Friday, August 06, 2010

"கேணிவனம்" - [ தொடர்கதை ]


பாகம் - 01

முன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிருந்தது. மணி முற்பகல் 11 என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு மேகமூட்டத்துடன் அந்த காடு மாலைவேளை போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

இரயில் தண்டவாளம் என்ற பெயரில் சீராக அமைந்திருக்கும் அந்த இரண்டு இரும்பு கோடுகளை இரசித்தபடி தனது ஜன்னலோர இருக்கையில் குணா அமர்ந்திருந்தான். அப்பர் பர்த்தில் 11 மணிவரை தூங்கியும்கூட அவன் கண்களில் தூக்கம் இன்னும் மீதமிருந்தது. அவன் மட்டுமல்ல, அந்த கம்ப்பார்ட்மெண்ட்டில் அனைவரும் அப்படித்தான் தெரிந்தார்கள். தனக்கு எதிர்சீட்டில் ஜன்னலோரம் அமர்ந்து ஒருவன் சுவாரஸ்யமாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். குணா மெல்ல குனிந்து அந்த புத்தகத்தின் பெயரைப் படித்தான். "UNEXPLAINED" என்றிருந்தது. குணா இப்படி பார்ப்பது பிடிக்காமல், அந்த புத்தகம் படித்தவன் குணாவைப் பார்த்து முறைத்தான்.

'ஹாய்... சாரி... என்ன புக்-னு பார்த்தேன்..' என்று குணா அசடுவழிந்தான். அவன் மெல்லிய சிரிப்பை பதிலாக அளித்தான். மீண்டும் அவன் கவனம் புத்தகத்தில் புதைய, இப்போது டிரெய்ன் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை குறைத்துக் கொண்டு நின்றது.

வேகம் குறைந்ததும், கம்பார்ட்மெண்டில் வீசிய காற்றுப்போக்கு மாறவே, கவனம் கலைந்தவனாய், அந்த புத்தகம் படித்துக்கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.

நின்ற இடம் ஸ்டேஷன் இல்லை, இருபக்கமும் அதே அடர்ந்த காடு.

5 நிமிடத்திற்கு மேல் இரயில் நகரவேயில்லை...

கம்பார்ட்மெண்ட் உள்ளிருந்த மக்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்க, சில தைரியர்கள் இரயிலுக்கு கீழே இறங்கியும் பேசிக்கொண்டும் நின்றனர். குணாவும் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். சில ஆண்கள் திரும்பி நின்று சிறுநீர் கழித்துக் கொணடும், சிலர் சிகரெட் பிடித்துக் கொண்டும் நின்றிருந்தனர்.

இப்போது எதிர்சீட்டில் அமர்ந்திருந்தவன், 'நீங்க தம் அடிப்பீங்களா..?' என்று குணாவைப் பார்த்து கேட்டான். குணா அவனைப் பார்த்தான்.

குணா சிரித்தபடி, 'ஷ்யூர்' என்று கூற, அந்த நபர், தனது பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து குணாவிடம் நீட்ட, அவன் ஒரு சிகரெட்டை எடுத்து கொண்டான். அந்த நபர் குணாவை ஏறிட்டு, 'ஐ ஆம் தாஸ்...' என்று கை நீட்டினான்.

'அப்பா, ஒரு கம்பெனி கிடைச்சுது..? இட்ஸ் ஏ லாங் ஜெர்னி யு நோ..! ஐ ஆம் குணா..'

இருவரும் கைகுலுக்கினார்கள்... கம்ப்பார்ட்மெண்ட்டிலிருந்து கீழே இறங்கி சிகரெட் பற்றவைத்துக் கொண்டு பேசினார்கள்.

தாஸ் முதலில் ஆரம்பித்தான்... 'நான் ஒரு ரைட்டர்..' என்றான்

'ஓ கிரேட்...'

'நீங்க..?'

'நான் ப்ரோக்ராமர்' என்று குணா புகையை ரசித்து வெளியேற்றிக்கொண்டே சொன்னான்.

'ப்ரோக்ராமர்னா டிவியில ப்ரோக்ராம் பண்றீங்களா..?' என்று நக்கலாக தாஸ் கேட்க...

'நோ, நோ... சாஃப்ட்வேர் ப்ரோக்ராமர்-னு சொன்னேன்... இப்பல்லாம் ப்ரோக்ராமர்-னு சொன்னாலே சாஃப்ட்வேர் ப்ரோக்ராமர்னுதானே அர்த்தம்..' என்று குணா விட்டுக்கொடுக்காமல் பேச...

'சாரி மிஸ்டர்.குணா, இந்த கம்ப்யூட்டர் வந்து நம்மளை ரொம்பவும் மாத்திடுச்சி, ஒரு காலத்துல ப்ரோக்ராம்-னா டிவி ப்ரோக்ராம், மவுஸ்-னா எலி, கீ-போர்ட்-னா மியூஸிக் கீ-போர்டு, டிரைவ்-னா வண்டியோட்றது, இப்படி வேற அர்த்தங்களும் இருந்தது. மறந்துடாதீங்க... இப்ப எல்லாத்தையும் கம்ப்யூட்டருக்கு தத்து கொடுத்துட்டீங்க..' என்று சிகரெட்டை உள்ளிழுத்தபடி கூற

'ஹா..ஹா... எனக்கும் இந்த SMS வந்திருக்கு தாஸ்... உங்களுக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியர்ஸ்னா பிடிக்காது போலிருக்கு..?'

'நோ, நோ, அப்படியெல்லாம் இல்ல... பொதுவா சொன்னேன்.'

'நீங்க ரைட்டர்னு சொன்னீங்களே... என்ன மாதிரி புக்ஸ் எழுதுறீங்க..?'

'நாவல்ஸ்'

'ஓ... எனக்கு நாவல்ஸ் ரொம்ப பிடிக்கும், சுஜாதாவோட நாவல்ஸ் எல்லாத்தையும் விடாம படிச்சிருக்கேன்..'

'சுஜாதா சார் நாவல்ஸ் எனக்கும் ஒரு வகையில இன்ஸ்பரேஷன்ஸ்தான், ஆனா நான் வைட் சேல்ஸ் பண்ற அளவுக்கு எழுதலை, பிகினர்தான், வருஷத்துக்கு 2 நாவல் எழுதனாலே பெரிய விஷயம்..'

'ஐ. சீ...' என்று புகைத்துக் கொண்டிருக்க, தூரத்தில் இன்ஜினருகே கும்பல் கூடிக்கொண்டிருந்தது. ஒருவர் புலம்பிக் கொண்டே இருவரையும் பார்த்தபடி திரும்பிக் கொண்டிருந்தார். குணா அவரிடம் 'என்ன சார் என்ன பிரச்சினையாம்.'

'அட போங்கப்பா, அடுத்த ஸ்டேஷன்ல ஆக்ஸிடெண்ட்டாம், வண்டி எடுக்க குறைஞ்சது 4 மணி நேரமாகுமாம்..' என்று கூறிக்கொண்டே அவர்களை கடந்து சென்றார்.

'என்னங்க இது, 4 மணி நேரம் என்ன பண்றது..?' என்று குணா கேட்க, தாஸ் சிகரெட் பாக்கெட்டை எடுத்து பார்த்துக் கொண்டான். அதில் இன்னும் 5 சிகரெட் இருந்தது. திரும்பிப் பார்த்தான், அழகான காடு கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது. மீண்டும் குணாவிடம் திரும்பி...

'குணா, வாங்களேன் இந்த காட்டுப்பகுதிக்குள்ள ஒரு ஹாஃபனவர் சுத்திட்டு வருவோம்..' என்று தாஸ் அழைக்க, குணா கொஞ்சம் யோசித்துவிட்டு, வேறு பொழுதுபோக்கு இல்லாததால், மேலும் அவனிடம் சிகரெட் எதுவும் பாக்கி இல்லாததால், தாஸ்-உடன் செல்ல சம்மதித்தான்.

இருவரும் அந்த காட்டுக்குள் நுழைந்தனர்.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அந்த காடு, கர்நாடகாவின் வளமையை அவர்களுக்கு உணர்த்தி கொண்டிருந்தது. தூரத்தில் தெரியும் மலைமுகடுகளும், எங்கோ கேட்கும் அருவி சத்தமும், பெயர் தெரியாத குயிலின் குரலும், கம்ப்யூட்டர் கலவையிலும் காண முடியாத வண்ணத்தில் மலர்களும் என்று அந்த காடு மிகவும் ரம்யமாக இருந்தது.

'தாஸ், திரும்பி போக வழி தெரியுமா, ரொம்ப உள்ள வந்த மாதிரி இருக்கு..?'

'டோன்ட் வர்ரி, நான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்டு ட்ரெக்கர்' என்று தாஸ் கொடுத்த நம்பிக்கையில் குணா மீண்டும் அந்த வனப்பகுதியை இரசிக்க ஆரம்பித்திருந்தான்.

'இந்த இடம் ஏன் இன்னும் நம்மாளுங்க விட்டுவச்சிருக்காங்க..? இதை ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டா மாத்தியிருக்கலாமே..?' என்று குணா ஆர்வத்தில் கேட்க

'ஏன் குணா, இந்த இடத்தையும் வியாபார சந்தையா மாத்தனுங்கறீங்களா..?'

'இல்ல, இல்ல, அப்படி சொல்லலை...'

'இந்த மாதிரி வெர்ஜின் நிலங்கள் கொஞ்சமாவது பாக்கி இருக்கட்டும்..' என்று தாஸ் கூற, குணா தன் மனதில் இவன் கூறுவதும் சரிதான் என்று எண்ணிக் கொண்டான், அப்போது அவனுக்கு வெகு சமீபத்திலிருந்து ஒரு பறவை திடீரென்று தரையிலிருந்து வான் நோக்கி பறந்து செல்கிறது...

குணா அந்த பறவையின் இறக்கை சத்தத்திற்கு பயந்து பின்பக்கம் விழப்போக, தாஸ் அவனை பிடித்துக் கொள்கிறான். சிறிது நேரம் நடந்ததறியாமல் அப்படியே இருந்த குணா, மெல்ல தான் விழுதலிலிருந்து தப்பித்ததை உணர்ந்து, ஒரு சின்ன பறவைக்கு பயந்துவிட்டதை நினைத்து வெட்கப்படுகிறான்.

தாஸும், அவனை கிண்டலாக பார்த்து புன்னகைக்கிறான்.

விழவிருந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட இருவரும் சந்தோஷத்தில் ஒன்றாக சிரித்துக் கொள்கிறார்கள்.

'ஹாஹ்ஹா...' என்ற அவர்களது சிரிப்பு சத்தத்துடன் சேர்ந்து தூரத்தில் இரயிலின் ஹார்ன் சத்தமும் கேட்கிறது.

அந்த சத்தத்தின் விபரீதத்தை உணர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் பயத்துடன் பார்த்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பிக்கிறார்கள் ரேஸில் ஓடுவது போல் திரும்பி இரயிலை நோக்கி ஓட ஆரம்பிக்கிறார்கள்..

அந்த காட்டுப்பகுதியில் நடப்பதை விட ஓடுவது சிரமமாக இருப்பதை குணா உணர்ந்தான். மேலும், தனது உடமைகள் அனைத்தும் இரயிலில் இருப்பதை நினைத்துப் பார்க்கவும், அவனது ஓட்டத்தில் இன்னும் வேகம் கூடுகிறது. அவர்கள் காலடி சத்தத்துடன் சேர்ந்து இரயில் நகுரும் சத்தமும் கேட்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக இரயில் சத்தம் நின்றுவிட, இருவரும் தண்டவாளத்தை வந்தடைகிறார்கள். தூரத்தில் புள்ளியாய் இரயிலின் பின்னாலிருக்கும் 'X' என்ற எழுத்து மட்டும் தெரிகிறது. ஓடிப்பிடிக்க முடியாத தூரத்துடனும், வேகத்துடனும், அந்த இரயில் கடைசியாக அவர்கள் கண்களிலிருந்து மறைகிறது.

இருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்... சுற்றும் முற்றும் காடும் காடைச் சார்ந்த இடமும் என்று முல்லைத் திணையாகவே காட்சியளிக்கிறது.Signature

14 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... ரெம்ப நாள் கழிச்சு உங்க கதை படிக்கறதுல சந்தோஷம்... கதை ரயில் வேகத்துல சூடு பிடிக்க ஆரம்பிச்சாச்சு... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடுங்க...நன்றி

Selvamani said...

story.. started to pickup...
Nicely written..

சீமான்கனி said...

வணக்கம் ஹரீஷ் ஜி நலமா வெகுநாட்களுக்கு பிறகு உங்கள் கதை படிப்பதில் மகிழ்ச்சி தலைப்பே வித்த்யாசமை இருக்கு...நல்ல சுவாரஸ்யமான கட்டத்தில் தொடரும் போட்டுடிங்க அவசரமாய் தொடருங்கள்...வாழ்த்துகள்...

நாடோடி said...

வெல்க‌ம் பேக் ஹ‌ரீஸ்..அடுத்த‌ ப‌திவுக்கு எதிர்பார்ப்புட‌ன் முடித்திருக்கிறீர்க‌ள்!!!... சீக்கிர‌ம் போஸ்ட் ப‌ண்ணுங்க‌...

அருண் பிரசாத் said...

Welcome Back Harris...எவ்வள்வு நாள் காத்துட்டு இருந்தோம். ரஜினி மாதிரி இப்போ வரரேன், அப்போ வரேன்னு சொல்லிட்டு இருந்தவர் இப்போ சூப்பர் திரில்லரோட வந்திருக்கீங்க. வாங்க வாங்க

Madhavan Srinivasagopalan said...

முட்டாப் பசங்க.. எவனோ சொன்னானாம் 4 மணி நேரம் ஆகும்னு.. அவனுக காட்டுக்குள்ள போனாங்களாம்..
மத்தபடி கதைக்கு நல்ல ஆரம்பம்..
முற்பகல் 11 என்பது சரிய எனவும், பிற்பகல் 11 என்பது தவறு எனவும் நான் நினைக்கிறேன்.

DREAMER said...

நன்றி அப்பாவி தங்கமணி,
அடுத்த பாகம் ரெடியாயிட்டே இருக்கு...

ThanX Selvamani...

நன்றி சீமான்கனி,
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...

வாங்க நாடோடி,
உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி... அடுத்த பாகம் சீக்கிரமா எழுதிடுறேன்...

நன்றி அருண் பிரசாத்,
த்ரில்லருக்கு உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு, எழுதுவதற்கு நல்ல ஊக்கம் தருகிறது. விரைவில் அடுத்த பாகத்தை பதிவிடுகிறேன்...

வாங்க மாதவன்,
'முற்பகல்' மாற்றிவிட்டேன்... சுட்டியதற்கு நன்றி..!

-
DREAMER

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

hamaragana said...

next part please

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்
கேணிவனம் தலைப்பை பார்த்ததுமே மனம் கற்பனையிலும் கண்கள் தங்கள் வரிகளிலும் மூழ்கிவிட்டது. தாங்கள் விரைவில் தொடரவேண்டும்

கமல் said...

வணக்கம் சார் கதை நல்லா இருக்கு சார் தொடர்ருங்கள்... தொடர்ந்து படிக்கிறேன். நன்றி

DREAMER said...

hello hamaragana,
next part posted...

வாங்க தினேஷ் குமார்,
தலைப்பு தங்களுக்கு பிடித்துப் போனதில் மகிழ்ச்சி, அடுத்த பாகம் பதிந்துவிட்டேன்.

வணக்கம் கமல்,
கதையை தொடர்ந்து படிப்பதற்கு நன்றி...

சமுத்ரா said...

Good one..keep writing

விச்சு said...

இன்று வலைச்சரத்தில் இந்த பதிவு அறிமுகம். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.தமிழ்மணத்தில் வாக்கும் கருத்துகளும் பகிர அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_18.html

Popular Posts