Saturday, October 30, 2010

"கேணிவனம்" - பாகம் 24 - [தொடர்கதை]



இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------
பாகம் - 24

ஆஆஆஆ....!

லிஷா அலறிவிட்டாள். அவள் அலறல் கேட்டு அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

'என்ன லிஷா என்னாச்சு..' என்று சந்தோஷ் அவளை நெருங்கியபடி கேட்க, அப்போதுதான் அவனும் தாஸின் முகத்தைப் பார்த்தான். வித்தியாசமாக இருந்தது...

'அய்யோ.. பாஸ்க்கு என்னாச்சு..?' என்று அவனும் பதற்றமடைய... சக்கரவர்த்தி தாஸின் உடலை நெருங்கி வந்தார்.

'இருங்க.. நான் பாக்குறேன்..' என்றுகூறி, அவனது கையைப் பிடித்துப் பார்த்தார். அவனது மார்பில் காதுவைத்துப் பார்த்தார்...

'பயப்படாதீங்க... உயிரோடத்தான் இருக்கார்... ஆனா மயக்கமடைஞ்சியிருக்கார்...' என்று கூறி, தாஸ்க்கு அக்கம்பக்கத்தில் துணிகளை விலக்கி அங்குமிங்கும் பார்த்தார். இன்ஸ்பெக்டர் அவரை நெருங்கி வந்து...

'என்ன தேடுறீங்க..?' என்று கேட்டார்.

'இல்ல, ஏதாவது பூச்சியோ, பாம்போ கடிச்சியிருக்கான்னு பாக்குறேன். அப்படியிருந்தா இவர் உடம்புல கடிவாய் இருக்கும். அப்படி எதுவும் கண்ணுக்கு தெரியல... ஆனா, இவர் உடம்பு ரொம்பவும் பலவீனமா இருக்கு...'

'எதனால அப்படி..' என்று ப்ரொஃபஸர் கேட்டார்

'நேத்து மழையில நனைஞ்சபடி நடந்துவந்தது இவருக்கு ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன்... முகமெல்லாம் மஞ்சளா தெரியுது... ஏதாவது விஷக்காய்ச்சலா இருக்கலாம்..'

'அய்யோ..! சார்... உயிருக்கு ஏதாச்சும் ஆபத்தா..?' என்று சந்தோஷ் பதற்றத்துடன் கேட்க

'உறுதியா சொல்லமுடியாது, காட்டுக்குள்ள மிருகங்களுக்கு இருக்கிற சில விநோத ஜூரம் சில சமயம் மனுஷங்களுக்கு பரவிடும். அதுக்கு வைத்தியம் பண்றது அவ்வளவு சுலபமில்ல... இது என்ன மாதிரி ஜூரம்னு கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..'

'அப்ப மேற்கொண்டு கேணிவனத்துக்கு போக முடியாதா..?' என்று ப்ரொஃபஸர் கேட்க, சந்தோஷூக்கு கோபம் வந்தது... என்ன மாதிரி மனிதர் இவர், ஒருவன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போதும், பயணம் தடைபட்டதற்கு வருந்திக் கொண்டிருக்கிறாரே என்று குமுறினான்.

'சார், கேணிவனம் போறதோட, இவர் உயிர்தான் இப்போ முக்கியம்...' என்று கொஞ்சம் வருத்தத்துடன் கூற, சக்கரவர்த்தியும், ப்ரொஃபஸரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு, 'யெஸ், நானும் அதைத்தான் நினைக்கிறேன், இவர் உயிரை எப்படியாவது காப்பாத்தியாகனும், அதுக்கு முதல்ல ப்ரியாரிட்டி கொடுங்க... கேணிவனம் வேணும்னா இன்னொரு சமயம் வந்தும் பாத்துக்கலாம்..' என்று கூற... சக்கரவர்த்தி மிகவும் குழப்பமடைந்தார். ஆனால் ப்ரொஃபஸர் தொடர்ந்தார்...

'இன்ஸ்பெக்டர் சார், இன்னொரு தடவை வர்றதுங்கிறதெல்லாம் நடக்காத காரியம். அதுவும் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்துட்டு திரும்பி போறதுங்கிறது ரொம்பவும் அநியாயம். தாஸே இதை விரும்பியிருக்க மாட்டான்..'

'ஆனா, உங்க உயிருக்கு ஏதாச்சும் இப்படி ஆகியிருந்தா, தாஸ் கண்டிப்பா உங்களை காப்பாத்துறதுதான் முக்கியம்னு சொல்லியிருப்பார்... இல்லன்னு சொல்லுங்க..?' என்று லிஷா ப்ரொஃபஸரை மடக்கினாள். அவர் இந்த நேரம் பார்த்தா, தாஸ்க்கு இப்படி ஒரு விஷஜூரம் வரவேண்டும்..? என்று மனதிற்குள் மிகவும் நொந்துக் கொண்டார்.

சக்கரவர்த்தி தீர்க்கமாய் யோசித்தவராய்...

'இன்ஸ்பெக்டர் சொல்றதுதான் சரி, இப்போதைக்கு இவர் உயிரை காப்பாத்துறதுதான் முக்கியம், நான் சில பேஸிக் வைத்தியம் பண்ணிடுறேன். அதுக்கப்புறம் இவரை திரும்ப ஊருக்கு கூட்டிக்கிட்டு போய் வைத்தியம் பண்ணி எப்படியும் பிழைக்க வச்சிடலாம். நாம கேணிவனத்தை மறந்துதான் ஆகனும்...' என்று கூறி ப்ரொஃபஸரைப் பார்த்து, 'வேற வழியில்ல..?' என்று அவருக்கும் சமாதானம் சொன்னார். ப்ரொஃபஸர் அரைமனதுடன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்.

சக்கரவர்த்தி சில அடிப்படை மருத்துவங்களை தாஸூக்கு செய்துமுடிக்க மணி 8 ஆனது... இன்ஸ்பெக்டரும் சந்தோஷூம் தாஸை தூக்கிச்செல்ல மரக்கொம்புகளில் டெண்ட் விரிப்பை சுற்றி ஒரு குட்டி ஸ்ட்ரெச்சர் போல் செய்துக் கொண்டார்கள்.. தாஸின் மயக்கநிலை உடலை தூக்கி அதில் கிடத்தி அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்...

அப்போது சக்கரவர்த்தி கிளம்பும்முன் இன்னொரு குண்டை தூக்கி போட்டார்...

'கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு சின்ன டீல்-க்கு நீங்க எல்லாரும் ஒத்துப்போகணும்...'

'என்னதது...' என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்...

'ஒருவேளை தூக்கிட்டுபோற வழியில தாஸ் இறந்துட்டா, அவர் உடம்பை நாம இந்த காட்டுலியே விட்டுட்டு போக வேண்டியதாயிருக்கும்...' என்று கூற, சந்தோஷும் லிஷாவும் அதிர்ந்தனர்...

'ஏன் அப்படி சொல்றீங்க... அவருக்கு எதுவும் ஆகாது..' என்று லிஷா கூற

'இல்ல லிஸா... இதை சொல்லிடுறது நல்லது... இவருக்கு வந்திருக்கிறத என்ன மாதிரி ஜூரம்னு தெரியல... ஒருவேளை அது பரவுற ஜூரமா இருந்தா, அவர் இறந்துட்டாருன்னா, ஏகத்துக்கும் ஸ்பீடா பரவும்... அதனால, ஒருவேளை இவர் போற வழியில இறந்துட்டார்னா, இவரோட உடம்பை போட்டுட்டு நாம பாட்டுக்கு திரும்பி பாக்காம போயிட்டே இருக்கணும், நோ சென்டிமெண்ட்ஸ், நோ ட்ராமா..! என்ன சொல்றீங்க..? எல்லாருக்கும் இதுல சம்மதமா..? என்று கேட்க, அனைவரும அரைமனதுடன் சம்மதித்தனர்.

--------------------------------------

ஏற்கனவே பெய்திருந்த மழையினால் நடக்கும் பாதை பயங்கர சேறும் சகதியுமாக வழுக்கிக் கொண்டிருக்க, தாஸை தூக்கிக் கொண்டு நடப்பது மிகவும் கஷ்டமாய் இருந்தது. இன்ஸ்பெக்டரும், சக்கரவர்த்தியும், சந்தோஷூம் மாறி மாறி 4 மணி நேரமாக பாரத்தை பகிர்ந்து கொண்டபடி நடந்துவந்தார்கள். ப்ரொஃபஸர் ஏகத்துக்கும் கடுப்பாய் நடந்துக் கொண்டிருக்க, லிஷாவுக்கும் சந்தோஷூக்கும் தாஸை நினைத்து கவலை அதிகமாய் இருந்தது... 

இடையில் ஓரிடத்தில் பாரம் தாங்க முடியாமல் ஸ்ட்ரெட்சரை கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறிக் கொண்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் தன்னிடமிருந்த பேக்-இல் கைவிட்டு எதையோ தேடிக்கொண்டிருக்க, சக்கரவர்த்தி அவரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர் பேக்-லிருந்து வாக்கி டாக்கியை எடுக்கவும், சக்கரவர்த்தி திரும்பி கொண்டார்...

இன்ஸ்பெக்டர் வாக்கி டாக்கியின் மூலம் 'ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ்'-டன் தொடர்பு கொள்ள முயன்றார். பலனில்லை...

ஒரு  மணி நேர நீண்ட இளைப்பாறுதலுக்கு பின் மீண்டும் தாஸை கிடத்தியிருக்கும் ஸ்ட்ரெட்சரைத் தூக்கிக் கொண்டு அனைவரும் நடையைத் தொடர்ந்தனர்... பாரத்தை தூக்க சந்தோஷ் சிரமப்படுவதைப் பார்த்த லிஷா, பாரத்தை பகிர முன்வந்தாள்.

'கொஞ்ச நேரம் வேணும்னா நானும் ஒரு கை கொடுக்கிறேனே..?' என்று கேட்க, சந்தோஷ் மறுத்தான்.

'வேண்டாம் லிஷா, உன்னால வலியைத் தாங்க முடியாது. நாங்க பாத்துக்கறோம்..' என்று கூற, மீண்டும் மௌனமாய் பயணம் தொடர்ந்தது...

திடீரென்று இன்ஸ்பெக்டரின் பேக்-லிருந்து ஏதோ விழுந்த சத்தம் கேட்டது...

'இன்ஸ்பெக்டர் சார்... இந்தாங்க...' என்று துப்பாக்கியை சக்கரவர்த்தி எடுத்துக் கொடுத்தார்...

'பேக்-லருந்து விழுந்திடுச்சி... பத்திரமா வச்சிக்கோங்க...' என்று திருப்பிக் கொடுத்தார்... இன்ஸ்பெக்டர், சக்கரவர்த்தியை முறைத்தபடி வாங்கி தனது இடுப்பில் வைத்துக் கொண்டார்

'நாம சரியான பாதையில போயிட்டிருக்கோமா..? இதுதான் திரும்பி போற ரூட்டா..?' என்று இன்ஸ்பெக்டர் சந்தேகத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டார்.

'ஆமா... இது சரியான ரூட்தான்..' என்று சக்கரவர்த்தி கூற...

'எப்படி அவ்வளவு ஷ்யூரா தெரியும்..? காட்டுக்குள்ள ரூட்-ஐ ஞாபகம் வச்சிக்கிறது அவ்வளவு ஈஸியா என்ன..?' என்று மீண்டும் கேட்க...

'கடல்லயும் காட்டுக்குள்ளயும், திசைகளை இலக்கா வச்சி நடக்கனும். இங்க சூரியன்தான் நமக்கு வழிகாட்டி.. இதோ இப்போ நாம நடந்துப் போயிட்டிருக்கிறது நேத்து நடந்த பாதையோட ரிவர்ஸ் ஆர்டர்... நல்லா நினைவு படுத்தி பாருங்க நேத்து நம்ம முகத்துக்கு நேரா மேகமூட்டத்துக்குள்ளருந்து சூரியவெளிச்சம் அதிகமா இருந்தது... இப்போ நம்ம முதுகு பக்கம் வெளிச்சம் அதிகமா இருக்கு..' என்று கூற, பயணக்களைப்பும் பாரமும் கொஞ்சம் மறந்தபடி அனைவரும் அவர் பேச்சில் கவனம் செலுத்தி வந்தனர். சக்கரவர்த்தி தொடர்ந்தார்...

'அதுமட்டுமில்ல... காட்டுக்குள்ள போகும்போது, நம்மளை இடைமறிக்கிற சின்ன சின்ன கிளைகளை கத்தியால வெட்டிக்கிட்டே போகணும். நமக்கு வழியும் கிடைச்ச மாதிரியாச்சு, திரும்பி வர்றதுக்கு ஒரு அடையாளமாவும் ஆச்சு...' என்று கூறியபடி நடையைத் தொடர...

லிஷா ஒரு மரக்கிளையில் ஒரு அடையாளத்தைப் பார்த்தாள்.

'இந்த மாதிரியா..?' என்று காட்ட, அனைவரும் நின்றனர்... அங்கிருந்த மரங்களில் குட்டிக்கிளைகள் வெட்டப்பட்ட அடையாளங்கள் அதிகமிருந்தன...

இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தியிடம் திரும்பி...

'நீங்க எப்போ நேத்து மரத்தை வெட்டிக்கிட்டு வந்தீங்க..?' என்று கேட்டார்...

சக்கரவர்த்தி இன்ஸ்பெக்டரைப் பார்த்து...  'இது நான் வெட்டுனதில்ல..'

'பின்ன யாரு வெட்டுனது..?' என்று சந்தோஷ் ஆர்வமாய் கேட்க...

தூரத்தில் திடீரென்று ஏதோ ஒரு சலசலப்பு கேட்டது... தாஸை கீழே கிடத்திவிட்டு, அனைவரும் அந்த திக்-ஐயே பார்த்துக் கொண்டிருக்க...

மீண்டும் சத்தம்.

இன்ஸ்பெக்டர் உஷாரானார். தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, சத்தம் வந்த திக்கில் குறி வைத்துக் காத்திருந்தார்.

திடீரென்று ஏதோ ஒன்று காட்டைக்கிழித்துக் கொண்டு ஓடி வர... இன்ஸ்பெக்டர் சட்டென்று சுட்டார்... சரியாக அவர் சுட்டபோது, சக்கரவர்த்தி அவர் கையை உயர்த்திவிட்டார்...

டம்டம்டம்டம்ம்ம்ம்ம்ம்.... என்ற துப்பாக்கி சத்தம் வானத்தில் ஒலித்தது...

'ஏன்...?' என்று கோபமாய் கத்தியபடி சக்கரவர்த்தியை முறைக்க... அவர் சுடவிருந்த இடத்தை சக்கரவர்த்தி சுட்டிக்காட்டினார்... அங்கிருந்து, குணா மூச்சுவாங்கியபடி ஓடிவந்தான்...

'சுடாதீங்க... சு...டாதீங்க.. ஹஹ்ஹ்... ஹஹ்... ப்ளீஸ்...' என்று வந்து இவர்களருகில் வந்து விழுந்தான்.

குணாவைக் கண்டதும் சந்தோஷ், லிஷா, மற்றும் இன்ஸ்பெக்டர் மூன்று பேரும் ஒருசேர அதிர்ந்தனர். ப்ரொபஸரும், சக்கரவர்த்தியும் இவன் யார்..? எப்படி இங்கே வந்தான்? என்று யோசித்தபடி பார்த்துக் கொண்டு நின்றனர்.

குணா நிதானமாக பேச பத்து நிமிடங்களானது.

'நாங்க இந்த காட்டுக்குள்ள வந்து 5 நாளாச்சு... நீங்கள்லாம் இப்போதான வந்தீங்க... நாங்க முதல்லியே வந்துட்டோம்... ஆனா... ப்ச்... தொலைஞ்சி போயிட்டோம்...' என்று ஒரு திணுசாக பேசினான்.

'நீங்க கேணிவனம் கோவிலை பாத்தீங்களா..?' என்று சக்கரவர்த்தி ஆர்வமாய் கேட்க...

'இல்ல... அதைத்தேடுறது வேஸ்ட்... '

'ஏன்..?'

'அது இங்க இப்ப இல்ல..?' என்று கூற, அனைவரும் அதிர்ந்தனர்...

'அதெப்படி இல்லாம போகும்..'

'என்ன நடந்துச்சுன்னு தெரியல... இந்த காட்டுக்குள்ள நல்லா தேடிப்பாத்துட்டோம். மைனா... குருவி... காண்டாமிருகம்லாம் பாத்தோம்... ஆனா, அந்த கோவிலை மட்டும் காணலை..' என்று மீண்டும் குழப்பமாக பேசினான்.

'உங்ககூட வந்த மத்த டிவி ரிப்போர்ட்டர்ஸ்லாம் எங்கே..?' என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்

'எல்லாம் இருக்காங்க... அங்...க... அங்க இருக்காங்க...' என்று ஒரு சின்ன குழந்தையைப் போல் ஒரு திசையை சுட்டிக்காட்டினான்.

'யாருக்கும் எதுவும் ஆபத்து இல்லியே..?'

'கேமிராமேனோட அஸிஸ்டெண்ட் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு... அவரு சாகறதுக்குள்ள டாக்டர்கிட்ட போய் ஊசி குத்தனும்...' என்று பேசியபடி அவனும் மயங்கி விழுந்தான்.

அவன் புத்தி சுவாதினமற்று பேதலித்திருப்பது அனைவருக்கும் புரிந்தது...

'என்ன சந்தோஷ், இவன் பைத்தியம் மாதிரி பேசுறான்...' என்று லிஷா கேட்க, சக்கரவர்த்தி பதிலளித்தார்.

'இன்னும் 5 நாள் இங்கேயே ரூட் தெரியாம சுத்திட்டிருந்தா... நாமளும் இப்படித்தான் பேசுவோம்' என்று கூற, லிஷா பயந்தாள்.

'சீக்கிரம் இங்கருந்து போயிடலாமே..?' என்றாள்

'எப்படி... ஏற்கனவே ஒருத்தரை தூக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம், இப்போ இவன் வேற மயங்கிட்டான்..' என்று ப்ரொஃபஸர் கூற

'இவன் கூட வந்தவங்களையும் காப்பாத்தியாகணும்' என்று இன்ஸ்பெக்டர் கடைமதவறாமல் பேச, சக்கரவர்த்தியும் ப்ரொஃபஸரும் அவரை முறைத்தனர்.

சந்தோஷூக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். குணாவை பார்த்ததலிருந்து அவனும் மிகவும் பயந்தான். குணா பேராசையால் பைத்தியமாக மாறியிருந்ததை எண்ணி உண்மையில் வருந்தினான்.

இப்படி அனைவரும் ஆளுக்கொரு விதத்தில் அடுத்த என்ன செய்வது என்று பயந்திருந்தபோது இன்ஸ்பெக்டரின் வாக்கி-டாக்கி கதறியது...

'ஷ்ஷ்...க்.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... அ... Hello Hello... Do you Copy... Do you Copy... Over' என்றதும் இன்ஸ்பெக்டர் குதூகலமானார்...

'Yes I Do... Over' என்று மேற்கொண்டு அவர்கள் பேசியதின் தமிழாக்கம்...

'காட்டுக்குள் துப்பாக்கிச்சத்தம் கேட்டதே... அது உங்களுடையதா..?'

'ஆமாம்...'

'நீங்கள் யார்... சட்டவிரோதமாக காட்டுக்குள் வேட்டையாடுபவரா..?'

'இல்லை, நான் தமிழ்நாட்டை சேர்ந்த போலீஸ் ஆஃபீஸர்... மிருகவேட்டைக்காக சுடவில்லை... தற்காப்பிற்காக சுட்டேன். மீண்டும் சொல்கிறேன்... நான் வேட்டையாடவில்லை.. எங்களுக்கு உங்கள் உதவி தேவை..?'

'நீங்கள் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்கள்..?'

'என்னுடன் சேர்த்து, 10 பேர்.. இதில் 2 பேரின் உயிர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது... எங்களுக்கு உங்கள் உதவி தேவை...'

'சரி... நீங்கள் இருக்கும் இடத்தை சுற்றி இருக்கும் மரங்களில் தடினமான மரம் ஏதாவதிருந்தால், அதில் பச்சை கலரில் பெயிண்ட் அடித்த எண்கள் இருக்கும். அதை தெரிவியுங்கள்..' என்று கூற, அங்கிருந்த அனைவரும் ஆளுக்கொரு பக்கம் தடினமான மரங்களாக தேடி பார்க்க ஆரம்பித்தார்கள்... ஒரு மரத்தில் 'KFD78854293' என்றிருந்தது... அந்த எண்களை இன்ஸ்பெக்டர் வயர்லெஸ்-ல் படித்து காண்பித்தார்.

'சரி... நீங்கள் அந்த மரத்தின் அருகிலேயே நில்லுங்கள். நாங்கள் உங்களை காப்பாற்ற விரைவில் வருகிறோம்...' என்று கூறியதுடன் அந்த உரையாடல் முடிந்தது...

'இனிமே பிரச்சினையில்ல... அவங்க வந்து நம்மளை காப்பாத்திடுவாங்க...' என்று இன்ஸ்பெக்டர் கூற... அனைவர் முகத்திலும் நிம்மதி...

------------------------------------

2 நாட்களுக்குப் பிறகு...

ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிடலில்... தாஸ் ஒரு பெட்-ல் சாய்ந்தபடி புத்தகத்தில் முகம் புதைத்திருந்தான்.

லிஷாவும் சந்தோஷூம் உள்ளே நுழைந்தனர்...

'பாஸ்... இப்போ எப்படி இருக்கு..?'

'பரவாயில்ல...'

'கெட் வெல் சூன்..' என்று லிஷா வாழ்த்து தெரிவித்து ஒரு பொக்கே-வை கொடுத்தாள்.

'தேங்க்ஸ் லிஷா... சாரி, காட்டுக்குள்ள உங்களுக்கெல்லாம் ரொம்பவும் கஷ்ட்ம் கொடுத்துட்டேன்..'

'பரவாயில்ல பாஸ்... எதுக்கு சாரியெல்லாம் கேட்டுக்கிட்டு, என்னவோ ஆகும்னு நினைச்சி காட்டுக்கு போனா... என்னென்னவோ நடந்திடுச்சி... போனதுல ஒரு நல்லது என்னன்னா, குணாவையும் சேத்து ஒரு 4 பேர் உயிரை காப்பாத்த முடிஞ்சது... இன்ஸ்பெக்டர் புண்ணியத்துல, கர்நாடகா ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ்கிட்டருந்து தப்பிக்க முடிஞ்சது... ஆனாலும், அந்த இன்ஸ்பெக்டர் காட்டுக்குள்ள ஃபயரிங் பண்ணதுக்காக அவர் மேல கேஸ் ஃபைல் பண்ண போறதா சொல்லி மிரட்டி அனுப்பிட்டாங்க...'

தாஸ் அமைதியாக இவர்கள் இருவரும் பேசுவதை ரசித்தப்படி பார்த்திருந்தான்.

'நல்ல வேளை, யாரோட உயிருக்கும் எதுவும் ஆகலை...'

'ஆனா, போன காரியமும் நடக்கலையே லிஷா...'

'கேணிவனத்தை சொல்றியா..?'

'ஆமா... ஏதோ அந்த அதிசய கோவிலை பார்க்கலாம்... நிறைய விஷயம் தெரியவரும்னு நினைச்சு, ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்போட காட்டுக்குள்ள போனா, உயிரை பிடிச்சிக்கிட்டு திரும்பி வர்ற மாதிரியாயிடுச்சி..'

'விடு சேண்டி(Sandy), சில விஷயங்கள் எல்லார் கண்ணுலயும் மாட்டுறதில்ல... அந்த அதிசயக் கோவில், தாஸ் கண்ணுலயும் குணா கண்ணுலயும் மாட்டுனதே பெரிய விஷயம்'

'இரகசியங்கள் இரகசியமாவே இருக்கிறதுதான் நல்லதுன்னு சொல்றே..? கரெக்ட்தான்.. இரகசியங்கள் அம்பலமாகும்போது, எல்லாருக்கும் பிரச்சினைதான்...' என்று கூற

இதுவரை அமைதியாயிருந்த தாஸ்  தொடர்ந்தான்...

'ஹலோ! ஹலோ! ஒரு நிமிஷம்... என்ன நீங்க ரெண்டு பேரும் இத்தோட கதை முடிஞ்சதுங்கிற மாதிரியே பேசிட்டிருக்கீங்க..? இன்னும் கதை முடியலை... என் மொபைல் ஃபோனையும் லேப்டாப்பையும் கொடுங்க..?' என்று கூற. இரண்டும் அவனிடம் தரப்பட்டது...

மொபைல் ஃபோன் அணைந்திருந்தது. பின்பக்கமாக மொபைலை கழற்ற, அங்கே பேட்டரி இருக்குமிடத்தில் பேட்டரிக்கு பதிலாய் ஒரு மெமரி கார்டு இருந்தது...

'என்ன பாஸ்? இது என்ன மெமரி கார்டு..?' என்று ஆர்வம் தாங்காமல் சந்தோஷ் கேட்டான்.

'இது நம்ம ப்ரொஃபஸர் கொண்டு வந்த ஹேண்டி கேமிராவோட மெமரி கார்டு...' என்று கூறியபடி அதை தனது லேப்டாப்பில் கனெக்ட் செய்து, அதிலிருந்த ஃபைல்களில் ஒரு வீடியோ ஃபைலை இயக்கினான்.

ஒரு காட்டு பிரதேசம் மிகவும் பசுமையாய் சுற்றிலும் ஆங்காங்கே மரங்கள் மிக அடர்த்தியாய் தெரிந்துக் கொண்டிருந்தது...

'இது நாம போயிட்டு வந்த காடுதானே...? ஆனா, இது வித்தியாசமான மரங்களா இருக்கே..?'

'இதெல்லாம் சந்தன மரங்கள்..' என்று கூற, இருவரும் குழப்பத்துடன் தாஸை பார்த்தனர்...

'புரியலை பாஸ், நாம போனப்போ, இந்த காட்டுல சந்தன மரங்கள்லாம் இல்லியே..?' என்று சந்தோஷ் கேள்வியெழுப்பினான்.

'இது நாம போன காடுதானே தாஸ்..?' என்று லிஷாவும் சந்தேகத்துடன் கேட்க...

தாஸ் இருவரையும் சற்றே நெருங்கி வந்து, ரகசியமாய் கூறினான்... 'அதே காடுதான், ஆனா, இந்த வீடியோ 12ஆம் நூற்றாண்டுல எடுக்கப்பட்டது..' என்றதும் சந்தோஷூம் லிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

(தொடரும்...)



Signature

Tuesday, October 26, 2010

"கேணிவனம்" - பாகம் 23 - [தொடர்கதை]


 இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------

பாகம் - 23


திசைமாறி வந்துவிட்டோம் என்று தாஸ் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர். 

'திக்கு தெரியாத காடு' என்று கதைகளில் உபயோகப்படுத்தபடும் உவமை எவ்வளவு கொடுமையானது என்று அங்கிருந்த 6 பேரும் உணர்ந்து கொண்டிருந்தனர். காட்டில் தொலைந்து போவது என்பது, கிட்டத்தட்ட உயிருடன் இறந்து போவதற்கு சமம்.

அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் சிலையாய் நின்றிருக்க... சக்கரவர்த்தி மிகவும் கவலை கொண்டவராய் தாஸின் அருகில் வந்தார்...

'தாஸ்? என்ன இப்படி சொல்றீங்க..? இது தப்பான ரூட்டுன்னு எப்படி தெரிஞ்சது..?' என்று கேட்டார்

'ஆமா சார், நான் போன தடவை கேணிவனக்கோவிலை நோக்கி போனப்போ அது மேட்டுப்பகுதி... அதுவும் ஏற்றம் ஏறுவதே தெரியாத ஊமை மேடு... ஆனா, இப்போ நாம சரிவை நோக்கி போயிட்டிருக்கோம்... இதோ இந்த ஓடையைப் பாருங்க... நாம நடக்கிற திசையை நோக்கித்தான் ஓடிட்டிருக்கு... இது சரிவுப்பகுதி. எனக்கு கன்ஃபர்மா தெரியும்... கேணிவனம் மேட்டுப்பகுதியிலதான் இருக்கு...' என்று கூறவும், அனைவரும் கவலைக்குள்ளாகின்றனர்...

'இவ்வளவு உள்ள வந்துட்டோமே, இப்ப சரியான வழியை எப்படி கண்டுபிடிக்கிறது..' என்று ப்ரொஃபஸர் கேட்க, தாஸ் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான்.


சந்தோஷ், தனது செல்ஃபோனை எடுத்து செக் செய்தான். சுத்தமாக டவர் இல்லை...

'யார் மொபைல்லியாவது, சிக்னல் இருக்கா..?' என்று கூற, அனைவரும் அவரவர் செல்ஃபோனை எடுத்துப் பார்த்து, முகத்தில் ஏமாற்றம் காட்டினர்.

இன்ஸ்பெக்டர் தனது பேக்-ஐ எடுத்து உள்ளிருந்து வாக்கி-டாக்கி-ஐ இயக்கினார்.

'Hello... Hello... Can anyone hear me..?' என்று கூறி அடுத்த பக்கத்திலிருந்து பதிலுக்கு காத்திருந்தார்....

பதிலில்லை...

மீண்டும் சக்கரவர்த்தி, தாஸிடம், 'தாஸ், கொஞ்ச நல்லா யோசிச்சி பாருங்க... நீங்க போன தடவை இங்க வந்தபோது, என்ன மாதிரி இடங்களை கடந்து போனீங்கன்னு நினைவிருக்கா..?அப்படியிருந்தா அதைவச்சி நாம சரியான பாதையை பிடிச்சிடலாம்!' என்று கேட்க... தாஸ் யோசித்துப் பார்த்தான். குணா புலம்பிக்கொண்டே வந்ததும், பயந்தபடி அந்த காட்டிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட அலைந்ததும், போன முறையும் இதே போல் மழை பெய்தது.ம்.. என்று மிகவும் பொதுவான விஷயம்தான் நினைவுக்கு வந்தது.

'சாரி சார்..! எனக்கு புதுசா எதுவும் நினைவுக்கு வரலை... போன தடவையும் இதே மாதிரி மழை வந்தது...' என்று கூற... சக்கரவர்த்திக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது...

'தாஸ், மழைக்கு நீங்க ஏதாவது ஒரு மரத்துக்கு கீழ ஒதுங்கி நின்னீங்களான்னு கொஞ்சம் நினைவுப்படுத்தி பாருங்க.. அது ஏதாவது ஸ்பெஸலான மரமா இருந்தாலும் நீங்க நடந்து போன ரூட்-ஐ கண்டுபிடிச்சிடலாம்..' என்று கூற...

'இல்லைங்க... மரத்துக்கு கீழல்லாம் ஒதுங்கி நிக்கல... நாங்க ஒரு பெரிய சைஸ் வாழையிலைய தலைக்கு வச்சிக்கிட்டு நின்னோம்...' என்று கூற...

'வெரிகுட், வாழையிலையை தலைக்கு வச்சிக்கிட்டீங்கன்னா, மலைவாழை மரங்கள் இருக்கிற பகுதியிலதான் எங்கேயோ ஒதுங்கியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். நாம இப்போ வந்த ரூட்டுல மலைவாழை இருந்த பகுதி எனக்கு நல்லா நினைவிருக்கு...' என்று கூற, சந்தோஷூம் அதே விஷயத்தை நினைவுக்கூர்ந்தான்.

'ஆமா பாஸ், நாங்கூட பசிக்கு கொஞ்சம் எடுத்து வச்சிக்கலாமான்னு யோசிச்சிட்டே அந்த இடத்தை கடந்து வந்தேன்..' என்று கூற


'அப்போ அதுவரைக்கும் நாம திரும்பி போய் அங்கிருந்து மேட்டுப்பகுதியில ஏறுனா, ரூட்டை பிடிச்சிடலாம்னு நினைக்கிறேன்...' என்று இன்ஸ்பெக்டரும் உற்சாகமானார்.

'வாங்க வாங்க... நாம இன்னும் உயிரோடத்தான் இருக்கோம். இப்படியே நின்னுட்டிருந்தா ஒண்ணும் நடக்காது...' என்று சக்கரவர்த்தி அனைவரையும் பார்த்து சிரித்தபடி கூறி நடக்க ஆரம்பித்தார்.

தாஸூக்கு சக்கரவர்த்தயை  நினைக்க ஒருபுறம் பயமாகவும் இருந்தது. இந்த நபர் புதியவர் என்றாலும், இந்த கேணிவனத்தை கண்டுபிடிப்பதில் இப்படி ஆர்வம் காட்டுகிறாரே என்று பயத்துடன் மலைக்கவும் செய்தான்.

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது...

நனைந்தபடி ஆறுபேரும் நடந்துப் போய்க்கொண்டிருக்க...

மற்றவர்கள் எப்படியோ லிஷா மழையை ரசித்தபடி நடந்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த தாஸ் கவலையுடன் நடந்துக் கொண்டிருக்க...

'ஏன் தாஸ் இப்படி டல்லாவே வர்றீங்க..?' என்று கேட்டாள்...



'இருட்டுறதுக்குள்ள நாம எப்படியாவது அந்த கேணிவனம் கோவிலை கண்டுபிடிச்சாகனும் லிஷா... இல்லன்னா..?' என்று தாஸ் இழுத்தான்.

'இல்லன்னா..?' என்று லிஷா கேட்க...

'காட்டுல இரவு நேரத்துல மாட்டிக்குவோம்... இங்க நைட் ஷிஃப்ட் பாக்குற மிருகங்க நிறைய இருக்கு... விடிஞ்சா ஆறு பேரும் உயிரோட இருப்போம்னு சொல்லமுடியாது...' என்று கூற, லிஷா நடையில் வேகம் காட்டினாள்.

அதே உணர்வுடன் அனைவரும் தமது உடமைகளுடன் இதுவரை நடந்து வந்த திக்கிலேயே திரும்பி நடந்து கொண்டிருந்தனர் மழை இவர்களை பொருட்படுத்தாமல் தன் கடைமையை சரிவர செய்துக் கொண்டிருந்தது.

2 மணி நேரத்திற்கு பிறகு...

மழை ஒருவழியாக அடங்கியிருந்தது...

சுற்றிலும் தவளைகள் கத்தும் ஓசையும், ஏதேதோ இனம் தெரியாத பூச்சிகளின் க்றீச் குரல்கள் பலமாக கேட்டுக்கொண்டிருக்க... அங்குமிங்கும் சுற்றி சுற்றி மேட்டுப்பகுதியை ஒருவழியாக கண்டுபிடித்து ஆறுபேரும் ஏறுநிலத்தில் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.

தாஸூக்கு தனது காலில் ஏதோ ஒருவிதமான உணர்வு உறுத்தியது. எதேச்சையாக தனது ஷூவுக்குமேலிருக்கும் பேண்ட் துணியை தூக்கிப் பார்க்க... 3 அட்டைகள் அவன் கால்களில் ஊறிக்கொண்டிருந்தது. இதை லிஷாவும் கவனித்துவிட அவள் அலறினாள்.

'அய்யோ... தாஸ்... என்னதது...' என்று அங்கிருந்து விலகி நின்றபடி தனது பேண்ட் துணியையும் முட்டிவரை தூக்கிப்பார்க்க, அவள் காலிலும் 6... 7... அட்டைகள் ஏறியிருந்தது... அவள் கிட்டத்தட்ட அழுதுவிட்டாள்.

'அய்யோ... சந்தோஷ்... ஏதாச்சும் செய்டா.. பயமா இருக்கு...' என்று அழுதபடி கேட்க, சந்தோஷ் துரிதமாக செயல்பட்டு, அவள் கால்களிலிருக்கும் அட்டைகளை ஒவ்வொன்றாக ஒரு குச்சியைக் கொண்டு எடுத்தான்.

சக்கரவர்த்தி அவளுக்கு சமாதானம் கூறினார்...

'ஹலோ...! லிஸா..! பதறாதீங்க... அட்டை கடிக்கிறது உங்களுக்கு வலிக்காது. பொறுமையா இருங்க...' என்று கூறி, தனது பேக்-லிருந்து ஒரு எண்ணை பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

'இந்த அட்டைங்க நாம நின்னுட்டிருந்த இடத்துல ஏறியிருக்கும்னு நினைக்கிறேன். உங்க பேண்ட் துணியை நல்லா தூக்கிக்கிட்டு, இந்த வேப்பெண்ணெயை தடவிக்கிக்கோங்க...' என்று கூற, அவள் அதேபோல் செய்துவிட்டு அந்த எண்ணெயை  சந்தோஷிடம் கொடுக்க, அவனும் தேய்த்துக் கொண்டு, அதை இன்ஸ்பெக்டரிடம் நீட்டினான்.

'எனக்கு வேண்டாம்...' என்று இன்ஸ்பெக்டர் வாங்க மறுக்கவே, சக்கரவர்த்தி அவரை பார்த்தபடி...

'வாங்கிக்கோங்க சார்... உங்க துப்பாக்கியால அட்டை பூச்சிகளை ஸூட் பண்ண முடியாது...' என்று கூற, அவர் சக்கரவர்த்தியை முறைத்தபடி எண்ணெயை வாங்கிக்கொண்டார். அப்படியே அந்த எண்ணெய்  அனவரது கால்களிலும் தடவப்பட்டது...

மீண்டும் நடைப்பயணம்...

யாருமில்லா காடு... பாதையில்லாப் பயணம்... முடிவு தெரியாத தேடல் என்று இவர்கள் சிரமப்படுவது தெரியாமல் சூரியன் விரைவாக கரைய ஆரம்பித்திருந்தது...

அனைவரும் சூரியனை துரத்திப்பிடிப்பது போல் நடையில் வேகம் காட்டினாலும், கோவில் கண்ணுக்கு எங்கும் தெரியவில்லை... இது சரியான பாதைதானா என்று தாஸூக்கு இன்னுமும் பலத்த சந்தேகம் இருந்து...

ஒரு சமயத்தில் மிகவும் களைத்துப் போன ப்ரொபஸர் நின்று மூச்சுவாங்க... இதை கவனித்த சக்கரவர்த்தி சட்டென்று திரும்பி...

'தாஸ், எல்லாரும் நில்லுங்க... இனிமேலும் நடந்து போய் தேடுறது முட்டாள்தனம். இன்னும் அரைமணி நேரத்துல இருட்டிடும். ஒழுங்கா இப்போ இருக்கிற வெளிச்சத்துல, நாம இன்னைக்கு நைட் தூங்குறதுக்கான ஏற்பாடை செஞ்சிக்கனும். இல்லன்னா... ராத்திரி ரொம்பவும் சிரமமாயிடும்...' என்று கூற. தாஸூம் மற்றவர்களும் இதை ஆமோதித்தனர்.

ஒரு பெரிய மரத்தின் அடியில் புற்கள் வெட்டிப்போட்டு, அதன்மீது, ப்ளாஸ்டிக் விரிப்பு விரித்து. அதே விரிப்பை சற்றே உயரத்தில் கட்டிக்கொண்டு, ஒரு தற்காலிக திறந்தவெளி கூடாரம் போடப்பட்டது.

இருட்டிக்கொண்டது...

சென்ற முறைபோல் ஆகிவிடாமலிருக்க தீமூட்டும் உபகரணங்களை தாஸ் கொண்டு வந்திருந்ததால். அதைக்கொண்டு தீ மூட்டப்பட்டது.

அனைவரும் கொண்டு வந்திருந்த உணவில் மிகச்சிறு பாகத்தை கொஞ்சமாய் உண்டு அரைவயிற்றை நிரப்பிக் கொண்டனர்.

லிஷா, தனது வாழ்நாளில் இப்படி ஒரு பயந்த நிலையில் இருந்ததில்லை. அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயம் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது... இந்த நிலையில் பயத்தை மறக்கடிக்கும் ஒரே ஆயுதம்... தூக்கம்தான் என்று முடிவெடுத்து கண்களை கெட்டியாக மூடிக்கொண்டாள். களைப்பினால் விரைவில் உறங்கிப்போனாள்.

மற்ற ஐவரும் முழித்துக் கொண்டு நெருப்பை சுற்றி அமர்ந்திருந்தனர்.

'யாராவது ஒருத்தர் மாத்தி மாத்தி முழிச்சிட்டுருக்கணும்..' என்று தாஸ் கூற...

'நான் முழிச்சிட்டிருக்கேன். நீங்க எல்லாரும் வேணும்னாலும் தூங்குங்க..' என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்.

'இல்ல சார், ஒருத்தரா முழிச்சிட்டிருந்த்தா நாளைக்கு நடக்க சிரமமாயிடும்' என்று தாஸ் கூற

'எனக்கெதுவும் ஆகாது.. என்னைப் பத்தி கவலைப்படாதீங்க... நான் பாத்துக்குறேன்..' என்று அவர் முரண்டுபிடித்தார்

'சார்! கவலை உங்களைப்பத்தி மட்டும் இல்ல... உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, நாங்கதான் உங்களை தூக்கிக்கிட்டு அலையணும்... நம்ம ட்ரிப் பாதிக்கப்படும்... அதனால, மாத்தி மாத்தி முழிச்சிருப்போம்...' என்று முடிவாய் கூற, இன்ஸ்பெக்டருக்கு சக்கரவர்த்தி மீது பயங்கர கோபம் வந்தது...

'ப்ரொஃபஸரை விட்டுடலாம்... அவருக்கு ரொம்பவும் டயர்டா இருக்கு..' என்று தாஸ் கூறினான்.

'இல்லய்யா தாஸ், எனக்கெதுவுமில்ல, நானும் கொஞ்ச நேரம் முழிச்சிருக்கேன்..' என்று கூற... சக்கரவர்த்தி மறுத்தார்...

'இல்ல ப்ரொஃபஸர், நீங்க தூங்குங்க, நாங்க 4 பேரும் சேர்ந்து இந்த வேலையைப் பாத்துக்குறோம்..' என்று கட்டளையாய் கூற, ப்ரொஃபஸர் மறுத்துப் பேசாமல் படுக்க சென்றார்.

'நீங்க எல்லாரும்கூட போய் படுங்க... முதல் ரவுண்டு நான் முழிச்சிருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு யாரையாவது எழுப்புறேன்..' என்று மீண்டும் கட்டளையிட அனைவரும் தூங்க சென்றனர்...

சந்தோஷ் படுத்தபடி தனக்கருகில் தூங்கிக்கொண்டிருக்கும் லிஷாவைப் பார்த்தான். பேய்க்கதை கேட்டுவிட்டு தூங்கும் குழந்தையைப் போல் இருந்தது அவளது முகம். தூக்கத்தில் இப்படி ஒரு குழந்தைத்தனத்துடன் படுத்திருக்கும் அவளைப் பார்த்து பரிதாபப்பட்டான். ஒருவேளை இவளை இந்த பயணத்திற்கு அழைத்து வந்திருக்க கூடாதோ..? என்று எண்ணியபடி புரண்டு படுத்தான். இப்போது அவன் பார்வையில் நெருப்புக்கு அருகில் அமர்ந்திருக்கும் சக்கரவர்த்தி தெரிந்தார். அவரது மிரட்டலான நடவடிக்கைகள் சந்தோஷூக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை...

எப்போதும் ஒரு குழுவுக்குள் இதுபோல் தலைவனாய் மாற முயற்சிக்கும் ஆட்களால்தான் பிரச்சினைகளே விளைகிறது என்று எண்ணினான். ஆனால், இவர்கள் குழுவில் நியாயப்படி இன்ஸ்பெக்டரிடம்தான் துப்பாக்கி இருக்கிறது, அவர்தான் தலைவனாக முயற்சிப்பார் என்று எண்ணியிருந்தான். ஆனால், இந்த சக்கரவர்த்தியிடம் அபாரமான அனுபவம் இருக்கிறது. இந்த காட்டுவழிப் பயணத்தை பொறுத்தவரை அனுபவம்தான் பயங்கர ஆயுதம் என்பதால் இவன்தான் தலைமைக்கு உகந்தவனோ? என்று குழம்பியபடி உறங்கிப்போனான்.

- - - - - - - - - - - - - - - -

விடிந்தது...

லிஷா கண்விழித்தபோது, அந்த காலைவேளையில் காடு முழுவதும் பனி சூழ்ந்து... காடு கனவுலோகமாய் காட்சியளித்தது... சே! இந்தக் காட்டை பார்த்தா நேற்று நான் இப்படி பயந்தேன் என்று அவள் வியக்குமளவிற்கு அந்த காட்டுச்சூழல் ரசிக்கும்படியாய் ரம்யமாய் காட்சியளித்தது...

திரும்பி கூடாரத்திற்குள் பார்க்க, தாஸ் மட்டும் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். அனைவரும் எழுந்து ஆளுக்கொரு வேளையில் ஈடுபட்டிருந்தனர்... தாஸ் மட்டும் ஏன் இவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று அவனை எழுப்புவதற்காக அவனருகில் சென்றாள்...

தாஸின் முகம் மிகவும் வெளிறிப்போய் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது... மேலும், அவன் உடம்பின் தூங்கும் நிலையும் கொஞ்சம் மாறுபட்டு வித்தியாசமாக தெரிந்தது..! எழுப்ப முயன்று அவனை லிஷா தொட்டுப் பார்த்தாள்... அவன் உடம்பு அசைவற்றுக் கிடந்தது... அய்யோ..?



Signature

Friday, October 22, 2010

"கேணிவனம்" - பாகம் 22 - [தொடர்கதை]


இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05

பாகம் - 06          பாகம் - 07          பாகம் - 08          பாகம் - 09          பாகம் - 10

பாகம் - 11          பாகம் - 12          பாகம் - 13          பாகம் - 14          பாகம் - 15

பாகம் - 16          பாகம் - 17          பாகம் - 18          பாகம் - 19          பாகம் -20

--------------------------------------------------------------------

பாகம் - 22

பானரோமிக் பார்வையில்
மலைத்துப்பார்க்க வைக்கும்
ஹரிஸாண்ட்டல் அதிசயம்

இரயில்....

தாஸ், அந்த இரவு வேளையில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 11ஆவது ப்ளாட்ஃபாரத்தில் நின்றிருந்த ரயிலை, தன் மனதுக்குள் ரசித்தபடி, கவிதை என்று எதையோ எழுத முயன்றுக்கொண்டிருந்தான்.

இரயிலுக்குள், ஜன்னலோரத்தில் எதிரெதிர் இருக்கையில் சந்தோஷூம், லிஷாவும் அமர்ந்தபடி சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர்...

அங்கு பரவியிருந்த விளக்கு வெளிச்சத்தில், ஆங்காங்கே வெவ்வேறு ஊரைச் சேர்ந்த பயணிகளின் நடமாடிக்கொண்டிருக்க, அவர்களது முகமும், நடையும், உடையும் தாஸை ஒரு குழந்தையாய் மாற்றி, ரயில் நிலையத்தை திருவிழாக்கூடமாக ரசிக்க வைத்துக் கொண்டிருந்தன. மேலும் அங்கு பரவியிருந்த இரும்பின் துருப்பிடித்த வாசனை, அவனின் முந்தைய பயணங்களை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தது.

அவன் நினைவுகளில் டைம் டிராவல் செய்ய முயன்று கொண்டிருந்த நேரம்... திடீரென்று ரயில்வே ஸ்டேஷனின் அறிவிப்பு அவன் கவனத்தை கலைத்தது...

''பயணிகள் கவனத்திற்கு வண்டி எண் : 1028, சென்னையிலிருந்து மும்மை வரை செல்லும், மும்பை மெயில், 11ஆவது ப்ளாட்ஃபாரத்திலிருந்து சரியாக 22 மணி 50 நிமிடங்களுக்கு புறப்படும்...'' என்று இயந்திரக்கன்னி பேசிக்கொண்டிருந்தாள்.

அந்த அறிவிப்பு வேற்று மொழிகளுக்கு மாறும்பொழுது, தனக்கெதிரே ப்ரொஃபஸர் கணேஷ்ராம் வந்து நின்றார். அவருடன் இன்னொரு நபரும் வந்திருந்தார்.

''ஹலோ தாஸ்! சாரிய்யா வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு...!' என்று ப்ரொஃபஸர் இழுத்தார்.

'பரவாயில்ல சார்... டிக்கெட் உங்ககிட்ட இருந்ததால கொஞ்சம் பதற்றமா இருந்தது... நல்ல வேளை சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க..' என்று கூறியபடி அவருக்கருகே நின்றிருந்த நபரை தாஸ் பார்த்தான்.

ப்ரொஃபஸர் அந்த நபரை தாஸிடம் அறிமுகப்படுத்தினார்...

'தாஸ்..? இவர் என் ஃப்ரெண்டுய்யா... பேரு மிஸ்டர் சக்கரவர்த்தி... இவரும் நம்மகூட கேணிவனத்துக்கு வர்றாரு...' என்றதும் தாஸ் ப்ரொஃபஸரை கொஞ்சம் கோபமாகவே பார்த்தான். ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தார்.

'இவரு என்னோட பல எக்ஸ்பெடிஷனுக்கு ஸ்பான்ஸர் பண்ணியிருக்காரு... நல்ல வரலாற்று ஆர்வலர்... நானும் இவரும் சேர்ந்து சமீப காலமா பலவிஷயத்தை ஆராய்ஞ்சிட்டிருக்கோம். இதுதவிர காட்டுப்பாதையில நல்ல அனுபவசாலி, அதனால, இவர் வர்றதுல உனக்கெதுவும் ஆட்சேபனையிருக்காதுன்னு நினைக்கிறேன்..?' என்று தீர்க்கமாக சொல்லிக்கொண்டார்.

அந்த நபர் தாஸிடம் கைநீட்டியபடி... 'ஹலோ தாஸ், ப்ளெஸர் மீட்டிங் யூ..! உங்களைப் பத்தி ப்ரொஃபஸர் நிறைய சொல்லியிருக்கார்...' என்று சக்கரவர்த்தி கைகுலுக்க... அவரது பிடி மிகவும் கெட்டியாய் இருந்தது...

தாஸுக்குள் ஏதோ தோன்றி மறைந்தது... இவர் யார்? இந்த பயணத்துக்கு தேவையா..? ஏன் இந்த ப்ரொஃபஸர் கடைசி நிமிடத்தில் இப்படி ஒரு புதிய நபரை இந்த பயணத்தில் திணிக்கிறார் என்று ஏகப்பட்ட குழப்பம் தோன்றினாலும், வெளிப்படையாய் அவனால் எதுவும் காட்டிக்கொள்ள முடியவில்லை...

நேரம் சரியாக 10:52 என்று காட்டிக்கொண்டிருக்க... ரயில்... கூவியபடி மெல்ல நகர்ந்தது...

அய்யோ இன்னும் இந்த இன்ஸ்பெக்டரை காணவில்லையே என்று தாஸ் பதறினான். வண்டி மெதுவாக வேகம் கூட்ட... நகரும் வண்டியில் அனைவரும் ஏறிக்கொண்டனர்... ரயில் பெருமூச்சுவிட்டபடி ப்ளாட்ஃபாரத்தை தாண்டியது...

சந்தோஷ், லிஷா அமர்ந்திருந்த வரிசையில் மற்ற மூவரும் அமர்ந்துக் கொள்ள, ப்ரொஃபஸர் தனது நண்பரை சந்தோஷூக்கும், லிஷாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும் அந்த நபரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாஸ் பதற்றமாக இன்ஸ்பெக்டரின் வருகைக்காக அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருக்க...
'பாஸ், எங்க இன்ஸ்பெக்டரைக் காணோம்..' என்று சந்தோஷ் கேட்டான்...

'அதான் தெரியல... ஃபோன் பண்ணி பாத்தா... ரிங் போயிட்டேயிருக்கு எடுக்க மாட்டேங்கிறாரு... அவரு வரலைன்னா, இந்த ட்ரிப்-பே பாழாயிடும். அவரோட இன்ஃப்ளூயன்ஸ்லதான் வண்டிய அந்த காட்டுவழியில நிறுத்தி இறங்க முடியும். இல்லேன்னா, அந்த பாதையை கண்டுபிடிக்கிறது கஷ்டம்' என்று தாஸ் புலம்பிக்கொண்டிருந்த சமயம், அவன் தோளில் ஒரு கை விழுந்தது... இன்ஸ்பெக்டர்தான். ஜீன்ஸிலும், கருப்பு சட்டையிலும், சற்றே இளமையாய் தெரி்ந்தார்.

'தேங்க் காட்... வந்தீங்க...' என்று தாஸ் சந்தோஷப்பட்டான்.

'நான் ட்ரெயின் ஏறிட்டேன்னு எஸ்.எம்.எஸ். அனுப்பினேனே..? பாக்கலியா..?' என்றுகூறியபடி அவரும் தனது லக்கேஜ்ஜை வைத்துவிட்டு அமர...

'பாக்கலை சார்... ஆமா..? நாம இறங்க வேண்டிய இடத்துல, ட்ரெயினை நிறுத்த ப்ரமிஷன் வாங்கிட்டீங்களா..?'' என்று தாஸ் கேட்டான்.

'டோன்ட் வர்ரி... கேஸ் விஷயமா போறதா சொல்லி பர்மிஷன் வாங்கிட்டேன். அதுமட்டுமில்ல, நீங்க அன்னிக்கி ட்ராவல் பண்ண ரயிலோட லாக் (Log) ஷீட் வாங்கிட்டேன். நீங்க எந்த இடம்னு சொன்னீங்கன்னா... நான் ட்ரெயினை நிறுத்திடுறேன். இறங்கிடலாம்...' என்று கூற... தாஸ் நிம்மதியடைந்தான்.

இன்ஸ்பெக்டரிடம் ப்ரொஃபஸரும் சக்கரவர்த்தியும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

வண்டி வேகமெடுத்துக் கொண்டிருந்தது.... தாஸூக்குள் ஏதோ ஒன்றை மறப்பது போன்ற ஒரு எண்ணம் இருந்துக் கொண்டேயிருக்க... எழுந்து அந்த கம்பார்ட்மெண்டின் கதவருகே சென்றான்.
வெளியே...

சென்னையின் புறநகர்பகுதியின் வீடுகள் ஆங்காங்கே மண்ணில் விழுந்த நட்சத்திரங்களாய் தெரிந்து கொண்டிருக்க... தனது மொபைலை எடுத்தான்...
அதில் "1 Message(s) Recieved" என்றிருந்தது...

'இரயிலேறிவிட்டேன். சில நிமிடங்களில் சந்திப்போம்...' என்று இன்ஸ்பெக்டர் அனுப்பிய குறுந்தகவல் ஆங்கிலத்தில் இருந்தது...

அதைப் பார்த்ததும் தாஸூக்கு தான் மறந்த விஷயம் நினைவுக்கு வந்தது... தாத்தாவுக்கு தகவல் சொல்லவில்லையே..! என்றெண்ணியபடி தாத்தாவுக்கு ஃபோன் செய்ய எத்தனித்த போது... தாத்தாவிடமிருந்தே ஃபோன் வந்தது.

செல்ஃபோன் ரிங்டோன்
அழைக்காதே..! அழைக்காதே..!
அவைதனிலே எனையே ராஜா..!

எப்படி நாம் நினைத்தது தாத்தாவுக்கு தெரிந்திருக்கும். இதுதான் டெலிபதியோ..? இல்லை இது தற்செயல்தான் என்று  தர்க்க ரீதியில் மனது தீர்ப்பளித்தாலும் சமயத்தில் இதையெல்லாம் நம்ப தோன்றுகிறதே... என்று உள்ளுக்குள் வியந்தபடி ஃபோனை ஆன் செய்தான்.

'ஹலோ... ஓல்டு ஃப்ரெண்ட்... எப்படியிருக்கீஙக தாத்தா..?' என்று குதூகலமாக பேச்சை தொடங்கினான்...

'ஹலோ... தம்பி... நான் சுசீலா... பேசறேம்ப்பா..' என்று சமையல்காரம்மாவின் குரல் கேட்டது...

'சுசீலாம்மா..? என்னாச்சு..?' என்ற தாஸின் குரலும் நடுக்கம் காட்டியது. என்ன நடந்திருக்குமோ என்று கணநேரத்தில் அவனுக்குள் ஏதேதோ விபரீத எண்ணங்கள் வந்து போனது...

'தாத்தாவுக்கு ரொம்ப உடம்பு முடியாமயிருக்கு... அவரு உங்ககிட்ட சொல்லவேணாம்னு சொல்றாரு... எனக்குத்தான் மனசு கேக்கலை... அதான் ராத்திரியா இருந்தாலும் பரவாயில்லன்னு ஃபோன் பண்ணிட்டேன்...' என்றவள் கூறிவிட்டு ஃபோனை வைத்துவிட... தாஸூக்கு நிற்கும் இடம் தள்ளாடியது. சரியாக சந்தோஷ் அங்கு வந்து சேர்ந்தான். தாஸின் நிலையைப் பார்த்ததும் அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

'பாஸ் என்னாச்சு... பாஸ்..? பாஸ்... சீட்டுக்கு வாங்க... வந்து உக்காருங்க...' என்று கூறியபடி அவனை கைத்தாங்கலாக அழைத்துவந்து சீட்டில் உட்கார வைத்தான்.

'என்னாச்சு பாஸ்..? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க..?' என்று சந்தோஷ் கேட்க, அவனைத் தொடர்ந்து அனைவரும், என்னாச்சு... என்னாச்சு... என்று கேட்டு கொண்டிருக்க... தாஸ் யாருக்கும் பதிலளிக்காமல், ஃபோனை எடுத்து தாத்தாவின் நம்பருக்கு டயல் செய்தான்.

'ஹலோ..?' மறுமுனையில் சுசீலாம்மா பேசினாள்.

'சுசீலாம்மா... நா... நான்... தாத்தாகிட்ட பேசணும்..' என்றுகூற, மறுமுனையில் சிறிது நேரம் மௌனம்...

'ஹ்ஹ...ல்லோ...' என்று மிகவும் பலஹுனமான குரலில் தாத்தா பேசினார்...

'தாத்தா... உங்களுக்கு என்னாச்சு தாத்தா..?'
'புதுசா ஒண்ணும் ஆகலை... வயசாகுதுல்லியா... இதெல்லாம் சகஜம்தான். இவ ஒரு பைத்தியக்காரி, சொல்லாதேன்னு சொன்னா கேக்காம, உனக்கு வேற ஃபோன் பண்ணிட்டா...'
'தாத்தா, நா.. நான்... உங்களை பாக்க இப்பவே கிளம்பி வர்றேன் தாத்தா..?'

'வேண்டாம் தாஸ்... நீ எங்கேயோ வெளியில... இருக்கே போலருக்கு... '

'ஆமா தாத்தா... நான் அந்த கேணிவனத்துக்கு போக கிளம்பினேன். ஆனா....' என்று இழுத்தவன், சிறிது நேர இடைவெளிக்கு பின் தொடர்ந்தான், 'ஆனா, நான் போகலை தாத்தா, அடுத்த ஸ்டேஷன்லியே இறங்கிடறேன்... இப்பவே உங்களை பாக்க கிளம்பி வர்றேன்' என்றான்.

தாத்தா, ஒரு சிரமமான பெருமூச்சுவிட்டபடி பதிலளித்தார்...

'தாஸ், நீ ஒண்ணும் வரவேணாம். நீ வந்துட்டா மட்டும் எனக்கு சரியாயிடுமா..? நீ இப்போவே வந்து என்னை பாக்கிறதைவிட, கேணிவனத்துக்கு போயிட்டு வந்து என்னை பாக்க வந்தேன்னா, நாம நிறைய விஷயம் பகிர்ந்துக்கலாம். நா..நான்... உங்கிட்ட அதைத்தான் விரும்புறேன். இப்போ வராத... கேணிவனத்துக்கு போயிட்டு வா...' என்று தன்னால் முடிந்தவரை உடையாத குரலில் தீர்க்கமாக கூறினார்.

தாஸூக்கு மிகவும் வருத்தமாக இருந்தது... மேற்கொண்டு எதுவும் பேசுவதற்குள் தாத்தா ஃபோனை கட் செய்துவிட்டார்.

------------------------

அடுத்த நாள்....

பகல் 11 மணியளவில், ட்ரெயின் ஒரு காட்டுப்பாதையில் நின்றிருந்தது... அனைவரும் முகத்தில் குழப்பத்துடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க... தாஸூம் அவன் குழுவினர்களும் தமது பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தனர்.

மக்கள் ட்ரெயினிலிருந்து இறங்கும் தாஸ் மற்றும் குழுவினர்களை, வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருக்க... இன்ஸ்பெக்டர் தனது செல்ஃபோனில் வண்டியின் கார்ட்-க்கு ஆங்கிலத்தில் நன்றி செலுத்திக் கொண்டிருந்தார். வண்டி நகர்ந்து அவர்களை கடந்தபடி அந்த இடத்தை விட்டு புள்ளியாய் சென்று மறைந்தது...

ஆறுபேரும் அந்த காட்டுப்பாதையை பார்த்துக் கொண்டிருந்தனர்...

'ஸோ! தாஸ்... இந்த இடம்தானா..? நல்லாத் தெரியுமா..?' என்று ப்ரொஃபஸர் உரிமையுடன் கேட்டார்...

'நாங்க காட்டுல தொலைஞ்சதே வழி தெரியாமத்தான் சார். இந்த இடம் மாதிரிதான் தெரியுது... காட்டுக்குள்ள போய் பாத்தாதான் தெரியும்...' என்று கூற, அனைவரும்... காட்டுப் பாதைக்குள் நுழைந்தனர்.

சமீபத்தில் பெய்திருந்த மழையினால், காட்டுப்பாதை மிகவும் மோசமாக இருந்தது... சொத சொத என்ற வழுக்குப்பாதையில் நடப்பது அவ்வளவு சுலபமாய் இருக்கவில்லை...

தாஸ் வழிகாட்டிபோல் முன்னால் நடந்து போய்க்கொண்டிருக்க... அவனைத் தொடர்ந்தபடி இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சர்வஜாக்கிரதையாய் அங்குமிங்கும் பார்த்தபடி நடந்துக்கொண்டிருந்தார்.

ஆனால், இன்ஸ்பெக்டரின் அலர்ட்-ஆன இந்த நடையும், அவர் அங்குமிங்கும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு நடக்கும் தோரணையும், சந்தோஷூக்கு சிரிப்பு வரவழைத்தது.... இது தாளமுடியாமல் அவரிடமே இதை கேட்டும்விட்டான்.

'சார்... நீங்க ரொம்பத்தான் அலர்ட்-ஆ நடக்கறீங்க... நம்ம கர்நாடகா ஃபாரஸ்டுக்குதானே வந்திருக்கோம், நீங்க நடக்கிறதை பார்த்தா, ஏதோ அமேஸான் ஃபாரஸ்ட்டுக்குள்ள வந்தமாதிரி பில்டப்-ஆ இருக்கு..' என்று கூறி சிரிக்க... அவர் நடந்தபடியே அவனுக்கு பதிலளித்தார்.

'ஏன், அமேஸான் ஃபாரஸ்டுதான் அடர்த்தியான காடா..? கர்நாடகாவுல இன்னும் மனித கால் படாத காடுங்க எவ்வளவோ இருக்கு' என்று கூறியபடி நடையைத் தொடர்ந்தார்.

'சரி சார், ஒரு சின்ன கேள்வி...! இப்போ உங்க முன்னாடி புலியோ சிங்கமோ வந்துடுச்சின்னா என்ன பண்ணுவீங்க..?' என்று நடந்தபடி கேட்க...

இன்ஸ்பெக்டர் சட்டென்று நின்று, திரும்பி சந்தோஷின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தார்...

சந்தோஷ் நடுங்கிப் போனான்.

'அப்படி ஏதாச்சும் மிருகம் வந்திச்சுன்னா... இந்த துப்பாக்கியல ஷூட் பண்ணிடுவேன். புலியோ சிங்கமோ மட்டுமில்ல... வேற எந்த பிரச்சினை வந்தாலும் சரி, ஷூட் பண்ணிட வேண்டியதுதான்...' என்று கூற, சந்தோஷ் கொஞ்சம் மிரண்டு போனான். அனைவரும் ஒரு கண நேரம் நின்று, அவர் கையிலிருந்த துப்பாக்கியை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

ப்ரொஃபஸர் நிலமையை சகஜமாக்க முயன்றார்...

'சார், நீங்க ஷூட் பண்ணனும்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது... நான் என்னோட ஹேண்டி கேமிரா-வை கொண்டு வந்திருக்கேன்...! ஷூட் பண்றதுக்கு..' என்று கூறி சிரித்தபடி, தனது பையிலிருந்து ஹேண்டி கேமிராவை எடுத்து ரெக்கார்ட் செய்து கொண்டே வந்தார்.

லிஷா மிகவும் தயங்கியபடி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்க, அவளை கைத்தாங்கலாக பிடித்தபடி சந்தோஷ் தொடர்ந்து கொண்டிருந்தான்.

ப்ரொபஸருக்கு நடப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், ஹேண்டி கேமிராவில் அவர்கள் நடந்து செல்லும் பாதையை ரெக்கார்ட் செய்தபடி நடந்துக் கொண்டிருந்தார். அவருக்கும் பின்னால், சக்கரவர்த்தி என்ற அந்த புதிய நபர் செடிகொடிகளை சட்டை செய்யாமல் நல்ல அனுபவசாலி போல், மிகவும் அலட்சியமாகவே நடந்து வந்து கொண்டிருந்தார்.

-----------------------------------

கிட்டத்தட்ட 3 மணி நேரமாக காட்டுக்குள் சேறுநிறைந்த பகுதிகளில் நடந்ததால் அனைவரும் களைப்படைந்திருக்க... ஒரு இடத்தில் கொஞ்சமாக வெட்ட வெளியும், பாறைகளும் தெரியவே, அங்கேயே அனைவரும் அமர்ந்தனர்.

லிஷாவுக்கு அசுரத்தனமாய் தண்ணீர் தாகமெடுத்தது... கையிலிருந்த பாட்டிலை முழுவதுமாக குடித்து முடித்தாள். இருந்தும், அவளுக்கு தாகம் அடங்கவில்லை...

'சந்தோஷ்... தண்ணி பாட்டில் கொடு... தாகமே அடங்கலை...' என்று கேட்க. அவனுக் எடுத்து கொடுத்தான்.

தாஸ் அவளை எச்சரித்தான்... 'ரொம்ப தண்ணி குடிக்காத லிஷா... வயிறு ரொம்பிடிச்சுன்னா, அப்புறம் நடக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்...'

'என்ன பண்ணட்டும் தாஸ்..! ரொம்ப தாகமா இருக்கே..!' என்று கூற...

'இதை சாப்பிடுங்க... தாகம் அடங்கிடும்..' என்று சக்கரவர்த்தி ஒரு ப்ளாஸ்டிக் கவரை நீட்டினார்...

'இது என்ன..?' என்று சந்தோஷ் ஆவலாய் கேட்க...

'நெல்லிக்காய்..'

'நெல்லிக்கா எதுக்கு..?' என்று லிஷா கேட்டாள்

'இதைச் சாப்பிட்டா தாகம் அடங்கிடும், மறுபடியும் தாகம் எடுக்கும்போது, இன்னொரு நெல்லிக்காவை சப்பிக்கிட்டே வந்தா, நாக்குல நீர் வத்தாது...' என்று சக்கரவர்த்தி விளக்கம் கொடுக்க, லிஷா அந்த நெல்லிக்காயை வாங்கி சாப்பிட்டாள்.

உண்மைதான், தாகம் சட்டென்று அடங்கிப்போனது... சில நெல்லிக்காய்களை எடுத்து தனது பையில் போட்டுக் கொண்டாள்.

'ரொம்ப தேங்க்ஸ்... பரவாயில்லியே..! நீங்க ரொம்பவும் ப்ரிப்பேர்ட்-ஆ வந்திருக்கீங்க போல..?'

'நான்தான் சொன்னேன்ல, இவரு காட்டுவழிப்பாதையில ரொம்பவும் எக்ஸ்பர்ட்னு...' என்று ப்ரொஃபஸர், அந்த சக்கரவர்த்தியின் புகழை மீண்டும் பாடினார்.

'வேற என்ன சார் கொண்டு வந்திருக்கீங்க..' என்று சந்தோஷ் ஆவலாய் கேட்டான்...

'வேணுங்கிறதை கொண்டு வந்திருக்கேன்..' என்று அவர் மொட்டையாய் பதிலளித்தார்...

'இருங்க நானே கெஸ் பண்றேன்... ம்ம்ம்... மருந்து கொண்டு வந்திருக்கீங்களா..?'

'இல்ல...'

'ஏன்..?'

'அதான் இவ்வளவு பெரிய காடு இருக்கே... இங்கே இல்லாத பச்சிலை மருந்துகளையா நான் கொண்டு வரணும்..?'

'ஓ.. அப்போ உங்களுக்கு சித்தா தெரியுமா..?'

'சித்தாவும் தெரியும்...'

'சரி, இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்ட கேள்வியையே உங்ககிட்டயும் கேக்குறேன். சும்மா ஒரு ஃபன்-க்காகத்தான்... திடீர்னு சிங்கமோ புலியோ வந்தா என்ன பண்ணுவீங்க..?'

'வேட்டு வைப்பேன்...' என்றவர்கூற...

'வேட்டா..?'

'வேட்டுன்னா, பட்டாசுய்யா...' என்று சந்தோஷின் சந்தேகத்துக்கு, ப்ரொஃபஸர் பதிலளித்தார்...

'பட்டாசை வச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க..?'

'நம்ம இன்ஸ்பெக்டர் வச்சிருக்கிற துப்பாக்கியவிட, இந்த பட்டாசுகள் அதிகமா சத்தம் எழுப்பும். அந்த சத்தத்துக்கு எந்த மிருகமா இருந்தாலும், கிட்டவே வராது...' என்று சக்கரவர்த்தி கூற, இன்ஸ்பெக்டர் அவனை ஒருமுறை முறைத்து பார்த்தார்.

மீண்டும் பயணம் துவங்கியது...

----------------------------------

சூரியன் உச்சியிலிருந்து சரிந்து கொண்டேவர... இவர்களது பிற்பகல் நேர பயணம் சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று வானம் இருண்டு கொண்டு, அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் மீண்டும் பலத்த மழை வரும்போல் தோன்றியது.

'இன்னும் பத்து நிமிஷத்துல பயங்கர மழை வரப்போகுது..' என்று சக்கரவர்த்தி புலம்ப ஆரம்பித்தார்.

'மழைதானே... வரட்டும் எனக்கு மழை ரொம்ப பிடிக்கும்' என்று லிஷா கொஞ்சலாக கூறினாள்...

'அடர்ந்த காட்டுக்குள்ள மழையில மாட்டுறதைவிட ஆபத்தான விஷயம் வேறெதுவுமில்ல..' என்று சக்கரவர்த்தி கூற... அனைவரது முகமும் இருண்டு போனது.

இதற்குமுன் இந்த காட்டுக்கு குணாவுடன் வந்தபோது, தாஸ் இதே எச்சரிக்கையை குணாவிடம் கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
இன்று இரவு வருவதற்குள் எப்படியாவது கேணிவனத்தை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று அவன் நினைத்திருந்த வேளை, பலமாக மழை பிடித்தது...

அனைவரும் ஒரு அடர்த்தியான மரத்தின் கீழ் நின்றிருந்தனர். ஆனாலும், நனைந்துக் கொண்டுதான் இருந்தனர்.
மழை நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குட்டி ஓடையாக மாறி ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓடை ஓடும் திசையைப் பார்த்ததும், தாஸ் மனதிற்குள் ஏற்கனவே இருந்த ஐயம் உறுதியானது.

'அடக்கடவுளே..!' என்றான்.

'என்னாச்சு.. தாஸ்..' என்று இன்ஸ்பெக்டர் பதற்றத்துடன் கேட்க...

'சார்... நாம திசை மாறி வந்துட்டோம்...' என்றவன் கூறிமுடிக்க, அங்கிருந்த அனைவரது மனநிலையையும் எப்படியோ அறிந்துக் கொண்ட இயற்கை, இடிச்சத்தம் கொண்டு பின்னனி இசைத்தது....




Signature

Friday, October 15, 2010

"கேணிவனம்" - பாகம் 21 - [தொடர்கதை]


இக்கதையின் இதர பாகங்களை படிக்க
பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
பாகம் - 11          பாகம் - 12          பாகம் - 13          பாகம் - 14          பாகம் - 15 
பாகம் - 16          பாகம் - 17          பாகம் - 18          பாகம் - 19          பாகம் -20
--------------------------------------------------------------------
பாகம் - 21


ப்ரொஃபஸர் கணேஷ்ராமின் வீடு...

அவர் வீடு, பெரியளவில் இல்லாவிட்டாலும், ஒரு குட்டி பங்களா என்றே சொல்லலாம்...  ரசனையுடன் கட்டியிருந்தார்...

வீட்டின் மாடியிலிருந்த ஒரு அறையை, பிரத்யேகமாக தனது ஆய்வுக் கூடமாக மாற்றியிருந்தார். (குட்டி ரகசியம் : முன்னொருநாள், இவர் வீட்டுக்கு வந்தபோது, இந்த அறையை பார்த்த தாஸ்-க்கு மிகவும் பிடித்துப் போகவேதான், பின்னாளில் பிரம்மாண்டமாய் Ancient Park என்று தனது ஆஃபீஸை வடிவமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிறைவேற்றினான்)

இப்போது, அதே அறையில் தாஸ்-ம், சந்தோஷூம், லிஷாவும் ப்ரொஃபஸரை சுற்றி நின்றிருந்தனர்.

ப்ரொஃபஸர், தனது அறையின் நடுவே வைத்திருந்த அந்த கேணிவன ஓவியத்தை, பூதக்கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தார்.

'தாஸ்? இங்க வாய்யா... இதைத்தான் நான் சொன்னேன்... இந்த க்ரீடத்தை உத்துப்பாரு...' என்று பூதக்கண்ணாடியிலிருந்து கண்களை விலக்கியபடி, அந்த பூதக்கண்ணாடியை தாஸிடம் கொடுத்துவிட்டு திரும்பினார். அவன் அதை வாங்கிக் கொண்டு ஆர்வமாய் அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தான்.
ப்ரொஃபஸர் திரும்பியதும், அங்கே நின்றிருந்த லிஷாவை பார்த்தார்...

'நீ திரும்பி வந்ததுல ரொம்ப சந்தோஷம்மா...' என்றார்... அவளும் சிரித்தபடி கண்களால் நன்றி செலுத்தினாள்.

பூதக்கண்ணாடியில் கண்கள் புதைத்திருந்த தாஸ், ஒன்றும் புரியாமல்... 'என்ன சார் இருக்கு இந்த க்ரீடத்துல..?' என்று கூறியபடி ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்க...

'அந்த க்ரீடத்துல எதாவது தெரியுதா..?' என்று ப்ரொஃபஸர், அந்த அறையின் ஓரமாய் இருந்த மேஜையை நெருங்கி நின்றபடி கேட்டார்.

'என்னமோ ஒரு உருவம் பொறிக்கபட்டிருக்கு... ஆனா, என்னன்னு தெளிவா தெரியல சார்...' என்று தாஸ் புலம்பியபடி பூதக்கண்ணாடியில் அந்த உருவத்தை பார்த்துக் கொண்டிருக்க... ப்ரொஃபஸர் அந்த மேஜையின் டிராயரிலிருந்து, ஒரு பெரிய கலர் ப்ரிண்ட் அவுட் ஃபோட்டோவை எடுத்து வந்து தாஸிடம் கொண்டு வந்தார்.

'அந்த கிரீடத்துல இருக்கிறது இந்த உருவம்தான்..' என்று அந்த ஃபோட்டோவை அவனிடம் கொடுக்க... தாஸ் அந்த ஃபோட்டோவை பார்த்தான்.  அதில், கொம்பு வைத்த பன்றியின் உருவம் தெளிவில்லாமல் இருந்தது.

'இ... இது....  ஒரு பன்னி உருவம் மாதிரியிருக்கு..' என்று சந்தேகத்துடன் கூற...

'அதேதான், காட்டுப்பன்னி, வராக முத்திரை... இதுதான் அந்த கிரீடத்துல இருக்கிற உருவம்...' என்று கூறினார். தாஸ் மிகவும் ஆச்சர்யப்பட்டான்.

'அட ஆமா..! சார்..? நாங்க இந்த ஓவியத்தை எத்தனையோ தடவை ஃபோட்டோஷாப்-ல முடிஞ்சவரைக்கும் டீடெய்ல்ஸ் படிக்க ட்ரை பண்ணியிருக்கோம். அப்போ இந்த உருவம் சிக்கவேயில்லியே... ஆனா, நீங்க எப்படி இதை ப்ளோ-அப் செஞ்சி எடுத்தீங்க..?' என்று கேட்க

'பழைய டிராயிங்க்ஸை படிக்கிறதுக்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கு... இருந்தாலும் நான் சமீப காலமா ஒரு வழிமுறைய பத்தி ஸ்டடி பண்ணிட்டிருக்கேன். HDRI (High Dynamic Range Imaging)-ன்னு ஃபோட்டோகிராஃபில ஒரு ப்ராஸஸ் இருக்கு. அந்த வகையில ஒரே இடத்தை எக்ஸ்போஷரை கூட்டி குறைச்சி ஃபோட்டோ எடுத்து மிக்ஸ் பண்ணும்போது, அந்த ஃபோட்டோ பயங்கர டீடெய்லிங்கோட துல்லியமான தெரியும். அதே வழிமுறையை இந்த மாதிரி பழைய ஓவியத்துக்கு அப்ளை பண்ணி பாத்தேன், 60% அந்த ஃபோட்டோவுக்குள்ள மறைஞ்சியிருக்கிற கண்ணுக்கு தெரியாத விஷ்வல் டீடெய்ல்ஸ் தெரிய வருது... ட்ரை பண்ணி பாத்தேன், சிக்கிக்கிச்சி..' என்று பெருமையாக கூறினார்.

'சூப்பர் சார், ஃபோட்டோகிராஃபியில யூஸ் பண்ற ஒரு ப்ராஸஸ்-ஐ இப்படி பழைய விஷயங்களை தெரிஞ்சிக்கிறதுக்கு யூஸ் பண்ணியிருக்கீங்க... ப்ரில்லியண்ட் ஐடியா..' என்று கூற, அவர் அந்த பாராட்டை காதில் வாங்காமல்...

'சரி, என்னை புகழ்றதை விடு, விஷயத்துக்கு வர்றேன். இந்த வராக முத்திரை யாரோடதுன்னு தெரியுமா..?' என்று கேட்க, தாஸ் கொஞ்சம் தடுமாறினான்.

'சாரி சார், படிச்சிருக்கேன், ஆனா ஞாபகமில்ல..' என்று அசடுவழிந்தான்.

'என்னய்யா, என் மாணவர்கள்லியே ப்ரில்லியண்ட் ஸ்டூடன்ட் நீன்னு நினைச்சிட்டிருக்கேன். ஆனா, நீயே இப்படி சொதப்பற..? இது சாளுக்கியர்களோட முத்திரைய்யா..' என்று கூற.. தாஸ் நினைவு வந்தவனாய்...

'ஓ... ஆமா... அப்போ இந்த ஓவியத்துல இருக்கிற மன்னன் சாளுக்கியனா..?'

'இருக்கலாம் அப்படி இல்லன்னா, சாளுக்கியர்களுக்கு கீழ இருந்த ஏதாவது ஒரு சிற்றரசனாகூட இருக்கலாம்..' என்றதும், தாஸூக்குள் ஏகப்பட்ட குழப்பம்.

'ஆனா, அந்த கோவில் கிணத்துக்குள்ள தமிழ்ல எழுதியிருந்ததே சார்..? சாளுக்கியன்னா இந்த தமிழ் சித்தர் எதுக்கு அங்கே போய் தமிழ்ல பாட்டெழுதணும்?'

'ஒருவேளை அப்போ இந்தாளு சாளுக்கிய சோழனா இருப்பான்னு நினைக்குறேன்..?'

'சாளுக்கிய சோழனா..? சாளுக்கியர்களுக்கும் சோழர்களும் பகைவர்கள்தானே..?' என்று கேட்க

'ஹா ஹா.. பகைவர்கள் என்னிக்குமே பகைவர்களா மட்டுமே இருந்ததில்ல தாஸ்..! ம்ம்ம்.. சரி, உதாரணத்துக்கு ஒரு கேள்வி... கலிங்கத்துப்பரணி படிச்சிருக்கியா..?'

'படிச்சிருக்கேன்'

'அதுல தலைவன் யாரு..?'

'குலோத்துங்க சோழன்...'

'அந்த பாட்டுல அவனை வெறும் சோழனாத்தான் எழுதியிருக்காங்க.. ஆனா, அவன் ஒரு சாளுக்கிய-சோழன்..'

'குலோத்துங்கன், சாளுக்கிய சோழனா..?'

'ராஜராஜ சோழனோட பொண்ணு குந்தவை. இருந்தால்ல.. அவ விமலாதித்தன்னு ஒரு சாளுக்கிய மன்னனைத்தான் கட்டிக்கிட்டா... அதுலருந்துதான், சாளுக்கிய சோழர்களோட தோற்றம் ஆரம்பிச்சது... அதுக்கப்புறம் 2வது ராஜேந்திர சோழனோட மகள்வழி பேரன்தான் இந்த குலோத்துங்கன். அப்போ சோழவம்சத்துல அதிராஜேந்திர சோழன் இறந்ததுக்கப்புறம் வாரிசு இல்லாததால இந்த குலோத்துங்கனை சோழமன்னனா உக்கார வச்சிருக்காங்க... அதுக்கப்புறமா வந்த சோழர்கள் எல்லாரையும் சாளுக்கிய சோழர்களாத்தான் சொல்றாங்க...' என்று ப்ரொஃபஸர் கூற, தாஸ் வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

சந்தோஷூக்கு உடனே, சிவாஜி நடித்த ராஜராஜசோழன் படம் நினைவுக்கு வந்தது... 'சார்... நீங்க சொன்ன ஒரு விஷயத்தை நான் ஏற்கனவே சினிவாவுல பாத்திருக்கேன். சிவாஜி சார் தன்னோட மகளா நடிச்ச லஷ்மிய விமலாதித்தனா நடிச்ச முத்துராமனுக்கு கட்டி கொடுப்பாரு... கரெக்டா..?' என்று கேட்க

'பரவாயில்லியே... சினிமாவைப் பாத்தும் வரலாறை தெரிஞ்சி வச்சிருக்கியே...' என்று அவனை ப்ரொஃபஸர் பாராட்ட, லிஷாவுக்கு கடுப்பாக இருந்தது...

'ப்ரொஃபஸர் சார், ஒண்ணு க்ளாஸ் எடுக்குறீங்க..! இல்ல அவார்டு கொடுக்குறீங்க..! விஷயத்துக்கு வாங்க சார்... அப்போ, இந்த ஓவியத்துல இருக்கிற ராஜா தமிழ் ராஜாதான்னு சொல்றீங்களா..?' என்று கேட்டாள்

'அப்படித்தான் தோணுது..'

தாஸ் நீண்ட யோசனையிலிருந்தான். 'சார், நீங்க சொன்னதுக்கப்புறம் இன்னொரு விஷயமும் ஒத்துப்போகுது..' என்றான்

'என்னய்யா..?'

'நான் இங்கே பரசுராம லிங்கேஷ்வரர் கோவில்ல கேள்விப்பட்ட செய்திப்படி, அந்த சித்தர் சமாதியை சோழமன்னன் வேற எங்கேயோ கொண்டு போய் ஒளிச்சி வச்சதா தெரிஞ்சுது... ஒரு வேளை அந்த சோழ மன்னன் நீங்க சொன்ன மாதிரி சாளுக்கிய சோழனா இருந்தா..? அவர்தான் இந்த ஓவியத்துல இருக்கிறவரோ என்னமோ..? நாம வேணும்னா அந்த கோவிலை இன்னும் டீடெய்லா ஸ்டடி பண்ணா இந்த ஓவியம் வரையபட்ட காலம் தெரியவருமில்லியா..?' என்று கேட்க

'தெரிய வரும்ம்ம்...' என்று இழுத்துக் கொண்டே வேறு எதையோ யோசித்த ப்ரொஃபஸருக்குள் ஒரு கேள்வி எழுந்தது, உடனே அவர் தாஸிடம்...

'ஆமா..? எதுக்கு அந்த ராஜா, சித்தர் உடம்பை வேறு இடத்துக்கு ஷிஃப்ட் பண்ணாராம்..?' என்று ஆர்வமாய் கேட்க...

'அந்த ராஜாவோட கனவுல அந்த சித்தரே வந்து சொன்னதால அப்படி செஞ்சாராம்...' என்று தாஸ் விடையளித்தான்.

'ஓஹோ...' என்று கூறி மீண்டும் எதையோ யோசித்தவர் சட்டென்று நிமிர்ந்து, 'யோவ் தாஸ், இவ்ளோ நாளா விடையை கையில வச்சிக்கிட்டியே தேடிக்கிட்டிருக்கியேய்யா..?' என்று கூற, மற்ற மூவரும் நிமிர்ந்தனர்...

'நம்மகிட்ட என்ன விடை சார் இருக்கு..?' என்று தாஸூம் ஆர்வமாய் கேட்டான்.

'இப்ப நாம அனலைஸ் பண்ண விஷயத்தையெல்லாம் வச்சி பாக்கும்போது, இந்த ஓவியத்துல சித்தர் சாளுக்கிய மன்னனோட கர்நாடகாவுல வாழ்ந்திருக்காரு... இல்லையா..?'

'ஆமா..?'

'அப்புறம் ஏதோ காரணத்துனால, இங்கே சென்னையில இருக்கிற கோவில்ல சமாதியாயிருக்காரு...'

'சரி..?'

'இங்கே இருக்கிற ராஜாவோட கனவுல வந்து, தன்னை ஒரு இடத்துக்கு கொண்டு போக சொல்லியிருக்காரு...'

'ஆமா..?'

'திருவிழாவுல தொலைஞ்சிபோன ஒரு குழந்தை, யார்கிட்டயாவது உதவி கேக்கும்போது, என்னன்னு சொல்லும்..? தன்னை தன்னோட வீட்டுல கொண்டுபோய் விட்டுடும்படியாத்தானே கேட்கும்..?' என்று கூற, அங்கிருப்பவர்களுக்கு அவர் சொல்ல வரும் விஷயம் புரிந்தது... அவர் தொடர்ந்தார்...

'அப்படின்னா.. அந்த சித்தர், சோழ ராஜாவோட கனவுல வந்து தன்னை ஏன் கேணிவனக்கோவில்ல கொண்டு போய் வைக்கும்படியா சொல்லியிருக்கக்கூடாது..' என்று கூற, அந்த அறையில் ஒரு 5 விநாடிகள் அமைதி நிலவியது... சந்தோஷ் அவருக்கு கைகொடுத்தான்.

'ப்ரொஃபஸர் சார்... கலக்கிட்டீங்க... பாஸ் உங்காளு கிரேட் பாஸ்... இவரு சொலறதுல பாய்ண்ட் இருக்கு... இந்த சின்ன விஷயத்தை நாம இவ்வளவு நாள் யோசிக்காம விட்டுட்டோம்...' என்று குதூகலித்துக் கொண்டிருந்தான். லிஷாவும் ப்ரொஃபஸரை எண்ணி வியந்துக் கொண்டிருந்தாள்.

தாஸூக்கும் அவர் சொன்ன விஷயம் உறைத்தது. இதை நாம் யோசிக்கவேயில்லையே..! ஒருவேளை அந்த கோவிலிலேயே அந்த சித்தரின் உடம்பு மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் இருக்கலாம்தானே... கடிவாளம் கட்டிய குதிரைப் போல் ஒரே ரீதியில் யோசித்து இருந்துவிட்டோமே... ஆனால் உடனே அவனுக்குள் வேறு கேள்வியெழுந்தது..

'ஆனா சார்..? நான் அந்த கோவிலை முடிஞ்சவரைக்கும் பாத்திருக்கேனே சார்... அங்கே அந்த சித்தர் சமாதி இருக்கிறதுக்கான தடங்கள் எதுவும் கிடைக்கலியே..?'

'அப்படியா... இங்க சென்னை கோவில்ல, அவரோட சமாதி எங்கே இருந்ததுன்னு சொன்னே..?' என்று ப்ரொஃபஸர் கேட்டார்.

'ம்ம்ம்... அந்த கோவில் கோபுரத்துல மேலே இருந்தது...'

'நீ கேணிவனக்கோவிலோட கோவில் கோபுரத்துக்கு மேல ஏறி பாத்தியா..?'

'மேலே ஏறிப் பாக்கலை...! ஆனா, உள்ளே கருவறையிலருந்து பாத்திருக்கேன். அது அவ்வளவு பெரிய கோபுரமில்ல, ரொம்ப சின்னதுதான். ஆனா, நான் முழுசா பாக்கலை, ரொம்பவும் இருட்டா இருந்ததால ஒரு குறிப்பிட்ட அளவுதான் பாக்க முடிஞ்சது'

'அப்போ, நீ முழுசா பாக்கலை..'

'இல்லை...'

'இங்கே சென்னை கோவில்ல, நூத்துக்கணக்கான வருஷமா இருந்த அவர் சமாதியை யாரும் பாக்கலை, யாரோ ஒரு திருடன் போய் ஒளியவேத்தான் சமாதியை கண்டிபிடிச்சிருக்காங்க... அப்படி இருக்கும்போது, நீ ஒரே ஒரு இராத்திரி, அந்த கேணிவனக் கோவில் கோபுரத்தை அறையிருட்டுல பாத்துட்டு, அங்கே சமாதி இருக்க வாய்ப்பில்லைன்னு சொல்றது எந்த வகையில நியாயம்னு சொல்லு..' என்று கேட்க, அவரது இந்த கேள்வி தாஸூக்கு சரியென்றே பட்டது. அவனுக்கு மட்டுமல்ல, சந்தோஷூக்கும் லிஷாவுக்கும் கூட சரியென்றே பட்டது.'

'அப்ப அங்கேதான் இருக்கும்னு சொல்றீங்களா..?'

'இருக்கலாம்னு சொல்றேன். போய் பாத்தா தெரியப்போகுது... ' என்று கூறிவிட்டு அவர், தாஸின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதை சந்தோஷ் கவனித்தான். பாவம் இந்த மனுசன், அந்த கேணிவனக்கோவிலை பார்த்துவிட ரொம்பத்தான் ஆவலாய் இருக்கிறார் என்று மனதில் நினைத்துக் கொண்டான். தனக்கும் உள்ளே ஆர்வம் இருக்கிறது... ஆனால, தனது பாஸ்-தான், இன்னும் கிளம்பவே மாட்டேன் என்கிறார் என்று வருந்தினான்.

தாஸ் கையில் அந்த வராக உருவம் பொறித்த கிரீடத்தின் ஃபோட்டோவை வைத்துக் கொண்டிருந்தான். அவனுக்குள் கேணிவனத்துக்கு கிளம்ப நேரம் வந்துவிட்டதோ என்று அசைபோட்டுக் கொண்டிருந்தான்.

அந்த காடு, அந்த மலை, அந்த பச்சை வாசனை, வண்டுகளின் ரீங்காரம், புலியின் உருமல் இதெல்லாம் அவனை மீண்டும் வா என்று அழைப்பது போல் இருந்தது. ஆபத்துகள் நிறைந்த இந்த பயணத்தை மீண்டும் தொடர்வது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும், ஒரு பக்கம் குதூகலமாகவும் இருந்தது. இந்த முறை பயணத்தில் தன்னுடன் ப்ரொஃபஸரும், சந்தோஷூம், லிஷாவும் வருவார்கள். இவர்களுடன் அந்த காட்டுக்குப் போவது என்பது, படைபலத்துடன் போர்களத்துக்குள் நுழைவது போன்றதுதான். என்று யோசித்துக் கொண்டிருக்க, இன்னொரு எண்ணமும் வந்தது... ஏற்கனவே அந்த காட்டிற்கு போயிருக்கும் குணா என்ன ஆனான் என்று தெரியவில்லை... என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவனது செல்ஃபோன் ஒலித்தது...

செல்ஃபோன் ரிங்கடோன்
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா- உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

இன்ஸ்பெக்டர் வாசு பேசினார்

'தாஸ், மிஸ்ட்ரி டிவியிலருந்து குணாவோட போன மூணு பேரை பத்தி விசாரிச்சேன்...' என்றார்... அவர் குரலில் இயல்பு மாறியிருந்தது...

'என்ன சார் தகவல்..?'

'டிவி ஆளுங்க யாரையும் தொடர்பு கொள்ளவே முடியலியாம்... கடைசியா நேத்து கடப்பாலருந்து ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்காங்க... அதுக்கப்புறம் தகவலே இல்ல... சேனல்லியே கொஞ்சம் பயந்து போயிருக்காங்க...' என்று கூற, தாஸ்-ம் பயந்து போனான்.

அது பயங்கர காடு... அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும்... நமக்கும் இந்த நிலை ஏற்படுமோ... மீண்டும் கேணிவனத்துக்கு போகத்தான் வேண்டுமா... என்று மனதிற்குள் குழம்பிக்கொண்டிருந்தான்.

'என்ன தாஸ்... எதுவும் பேச மாட்டேங்குறீங்க..?' என்று இன்ஸ்பெக்டர் அவன் கவனத்தை கலைத்தார்...

'இல்ல சார்... இப்பதான் அந்த கேணிவனத்துக்கு மறுபடியும் போலாமான்னு யோசிட்டிருந்தேன். ஆனா, நீங்க சொன்னதைக் கேட்டா, போகணுமான்னு தோணுது..'

'இல்ல தாஸ், நாம கேணிவனத்துக்கு போயே ஆகணும்...' என்றதும் தாஸ் திடுக்கிட்டான்

'என்ன சார்? நீங்களும் வர்றீங்களா..?' என்று கூற, இதை கேட்டுக் கொண்டிருந்த ப்ரொஃபஸரும் வியந்தார்.

'ஆமா தாஸ். குணாவுக்கும் உங்களுக்கும் மட்டும்தான் கேணிவனத்தைப் பத்தி தெரியும். அவன் தனியா போய் அங்கே மாட்டியிருந்தாலும் பரவாயில்ல, ஆனா மீடியா ஆட்களோட போயிருக்கான். நாம அவங்களை நல்லபடியா காப்பாத்தி கொண்டு வரலேன்னா, இந்த விஷயம் மீடியா மூலமா உலகத்துக்கே தெரிஞ்சிடும். நீங்கதானே இந்த விஷயத்தை இரகசியமா வச்சிக்க என்ன வேணும்னாலும் செய்யலாம்னு சொன்னீங்க... இப்ப முடியாதுன்னா எப்படி..?' என்று கூற... தாஸ் உள்ளுக்குள் கேணிவனத்துக்கு போயே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தான்.

'சரி சார்... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எனக்கு டைம் கொடுங்க... நாளைக்கே நாம கேணிவனத்துக்கு கிளம்புவோம்'

'ஏன் இன்னைக்கு நைட், மெயில் வண்டியில போகலாமே..?' என்று கேட்க

'இல்ல சார், வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு பயணத்துக்கு கிளம்ப போறோம். அதுக்கு தயார் படுத்திக்க நாம எல்லாருக்குமே இந்த ஒரு நாள் அவகாசம் தேவைன்னு நினைக்கிறேன்... நாளைக்கு தயாரா இருங்க...' என்று கூறி ஃபோனை கட் செய்து அங்கிருக்கும் அனைவரையும் பார்த்தான். அனைவரும் தாஸையே உற்று நோக்கியபடி, அவன் கண்களில் ஏற்கனவே அவன் பார்த்துவந்த கேணிவனத்தை தேடிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

இந்த பயணம் அவ்வளவு பயங்கரமானதா..? அப்படி என்ன நடக்கப்போகிறது...? சரி... பார்க்கத்தானே போகிறோம்..! என்று அங்கு நின்றிருந்த அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது...

(தொடரும்...)



Signature

Tuesday, October 12, 2010

"கேணிவனம்" - பாகம் 20 - [தொடர்கதை]



பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------

பாகம் - 20

காலை 10.30 மணி...

ரெட்ஹில்ஸலிருந்து பூதூர் செல்லும் ரோட்டில், ரெண்டு பக்கமும் வயல்களும் பனைமரங்களும் சூழ்ந்திருக்கும் வளைவான பாதைகளில், இன்ஸ்பெக்டர் வாசுதேவனின் ஜீப் சீறிக்கொண்டிருந்தது...

சென்னை மாநகரத்தின் மிகச்சொற்ப தூரத்தில் இப்படி வயல்படர்ந்த கிராமம் இருப்பது சில சமயம் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது என்று மனதளவில் வாசுதேவன் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்.

லிஷா சந்தோஷூக்கு கடைசியாக செய்த ஃபோன்கால்-ஐ ட்ரேஸ் செய்ததில், அது இந்த பூதூர் கிராமத்தின் செல்ஃபோன டவரிலிருந்துதான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று இன்று காலை அவருக்கு தகவல் வந்திருந்தது... அது சரியான தகவலாக இருக்கும்பட்சத்தில் லிஷாவை எப்படியும் காப்பாற்றிவிடலாம்... என்ற நம்பிக்கை அவரிடமிருந்தது...

அவர் தனக்கு பின்புறம் அமர்ந்திருக்கும் கான்ஸ்டபிளிடம்...

'தாஸ்க்கும் சந்தோஷூக்கும் தகவல் சொல்லிட்டீங்களா..?' என்று கேட்க

காலையில் அதிகமாக சாப்பிட்ட டிஃபனின் தாக்குதலாலும், வேகமாக போய்க்கொண்டிருக்கும் ஜீப்பின் காற்றினாலும், எந்நேரமும் தூங்கிவிடக்கூடிய அபாயக்கட்டத்திருந்த கான்ஸ்டபிள்... இன்ஸ்பெக்டரின் குரல்கேட்டதும், சட்டென்று சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

'சார், சொல்லிட்டேன் சார், அவங்களும் இந்நேரம் இங்கதான் வந்துக்கிட்டிருப்பாங்க..' என்று கூறினார்...

வெளியே 'பூதூர்' என்ற ஒரு பெயர்ப்பலகை... தன்னை கடந்து செல்லும் போலீஸ் ஜீப்பிற்கு முகம் திருப்பாமல் ரோட்டை வெறித்தபடி நின்றிருந்தது...

------------------------------

அதே சாலையில் 4 கி.மீ.க்கு முன், இன்னோவா வண்டி வேகமாக விரைந்துக் கொண்டிருந்தது...

'இப்படி அதிரடியா போய் லிஷாவை காப்பாத்துறது நடக்குற காரியமா பாஸ்..? போலீஸ் வர்றது தெரிஞ்சி அந்த கடத்தல்காரங்க அவளை ஏதாவது பண்ணிட்டா..?' என்று சந்தோஷ் பயந்தபடி கேட்க

'சந்தோஷ்..!?! முதல்ல இந்த மாதிரி நெகடிவ்-ஆ திங்க் பண்றதை நிறுத்து...! இன்னிக்கி லிஷாவை எப்படியும் காப்பாத்திடலாம். அதை மட்டும் நம்பு... மத்ததெல்லாம் தானா நடக்கும்... டோண்ட் வர்ரி...' என்று அவனுக்கு ஆறுதல் கொடுத்தபடி தாஸ் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்.

அவர்கள் பூதூர் கிராமத்திற்குள் நுழைந்தபோது... இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தனது ஜீப்பிற்கு முன்னால் நின்றபடியிருக்க... அவர்கள் வண்டி நெருங்கி வருவதை பார்த்துக் கொண்டிருந்தார்.

இருவரும் இறங்கி அவரை சமீபித்தனர்...

'சார், ஏதாச்சும் தகவல் தெரிஞ்சுதா..?' என்று சந்தோஷ் அவரை நெருங்கியபடி கேட்க...

'விசாரிக்க சொல்லியிருக்கேன்! இங்க இருக்கிற பழைய பாழடைஞ்ச வீடு, குடோன், உபயோகிக்கப்படாத கல்யாண மண்டபம், இப்படி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிங்களா பாத்து தேட சொல்லியிருக்கேன். கான்ஸடபிள்ஸ் தேடிக்கிட்டிருக்காங்க...'

'வேற ஏதாச்சும் புது ஆளுங்க ஊருக்குள்ள வந்து போனதை விசாரிச்சீங்களா?' என்று தாஸ் கேட்க

'விசாரிச்சுட்டேன் தாஸ், அப்படி எதுவும் பாக்கலையாம். ஒருவேளை கடத்தல்காரங்க அதிகாலையில இங்க வந்திருக்கலாம். ஏன்னா, 5 மணிக்குதானே லிஷா சந்தோஷூக்கு ஃபோன்கால் பேசியிருக்கா..! அதனால, அவங்க இருட்டின நேரத்துல மட்டும்தான் வந்து போயிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.'

'ஒரு வேளை அவங்க இந்த ஊரை தாண்டி போய் வேற எங்கேயாவது லிஷாவை வச்சிருந்தா..?' என்று சந்தோஷூம் சந்தேகத்துடன் கேட்க..

'இருக்கலாம். முதல்ல இங்க தர்ரோவா செக் பண்ணிட்டு இதுக்கடுத்து பக்கத்துல இருக்கிற ஊருக்கு போவோம்..' என்று இன்ஸ்பெக்டர் கூறியபடி, அங்கிருந்த தெருவை நோட்டம் விடுகிறார், அந்த ஊரில் சகஜ நிலையில் இருந்த மக்கள் போலீஸ் நுழைந்திருப்பதை வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் பார்த்துக்கொண்டிருந்தனர்...

தாஸ், அந்த மக்களில் யாராவது தனக்கு வித்தியாசமாக தெரிகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு தாத்தா, தன் கையில் குடையை பிடித்தபடி தாஸை முறைத்துக் கொண்டே கடந்து சென்றார். சிறுவர்கள் சிலர் கையில் கிரிக்கெட் பேட் மற்றும் பால்-ஐ கையில் வைத்து கொண்டு போலீஸையே உற்று நோக்கியபடி கடந்துக்கொண்டிருந்தனர்... பெண்கள் சிலர் இடுப்பில் ப்ளாஸ்டிக் குடங்களை சுமந்தபடி இவர்களை பார்த்தபடி கடந்தனர். ஒரு காய்கறி வண்டிக்காரன், போலீஸ் ஜீப்பிலிருந்து மிகவும் ஒதுங்கியபடி தனது வண்டியை தள்ளிக்கொண்டு சென்றான்.

இப்படி அந்த ஊர்காரர்கள் அனைவரும் சகஜமாகவே தெரியவே தாஸ் குழம்பிக்கொண்டிருந்தான்.

ஒருவேளை நாம் தப்பான இடத்தில் வந்து தேடிக்கொண்டிருக்கிறோமோ? என்று அவன் மனதில் நினைத்திருந்த வேளை, சற்று தொலைவிலிருந்த ஒரு டிஃபன் கடையில், ஒரு ஜோடி கண்கள்... இன்ஸ்பெக்டரும், தாஸூம், சந்தோஷூம் நடுவீதியில் நின்று கிராமத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதை, நிழலுருவாய் மறைவாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தது...

------------------------------

'சார், நீங்க சொன்ன மாதிரி, இங்கே இருக்கிற பழைய பில்டிங், குடோன் இப்படி எல்லா இடத்துலயும் தேடிப்பார்த்துட்டோம்... எதுவும் க்ளூ இல்ல சார்..' என்று சளைப்பாக கூற...

சந்தோஷூக்கு ஒரு யோசனை வந்தது... 'சார், ஒண்ணு பண்ணலாமா, லிஷாவோட நம்பருக்கு டயல் பண்ணி பாத்தா, ஒருவேளை ஃபோன் ரிங் ஆகுற சவுண்டு ஏதாவது சுட்டுவட்டாரத்துல கேக்குதான்னு பாப்போமா..?' என்று கூற

'இல்ல சந்தோஷ், நாமளே, அந்த கடத்தல்காரனுக்கு சிக்னல் கொடுக்கிற மாதிரியாயிடும், தவிர, எங்கேன்னு போய் கேப்பீங்க... நீங்க பதற்றத்துல இருக்கிறதால இப்படியெல்லாம் பேசத் தோணுது. கொஞ்சம் அமைதியாயிருங்க... ஒரு தகவலும் இல்லாம இருந்தோம், இப்போ நிறைய தகவல் கிடைச்சிருக்கு... எப்படியும் புடிச்சிடலாம்..' என்று கூற...

'உயிரோட பிடிக்கணும் சார்... அதுதான் ரொம்ப முக்கியம்' என்று சந்தோஷ் சற்றே கோவப்பட்டான்.

'ஹே சந்தோஷ், அமைதியாயிரு..' என்று தாஸ் அவனுக்கு சமாதானம் கூறிவிட்டு, இன்ஸ்பெக்டரை நெருங்கினான்.

'சார், இன்னும் கொஞ்சம் போலீஸ் ஃபோர்ஸ்-ஐ கூட்டிக்கிட்டு, அதிரடியா எல்லா வீட்டுக்குள்ளயும் போய் சர்ச் பண்ண முடியுமா..?'

'என்ன தாஸ் நீங்களும்..! ப்ராப்பரான டீடெய்ல்ஸ் இல்லாம அப்படி பண்ணா, பப்ளிக்-கு பயங்கர தொல்லையாயிடும்...' என்று கூறிய இன்ஸ்பெக்டர் உள்ளுக்குள், தாஸும் பதற்றமாய் இருப்பதை உணர்ந்தார்.

'சொல்றதெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டிருக்கீங்க... வேற என்னதான் சார் செய்யலாம்..' என்று சந்தோஷ் மீண்டும் கேட்க... இன்ஸ்பெக்டர் சற்று கோபமாகவே அவனை முறைத்தார்...

அவர் முறைப்புக்கு சந்தோஷ் அடங்கினான்.

ஆனால், உண்மையில் வேறு என்ன செய்வது என்று இன்ஸ்பெக்டரும் திணறிக்கொண்டிருந்ததை அவர் முகம் காட்டிக்கொடுத்தது.

------------------------------

சிறுவர்கள் சிலர், அந்த பூதூர் கிராமத்துக்கு சற்று தொலைவிலிருந்த ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் க்ரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அதில் ஜெய் என்ற சிறுவன் பவுண்டரி எல்லையில் நின்றிருந்தான்.

அவன் முகத்தில், போன முறை மேட்சில் தோற்ற அவமான ரேகை இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது... அதற்கு காரணம், இப்போது அங்கே பேட்டிங் செய்துக் கொண்டிருந்த ரவி என்றவன்தான்.

ரவி பேட்டிங்-இல் எமகாதகன்... அவன் மட்டும் எந்த டீமில் ஆடினாலும், அந்த டீம் ஜெயித்துவிடுகிறது. இந்த முறை விடக்கூடாது. எப்படியும் அவனை தோற்கடிக்க வேண்டும், 4 அல்லது சிக்ஸர் ஒன்று கூட போக விடக்கூடாது. கேட்ச் வந்தால், தவறாமல் பிடித்து அவனை திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜெய்-யின் ஒட்டுமொத்த கவனமும் அந்த ரவியின் மீதுதான் இருந்தது. எப்படியாவது அவனது ரன் ரேட்டை குறைத்து, அவனை அவமானப்படுத்த வேண்டும் என்று உள்ளுக்குள் என்னென்னமோ திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்த்ததுபோல், ரவி தன்னிடம் வந்த பந்தை, ஓங்கி அடிக்க, அது உயரே பறந்து சரியாக கீழே நின்றிருந்த ஜெய்யின் கண்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.

இது சுலபமான கேட்ச்... இதை பிடித்துவிட்டால், ரவி அவுட்... பிடி... பிடி... பிடித்துவிடு என்று அவன் முணுமுணுத்துக் கொண்டிருக்க, அவன் கண்களில் ஏதோ ஒரு சிகப்பு திரவம் விழுந்தது... கண்கள் கூசியது... அவன் கண்களை கசக்கிக் கொண்டிருந்த சமயம், பந்து கீழேவிழுந்து... அவனைத் தாண்டி பின்புறம் சென்று அங்கிருந்த பழைய வாட்டர் டேங்க்-ஐ தொட்டது...

'ஃபோஓஓஓஓர்ர்ர்...' என்று சற்று தொலைவில் அமர்ந்திருந்த சிறுவர்கள் அனைவரும் ஆரவாரக்கூச்சலிட்டனர்...

ஆனால், பௌலிங் டீமின் சிறுவர்கள் பயங்கர கோபத்துடன் ஜெய்-ஐ நோக்கி ஓடி வந்தனர்...

'டேய், சப்ப-கேட்ச்-டா, இதைப் போய் மிஸ் பண்ணிட்டியே... பவுண்ட்ரியில நின்னுக்கிட்டு தூங்கிட்டிருந்தியா..?' என்று ஒருவன் அவனை திட்டியபடி நெருங்கிவந்தவன், ஜெய் கண்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்து, நின்றான்.

'என்னடா... உன் கண்ணுல ரத்தம் வருது..?' என்று சொல்ல, ஜெய் கண்களை கசக்கிய தனது கைகளை பார்த்தான். அதிலும் ஏதோ சிகப்பு கலரில் தண்ணியாய் இருந்தது...

அவன் கலவரத்துடன் தன்னை நெருங்கி வந்த சிறுவனை பார்த்துக் கொண்டிருக்க, இப்போது மீண்டும் அவன் தலையில் சிகப்பு திரவம் அதிகமாக விழுந்து அவன் முகமெங்கும் வழிந்து ஓடியது...

'அய்யோ, ரத்தம், ரத்தம்...' என்று ஜெய் அங்கிருந்து நகர்ந்துவிட, அந்த ரத்தம், இப்போது அவன் நின்றிருந்த இடத்தில் தரையில் விழுந்து... அங்கிருந்த மணல் சிகப்பு கலரில் மாற்றிக்கொண்டிருந்தது...

அந்த ரத்தம் மேலிருந்து விழுந்து கொண்டிருப்பதை உணர்ந்த ஒரு சிறுவன் மேலே பார்க்க, அவனை தொடர்ந்து அனைவரும் மேலே பார்க்க... அங்கே அவர்கள் பார்வையில், அந்த பழைய வாட்டர் டேங்க் பிரம்மாண்டமாக தெரிந்தது.
------------------------------

2 மணி நேர தீவிர தேடல்களுக்கு பிறகும் எதுவும் கிடைக்காததால் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தனது ஜீப்பிலும், தாஸ் மற்றும் சந்தோஷ் தனது இன்னோவாவிலும் அந்த பூதூரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

இந்த இடத்திலிருந்துதான் டவர் கிடைத்திருக்கிறது ஆனால், லிஷா அங்கு இல்லை எனபதால், இந்த வழியாக கடத்தல்காரர்கள் அவளை வேறு ஏதோ ஒரு இடத்திற்கு அழைத்து போயிருக்கக்கூடும் என்று எண்ணியபடி போய்க்கொண்டிருக்கும்போது...

'பூதூர்'-ன் எல்லை முடிவு பலகையின் அருகில், ரோட்டோரமாக சிறுவர்கள் சிலர் கும்பலாக நின்றிருப்பதை இன்ஸ்பெக்டர் ஜீப்பிலிருந்தபடி பார்த்துக்கொண்டிருக்க... ஜீப் அந்த சிறுவர்களை கடந்து சென்றது...

ஜீப்பின் சைடு மிரர்-ல் இன்ஸ்பெக்டர் எதேச்சையாக பார்க்க, அதில், ஒரு சிறுவன் போலீஸை அழைக்க முயலும்போது, இன்னொரு சிறுவன் அவன் வாயை பொத்தி அவனை தடுப்பதை கண்டார், அழைக்க முயன்ற சிறுவனின் சட்டையில் சிகப்பாய் ஏதோ பரவியிருந்தது... இன்ஸ்பெக்டர் குழப்பத்துடன் வண்டியை நிறுத்தச் சொன்னார்...

'வெயிட் வெயிட்... வண்டியை நிறுத்துங்க..! ரிவர்ஸ் எடுங்க..!' என்று கூற, டிரைவர் ரிவர்ஸ் எடுத்தார்...

அந்த சிறுவர்கள் போலீஸ் வண்டி திரும்பி வருவதை கண்டதும், அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். ஆனால், ஒரு சிறுவன் மட்டும் அப்படியே நின்றிருந்தான்.

வண்டி முழுவதுமாக அவர்கள் பக்கம் வந்து நின்றது...

இன்ஸ்பெக்டர் இறங்கியபடி... 'உன் பேரு என்னப்பா..?'

'ஜெய் சார்..' என்று அவன் சொல்லும்போது, அவன் முகத்திலும் லேசாக சிகப்புச்சாயம் இருப்பதை காண முடிந்தது...

இதற்குள் இன்னோவாவும் அங்கு வந்து நின்றது...  உள்ளிருந்து தாஸூம் சந்தோஷூம் அவரை நெருங்கி வந்தனர்...

'என்ன உன் சட்டையெல்லாம் சிகப்பா இருக்கு..?' என்று இன்ஸ்பெக்டர் அவனை மிரட்டாமல் கேட்க...

'சார், அதுக்காகத்தான் உங்களை கூப்பிடலாம்னு பாத்தேன் சார்... இந்த ரவிப்பய வாயை பொத்திட்டான்...' என்றவன் கூறும்போது, இன்ஸ்பெக்டர் அந்த இடத்தை நோட்டம் விட்டார்.

அது ஒரு பழைய பூங்கா... அந்த பூங்காவுக்கு நடுவே, நீண்ட நாட்களாக உபயோகிக்கப்படாத ஒரு பெரிய சைஸ் வாட்டர் டேங்க் மிகவும் பழையதாக இருந்தது..

'என்னாச்சு, க்ரிக்கெட் மேச்சுல ஏதாச்சும் தகராறா..? ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிட்டீங்களா..?'

'இல்ல சார்... அந்த வாட்டர் டேங்க்-லருந்து என் மேல ரத்தம் ஒழுகிச்சு சார்..' என்று கூற, இன்ஸ்பெக்டர் வாசுதேவன் நிமிர்ந்தார்... தாஸூம் சந்தோஷூம் கூட அவரை உற்று நோக்கினர்... உடனே இன்ஸ்பெக்டர் தனது கான்ஸ்டபிள்களை அழைத்துக் கொண்டு அந்த வாட்டர் டேங்கின் மீது, துப்பாக்கியை தயாராக கையில் வைத்துக் கொண்டு ஏற ஆரம்பித்தனர்...

சந்தோஷ் பயந்தான். உள்ளுக்குள் ஏதோ ஒரு அசௌகரிய பாரம் அவனை அழுத்தியது. இது டேங்க்-ன் மீது இருந்து ஒழுகிய ரத்தமென்றால், லிஷா-வை இங்குதான் கடத்தி வைத்திருக்கிறார்களா! ஆனால்... ரத்தம்..? ஒரு வேளை போலீஸ் இங்கு நுழைந்ததை பார்த்ததும் அவளை கொன்று போட்டுவிட்டு ஓடிவிட்டார்களா..? ஹய்யோ..!

டேங்கின் மீது துருப்பிடித்த இரும்பு கதவு ஒன்று மூடப்பட்டு, வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது... அதைத் திறந்து கொண்டு போலீஸ் உள்ளே எட்டிப் பார்க்க...

இருட்டான பெரிய டேங்க... திறந்த கதிவு துவாரத்தின் வழியே வெளிச்சம் உள்ளே பாய, அதில் ஒரு இரும்பு ஏணி இருப்பது தெரிந்தது... உள்ளே இறங்கினார்...

தன்னிடமிருந்த சிகரெட் லைட்டரை எடுத்து பற்ற வைத்தார்... உள்ளே ஓரளவுக்கு வெளிச்சம் தெரிந்தது...

'லிஷாஆஆஆ..?' கத்தினார்...

'லிஷாஆஆஆ..? ஆர் யூ தேர்..?' மீண்டும் கத்தினார்

சந்தோஷ் அந்த துவாரத்தின் வழியாக மேலிருந்தபடியே கத்தினான்...

'லிஷா..ஆ..!'

அவன் குரலுக்கு மிகவும் களைப்பாக ஒரு எதிர்குரல் கேட்டது...

'சேண்ண்ண்டிஈஈஈஈ...!'

------------------------------

ரெட் ஹில்ஸ்-லிருந்து சென்னைக்கு செல்லும் சாலையில் இன்னோவா கார் சந்தோஷமாக சீறிக்கொண்டிருந்தது...

உள்ளே லிஷாவும் சந்தோஷூம் பின்புறம் அமர்ந்திருக்க... தாஸ் மிகவும் உற்சாகமாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்.

ரியர் வியூ கண்ணாடியில் பார்க்க, லிஷா சந்தோஷின் தோளில் சாய்ந்திருந்தாள்.

'என்ன லிஷா எங்க எல்லாரையும் இப்படி பதற வச்சிட்டியே..! நீ திரும்பி வருவியோ இல்லையோன்னு ஆயிடுச்சு..' என்று தாஸ் கூற, லிஷா கண்களை மூடியபடியே மெலிதாக சிரித்தாள்.

'என்னை விட்டுட்டு கேணிவனம் போயிடலாம்னு பாத்தீங்களா..?!' என்று மெல்லிய குரலில் கூறினாள்.

'உனக்கு ஏதாச்சும் ஆயிருந்தா பாவம் இந்த சந்தோஷ் அழுதே செத்திருப்பான்..'

'இவனா..?! நீங்க வேற, என்னை விட இன்னொரு சூப்பர் பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியிருந்திருப்பான்..' என்று கலாய்த்தாள்

'ஹே லிஷா... என்னைப் பத்தி அவ்வளவுதான் புரிஞ்சி வச்சிருக்கே..! நீ மட்டும் மேல உயிரோட இல்லாம இருந்திருந்தா... அதே வாட்டர் டேங்க்லருந்து நான் குதிச்சி செத்திருப்பேன்...'

'லிஷா? உனக்கு நீ இருந்த இடம் வாட்டர் டேங்க்-தான்னு தெரியுமா.?'

'முதல்ல தெரியாது... ஆனா, அந்த இடத்துல நடந்து பாத்தப்போ, நிறைய பைப் இருந்தது தெரிஞ்சுது... அதுல ஒரு பைப் தரையோட தரையாவும் இன்னொரு பைப் கொஞ்சமா மேல எம்பின மாதிரியும் இருந்தது... ஒரு பைப் சப்ளை பைப்-னும் இன்னொரு பைப் ஸ்லட்ஜ் பைப்-ஆ இருக்கும்னும் ஜட்ஜ் பண்ணேன். வாட்டர் டேங்க்-லதான் அந்த அமைப்பு இருக்கும்...'

'அதுக்கு முன்னாடி அது என்ன இடம்னு நினைச்சே..?'

'ஏதோ ஒரு பாதாள அறைன்னு நினைச்சேன். ஆனா, உள்ளே ஒரு எலி கூட இல்ல... பாதாள அறைன்னா, எப்படியாவது எலியோட ஆதிக்கமிருக்கும்... ஸோ கூட்டி கழிச்சி பாக்கும்போது, உண்மை தெரிஞ்சது..'

'அப்புறம் எப்படி ரத்தம் மூலமா கீழ சிக்னல் கொடுத்தே..?' என்று சந்தோஷ் கேட்க

'அது ரத்தமேயில்ல... நேத்து நைட் தயிர்சாதத்துக்கு சைட்-டிஷ்ஷா வந்த பீட்ரூட் பொறியல்... எனக்குத்தான் பீட்ரூட் பிடிக்காதே அதனால சாப்பிடாம ஒதுக்கி வச்சிருந்தேன். முக்கா பாட்டில் தண்ணியிருந்துச்சு... ஸோ, அந்த பீட்ரூட்டை நல்லா மென்னு தண்ணிபாட்டில துப்பினதும், தண்ணி நல்ல கலர் பிடிச்சது... அதை கொண்டு போய் ஸ்லட்ஜ் பைப்ல தலைகீழ தூக்கி போட்டேன். ஆனா, டேங்க் கீழ யாருமே வந்தில்லன்னா தெரிஞ்சிருக்காது. அங்கேதான் கொஞ்சம் லக் கை கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்..' என்று ஒரு வழியாக நடந்த விஷயத்தை நிதானமாக கூறி முடிக்க...

சந்தோஷ் அவளை கட்டிக்கொண்டான். 'உன் இடத்துல நான் இருந்திருந்தா உன்னை நினைச்சிக்கிட்டே செத்திருப்பேன்..' என்றான்...

'நீ இப்படி ஏதாவது லூசுத்தனமாதான் செய்வேன்னு எனக்கு தெரியும்..' என்று நக்கலாக அவள் சொல்ல, அவளை தலையில் கொட்டினான்...

'ஹே... வலிக்குதுடா..' என்றவள் கொஞ்ச... தாஸ் சிரித்துக் கொண்டான்.

சந்தோஷ் திடீரென்று பொறுப்பு வந்தவனாய், 'பாஸ், அந்த ப்ரொஃபஸருக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுங்க... அவர் பாட்டுக்கு சித்தர் சமாதியை கண்டுபிடிக்கமண்டைய பிச்சிக்கிட்டிருக்கப் போறாரு..?'

'இல்ல சந்தோஷ், அவர் கண்டுபிடிக்கட்டும்... லிஷா திரும்பி வந்தது அவர் தெரிஞ்சிக்க வேண்டாம்... அந்த சித்தர் சமாதி லிஷாவை காப்பாத்த மட்டும் கண்டுபிடிக்க சொல்லலை... அந்த கேணிவனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க உதவியா இருக்கும்னுதான் கண்டுபிடிக்க சொன்னேன்.'

'தாஸ், அந்த கேணிவனம் பத்தி வேற ஏதாவது தெரிய வந்ததுதா..?' என்று லிஷா ஆர்வமாய் கேட்க...

'எங்கே லிஷா..? நீ இல்லாம சந்தோஷூம் ஆஃப் ஆயிருந்தான்... நீ திரும்பி வந்ததுக்கப்புறம்தான்.. எனக்கு என் ரெண்டு கையும் கிடைச்ச மாதிரியிருக்கு... இனிமே என் கவனம் முழுதும் கேணிவனம் பத்தின ரகசியத்தை கண்டுபிடிக்கிறதுதான்...'

அதே நேரம், ப்ரொஃபஸர் கணேஷ்ராம், பழைய ஓவியத்தில் ஒரு மிகப்பெரிய விஷயம் கண்டுபிடித்தவராக ஓவியத்தின் மீது பிடித்திருந்த பூதக்கணாடியிலிருந்து கண்கள் விலக்கியவாறு... ஆர்வத்துடன் தாஸுக்கு ஃபோன் செய்தார்...

வண்டியில் தாஸ்-ன் மொபைல் ஒலித்தது...

தாஸின் ரிங்டோன்
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...

(தொடரும்...)


Signature

Popular Posts