான்.

மஞ்சரி எழுந்து சென்று சந்தோஷை நெருங்கி நின்று கொண்டாள்.

தாஸ், அவளிடம் திரும்பி 'தேங்க்ஸ் லிஷா, நீ இந்தாளை இங்க கூட்டிக்கிட்டு வந்து ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க...' என்று கூற

'எனிடைம்...' என்று தாஸிடம் கூறிவிட்டு, குணாவை ஏளனமாக பார்த்தாள்.

குணா குழப்பமாக மூன்று பேரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்...

(தொடரும்...)



Signature

Saturday, August 21, 2010

"கேணிவனம்" - பாகம் 05 - [தொடர்கதை]



 பாகம் - 05
 
தாஸ் இன்னமும் ரயிலுக்கு உள்ளே செல்லாமல், கதவருகிலேயே நின்றிருந்தான். அந்த காலை வேளையில், மிதமான ரயிலோசை அவனை பொறுத்தவரை, ஒரு தியானம் போல் இருந்தது.

நடந்ததை சொன்னால், யார் நம்புவார்கள்... எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்குள் எழும்பிய எண்ணங்களை அடக்கி, தன் மனதை ரயிலோசையில் லயிக்க விட்டான்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தான் என்று அறியாத வண்ணம் நேரம் கடந்துக் கொண்டிருதது... இதுவும் ஒரு வகையில் டைம் ட்ராவல்தான்...

நான் காலத்தை கடந்தவன்... ஒரு சின்ன திருத்தம்.... பின்னுக்கு கடந்தவன்... ஸ்தூல உருவத்தில், ஒரு காலத்திலிருந்து, இன்னொரு காலத்திற்கு பயணப்பட்டிருக்கிறோம்... இது சாத்தியமா..? அவன் வரையில் அது சாத்தியமாகியிருக்கிறது...
உலகில் எத்தனை பேர், எத்தனை அறிஞர்கள், எத்தனை விஞ்ஞானிகள் இதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிட்டாத ஒரு அறிய விஷயம், என்வரையில் கிட்டியிருக்கிறது... இதை நினைத்து பெருமைப்படுவதா, பயப்படுவதா...

விடிந்து விட்டது...

ஏதோ ஸ்டேஷன் வந்தது... வண்டி நின்றதும், அவனுக்கு குணாவின் ஞாபகம் வந்தது.

அடடே..! குணா என்னவாகியிருப்பான். அவன் கூறியதுபோல், அவனை தனியாக விட்டு வந்துவிட்டோமே..? என்று எண்ணியபடி குழப்பத்துடன் இனி இங்கு நிற்க வேண்டாம், இருக்கைக்கு செல்வோம் என்று அதிரடியாக உள்ளே நுழைந்தவன், திடீரென்று எதிரில் வந்தவன் மீது மோதிவிட்டான்.

'வோவ்... வாட்ச் அவுட்..' என்று எதிரில் வந்த அந்த நபரின் குரல், மிகவும் பரிச்சயமாகபட்டது. அது குணாவின் குரல்...

'ஹே... குணா... நீங்க எப்படி இங்க வந்தீங்க..?'

'காட்டுலருந்தா வருவாங்க... நான் என் சீட்லருந்துதான் வர்றேன்...! ஹலோ... வெயிட்... என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்..?' என்று குணா குழப்பம் காட்டினான்.

'என்ன குணா... என்னாச்சு உங்களுக்கு... என்னை ஞாபகம் இல்லையா..?' என்றவனை குணா ஏற இறங்க பார்த்தான்.

பிறகு பதிலளிக்க விரும்பாதவனாய், குணா அவனைக் கடந்து டாய்லெடுக்குள் நுழைந்தான்.

இது சரியல்ல... அடுத்த ஸ்டேஷனிலேயே இறங்கி, ஏதாவது ஒரு வண்டியைப் பிடித்து, உடனே சென்னைக்கு திரும்ப வேண்டும்... இனிதான் நிறைய வேலையிருக்கிறது... என்று நினைத்தான்.

-------------------------

அடுத்த நாள்...

தாஸ் சென்னைக்கு அவசர அவசரமாக திரும்பியிருந்தான்...

தாஸ், சென்னை திருவான்மியூரில், "ANCIENT PARK" என்று ஒரு ப்ரைவேட் லைப்ரரி மற்றும் ஆர்டிஃபேக்ட் கலெக்ஷன்ஸ் கேலரி நடத்திவந்தான். அந்த கட்டிடத்தை, அவனது ரசனைக்கேற்ப மிகவும், பழைய சின்னங்களால் அலங்கரிக்கபட்ட ஒரு காஸ்ட்லி எலைட் மியூஸியம் போல் வடிவமைத்திருந்தான். தமிழ் மற்றும் இதர மொழிகளில், மிகவும் அரிய புத்தகங்கள், பெரும்பாலும் அவன் சேகரித்து வைத்திருக்கும் பழமையான ஓவியங்கள், கலைப்பொருட்கள் என்று அந்த லைப்ரரி படிப்பதற்கு மட்டுமில்லாமல் பார்ப்பதற்கும் மிகவும் அழகாய் இருக்கும்.

அந்த லைப்ரரியின் மாடியறையில் தனது ஆபீஸ் ரூமை அமைத்திருந்தான். அந்த அறையிலிருக்கும் பெரிய கண்ணாடியின்மூலம் பார்த்தால், அவனது லைப்ரரி மற்றும் கேலரி மொத்தமும் தெரியும். அந்த அறையின் மறுபக்கம் ஜன்னலில் பார்த்தால், வெளிப்புறம் கடல் தெரியும்... அங்கு அமர்ந்தபடிதான் எப்போதும், கதை எழுதுவது அவன் வழக்கம்... ஏசியை அணைத்துவிட்டு, ஜன்னலைத்திறந்தால், கடல்காற்று வாங்க முடியும்... இன்று அவன் கதை எழுதும் மூடிலும் இல்லை...கடல்காற்று வாங்கும் நிலையிலும் இல்லை...

மிகவும் குழப்பமாக இருந்தான்.

மேஜைமேல் இருக்கும் நோட்பேடில், பென்ஸிலைக் கொண்டு தனது மொபைலைப் பார்த்து, காட்டுக்கோவிலில் அவன் படம் பிடித்த, அந்த பாடலை எழுதிக் கொண்டிருந்தான்...

துஆரமது ந்தூரமா ய்ங்காலமதுங்
துஆரமதுந் - துவாரமதும்
தூரமாய் - தூரமாய்
காலமதுங் - காலமதும்

காணா மற்போகுவதுக்கொரு
காணாமல் போகுவதுக்கு ஒரு

கேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு
கேணி அது  உண்டென உரைப்பதை கேளு

இதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு
இதன் உள் அட்ங்குவானுக்கு அற்றுப் போகும் கோளு

துவாரம் அது தூரமாய் காலம் அதுவும்
காணாமல் போவதற்கு ஒரு
கேணி அது உண்டேன உரைப்பதைக் கேளு
இதனுள் அடங்குவானுக்கு அற்றுப் போகும் கோளு


என்று எழுதிமுடித்தான்.

அவன் மொபைல் ஒலித்தது...

தாஸ் பழைய பாடல் விரும்பி என்பதால், அவனது மொபைலில் பழைய பாடல்கள் நிறையே ஏற்றியிருந்தான். ஒவ்வொரு முறையும், தனது மொபைல் ரிங் ஆகும்போது, ரேண்டமாக பழைய பாடல்கள் வருவது போல் ரிங்டோன் வைத்திருந்தான்.

இம்முறை வந்த பாடல்...

கண்ணெதிரே தோன்றினாள்...
கனிமுகத்தை காட்டினாள்...
நேர்வழியில் மாற்றினாள்...
நேற்றுவரை ஏமாற்றினாள்...


ஃபோனை ஆன் செய்தான்.

'பாஸ்... ப்ரிண்ட் அவுட் ரெடி... வந்துக்கிட்டே இருக்கேன்... கொஞ்சம் ட்ராஃபிக்கா இருக்கு... வந்துடுறேன்..', என்று மறுமுனையில் சந்தோஷ்... தாஸின் அஸிஸ்டென்ட்...

'என்ன சந்தோஷ், பர்மிஷன் கேக்குறியா..?'

'அப்படியெல்லாம் இல்ல பாஸ்..'

'முதல்ல என்னை பாஸ்னு கூப்பிடாதே... ஒண்ணு, தாஸ்-னு கூப்பிடு, இல்லை என் முழுப்பேரு தசரதன்-னாவது பேரைச் சொல்லி கூப்பிடு... பாஸ் சவுண்ட்ஸ் ஆட் சந்தோஷ்..'

'சாரி.. பாஸ்... எனக்கு வர்ற மாதிரி நான் கூப்பிடுறேன்...'

'லிஷா எங்கே..?'

'அவ இன்னும் ஆஃபீஸ் வரலையா..?'

'உங்கூட இல்லியா..?'

'இல்லியே..?'

'நீயெல்லாம் ஒரு லவ்வராடா... ஒரே இடத்துலதானே ரெண்டு பேரும் வர்க் பண்றீங்க..? ரெண்டு பேரும் ஒண்ணா வர்றதுக்கு என்ன..? லவ் பண்ற பொண்ணை ஆஃபீஸுக்கு பைக்ல ஏத்திக்கிட்டு வராத நீயெல்லாம் ஒரு லவ்வரா..?'

'பாஸ், நீங்க யாரையாவது லவ் பண்ணிப் பாருங்க... அப்ப தெரியும் கஷ்டம்... அவ ரெடியாகவே ரொம்ப நேரமாகும்பாஸ், அவ ஹாஸ்டல்ல போய் தேவுடு காக்க சொல்றீங்களா..? அதெல்லாம் நம்மால முடியாது...'

'சரி.. சரி.. வா..'

'ஓகே பாஸ்..'

தாஸ் தனது மொபைலை கட் செய்தான். டிஸ்ப்ளேவில், வால்பேப்பராக, அவன் அந்த கோவிலில் கண்டெடுத்த ஓவியத்தை வைத்திருந்தான். அந்த ஓவியத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே என்னென்னமோ எண்ணங்கள் வந்து போயின... கிணற்றில் கதறியபடி இறங்குவதுபோல், தீக்குச்சியை வைத்துக் கொண்டு கருவறைக்குள் நுழைவது போல்...

அவன் மொபைல் மீண்டும் ஒலித்து அவன் கவனத்தை கலைத்தது...

ரிங்டோன்...
'ஓ ரசிக்கும் சீமானே' பாடலின் தொடக்கத்தில் வரும் ஹம்மிங் ரிங்டோனாக ஒலித்தது...

டிஸ்ப்ளேவில் 'லிஷா காலிங்...' என்றிருந்தது...

'ஹாய் லிஷா..?'

'ஹலோ மிஸ்டர். டைம் ட்ராவலர்..' என்று மறுமுனையில், இனிமையான குரலில் தாஸின் இன்னொரு அஸிஸ்டென்ட்-ம், சந்தோஷின் காதலியுமான லிஷா பேசினாள்.

'என்ன தாஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தியரிக்கு, ஒரு வாழும் உதாரணமா வந்திருக்கீங்க போலிருக்கு..'

'ஹே கமான், நீ ஓட்றியா இல்லை பாராட்டுறியா..?'

'சாரி, நீங்க நேத்து ஃபோன்ல சொன்னது உண்மையா பொய்யான்னு எனக்கு சொல்ல தெரியல... ஆனா, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது... அப்புறம் ஒரு சின்ன விஷயம்... நான் இன்னிக்கி ஆஃபீஸ் வரமுடியாது..?'

'ஏன்..?'

'உங்கவிஷயமாத்தான்... எனக்கொரு க்ளூ கிடைச்சிருக்கு... அது கன்ஃபர்ம் பண்ண வேண்டியிருக்கு... என்னன்னு வந்து சொல்றேனே..?'

'ஓகே..'

'ஆமா..? எங்கே என் ஃப்யூச்சர் ஹஸ்பெண்ட்.. சாண்டி(Sandy)... இன்னுமா ஆஃபீஸ்க்கு வரலே..?'

'டிராஃபிக்ல மாட்டிக்கிட்டானாம்... வந்துக்கிட்டே இருக்கான்.'

'ஓகே..! நீங்க அந்த கோவில்ல கிணத்துக்குள்ள பாத்ததா சொன்ன பாட்டை எனக்கு இமெயில் பண்ணிடுறீங்களா..?'

'இல்ல வேணாம் லிஷா... நானே அதை ஆல்மோஸ்ட் டீகோட் பண்ணிட்டேன்.'

'எனிதிங் இன்ட்ரஸ்டிங்..?'

'ம்ம்ம்... அது 'டைம் டிராவலைப்' பத்தி அந்தக் காலத்துல சொன்ன மாதிரி எழுதியிருக்கு..'

'அப்போன்னா... நீங்க டீகோட் பண்ண அந்த பாட்டை எனக்கு இமெயில்ல அனுப்பி வையுங்க..'

'ஓகே... அனுப்பிடுறேன்.' என்று பேசிக்கொண்டிருக்கும்போதே சந்தோஷ் உள்ளே நுழைந்தான்.

'சாரி... சாரி...' என்று ஜெபித்தபடி வந்தான்.

சந்தோஷ், ஜீன்ஸ்-ம் வெள்ளை டி-ஷர்ட்டும் அணிந்து ஆள் மிகவும் ஸ்லிம்-ஆகவும் ஸ்மார்ட்டாகவும் இருந்தான்.

'ஹலோ பாஸ்... யார் ஃபோன்ல..?'

'லிஷாதான்..' என்று கூறிய தாஸ், ஃபோனை கையால் மறைத்தபடி மெதுவாக சந்தோஷிடம்... 'நீ ஹாஸ்டல்ல வெயிட் பண்ண முடியாதுன்னு சலிச்சிக்கிட்டதை அவகிட்ட சொல்லவா..?'

'அய்யோ... வேண்டாம் பாஸ்... அப்புறம் அவளை சமாதானப்படுத்த, சத்யம் தியேட்டருக்கோ, இல்ல பி.வி.ஆருக்கோ கூட்டிட்டு போய், இண்டர்வெல்ல டோனட், சாண்ட்விட்ச், ஐஸ்க்ரீம்னு செலவு பண்ணனும்... ரொம்ப காஸ்ட்லி, அதுக்கு பதிலா, நான் உங்க கால்ல வேணும்னாலும் விழுந்துடுறேன்.. நீங்க தயவு செஞ்சு கால்-ஐ கட் பண்ணுங்க...'

'ஹாஹா...' என்று தாஸ் சிரித்துக் கொண்டே மொபைலில் லிஷாவிடம்.. 'ஓகே லிஷா... நான் உனக்கு அப்புறம் ஃபோன் பண்றேன்.. சந்தோஷ் வந்திருக்கான் பேசுறியா..?'

'அவன்கிட்ட என்ன வெட்டிப்பேச்சு... வச்சிடுறேன்..' என்று கூறி ஃபோனை கட் செய்துவிட்டாள்.

'என்ன பாஸ் சொல்றா...?'

'உன் மேல ரொம்ப அன்பா இருக்கா..' என்று தாஸ் சிரிக்க...

'எல்லாம் நடிப்பு... வேலைன்னு வந்துட்டா அவதான் எனக்கு காம்படிட்டர்... இப்போ உங்க டைம் டிராவல் விஷயத்துல, நான் அதிகமா ஹெல்ப் பண்றேனா... இல்லை அவ அதிகமா ஹெல்ப் பண்றாளான்னு ஒரு காம்படிஷன் ஓடிக்கிட்டிருக்கு...'

'நல்லதுதானே... சரி... விஷயத்துக்கு வருவோம்... இப்ப சொல்லு... நான் ஃபோன்ல சொன்னதைப் பத்தி நீ என்ன நினைக்கிற..' என்று தாஸ் ஆவலுடன் சந்தோஷைப் பார்த்தான்.

சந்தோஷ் கொஞ்சம் தயங்கியவனாய்... 'பாஸ்... நீங்க சொன்னதை வச்சி பாக்கும்போது, நீங்க டைம் டிராவல் பண்ணியிருக்கீங்க..'

'ஐ நோ தட்..'

'இதை டைஜஸ்ட் பண்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு... நீங்க உங்க ஆயுள்ல கிட்டதட்ட 30 மணி நேரம் எக்ஸ்ட்ரா வாழ்ந்திருக்கீங்க..'

'நல்ல வர்ணனை'  என்று இடையில் தாஸ் பாராட்டினான்.

'தேங்க்ஸ்... ஆனா பாஸ், உங்களுக்கு பிஸிகலி எதுவுமே ஆகலை... இது உண்மையா இருந்தா..?' என்று அவன் இன்னும் சந்தேகத்துடனே பேச...

'அப்ப இன்னும் நீ என்னை நம்பலியா..?' என்று தாஸ் அவனை நிறுத்தினான்.

'நோ நோ.. நான் அப்படி சொல்லலை பாஸ்... நீங்க கொடுத்திருக்கிற ஓவியமும் பாடலும் ப்ரூஃப் இருக்கு... நாம ஏன் கவர்மெண்ட்கிட்ட இதைப் போய் சொல்லக்கூடாது..'

'நம்பமாட்டாங்க சந்தோஷ்..'

'அப்ப என்ன பண்றது..?'

'நாம இன்னும் டீடெய்ல்ஸ்-ஓட போகணும்...'

'எந்த மாதிரி டீடெய்ல்ஸ்..'

'எனக்கே தெரியல... அந்த ப்ரிண்ட் அவுட்-ஐ கொடு..?' என்று கேட்க, சந்தோஷ், தான் கொண்டு வந்திருந்த ப்ரிண்ட் அவுட்டை எடுத்து தாஸிடம் கொடுத்தான்.

அதை மேஜைமேல் வைத்துவிட்டு, தாஸ் எழுந்து அதை பார்க்க, சந்தோஷும்கூட எழுந்து அந்த டேபிளில் எதிரெதிரே நின்றபடி அந்த ஓவிய ப்ரிண்ட் அவுட்டை உற்றுப்பார்த்தான்

அப்போது, தாஸின் மொபைல் ஃபோன் ஒலித்தது...

ரிங்டோனில் பழைய பாடல்...

பொன்னெழில் பூத்தது புதுவானில்...
வெண்பனி தூவும் நிலவே நில்...

புது நம்பர்... ஆன் செய்தான்...

'ஹலோ...'

'மிஸ்டர். தாஸ்...?'

'யெஸ்..'

'ரைட்டர் தாஸ்தானே..?'

'ஆமாங்க... நீங்க..?'

'யோவ் தாஸ்... என்னைக் காட்டுல தனியா விட்டுட்டு வந்துட்டியே... இது உனக்கே நல்லாருக்கா..?'

'யாரு..? கு...குணாவா..?'

'ஆமா... குணாதான்... இன்னும் உயிரோடதான் இருக்கேன்...'

(தொடரும்...)




Signature

Wednesday, August 11, 2010

"கேணிவனம்" - பாகம் 04 - [தொடர்கதை]


கிணற்றுக்குள் இருந்த அந்த பாடலையே பார்த்துக் கொண்டிருந்த தாஸ், சற்று நேரத்தில் இயல்புக்கு திரும்பியவனாய், தனது மொபைல் ஃபோன் வெளிச்சத்தில் அந்த பாடலை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான்.

மொபைலில் பேட்டரி இன்னும் இரண்டு புள்ளிகளே இருந்ததால், கருவறைக்கு வெளியே வந்து மொபைல் லைட்டை ஆஃப் செய்தான்.

குணா, தனது புலம்பலை நிறுத்திவிட்டு, நெருப்புக்கு அருகில் அமர்ந்திருந்தான். மூட்டிய தீ எப்போதும் அணைந்துவிடும் என்ற நிலையில் அரைகுறையாக எரிந்துக் கொண்டிருந்ததை அவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்ன தாஸ், வேலையெல்லாம் முடிஞ்சுதா..? இப்பவாவது வந்து தூங்குங்க...' என்று கூற, தாஸ் வந்து அவனுக்கருகில் அமர்ந்தான். தனது மொபைலில் எடுத்த ஃபோட்டோவை காண்பித்தான்.

'என்னதிது..?'

'கிணத்துக்குள்ள எழுதியிருந்தது...'

குணா, அதை ஆச்சர்யமாக பார்த்தான்.

'ஒண்ணும் புரியல... ஆனா தமிழ்னு மட்டும் தெரியுது... எப்படி கர்நாடகா காட்டுக்குள்ள தமிழ்ல எழுதியிருக்கு..?'

'ஏன், திருபபதி கோவில் சுவத்துலக்கூடதான் தமிழ்ல எழுதியிருக்கு... இந்த மாநிலம், வட்டம், மாவட்டம் இதெல்லாம் நாம ரொம்ப சமீபத்துல கோடு பிரிச்சிக்கிட்டதுதானே... அப்போல்லாம் அப்படியில்லியே.. எந்த ராஜா வந்து, சண்டைபோட்டு ஜெயிக்கிறானோ.. அந்த ஊரு... ராஜாவோட ஊரு... அவன் என்ன மொழி பேசுறானோ... அந்த மொழிதான் அந்த ஊரோட மொழி... அடுத்து இன்னொருத்தன் வந்தா அவன் கைக்கு மொத்தமும் மாறிடும்.'

'அதுசரி, இதுல என்ன எழுதியிருக்குன்னு உங்களுக்கு தெரியுதா..?'

'ஏதோ சித்தர் பாடல் மாதிரி இருக்கு.. அவங்கதான் தெளிவா புரியாதமாதிரி எழுதுவாங்க... இதுவும் அப்படித்தான் இருக்கு... என்னன்னு தெளிவா தெரியல...' கொஞ்சம் நிதானத்தோட பாக்கணும்..!' என்று மீண்டும் அந்த பாடலை குணாவிடமிருந்து ஃபோனை வாங்கிப் பார்த்தான்.

துஆரமது ந்தூரமா ய்ங்காலமதுங்
காணா மற்போகுவதுக்கொரு
கேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு
இதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு


முடிந்தவரை பாட்டை புரிந்துக் கொள்ள முயற்சித்தான்.

குணா, தாஸ் சிரம்ப்படுவதை பார்த்து, 'சரி விடுங்க... தாஸ்... நீங்க நிதானத்துல இல்ல..!'

'இல்ல குணா... ட்ரெயினை மிஸ் பண்ண்து, காட்டுக்குள்ள வந்தது, இந்த கோவிலை பாத்ததுன்னு, நடந்ததையெல்லாம் பாக்கும்போது... நாம இங்க வந்து எதேச்சையா மாட்டலன்னு தோணுது, இங்க என்னமோ இருக்கு... அதை தெரிஞ்சுக்கிறதுதான் சாமர்த்தியம்.. '

குணா சற்றே பயம் கலந்த புன்னகையுடன், 'நீங்கதான் கிணத்துக்கடியில புதையல் இருக்கும்னு பில்டப் கொடுத்தீங்க..?  அதென்னடான்னா,  அநியாயத்துக்கு பள்ளமா இருக்கு... உள்ள என்ன இருக்குன்னு இறங்கியா பாக்க முடியும்..?' என்று கூற... தாஸ் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு, குணாவை ஏறிட்டு பார்த்து புன்னகைத்தான்.

'நல்ல ஐடியா கொடுத்தீங்க..'

'ஹலோ... என்ன விளையாடுறீங்களா..? நான் சும்மா எதேச்சையா சொன்னேன்... எத்தனை நாளா அந்த கிணறு மூடியிருந்துதோ தெரியல.. உள்ள பாம்பு தேள்கூட வாழ மறந்துருக்கு... அங்க போய் இறங்குறேன்னு சொல்றீங்க..? இப்பதான் தெளிவா புரியுது..?'

'என்னன்னு..'

'நீங்க நிதானத்துல இல்லன்னு..?'

'இல்ல குணா, கோவிச்சுக்காதீங்க... இறங்கிப் பாக்காம எதுவும் புரியாது...' என்று அவன் எழுந்தேவிட்டான்.

குணா, அவனைத் தொடர்ந்து வேண்டாமென்று சொல்வது போல் கெஞ்சிக்கொண்டே பின்தொடர்ந்து வந்தான்.

'தாஸ், சொன்னா கேளுங்க.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா..'

'என்னைப் பத்தி கவலைப்படாதீங்க..'

'இல்லங்க, உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, நான் தனியாளாயிடுவேன். எனக்கு சத்தியமா இந்த காட்டை விட்டு தனியாளா உயிரோட வெளியே போக முடியும்னு தோணலை, நீங்க கூட இருந்தீங்கன்னா..' என்று வெளிப்படையாக சுயநலமாக பேச, தாஸ் நின்று... திரும்பி அவனைப் பார்த்தான்.

'குணா, மே பி இந்த கிணறுதான் நாம வெளியே போறதுக்கான வழியோ என்னமோ..?' என்று கூறிவிட்டு மீண்டும் கருவறையை நோக்கி நடந்தான். குணா, தாஸ் சொன்னதைக் கேட்டு அப்படியே நின்றிருந்தான்.

'எப்படி சொல்றீங்க..?' என்று குணா நின்ற நிலையில் கேட்க,

'ஒரு வேளை இது சுரங்க பாதையா இருந்து, ஏதாவது ஒரு ஊரோட கோவில்ல வெளியே வந்தாலும் வரலாம்' என்று பதிலளித்து கொண்டே கருவறைக்குள் நுழைந்தான்.

குணா அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'இன்னும் மொபைல்ல பேட்டரி இரண்டு புள்ளிதான் இருக்கு...' என்று வருத்தப்பட்டுக்கொண்டே, பழை நிலையில் மொபைல் லைட்டை ஆன் செய்து, தனது கழுத்து காலரில் ஹூக்கை மாட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்க காலெடுத்து வைத்தான்.

குணா, அருகில் ஓடிவந்து...

'தாஸ், இதை நீங்க கண்டிப்பா செஞ்சாகணுமா..?'

'ஏன் செய்யக்கூடாது..?'

'ஒரு வேளை உள்ள ஒண்ணுமே இல்லன்னா..?'

தாஸ் சற்று யோசித்து விட்டு தீர்மானமாக, 'குணா... நான் ஒரு ரைட்டர்... உள்ள ஒண்ணுமே இல்லன்னா கூட, இந்த சம்பவத்தை அடிப்படையா வச்சி, குறைஞ்சபட்சம் ஒரு கதையாவது எழுதுவேன்.' என்று கூறி கண்சிமிட்டிவிட்டு  உள்ளே இறங்கினான். குணா அவனை தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க...

உள்ளே கால் வைக்க தோதாக ஒரு கல்லை தேடிப்பிடித்து தாஸ், உள்ளே பத்திரமாக இறங்க ஆரம்பித்தான்.

குணா அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம்... கொஞ்சமாக... தாஸ் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, தாஸ்-ன் உருவம் இருட்டில் மறைந்து அவனது மொபைல் டார்ச் மட்டும் புள்ளி வெளிச்சமாக குணாவிற்கு காட்சியளித்துக் கொண்டிருந்தது.

கிணற்றுக்கு உள்ளே...

தாஸ், இறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தான். அவன் நினைத்ததை விட சீக்கிரமே அவன் தளர்ந்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான். நீண்ட நேரமாக உணவு  எதுவும் உட்கொள்ளாததினால் கை கால் தசைகள் சக்தி இல்லாமல், பயங்கர வலி கொடுத்துக் கொண்டிருந்தன...

சீக்கிரமாக தரை தட்டுப்பட்டால் நல்லது என்ற நிலையில் இருந்தான். மனதில் என்னென்னமோ நினைவுகள் வந்து போய்க்கொண்டிருந்தது.

ஒருவேளை குணா கூறியதை கேட்டிருக்க வேண்டுமோ... இறங்கியிருக்கக் கூடாதோ... சற்று நேரத்திற்குமுன் ஒரு கல்லை இந்த கிணற்றுக்குள் தூக்கியெறிந்தபோது, அது தரைதொட்டு சத்தம் எழுப்பும் என்று நினைக்க, சத்தம் வராமல் போனது நினைவுக்கு வந்தது. அய்யோ, ஒரு வேளை தப்பு செய்கிறோமோ.. என்று வெவ்வேறு எண்ணங்கள் அவனை பயமுறுத்திக் கொண்டிருந்தன.

'தாஸ்..', மேலிருந்து, சத்தமாக குணாவின் குரல் எஃகோ எஃபெக்டில் கேட்டது.

ஆனால், திருப்பி பதிலளிக்க முடியாத நிலையில் தாஸ் இறங்கிக்கொண்டிருந்தான். பதிலுக்கு குரல் எழுப்பினால், தன் உடம்பில் சக்தி இன்னும்  குறைந்து கைகளில் பிடி தளர்ந்துவிடுமோ என்று அஞ்சினான்.

'தாஸ்..' என்று மீண்டும் குணாவின் குரல் கேட்டது.

இன்னும்... இன்னும்... உள்ளே இறங்கிக் கொண்டிருந்தான். பிடி தளர ஆரம்பித்தது. கைகள் நடுக்கம் காட்டியது. கால் தசைகளும் ஓய்வு வேண்டும் என்று கெஞ்சியது... சற்று நேரம் அப்படியே நின்றான்.

முழுமையான ஓய்வு இல்லையென்றாலும்... தசைகள் கொஞ்சம் வலுபெற்றது.

'தாஆஆஆஸ்...' மீண்டும் குணாவின் குரல்...

இம்முறை அந்த குரல், அவனுக்கு எச்சரிக்கை மணியாக கேட்டது. 'வந்துடு தாஸ் இல்லன்னா செத்துடுவே' என்பது போல் அது மாயை காட்டியது...

தாஸ் மனதில் பயம் வந்துவிட்ட நிலையில் அவன் இன்னமும் உள்ளே இறங்க விரும்பவில்லை... இது ஜஸ்ட் ஒரு பாழடைந்த கிணறு அவ்வளவுதான்... இதில் ஏன் இறங்கி பார்ப்பானேன்... என்று மனது ஏடாகூடமாக குழம்பியதை அவன் விரும்பவில்லை...

சரி... இறங்கியது போதும்... திரும்பி ஏறிவிடுவோம் என்று முடிவெடுத்தான்.

காலை உயர்த்தி மேலே வைத்து, இரண்டு கைகளிலும் வலுவைப் போட்டு மூச்சைப்பிடித்துக் கொண்டு எழும்ப... ஹூம்ம்ம்ம்ம் என்று முக்கிக்கொண்டு எழும்பினான்... கைகள் ஏற்கனவே வலுவிழந்திருந்த நிலையில் பிடியை தானே விடுவித்துக் கொண்டது...

ஏ...ஏஏ...ஏஏஏய்ய்ய்ய்... என்று கதறிக்கொண்டு சரிந்தான்... அ..ஆ.ஆஆஆஆஆஆஆஆஆஆ என்று சத்தம் அந்த கிணற்றுக்குள் எஃகோ எஃபெக்டில் கேட்டது...

தரையை முட்டாமல் தான் நெடுநேரம் ஒரு அதள பாதாள குழிக்குள் விழுந்துக் கொண்டிருப்பதை உணர்ந்து மனம் படபடக்க ஆரம்பித்தது...

ஐயோ... என்னென்னமோ நினைத்து இந்த கிணற்றில் இறங்கியது வீணானதே... என்று எண்ணியபடி விழுந்துக் கொண்டிருந்தான்.

ஒரு சமயத்துக்குமேல், என்ன இது? இன்னும் விழுந்துக் கொண்டே இருக்கிறோம் என்று தோன்றியது... உடம்பு ஏற்கனவே வலித்துக் கொண்டிருத்தால், காற்றில் ஒரே சீரில் பயணித்துக் கொண்டிருந்தது ஒரு சமயத்தில் சுகமாக மாறியது... வலியும், சோர்வும் சேர்ந்து அவனுக்கு தூக்கம் வருவது போல் தோன்றியது...

அது தூக்கமா! இல்லை மயக்கமா! என்று மனம் ஆராயும் நிலையில் இல்லாததால் அப்படியே தூங்கிப் போனான்...

அமைதி....

.
.
.
.
.
.
.
.
.

சிறிது நேரத்தில் எங்கோ விழுந்ததுபோல் உணர்ந்து பயந்து கண்விழித்து சட்டென்று எழுந்தான்... தலையில் டங் என்று ஏதோ முட்டியது...

பின்னனியில் இரயில் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது...

அந்த ரயிலுக்குள், சைடு அப்பர் பர்த்-ல் மேலே தான் படுத்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான்.

பலரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள்...

இது எப்படி ரயிலுக்குள் வந்தோம் என்று குழம்பிக்கொண்டிருந்தான்.


குழப்பம்... எப்படி..? எப்படி..? என்று இதயத்துடிப்பு கேள்வி கேட்டபடி துடித்துக் கொண்டிருந்தது.

கனவா..? ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டான். ஆனால், உடம்பில் இன்னும் அந்த சோர்வும், தசைகளில் அந்த வலியும் இருக்கிறதே... என்று நினைத்துக் கொண்டான்.

சிலமுறை கனவில் அப்படித்தான்... விழுந்ததுபோல் கனவு வந்தால், எழுந்து பார்த்தால் அது உண்மையிலேயே மனதளவில் ஸிமுலேட் ஆகியிருக்கும்...

உடம்பு அந்த அதிர்ச்சிகளை உணர்ந்ததுபோலவே இருக்கும்... அப்படியென்றால் இது கனவுதான்... ஹஹ்ஹஹ்ஹ.... என்ன ஒரு கனவு... என்று நினைத்தபடி பர்த்-லிருந்து கீழே இறங்கினான்...

ரயிலில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்...

நேரே நடந்து கதவருகிலிருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவினான். கொஞ்சம்போல் தெம்பாக் இருந்தது. கண்ணாடியில் முகம் பார்த்தான்.

முகத்தில் சிறு சிறு கீறல்கள் இருந்தது. இது எப்படி கனவில் கீறல்கள் கூட விழுமா... உடைகளை பார்த்தான். அதிலும் ஆங்காங்கே கீறல்கள்... மேலும் அவன் கழுத்துக் காலரில் மொபைல் மாட்டப்பட்டு இருந்தது. ஆனால் அணைந்திருந்தது.

அப்படியென்றால்... அது கனவில்லையா..? என்று குழம்பியவன் வயிற்றில் மீண்டும் பயம் தொற்ற ஆரம்பித்தது.

தனது பர்ஸை எடுத்துப் பார்த்தான்.

அதில் விசிட்டிங் கார்டுகள் இன்னமும் ஈரப்பதத்துடன் இருந்தது. முன்னாள் மாலை காட்டில் நனைந்ததின் அடையாளமது... வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் குறைவாக இருந்தது... தீ மூட்ட அந்த பணத்தை உபயகோகித்தது ஞாபகம் வந்தது. சந்தேகமே இல்லை... அது கனவே இல்லை... காடும், காட்டுக் கோவிலும், அந்த கிணறும் நிஜம்..

ஐயோ... அப்படியென்றால் நான் எப்படி இங்கே வந்தேன்...? என்று குழம்பியிருந்தபோது, ரயில் ஒரு ஸ்டேஷனில் வந்து நின்றது...

குழப்பத்துடன் இறங்கினான். பயங்கரமாக பசியெடுத்தது... அருகே இருக்கும் ஒரு ரயில்வே கடையில் அவசர அவசரமாக ஒரு காஃபி வாங்கி குடித்தான். பசிக்கு மிகவும் தெம்பாக இருந்தது. இன்னொரு காஃபி வாங்கினான்.... கடைக்காரன் அவனை ஆச்சர்யமாக பார்த்தான். குடித்தபடி அண்ணாந்து எதையோ பார்க்க... அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது...

அங்கிருக்கும் சிகப்பு கலர் LED டிஜிட்டல் கடிகாரத்தில் 5.30 மணி என்றும் 23ஆம் தேதி என்றும் காட்டிக்கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ட்ரெய்ன் ஹார்ன் எழுப்பி மீண்டும் கிளம்பவே... ஓடிச்சென்று அதில் ஏறிக்கொண்டான். வாசலில் நின்றபடி, மீண்டும் அந்த கடிகாரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போதுதான் விஷயம் புரிந்தது...

அந்த கிணற்றுத் துவாரத்திற்குள் விழுந்ததில்... அவன், கிட்டத்தட்ட 30 மணி நேரம் பின்னுக்கு கடந்து வந்திருப்பதை உணர்ந்தான்.

(தொடரும்...)



Signature

Monday, August 09, 2010

"கேணிவனம்" - பாகம் 03 - [தொடர்கதை]



 பாகம் - 03

விட்டத்தில் தாஸ் கண்ட ஓவியம்... அவனது தூக்கத்தை கலைத்து எழுந்து உட்கார வைத்தது.

அந்த ஓவியத்தில் நடுவே ஒரு பெரிய கருப்பு வட்டமும், அந்த வட்டத்திற்கு வெளியே பல மனிதர்கள், பாதி உடம்பு வட்டத்துக்குள்ளும், மீதி உடம்பு வெளியில் இருக்கும்படியும் விழுந்து வணங்குவது போல் வரையப்பட்டிருந்தது.

அந்த வட்டத்திற்கு அலங்காரங்கள் அமர்க்களமாக செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு தாஸ், அந்த ஓவியத்தை பார்க்க முனைந்தபோது, வெளிச்சம் போதாததினால்.... தாஸ் எழுந்து நின்றான். உற்றுப் பார்த்தான்.  தரையில் மூட்டியிருக்கும் தீயின் வெளிச்சம் போதவில்லை... தீயிலிருந்து, எரிந்துக் கொண்டிருக்கும் ஒரு தீக்குச்சியை எடுத்து மேலே பிடித்தான். அதில் அந்த ஓவியம் நன்றாக புலப்பட்டது.

கூடவே குணாவின் குறட்டை சத்தம், மிகவும் சத்தமாக பின்னனி இசைத்துக் கொண்டிருந்தது.

ஓவியத்தில், அந்த கருப்பு வட்டத்திற்கு நடுவே ஒரு கடவுளின் உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவம் கருவறைக்குள் இருக்கும் உடைந்த சிலையுடன் ஒத்துப்போனதை தாஸ் கவனித்தான். கருப்பு வட்டத்தின் வெளியே சற்று தொலைவில், அந்த கடவுளை வணங்கியபடி ஒரு அரசன் போன்ற உருவம் இருப்பது தெளிவில்லாமல் தெரிந்தது.

கையில் வைத்திருக்கும் தீக்குச்சியை, ஒருகையால் முடிந்தவரை உயர்த்தி பிடித்து. இன்னொரு கையில் தனது மொபைல் ஃபோனை உயரப்பிடித்து. அந்த ஓவியத்தை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான். தீக்குச்சியை தூர எறிந்துவிட்டு, அந்த ஃபோட்டோவை இப்போது கீழிருந்தபடி 'சூம்' செய்து துழாவிப் பார்க்க... அந்த ஓவியத்தின் அடிப்பாகத்தில் தமிழில் மெலிதாக 'கேணிவந... நாதாலய... நிம...' என்று அதற்குமேல் எழுத்துக்கள் அழிந்து போய் தெரிந்தது.

குணாவின் குறட்டை சத்தம் மேலும் அதிகமாகிக் தாஸை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு மீண்டும் தன் கவனத்தை ஃபோட்டோவில் கொண்டுவந்தான்.

'கேணி... வந... நாத... ஆலய... நிம..?' என்று ஒருமுறை தாஸ் சொல்லிப் பார்த்துக் கொண்டே திரும்பி அங்கு கருவறைக்குள் உடைந்த நிலையில் இருக்கும் அடையாளமிழந்த சிலையை பார்த்தான்... மூட்டிய தீயிலிருந்து மீண்டும் ஒரு தீக்குச்சியை எடுத்துக் கொண்டு, கருவறைக்கு அருகில் சென்றான்...

அறையை எட்டிப்பார்த்தான்.

அந்த அறை, நான்கு பக்கமும் சுவர் கொண்டு பெட்டி போல் இல்லாமல், சுற்றியும் ஒரு வட்ட வடிவத்தில் சுவர் அமைக்கபட்டிருந்தது.

சிலை உருவிழந்திருக்க, அது வைக்கப்பட்டிருக்கும் மாடத்தின் அடிப்பாகம் ஒரு வட்டவடிவ மேடை போல். அந்த மேடையின் மேல்பக்கம்  வண்டிச்சக்கரம் போன்ற உருவ அமைப்புகளும் செதுக்கப்பட்டிருந்தது.

அறையை மேலும் நோக்குவதற்காக, தாஸ், தயங்கியபடி உள்ளே நுழைந்தான். மெதுவாக சிலையை தொட்டுப் பார்க்கலாம் என்று அதன் மேல் கைகள் வைக்க, அவன் கைவைத்த இடம் சிறு துண்டாக உடைந்து தரையில் உருண்டோடியது... அந்த சத்தத்தில் குணாவின் குறட்டை திடீரென்று நின்று போனது. தாஸ் இன்னும் ஆர்வமுற்றவனாய், அந்த சிலையின் பின்பக்கமாய் போய் சுவற்றைப் பார்த்தான்.

அங்கே இடமிருந்து வலம் என்று சுட்டிக்காட்டுவதுபோல் அம்புக்குறி போடப்பட்டிருந்தது. வலது பக்கமாய் திரும்பிப் பார்க்க, அங்கும் அதே போன்றதொரு அம்புக்குறி... அதுபோல், அந்த அறையின் சுவற்றில் வரிசையாய் நான்கு அம்புக்குறிகள் இருந்தது.

எதை இவர்கள் இடமிருந்து வலம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே தாஸ் அந்த அம்புக்குறிகளை தொட முயன்றான்.

கையை அருகில் எடுத்துக் கொண்டு போய் அதைத் தொட்டதும்... திடீரென்று 'தாஸ்... என்ன பண்றீங்க..?' என்று எஃகோ எஃபெக்டில் குரல் வந்தது, தாஸ் பயந்துப் போய் திரும்ப....பின்னால், குணா கருவறை வாசலில் நின்றிருந்தான்.

ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே, 'குணா, திடீர்னு ஏன் இப்படி பயமுறுத்துறீங்க..?'

'யாரு, நானா... நீங்கதான் என்னை பயமுறுத்துறீங்க... நல்லா தூங்கிட்டிருந்தேன். கல்லு உருளுற சத்தம் கேட்டு தூக்கம் கலைஞ்சு எழுந்துப் பார்த்தா உங்களைக் காணோம். இந்த அடர்ந்த நட்ட நடுக்காட்டுல, தனியா விட்டுட்டு ஓடிப்போயிட்டீங்களோன்னு பயந்துட்டேன்.'

'உஃப்... சரி, ரொம்ப சாரி... உள்ளே வாங்க...' என்று கூற, குணா தயங்கியபடி உள்ளே வந்தான்... மேலே பார்த்தான். அந்த வட்டவடிவ கருவறையின் மேல்பக்கம் ஒரு கூம்பு போல் முடிந்திருப்பதை பார்த்து கொண்டே நடந்தான்.

'என்னங்க இது, ஏதோ ராக்கெட் மாதிரி இருக்கு..'

'ஆமா, இந்த கோவிலோட அமைப்பு ரொம்பவும் வித்தியாசமா இருக்கு... வெளியலருந்து பார்க்க, ஒரு சின்ன மண்டபக்கோவில் மாதிரிதான் இருக்கு, ஆனா, உள்ளே நிறையவே இடம் விட்டு கட்டியிருக்காங்க... கொஞ்சம் பெக்யூலியராத்தான் இருக்கு..'

'நீங்க இங்க என்ன பாத்துட்டிருக்கீங்க..?'

'ஒண்ணுமில்ல... சும்மா சுத்திப்பாத்துட்டிருக்கேன். இந்த கோவில் பேரு தெரிஞ்சுது..'

'என்னது..?'

'கேணிவன நாதர் ஆலயம்..'

'தமிழ் பேரா..? எப்படி..? வித்தியாசமா இருக்கே.. என்ன சாமி இது..?' என்று குணா கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக...

'நான் என்ன Guide-ஆ... இப்படி கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டிருக்கீங்க..! எனக்கும் தெரியல... குழப்பமாத்தான் இருக்கு... தெரிஞ்சதும் சொல்றேன்'

'இதென்னா அம்புக்குறி..?' என்று குணா, சுவற்றிலிருக்கும் அம்புக்குறிகளை சுட்டிக்காட்டி கேட்டான்.

'மறுபடியும் கேள்வி...!' என்று ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே... 'அதைத்தான் பாத்துட்டிருந்தேன்..' என்று கூறி மீண்டும் அந்த அம்புக்குறிகளை பார்த்து அதில் கவனம் செலுத்தினான்.

'பேசாம போய் தூங்கிடுலாமே... காலையில வேற எவ்வளவு தூரம் நடக்கனுமோ தெரியல..' என்று கூற, தாஸ் கடுப்பாகி, பின் சுதாரித்து கொண்டு, 'நீங்க வேணும்னா போய் படுங்க குணா, நான் கொஞ்ச நேரத்துல வந்து படுத்துக்குறேன்...'  என்று கூறி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்க...

'தனியா படுக்க பயமாயிருக்குன்னுதானே கூப்டேன்..' என்று சொல்லி, அங்கே நிற்க பிடிக்காதவனாய் அங்கிருந்த சிலையின் மாடத்தில் அமர்ந்து கொண்டான்.

அப்போது அந்த கல் மெல்ல அசைந்து கொடுத்தது. அந்த கடுமையான கற்கள் நகரும் சத்தம் பயத்தை ஏற்படுத்தவே, குணா சட்டென்று எழுந்து நின்றுக்கொண்டான்.

தாஸும் சத்தம் வந்ததில் கலங்கிப் போய் குணாவை பார்த்தான். இருவரும் பயத்தை பார்வையில் பறிமாறிக்  கொண்டனர்.

'என்ன ஆச்சு குணா..? என்ன பண்ணீங்க..?' என்று தாஸ் மெதுவாக கேட்டான்.

'நான் ஒண்ணும் பண்ணலை தாஸ், கால் வலிக்குதேன்னு உக்காந்தேன்... அது...'

'எது..?'

'இந்த கல்லு அசைஞ்சுது..' என்று குணா, சிலைக்கு கீழிருக்கும் அந்த வட்டவடிவ மேடையை சுட்டிக்காட்டினான்.

'எப்படி..?'

'தெரியல, ஆனா, வாசல் பக்கமா சாயற மாதிரி அசைஞ்சது... பதறி எழுந்துட்டேன்..' என்று அவன் உட்கார்ந்த இடத்தை காட்டினான்.

தாஸ் அந்த இடத்தை உற்றுப் பார்த்தான். அந்த வட்டவடிவ சக்கரம் போன்ற கல்லில் குணா அமர்ந்திருந்தது தெரிந்தது. மேலும் அந்த கல்லின் மேலிருந்த சிலை, சற்றே திரும்பியிருந்தது.

திடீரென்று தாஸ் கையில் வைத்திருக்கும் தீக்குச்சி அணைந்தது.

இருட்டு...

'அய்யோ, தாஸ் பயமாயிருக்கு... வாங்க போயிடலாம்..'

'ஒண்ணும் ஆகாது இருங்க...' என்று கூறி தனது மொபைலிலிருக்கும் டார்ச் வெளிச்சத்தை இயக்கினான். அது அந்த அறையை முன்பைக்காட்டிலும் நல்ல பிரகாசமாக காட்டியது...

'தாஸ்... உங்க மொபைல் என்ன மாடல்..?' என்று குணா சம்மந்தமில்லாமல் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், தாஸ் தொடர்ந்து கொஞ்சமாக திரும்பியிருந்த அந்த சிலையை பார்த்துக்கொண்டே இருந்தான். மீண்டும் அந்த அம்புக்குறிகளைப் பார்த்தான்... அவனுக்கு ஒருவிஷயம் புரிந்தது. அந்த சிலை முன்பிருந்த நிலையிலிருந்து, இடமிருந்து வலமாய் திரும்பியிருந்தது. அந்த அம்புக்குறி சுட்டிக்காட்டிய திசை...

'என்னாச்சு தாஸ், சிலையை இப்படி உத்துப்பாக்குறீங்க..'

'குணா, கொஞ்சம் இந்த மொபைல பிடிங்களேன்..' என்று கூறி குணாவிடம் மொபைலைக் கொடுக்க, அவன் அந்த மொபைலை டார்ச் போல் பிடித்தான்.

'என்ன பண்ணப் போறீங்க..?'

'தெரியல..' என்று கூறிக்கொண்டே சிலையின் கீழிருக்கும் அந்த வட்டவடிவ சக்கரம் போன்ற கல்லைப் பிடித்து மெல்ல இடமிருந்து வலமாய் திருப்ப முயன்றான்.

ட்ர்ர்ரரரக் என்ற பெரும் சத்தத்துடன் திரும்பியது. கூடவே அந்த சாமி சிலையும் திரும்பியது...

'தாஸ்... பயமாயிருக்கு... நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..! போய் படுத்துடலாமே..!'

தாஸ் மேலும் திருப்பினான்... மேலும் ட்ர்ர்ரரக்க்க் என்று சத்தத்துடன் திரும்பியது... இம்முறை இன்னும் பலமாக திருப்பினான். சுழற்சி இப்போது சுலபமாக இருந்தது. மூன்று சுற்றுக்கள் அந்த கல்லை சுழற்றிக்கொண்டே அந்த கருவறைக்குள் சுற்றிவர... இப்போது, 'டம்' என்ற பெரிய சத்தத்துடன் அந்த கல் சற்று மேலெழும்பியது...

தாஸ் நின்றான்... சிரித்தபடி குணாவைப் பார்க்க, அவன் புரியாமல் பேந்த பேந்த விழித்தான்.

'என்னாச்சு, எனக்கு ஒண்ணும் புரியல தாஸ்..' என்று கேட்க

'இதுக்குள்ள என்னமோ இருக்கு..'

'என்னது..? புதையலா..?'

'தெரியல... பாத்துடலாம்... கொஞ்சம் இந்த கல்லை நீங்களும் தள்ளுங்க...' என்று கூற, குணா மொபைலை ஒரு கையில் வைத்தபடியே ஒரு கையால் தள்ளினான்... ஒரு கையில் தள்ள அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது...

தாஸ் இதைப் புரிந்து கொண்டு, 'குணா, அந்த மொபைலைக் கொடுங்க..' என்று வாங்கி, தனது டீசர்ட்டில், கழுத்துக்கு கீழே காலரில், மொபைலின் பின்பக்க ஹூக்கை மாட்டிக் கொண்டான். இப்போது கச்சிதமாக வெளிச்சம் நேரே அடித்தது.

'இப்போ ரெண்டு கையால நல்லா பலமா தள்ளுங்க..' என்று தாஸ் கூற, இருவரும் பலங்கொண்ட மட்டும் அந்த கல்லை தள்ளினார்கள்...

பலமான சத்தத்துடன் அந்த கல் கொஞ்சமாக அசைந்து கொடுத்து வழிவிட்டது. உள்ளே பெரிய துவாரம் தெரிந்தது...

அந்த வட்டவடிவ கல்லுக்கு கீழே மேடைபோல் அமைந்திருந்த பகுதி இப்போது பார்க்க கிணற்றுச்சுவர் போன்ற தோற்றத்திலும், அந்த வட்டவடிவ கல், அந்த கிணற்றுக்கு மூடிபோலும் தெரிந்தது.

'என்ன தாஸ் இது, ஏதோ கிணறு மாதிரி இருக்கு...' என்று குணா கேட்டான்.

'அதான் இந்த கோவிலோட பேர்..'

'என்ன பேர் சொன்னீங்க..?'

'கேணி வன நாதர்.. ஆலயம்...'

'அப்படின்னா..'

'கேணி-ன்னா கிணறு, வனம் - காடு..'

'கிணத்துக்காடா..?'

'ஆமா..'

'நாதர்..'

'ப்ச், அது பொதுவா, கடவுள்னு சொல்றது..' என்று தாஸ் கூற, குணா வாயைப்பிளந்து அந்த கிணற்றை பார்த்துக் கொண்டிருந்தான்.

'இதுக்குள்ள தண்ணி இருக்குமா..?'

'தெரியல... இறங்கிப் பாக்குறீங்களா..?' என்று தாஸ் கலாய்க்க...

'அய்யய்யோ... ஆள விடுங்க நீங்க.. அதான் பாத்தாச்சுல்ல... வாங்க போய் படுக்கலாம்....தூக்கம் வருது..' என்று குணா அங்கிருந்து புலம்பிக்கொண்டே வெளியேறினான்.

'எதுக்கு ட்ரெயின்ல வந்தேன்.. இங்கே என்ன பண்ணிட்டிருக்கேன்.. இதெல்லாம் எனக்கு தேவையா.. எல்லா இந்த ஆளால வந்தது... தம் அடிக்கலாமான்னு கேட்டு கவுத்துட்டான்... நானும் ஒரு சிகரெட்டுக்கு ஆசப்பட்டு கவுந்துட்டேன்' என்று புலம்பிக்கொண்டிருக்க...

தாஸ், குணாவின் புலம்பலை பொருட்படுத்தாமல், அந்த கிணற்றுக்குள் ஒரு கல்லை எடுத்து போட்டுப் பார்த்தான்... அது அடியைத் தொட்டு சத்தம் எழுப்பும் என்று காத்திருந்தான். ஆனால், சத்தம் வரவேயில்லை....

அவ்வளவு ஆழமா? என்று எண்ணியபடி அந்த கிணற்றை பார்த்துக் கொண்டிருக்க...

வெளியே, குணாவின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருந்தது. 'ஏதோ, இன்னிக்கி மழை வந்தது, தண்ணியாவது குடிச்சோம், பசிக்கல... நாளைக்கு மழை வருமோ வராதோ..? அப்புறம் பசிக்கு என்ன பண்றது..'

கருவறைக்குள் தாஸ் அந்த கிணற்று துவாரத்தில் உள்ளே மெல்ல எட்டிப்பார்க்க, அவன் கழுத்து காலரிலிருக்கும் மொபைல் வெளிச்சம் அந்த கிணற்றுக்குள் அடிக்கிறது. அந்த வெளிச்சத்தில், கிணற்று சுவற்றுக்கு உள்புறமாய்  தமிழில் ஏதோ எழுதியிருப்பது தெரிகிறது... அதை சிரமப்பட்டு படிக்கிறான்.

அதில்...

துஆரமது ந்தூரமா ய்ங்காலமதுங்
காணா மற்போகுவதுக்கொரு
கேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு
இதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு





(தொடரும்)



Signature

Friday, August 06, 2010

"கேணிவனம்" - பாகம் 02 - [தொடர்கதை]




பாகம் - 02

இரயிலை தொலைத்த அந்த தண்டவாளத்தில் தாஸூம், குணாவும் முழித்துக் கொண்டு நின்றிருக்க...

'சே..! என்ன ஒரு முட்டாள்தனம்..' குணா புலம்பினான்...

'ச்சே' என்று தாஸூம் புலம்பியபடி நின்றிருந்து... ஒரு சமயத்துக்குமேல் இருவருக்கும் அலுத்துவிடவே... வேறுவழியில்லாமல் அந்த தண்டவாளத்தில் ரயில் சென்ற திக்கில் இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தனர்.

நீண்ட தூரம் நடந்துப் பார்த்தும் அதே காடுகள் சூழுந்த தண்டவாளம்தான் இருபக்கமும் தெரிகிறது.

'இதுக்கு மேல நடந்து பயனில்லை குணா, பேசாம இந்த காட்டுவழியா கொஞ்ச தூரம் உள்ளே நடந்து பாப்போம், ஏதாவது கிராமமோ இல்ல தெருவோ  தெரியுதான்னு பாப்போம்..' என்று தாஸ் கூற, குணா தாஸை முறைத்தபடி சம்மதிக்கிறான்.

இருவரும் மீண்டும் காட்டுப்பாதைக்குள் நுழைய, மேகத்திரள்களில் மின்னல் கீற்றுக்கள் மெலிதான இடியோசையை சப்திக்கிறது.

நடக்கும் அலுப்போடு சேர்ந்து குணாவுக்கு திடீரென்று தன் உடமைகள் ஞாபகம் வரவே புலம்புகிறான்...

'என் பர்ஸ், என் பேக், செல்ஃபோன் எல்லாம் டிரெயினோட போச்சு..' என்று புலம்ப, உடனே தாஸ் தன்வசம் இருக்கும் உடமைகளை கைவைத்து சரிபார்த்துக் கொள்ள... தனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் மொபைலை ஆர்வமுடன் எடுத்து பார்க்க... அதில் சிக்னல் இல்லாமலிருக்கிறது.

'என்ன தாஸ்?'

'சிக்னல் இல்லை' என்று அலுப்புடன் கூற, மீண்டும் குணாவின் முகம் வாடிப்போகிறது.

இதை கவனித்த தாஸ் 'சாரி குணா..' என்று கூற, குணா அந்த சாரி-ஐ பொருட்படுத்தாமல்...

'சிகரெட்டாவது இருக்கா..?' என்று கேட்கிறான்.

தாஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்து பார்க்க உள்ளே 5 சிகரெட்டுகள் இருக்கிறது. அதில் இரண்டை எடுத்து பற்ற வைத்து இருவரும் ஒரு மரத்தின் கீழே அமர்ந்தபடி தம் அடிக்கின்றனர்.

புகையை கக்கியபடி குணா பேச்சை தொடர்கிறான்...

'நான் நாளன்னைக்கி அந்த பாம்பே க்ளையிண்ட்டை பாக்கலேன்னா என் வேலயும் போச்சு..'

'நான் இப்படியாகும்னு எதிர்ப்பாக்கலை குணா'

'அவன்மட்டும் என் கையில கிடைச்சான், அவனை இங்கேயே கொன்னு இந்த காட்டுக்கு உரமா போட்டுடுவேன்..'

'யாரை சொல்றீங்க..?'

'அதான், டிரெயின் 4 மணி நேரம் இங்கேயே நிக்கும்னு சொன்னானே வழுக்குமண்டையன்..' என்று குணா புலம்பிக் கொண்டே நடந்துக்கொண்டிருக்க, தாஸின் கைகளில் நீர்த்துளிகள் விழுகிறது.

'குணா, நாமதான் இந்த காட்டுக்கு உரமாகப்போறோம்னு நினைக்கிறேன்..'

'ஏன்..?'

'மழைவரப்போகுது..'

'மழைதானே... அதனால என்ன?'

'ஹ்ம்... அடர்ந்த காட்டுக்குள்ள மழையில மாட்டுறதைவிட ஆபத்து வேறெதுவுமில்ல..' என்று கூறிய தாஸ் எழுந்து வானத்தைப் பார்க்க, மூடிய மரங்களுக்கிடையே கொஞ்சமாக தெரியும் வானத்தில் மழைமேகம் கடுமையாக சூரியனை மறைத்திருப்பது தெரிகிறது.

கனத்த மழை...

தாஸும் குணாவும், ஆளுக்கொரு வாழையிலைப்போன்ற பெரியதொரு இலையை தலைக்கு வைத்து அமர்ந்திருந்தனர். அந்த இலை அவர்களின் தலையை மட்டும் மறைத்திருந்தது.

தாஸ் தனது டிஜிட்டல் கடிகாரத்தில் மணி பார்த்தான், 4 PM என்று காட்டியது.

'கிளம்புங்க குணா, இங்கேயே இருக்கக்கூடாது, சீக்கிரமா இருட்டிடும், அதுக்குள்ள நாம இந்த காட்டை விட்டு வெளியேறிடணும்..' என்று தாஸ் கூறியதை தொடர்ந்து, மழையை பொருட்படுத்தாமல் இருவரும் நடக்கின்றனர்.

தொடர்ந்து காட்டுக்குள் ஒரு மணிநேர பயணம்...

மழை ஓய்ந்திருந்தது... அவர்கள் நடை ஓயவில்லை...

தாஸ் கண்களுக்கு தூரத்தில் ஒரு இடம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் தாஸுக்கு மனதில் ஒரு புது தெம்பு வந்தது. அது மட்டும் அவன் நினைத்ததுபோல் இருந்தால், இரவு எந்த ஆபத்துமில்லாமல் கழியும் என்று நினைத்தான்... இன்னும் கொஞ்சம் அந்த இடத்தை இருவரும் நெருங்க... அந்த இடம் இப்போது நன்றாக தெரிந்தது. அது அவன் நினைத்தது போல்தான் இருந்தது.

அது... ஒரு காட்டுக் கோயில்...

'அது என்ன கோவில்மாதிரி இருக்கு..' என்று குணா சந்தேகத்துடன் கேட்டான்.

'கோவிலேதான்...' என்று கூற இருவரும் அதை சமீபித்தார்கள்.

'ஓரே ஒரு மண்டபம்தான் இருக்கு..'

'ஆமா...  ஆனா 2 பேருக்கு தாராளமா போதும், உடனே இந்த இடத்தை தயார் பண்ணணும்..?'

'எதுக்கு..?'

'இங்கதான் நாம இரவை கழிக்கணும்..'

'இங்கேயா.?'

'இங்கேதான்..' என்று தாஸ் கொஞ்சம் கடுமையாக கூற, குணா அவனை முறைத்தான்.

'பேசிக்கிட்டிருக்காம... பக்கத்துல போய், மழையில நனையாமலோ, இல்ல கொஞ்சமா நனைஞ்ச மரக்கிளைகளோ, குச்சியோ... எது கிடைக்குதோ கொண்டு வாங்க..'

'எதுக்கு..?'

'நம்மகிட்ட ஆயுதம் எதுவுமில்ல, இன்னிக்கி நைட் நமக்கு நெருப்புதான் ஆயுதம்..' என்று தாஸ் கூற, குணா கோபமடைகிறான். ஆனால் தாஸ், அந்த இடத்தை சுற்றி சுற்றி கண்களால் அளந்து கொண்டிருந்தான்

'பாஸ், நாம இங்க வெகேஷன் கொண்டாட வரலை...'

'எனக்கு தெரியும் சார்' என்று சத்தம் போட்டு ஒரு சின்ன இடைவெளி விட்டு குரலை சாந்தப்படுத்திக் கொண்டு, 'ப்ளீஸ் குணா, இந்த காட்டுக்குள்ள இரவு நேரத்துல நடந்துப்போறதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமில்ல..'

'நீங்கதானே எக்ஸ்பீரியண்ஸ்டு ட்ரெக்கர்னு சொன்னீங்க..?'

'அதனாலத்தான் சொல்றேன். நைட் இந்த காட்டுக்குள்ள பல விஷயம் சுத்திட்டிருக்கும். ஒழுங்கா இங்க தூங்கி எழுந்துட்டு காலையில நடக்கலாம்..' என்று தாஸ் கூற, குணா மறுத்து பேசவில்லை...

சிறிது நேரத்தில் குணா, சில காய்ந்த குச்சிகளை கொண்டு வந்து அந்த மண்டபத்தில் கொட்டினான். தாஸ், அவைகளை ஒன்றாய் குவித்து, தனது சிகரெட் லைட்டரை எடுத்து பெரும்பாடுபட்டு பற்ற வைக்க முயற்சித்தான். ஆனால், அவைகளை எரிக்க ஏதாவது பேப்பர் தேவைப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்து, பிறகு ஏதோ நினைவுக்கு வரவே, தனது பர்ஸை எடுத்து பார்த்தான். உள்ளிருந்த சில விசிட்டிங் கார்டுகளும் நனைந்திருக்க, பணம் வைக்கும் பகுதியில் சில ரூபாய்கள் கண்ணுக்கு பட்டது, அதிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்தான்.

குணா இவன் செய்யமுனைவதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே 'ஹே ஹே... தாஸ் வேண்டாம்..' என்று குணா சொல்வதை பொருட்படுத்தாமல், தாஸ் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே, அந்த 500 ரூபாய் தாளை எடுத்து பற்ற வைத்தான். அதுவும் நன்றாகவே பற்றி எரிந்தது.

'சாரி, நண்பா, இன்னிக்கி நைட் நம்ம ரெண்டு பேரோட உயிரோட விலை இந்த 500 ரூபாய்னு நினைச்சிக்கோ..'

'ஏன்..'

'இது இல்லன்னா, இந்த காட்டுல கடும்குளிரில நடுங்கி சாக வேண்டியதுதான்.. இதே கோவில் நம்ம 2 பேருக்கும் சமாதி கோவிலா மாறிடும்.' என்று கூற, குணா பயத்தில் எச்சில் விழுங்கினான்.

அன்றிரவு அந்த கோவில் மண்டபம் கிட்டத்தட்ட அவர்களின் கூடாரமாக மாறியிருந்தது. கேம்ப் ஃபயர் போன்று அவர்கள் அமைத்திருந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். தாஸ் திரும்பி விக்கிரஹத்தை பார்த்தான், அந்த சிலை அடையாளமிழந்திருந்தது. அருகில் ஒரு வாய் உடைந்த பெரிய அகல்விளக்கு இருந்தது. மற்றபடி பாழடைந்த கோவிலின் அத்தனை அம்சங்களும் தெரிந்தது.

'தாஸ், ரொம்ப பசிக்குது...'

'சாரி குணா, வர்ற வழியிலியே பாத்தேன். எல்லாம் காட்டுச்செடி. எதுவும் கிடைக்கலை, பலாப்பழ மரங்கூட இல்ல, சில இடங்கள்ல எழுமிச்சை மரம்தான் இருக்கு..' என்று கூற, குணா தலையை குனிந்து கொண்டான். அவனைப் பார்க்க தாஸூக்கு பாவமாக இருந்தது. ஒரு வகையில் குணாவின் இந்த நிலைக்கு அவன்தான் காரணம் என்று எண்ணியதால் மிகவும் வருத்தப்பட்டான். மீண்டும் திரும்பி விக்கிரஹத்தை பார்த்தான். அவனுக்குள் ஒரு எண்ணம் உதித்தது.

உடனே எழுந்து சென்று அங்கிருந்த விக்கிரஹத்துக்கு அருகில் இருந்த வாய் உடைந்த பெரிய அகல்விளக்கை எடுத்து வந்து, வெளியே சொட்டிக்கொண்டிருக்கும் மழை நீரை அந்த பெரிய அகல் விளக்கில் பிடித்துக் கொண்டான். அதை கொண்டு வந்து குணாவிடம் கொடுக்க, அதை பெரும் தாகத்துடன் அவசர அவசரமாய் பருகினான். இது போல் ஒரு 4, 5 தடவை இருவரும் அந்த விளக்கில் நீர்பிடித்து பருகியபிறகு... ஓரளவுக்கு பசி அடங்கியது.

இப்போது இருவரும் அந்த கேம்ப்-ஃபயர் போல் எரிந்துக் கொண்டிருக்கும் அந்த தீயில் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருந்தனர்.

'பசி மொத்தமா அடங்கலை... ஆனா பசிக்கலை... ரொம்ப தேங்க்ஸ்' என்று குணா பேச்சைத் தொடங்கினான்.

'எதுக்கு தேங்க்ஸ்லாம்... அப்படி பாத்தா, நான்தான் உங்ககிட்ட சாரி சொல்லணும்...'

'எதுக்கு தாஸ்..?'

'ஒருவகையில உங்களோட இந்த நிலைக்கு நான்தான் காரணம்... அதான்... சாரி...' என்று தாஸ் கூற, குணா பதிலளிக்காமல் சிரித்துக் கொள்கிறான்.

'ஹ்ம்... சினிமாவுல மட்டும் ஹீரோயினுக்கு நடுக்காட்டுலயும் ஹீரோ சூப்பரான டின்னர் ரெடி பண்ணி கொடுக்கிறாரு..? ஆனா நிஜத்துல பச்சைத் தண்ணி கிடைச்சதே சொர்க்கம் மாதிரி இருக்கு'

'அதெல்லாம் சினிமாதான் குணா... இங்க என்ன அதிகபட்சமா பலாப்பழம் கிடைக்கும், அப்படியும் இல்லன்னா தேன் எடுத்து குடிக்கலாம்... மத்தபடி வேற எதைச் சாப்பிட்டாலும் ரிஸ்க்..'

'அப்படியா..?'

'ஆமா.. காட்டுல எதவும் தெரியாம கைவைக்கக் கூடாது.. நம்மளைவிட இங்க வாழ்ற உயிரினங்களோட பாப்புலேஷன் ரொம்ப ஜாஸ்தி... நாம காட்டுல விருந்தாளியா டீஸன்ட்டா நடந்துக்கணும், இல்லன்னா நாமளே விருந்தாயிடுவோம்...'

'ஹா..ஹா... நல்ல டயலாக்... நீங்க ரைட்டர்னு நான் இப்ப ஒத்துக்குறேன்..' என்று கூறியபடி குணா அந்த மண்டபத்தின் தரையில் நெருப்புக்கு அருகே படுத்துக் கொள்ள... தாஸ் தூங்கப்பிடிக்காமல் தனது மொபைலில் ஒரு பழைய பாடலை ஓடவிடுகிறான்.

மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழைபோலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்
உருகியோடும் மெழுகைப்போல ஒளியை வீசலாம்...


என்று அந்த இனிமையான P.B.ஸ்ரீனிவாஸ் பாடலை கேட்டுக் கொண்டிருக்க, பாட்டுக்கிடையில் தாஸ் அந்த விக்கிரஹத்தை பார்த்துக் கொள்கிறான். தாஸூக்கும் கண்கள் இழுத்துக் கொண்டு தூக்கம் வருவது போல் தோன்றவே அப்படியே அவனும் அந்த மண்டப தரையில் சரிகிறான்.

தூக்கத்தில் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக்கொண்டு வர... கண்கள் முழுவதுமாக மூடாத நிலையில், எரிந்துக் கொண்டிருக்கும் தீயின் வெளிச்சத்தில் அந்த மண்டபத்தின் கூரைச்சுவர் தாஸின் கண்களுக்கு தெரிந்தது... அந்த விட்டத்தில் விழுந்த அரைகுறை வெளிச்சத்தில்... ஒரு ஓவியம் தெரிந்தது... அந்த ஓவியத்தைப் பார்த்த  தாஸ்... தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்... அதில்...

(தொடரும்...)



Signature

Popular Posts