Monday, August 23, 2010

"கேணிவனம்" - பாகம் 07 - [தொடர்கதை]பாகம் - 07

'யோவ் ரைட்டர்... எல்லாம் உன்வேலதானா..? நீ என்ன வில்லனா..?' என்று குணா, தாஸை முறைத்துக் கொண்டிருந்தான்...

'சாரி குணா... என்னை வில்லன் மாதிரி நடந்துக்க வச்சிட்டீங்க...'

'நான்தான் உன் சகவாசமே வேண்டாம்னு சொல்லியிருக்கேன்ல..? அப்புறம் ஏன்யா எனக்கு தொல்லை கொடுக்குறே..?' என்று குணா கோபப்பட

'குணா... நான் உங்களை இங்க வரவழைச்சதே நம்ம நல்லதுக்குதான்...'

'என்ன நல்லது..?'

'நாம மறுபடியும், அந்த காட்டுக்கோவிலுக்கு போக வேண்டியிருக்கும்...' என்று கூற, உடனே குணாவிற்கு, அவன் அந்த காட்டுக் கோவிலில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும், கணநேரத்தில் கண்முன் வந்த மறைந்தது.

'உனக்கென்ன பைத்தியமா... அங்கிருந்து தப்பிச்சு வந்ததே, எங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம்னு நான் நினைச்சிட்டிருக்கேன்... இந்த நேரத்துல போய், மறுபடியும் அந்த கோவிலுக்கு போலாம்னு சொல்றியே..? நீ சொல்றதே எனக்கு வயித்த கலக்குதுய்யா..? ஆளைவிடு... இல்லன்னா... நான் போலீஸ் கிட்ட போவேன்..'

'குணா, பயப்படாதீங்க.... போனதடவை மாதிரியில்ல... இந்த வாட்டி, பக்கா ப்ரொடக்ஷனோட போகப்போறோம்...' என்று கூற...

குணா அவனை தீர்க்கமாக ஒருமுறை முறைத்துவிட்டு, 'உனக்கு வேணுன்னா எத்தனை தடவை வேணுமின்னாலும், அங்க போ... என்னை ஆளவிட்டுடு..' என்று கூறி அங்கிருந்து விறுவிறுவென வெளியேற முயன்றான்.

சந்தோஷ் வழிமறித்து நின்றான்.

தாஸ், அவனை நெருங்கி வந்து, 'குணா... நான் உங்களை அந்த காட்டுல தனியா விட்டுட்டு வந்தது தப்புதான்... என்னை மன்னிச்சிடுங்க... நீங்க என்கூட மறுபடியும் அந்த கோவிலுக்கு வரலைன்னாலும் பரவாயில்ல... உங்ககூட கொஞ்சம் பேசவேண்டியிருக்கு... ஜஸ்ட் ஒரு 1 மணி நேரம் என்கூட ஸ்பெண்ட் பண்ணுங்க... போதும்..' என்றுகூற...

லிஷா, அவனை நெருங்கி வந்து... 'குணா... நீங்க 4 நாள் முன்னாடி அனுபவிச்ச விஷயங்களுக்கு என்ன காரணம், என்ன விளக்கம்னு தெரிஞ்சிக்க வேண்டாமா..? ப்ளீஸ், கோ-ஆப்ரேட் பண்ணுங்க.. நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்' என்று கேட்க...

குணா மௌனமாக சரி என்று தலையசைத்தான்...

---------------------------

அனைவரும், தாஸின் ஆஃபீஸில், பெரிய வட்ட வடிவ கான்ஃபரன்ஸ் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

ஒரு மிதமான ஆரஞ்சு கலர் லைட், அந்த அறைக்கு மந்தமான வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்க... கோவிலில் எடுக்கப்பட்ட ஓவியத்தின் ஃபோட்டோ, அந்த அறையில் டிஜிட்டல் ப்ரொஜெக்டரின் வாயிலாக, ஸ்க்ரீனில் பிரம்மாண்டமாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

குணாவை, அந்த ஃபோட்டோவுக்கு நேரே அமர்த்திவிட்டு, ஒரு பக்கம் தாஸ் அமர்ந்திருக்க, மறுபக்கம், லிஷாவும், சந்தோஷூம் அமர்ந்திருந்தனர்...

தாஸ் பேச்சை ஆரம்பித்தான்.

'குணா... நாம போயிட்டு வந்த அந்த கோவில்.... சாதாரண கோவிலில்ல... அது இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்... இருந்தாலும், என்னைவிட அந்த கோவில்ல அதிக நேரம் இருந்தது நீங்கதான். நான் அங்கேயிருந்து கிணத்துக்குள்ள இறங்குனதுக்கப்புறம். என்ன நடந்தது..? நீங்க என்னென்ன பாத்தீங்க..? என்ன செஞ்சீங்க?-ன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க...' என்று கேட்க, குணா அந்த அறையில் பரவியிருந்த அரையிருட்டில் மூவரையும் ஒருமுறை பார்த்தான்.

'ப்ளீஸ்...' என்று தாஸ் மீண்டும் வலியுறுத்த...

குணா, அந்த ஓவியத்தை ஆர்வத்துடன் பார்த்தபடி நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்.

---------------------------

அன்று கோவிலில் நடந்தது...

தாஸ் கிணற்றுக்குள் இறங்குவதை கலவரத்துடன் குணா கையில் தீக்குச்சியை ஏந்தியபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக, தாஸ்-ன் உருவம் இருட்டில் மறைந்து கொண்டிருந்தது. குணா கையிலிருந்த தீக்குச்சியின் வெளிச்சம், அந்த கிணற்றுக்குள் பத்தடிக்கு மேல் பாயவில்லை... இப்போது தாஸின் உருவம் முழுவதுமாக மறைந்து, அவன் கழுத்தில் கட்டியிருந்த, மொபைல் டார்ச்சின் வெளிச்சம் மட்டும், ஒரு புள்ளி போல குணாவுக்கு தெரிந்து கொண்டிருந்தது.

இப்போது அதுவும் மறைந்து போனது. இதற்குள் குணா கையிலிருந்த, தீக்குச்சியும் அணைந்து போனது.

குணா செய்வதறியாமல் அந்த கருவறையை விட்டு வெளியேறி, மண்டபத்தில், தீ மூட்டியிருந்த இடத்துக்கு வந்தான்.

மீண்டும், அந்த காட்டில் கனத்த மழை பிடித்தது.

குணாவிற்குள் ஏதேதோ எண்ணங்கள் வந்து மறைந்து கொண்டிருந்தது.

அசைந்தபடி எரிந்துக் கொண்டிருக்கும் அந்த தீ-யையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த தீ-யும் முழுவதுமாக அணைந்து போனது. நிலா வெளிச்சம் கூட புகமுடியாத அடர்ந்த காட்டில், செய்வதறியாது திணறியபடி குணா, அந்த மண்டபத்தில் இருட்டில் அமர்ந்திருந்தான்.

சுற்றிலும், மழை கொட்டோ கொட்டென்று பெய்யும் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது.

இப்போது, அவனது கண்கள் இருட்டில் கொஞ்சம் ஊடுருவி பார்க்க பழகியிருந்தது. சுற்றிப் பார்த்தான். மண்டபத்தின் பாழடைந்த தூண்களும், அந்த தூண்களை ஒட்டி ஊடுருவியிருக்கும் மர வேர்களும் கொஞ்சமாக கண்ணுக்கு தெரிந்தது.

பயத்தின் காரணமாக, தொண்டை கணத்து, தண்ணீர் தாகமெடுத்தது.

சற்று நேரத்திற்கு முன், தாஸ் அவனுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்த, அந்த உடைந்த, பெரிய சைஸ் அகல் விளக்கு அவனக்கருகில் இருப்பதை நினைவுக்கூர்ந்து, தடவிப் பார்த்து கண்டெடுத்தான்.

மண்டபத்தின், ஓரத்தில், மழை நீர் சொட்டிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கவே, அந்த சத்தம் வந்த திக்காக மெதுவாக நடந்து சென்று, அந்த அகல்விளக்கில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஒரு பயங்கர இடி... காது கிழிந்துவிடும் சத்ததுடன் இடித்தது.

'ஆஆஆஆ...' என்று பயத்தில் குணா அலற, அந்த இடிச்சத்தம் கேட்ட நடுக்கத்தில், அவன் கையிலிருந்த, அகல்விளக்கு நழவி கீழே விழுந்து உடைந்தது...

'சே..!' என்று அலுத்துக் கொண்டான்.

பிறகு, அங்கு சொட்டிக் கொண்டிருக்கும் தண்ணீரை, அப்படியே வாய் வைத்து குடித்தான். தாகம் தீர்ந்து, உடம்பில் குளிரெடுக்க ஆரம்பித்தது.

இம்முறை, சத்தமில்லாமல், ஒரு மின்னல் வெளிச்சம் வந்து போனது.

அந்த கண நேர வெளிச்சத்தில், மண்டபத்துக்கு வெளியே தெரியும் காடு, வெளிச்சமாக அவன் கண்களுக்கு முன் தெரிந்து மறைந்தது. அந்த வெளிச்சத்தில் அவன் கண்ட காட்சியில், ஏதோ ஒன்று தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்ததை கண்டான். அது என்ன என்று நினைவுக்கூற, அது ஒரு புலியின் முகமோ என்று சந்தேகம் எழுந்தது அவனை கலவரப்படுத்தியது.

அவன் அப்படி நினைத்த மாத்திரத்தில், அந்த மின்னல் வெளிச்சத்துக்கு உண்டான இடிச்சத்தம் கேட்டது.

பயந்து போனான். தடவி தடவி நடந்து போய், அங்கிருந்த ஒரு தூணுக்கு பின்புறம் மறைந்துக் கொண்டான்.

அங்கிருந்து எட்டிப்பார்த்தபடி, காட்டுக்குள் நோட்டம் விட்டான். இருட்டு... ஒன்றும் தெரியவில்லை...

மீண்டும் ஒரு மின்னல் வெளிச்சம் தெரிந்தது. இம்முறை, அந்த வெளிச்சத்தில்... கூர்ந்து பார்க்க...

அது... புலிதான்...

ஆம்... புலியேதான்... சந்தேகமேயில்லை...

அது ஒரு இடத்தில் நின்று மண்டபத்தையே கோபத்துடன் உற்று நோக்குவதைக் கண்டான்.

இடிச்சத்தம்...

தூணில் முழுவதுமாக மறைந்துக் கொண்டான்.

குணா தனது வாழ்நாளில் இப்படி பயந்ததில்லை... நடுக்கத்துடன், செய்வதறியாமல், மீண்டும் இருட்டில், அந்த புலி நின்றிருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆபத்து நேரத்தில், மனிதனுக்கு, புலன்கள் மிகவும் கூர்மையாக வேலை செய்யும்... இது இயற்கை மனிதனுக்கு கொடுத்த வரத்தில் ஒன்று...

அப்படித்தான், குணாவுக்கு அப்போது நேர்ந்தது. கண்கள் இருட்டை துழாவியது... காது மழை வரும் சத்தத்தை தாண்டி கூர்மையாக அதிர்வுகளை கேட்க முயன்றது...

மீண்டும் மின்னல் வெளிச்சம் சற்று அதிகநேரம் நீடித்த படி ஃப்ளாஷடித்தது... கண்களை கூர்மையாக்கிக் கொண்டு, அந்த புலி நின்றிருந்த இடத்தைப் பார்க்க, அங்கே புலியில்லை... எங்கே போனது..? ஒருவேளை மழைக்கு பயந்து திரும்பி போயிருக்குமோ... என்று எண்ணியபடி, கணநேரத்தில் கண்களை அங்குமிங்கும் அலையவிட்டு துழாவிக் கொண்டிருக்க... காணக்கூடாத காட்சியை அவன் கண்கள் கண்டது.

அந்த புலி, குணா நின்றிருக்கும் மண்டபத்தில் தாவி ஏறிக்கொண்டிருந்தது... இதற்குள் மின்னல் வெளிச்சம் மறைந்துவிட... மீண்டும் இருட்டு...

'ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்...'  என்று பயத்தில் எழுந்த பெருமூச்சை உள்ளிழுத்துக் கொண்டான்.அப்படியே உள்ளடக்கி, மூச்சுவிடாமல் நின்றிருந்தான். இப்போது, அந்த புலி அந்த மண்டபத்துக்குள் நடந்து முன்னேறிக்கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. சிறுவயதில், அவன் வண்டலூர் உயிரியல் பூங்காவில், புலிக்கூண்டுக்கு அருகில் நிற்கும்போது, அவன் உணர்ந்த புலியின் நாற்றத்தை இப்போது அவனால் உணர முடிந்தது.

என்ன குணா என்ன செய்யப் போகிறாய்... புலியோடு சண்டைபோடமுடியுமா... அது நடக்கிற காரியமில்லை... வேறென்ன வழி இருக்கிறது... என்று குழப்பமாக அவன் மனது ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தது...

'குணா, மே பி இந்த கிணறுதான் நாம வெளியே போறதுக்கான வழியோ என்னமோ..?' என்று தாஸ் அந்த கிணற்றில் இறங்குவதற்கு முன் சொன்னது நினைவுக்கு வந்து போனது... அவன் கூறியது போல், கிணற்றுக்குள் இறங்கிவிடுவோமா..? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்த புலி அலட்சியமாக உறுமியது...

'க்க்க்ர்ர்ர்ர்ர்...' என்று அந்த புலியின் கர்ஜனை மண்டபத்தையே உலுக்குவது போல் கேட்டது... அதைத் தொடர்ந்து ஒரு இடியும் இடித்தது.

அந்த கர்ஜனை சத்தமும் இடிச்சத்தமும் ஒன்றாக கேட்க, அவன் உடம்பில் நூறு மொபைல் ஃபோனை வைத்து, வைப்ரேட் செய்வது போல் இருந்தது.

இதற்குமேலும் தாமதித்தால் மரணம் நிச்சயம். எப்படியும் சாவதென்று முடிவான பிறகு, புலியின் வாயால் உயிருடன் துடிதுடித்து சாவதை விட, அந்த கிணற்றில் குதித்து செத்துவிடலாம். என்று யோசித்து அந்த தூண்மறைவிலிருந்து வெளியேறினான்...

அவன் வெளியேறிய அடுத்த நொடி, மீண்டும் ஒரு மின்னல் வெளிச்சம் அடித்து மறைந்தது. அந்த கண நேர வெளிச்சத்தில் அந்த புலியும், குணாவும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டனர்.

யோசிக்காமல் குணா ஒரே ஓட்டமாக அந்த கருவறைக்குள் ஓடினான். புலி அவன் ஓடிய திசையை கணித்தபடி பயங்கர உறுமலுடன், இருட்டில் அவனை துரத்தி வந்தது.

குணா கருவறைக்குள் ஏற்கனவே நுழைந்து பழக்கப்பட்டிருந்ததால், சுலபமாக நுழைந்தான். அவனை துரத்தி வந்த புலி, சுவற்றில் மோதி, விழுந்தது. அது எழுந்து சுதாரிப்பதற்குள் அவன் கிணற்றுக்குள் குதித்து விட முயன்று, அந்த கிணற்றுக்குள் இறங்க எத்தணிக்க, அந்த கிணற்றில் தாஸ், ஏற்கனவே கொஞ்சமாக திறந்திருந்த துவாரம், இப்போது அவன் நின்றிருந்த பக்கத்துக்கு எதிர் திசையில் இருப்பது தெரிந்தது. அவன் அந்த துவாரத்தை நெருங்கி உள்ளே இறங்குவதற்குள், புலி வந்து தன்னை கவ்வி விடுமே என்ற நடுக்கத்தில், பயத்தில் மனிதனுக்கு ஏற்படும் அசாத்திய பலத்தில், அவன் பக்கமிருந்த, அந்த கிணற்றின் மேல்பக்க மூடி போன்ற வட்ட வடிவ கல்லை ஒரே தள்ளில் தள்ள, அது எதிர்பக்கமாக தள்ளிக்கொண்டு அவனுக்கு வழிவிட்டது.

இருட்டில் பார்க்க பழகிய அவனது கண்ணுக்கு, புலி எழுந்த தன்னை நோக்கி தாவ முனைவது தெளிவாக தெரிந்தது. சரியாக அது பாயும்போது, அவன் கிணற்றுக்குள் குதித்துவிட்டான். புலி அந்த கருவறை சுவற்றுக்குள் மோதி கீழே விழுந்து எழுந்து, அந்த கிணற்றை எட்டிப் பார்த்தபடி கோபமாக உறுமியது.

'இந்த சம்பவத்தை, என் லைஃப்ல நான் மறக்க முடியாது..' என்று குணா, மூவரிடமும் நடந்த விஷயத்தை கூறிமுடித்தான்.

அந்த அறையில் சிறிது நேரம் நிசப்தம்...

மூவரும் குணா சொல்லி முடித்ததை அவரவர் கற்பனையில் காட்சிப்படுத்தி கொண்டிருந்ததை அந்த நிசப்தம் உணர்த்தியது.

லிஷா தொடர்ந்தாள்... 'குணா, நீங்க அந்த கிணத்துல குதிச்சதுல தப்பே இல்ல... இல்லன்னா.. இந்நேரம் நீங்க அந்த காட்டுப்புலிக்கு இரையாயிருப்பீங்க...' என்று கூறியபடி தன்னருகிலிருந்து தண்ணீர் டம்ளரை எடுத்து குணாவிடம் கொடுத்தாள்...

'தேங்க்ஸ் மஞ்சரி..' என்று குணா வாங்கிக் கொண்டான்.

'குணா... நான் மஞ்சரியில்ல... லிஷா..' என்று தீர்க்கமாக கூற... குணா அமைதியாக தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான்.

சந்தோஷ் தொடர்ந்தான்... 'பாஸ், இவரு இடத்துல நான் இருந்தாலும், உங்ககூட, மறுபடியும் அந்த காட்டுக்கோவிலுக்கு வரமாட்டேன்னுதான் சொல்லியிருப்பேன்' என்று கூற...

தாஸ் அங்கே ப்ரொஜெக்டர் வெளிச்சத்தில் சுவற்றில் பிரம்மாண்டமாய் தெரிந்து கொண்டிருக்கும் ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சந்தோஷ், குணாவிடம் திரும்பி, 'மிஸ்டர் குணா..! நீங்க ரெண்டு பேரும் இறங்கினது ஒரே கிணறுதான், ஆனா, எப்படி வெவ்வேற காலகட்டத்துக்கு வந்து ரீச் ஆனீங்கன்னு தெரியலியே..?' என்று கூற

குணா, டம்ளரிலிருந்த தண்ணீரை முழுவதுமாய் குடித்து முடித்துவிட்டு சந்தோஷிடம்...

'நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல..' என்றான்.

இத்தனை நேரம் அந்த ஓவியத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்த தாஸ்...

'யெஸ்...' என்று குதூகலித்தபடி...

'எனக்கு புரிஞ்சிடுச்சி...' என்று மூவரையும் பார்த்தான்...

மூவரும் அவன் சொல்லப் போவதை கேட்க ஆர்வமயாயிருந்தனர்...

(தொடரும்...)Signature

17 comments:

அருண் பிரசாத் said...

First, படிச்சிட்டு வந்துடரேன் பாஸ்

அருண் பிரசாத் said...

வாவ்... செம த்ரில்... சூப்பரா போகுது... இப்படியே கொண்டு போங்க, சீக்கிரம் முடிக்காதிங்க. கலக்கல்.

என்ன சொல்லுறதுனே தெரியல...

Ramesh said...

செம திரில்லிங்...பாஸ்..வட்ட வடிவ கல்ல திருப்பற திசைக்கேற்ப பின்னாடியோ...முன்னாடியோ டைம் டிராவல் பண்ணலாமா? சூப்பருங்க.....அசத்திட்டீங்க...

கவி அழகன் said...

ஆஹா நாம இதுவரைக்கும் சிந்திக்கவே இல்லை வாழ்த்துக்கள்
கொள்ளை கொண்டுவிட்டீர்கள்

வேங்கை said...

ஹரிஷ் நல்லா போகுது

ஆனால் கடைசி 2 பாகம் கொஞ்சம் வேகம் குறையுது

நல்ல கற்பனை ஹரிஷ் உங்களுக்கு கலக்குங்க

சீக்கிரம் அடுத்த பதிவு ஹரிஷ்

Gayathri said...

rombha nallaa poguthu....aarvamum koodikkite poguthu

நாடோடி said...

சூப்ப‌ர் ஹ‌ரீஸ்... ப‌டிக்கும் போது‌ கொஞ்ச‌மும் திரில்லிங் குறைய‌வில்லை.. தொட‌ருங்க‌ள்.

சீமான்கனி said...

ஹ‌ரீஸ்...ஆஹா,...தாஸ் கண்டு பிடிச்சது என்ன???ஆர்வம் அதிகமாகுது...விரைவாய் தொடருங்கள்...

DREAMER said...

வாங்க அருண்பிரசாத்,
எப்படியும் இந்த கதை, இன்னும் நிறைய பாகங்கள் போகும்னுதான் நினைக்கிறேன். அடுத்து வரப்போகிற பாகங்களுக்காக, நிறைய தகவல்கள் சேகரிக்க வேண்டியிருக்கு... தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி...

வாங்க ரமேஷ்,
கதை படிக்கும்போது, நமது ஊகங்களை செலுத்தி படிப்பதில் சுவாரஸ்யம் அதிகமே..! நீங்கள் அந்த முறையில் இந்த கதையை படிப்பது மிக்க மகிழ்ச்சி...! தொடர் ஆதரவுக்கு நன்றி!

வாங்க யாதவன்,
//கொள்ளைகொண்டுவிட்டீர்கள்//
வாழ்த்துக்கு நன்றி

வாங்க வேங்கை,
கதையின் போக்குக்கு தேவையான வேகத்தைத்தான் அந்தந்த பாகத்தில் முடிந்தவரை கொடுத்து வருகிறேன்... இருந்தாலும், இன்னும் சுவாரஸ்யம் கூட்ட முயற்சிக்கிறேன். தொடர் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி..!

வாங்க காயத்ரி,
கண்டிப்பாக உங்கள் ஆர்வத்தை குறைக்காமல் கதையை கொண்டு செல்கிறேன்... தொடர்ந்து கதையை ரசித்து படித்து வருவதற்கு மிக்க நன்றி!

வாங்க நாடோடி நண்பரே,
தொடர்ந்து படித்து ஊக்கமளித்து வருவதற்கு மிக்க நன்றி!

வாங்க சீமான்கனி நண்பா,
தாஸ் கண்டுபிடிச்ச அந்த விஷயத்தை சில தகவல்களோடு சேர்த்து சொல்ல வேண்டியிருக்கிறது... அதற்கான தகவல் சேகரிப்பில் ஈடுப்பட்டிருக்கிறேன். முடிந்தவரை அடுத்த 3 நாட்களுக்குள் அடுத்த பாகத்தை போட்டுவிடுகிறேன். காத்திருப்புக்கும், தொடர் வாசிப்புக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

-
DREAMER

Unknown said...

படிக்க படிக்க ரொம்ப ஆர்வத்தை தூண்டறீங்க.. இந்த பாகம் டாப்..

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்
புலி என்றவுடனே கொஞ்சம் திரில் கொரஞ்சிருச்சு ப்ளீஸ் திரில்ல கூட்டுங்க
http://marumlogam.blogspot.com

VampireVaz said...

கொஞ்சம் lull ஆகும்போது again a ட்விஸ்ட்.. good going dude...

Kalyan said...

simply rocking

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐயோ .... இப்படி ஒரு சஸ்பென்ஸ் ஸ்டோரி நான் படிச்சதே இல்ல சார்... ப்ளீஸ் சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடுங்க... மண்டை வெடிச்சுடும் இல்லேனா... மொதல் பார்ட் படிச்சு விட்டுட்டேன்... மறுபடியும் மத்த பார்ட் எல்லாம் இன்னிக்கி தான் படிச்சேன்... பேசாம கதை முடிச்சப்புறம் வந்து படிச்சுருக்கலாமொனு தோணுது... சூப்பர் சூப்பர் சூப்பர்... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ் ...I can't judge anything, no clues left...excellent writing

DREAMER said...

வாங்க பாபு (பதிவுலகில் பாபு),
ஆர்வமாக படித்து வருவதற்கு நன்றி..!

வாங்க Dinesh Kumar,
புலியை நீங்கள் குணாவின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் கிலியாக இருக்குமே..! இல்லையா..! சரிங்க... த்ரில்லை கூட்ட முயற்சிக்கிறேன்... தொடர் வாசிப்புக்கு நன்றி!

வாங்க Vaz,
ட்விஸ்ட்டை ரசித்தமைக்கு நன்றி!

வாங்க கல்யாண்,
//Simply rocking//
நன்றி..!


வாங்க அப்பாவி தங்கமணி,
முதல் முறையா ஒரு பெரிய தொடர் எழுதுறேன்..! எனக்கே ரொம்ப த்ரில்லாத்தான் இருக்கு. இந்த மாதிரி இண்ஸ்டால்மெண்ட்ல கதையை நான் இதுவரை பப்ளிஷ் பண்ணதில்ல..! உங்களைப் போன்ற நண்பர்கள் ஆதரவு வழங்குவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. முடிந்தவரை இதில் நிறைய த்ரில் & சஸ்பென்ஸை கூட்ட முயற்சிக்கிறேன். இன்று மாலை 'கேணிவனம் பாகம்-08' கண்டிப்பாக போட்டுவிடுகிறேன். நன்றி!

-
DREAMER

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்கு சார்! இந்த மாதிரி திரில் கதைகள் படிக்கிறதுக்கு ரொம்ப பிடிக்கும்! வாழ்த்துக்களும் நன்றிகளும்!

DREAMER said...

மிக்க நன்றி எஸ்.கே..! தொடர்ந்து வாருங்கள்..!

-
DREAMER

Popular Posts