Wednesday, September 22, 2010

"கேணிவனம்" - பாகம் 15 - [தொடர்கதை]இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------

பாகம் - 15

அந்த மதிய வேளையில் போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் அமைதியாகவே இருந்ததால்... லிஷா போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அனைவரது கவனமும் அவள்மேல் திரும்பியது. உள்ளே உணவருந்திமுடித்து தினசரியை புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர்  'வாசு'வுக்குஅருகில் சென்று நின்றாள்...

'சார் வணக்கம் என் பேரு லிஷா...'

லிஷாவின் வணக்கத்தால் பேப்பரிலிருந்து கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் வாசு, அவளை ஏறிட்டு பார்த்தார்...

'என்னம்மா விஷயம்..?'

'சார், என் வருங்கால ஹஸ்பெண்ட்-ஐ இங்க அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க..? அதான் உங்ககிட்ட நடந்த உண்மையை சொல்லலாம்னு வந்திருக்கேன்...' என்று மிகவும் திட்டவட்டமாக கூறினாள்.

வாசு அவளை சிறிது நேரம் உற்று நோக்கியபடி, 'யாரும்மா உன் வருங்கால புருஷன்..?' என்று கேட்டார்.

'சந்தோஷ்..!' என்று கூற, இன்ஸ்பெக்டர் அருகிலிருக்கு கான்ஸடபிளிடம், சந்தோஷை அழைத்து வர சைகை செய்தார்... சந்தோஷ் பக்கத்து அறையிலிருந்து அழைத்து வரப்பட்டான். ஒரு இரவு முழுவதும், போலீஸ் ஸ்டேஷனில் கழித்திருந்ததால், சந்தோஷின் முகத்தில் லேசாக ஒரு க்ரிமினல் களை தெரிந்தது கண்டு லிஷா வருத்தமடைந்தாள்.

'இவன்தானே..?' என்று வாசு கேட்டார்...

'ஆமா சார்..'

'சரி, உக்காரு... என்ன சொல்லனுமோ சொல்லு..' என்று இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு கேட்க... லிஷா, சந்தோஷை திரும்பி பரிதாபமாக பார்த்தாள். அவனும் இவளை அவமானத்துடன் பார்த்தான். உடனே லிஷா அவனிடம்...

'நான் அப்பவே போலீஸ்கிட்ட போலாம் எல்லாம் அவங்க பாத்துப்பாங்கன்னு சொன்னேனே... கேட்டியா...? இப்ப பாரு... அவன் முந்திக்கிட்டு ஏதேதோ கதை கட்டி அசிங்கப்படுத்தியிருக்கான்... இதெல்லாம் தேவையா... இனியாவது நடந்ததை சொன்னியா இல்லியா..?' என்று சந்தோஷைப் பார்த்து கேட்க, அவன் குழப்பத்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவள், கேணிவனத்தை பற்றி போலீஸிடம் சொல்லப் போகிறாளோ என்று பயந்தான்.

'ஏம்மா... என்ன நடந்தது..? முதல்ல அதச்சொல்லு... நீ பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு போறே..?' என்று இன்ஸ்பெக்டர் வாசு, அவளை மிரட்ட... லிஷா ஒரு சின்ன மௌனத்திற்கு பிறகு தொடர்ந்தாள்...

'அந்த குணா, எங்களை வேணுமின்னே பழிவாங்குறான் சார்...' என்று பேச ஆம்பித்தாள்...

'அவன் பழிவாங்குறானா..? என்கிட்ட அவன் வேறமாதிரி கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்திருக்கானேம்மா..?'

'அவன் உங்ககிட்ட என்ன சொன்னானோ எனக்கு தெரியாது சார்... ஆனா, என்னை லவ் பண்றேன்னு கிட்டத்தட்ட 6 மாசமா என் பின்னாடி சுத்திட்டிருந்தான். ஆனா, நான் ஏற்கனவே சந்தோஷை லவ் பண்றேன்னு பல தடவை அவன்கிட்ட சொல்லிட்டேன். இருந்தாலும் பரவாயில்லை, என்னையும் லவ் பண்ணுன்னு பயங்கர டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சான். நான் ஏற்கனவே இந்த விஷயத்தை பத்தி போலீஸ்ல சொல்லலாம்னு சொன்னா, சந்தோஷ்தான் வேண்டாம்-னுட்டார்...  இவருக்கு போலீஸ்னாவே ரொம்ப பயம், அதுவும் சினிமால காட்டற போலீஸ்களையெல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டு, விஷயத்தை நாமளே ஹேண்டில் பண்ணிக்கலாம்-னு சொல்லிட்டார்.... உங்ககிட்ட சொல்லியிருந்தா, இந்த பிரச்சனை எப்பவோ முடிஞ்சிருக்கும்...' என்று தலைகுனிந்து மெதுவாக அழ ஆரம்பித்தாள்.

அவள் அழுவதை பார்த்த இன்ஸ்பெக்டர் அவளுக்குஆறுதல் கூறினார்... 'காம் டவுன் மிஸ்.லிஷா. ஏன் இப்ப அழறீங்க... அழாம... என்ன பிரச்சினைன்னு சொல்லுங்க..?'

'இல்ல சார், அந்த குணா, ரொம்ப ச்சீப்பா பிஹேவ் பண்ணிட்டான்..' என்று அழுகையை தொடர...

'என்னம்மா பண்ணான்..?'

'நானும் சந்தோஷும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப்போறோங்கிறதால.. அப்பப்போ நெருக்கமா இருக்கிற மாதிரி என் மொபைல்ல ஃபோட்டோஸ்லாம் எடுத்துப்போம்... அந்த குணா ராஸ்கல், இதை தெரிஞ்சிக்கிட்டு, என் மொபைலை திருடிக்கிட்டு போயிட்டான். அதுல இருக்கிற ஃபோட்டோஸை இண்டர்நெட்ல ஏத்திடுவேன்னு சொல்லி அடிக்கடி என்னை மிரட்ட ஆரம்பிச்சான். அவன் சொல்ற மாதிரி நான் அவனுக்கு உடன்படனும்னு ப்ளாக் மெயில் பண்ண ஆரம்பிச்சான்...'

'இஸ் இட்..?' என்று இன்ஸ்பெக்டர் சந்தேகமாய் கேட்க... சந்தோஷூக்கு லிஷா அரங்கேற்றும் நாடகத்தை போலீஸார்கள் நம்புவார்களோ நம்பமாட்டார்களோ என்று ஐயம் ஏற்பட்டு பயந்துக்கொண்டிருந்தான்.

'ஆமா சார்... என் மொபைலைத் தேடித்தான் சந்தோஷ் அவன் வீட்டுக்கு போயிருந்தார்...' என்று கூறிமுடிக்க... ஒருவழியாக அவள் அரங்கேற்றும் நாடகத்தை புரிந்து கொண்ட சந்தோஷ் தைரியம் வந்தவனாக, தன் பங்குக்கு அவனும் தொடர்ந்தான்....

'அவன் தண்ணியடிச்சியிருந்ததால ஓங்கி அரைஞ்சேன் சார்... ஆனா, அவன் என்னை தள்ளிவிட்டுட்டு ஸ்விட்சை ஆஃப் பண்ணிட்டு ஓடிட்டான். அவன் வரதுக்குள்ள, லிஷாவோட மொபைலை தேடி எடுத்துடலாம்னு பாத்தா, அதுக்குள்ள அவன் உங்களை கூட்டிட்டு வந்துட்டான்...' என்று தெளிவாக கூற... இன்ஸ்பெக்டர் சந்தோஷை சந்தேகத்துடன் பார்த்தார்...

'நீ... ஏன்யா இதை நேத்து நைட் சொல்லலை..?'

'இல்ல சார், உங்களை பாத்தாவே பயமாயிருந்தது... அதான் சொல்லலை... என்னை மன்னிச்சிடுங்க சார்...'

'இப்ப காதலி வந்ததும் தைரியம் வந்துடுச்சா...' என்று கூறி லிஷாவை திரும்பி பார்த்தார்... லிஷா இன்னமும், தலையை குனிந்தபடி விசும்பி கொண்டிருந்தாள்.

'சரி விடும்மா... அழாதே... அந்தப்பய, இந்த சந்தோஷ்தான் உன்னை சந்தேகப்படறதா சொன்னானே...?' என்று கூறியதும், லிஷா குழப்பமாக முகத்தை வைத்துக் கொண்டு...

'சந்தோஷ் ஏன் சார் என்னை சந்தேகப்படணும், அவர் சந்தேகப்பட்டிருந்தா, அவர் குணா வீட்டுக்கு போகப் போறது எனக்கெப்படி தெரியும்..?'

'அப்போ இவன் குணா வீட்டுக்கு போகப்போறான்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?'

'தெரியும் சார், நான்தான், குணாவோட ஆஃபீஸ்ல போய் அவன் அட்ரஸை விசாரிக்க சொல்லி அனுப்பினேன்...'

'அப்படியா..? இவன் குணா ஆஃபீஸ்ல அட்ரஸ் கேட்டுட்டு போனானா..?' என்று இன்ஸ்பெக்டர் சந்தேகத்துடன் கேட்க...

உடனே சந்தோஷ், 'ஆமா சார், நீங்க வேணும்னா, கே.ஸி.ஆர். இன்ஃபோடெக் ஹெச் ஆர், மிஸ். சாந்தினி-ன்னு ஒரு பொண்ணுகிட்ட கேட்டுப்பாருங்க... அந்த ஆஃபீஸோட ஃபோன் நம்பர் என் மொபைல்ல இருக்கு' என்று சந்தோஷ் கூற, இன்ஸ்பெக்டர் அந்த கம்பெனிக்கு ஃபோன் செய்தார்...

'ஹலோ மிஸ் சாந்தினி..?'

'யெஸ்... ஹூ இஸ் திஸ்..?'

'நான் தி-நகர் போலீஸ் ஸ்டேஷன்லருந்து இன்ஸ்பெக்டர் வாசு பேசறேன்...'

'இன்ஸ்பெக்டரா..? என்ன சார் விஷயம்..?'

'உங்க ஆஃபீசுக்கு நேத்து யாராவது குணா-ங்கிறவரோட அட்ரஸை கேட்டு வந்தாங்களா..?' என்றதும், ஒரு சின்ன இடைவெளிக்குப்பின் பதில் வந்தது...

'ஆமா சார், சந்தோஷ்-னு ஒருத்தர் வந்திருந்தாரு..'

'ஓ.. ஓகே... ஜஸ்ட் ஒரு க்ளாரிஃபிகேஷன்தான்... தேங்க்யூ..' என்று ஃபோனை வைத்துவிட்டு திரும்பி கான்ஸ்டபிளை பார்த்து...

'நீங்க அந்த குணா வீட்டுக்கு போய், இவங்களோட மொபைல் இருக்கான்னு பாத்துட்டு இருந்தா கொண்டு வாங்க...' என்று கூற...  அந்த கான்ஸ்டபிள் அங்கிருந்து கிளம்பினார்...

அடுத்த 30 நிமிடத்திற்கு, லிஷாவுக்கும் சந்தோஷுக்கும் டீ வழங்கப்பட்டது... லிஷா போலீஸின் இந்நாள் சாதனைகளை பேப்பர்களில் படித்தவற்றை வைத்து புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தாள். சில சட்ட ரீதியான சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொண்டது போல் பாசாங்கு செய்தாள். சைபர் க்ரைம் பற்றி தனக்கு தெரிந்ததை வைத்து விவாதித்து கொண்டிருந்தாள். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நிலையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துக்கொண்டிருந்தாள்.

இவையணைத்தையும் பார்த்தபடி சந்தோஷ்... லிஷாவை பார்வையால் அளந்து வியந்துக் கொண்டிருந்தான்...

என்ன பெண் இவள்... வழக்கமாக, பெண்கள் ஆபத்தில் மாட்டிக்கொண்டால், ஆண்கள் சென்று காப்பாற்றுவார்கள்... ஆனால் என் விஷயத்தில் இது தலைகீழாக நடக்கிறதே... இராத்திரி முழுவதும், பெற்றோரை இழந்த குழந்தையைப் போல், பயத்தில் புரண்டு கொண்டிருந்த என்னை, வந்து 10 நிமிடத்தில் சூழலையே மாற்றி சகஜநிலைக்கு கொண்டு வந்து காப்பாற்றிவிட்டாள். சாமர்த்தியமாக ஒரு பொய் நாடகத்தை அரங்கேற்றி... போலீஸார்களை நம்பவைத்து... இதெல்லாம் எனக்காக்கத்தானே... எனக்காக வெட்கத்தை விட்டு, அந்தரங்க புகைப்படங்களைப் பற்றி பேசி... என்ன நடந்தாலும் சரி, இவளை எக்காரணத்துக்காவும், வாழ்க்கையில் தொலைத்துவிடக்கூடாது... என்று சந்தோஷ் தன்மனதுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அவன் கவனத்தை, குணா வீட்டிலிருந்து திரும்பி வந்த கான்ஸ்டபிள் கலைத்தார்...

'சார், குணா வீட்ல இந்த ஃபோன் கிடைச்சுது சார்... நான் உள்ளே போகும்போது, இதை கையில வச்சிக்கிட்டு ஏதோ செஞ்சிக்கிட்டிருந்தான் சார்... ஃபோனை வாங்கிட்டு வந்துட்டேன். ஈவினிங் உங்களை வந்து மீட் பண்ண சொல்லியிருக்கேன்..' என்று கான்ஸ்டபிள் அந்த மொபைலை கொடுக்க... இன்ஸ்பெக்டர் அந்த மொபைலினுள்ளே ப்ரவுஸ் செய்து பார்க்க, அதில், சந்தோஷும் லிஷாவும் எடுத்துக் கொண்ட சில அந்தரங்க ஃபோட்டோக்கள் கிடைத்தது. இதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், மொபைலை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு...

'லிஷா... பர்சனல் ஃபோட்டோஸ் எடுத்துக்கிறது தப்புன்னு சொல்லலை... ஆனா அதை பர்சனலா பத்திரமா வச்சிக்கணும்... இல்லன்னா ரொம்ப ஆபத்து... உங்க நல்ல நேரம், உங்க லவ்வர் பேர்ல இன்னும் F.I.R. போடலை... இல்லைன்னா, கொஞ்சம் தலைவலியாயிருக்கும். உங்க ஆளை தாராளமா கூட்டிட்டுபோலாம்...' என்றுகூற... லிஷா மகிழ்ச்சியுடன் எழுந்து, இன்ஸ்பெக்டருக்கு கை கொடுத்தாள்.

'ரொம்ப நன்றி சார்...' என்றுகூறிவிட்டு, ஓடிச்சென்று சந்தோஷை கட்டிக்கொண்டாள்...

'மிஸ். லிஷா... ஒரு நிமிஷம்...' என்று இன்ஸ்பெக்டர் கூப்பிட, மீண்டும் திடுக்கிட்டு திரும்பினாள்...

'நீங்க வேணும்னா, அந்த குணா பேர்ல ஒரு கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்துட்டு போங்க... நான் அவனை அரெஸ்ட் பண்ணி ஆக்ஷன் எடுக்குறேன்..' என்று கூற...

'வேண்டாம் சார், அவனை ஜஸ்ட் மிரட்டி மட்டும் வையுங்க... ஏன்னா, அவன் I.T.-ல வர்க் பண்றதால, எப்பவும் வெளிநாடு போற வாய்ப்பு கிடைக்கும். நீங்க அவன் பேர்ல F.I.R. போட்டீங்கன்னா, பாவம், அவனால வெளிநாடு போக முடியாம போயிடும்... சோ.. கம்ப்ளைண்ட் வேண்டாமே..?!' என்று கெஞ்சினாள்....

இன்ஸ்பெக்டர் அவளை பெருமிதத்துடன் பார்த்து வழியனுப்பி வைத்தார்.

அங்கிருந்து வெளியேறி இருவரும் ஆட்டோ பிடித்து ANCIENT PARK-க்கு திரும்பி கொண்டிருந்தனர்...

தெருவை கடக்கும் வரை அமைதியாக இருந்த சந்தோஷ், தெருமுனையில் ஆட்டோ திரும்பியதும், லிஷாவின் கைகளை பற்றிக்கொண்டு பேச குழறலாக பேச ஆரம்பித்தான்.

'லிஷா... ரொம்ப தேங்க்ஸ்டா..' என்று அழாத குறையாக அவளுக்கு நன்றி சொல்ல... லிஷா அவன் தோளில் தலைவைத்து சாய்ந்து கொண்டாள்.

'ஏண்டா சேண்டி தேங்க்ஸ்லாம் சொல்லி என்னை தனியாளாக்குற... எனக்கேதாவது ஒண்ணுன்னா... நீ ஹெல்ப் பண்ணியிருக்க மாட்டியா..' என்று கூற, அவன் பதிலெதுவும் கூறாமல் மௌனமாய் தெருவில் கடந்துபோகும் மனிதர்களை வேடிக்கை பார்த்தபடி வந்தான். திடீரென்று அவனுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது...

'ஆமா..? எப்படி குணா வீட்ல உன் மொபைல் வந்துச்சு..?' என்று கேட்டான்

'அது பறந்துபோய் அங்கே விழுமா என்ன... நான்தான் கொண்டு போய் போட்டேன்..'

'உனக்கெப்படி அவன் வீட்டு அட்ரஸ் தெரியும். நான்கூட உங்கிட்ட சொன்னதில்லியே.. நீயும் போய் அவன் ஆஃபீஸ் H.R. சாந்தினிகிட்ட அட்ரஸ் வாங்கிட்டு வந்தியா..?'

'நான் ஏன் அங்கெல்லாம் போறேன். அன்னிக்கி அவன் நம்ம ஆஃபீஸ்லருந்து ஓடிப்போனப்போ, அவனோட ID கார்டு கிடைச்சதுன்னு சொன்னியே நினைவிருக்கா..?'

'ஆமா..? ஆனா அதுல அவன் அட்ரஸ் இல்லியே..?'

'அதுலதான் இருந்தது... நீ முன்னாடி பக்கம் மட்டும் பாத்தே.. அந்த ID கார்டு-ஐ tagலருந்து கழட்டி கார்டோட பின்னாடி பக்கம் பாத்தா, அவனோட அட்ரஸும் ப்ளட் குரூப்பும் இருந்தது... அதை வச்சி சின்னதா ஒரு ப்ளான் எக்ஸிக்யூட் பண்ணி பார்த்தேன்... வர்க் அவுட் ஆயிடுச்சு.. நல்ல வேளை, நாம எடுத்துக்கிட்ட கிஸ்ஸிங் ஃபோட்டோஸ் யூஸ்ஃபுல்லா இருந்தது...' என்று லிஷா பெருமையாக சொல்லிக் கொண்டாள்.

'ஆமாமா, இன்னும் நிறைய ஃபோட்டோஸ் இந்தமாதிரி எடுத்து வச்சிக்கணும்...' என்று சந்தோஷ் கூறிவிட்டு அமைதியாக இருக்க... லிஷா அவனை திரும்பி பார்த்து முறைத்தாள். இருவரும் ஆட்டோவுடன் சேர்ந்து குலுங்கியபடி சிரித்துக் கொண்டனர்.

லிஷாவும் சந்தோஷூம் Ancient Park வந்தடைந்தனர்...

நேராக மாடியில் தாஸின் அறைக்கு சென்றனர்... சந்தோஷ் உள்ளே வராமல் தயங்கி நின்றான்.

'லிஷா நீ உள்ளே பேசிக்கிட்டிரு... நான் போய் கொஞ்சம் ஃபேஸ் ப்ரெஷ் பண்ணிட்டு வந்துடுறேன்...' என்று அங்கிருந்து அவன் நகர்ந்துவிட, லிஷா கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

உள்ளே தாஸ் தனது கைகளில் ஒரு வெள்ளை கலர் பலகையை (P.C. டாப்லெட்) வைத்துக் கொண்டு அதில் Light Pen மூலம் சில கோட்டோவியங்களை வரைந்துக் கொண்டிருந்தான். அந்த பலகையில் அவன் வரைவது, அவனது கணினியின் மானிட்டரில் லைன் டிராயிங்-ஆக உருப்பெற்று கொண்டிருந்தது...

லிஷா அவனருகில் வந்து ஒரு நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தாள்...

'என்ன தாஸ், நீங்க கோவிலுக்கு போன காரியம் காயா? பழமா..?'

'ஆல்மோஸ்ட் பழம்தான்...'

'ஆல்மோஸ்ட்னா..?'

'ம்ம்ம்... அதாவது பாதி வெற்றி...'

'ஏன் தாஸ் குழப்பறீங்க... அந்த சித்தர் சமாதி அந்த கோவில்ல இருந்ததா இல்லையா..?'

'இருந்திருக்கு..'

'இருந்திருக்குன்னா..? இப்போ இல்லியா..?'

'ஆமா..'

'எங்கே இருந்திச்சாம்' என்று அவள் கேட்டுக் கொண்டிருக்க, கதவை திறந்து கொண்டு சந்தோஷ் உள்ளே நுழைந்தான். முகத்தை கழுவிக்கொண்டு மிகவும் தெளிவாக இருந்தான்.

'ஹலோ பாஸ்.. பாத்து ரெண்டு நாளாச்சு... எப்படி இருக்கீங்க..?'

'ரெண்டு நாள்ல எனக்கு என்ன ஆயிடப்போகுது... நல்லாத்தான் இருக்கேன்'

'என்ன பாஸ் ஏதோ கோவில் கோபுரத்தை வரைஞ்சிட்டிருக்கீங்க..?'

'ஆமா.. இந்த கோவில் கோபுரங்கள்லாம் ரொம்ப ஆச்சர்யமான விஷயங்கிறது இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. இதை கிட்டத்தட்ட இண்டியன் பிராமிட்ஸ்-னு சொல்லலாம்...'

'இண்டியன் பிராமிட்ஸ்-ஆ..?'

'ஆமா... இந்த கோபுரத்துக்கு மேல இந்த இடத்துல... ஒரு பொருளை வச்சிருக்காங்க... அந்த பொருள் ரொம்ப நாள் கெடாம இருந்திருக்கு.. அது என்ன பொருள் தெரியுமா..?' என்று கோபுரத்தின் உச்சியில் ஒரு வட்டம் போட்டு காட்டிவிட்டு இருவரையும் ஆர்வமாக பார்க்க... இருவரும் என்னவாக இருக்கும் என்பது போல் அந்த கோபுர கோட்டோவியத்தின் உச்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர்...

'என்ன தெரியலியா..?'

'என்ன தாஸ் இருந்துச்சு சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க..'

'இந்த இடத்துலதான் அந்த சித்தரோட சமாதி இருந்திருக்கு...'

'என்ன சொல்றீங்க..? கோவில் கோபுரத்தோட உச்சியில சித்தர் சமாதியா..? கோவில்ல வேற இடமே கிடைக்கலியா..?'

'அப்படித்தான் நானும் நினைச்சேன். ஆனா, சில புத்தகங்கள்ல கோபுர கட்டுமானத்துக்கான ஆக்சுவல் காரணத்தை படிச்சதும் ஆச்சர்யமாயிருக்கு..'

'என்ன பாஸ் காரணம்...'

'காற்றுமண்டலத்துல உலவிட்டிருக்கிற காஸ்மிக் கதிர்களை நாலு திசையிலருந்தும் கலசங்கள் மூலமா பிடிச்சி இழுக்கிறது இந்த கோபுரங்கள்தான்... நாலு திசையிலருந்தும், அந்த கதிரலைகளை கோவிலுக்கு உள்புறமா இழுத்து, அது மீட் ஆகுற இடத்துலதான், கோவில் கருவறை விமானமான குட்டி கோபுரம் இருக்குது... அது அந்த விமானம் மூலமா கருவறைக்குள்ள போக... உள்ளே இருக்கிற சாமி சிலைக்கு இந்த கதிரலைகள் மூலமா சில விசேஷ பொலிவு கிடைக்குது... ஏற்கனவே கோவிலுக்கு வர்ற பக்தர்கள் தன்னோட மனசை பிரார்த்தனைங்கிற பேரால ஒருநிலைப்படுத்தி, அந்த சிலையைப் பாத்து கும்பிடும்போது, அந்த சிலையில ஏற்கனவே பரவியிருக்கிற சக்தி ரிஃப்ளெக்ட் ஆகி, அங்க இருக்கிற எல்லாருக்கும் போய் சேருதாம். அந்த வகையில பாக்கும்போது, இந்த கோவிலமைப்புகள் ஒரு பவர் ஸ்டேஷன் மாதிரி செயல்படுது.... இது ஆச்சர்யம்தானே...'

'ஆச்சர்யம்தான் பாஸ்...'

'அந்தகாலத்துல கோவிலோட கோபுரத்தைவிட உயரமா எந்த கட்டிடங்களும் ஊருக்குள்ள கட்டக்கூடாதுன்னு சொன்னதுக்கு காரணம்... இந்த காஸ்மிக் கதிரலைகள் தடைப்படக்கூடாதுங்கிறதுதான்... ஆனா இன்னிக்கி... ஹ்ம்ம்ம்...' என்று தாஸ் ஏளனமாக சிரித்து கொண்டான்

'தாஸ்..? ஆனா, அந்த சித்தர், கோபுர உச்சியில சமாதியடைஞ்சதுக்கு ம் இதுதான் காரணமா..?'

'ஆமா... ரொம்ப சிம்பிள்... கோபுரத்துக்கு மேல வந்து...  உள்ளே இறங்கி... அப்புறமா தனக்கு வந்து சேர வேண்டிய கதிரலைகளை நேரடியா உள்வாங்குறதுக்காக அங்கே சமாதியாயிருந்திருக்காருன்னு நினைக்கிறேன்...'

'என்ன பாஸ்... என்னென்னமோ சொல்றீங்க... யாரிந்த சித்தர்... என்ன சமாதி..' என்று இரண்டு நாட்களாக நடந்த விஷயங்கள் தெரியாததால் சந்தோஷ் குழம்பிப்போயிருந்தான்.

'லிஷா... நீ அவனை தனியா கூட்டிட்டு போய் என்ன நடந்துச்சுன்னு அப்டேட் பண்ணிடு... ப்ளீஸ்...'

'கண்டிப்பா பண்றேன்... ஆனா, அந்த சித்தர் சமாதி இப்போ எங்கேயிருக்குன்னு சொல்லுங்களேன்... ப்ளீஸ், மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு..?'

'சாரி லிஷா... இப்போ அந்த சித்தர் சமாதி எங்கேயிருக்குன்னு இன்னும் தெரியவரலை... நாம அதையும் சேத்துதான் கண்டுபிடிக்கணும்...'

'அப்போ என்ன தாஸ் பண்றது..?'

'இது விஷயமா தாத்தாகிட்ட பேசுனேன்... அவர் நாம உடனடியா கேணிவனம் கிளம்புறது பெட்டர்னு ஃபீல் பண்றார்...'

'நானும் அதான் பாஸ் ஃபீல் பண்றேன்..' என்று சந்தோஷூம் இதை ஆமோதிக்கிறான்.

'ஏன் அந்த கோவிலை பாக்க உனக்கு அவ்வளவு ஆர்வமா இருக்கா..?' என்று தாஸ் கேட்க...


'நமக்கு முன்னாடி வேற யாரும் அதை பாத்துடக்கூடாதுன்னு ஆர்வமா இருக்கு..'

'என்ன சந்தோஷ் சொல்றே..?'

'பாஸ்... அந்த குணா பய வீட்ல, மிஸ்ட்ரி டிவி சேனலோட விசிட்டிங் கார்டு-ஐ பாத்தேன். எனக்கென்னமோ அவன் ஏதோ ஒரு ஃபார்வர்ட்  மூவ் பண்ணியிருக்கான்னு தோணுது... நாம முந்திக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்..'

'ஐ... சி...' என்று தாஸ் ஆழ்ந்த யோசனையில் இருக்க... சந்தோஷ் தாஸின் அருகில் வந்து...

'பாஸ்... நீங்க இங்க யோசிக்கிறது அப்படியே நம்ம ஆபீஸ் பின்னாடியிருக்கிற பார்க்ல வந்து தம் அடிச்சிக்கிட்டே யோசிச்சீங்கன்னா நல்லாயிருக்கும்... எனக்கும் தம் அடிக்கனும் போல இருக்கு..' என்று கெஞ்சலாய் சொல்லிவிட்டு, அருகிலிருக்கும் லிஷாவை ஏறிட்டு பார்த்தான். அவள் கோபத்தை காட்டாமல், சிரித்த முகமாய்...

'சரி, நீங்க என்ன பண்றீங்களோ பண்ணுங்க... எனக்கு அந்த ஜியாலஜிஸ்ட் நண்பன்கிட்ட ஒரு சின்ன வேலையிருக்கு... நான் போயிட்டு வந்துடுறேன்... தாஸ் நான் உங்க காரை கொண்டு போறேன்...'  என்று கூறியபடிஅங்கிருந்து கிளம்ப... தாஸும், சந்தோஷும், ஆபீஸின் பின்புறமிருக்கும் பீச் வியூ பார்க்குக்கு சிகரெட் பிடிப்பதற்காக விரைகின்றனர்...

லிஷா... தனக்கு வரவிருக்கும் ஆபத்து தெரியாமல்... காரை இயக்கி கொண்டு, ரிச்சர்டை பார்க்க கிளம்பி சென்றாள்...

(தொடரும்...)Signature

20 comments:

Chitra said...

லிஷா... தனக்கு வரவிருக்கும் ஆபத்து தெரியாமல்... காரை இயக்கி கொண்டு, ரிச்சர்டை பார்க்க கிளம்பி சென்றாள்...


.....சரியாக எப்பொழுது, "தொடரும்" போட வேண்டும் என்று உங்களுக்கு தெரிகிறது. Good Suspense!

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்
படிக்க படிக்க பாதை விரிவடைந்து பாதம் என்னையும் மீறி கேணிவனத்தில்.........
கொஞ்சம் சமயம் இருந்தால் நம்ம பக்கமும் வந்து போங்களேன் நண்பரே

எல் கே said...

கலக்கல் ஹரீஷ்

Madhavan Srinivasagopalan said...

as usual, very interesting.. go ahead..

எஸ்.கே said...

சூப்பராக போகுது! வாழ்த்துக்கள்!

Sam Riyas said...

விருவிருப்பின் வேக‌ம் அதிக‌ரித்துள்ள‌து
வ‌ழ‌க்க‌ம் போல் அருமையாக‌ உள்ள‌து ஹ‌ரிஷ்...
அடுத்த‌ பாக‌த்தை வெள்ளிய‌ன்று எதிர்பார்க்கிறேன்..

வாழ்த்துக்க‌ள்...

Janaki. said...

EXCELLENT VERY INTERESTING

நாடோடி said...

ந‌ல்லா போகுது ஹ‌ரீஸ்.. சீக்கிர‌ம் தொட‌ருங்க‌ள்.

Unknown said...

seekirama mudinjamari feeling:-)..innum konjam serthu yeludhunga sir..:-)

சைவகொத்துப்பரோட்டா said...

கதையின், விறுவிறுப்பு ஏறிக்கொண்டே இருக்கிறது!!

வேங்கை said...

ஹரிஷ்

பழைய காலத்து கோவிலுக்கு போனா ஒரு பாசிடிவ் திங்கிங் வரும் பட் இப்போ எங்க ஹரிஷ்

அதுக்கு மேக்னடிக் வேவ்ஸ் ஒரு காரணம்னு கேள்வி பட்டு இருக்கேன்

இந்த பாகம் - பழனுதல்

அருண் இராமசாமி said...

நீங்க அடுத்த இந்திரா சௌந்தர்ராஜன்

Gayathri said...

கதை நல்லா சூடு பிடிசுருத்து..எனக்கு அந்த கேணி வனத்தின் மேல் ஆர்வமும் கூடிகொண்டே போகிறது..
ரொம்ப அருமையா கொண்டு போறீங்க சகோதிரரே...
அதும் ஒரு ஒரு பாகத்துக்கும் நீங்க வைக்கும் பிரேக் சூப்பர்..

Unknown said...

good suspense.An interesting story i have ever read. Sure I will get a dream of kenivanam today. Shanthi

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...nice going... suspense aa nirutthiteenga? ஆர்வமும் கூடிகொண்டே போகிறது.. next part please

DREAMER said...

வணக்கம் சித்ரா,
ஹா ஹா... தொடரும் போடுறதுக்கு ஒரு ஃப்ரீஸ் பாய்ண்ட் பிடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. நன்றி!

வணக்கம் தினேஷ்குமார்,
இன்னும் இரண்டு அல்லது மூன்று பாகத்தில், கேணிவனத்திற்கு மீண்டும் உங்களை அழைத்து போக போகிறேன். உங்க பதிவை கண்டிப்பாக வந்து படிக்கிறேன்..

வணக்கம் LK,
மிக்க நன்றி...!

வணக்கம் மாதவன்,
ThanX a lot for your appreciation...

வணக்கம் எஸ்.கே.,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் Sam,
விறுவிறுப்பை ரசித்து படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! அடுத்த பாகத்தை கண்டிப்பாக வெள்ளிக்கிழமைக்குள் போட்டுவிடுகிறேன்.

வணக்கம் ஜானகி,
ThanX a lot for your appreciation. Keep reading...

வணக்கம் நாடோடி நண்பரே,
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க... தொடர்கிறேன்.

வணக்கம் Gomy,
ஒவ்வொரு பாகத்திற்கு அலுக்காமல் இருக்குப்பதற்காக அளவுடன் எழுதிவருகிறேன். நீளத்தை அதிகரிக்க முயல்கிறேன். நன்றி!

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா நண்பா,
விறுவிறுப்பை ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!

DREAMER said...

வணக்கம் வேங்கை,
'பழனுதல்' அருமையான வார்த்தை விமர்சனம்... காஸ்மிக் வேவ்ஸ் பத்தி எழுத இந்த ஒரு கதை போதாது... அதில் அவ்வளவு விஷயங்கள் காணக்கிடைக்கிறது! வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பகிரலாம்.

வணக்கம் அருண் இராமசாமி...
//நீங்க அடுத்த இந்திரா சௌந்தர்ராஜன் // இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்..! விருது கிடைத்ததுபோல் உணர்கிறேன். மனமார்ந்த... சிரம் தாழ்ந்த நன்றிகள்..!

வணக்கம் காயத்ரி,
அடுத்தடுத்த பாகத்துக்கு நீங்கள் காட்டும் ஆர்வம் என்னை மென்மேலும் எழுத ஊக்கப்படுத்துகிறது சகோதரி... மிக்க நன்றி!

வணக்கம் சாந்தி,
//good suspense.An interesting story i have ever read.//
ThanX a lot. And share your dreams about Kenivanam in your next visit. Keep visiting... ThanQ.

வணக்கம் அப்பாவி தங்கமணி,
உங்களை நீண்ட நாள் காக்க வைக்காமல், அடுத்த பாகத்தை இன்று அல்லது நாளை போட்டுவிடுகிறேன். தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

-
DREAMER

Unknown said...

கேணிவனத்தை சீக்கிரம் திரும்பவும் பார்க்கப்போறோமா.. சூப்பர்..

லிஷாவுக்கு என்ன ஆபத்து நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சுக்க ஆவலோட இருக்கேன்..

எப்போதும் போல விறுவிறுப்பாக இருந்தது இந்த பாகமும்..

Parthasarathy said...

lishavirku enna aabathu? Guna pogiradhku munnadi dass group kenivanathiku selluma?indha aarvamana samayathila poi lishavirku aabathu nu oru twist vachiteengale (indha edathilaya vaikanum twistu!)Anna post next part soon.

மாதேவி said...

நன்றாக இருக்கிறது தொடர்.

Popular Posts