சடகோப சித்தர், தாஸின் முற்பிறவி இரகசியத்தை கூறியதும், தாஸினால் நிலைகொள்ள முடியாமல் தடுமாறினான். அவன் கையில் பிடித்திருந்த ஹேண்டிகேமிராவில் அவனது நடுக்கம் தெரிந்தது.
'ஏனப்பா இப்படி நடுங்குகிறாய்...?' என்று சித்தர் சிரித்தபடி கேட்டார்
'ந... நான்தான் நீங்க... சொன்ன.. ராஜாவா..?'
'ஆம், இன்றிலிருந்து 53 வருடத்திற்கு முன்புவரை நீதான் இராஜசேகரவர்மனாக வாழ்ந்து வந்தாய்.. நீதான் கேணிவனக்கோவில் கட்ட காரணமாயிருந்தவன். மனிதப் போர்களை நிறுத்தி உலகில் அமைதியை நிலைநாட்ட எனக்கு உதவியவன். எல்லாம் நீதான்.'
'53 வருஷத்துக்கு முன்னாடியா..! அப்போ, இப்போ அந்த ராஜா உயிரோட இல்லியா..?'
'ஆம்... இப்போது நீ 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருப்பது உனது 4ஆவது பிறவி' என்று கூற, தாஸ் மேலும் நடுங்கினான். நடுங்காமல் என்ன..? தனது பிறவி இரகசியத்தை ஒருவர் தெளிவாக கூறுவதை கேட்கும்போது, யாராயிருந்தாலும் நடுங்கத்தான் முடியும். தாஸூம் நடுங்கினான்.
'ந...நான்... 4ஆவது பிறவியா..? அ...அப்போ... இ..இன்னும் எத்தனை பிறவி நான் எடுப்பேன்..?'
'அது இரகசியம், நான் நடந்து முடிந்ததைத்தான் கூறினேன். நடக்கப்போவதை நடக்கும்போது தெரிந்து கொள்...' என்று சித்தர் மழுப்பினார்
'சாமி...! எனக்கொரு சந்தேகம்..?'
'என்ன..?'
'இப்போ 21ஆம் நூற்றாண்டுல இருக்கிற உங்களோட பிரேதம், உங்களோட எத்தனாவது பிறவியுடையது..?' என்று கேட்டான்
'நான் பிறவித்தொடரை அறுந்தவன். எனக்கு இனி பிறப்பில்லை..! நான் எனது பிறவிக்காலம் முடிந்ததும், சூட்சும நிலையில் சஞ்சரிப்பேன். ஆனால், எனது சிறியதொரு பிழையினால் நான் எனது பிறவிக்காலத்தை கடந்து பயணப்பட்டிருந்தபோது ஜீவசமாதியாகிவிட்டேன். அதனால்தான், உனது உதவியை நாடுகிறேன்' என்றார்
'புரியல சாமி..?'
'நான் இப்போது 21ஆம் நூற்றாண்டுக்கு பயணப்பட்டால், நான் பிரேதமாகிவிடுவேன். என்னால் சூட்சும நிலையில் சாந்தியடையாத ஆன்மாவகத்தான் அலையமுடியும். நீ எனது உடலை இந்த காலக்கட்டத்திற்கு கொண்டுவந்துவிட்டால், நான் முறையாக சூட்சும நிலையில் சுதந்திரமாய் சஞ்சரிக்க முடியும்...' என்றார்.
தாஸூக்கு பாதிதான் புரிந்தது என்பது அவனது முகத்தில் தெரிந்தது... 'உனக்கு புரியாவிட்டாலும், நீ எனக்கு இந்த உதவியை செய்யத்தான் வேண்டும். இதை உன்னைவிட்டால் யாராலும் சரிவர செய்ய முடியாது என நான் நம்புகிறேன்...' என்று கூறினார்.
தாஸ், மேலும் அவரை கேள்விகேட்டு நச்சரிக்க விரும்பாததால், அவன் மேற்கொண்டு செய்யவேண்டியதை மட்டும் கேட்டான்.
'சரி சாமி..! நான் எப்படி உங்க பிரேதத்தை இங்க கொண்டு வரணும்னு தெளிவா சொல்லுங்க... கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்...' என்றான்.
உடனே சித்தர் எழுந்து சென்று, கோவில் மண்டபத்திலிருந்து இறங்கிவந்து, மண்தரையில், ஒரு சிறு குச்சியினால் ஒரு வரைபட சித்திரத்தை வரைந்து காட்டினார்.
'நான் உன்னை கிளம்பி வந்த காலத்துக்கே அனுப்புகிறேன். அங்கு சென்றதும், என் பிரேதத்தை கேணிவனக் கோவிலிலிருந்து கண்டெடு... பிறகு இதுதான் கேணியில் என் காலக்கட்டத்திற்கு பயணப்படும் காலக்கோள் ஆள்கூற்று.' என்று அந்த மணல் சித்திரத்தை சுட்டிக்காட்டினார்.
'நீ என் பிரேதத்தை மீட்டதும், கேணியில் இந்த வரைபடத்திலிருப்பது போன்ற நிலையில் ஆள்கூற்றை பொருத்தி, உள்ளே என் பிரேதத்தை போட்டுவிடு.... ' என்றார்
'சாமி... அப்புறம் நான் சொன்னது..?'
'புரிகிறது... உனது நண்பர்களை காப்பாற்றும்படி கேட்டதுதானே..?' என்று மீண்டும் அந்த வரைபடத்துக்கு அருகில் மற்றுமொரு சித்திரத்தை தீட்டினார்.
'இதுதான் நீ செல்ல வேண்டிய காலக்கட்டத்திற்கு உன்னை அழைத்து செல்லும் காலக்கோள் ஆள்கூற்று... என் பிரேதத்தை நீ அனுப்பிவித்ததும், கேணியில் மீண்டும், இந்த வரைபடத்தில் உள்ளதுபோல் பொருத்திக்கொண்டு நீ கேணியில் இறங்கிவிடு, உன் நண்பர்கள் உயிரோடிருந்த காலக்கட்டத்திற்கு இது உன்னை அழைத்து செல்லும்.' என்றார்
தாஸ் சற்றே குழப்பத்துடன், இரண்டு வரைபடங்களையும் பார்த்தான்.
'சாமி நீங்க வரைஞ்சியிருக்கிறதை நான் மறந்துட்டேன்னா என்ன பண்றது..?' என்று ஒரு சின்ன இடைவெளிவிட்டு, 'நான் வேணுமின்னா என்னோட இந்த ஹேண்டி கேமிராவுல படம் பிடிச்சிக்குறேன்..' என்று கேட்டான்.
'இல்லை, நீ திரும்பி சென்று சேரும்போது, இது உன்னோடு இருக்கும் என்று நிச்சயமாய் சொல்லமுடியாது. ம்ம்ம்' என்று சித்தர் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தார்... பிறகு அவனிடம், 'நீ இந்த வரைபடத்தை உன்னோடு கொண்டு செல்வது போல் ஒரு ஏற்பாடு செய்கிறேன்.' என்று கூறிவிட்டு ஒரு அரைநிமிடம் கண்களை மூடியிருந்தார். தாஸ் அப்படியவர் கண்மூடியதைப் பார்த்து, அவர் ஏதோ வித்தை செய்யவிருக்கிறார் என்று எதிர்ப்பார்த்தான். அவர் சட்டென்று கண்களை திறந்து சிரித்தார். தாஸ் குழம்பினான், நாம் மனதிற்குள் நினைத்தது இவருக்கு தெரிந்திருக்குமோ..? என்று பயந்தான். ஆனால், அவர் சிரிப்பைத் தவிர வேறெதுவும் சொல்லாமல், மீண்டும் மண்டபத்திலேறி சப்பணமிட்டு அமர்ந்து கொண்டார். தாஸூம் தயக்கத்துடன் சென்று மீண்டும் அவருக்கருகில் அமர்ந்து கொண்டான்.
'என்ன சாமி..? ஏதோ ஏற்பாடு செய்யறேன்னு சொன்னீங்க..?'
'செய்கிறேன். சற்று பொறு...' என்றார்.
தாஸூக்கு இன்னும் கேணிவனத்தை பற்றி ஏதேதோ கேட்கவேண்டும் போலிருந்தது... ஆனால், என்ன கேட்பது ஏது கேட்பது என்ற கேள்விகளை அவனால் தொகுக்க முடியாமல் திணறினான். சுற்றி சுற்றி அந்த கோவிலையே மேலும் காட்சிப்பிடித்துக் கொண்டிருந்தான். சித்தர் இப்போது அவனது செயலை கூர்ந்து பார்த்தார். குறிப்பாக, அவன் கையிலிருக்கும் ஹேண்டிகேமிராவை வித்தியாசமாக பார்த்தார்.
'தாஸ், நீ கையில் வைத்திருக்கும் இக்கருவியின் பெயர் என்ன..?' என்றார்
தாஸ் பெருமையாய், 'இது ஹேண்டிகேமிரா... இது மூலமா, நாம பாக்குற காட்சிகளை பதிவு செஞ்சிக்கலாம். தேவையானப்போ போட்டு பாக்கலாம்..'
'நீ உன் மனதிலேயே காட்சிளை பதிவு செய்து கொள்ளலாமே..? தேவையானபோது, நீ பார்த்ததை நினைவுக்கூர்ந்து பார்க்கலாமே..?' என்றார்
'செய்யலாம்தான். ஆனா, இதுல பதிவு செஞ்ச காட்சியை நான் அடுத்தவங்களுக்கும் காட்டலாமே..!' என்று சித்தரை மடக்கிவிட்டதுபோல் கூறினான்.
'ஏன், நீ உன் மனக்காட்சிகளையும் அடுத்தவர்களுக்கும் காட்டலாமே..?' என்றார்.
'அது எப்படி சாமி முடியும்... நீங்க சித்தர் ஏதாவது சித்து வேல செஞ்சி உங்க மனசுல இருக்கிறதை அடுத்தவங்களுக்கு தெரிவிப்பீங்க..? ஆனா நான் சாதாரண மனுஷன்தானே..! என்னால் அது முடியாதே..?' என்றான்
'பேச முடியாதவொரு கைக்குழந்தை, தனக்கு பசிக்கிறது என்பதை தனது எண்ணத்தின் வாயிலாகத்தானே தாய்க்கு தெரிவிக்கிறது.. இது மனிதனின் இயல்பான ஆற்றல்தானே..!' என்று கூறினார்.
தாஸிடம் அவரது இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து இல்லையென்பதால் தொடர்ந்து பேசாமலிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் ஒரு குரல் கேட்டது...
'கும்புடுறேன் சாமி..! கூப்புட்டிருந்தீங்க போலருக்கு..' என்று குரல் கேட்ட திக்கில் தாஸ் திரும்பி பார்க்க... அங்கே ஒரு குறவன் நின்றிருந்தான். காட்டான் உடம்பும், கரிய நிறமும், அந்த கரிய நிறத்தில் ஒரு பளபளப்பும் தெரிய, சிரித்த முகத்துடன் பார்க்க களையாய் இருந்தான். தாஸ் அவனை சிநேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவனும் சிரிப்பின் மூல்ம் சிநேகத்தை பகிர்ந்து கொண்டான்.
சித்தர் அந்த குறவனை தாஸூக்கு அறிமுகம் செய்துவைத்தார், 'தாஸ், இவன்தான் நள்ளி, என் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவன், கேணிவனம் பற்றிய ரகசியமறிந்தவன். எனக்கும் இந்த கோவிலுக்கும் காவலிருப்பவன். என் மனக்குரலை புரிந்து எனக்காக எந்நேரமும் உதவ உண்மையாக காத்திருப்பவன்.' என்று கூறினார். தாஸூக்கு அந்த குறவனின் மேல் மரியாதை கூடியது. சித்தர் அந்த குறவனிடம் திரும்பி...
'வா, நள்ளி..! உனக்காகத்தான் காத்திருந்தேன். ஒரு தோல்சித்திரம் தீட்ட வேண்டும்.' என்று சொன்னபடி மண்டபத்திலிருந்து சித்தர் இறங்கி நள்ளி என்ற அந்த குறவனை நெருங்கி சென்றார்.
'தீட்டிடுவோம்... ஆருக்கு..! இந்தாருக்கா..?' என்று தாஸை சுட்டிக்காட்டி கேட்டான்.
'ஆம்..?'
'கும்புடுறேன் சாமி..' என்று அவன் தாஸூக்கும் ஒரு கும்பிடு போட்டான். மீண்டும் சித்தரிடம் திரும்பி, 'சாமி, என்ன தீட்டனும்... பறையுங்க..! தீட்டிப்போடுறேன்..' என்று கேட்க. சித்தர், அவர் மண்தரையில் வரைந்திருந்த சித்திரங்களை சுட்டிக்காட்டினார்.
'எங்குட்டு தீட்டோனும் சாமி..' என்று அவன் கேட்க, சித்தர் தாஸை பார்த்து...
'தாஸ்... நீ உனது உள்ளங்காலை நள்ளியிடம் காட்டு.. அவன் அதில் தோல்சித்திரம் வரைவான்' என்றார். தாஸூக்கு புரிந்தது... இந்த நள்ளி, பச்சை குத்த வந்திருக்கிறான் என்று ஊகித்தான்.
'உள்ளங்கால் எதுக்கு..! கையிலேயே வரையட்டுமே..' என்று தாஸ் தயக்கத்துடன் கேட்டான்.
'இல்லை, இது இரகசியமாய் பாதுகாக்கப்படவேண்டிய சித்திரம். அது உனது உள்ளங்காலில் இருந்தால், அடுத்தவர் பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் இது உன் உள்ளங்காலில் இருத்தலே தகும்.' என்றார்.
தாஸ் மறுப்பேதும் கூறாமல், அந்த கோவில் மண்டபத்து படிகளில் அமர்ந்தபடி, தனது உள்ளங்காலை நள்ளிக்கு காட்ட ஆரம்பித்தான். நள்ளி தான் கொண்டு வந்திருந்த உடமைகளிலிருந்து கற்களால் செய்த ஊசி, சில பச்சிலை மைகள், மயிலிறகு என்று எடுத்து அடுக்கிக்கொண்டு, கோவிலுக்குள்ளிருந்து எரிந்து கொண்டிருக்கும் ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொண்டு வந்து அவனும் படிகளிலமர்ந்தான்.
பச்சைக்குத்துதல், உலகில் மிகவும் பழமையானதொரு கலை. என்று தாஸ் அறிந்திருந்தான்.. அதை, ஒரு தேர்ந்த பழங்குடி நிபுணனிடமிருந்தே பெறுவது எண்ணி அவன் பெருமைப்பட்டான்.
ஆனால், நள்ளி பச்சை குத்த குத்த தாஸின் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது..! ஜூரம் வருவது போல் உணர்ந்தான். அவன் முகக்களைப்பை சித்தர் கவனித்து, அவன் உடம்பை தொட்டுப்பார்த்தார்.
'அனலாய் கொதிக்கிறது. ஏற்கனவே களைப்பாயிருக்கும் உன் உடல், இந்த சித்திரம் தீட்டுதலை ஏற்க மறுக்கிறது என்று நினைக்கிறேன். நீ உனது நாசியில் சந்திரலோமத்தைக் கொண்டு சுவாசி..! உடம்பின் சூடு தணியும்.'
'என்ன சாமி..?' என்று அப்பாவியாய் தாஸ் கேட்டான்
'அதாவது உனது இடதுநாசியால் மட்டும் சுவாசி'
'அப்படி பண்ணா, சூடு இறங்கிடுமா..?'
'இது பிராணயாம்ப்பயிற்சி, சில விசேஷ பயிற்சியால், மலையுச்சியில் இருப்பதுபோல் உடம்பு குளிரடிக்குமளவிற்கும் சுவாசிக்கலாம். அதற்கெல்லாம் பயிற்சி தேவை..! இப்போதைக்கு நீ உனது இடதுநாசியில் சுவாசித்து கொண்டிரு, உன் உடம்பின் சூடு தணியும்...!' என்றார். தாஸ் அவ்வாறே செய்தான். ஜூரம் சற்று இறங்கியது...
'சாமி ஒரு சந்தேகம்..' என்றான்
'என்ன..?'
'நீங்க இந்த நள்ளியை எப்போ கூப்டீங்க... இவன் எப்படி நீங்க கூப்டதா சொல்லி வந்தான்.?' என்றான்
'மனதால் அவனை அழைத்தேன். அதை அவன் கேட்டு வந்திருப்பான்..' என்று சர்வசாதாரணமாய் கூறினார்.
'ஆமாஞ்சாமீ..! மலையில தேனெடுத்துட்டிருந்தேன்! சாமி கூப்டுச்சு..! உடனே ஓடியாந்தேன்..' என்று சிரித்தபடி சொன்னான்.
தாஸூக்கு ஆச்சர்யமாக இருந்தது... இவர்களுக்குள் இது எந்தமாதிரியான கம்யூனிகேஷன் என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டான்.
பச்சை குத்தி முடித்துவிட்டு, நள்ளி எழுந்தான். சாமி ஆச்சுங்க..! வலி தெரியாம இருக்க மை தடவியிருக்கேன். சத்த நேரத்துல வலியெல்லாம் போயிடும் நீங்க எழுந்து நடக்கலாமுங்க.. நான் வாரேனுங்க...' என்று திரும்பி சித்தரைப் பார்த்தான்..
'சாமீ..! வேற ஏதாச்சுன்னா கூப்புடுங்க ஓடியாறேன்' என்று கூறி சிரித்தபடி விடைபெற்றுக் கொண்டு நள்ளி அங்கிருந்து ஓடினான்.
தாஸ் நன்றியுடன் சித்தரைப் பார்த்தான், 'இப்படி காலப்பயணம் செஞ்சிவந்து, உங்களை பாத்து பேசி, இதோ நள்ளி மாதிரி பழைய மனுஷங்களையும் பாக்குற சந்தர்ப்பமும் கிடைச்சதெல்லாம் நினைக்க ரொம்பவும் சந்தோஷமா நிறைவா இருக்கு சாமி..! இந்த புது அனுபவங்களுக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல..!' என்றான்
சித்தர் சிரித்தார், 'இல்லையப்பா, நான்தான் உனக்கு நன்றி சொல்லவேண்டும்...' என்றார்
'நீங்க ஏன் சாமி எனக்கு நன்றி சொல்லனும்..?'
'நீ உனது ஒருபிறப்பில் மட்டுமல்ல, உனது ஒவ்வொரு பிறப்பிலும் எனக்கு பலவகையில் உதவி வருகிறாய்..' என்றார்
'அப்படியா..?'
'ஆம், அதிலென்ன உனக்கு சந்தேகம்..! அதுவும் கண்கூடாக பார்த்தபிறகு..' என்றார்.
'நானா... நான் எங்க கண்கூடாப் பாத்தேன்..' என்று தாஸ் குழப்பத்துடன் கேட்டான்
'இதோ, இந்த 2ஆம் பிறவியில் நள்ளி-ஆக எனக்கு உதவி புரிந்து வருகிறாய்...' என்றார். தாஸூக்கு தலைசுற்றியது... 'என்ன சாமி சொல்றீங்க..?' என்றான்
சித்தர் சிரித்தபடி இமை சிமிட்டினார். 'சாமி..! நா... நான்தான்.. நள்ளியா..?' என்றான்
'ஆம்..! நீ எடுத்திருக்கும் 2ஆவது பிறவி, குறவன் - நள்ளி..!' என்று கூறினார். தாஸ் நள்ளி ஓடிச்சென்ற திக்கை திரும்பி பார்த்தான். அவ(தன்)னை காணவில்லை...
'எப்படி சாமி, நானே என்னையே பாத்து தொட்டு பேச முடிஞ்சது..'
'நீ பார்த்தது உன் ஆன்ம பிரதி... வேறு பிறவி என்பதால் இது சாத்தியம், உன் பிறவியில் உன்னை நீயே பார்க்க இந்த காலத்துவாரத்தில் முடியாது.' என்றார்.
தாஸ் ஆச்சர்யமாக பார்த்திருந்தான்.
'சரி, நீ கிளம்பு, காலம் கடந்து கொண்டிருக்கிறது. போ.. போய் காலத்தை துரத்திப்பிடி, நான் வரைந்த ஓவியங்களை நினைவில் கொள், உள்ளங்காளில் இருப்பதைப் போல் செயல்படுத்து.' என்று கூற, தாஸ் ஆச்சர்யத்தை விழுங்கிக்கொண்டு, தெம்பாய் எழுந்தான். கேணியை நோக்கி நடந்தான். சித்தர் அவனை முந்திக்கொண்டு போய், கருவறையிலிருக்கும் மூடியில் சில ஆள்கூற்றுக்களை பொருத்தி மூடியை திறந்தார். தாஸ் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்து கேணிக்குள் இறங்கினான்.
மீண்டும் இருள்...
இருளும்... இருளைச் சார்ந்த இடுமுமாய் சில நிமிடங்கள் கழிந்தது...
மெல்ல கண்கள் ஒளியைக் கண்டது... மெல்ல மெல்ல கண்களுக்கு ஒரு ஓவியம் தெரிந்தது... அது பாதி அழுகிய நிலையில் ஆங்காங்கே செல்லரித்திருந்தது...
அதேதான்... கேணிவனக்கோவிலின் விட்டத்தில் இருந்த ஓவியம்தான்...
தாஸ் திடுக்கிட்டு எழுந்தான்.
சுற்றியும் பார்த்தான். பாழடைந்த கேணிவனக் கோவில். தோளில் அவனது ஹேண்டிகேமிரா...!
தன் அருகில் இன்ஸ்பெக்டர் வாசுவின் உடம்பிலிருந்து இரத்தம் சூடாக கசிந்து கொண்டிருந்தது... சந்தோஷ் இறந்து கிடந்தான். லிஷா மயங்கி கிடந்தாள். அருகில் சக்கரவர்த்தியும் இறந்து கிடந்தான்.
தாஸூக்கு புரிந்தது... தான் கிளம்பிய காலத்திற்கு திரும்பி வந்துவிட்டதை உணர்ந்தான். தன் உள்ளங்காலை பார்த்தான். அதில் பச்சைகுத்தப்பட்ட சித்திரம் இருந்தது...
நல்லவேளை அத்தனையும் கனவில்லை.! நிஜம்தான்! என்று ஊர்ஜிதம் செய்து கொண்டான். எழுந்து நின்று விட்டத்தில் தெரியும் ஓவியத்தை பார்த்தான்.
சிரமத்துடன் கோவில் கூரையின் மீது ஏறினான். ஒரு பெரிய கல்லைக் கொண்டு கூரையை இடித்தான். கூரையில் ஒரு பகுதி மெல்ல பிளந்தது... உள்ளே இறங்கினான். தனது ஹேண்டிகேமிராவின் இன்ஃப்ரா ரெட் வெளிச்சத்தை உபயோகித்து தேட, சித்தர் சொன்னதுபோல் உள்ளே இரகசிய அறையும், அதில் சித்தரின் உடம்பும் இருந்தது... மிகுந்த சிரமத்துடன் அவரது உடலை கீழிறக்கினான்.
அவரது உடலையும், கேணிவனக்கோவிலின் பாழடைந்த தோற்றத்தையும் சுற்றி சுற்றி ஹேண்டிகேமிராவில் பதிவு செய்து கொண்டான். கேமிராவில் "Battery Low" என்று எச்சரிக்கை வந்தது... சிறிது நேரத்தில் கேமிரா பாட்டெரி தீர்ந்து அணைந்து போனது. அதை கீழே வைத்துவிட்டான்.
தனது இடது உள்ளங்காலிலிருந்த சித்திரத்தைப் போல் கேணியின் மூடியை ப்ரீஸெட் செய்து, திருகி பின் திறந்தான். கேணி திறந்து கொண்டது...உள்ளே துவாரத்திற்குள் அந்த சித்தரின் உடலை இறக்கினான். அது புள்ளியாய் விழுந்து மறைந்தது...
இதற்குள் மிகவும் பலகீனமானான். உடம்பு சூடேறத் துவங்கியது... தள்ளாடி விழுந்தான். உடம்பில் ஜூரம் பயங்கரமாக வாட்டத் தொடங்கியது. மூட்டுகளில் பயங்கர வலி ஏற்பட்டது. துடித்தான். அடுத்து, தனது திட்டத்தின்படி தனது நண்பர்கள் சாவதற்கு முன்னிருந்த காலக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று உடம்பை சிரமத்துடன் செலுத்தினான்.
தனது வலது காலிலுள்ள சித்திரத்தின்படி கேணியின் மூடியை ப்ரிஸெட் செய்ய முயன்றான், ஆனால் உடல் பலவீனமாகிக் கொண்டே போனதால் அந்த கேணியின் மேலிருக்கும் கல்-ஐ நகர்த்துவது பிரமம்பிரயத்தனமாக இருந்தது.. இருந்தாலும் நீண்ட முயற்சிக்குப்பின் ஒருவழியாக சித்திரத்திலுள்ள ஆள்கூற்றுப்படி மூடியை பொருத்தினான். உள்ளே இறங்கலாம் என்று நினைத்து இறங்கப் போவன்த திடீரென்று பின்வாங்கினான்.
மீண்டும் மண்டபத்திற்கு வந்தான், ஹேண்டிகேமிராவை எடுத்தான். அதற்குள்ளிருக்கும் மெமரி கார்டு-ஐ எடுத்துக் கொண்டான். தனது பேக்-லிருந்து தனது மொபைலை எடுத்துக் கொண்டான். அதிலிருந்து பேட்டரி-யைக் கழற்றினான். அந்தவிடத்தில், இந்த மெமரி கார்டு-ஐ வைத்து செல்ஃபோனை சீல் செய்து கொண்டான். அதை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தள்ளாடியபடி சென்று கிணற்றுக்குள் இறங்கினான். கால்தடுமாறி உள்ளே விழுந்தான்.
மீண்டும் இருள்....
உடம்பு காற்றில் மிதந்து கொண்டிருக்க...
தாஸுக்கு, தனது உடம்பினுள் கேட்கும், இதயத்துடிப்பு துல்லியமாக கேட்டது...
க்ளுப் க்ளுப்...
க்ளுப் க்ளுப்...
க்ளுப் க்ளுப்...
அது அவனை மேலும் பயமுறுத்தி பலவீனப்படுத்தியது...
அவன், இப்போது புல்தரையில் விரிப்பு விரித்து படுத்திருப்பதை போல் உணர்ந்தான். இருளில் கேட்கும் பூச்சிகளின் சத்தம், சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது... மெல்ல கண்களை திறந்து பார்த்தான். காட்டுக்குள் டெண்ட்-டில் அவன் படுத்திருப்பது தெரிந்தது... அருகில் சந்தோஷூம், இன்ஸ்பெக்டர் வாசுவும், ப்ரொஃபஸர் கணேஷ்ராமும், சற்று தூரத்தில் லிஷாவும் அனைவரும் உயிருடன் அமைதியாக படுத்திருப்பது புரிந்தது... நிம்மதியானான்.... வெளியில் எட்டிப் பார்ப்பதற்காக மெல்ல கழுத்தை மட்டும் உயர்த்தினான். அங்கே சக்கரவர்த்தி திருட்டுத்தனமாய், இன்ஸ்பெக்டர் வாசுவின் பையிலிருந்து, துப்பாக்கியை வெளியே எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதுவரை விட்டுவிட்டு வந்த ஜூரம், அவனை முழுவதுமாய் ஆட்கொண்டது. அதற்கு மேல் தெம்பில்லாமல் தாஸ் மயங்கி விழுந்தான்.
அடுத்த நாள் காலையிலிருந்து...
பாகம் 24-ல் கூறியிருப்பதுபோல் நடந்தது...
(தொடரும்...)