Showing posts with label horror. Show all posts
Showing posts with label horror. Show all posts

Sunday, August 10, 2014

'ஆ'மயம் 19 - டிரெய்லர் வெளியீடு

'ஆ' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா RKV ஸ்டுடியோவில் நல்லபடியாக நடந்தேறியது...

டிரெய்லர் இதோ...


அனைத்து ஊடக நண்பர்களுடன் சேர்ந்து, விழாவை சிறப்பிக்க... தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு.கே.ஆர். அவர்கள் வந்திருந்தார்..அவரோடு எங்கள் நலன்விரும்பி 'லஷ்மி மூவி மேக்கர்ஸ்' திரு. சுவாமிநாதன் அவர்கள்... திரு.எம்.எஸ்.பாஸ்கர்... வந்திருந்து வாழ்த்தினர்.. சிறப்பு விருந்தினர்களும், எங்கள் குழுவினர்களும் ஓரிரு வார்த்தைகள் பேச டிரெய்லர் அரங்கேற்றப்பட்டது...

விழாவை நல்லபடியாக ஏற்பாடு செய்து நடத்திக்கொடுத்த.. பி.ஆர்.ஓ. திரு.சுரேஷ் சந்திரா, திரு.அப்துல நாசர் மற்றும் அவரது குழுவினர்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலமாக(வும்) எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவின் முக்கிய தொகுப்பு இதோ...



டிரெய்லரை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... டிரெய்லர் பிடித்திருந்தால்.. டிரெய்லரையும் உங்கள் ஊடகங்களில் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Wednesday, June 25, 2014

'ஆ'மயம் 13 - உலகம் சுற்றும் வாலிபன்



எக்சாம் எழுதும்போது அடிஷனல் ஷீட் வாங்கி பார்த்திருக்கிறேன்.. 'ஆ' படத்தின் கதைநாயகன் கோகுல் தனது பாஸ்போர்ட் புக்-கில் அடிஷனல் புக் வாங்கி வைத்திருப்பவர்... அந்தளவுக்கு உலகத்தில் பல ஊர் சுற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். இவரை உலக சுற்றும் வாலிபன் என்று சொல்வது சாலப்பொருந்தும்.  எங்கள் குழுவில் இவருடன் எப்போது ஃபோன் பேசினாலும், 'இந்தியாவுல இருக்கீங்களா..?' என்றுதான் பரிகசித்துதான் பேச ஆரம்பிப்போம்...

Gokul

இவர் இதற்கு முன்னமே நான்கு முறை ஜப்பானிற்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இவரும் சிவகார்த்திகேயனும் இணைந்து ஜப்பானில் நிகழ்ச்சி நடத்திய வரலாறும் உண்டு என்று தெரிந்தது.. இதனால், கோகுலுக்கு அந்த ஊரில் ரசிகர்கள் அதிகம்... நம்மூர் தமிழ் மக்கள் மட்டுமின்றி, அந்த ஊர் நேட்டிவ் ஜப்பானிய மக்களிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு என்று அங்கு சென்றபோதுதான் பார்க்க முடிந்தது...

Aaaah Team Nori & Tamami

கோகுல் ஜப்பான் வந்திருப்பது தெரிந்து, அதுவும் ஷூட்டிங் செய்ய வந்திருப்பது தெரிந்து, பல பேர் (ஜப்பானியர்கள் உட்பட) வெகு தூரத்திலிருந்து வந்து அவரை பார்த்து பேசி வாழ்த்திவிட்டு செல்வது தினமும் நடந்து கொண்டிருந்தது. அதில் குறிப்பானவர்... தமாமி  மற்றும் நோரி என்ற ஜப்பானிய நண்பர்கள்... இவர்கள் நம்மூர் கணக்குப்படி சுமார் செங்கல்பட்டு அளவு தூரத்திலிருந்து  அவர்கள் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு வந்து அவரிடம் பேசி வாழ்த்திவிட்டு ஃபோட்டோவெல்லாம் எடுத்து கொண்டு சென்றது ஆச்சர்யமாக இருந்தது.

During Hat Mime Performance

இதுமட்டுமின்றி, நாங்கள் ஜப்பானியர்களோடு ஷூட் செய்துக்கொண்டிருக்கும்போது, ஷூட்டிங் இடைவேளையில் இவரது ஃபேமஸ் மைமிங்கான 'ஹேட் மைம்' செய்து காட்டினார்.. அதை பார்த்த மாத்திரத்திலிருந்து, அங்கிருந்த நடிகர்கள் 12 பேரும் இவருக்கு புது ரசிகர்களாகிவிட்டார்கள். Proud to be his friend...

(தொடரும்)


Signature

Saturday, June 07, 2014

'ஆ'மயம் 08 - Video Blog Episode 01 : Tokyo Diary

'ஆ' திரைப்படத்தின் மேக்கிங் போது எடுத்த சின்ன சின்ன வீடியோக்கள், வீடியோ பதிவாய் இதோ உங்கள் பார்வைக்கு

Episode 01 - Tokyo Diary


அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Friday, June 06, 2014

'ஆ'மயம் 07 - ஆ கதைகள் 1, 2 & 3

டிஸ்கி : 'ஆ' ப்ரொமோஷனுக்காக எழுதப்பட்ட குட்டிக்கதைகள். இந்த கதைகளுக்கும், படத்தின் கதைக்கும் திகிலைத்தவிர எந்த சம்மந்தமும் கிடையாது...

ஏற்கனவே 'ஓர் இரவு' பப்ளிசிட்டியின் போது 'ஓர் இரவு கதைகள்' என்று குட்டி குட்டி ஹாரர் கதையை முயன்றிருந்தேன்... இருப்பினும்.. முயற்சிக்கு Expiry Date கிடையாது என்பதால்.. மீண்டும் அதே குட்டி குட்டி ஹாரர் கதை முயற்சி... இந்த 'ஆ' கதைகள்



கதை #01 : 666

பென்னி அன்று மிகவும் சந்தோஷமாய் இருந்தான்.. 6 மாதம் முன்பு புக் செய்திருந்த அவனது பைக் இன்று எந்த நிமிடமும் டெலிவரி செய்யப்படும்...

டைம் பார்த்தான்... 6 மணி அடிக்க இன்னும் 6 நிமிடம் இருந்தது...

நேரத்தை போக்குவதற்காக... FACEBOOK திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்... அதில் ஒரு ஹாரர் திரைப்படத்தின் புகைப்பட பகிர்வு இருந்தது. அதில், 666 என்ற சாத்தானின் எண் பற்றிய குறிப்புகள் இருந்தது... அந்த புகைப்படத்தை குறைந்தபட்சம் 6 பேருக்காவது பகிர வேண்டும் என்றும்.. இல்லாத பட்சத்தில்... அந்த சாத்தான் எண் பேய்வடிவம் கொண்டு இதை படிக்கும் நபரை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும்... எச்சரிக்கை இருந்தது... பென்னி சிரித்தான்... Close செய்தான்... திடீரென்று பின்னாலிருந்து டங் டங் என்ற கடிகார பெல்.. 6 முறை ஒலித்து அடங்கியது... பயத்துடன் திரும்பி கடிகாரத்தை பார்த்தான்... அதில் 666 என்றிருந்தது... '6 மணி',' 6ஆம் தேதி', '6 மணி' என்று தெரிந்தது... ஏதோ ஒரு வித பயுணர்வு அவனுள் உழன்றது... ஒரு சின்ன இடைவெளியில் தன்னைத்தானே சுதாரித்து கொண்டு மீண்டும் Facebookல் தனது GirlFriendடன் Chat செய்ய விரும்பி அவளுக்கு செய்தி அனுப்பினான்.. அப்போது, பின்னாலிருந்து காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டது...

சந்தோஷத்துடன் ஓடி சென்று கதவை திறக்க... அவன் எதிர்ப்பார்த்து காத்திருந்த புது பைக் டெலிவரி ஆனது... அதை மகிழ்ச்சியுடன் சுற்றி சுற்றி பார்த்து சிலாகித்துக்கொண்டான்... முடிவாய் பென்னி பார்த்த ஒருவிஷயம் அவனை கலவரமடைய வைத்தது... அது... வண்டியின் நம்பர் ப்ளேட்... "TN 20 EV 6666" என்றிருந்தது...

பென்னி, "ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

கதை #02 ; பரிசு

அந்த மலைதேசத்து வளைவுப்பாதையில்... அடிக்கும் பேய்மழையை பொருட்படுத்தாமல் முகில்-ன் கார் வேகமாக போய்க்கொண்டிருந்தது...

காருக்குள் இயங்கும் ஏசி-யையும் தாண்டி முகில்-க்கு வியர்த்துக் கொண்டிருந்தது...

தனது மனைவிக்கு Surprise Birthday Giftஆக கொடுப்பதற்காக வாங்கிய அதே காரில், அவளது பிணத்தை ஏற்றி செல்வான் என்று அவன் எள்ளளவும் நினைத்து பார்க்கவில்லை...

என்ன செய்ய.. விதி... விளையாடியது..

பிறந்தநாளதுவுமாக அவளுக்கு கிஃப்ட் கொடுக்க surpriseஆக அவன் வீட்டுக்குள் நுழைய... அவளது துரோகம் கண்முன்னே... முகிலுக்கு தெரியவர... ஷண நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது...

விளைவு... பின்சீட்டில் அவள் பிணம்...

துரோகம்... ஆத்திரம்... ஏமாற்றம் என்று மாறி மாறி அவனுள் கோபம் பொங்கி கொண்டிருக்க... ஒரு ஓரமாய் அவள் மீது கொண்டிருந்த காதல் வலித்தது.. அவளை மிகவும் Miss செய்வதாய் உணர்ந்தான்... திடீரென்று அவன் மனதில் ஒரு Vibration... மொபைல் ஒலித்தது... வண்டி ஓட்டியபடி எடுத்து பார்த்தான்...

அவன் மனைவி நம்பரிலிருந்து... 'ONE SMS RECEIVED' என்று தெரிந்தது...

அவள் பிணத்தை காரில் புதைக்கும்போது... அவள் மொபைலையும் உள்ளே வைத்து கட்டியது நினைவுக்கு வந்தது... பிறகு எப்படி..?

குழப்பத்துடன் SMSஐ படித்தான்...

"MISS YOU TOO DARLING... JOINE ME" (தமிழாக்கம்... உன்னை பிரியமுடியாது கண்ணா... நீயும் என்னுடன் சேர்ந்துவிடு) என்றிருந்தது..

பயத்துடன் மெல்ல.. நிமிர்ந்து காரின் மேலிருக்கும் Rear View கண்ணாடியை பார்த்தான்

அதில் கோரமாய் அவன் மனைவியின் பிணம் அவனையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

கதை #03 : எனக்கு பிடித்த புக் (மீள்பதிவு)

புத்தகங்களைவிட தூசி அதிகம் படிந்திருந்த அந்த பழைய புத்தக கடைக்குள் ரவி நுழைந்தான்...
வெகுநேரமாய் அங்குமிங்கும் தேடியபடி இருந்தவனை நோக்கி கடைக்காரர் வந்தார்...

ரவி அவனிடம், "ஏதாவது திகில் கதை நாவல் இருக்கா..?" என்று கேட்க

கடைக்காரன் ஒருவித மர்ம சிரிப்புடன் மேல் அலமாறியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து கொடுத்தான்

ரவி அதை ஆர்வத்துடன் பார்த்தபடி, 'இந்த புக்.. நல்லா திகிலா இருக்குமா..?"

கடைக்காரன், "நானே பலமுறை படிச்சி பயந்துருக்கேன் சார்.."

ரவி ஏளனமாக சிரித்தபடி "ஹாஹ்ஹா... அப்படியா.. அப்படி எத்தனைவாட்டி படிச்சி பயந்திருக்கீங்க..?" என்று கூற

"சாகுறதுக்கு முன்னாடி 4 தடவை.. செத்ததுக்கப்புறம் 3 தடவை படிச்சிருக்கேன்" என்று கூறியபடி வெளிச்சத்திற்கு வர, புத்தக கடைக்காரன் கண்கள் இருக்குமிடத்தில் வெற்றிடமாய் இருந்தது...

ரவி, "ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

(தொடரும்)

Image Courtesy : http://wilsonkhoo.wordpress.com


Signature

Wednesday, June 04, 2014

'ஆ'மயம் 06 - ஜப்பான்ல கூப்டாக


ஜப்பான் என்றதும் எனக்கு 'ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக..' என்ற கோவை சரளா அவர்களின் குரல்தான் நினைவுக்கு வரும்.. தமிழ் சினிமாவில் ஜப்பான் என்றால் கல்யாணராமன் படத்தில் .தெத்துப்பல்லோடு கமல்ஹாசன் கண்முன் தெரிவார்... ஹாரர் படம் என்று  வந்துவிட்டால் எனது டாப் 10 ஹாரர் பட வரிசையில் ரிங்கூ (பிறகு ஆங்கிலப்படமாக ரீமேக்கபட்ட The Ring) என்ற படம்  நினைவுக்கு வரும். அந்த படத்தை தொடர்ந்து நான் பார்த்த பல ஜப்பானிய ஹாரர் படங்கள் கண்முன் வந்து செல்லும். அப்படி ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த J-Horror வகை படங்கள் எடுக்கப்பட்ட இடத்தில் நாமும் ஒரு ஹாரர் படத்தை எடுக்க வேண்டும் என்று செய்த முயற்சியின் விளைவாய் அமைந்தது எங்கள் ஜப்பான் பயணம்.  

'ஆ' படத்தின் ஒரு காட்சிப்படம்

இந்த முயற்சிக்கு எங்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்தவர் MSG Groups நிறுவனர் திரு.ஹரி நாராயண் அவர்கள். ஜப்பான் தமிழ் சங்கத்தின் சார்பாக இவர் ஏற்கனவே கோகுல்-ஐ வைத்து பல கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார. இதனால், கோகுலின் ரசிகர்கள் ஜப்பானில் அதிகம். அதில் ஹரி சாரும் ஒருவர். அவர் கோகுல் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால், அவரது வளர்ச்சிக்கு என்னால் முடிந்தமட்டும் உதவி செய்கிறேன் என்று கூறி.. சொல்லிய வண்ணம் செயல்படுத்தி காட்டினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடினமாக கிடைத்த ஜப்பான் படப்பிடிப்பு பர்மிஷன் மற்றும் விசாவிற்கு பிறகு, ஒரு நன்னாளில் ஜப்பானில் தரையிறங்கினோம்... அமைதியாக இயங்கும் ஏர்போட்டிலிருந்து வெளிவந்ததும் நண்பர் திரு.கௌரி ஷங்கர், திரு. முரளி, திரு. கார்த்திக் & விக்கி என்று ஜப்பானிய தமிழ் சங்க நண்பர்கள் எங்ளை குடும்பத்தினராய் பாவித்து வரவேற்றனர். அதுவும் கோகுலை கண்டதும், அவர்கள் குதூகலமடைந்து பேசி பழகியது, அவரது முந்தைய கலைநிகழ்ச்சிகளின் வெற்றியை பறைசாற்றியது.

அருமையான க்ளைமேட்டில் ஒரு சிறு பயணத்தில் எங்கள் தங்குமிடத்திற்கு வந்தடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த பில்டிங்-ன் பால்கனியிலிருந்து பார்த்தால் சீரான 'அராகாவா' நதியோட்டம் என்று ரம்யமான ஒரு சூழல். ஒரு பரபரப்பான சிட்டிக்கு நடுவே ஒரு அமைதியாய் ஓடும் ஆறு பார்க்க அவ்வளவு அழகு... ஒருவேளை சென்னையில் கூவம் சுத்தமாக இருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று குழப்பத்தோடு அன்றிரவு உறங்கினேன்.

அடுத்த நாளிலிருந்து பரபரப்பாக எங்களது ஷூட்டிங் வேலைகளை துவக்க ஆரம்பித்தோம். ஷூட்டிங் நடத்த வேண்டிய இடங்கள், தேர்வு செய்திருந்த ஜப்பானிய நடிகர்களோடு சந்திப்பு.. அவர்களோடு கதையாலோசனை என்று எங்களது வேலை துவங்கியபோதும், நாங்கள் பயணப்பட்ட இடத்தில் ஜப்பானின் சில அதிசய பழக்கவழக்கங்களை காண நேரிட்டது.. அதில் முக்கியமாக பலர் சைக்கிள் ஓட்டி செல்வதை காண நேர்ந்தது.. கோட் சூட் என்று அணிந்து ஒரு ஆபிசராய் தெரியும் நபர் கூட, கூச்சப்படாமல்(?) சைக்கிள் ஓட்டி செல்கிறார்... சைக்கிள் ஜப்பானில் கொண்டாடப்படுவது தெரிந்தது... அவர்களின் இளமையான தோற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருக்க வேண்டும்.



நாங்கள் ஷூட்டிங்கிற்காக கேட்டிருந்த ஒரு ஹாஸ்பிடல் கடைசி நேரத்தில் பர்மிஷன் இல்லாமல் மறுக்கப்பட்டது. காரணம், ஒரே ஒரு கடைசி பேஷண்ட் இருக்கும்வரையிலும் அந்த ஹாஸ்பிட்டல் ஷூட்டிங்கிற்கு வழங்கப்படக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் என்றார்கள்...

(தொடரும்)



Signature

Tuesday, May 27, 2014

'ஆ'மயம் 05 - 'ஆ' படத்தின் DIGITAL MOTION POSTER


இந்த MOTION POSTER (MOSTER என்றும் சொல்கிறார்கள்) என்ற கான்செப்ட் சில வருடங்களுக்கு முன்பு TERMINATOR SALVATION என்ற படத்திற்கு செய்து வெளியிட்டிருந்தார்கள்.. (அதற்கு முன்பே பல படங்களுக்கு வந்திருந்தாலும் நான் முதலில் பார்த்தது இதுதான்) அது பார்த்த மாத்திரத்தில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் உயிரோடு அசைவுடன் + இசையுடன் இருந்தால் எப்படியிருக்கும்.. அதுதான் மோஷன் போஸ்டர்கள்...

ஒரு படத்தின் டீசர் கொடுக்க வேண்டிய விளைவை கிட்டத்தட்ட இந்த மோஷன் போஸ்டர்கள் கொடுத்துவிடுகின்றது... ஒரு நாவலின் மிக சுவாரஸ்யமான வரிகளை கோடிட்டு காட்டுவது போல், ஒரு படத்தின் சரியான Mood-னை வெளிப்படுத்த.. இந்த மோஸ்டர்கள் உபயோகப்படுகின்றன...

வருங்காலங்களில் இது போன்ற மோஷன் போஸ்டர்கள் டிஜிட்டல் பேனர்களாய் பொது இடங்களில் மாட்டப்படலாம்.. அப்போது, பார்ப்பதற்கு 'ஹாரி பார்ட்டர்' படத்தில் வரும் அசையும் புகைப்படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருப்பதுபோல் தோன்றலாம்..

ஏற்கனவே அம்புலியில் இதை முயன்றிருந்தோம்.. தமிழில் வெகு சில படங்களுக்கே இந்த DMP (DIGITAL MOTION POSTER) வெளியானது... சட்டென நினைவுக்கு வருவது... ஏழாம் அறிவு, நண்பன், சமீபத்தில், விடியும்முன் போன்ற படங்களின் Motion Posters'தான்...

இதோ.. .'ஆ' படத்தின் முதல் Motion Poster.. படத்தின் தீம் மியூசிக்கின் பின்னனியுடன்...
#Aaaah Digital Motion Poster 001

'ஆ' படத்தில் வரும் ஐந்து கதைக்கும் தனித்தனியே மோஷன் போ்ஸ்டர் செய்து வெளியிட உத்தேசம்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Monday, May 26, 2014

"ஆ"மயம் 04 - அடுத்த படம் பற்றிய முன்னறிவிப்பு


'ஆ' படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்ததுமே, நண்பர்கள் சிலர், "முதல் படம் 'அம்புலி' அடுத்த படம் 'ஆ' என்று நீங்கள் அகரவரிசைப்படி தலைப்பு வைத்துவருகிறீர்கள்... சூப்பர்..." என்று வாழ்த்தினர்... அப்போதுதான், எங்களுக்கே தெரியாமல், அகர வரிசையில் எங்கள் படங்களின் தலைப்புகள் அமைந்திருப்பது தோன்றியது. ஆனால், உண்மையில் அகரவரிசைப்படி வைக்கவேண்டும் என்று வைக்கவில்லை.. காரணம், ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது என்பதே ஒரு பெரிய வேலை... அதுவும், ஏற்கனவே தலைப்பு வைப்பதற்கு சில எழுதப்படாத விதிகள் சினிமாவில் உண்டு...

1. பாசிடிவ் டைட்டிலாக இருக்க வேண்டும்
2. கதைக்கு சம்மந்தப்பட்ட டைட்டிலாக இருக்க வேண்டும்
3. எல்லா வயது மக்களுக்கும் பிடிக்கும்படியும், வாயில் சுலபமாக நுழையும்படியும் இருக்க வேண்டும்
4. இதில் மூன்றெழுத்து, இரண்டெழுத்து... போன்ற Seasonal Sentiments
5. புரியும் வார்த்தையாக இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் சங்க கால தமிழில் புரியாத வார்த்தையாக இருந்தால் அதற்கு தனியாக விளக்கம் கொடுத்து புரிய வைக்க மெனக்கெட வேண்டும்
6. ஏற்கனவே பலருக்கும் தெரிந்த அல்லது விளம்பரப்படங்களில் வந்த ஃபேமசாக சொற்றொடராக இருத்தல் நலம்...
7. கேளிக்கை வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழில் இருக்க வேண்டும்... இது அனைவருக்கும் பொருந்தாது,  தமிழ்ப்பற்றாளர்கள் விதிவிலக்கு

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தலைப்பை தேடுவதற்குள் தலை சுக்குநூறாய் வெடித்துவிடும். இதில், அகர வரிசை என்ற வரையறைக்குள் சிக்கிக்கொண்டால், மேலும் கஷ்டமாகிவிடும் என்பதால், அடுத்த படத்திற்கு 'இ' என்ற முறையில் தலைப்பு அமையுமா என்று தெரியிவில்லை.. ஆனால், நிச்சயமாக 'இ' என்ற எழுத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது மட்டும் தெரிகிறது...

இதையெல்லாம் தாண்டி ஒரு கூடுதல் சமாச்சாரம் உண்டு, அதாவது, எனது முதல் 'அம்புலி' இல்லை... 'ஓர் இரவு' தான் (இந்த படத்திற்கு முதலில் 'இரா' என்று தலைப்பு வைத்து பிறகு 'ஓர் இரவு' என்று மாற்றியது தனிக்கதை)... 'ஓர் இரவு'-ஐ தொடர்ந்து அகரவரிசைப்படி வைத்திருந்தால், 'ஔ' எழுத்தில்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும்... யோசித்து பாருங்கள் 'அம்புலி' படத்திற்கு 'ஔ'வில் தலைப்பு வைத்திருந்தால் என்ன வைத்திருக்க முடியும்.... இந்த எழுத்தில் ஏதாவது மாற்றுத்தலைப்பு தோன்றினால் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Tuesday, May 20, 2014

"ஆ"மயம் 03 - அதென்ன ஹாரர் ஆந்தாலஜி?


All time classic திருவிளையாடல் படத்தில் சிவபுராணக்கதைகளை ஔவை பாட்டி சொல்ல சொல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிக்கதையா வரும்... தருமியின் கதை ஒன்று, தட்சண் யாகம் நடத்திய கதை ஒன்று, ஹேமநாத பாகவதர் கதை ஒன்று, இப்படி பல கதைகள் வரும்... இதுதான் Anthology Film அல்லது Omnibus Film என்பார்கள்.




இது போன்ற கதைகூறும் பாணி நமது தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பக்திப்படங்களுக்கே இருந்து வந்தது... திருமால் பெருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் இப்படி பல படங்கள் உதாரணத்திற்கு கூறலாம். ஹாரரில் இதை முதல் முயற்சியாக செய்துள்ள படம்தான் 'ஆ'.

ஆந்தாலஜி என்ற வார்த்தைக்கு தமிழ்ச்சொல் என்ன என்று ஒரு நண்பர் கேட்டார்... உண்மையில் எனக்கும் தெரியவில்லை... யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து பகிருங்கள். ஆங்கிலத்தில் உள்ள வார்த்தையைத்தான் தமிழ்ப்படுத்த வேண்டும் என்று இல்லை.. அவர்களே OmniBus Film என்று புதுவார்த்தையில்தான் இதை alternateஆக கூறுகிறார்கள். எனவே, தமிழில் என்னவாக சொல்லலாம் என்று வல்லுனர்கள் பரிந்துரைத்தால், அவர்களுக்கு MY SINCERE THANKS.

பிறமொழிகளில் இந்த திரைக்கதைவடிவம் பலவாறு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக ஹாலிவுட்டில் 80களில் ஆந்தாலஜி ஹாரர் படங்கள் மிகவும் பிரபலம். ஹிந்தியில் Ram Gopal Varma ஆந்தாலஜி ஹாரர் படமான "Darna Mana Hai" என்ற படத்தின் மூலம் ஹாரர் ஆந்தாலஜிக்கு வித்திட்டார், அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும், அதன் இரண்டாம் பாகமாக "Darna Zaroori Hai" என்று வெளியிட்டார். அதுவும் ஹிட்.



அம்புலி 3D படத்திற்கு இயக்குநர் திரு.ஸ்ரீதரன் சாரை, எங்கள் கலையுலக ஆசானாக உணர்ந்து செயல்பட்டோம், அதுபோல் இப்படத்திற்கு எங்கள் ஆசான் இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்தான். காரணம், அவரது திரைப்படங்கள் அத்தனையும் ஒருவகையில் ஆந்தாஜியாகத்தான் இருக்கும். நவராத்திரி, நவரத்தினம், மேலே குறிப்பிட்ட பக்தி படங்கள் என்று பல படங்களில் இதே பாணியை கையாண்டு வெற்றிப்பெற்றவர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்.

Ace Film Director Mr. A. P. Nagarajan (ImageCourtesy thehindu.com)

பொதுவாக ஒரு படத்தை ஃபுல் மீல்ஸ் என்று கூறினால், ஆந்தாலஜியை வெரைட்டி மீல்ஸ் என்று கூறலாம். ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன், நாயகி, வில்லன், க்ளேமேக்ஸ் என்று கொண்டு போவதால், படம் விறுவிறுவென்று ஓடும்.. மேலும் படத்தில் நிறைய திருப்பங்கள், நிறைய சிறப்பம்ச காட்சிகளோடு திரைக்கதை வடிவமைக்கும் வசதி இந்த ஆந்தாலஜி படங்களில் உண்டு. 

50 ஓவர்கள் மேட்ச் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் 20 ஓவர்கள் மேட்ச்சும் ஹிட் ஆனது போல், இந்த ஆந்தாலஜி பாணி படங்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப்பெற்று ஆந்தாலஜி படங்கள் நிறைய வரும் என்ற நம்பிக்கையுடன் 'ஆ'வை உங்கள் முன் விரைவில் சமர்ப்பிக்கின்றோம். 


Signature

Wednesday, May 14, 2014

"ஆ"மயம் 01



'ஆ' திரைப்படம் குறித்து வெளியான செய்திகளையடுத்து, நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்... மிக்க நன்றி..

குறிப்பாக வலையுலக நண்பர்களில், 'மெட்ராஸ்பவன்' சிவகுமார் முதலில் ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்ததோடு படத்தை பற்றிய செய்தியை ஜில்மோரில் எழுதி வெளியிட்டார்... மேலும் அவர் கூறியபோதுதான் உண்மைத்தமிழன் அவர்கள் Tamilcinetalkல் ஏற்கனவே படத்தை பற்றி எழுதிவிட்டது தெரியவந்தது. அவருக்கும் நன்றி... நண்பர் ரஹீம் கஸாலி ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.. அவரோடு ஏற்கனவே இத்திரைப்படத்தை குறித்து ஓர் இரவு ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன்... கதைப்படி, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் அமானுஷ்ய அனுபவங்களை தொகுத்து திரைவடிவம் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து கொண்டிருந்தபோது, மலேசியாவில் இந்த நம்பிக்கைகள் அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டேன், கஸாலி அவர்கள் ஏற்கனவே மலேசியாவில் வசித்தவர் என்பதால், அவருடன் கலந்தாலோசித்து கொண்டிருந்தேன். அந்த உரையாடல நடந்த நாட்களை அழகாய் நினைவுகூர்ந்தார்...

பிறகு, Bingleguy, என்ற நண்பர் எங்கள் குழுவின் நலன்விரும்பி வசந்தராமன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்... படத்தின் பெயர்விளக்கத்தை பற்றி எழுதும்படியும் கேட்டுள்ளார்.. நிச்சயம் எழுதுகிறேன்...

மேலும் சில நண்பர்களிடமிருந்து, கேணிவனத்தை எப்போது திரைப்படமாக எடுப்பீர்கள் என்ற கேள்வியும் எழுந்தது... வழக்கம்போல், முயற்சிகளை கைவிடாமல் மேற்கொண்டு வருகிறேன்... இம்முறை பல வலையுலக நண்பர்கள், வலைப்பூவில் வாழ்த்தாமல், ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்... ஃபேஸ்புக்கில் 'ஆ' படத்தை பற்றிய செய்திகளையும், புகைப்பட பகிர்வுகளையும் தெரிந்துக்கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன்...




இதுவரை நாளிதழ்களிலும், இணையத்திலும் வெளியான 'ஆ' பற்றி செய்திகளின் தொகுப்பினை இப்பதிவில் இணைத்துள்ளேன்...









Signature

Tuesday, April 24, 2012

MicroFilms - "பேச்சி"



Written and Directed by : RAM
Camera : SUJITH SARANG
Music : JAKES BEJOY
Editing & Grading : SREEJITH SARANG
Running Time : 12:56

கோயம்புத்தூரிலுள்ள எனது நண்பர் வசந்த் (Vaz zy)... பதிவரும்கூட... அவ்வப்போது அசத்தலான சிறுகதைகளை போட்டு ஆச்சர்யப்படுத்துவார்.... சில நாட்களுக்கு முன்பு அவரது தளத்தில் 'பேச்சி' என்ற ஒரு சிறுகதையை போட்டிருந்தார். திகில் கதைகளுக்கே உரித்தான தன்மைகளுடன் கூடிய அக்கதை வித்தியாசமாகவும், நேர்த்தியாகவும் (பயமாகவும்தான்..!) இருந்தது.

அக்கதையை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் அவரது நண்பர்குழுவுடன் இணைந்து 'பேச்சி' என்று குறும்பட வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இயக்கியவர் 'ராம்'...

கதைச்சுருக்கம்
வெற்றி, மனோஜ் என்ற இரு நண்பர்கள்... லீவில் வெற்றியின் கிராமத்து பண்ணைவீட்டிலிருந்து ஊருக்கு திரும்பும் போது மலைப்பாதையில் நிகழும் ஒரு திகில் சம்பவமே கதை...

இயல்பான நடிப்பில் சலிப்பும் கோவமும் பயமும் அலட்சியமும் கலந்து சுகாஷ்-ன் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதே போல் அவரது உடன் வரும் நண்பராய் மனோஜ்-ம் சரியாகவே செய்திருக்கிறார். நடுவில் ஒரு குருட்டுப் பெண்ணின் அண்ணனாய் வரும் கதாபாத்திரத்தின் இண்ட்ரோ கொஞ்சம் Cliche... அதை மட்டும் வேறுவிதமாய் காட்டியிருக்கலாமோ என்று தோன்றியது...

சுஜித் சாரங்கின் கேமிராவில், திகில் படத்திற்கு உண்டான எல்லாக் கோணங்களிலும் படம் மிளிர்கிறது. அதுவும் மலைப்பாதையில் நடக்கும் கதை என்பதால் அந்த திகிலான ட்ராவல் அனுபவம் பார்ப்பவரை தொற்றிக்கொள்ளும்படி கோணங்கள் வைத்திருப்பதும் பாராட்டுக்குறியது. அந்த காட்சிகளுக்கு ஏற்ற கிரேடிங்க-ஐ நேர்த்தியாய் கையாண்டிருப்பது ஸ்ரீஜித் சாரங்கின் கைவண்ணம்...

இக்குறும்படம் பார்ப்பதற்கு ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படத்திற்கான ஓப்பனிங் சீன் போன்ற இம்பாக்ட் ஏற்படுத்துவதை நிச்சயம் உணர முடியும்.

படிக்கும்போது என் அகக்கண்ணில் நான் பார்த்த வடிவத்தை புறக்கண்ணில் காணக்கிடைக்க வைத்த 'பேச்சி' குறும்பட குழுவினர்களுக்கு என் பாராட்டுக்கள்.

பேச்சி - ''மலைப்பாதை மர்மம்...''



போனஸ் செய்தி : இப்படத்தில் மந்திரவாதி ஒருவரை பற்றி சொல்லும்போது ஒருவர் திரையை உற்றுப்பார்த்துக்கொண்டு உறுமி அடித்துக் கொண்டிருப்பது போல் நடித்திருப்பார். அவர்தான் 'பேச்சி' சிறுகதை எழுதியவரும் எனது நண்பருமான 'வசந்த்' என்கிற Vaz zy... அவர் எழுதிய பேச்சி சிறுகதையை படிக்க இங்கே க்ளிக்கவும்... அந்த சிறுகதையில் இன்னும் பயங்கரமான க்ளைமேக்ஸ்...

உங்களுக்கு இப்படம் பிடித்திருந்தால்...
உங்கள் விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் வழக்கம்போல் வாரிவழங்கி... இக்குழுவினரை ஊக்குவிப்பதை நாம் இப்படத்தை பார்ப்பதற்கு வழங்கும் சன்மானமாய் நினைப்போம். நன்றி...!
-----------------------------------------------------------------

குறும்படத்திற்கு ஹாரர் அல்லது த்ரில்லர் ஜானர் வகை கதைகள் நல்லதொரு தேர்வு என்று நான் நினைக்கிறேன். காரணம், ஒரு முழு திரைப்படத்தின் தாக்கத்தை ஒரு சில நிமிடங்களில் ஏற்படுத்துவதற்கு த்ரில்லர் வகை கதைகள் நன்றாய் உதவும். மேலும் டெக்னிக்கல் விஷயங்களின் அதீத பங்களிப்புமிருப்பதால், ஒட்டுமொத்த குழுவினரின் நிபுணத்துவமும் பார்வையாளர்களுக்கு பரிச்சயப்படும். இது போல் உங்களுக்கு பிடித்த வித்தியாசமான குறும்படங்களையும் பரிந்துரை செய்யவும்.


Signature

Popular Posts