Saturday, April 27, 2013

கூண்டு [சிறுகதை]




2 மணி நேரத்திற்கு முன்னால்...

'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின பணத்தை திருப்பி கொடுத்துடு.. இல்லன்னா நடக்கிறதே வேற..' என்று காளிதாஸ் தான் இருக்குமிடம் ஹாஸ்பிடல் அறை என்பதையும், தான் ஒரு பேஷண்டிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து கத்திக்கொண்டிருந்தான். அவ்வளவு கோபம்...

ஆனால் அவனுக்கெதிரே பேஷ்ண்டாய் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த கணேஷிடம் அவன் கோபத்தை சட்டை செய்யாத ஒருவிதமான ஏளனம் தெரிந்தது.

'காளி நீ எப்டி கேட்டாலும் என்னான்ட இப்ப பணமில்ல...'

'கடங்கார நாயே... 2 லட்சத்தை திருப்பிக் கொடுக்க வக்கில்லாத உனக்கெல்லாம் எதுக்குடா xxxxxxxxxx' என்று காளி மேற்கொண்டு பேசியதை டைப் செய்ய முடியாதளவிற்கு கொச்சைத்தனம் நிரம்பியிருந்தது

அதை கேட்ட கணேஷிற்கு தன்னிலை மறந்து கோபம் வந்தது... கட்டிலிலிருந்து எழுந்துவிட்டான்... உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ சகிதங்களையும் மறந்து தன்னிடம் மிச்சமிருந்த கொஞ்சநஞ்ச சக்தியையும் பிரயோகித்து காளிதாஸின்மீது கோபமாய் பாய்ந்தான். அந்த அறையில் அடிதடி நடந்தேறியது... 


2 மணி நேரத்திற்கு பிறகு

அந்த ஹாஸ்பிடலின் 7வது தள லிஃப்ட் தனது நீண்டவாயை திறந்து கொண்டது.

உள்ளே ஒரு குடித்தனமே நடத்தலாம் என்றளவுக்கு பெரிய இடம்கொண்ட லிஃப்ட் அறை கண்கூசாத ட்யூப்லைட் வெளிச்சத்துடன் வரவேற்றது.

வார்டுபாய் நிதின் தான் தள்ளிவந்த ஸ்ட்ரெட்சருடன் உள்ளே நுழைந்தான்... ஸ்ட்ரெட்சரில் பிணமாய் கணேஷ்...

வார்டுபாய் நிதின், லிஃப்டில் "G" என்ற 'கிரவுண்டு ஃப்ளோருக்கு' அழைத்து செல்லும் பட்டனை அழுத்த.. லிஃப்ட் வாயை மூடிக்கொள்ள பார்த்தது. திடீரென்று லிஃப்ட் கதவுக்கு நடுவே ஒரு அழகான கையும் ஒரு ரிப்போர்ட் ஃபைலும் உள்நுழையப் பார்க்க லிஃப்ட் மீண்டும் மூடிய வாயை திறந்துக் கொண்டது.

அந்த அழகான கை... நர்ஸ் 'ஸ்வேதா'வுடையது. கைமட்டுமல்ல... அவளும்தான் அழகு... நிதினை பார்த்தும் பார்க்காத்துபோல் வேறுபக்கம் திரும்பிக் கொண்டு ஏற்கனவே அழுத்தியிருந்த "G" பட்டனை மீண்டும் அழுத்தினாள்.

இந்தமுறை கதவு முழுவதுமாய் மூடிக்கொள்ள லிஃப்ட் தனது டிஸ்ப்ளேயில் '7' என்ற பட்டனுக்கு அருகில் ஒரு கீழ்நோக்கு அம்புக்குறியை காட்டியபடி கீழிறங்கியது. லிஃப்டுக்குள்ளே ஏ.ஆர்.ரஹ்மானின் 'காதல் ரோஜாவே' என்ற பாடலின் இன்ஸ்ட்ரூமெண்ட்டல் பாடல் மெலிதாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

வார்டுபாய் நிதின்... தனக்கருகே இருக்கும் ஸ்ட்ரெட்சருக்கு மறுபுறம் நின்றிருந்த நர்ஸ் ஸ்வேதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குள்ளே ஓடும் காதல் எபிசோடுக்கு சொந்தக்காரி அவள்.

நிதின் அந்த ஹாஸ்பிடலில் கடந்த 4 மாதங்களாய் வார்டுபாயாக வேலை செய்துவருபவன்.

அவன் வேலைகு சேந்த அன்று, 4வது தளத்தில் ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணன்-ஐ சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டு, 4வது தளத்திற்கு வந்தடைந்தான். யார் அந்த சரவணன் என்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த போது. இதே லிஃப்டுக்குள்ளிருந்து ஒரு அழகான நர்ஸ் வெளியேறினாள். (ஸ்வேதாதான்) அவளை பார்த்ததும் நிதினுக்கு இந்த ஹாஸ்பிடல் மிகவும் பிடித்துப் போனது. அவளிடம் சென்று  ஃப்ளோர் இன்சார்ஜ் எங்கேயென்று கேட்கலாம் என்று லிஃப்ட்-ஐ நெருங்கவும். அவள் இவனிடம் 'சார் இங்க ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணன் எங்கேயிருக்காருன்னு தெரியுமா..' என்று கேட்டாள். நிதின் சிரித்துவிட்டான்.

பின் இருவரும் சேர்ந்து சரவணனை கண்டுபிடித்தனர். ஆனால், அதன்பிறகு அவளுக்கும் நிதினுக்கும் வெவ்வேறு ஷிஃப்ட்-இல் வேலை வாய்த்தது... இவன் வேலை முடிந்து வரும்போது, அவள் வேலையிலிருந்து கிளம்பிக்கொண்டிருப்பாள். அல்லது அவள் வேலைக்கு வரும்போது இவன் ஷிஃப்ட் முடிந்து வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருப்பான். இதனால் ஸ்வேதாவிடம் சகஜமாக பேசி பழக முடியாத நிலை. இப்படியே நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. இவளிடம் தனக்கிருக்கும் ஈர்ப்பு காதல்தான் என்று தனக்கு தெரிந்தாலும், அதை எவரிடமும் பகிர்ந்துக் கொள்ள தைரியமும், சந்தர்ப்பமும் கிடைக்காத ஒரு அசௌகரியமான நிலையில் நிதின் இருந்துவந்தான். ஆனால் இன்று...

இதோ... ஸ்வேதா அவன் எதிரே... யாருமில்லாத இந்த அறையில்... யாருமில்லை என்று சொல்ல முடியாது. தன் முன்னே ஒரு பிணம் அதுவும் கொலை செய்யபட்ட பிணம்... அதனால், நிதினின் மனம், பேசு.. பேசு.. ஸ்வேதாவிடம் உன்னைப்பற்றி ஞாபகப்படுத்தி அறிமுகமாகிவிடு... இம்முறையும் தவறவிட்டால் பிறகு சந்தர்ப்பம் கிடைப்பது அரிதாகிவிடும்.

இதற்குள் லிஃப்ட் டிஸ்ப்ளேயில் 5வது தளம் என்று வந்து கீழ்நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. சே.. என்ன இது அவசரம் அதிகபட்சம் பத்து அல்லது இருபது விநாடியெல்லாம் ஒரு சந்தர்ப்பமா.. அவளிடம் பேச நான்கு மாதங்களாக காத்திருந்த எனக்கு இந்த இருபது விநாடிகள்தான் சந்தர்ப்பமா... கடவுளே என்வரையில் நீ ஒரு கஞ்சன். ஒரு PAUSE பட்டன் அழுத்தி என் வாழ்க்கையை இந்த இடத்திலேயே கொஞ்சம் நிறுத்திவைக்கக் கூடாதா என்று அவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கரண்ட் கட் ஆனது... 

ஆண்டவன் செயலல்ல... அரசாங்கத்தின் செயல்...

லிஃப்ட் நின்றது.. உள்ளேயிருக்கும் வெளிச்சம் அணைந்து எமர்ஜென்சி லைட் எரிந்து மிதமான வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.

நிதின் சுற்றும் முற்றும் பார்த்து ஸ்வேதாவை பார்த்தான்.. அவளும்தான். 

'இது ரெகுலர் பவர்கட்டா?' என்றாள்.

'ஆஆமாங்க.. 12 to 2' என்றான்

'ஜெனரேட்டர் போட்டுருவாங்கதானே..' என்றாள்

'ஆ...' என்றான்

போடாமல் இருந்தால் நன்றாயிருக்கும் என்றது மனம்.

ஒரு இரண்டு நிமிட மௌனம்.

நேரம் கிடைக்கவில்லை என்று காத்துக்கிடந்தவன் இரண்டு நிமிடத்தை வீணாக்கிவிட்டோமே என்று நினைத்துக் கொண்டான்.

'நீங்க ஸ்வேதாதானே..?' என்றான்

'ஆமா.. உங்களுக்கெப்படி தெரியும்..?'

'என்னங்க... என்னை மறந்துட்டீங்களா..? ரெண்டு பேரும் ஒன்னாத்தான் இங்க வேலைக்கு சேர்ந்தோம்... ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணனை-ஐ ஒண்ணா தேடிட்டிருந்தோமே..?' என்றான்

'ஆ... ஆமாமா... இப்ப ஓண்ணா லிஃப்ட்ல மாட்டிட்டிருக்கோம்..' என்று சொல்லி சிரித்தாள்

கொள்ளை கொள்ளும் சிரிப்பு... போதும்... இது போதும்... கடவுளே... இந்த லிஃப்டில் மேலும் ஒரு பிணம் விழாமல் பார்த்துக்கொள்... 

'அழகா சிரிக்கிறீங்க..' என்றான். ஆனால், அவள் பதிலெதுவும் கூறாமல், ஸ்ட்ரெட்சரில் முகம் போர்த்தியிருந்த பிணத்தை கொஞ்சமாய் போர்வை விலக்கி பார்த்தாள்.

'என்னாச்சு..?'

'இந்தாளு செம கதை... ஹார்ட் பேஷண்ட்.. இவனை பாக்க வந்த விசிட்டருக்கும் இவனுக்கும் ஏதோ தகராறாம்... இரண்டும் அடிச்சிக்கிட்டாங்க... பேஷ்ண்ட் கீழ விழுந்து அதிரிச்சியல் போயிட்டான்... கொன்னவன் ஆள் எஸ்கேப்... ஹாஸ்பிட்டல் ஃபுல்லா தேடிட்டாங்க.. ஆள் எங்கேன்னே தெரியல..'

'நம்ம ஹாஸ்பிட்டல்ல இப்படி ஒரு கொலையா.. கடவுளே..! போலீஸ் வரலையா..?'

'வந்து ஃபோட்டோல்லாம் எடுத்தாங்க... ச்சீஃப் டாக்டர்ட்டல்லாம் பேசிட்டு போனாங்க... பாடிய ஜி.எச்.க்கு கொண்டு போகணுமாம்... கீழ ஒரு கான்ஸ்டபிள் மட்டும் நிக்கிறாரு..' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஸ்ட்ரெட்சர் லேசாக ஆடியது... இருவரும் அதிர்ந்தனர்.. பிறகு பிரமை என்று சுதாரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

சிரிப்பொலியுடன் லிஃப்டின் ஃபோன் ஒலித்தது

'ஹலோ..'

'உள்ளே யாரிருக்கீங்க..?'

'சார் நான் வார்டுபாய் நிதின்.. கூட நர்ஸ் ஸ்வேதா இருக்காங்க..'

'டெட்பாடி எங்கே..?'

'அதுவும் லிஃப்ட்லாதான் இருக்கு... ஜெனரேட்டர் இன்னும் போடலியா சார்..?'

'இங்க ஒரு ப்ராப்ளம்.. நேத்து ராத்திரி ஜெனரேட்டர் சர்வீஸ் பண்ண வந்தவங்க... மினிம்ம் பேக்-அப் மட்டும் கொடுத்துட்டு, 4ல இரண்டு லிஃப்ட்க்கு ஜென் பவர் போகாதுன்னு அட்மின்கிட்ட சொல்லிட்டு போயிருக்காங்க.. அந்தாளு ரிப்போர்ட் பண்ணாம போயிட்டான். நீங்க இருக்கிற லிஃப்ட்டும், பக்கத்துல காலியா ஒரு லிஃப்ட் மாட்டிக்கிச்சு... லோக்கல் எலக்ட்ரீசியன்கிட்ட சொல்லியிருக்கோம். வந்துருவாரு.. வந்ததும். லைன்-ஐ மாத்தி கொடுத்து லிஃப்ட்-ஐ ஆன் பண்ணிடலாம். அதுவரைக்கும் பத்திரமா இருங்க..' என்று கூறிவிட்டு ஃபோனை வைத்தான்.

கடவுள் லிஃப்டுக்குள்தான் இருக்கிறாரோ.. நாம் எண்ணப்படி நடக்கிறதே என்று நிதின் ஆச்சர்யப்பட்டான். விஷயத்தை ஸ்வேதாவிடமும் சொன்னான்.

மீண்டும் இரண்டு நிமிட மௌனம்.

'உங்களுக்கு எப்படி என்னை கரெக்டா ஞாபகம் இருக்கு..?' என்று கேட்டாள்

'இவ்ளோ அழகான ஒரு பொண்ணை அவ்ளோ சீக்கிரமா யாராவது மறந்துருவாங்களா என்ன..?!' என்றான். வெட்கப்பட்டு சிரித்தாள்

இதுதான் சமயம்... சொல்.. சொல்லு.. சொல்லிவிடு... மனக்குரல் கேட்டுக்கொண்டேயிருக்க...

'நான்... நான்... உங்களை ரொம்ப லவ் பண்றேங்க..' என்றான்

அவள் முகம் குழப்பமாய் மாறியது...

'கோவிச்சுக்காதீங்க ஸ்வேதா.. எனக்கு தெரியும்... நான் உங்களை லவ் பண்றது தப்புதான்... ஆனா, உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு... நாலு மாசமா உங்ககிட்ட பேசணும், எப்படியாவது ஃப்ரெண்டாயிடனும்னு நிறைய முயற்சி பண்ணேன். சேன்ஸே கிடைக்கல... உங்களை பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்... உங்க பேரு.. நீங்க தங்கியிருக்கிற ஹாஸ்டல்-னு.. ஆனா உங்ககூட பேசதான் வாய்ப்பே கிடைக்கல.. இன்னைக்கு கிடைச்சிடுச்சி'

'உங்க பேரென்ன..?'

'நிதின்'

'நிதின்... நான் உங்கள திட்டவோ, இல்ல கம்ப்ளைண்ட் பண்ணவோ போறதில்ல... நீங்க உங்களுக்கு பிடிச்சதா சொல்லியிருக்கீங்க.. ஆனா, எனக்கு உங்களை பிடிக்கிறமாதிரி எதுவுமே நடக்கலியே.. முதல் நாள் நாம ரெண்டு பேரும் சேந்து இந்த ஹாஸ்பிடல்ல ஜாய்ன் பண்ணினோம்... நான் நர்ஸ்.. நீங்க வார்டுபாய்... காம்பினேஷன் கொஞ்சம் கஷ்டம். ஆனா எனக்கு பிடிச்சி போச்சுன்னா, என் வீட்ல எந்த பிராப்ளமும் இருக்காது... நான் சொல்றதுதான். ஆனா, எனக்கு உங்களை பிடிக்கணும். பாக்கலாம், இதே ஹாஸ்பிடல்லதான் ஒண்ணா வர்க் பண்ண போறோம். ஏதாவது எனக்கு பிடிக்கிற மாதிரி ஒரு விஷயம் நடக்காமலா போயிடப்போகுது...' என்றாள்

இவள் ஆம் என்கிறாளா இல்லை என்கிறாளா..? புரியாமல் நிதின் விழித்தான்

'நான் கரெஸ்பாண்டென்ஸ்ல படிச்சிட்டிருக்கேன்... எப்படியும் நல்லா வந்துருவேன். ஓரளவுக்கு இங்கிலீஷ்ம் தெரியும். நாம ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துவரும்னு எனக்கு தோணுது... இந்த லிஃப்ட்டுக்குள்ள இப்ப நீங்க என்கூட தனியா இருக்கிறதே ஒரு ஸ்பெஷலா அமைஞ்ச சந்த்ர்ப்பம்தான். உங்ககூட மனசுவிட்டுப் பேச கடவுளா பாத்து அமைச்சிகொடுத்த சந்தர்ப்பமாத்தான் நான் நினைக்கிறேன்'

'இருக்கலாம்... நம்புங்க... ஆனா, எனக்கு பிடிக்கிற மாதிரி ஏதாவது நடக்கணுமாயில்லியா..?' என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் லிஃப்ட் டெலிஃபோன் ஒலித்தது.

'ஹலோ.?'

'நிதின்... நிதின்..'

'ஆமா சார் சொல்லூங்க...'

'நிதின் உள்ள எதுவும் ப்ராப்ளம் இல்லியே..?' 

'அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்..'

'நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.  நான் சொல்றதை கவனமா கேளுங்க... இங்க செக்யூரிட்டி கேமிராவுல அந்த மர்டர் பண்ண ஆள் யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம்.. அதவிட முக்கியமான ஒருவிஷயம்... நான் சொல்லப்போறத கேட்டு பதறாதீங்க..'

'என்ன சார்..' என்று அவன் முகம் குழம்பியது

'அந்த கொலைகாரன் இப்ப உங்ககூட லிஃப்டுக்குள்ள இருந்தாலும் இருக்கலாம்னு கெஸ் பண்றோம்..' என்றதும், நிதின் வயிற்றில் ஒரு அமில ஆறு ஓடியதுபோல் இருந்தது. 

'என்ன சார் சொல்றீங்க..?'

'பதற்றமா பேசாதீங்க... கேஷூவலா பதில் சொல்லுங்க... நீங்க டெட்பாடிய தள்ளிட்டு வந்திருக்கிற ஸ்ட்ரெட்சர்ல கீழவரைக்கும் பெரிய துணி மூடியிருக்கா..........'

'அ... ஆமா சார்..' நிதினுக்கு வியர்த்தது... ஸ்வேதா அவனை ஆர்வமாக பார்த்தாள்

'அந்தாளு ஸ்ட்ரெட்சருக்கு பின்னாடி போய் மறைஞ்சிக்கிட்டது ரெக்கார்டு ஆயிருக்கு... அதுக்குள்ள அவன் இருந்தாலும் இருக்கலாம்...'

'சார்ர்ர்..'

'பதறாதீங்க.. உங்ககூட இருக்கிற நர்ஸ் கிட்ட ஏதாவது பேச்சு கொடுத்துக்கிட்டு அப்படியே இருங்க... இங்க லோக்கல் எலக்ட்ரீஷியன் வந்துட்டாரு.. 5 நிமிஷத்தலு லிஃப்ட்-ஐ கீழே இறக்கிடலாம்... கிரவுண்ட் ஃப்ளோர் வந்ததும் ஸ்ட்ரெட்சரை அப்படியே லிஃப்டுல விட்டுட்டு, நீங்களும் உங்ககூட இருக்கிற நர்சும் டக்குன்னு வெளிய வந்துடுங்க' என்று கூறி அவர் ஃபோனை வைத்துவிட

நிதின் ஃபோனை இன்னமும் கையிலேயே வைத்துக்கொண்டு ஸ்வேதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்

ஸ்வேதா, 'என்னாச்சு நிதின்...?' என்றாள்

'ஓ...ஓண்ணுமில்ல... ரி..ரிப்பேர் பண்ண்... ணிட்டிருக்காங்களாம்...'

'ஓ.. உங்க முகம் ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி வெளிறிப்போயிடுச்சி...' என்றாள்

நிதின் எச்சில் விழுங்கியபடி குனிந்து டெட்பாடியிருந்த ஸ்ட்ரெட்சரை பார்த்தான்

'இ..இல்லியே..'

'நான சொன்னதை கேட்டு வருத்தப்படுறீங்களா..?' என்றாள்

இவள் என்ன சொன்னாள்.. 'அ..ஆமாம்...' என்றான்

நிதினின் பார்வை மொத்தமும் அந்த ஸ்ட்ரெட்சரிலேயே இருந்தது... ஸ்ட்ரெட்சரில் இருந்த வெள்ளைத் துணி மெல்ல அசைந்து கொடுத்தபடி இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான்

'நீங்க ஒருவகையில தைரியமானவர்தான் நிதின்' என்றாள்

அவன் அவளை ஏறிட்டு பார்த்துவிட்டு மீண்டும் குனிந்தான்.

'ஏன் சொல்றேன்னா, நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையனை லவ் பண்ணேன். ஆனா, அதை அவங்கிட்ட சொல்றதுக்குள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டேன். பட் அந்த பையன் சிம்பிளா 'நோ' சொல்லிட்டு போயிட்டான். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். அதனாலதான் நான் உங்ககிட்ட பட்டுன்னு 'நோ' சொல்ல்லை...'

'சரி'

'என்ன சரி... நான் மட்டும் நீங்க சொன்னதை ஒரு இஷ்யூ ஆக்கி கம்பளைண்ட் பண்ணியிருந்தா உங்க வேலையே போயிருக்கும்.. இல்லையா..'

நிதின் குனிந்த நிலையிலேயே 'ஆமாமா... போயிருக்கும்... தைரியம்தான்'. திடீரென்று ஃபோன் மீண்டும் ஒலித்தது

'ஆஆஆஆ..' நிதின் லேசாக அலறிவிட்டான்

'ஹ்ஹ்ஹ்ஹலோ..'

'நிதின்.. நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். ஆர் யூ ஆல்ரைட்'

'ம்ம்'

'இங்க ரிப்பேர் இன்னும் லேட்டாவும்னு நினைக்கிறேன். நீங்க இப்போ 3வது 4வது ஃப்ளோருக்கு நடுவுல மாட்டிட்டு இருக்கீங்க... ஒரு கான்ஸ்டபிள் 4வது ஃப்ளோர் கதவை திறந்து உள்ளே இற்ங்கி உங்க லிஃப்டுக்கு மேலே வருவாரு... உங்க லிஃப்ட் ஃபேனுக்கு மேலே ஒரு துவாரமிருக்கு அதுவழியா துப்பாக்கிய வச்சிக்கிட்டு உங்களுக்கு பாதுகாப்பா இருப்பாரு பயப்பட வேண்டாம்' என்றார்

'சரி சார்..' என்றான்

'இப்ப என்னவாம்', ஸ்வேதா கேட்டாள்

'ஒண்ணுமில்ல... ஒரு கான்ஸ்டபிள்..' என்று கூறி நிறுத்திக் கொண்டான்.

'என்ன..?'

'இல்ல.. ஒண்ணுமில்ல..' என்று கூறிக்கொண்டிருக்க.. இப்போது மீண்டும் ஸ்ட்ரெட்சர் அசைந்தது. திடீரென்று அதனுள்ளிருந்து ஒளிந்திருந்த அந்த கொலைகாரன் வெளியே வந்தான்

'ஆஆஆஆஆஆஆஆஆ' இம்முறை ஸ்வேதா மட்டுமே அலறினாள்

'ஏஏஏஏய்... கத்தாத... ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்' என்றபடி ஒரு ஆபரேஷன் கத்தியை கையில் வைத்தபடி கூவினான்

சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி கடைசியாய் நிதினிடம் திரும்பினான்

'ஏய்... மஜ்னு... ஃபோன்ல பேசுனது யாரு..?'

'எ..எலக்ட்ரீசியன்'

'சார்.. சார்..னு பேசினுருந்தே..'

'நான் எல்லாரையும் மரியாதையாதான் கூப்பிடுவேன்... சார்..' என்றான்

'பொய் சொல்லாத... போலீஸ் கீழே ரெடியா இருக்குன்னு இவகிட்ட சொன்னேல்ல..?'

'ஆமா..'

'நான் இங்கருந்து தப்பிக்கனும்... எனக்கு உதவி பண்ணு... இல்லன்னா..'

'இல்லன்னா..?'

'இதோ உன் லைலாவ கொன்னுடுவேன் என்று அவளை பிடித்து கட்டிக்கொண்டு கழுத்தில் கத்தி வைத்தான்

'ஆஆ' ஸ்வேதா பயந்தாள்

'ஐயோ.. சார்.. ப்ளீஸ். அவங்களை விட்டுடுங்க...' என்றான்

'சும்மா டைம் வேஸ்ட் பண்ணாத.. எனக்கு ஹெல்ப் பண்ணு... அதோ... அந்த ஃபேனுக்கு மேலே கேப் தெரியுது பாரு... ஃபேனை கழட்டிட்டு அந்த கேப்புல என்னை ஏத்திவிட்டுடு... நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்.. நீங்க கல்யாணம் பண்ணின்னு நல்லாருங்க... ஏதாவது ராங்கு பண்ணா... நீ கல்யாணம் பண்ணாமலே விதவையாயிடுவே' என்று நிதினைப் பார்த்து கூவினான்

நிதினுக்கு உண்மையிலேயே என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்

'ச..சரி..' என்றான்

ஆனால் ஸ்வேதா தடுத்தாள்... 'நிதின் வேண்டாம்.. இவன் ஒரு கொலை பண்ணியிருக்கான்... இவனுக்கு நாம ஹெல்ப் பண்ணக்கூடாது' என்றாள்

'ஏஏ... ரொம்ப பேசாத... கொரவள துண்டாயிடும்' என்று கத்தியை அழுத்தினான்

'ஆஆஆ...'

'டேய்.. பொம்பள பேச்ச கேட்டுகுனு தப்பா ஏதாச்சும் பண்ணே... மவனே இவ பொணத்தைத்தான் பாப்பே..' என்றான்

நிதின் யோசித்தான்... எப்படியும் அந்த கான்ஸ்டபிள் கையில் துப்பாக்கியுடன் லிஃப்டுக்கு மேலே வரப்போகிறார். இவனை தப்பிக்க வைத்தாலும், அங்கே இவன் கைது செய்யபடுவான் அல்லது சுடப்படுவான். எனவே, முடிவெடுத்தான்

'சாரி ஸ்வேதா, நான்... ச..சாருக்கு... ஹெல்ப் பண்ணத்தான் போறேன்' என்றபடி ஸ்ட்ரெட்சரை லிஃப்டுக்கு நடுவே இழுத்தான்...

அதன்மேலே ஏறிக்கொண்டு ஃபேனை கழட்டப்பார்த்தான். ஃபேன் எட்டவில்லை... வேறுவழியின்றி பிணத்தின்மேல் ஏறி நின்று ஃபேனை எட்டிப்பிடித்தான்...

'சார்.. உ..உங்க... க..கத்திய கொடுங்க..?' என்றான்

'ஏய்..?'

'ஸ்க்ரூவை கழட்டனும் சார்.. வெறும் கையால எப்படி கழட்டறது' என்றான்

கொடுத்தான்

கத்திமுனைக்கும் ஸ்க்ரூவுக்கும் சற்றே இடைவெளி இருந்தது. குதிகாலை தூக்கி மேலும் எம்பினான்... இன்னும் கொஞ்சம்

கொஞ்சமாய் ஜம்ப் செய்தபடி ஸ்க்ரூவை எட்டினான். பிடிபட்டது.

திருகினான் பிடி தளர்ந்தது

மேலும் பிணத்தின் மேலிருந்தபடி ஒரு குட்டி ஜம்ப் எம்பி பிடித்தான்

ஃபேனில் தொங்கியபடி ஸ்க்ரூவை கழட்டிக்கொண்டிருக்க.. திடீரென்று பிடி தளர்ந்து தொப்பென்று பிணத்தின்மீது விழுந்தான்.

'ஹெஃப்ஃப்ஃப்' என்று கேவலமாக இருமியபடி அந்த பிணம்(?) உயிருடன் எழுந்து அமர்ந்தான்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அனைவரும் ஒன்றாக அலறினார்கள்

'கணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..?' என்றான் கொலைகாரன்

'கா.. கா.. காளிதாசு... காளி...' என்று பெருமூச்சு வாங்கியபடி எழுந்தமர்ந்த ex-பிணமான கணேஷ் பேசினான்

"கணேஷ்... முழிச்சிட்டியா... யப்பா... யப்பா...' என்று சந்தோஷப்பட்டான்

தானே கொன்ற ஒருவன் பிழைத்துக் கொண்டதற்கு கொலைகாரன் சந்தோஷப்படும் அந்த அதிசய காட்சியை ஸ்வேதாவும், நிதினும் பார்த்தவண்ணமிருந்தனர்

காளிதாஸ் தொடர்ந்தான், 'கணேஷ் என்னை மன்னிச்சிடுப்பா, நான் உன்னை கொன்னது தப்புதான், என்னதான் கந்துவட்டி விடுறவனா இருந்தாலும், கொலையெல்லாம் நான் செஞ்சதேயில்லப்பா, உன்ன கொன்னுட்டு அழாத குறையா, போலீஸ்கிட்ட மாட்டிக்குவோமோன்னு பயந்துட்டிருந்தேன். அப்படி மாட்டியிருந்தா என் பொண்டாட்டி பசங்க கதி என்னாயிருக்கும், ஊர்ல அவங்களுக்கு எவ்ளோ கெட்ட பேரு... வேண்டாம்பா, என்க்கு நீ பணமே திருப்பி கொடுக்க வேண்டாம். என் வாழ்க்கைய திருப்பிக் கொடுத்தியே அதுவே போதும்' என்றான்

'இல்ல காளி...  தப்பு என் பேர்லதான், சின்னவயசுலருந்தே ஊதாரித்தனமா செலவு செஞ்சி பழகிட்டேன். அதனால கடனும் நிறை ஆயிருச்சு... திருப்பிக் கொடுக்க முடியாம எல்லாரையும் ஏமாத்தினுருந்தேன். நான் செத்ததும், ஒண்ணுமே புரியல, ஒரே கரும்புள்ளியா போச்சு, ஏதோ வெளிச்சம் மாதிரி தெரிஞ்சுது, அந்த வெளிச்சத்தை பாத்ததும் மனசெல்லாம் லேசாகி சும்மா பூ கணக்கா பறந்தேன்... திடீர்னு என் மேல ஒரு பெரிய பாரத்தை தூக்கி வச்ச மாதிரி இருந்துச்சு... அந்த பாரத்தோட என்னால அந்த வெளிச்சத்த எட்டவே முடியல... அந்த வெளிச்சத்தை பாத்ததுலருந்து நான் ஒரு குழந்தை மாதிரியாயிட்டேன்ப்பா... நான் பண்ணதுதான் தப்பு... உன் பணத்தை திருப்பி கொடுத்துடுறேன். சத்தியமா கொடுத்துடுறேன். ஆனா, அந்த வெளிச்சம்..' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்

ஸ்வேதாவும், நிதினும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க, லிஃப்ட்-ல் பெரிய லைட் வந்தது. லிஃப்ட் இயங்கியது...

மீண்டும் காதல் ரோஜாவே பாடல் இசை ஆரம்பத்திலிருந்து ஒலிக்க துவங்க

காளிதாஸ் புலம்பினான் 'ஐயோ, கீழே போலீஸ் எனக்காக காத்துட்டிருக்காங்களே..? என்ன செய்ய..' என்று பதறினான்

'காளி சார், அதான் நீங்க கொலையே பண்ணலியே... செத்தவரே பிழைச்சிக்கிட்டாரு.. போலீஸ் என்ன செய்ய போவுது' என்றான் நிதின்

'ஆ...ஆமால்ல..'

'ஆமா காளிதாஸ்... நானே போலீஸ்கிட்ட உன்னிய விட்டுறச்சொல்றேன்..' என்றான்

'விட்டுருவாங்களா..? விட்டுருவாங்களா..? அப்படி விட்டுட்டா.. உங்க ரெண்டு பேரு கல்யாணத்தை நானே ஜாம்ஜாம்னு நடத்தி வைக்கிறேன்' என்று ஸ்வேதாவையும் நிதினையும் பார்த்து சொன்னான்.

இதற்குள் 'கிரவுண்ட் ஃப்ளோர்' என்று கணினி குரல் அழைக்க, லிஃப்ட் திறந்துக் கொண்டது

வெளியே ரெண்டு மூன்று காக்கிச்சட்டைக்காரர்கள் துப்பாக்கியுடன் நின்றிருக்க, அவர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த ஹாஸ்பிட்டல் கூட்டமும் நின்றிருந்தது

மேலும் 2 மணி நேரத்திற்கு பிறகு

ஹாஸ்பிடல் ரிசப்ஷன் டேபிளுக்கு அருகே நின்றிருந்த ஸ்வேதா சிரித்தாள். 

எதிரே வார்டுபாய் உடையிலிருந்து கலர் உடைக்கு மாறியிருந்த நிதின் நின்றிருந்தான்

'ஏன் ஸ்வேதா சிரிக்கிறீங்க..'

'நான் இன்னும் உங்களை லவ் பண்றேன்னே சொல்லலை... அதுக்குள்ள அந்தாளு நம்மளை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னானே..?'

'என்ன ஸ்வேதா... அப்போ உங்களுக்கு என்னை இன்னும் பிடிக்கலியா..?'

'என் உயிர் போவக்கூடாதுன்னு கிரிமனலுக்கே ஹெல்ப் பண்ண துணிஞ்சதால கொஞ்சமா பிடிச்சிருக்கு... பார்க்கலாம்... இன்னும் டைம் இருக்கு... நாம இங்கே ஒண்ணாத்தானே வர்க் பண்ணப்போறோம்..' என்று கூறிக்கொண்டிருக்க, அருகில் ஒருவர் வந்து

'மேடம், லிஃப்ட் சர்வீசுக்கு வந்திருக்கோம்... 4த் ஃப்ளோர் டோர் டேமேஜாமே... ஃப்ளோர் இன்சார்ஜ் சரவணன் எங்கருக்காரு..' என்றான்


- நிறைவு -


Signature

Sunday, April 14, 2013

அன்றும் இன்றும்


அனைவருக்கும் இனிய விஜய ஆண்டு நல்வாழ்த்துக்கள்

அன்று
பண்டிகை நாட்களில் பல கொண்டாட்டங்கள் இருந்தாலும், பின்வீட்டு அண்ணா ஒருவர் 'வீடியோ டெக்' வாடகைக்கு எடுத்து வந்துவிடுவார்... கூடவே பல திரைப்படங்களின் காசெட்-ஐ அடுக்கிக் கொண்டு வந்து டிவி, டெக், காசெட் சகிதம் வைத்திருப்பார்... அடிக்கடி சென்று அந்த காசெட்டுகள் என்னென்ன படம் என்று டைட்டிலை படித்துவிட்டு அந்த படங்களைப் பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருப்போம். அந்த டெக்-ஐ அவர் இரவுதான் போடுவார், ஆனால் அன்று நாள்முழுவதும் ஒருவித பரவசம் ஆட்கொண்டிருக்கும். மாலையிலிருந்தே டிவியையும் டெக்-ஐயும் இணைக்க பிரம்ம்பிரயத்தனம் செய்துக்கொண்டிருப்பார்கள். ஒருவழியாக டிவியில் டெக் தெரிய ஆரம்பித்ததும் அன்று இரவு நிச்சயம் தூக்கம் தொலைத்த ஏகாதசிதான்...

முதலில் ஒரு சாமி படம் பிறகு 2 அல்லது 3 சமூக திரைப்படம்... சுற்றுவட்டாரத்திலுள்ள அத்தனை பேரும் வந்து அந்த டிவிக்கு எதிரே அமர்ந்திருப்பர். சாமி படத்திற்கு பிறகு போடப்பட்டும் படம் நிச்சயம் சூப்பர்ஹிட் தமிழ்ப்படமாய் இருக்கும். அந்த படம் பலமுறை டெக்-ல் போடப்பட்டு ப்ரிண்ட் தேய்ந்து ஆடியோவும் இழுத்துக்கொண்டு போகும்... ஆனாலும், அந்தப்படத்தை அப்படி பார்த்துக்கொண்டிருப்போம். அது முடிந்ததும்  ஒரு சூப்பர் இங்க்லீஷ் படம் இருக்கும் அது ஆக்ஷன் அல்லது ஹாரர் படமாய் இருக்கும். அதைத்தவிர மற்ற சில படங்கள்... சொத்தையோ சொள்ளையோ... அதை வீடியோவில் பார்ப்பது ஒரு தனி ஃபீலிங்தான்.

இன்று
க்ரிஸ்ட்டல் க்ளியர் High Definition க்ளேரிட்டிக்காக வாங்கி வைத்து இன்னமும் பார்க்காத பல ப்ளூ ரே ப்ரிண்டுகள், இது தவிர TVயிலேயே இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக போடப்படும் படங்கள், ஏற்கனவே போடப்பட்ட பலமுறைய TRP வென்ற படங்கள், ஷெட்யூல் போடப்பட்ட வரிசையான சூப்பர்ஹிட் ஆங்கிலப்படங்கள் ஒரு தொலைக்காட்சியில், டப்பிங் படங்கள், பிறமொழிப்படங்கள், தேவையானபோது ரீவைண்டு செய்து பார்த்துக்கொள்ளும், ரெக்கார்ட் செய்து பார்த்துக்கொள்ளும் செட்டாப் பாக்ஸ் வசதி, மேலும், டோரண்ட் உபயத்தில் தேவையான படங்களை தரவிறக்கம் செய்யும் வசதி... இவை தவிர, யூட்யூப்பில் தரமான வெரைட்டியான குறும்படங்கள்... இவ்வளவு இருந்தும், நாள்முழுவதும் இருக்கவேண்டிய பரவசம் மட்டும் __________


Signature

Sunday, March 10, 2013

துபாய் பயணம் #1


 முதல் பயணம்

ஐக்கிய அரபு அமீரகத்தில்  இரண்டாம் பெரிய நகரமான துபாயில் எங்கள் நண்பரும் UTS-ன் தலைவருமான  திரு.ரமேஷ் விஸ்வநாதன் அவரிடமிருந்து ஒரு இமெயில்... அதில், UAE தமிழ்ச்சங்கம் நடத்தும் குறும்படவிழாவிற்கு நடுவராய் கலந்துக் கொள்ள நண்பர் ஹரியையும் என்னையும்  அன்போடு அழைத்திருந்தார்.

உள்ளூரில் சில கல்லூரிகளுக்கு நடுவராய் சென்று நானும் நண்பர் ஹரியும் குறும்படவிழாக்களில் கலந்து கொண்டுள்ளோம் என்றாலும், வெளியூருக்கு சென்று கலந்து கொள்ளும் முதல் குறும்படவிழா என்பதாலும்... வெளியூரில் வசிக்கும் தமிழ் நண்பர்களை சந்திக்கும்  ஒரு அரிய வாய்ப்பாய் இது அமையும் என்பதாலும் உடனே எங்கள் சம்மதத்தை குறிப்பிட்டு பதில் அனுப்பினோம்.

துபாய் எனக்கு இதுதான் முதல் விசிட்..!

துபாய்ல எங்க இருக்கே..? ஷார்ஜாவா..? அபுதாபியா..? என்று வரிசையாய் நகைச்சுவை நடிகர் வடிவேல்  சொன்ன ஊர்களை நேரில் பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்தது.. ஆனால், துபாய் பயணம் இந்தமுறை சற்று அவசரமாகவே அமைந்தது... காரணம் கோயம்புத்தூரில் அம்புலி திரைப்பட தயாரிப்பாளரின் கல்லூரியில் நடந்த ஒரு கலைநிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்த்தால், அங்கிருந்து சென்னை வந்த்துமே, அன்று மாலையே துபாய்க்கு புறப்பட வேண்டிய கட்டாயத்தில் அடித்து பிடித்து பேக்கிங் செய்துகொண்டு ஏர்போட்டுக்கு கிளம்பினோம்...

பிப்ரவரி 8ஆம் தேதி அதிகாலை 3.40 மணி விமானத்தில் பயணம் இனிதே துவங்கியது...


ஷார்ஜா விமான நிலையம் அதிகாலை 6.30 மணியளவில் எங்களை தரையிறக்கிக் கொண்டது.

சென்னையை ஒப்பிடுகையில் ஷார்ஜா விமான நிலையம் மிகவும் சிறியது. உள்ளே ஒரு இடத்தில் எங்கள் சக பயணிகளில் எங்களைப்போல் முதலில் வருபவர்களின் விசாவில் கண்களை ஸ்கேன் செய்து சீல் செய்து கொள்ளும் வரிசையில் நின்றிருந்தனர். நாங்களும் நின்றோம்.... கவுண்ட்டரில் ஷேக் உடை அணிந்த விசா இன்ஸ்பெக்டர்.. கண்களை ஸ்கேன் செய்யவேண்டும் என்று சொன்னார்.. நான் கண்களை கேமிராவில் காட்டியதும்... MORE (இன்னமும் கண்களை அகலமாய் திற) என்றார்.. திறந்தேன்.. MORE (மேலும் அகலமாய் திற..) என்றார்... என்னால் முடிந்தவரை அகலமாய் திறந்தேன்... இருந்தும் கூட...அவர் முகத்தில் திருப்தியே இல்லை..! வேண்டாவெறுப்பாய் 'ப்ச் 'என்று அலுத்துக் கொண்டே விசாவில் சீல் போட்டுக் கொடுத்தார்... இதற்குமேல் கண்ணை தறிக்கவேண்டுமானால், நான் கண்களை கழட்டி அவர் கையில்தான் கொடுக்க வேண்டும்.

ஒருவழியாக ஃபார்மாலிட்டிக்களை முடித்துக் கொண்டு விமான நிலையத்தைவிட்டு வெளியேறியதும். அழகான தமிழில் 'வணக்கம்' என்று எங்களை இருவர் வரவேற்றனர். அவர்கள் UAE தமிழ் சங்கத்தின் சார்பாய் எங்களை அழைத்து செல்ல வந்திருந்த திரு.ரமணி மற்றும் திரு.கணேசன் என்ற இரு நண்பர்கள்.

பரஸ்பரம் விசாரித்துக் கொண்டும் ஷார்ஜாவின் இளம் காலை வெயிலை ரசித்தபடியும் வழியில் ஒரு பெட்ரோல் பங்க்-லிருக்கும் இன்-அவுட் கடையில் 'டீ' குடித்தபடி சற்றே விஸ்வரூபத்தை விவாதித்தோம். அவர்களது ஊரில், விஸ்வரூபத்திற்கு நிரந்தர தடை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும், நிறைய படங்கள் அங்கே ரிலீஸ் ஆகாததால் டவுண்லோடுதான் ஒரே ஆப்ஷன் என்பதையும் தெரிவித்தனர்.  மேலும், 'நாங்கள் அம்புலியையே டவுண்லோட் செய்துதான் பார்த்தோம்... மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றும் கூறினர்... 

திரு. ரமணி அவர்களை இதற்கு முன்னர் நான் எங்கேயோ பார்த்தது போலவே இருந்தது...  உடன் வந்திருந்த திரு.கணேசன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தார்... அதற்கு காரணம், அவரது பெற்றோர்கள் நாளை துபாய் வரவிருப்பதாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்...

பொதுவாகவே, எல்லா வண்டிகளும் 120 கி.மீ. வேகத்தில் சரமாரியாக கடந்து கொண்டிருந்தது... 150 தாண்டினால், ரோட்டோரமாய் ஆங்காங்கே இருக்கும் கேமிராக்கள் படம் பிடித்து காட்டிக் கொடுத்துவிடுமாம்... அபராதத் தொகை மிக அதிகம் என்றார்கள்.

அடுத்ததாய், எங்களை கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்து சென்று, சற்றே ரிஃப்ரெஷ் ஆனதும், அருகிலிருந்த 'சங்கீதா ரெஸ்டாரெண்டி'ற்கு அழைத்து சென்றனர்.  நம்மூர் சுவையிலேயே இட்லியும், தோசையும் சுவைத்தோம். தோசை மட்டும் சுமார்.. மீண்டும் கெஸ்ட் ஹவுஸில் எங்களை விட்டுவிட்டு ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு சென்றனர்... உண்மையிலேயே களைப்பு ஆக்கிரமித்ததால்  ரூமிலிருந்தபடி ஜன்னல்வழியே சில ஃபோட்டோக்களை மட்டும் க்ளிக்கிக் கொண்டு படுத்துறங்கிவிட்டோம்...

ஜன்னல்வழியே எடுத்த ஃபோட்டோ

சரியாக மதியம் 2 மணிக்கு மீண்டும் டெலிஃபோன் ஒலித்தது... WAKEUP CALL...

(தொடரும்)


Signature

Monday, January 21, 2013

ஐதை குறிப்புகள்

டிஸ்கி : போன மாதமே எழுதி... எழுதி... முடிக்க முடியாமல் இப்போதுதான் முடிந்தது...

ஐதராபாத்...
எனது நண்பரும் அம்புலி படத்தின் ஒளிப்பதிவாளருமான சதீஷ்.G பணியாற்றியுள்ள தெலுங்குப்படம் 'புண்ணமி ராத்ரி 3D'.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்ற மாதம் ஐதை சென்றிருந்தேன்...


கொண்டாட்டம்
அந்த ஊரில் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ள இசை விழா சிறப்பாக நடந்தேறியது... விழாவின் வெளியே வழக்கம்போல் பலரும் 3D எஃபெக்ட்-ஐ சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர். அம்புலி படத்தை பற்றி பலரும் அறிந்திருந்தது மகிழ்ச்சியளித்தது... அம்புலியை தெலுங்கு டப்பிங்கில் பார்த்த ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் நீண்ட நேரம் தெலுங்கில் பாராட்டிக் கொண்டிருந்தார்..

அவர்களும் அப்படித்தான்
இசை வெளியீட்டு விழா முடித்துவிட்டு, அங்கிருந்த திரையரங்குகளில் 3D கான்ஃபிகரேஷன்களை பார்க்க போயிருந்தோம். தமிழ்நாட்டை காட்டிலும் அங்கு 3D தியேட்டர்கள் சற்று குறைவாகவே இருக்கிறது. மேலும், இங்கு நம்மூரிலிருந்த அதே பிரச்சினைதான் அங்கும்.. அதாவது 3D படங்களை காட்டுவதற்கு தியேட்டர்காரர்களும் சற்றே நல்ல தரம் வேண்டும் என்று மெனக்கெட வேண்டும், தொழில்நுட்பத்தை பற்றி அடிப்படை விஷயத்தை புரிந்து கொள்ளாமல் மலிவாய் முடித்துக் கொள்ள விரும்பினால்.. ரொம்ப கஷ்டம்தான். (படம் பார்ப்பவர்களுக்கு). இதற்கு சான்றாய் அங்கும் ஒரு சில சம்பவங்கள் நடந்தேறின... எனவே 3Dயை திரையிட தேவையான சப்போர்ட்டிங் விஷயங்களை எங்களுக்கு தெரிந்தவரை பகிர்ந்து விளக்கி புரிய வைத்தோம்... 

கெஸ்ட் ஹவுஸ்
விழா முடிந்ததும், ஒரு கெஸ்ட் ஹவுசில் 5 நாட்கள் தங்கியிருந்தோம். அங்கே கணேஷ் என்ற ஒரு பதின்ம வயது பையனும் அவனுடன் சேர்ந்து ஒரு சிறுவனிடமும் அந்த கெஸ்ட் ஹவுஸின் முழு மெயிண்டனென்சும் ஒப்படைக்கப்பட்டுள்ளது... 'சிறுவர்களை பணியில் அமர்த்தாதே' என்று தெலுங்கில் எந்த ஆட்டோவிலும் எழுதவில்லை போல... அவனிடம் 'படிக்கிறியா..?' என்று கேட்டால் அதற்கு தெலுங்கில் ஏதோ சொன்னான்.. 'நாக்கு தெல்லிது' என்று சும்மா இருந்துவிட்டேன்.

பனிவிழும் இரவில் ஆந்திரா ஷூட்டிங்
ஒரு நாள் இரவு, தெலுங்கு பட படப்பிடிப்பை பார்க்க ஒரு பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தோம்... இரண்டு பெரிய ஹிட் கொடுத்த டைரக்டர் மாருதி என்ற தெலுங்குப்பட இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது... 3Dயில் அம்புலி உருவானதைப் பற்றி நிறைய விசாரித்தார்... துரிதமாக நடந்துக்கொண்டிருந்த ஷூட்டிங்கை கண்டு களித்தோம். இரவு டின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்டோம்...  நல்ல குளிரில் ஆந்திரக்காரமான அசைவ உணவு... (குட் காம்பினேஷன்)

ஐதராபாத் பிரியாணி
இந்த முழு ட்ரிப்பிலும் நான் மறக்கமுடியாதது.. ஐதராபாத் பிரியாணிதான்... அதிக quantityயுடன் வயிறு முட்ட சாப்பிட்ட அந்த மட்டன் பிரியாணி... நம்ம கேபிளார் பாணியில் சொல்லவேண்டுமானால் 'டிவைன்'

ஆச்சர்யம்
சினிமேக்ஸ் மல்டிப்ளெக்சிலுள்ள  KFCயின் கிளை... வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் நடத்துவதை கண்டு மகிழ்ச்சியாய் இருந்தது... அதுவும்... அவர்கள் மெனு கேட்கும் விதமும், அதை அவர்களுக்குள் convey செய்து கொள்ளும் முறையும்... விரைவில் டெலிவரி கொடுக்கும் வேகமும் எல்லாமுமாய் சேர்ந்து என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது..

ஏமாற்றம்
ஒருநாள் காலை டிஃபன், இதே காம்ப்ளெக்சின் பின்னால் இருந்த ஒரு கூரை ரெஸ்டாரெண்டில் சென்று சாப்பிட்டோம்.. நான் பெசரெட் சொல்ல வாயெடுக்க.. அவர்களின் ஸ்பெஷல் என்று நெல்லூர் தோசையை குறிப்பிட்டார்கள். சரி என்று அதையே சாப்பிட்டேன்... அந்த நெல்லூர் தோசையை மறக்கவே முடியாது.. ஏனென்றால் அது தோசை போலவே இல்லை.. ஒழுங்காய் பெசரெட்டே சாப்பிட்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது.. தோசையில் இன்னும் தமிழும் கர்நாடகமும்தான் டாப் என்று தோன்றுகிறது...

குறையொன்று உண்டு
வழக்கமாக ஐதராபாத் போனால் எப்படியாவது பிரசாத் iMax தியேட்டரில் ஒரு படம் பார்த்துவிட்டுத்தான் வரவேண்டும் என்பது எங்கள் குழுவின் எழுதப்படாத கொள்கை. ஆனால் இம்முறை அந்த கொள்கை ஆட்டம் கண்டுவிட்டது. வேறொரு காரணமாய் சில மீட்டிங் அமைந்துவிட்டதால் கடைசிவரை ஐமேக்ஸ்-ல் அதுவும் HOBBITஐ பார்க்க முடியாமல் போனது சின்ன வருத்தமே...

காத்திருந்து காத்திருந்து
திரும்பி வருவதற்கு ஆயத்தமானபோது, வழக்கத்திற்கு மாறாக ஏர்போட்டிற்கு இரண்டு மணிநேரம் முன்னால் சென்று அடைந்துவிட்டதால் பயங்கர கடுப்படித்தது. உள்ளே போகாமல் வெளியே இருக்கும் McDயில் பர்கரை கடித்தபடி தமிழுக்கும் தெலுங்கிற்கும் சேர்த்து கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். அதுவும் போரடித்துவிட அங்கிருக்கும் Go Kartஐ சிறிது நேரம் ஓட்டலாம் என்று சதீஷ் அடம்பிடிக்க, அங்கே சென்றால், Go Kartடினர் 5.30 மணிக்குமேல்தான் பணிகள் துவக்கம் என்றார்கள்..  எவ்வளவோ மன்றாடிப் பார்த்தும்,  கம்பெனி பாலிசி கராரானது என்று மறுத்துவிட்டார்கள்.. பிறகு அங்கே இருந்த ஹைபர் டென்ஷன் துப்பாக்கி சுடும் ஸ்டாலில் மூவரும் சேர்ந்து ரப்பர் பந்துகளை சுட்டுத்தள்ளினோம்.. 20 குண்டுகளுக்கு தலா ஒரே ஒரு பந்து மட்டுமே கீழே விழுந்தது. இந்த வீர விளையாட்டுகளுக்கு பிறகு சென்னை பறந்துவந்தோம்.

விமானம் சரியான நேரத்திற்கு திரும்ப கொண்டு வந்து சேர்த்தாலும், சென்னை டிராஃபிக் 'அதெப்படி சீக்கிரம் வீட்டுக்கு போக விட்டுடுவேன்..' என்று கூறவே ஒன்றரை மணிநேரம் தாமதாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன்.


"மெட்ராஸ் மாதிரி வருமா..!?!"


Signature

Monday, January 14, 2013

கல்கியின் 'மோகினித் தீவு' ஒலிப்புத்தகம்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...




நீண்ட நாளாகவே புத்தகங்களுக்கு ஒலிவடிவம் கொடுக்க வேண்டும் என்ற ஆவல், எனக்கும் எனது குழுவினருக்கும் எப்போதுமே உண்டு... எனவே, அதை தொடங்கி வைக்கும் முயற்சியில், "ஒலிப்பெட்டி" என்ற குழாமத்தை தொடங்கி, அதே பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து... நல்ல புத்தகங்களை தேர்வு செய்து அதற்கு ஒலிவடிவம் கொடுக்கும் பணியை துவக்கியுள்ளோம்.



முதல் புத்தகமாக, கடந்த மாதம் 'ஐயப்பன் அருள்விளையாடல்' என்ற ஒரு ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டிருந்தோம். ஐயப்ப பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.



இதைத் தொடர்ந்து, எனக்கும் என் குழுவினருக்கும் எப்போதுமே பிடித்த அமரர் கல்கி அவர்களின் படைப்பில் 'மோகினித் தீவு' என்ற புத்தகத்தை ஒலிப்புத்தகமாய் ஒலிவடிவமைத்திருக்கிறோம். பின்னனியிசையுடன் சிறப்பு சப்தங்களுடன் கேட்கும்போது, கேட்பவர்கள் சரித்திர காலத்தில் அந்த காட்சிக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும்படியாக ஒலிநுட்பம் செய்துள்ளோம்.



இக்கதை 50 வருடத்திற்கு முன்பு எழுதியதுதானா என்று சந்தேகம் வருமளவிற்கு கல்கி அவர்களின் எழுத்துத்திறன் வழக்கம்போல் ஆச்சர்யப்படும்படி இருக்கிறது. சரித்திர நாவல்கள் எப்போதுமே கேட்பவர்களை அல்லது படிப்பவர்களை ஆர்வத்தில் கட்டிப்போடும்.. அப்படித்தான் இந்த கதையும் சுவாரஸ்யத்திற்கு எள்ளளவும் பஞ்சமில்லாமல், எங்கள் முயற்சி நல்லபடியாய் வெளிவர பெரிதும் கைகொடுத்துள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் இதை வெளியிட வேண்டும் என்ற முயற்சியுடன் கடந்த மூன்று மாதமாய் உழைத்து வந்ததில் இதோ இப்போது விற்பனைக்கு தயாராய் உள்ளது.. தற்போது நடந்துக் கொண்டிருக்கும்  36ஆவது சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

கண்காட்சியில் "மோகினித் தீவு" கிடைக்கும் ஸ்டால்கள் விவரம்
1. Softview (Stall #266)
2. Singa Rohini Trading Company (Stall #202, #203)
3. School ROM Multimedia (Stall #193)
4. புத்தகப் பூங்கா (Stall #137)

இன்னும் ஓரிரு தினங்களில் ஆன்லைனிலும் விற்பனைக்கு வந்துவிடும். கூடிய விரைவில் அந்த விவரங்களையும்... ஆடியோவின் சில பகுதிகளையும் பகிர்கிறேன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Popular Posts