Saturday, December 22, 2012

3D சினிமாவில் புதிய தொழில்நுட்பம் :HIGH FRAME RATE

ஒரு ரசிகர், திரைப்படம் பார்க்கும்போது, தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து பார்த்தாலேயொழிய அந்த திரைப்படம் வெற்றிப்பெறாது...

இந்த 'மெய்மறந்து' என்னும் உணர்வை கொடுக்க, சினிமாவின் ஆதிகாலத்தில் பிம்பங்கள் உதவி வந்தது... பிறகு சத்தம், இசை, ஜாலம், வண்ணம், அதிலேயே துல்லியம் என்று மாறி மாறி பரிணமித்து வந்த சினிமாவில், சில ஆண்டுகளுக்கு முன் 3D என்னும் தொழில்நுட்பம் மேலும் ஒரு மைல்கல்-ஆக அமைந்தது... அந்த வரிசையில் தற்போது, HIGH FRAME RATE 3D (சுருக்கமாக HFR 3D) என்னும் மேலுமொரு தொழில்நுட்பம் தலைதூக்கியுள்ளது.

இதை முதலில் முயன்ற பெருமை, கிங்-காங், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற வெற்றித் திரைப்படங்களின் இயக்குனர் திரு.பீட்டர் ஜாக்ஸன் அவர்களை சேர்ந்துள்ளது...

இவர் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட THE HOBBIT திரைப்படம் HFR3Dயில் வெளியிட்டுள்ளார்.


இந்த HFRஐப் தெரிந்துக் கொள்வதற்கு முன் FRAMES PER SECOND (FPS) பற்றி ஒரு சிறு விளக்கம் இதோ...

ஒருவர் கை அசைப்பது போல் ஒரு வீடியோ இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்... அந்த கை அசைக்கப்படுவதை 24 ஃபோட்டோக்களாக எடுத்து, அந்த 24 ஃபோட்டோக்களையும் ஒரு நொடியில் சேர்த்து ஓட்டிக்காட்டும்பொழுது, அந்த கை அசைவது போல் அந்த ஒரு விநாடியில் தெரியும்... இப்படியே ஒவ்வொரு விநாடிக்கும் 24 ஃபோட்டோக்கள் ப்ரொஜெக்டரில் ஓடும்... இந்த ஃபோட்டோக்களை FRAMES என்று அழைப்பார்கள்... இதை, 24FPS (Frames Per Second) என்று சொல்வார்கள்... ஆக ஒவ்வொரு திரைப்படமும் 24FPS என்ற விகித்ததில்தான் அகில உலகிலும் திரையிடப்பட்டு வந்தது... (டெலிவிஷனுக்கு தனிக்கணக்கு..)

தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த HFR மூலம் ஒரு விநாடிக்கு 48 FRAMEகள் ஓடும்... 24ல் கிடைக்கும் துல்லியத்தைக் காட்டிலும் மேலும் துல்லியம் காட்ட விழையும் ஒரு புது தொழில்நுட்பம்.

ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் ஒரு குறைபாடு இருக்கிறது... சினிமா என்பது ஒரு நவீன நிழல் நாடகம்.. ஒரு 'மாயை' என்றுகூட சொல்லலாம். அந்த மாயையில் படம் பார்க்கும் ரசிகர்களை ஒரு டிரான்ஸ் நிலைக்கு கொண்டு சென்று கதை கூறி அவர்களை எண்டர்டெயின் செய்ய வேண்டும். அந்த மாயையிலிருந்து விலகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால், அவர்களால் தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து போக முடியாது.

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த 48FPSல் காட்டப்படும் துல்லியம் சிறு சிறு துரும்புகளின் நிஜ வண்ணத்தை காட்டிவிடுவதால், ஒரு விஷயத்தை பொய் என்று ரசிகர்களை நம்பவைப்பது சிரமமாகிவிடுகிறது. இப்படியிருக்கும்போது, ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட அட்டைக்கத்தியை தங்கம் என்று நம்பவைக்க, திரையில் முடியாமல் போகிறது. பிறகு எப்படி மக்கள் படத்தில் லயிக்க முடியும்?

ஈஸ்ட்மேன் கலரில் வந்த சரித்திர படங்களுக்கும் தற்போது எடுக்கப்படும் சரித்திர படங்களையும் பார்க்கும்போது, ஈஸ்ட்மென் கலரில் இருக்கும் சரித்திர நம்பகத்தன்மை தற்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. (உதாரணம், கர்ணன் படத்தின் சரித்திரத்தன்மையையும், பொன்னர் சங்கர் படத்தின் சரித்திரத்தன்மை.. நான் படத்தின் தரத்தை ஒப்பிட்டு கூறவில்லை... தொழில்நுட்பத்தை மட்டுமே கூறுகிறேன்)

நான் 48FPSயில்  வெளியாகியிருக்கும் THE HOBBIT திரைப்படத்தை சத்தியம் சினிமாஸ்-ல் HFR3Dயில்தான் பார்த்தேன்... இந்த தொழில்நுட்பம் பிடித்துப்போனால் இதை நான் இயக்கவிருக்கும் அடுத்த 3D படத்தில் உபயோகிக்கலாம் என்ற ஆசைதான் காரணம்... ஆனால், இந்த HFR3Dயின் விளைவு, படம் பார்க்கும்போது சற்றே கவனச்சிதறலாய்த்தான் எனக்கும் எனது நண்பர்களுக்கும் பட்டது...

இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், இந்த தொழில்நுட்பத்தை ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டபோது, சில பத்திரிகையாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் இந்த தொழில்நுட்பம் கவனச்சிதறலாய் பட்டுள்ளது... எனவே, இன்னமும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காத நிலையில்தான் இந்த HFR3D இருக்கிறது. ஆனால், இதை இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன் பரிணாமம் என்றே கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பம் பழக மக்களுக்கு நிச்சயம் அவகாசம் தேவைப்படும் என்றும், இந்த முறையில் 3D படம் பார்க்கும்போது, கண்களில் ஏற்படும் சிரமம் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் தேவையோ என்றுகூட குழப்பம் ஏற்படுகிறது...

நீங்கள் இந்த படத்தை HFR3D தொழில்நுட்பத்தில் பார்த்திருக்கிறீர்களென்றால், நிச்சயம் உங்கள் கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்...




Signature

Wednesday, December 12, 2012

300 ரூபாய்க்கு டைம் டிராவல் [குட்டிக்கதை]


இரண்டு மாதமாய் சேர்த்து வைத்திருந்த எனது பாக்கெட் மணி மொத்தம் 300 
ரூபாய் சேர்ந்திருந்தது. 5ஆவது படிக்கும் எனக்குத்தான் தெரியும் 300 ரூபாய் சேர்த்து வைப்பது எவ்வளவு சிரமம் என்று...

அதை என் தெருவில் வசிக்கும் 'வாட்சு கடை' தாத்தாவிடம் கொடுத்தேன்.

அவர் 300 ரூபாயை 100 தடவை எண்ணிவிட்டு தன் கடைக்குள் அனுமதித்தார்

அங்கிருந்த சின்ன P.C.O. பூத் போன்ற அறைக்குள் நுழைந்தேன். மேலே இருந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேவில் ‘22, நவம்பர்  2012’ என்றிருந்தது

உள்ளிருந்தபடி திரும்பி பார்த்து கேட்டேன்...

'தாத்தா... நிச்சயமா நீ சொன்னது நடக்குமா தாத்தா..? முப்பது நாள் நான் முன் நோக்கி போய்டுவேனா..?'

'சந்தேகமா..?'

'இல்ல.. 300 ரூபாய்க்கு டைம் டிராவல் ரொம்ப சீப்-ஆ இருக்கே... அதான்..'

'எனக்கு இப்போதைய தேவை 300 ரூபா.. அது உனக்கு சீப்.. ஆனா எனக்கு அது ரொம்ப காஸ்ட்லி..’ என்றபடி, வாட்சு கடை தாத்தா  பூத்திற்குள் அனுப்பி கதவை சாத்திக் கொண்டார்

பிறகு, வெளியே ஏதேதோ சத்தம் கேட்டது...

திடீரென்று பூத்திற்குள், மின்னல் போல் வெளிச்சம் அந்த கடையெங்கும் நிரம்பி வழிந்தது.. பயந்து கண்களை மூடிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் கண்திறந்து பார்த்தபோது... அந்த பூத்தின் எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேயில்

21, டிசம்பர் 2012 என்றிருந்தது

ஆவலுடன் பூத் கதவை திறந்தேன்...

பூத்தின் வெளியே கடல்நீர்... சுற்றிலும் எங்கு பார்த்தாலும் கடல் நீர்... என் வீடு... தெரு.. ஏரியா.. எல்லாம் கடல் நீர் மூடியிருந்தது... என் பூத் எங்கோ அடித்துக் கொண்டு வரப்பட்டு கொஞ்சமாய்.. மிக கொஞ்சமாய் இருந்த நிலப்பரப்பில் நின்றுக் கொண்டிருந்தேன்... சுற்றி யாருமேயில்லை... மிதந்து வந்த செய்தித்தாள் பேப்பரில் கீழ்கண்ட வாசகம்

‘நாளை 21 டிசம்பர் 2012 எந்த ஆபத்தும் இல்லை - புயலோ.. .சுனாமியோ வாய்ப்பே இல்லை... வானிலை ஆராய்ச்சி மையம்’

Image Courtesy : http://london2005.medialint.com/


Signature

Thursday, December 06, 2012

Pirates of the பெட்ரோலியம்



டிஸ்கி : கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் நான் கண்ணார கண்டு அனுபவப்பட்டு எனது நண்பர்களிடம் பகிர்ந்த போது, அவர்களும் SAME BLOOD..! என்று கூறி என்னுடன் பகிர்ந்து கொண்ட  விஷயங்களின் தொகுப்பு... இதை பகிர்ந்து கொள்வதால் மற்றவர்களையும் உஷார் படுத்தலாமே என்று எழுதியது...

  • இது பெட்ரோல் விலையேற்றத்தை பற்றி குறிப்பிடும் பதிவல்ல...
  • உலக சந்தையில் பெட்ரோலை வைத்து நடத்தப்படும் உலக அரசியல் பற்றி குறிப்பிடும் பதிவும் அல்ல...
  • நமக்கு மிக அருகில் இருக்கும் பல பெட்ரோல் வங்கிகளில், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைப் பற்றி குறிப்பிடும் பதிவு...

'100 ரூபாக்கு போடுப்பா..' என்று 100 ரூபாய் தாளோடு வெயிலிலும், புழுதியிலும் வாடி வதங்கி வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து லாவகமாக ஏமாற்றும் PETROL GUN ஊழியர்ள் சிலரைத்தான் (அனைவரும் அல்ல..) இதில் PIRATES என்று குறிப்பிட்டிருக்கிறேன்...

பெட்ரோல் வங்கிகளில் வழக்கமாய் மீட்டரை வைத்து 10, 20 என்று திருடுவார்கள்... இது அனைவரும் அறிந்ததே... ஆனால் தற்போது நடைபெறும் நூதன திருட்டுகளின் மூலம், 10, 20 ரூபாய்க்குத்தான் பெட்ரோலே போடுகிறார்கள் மீதி பணம் முழுவதையும் ஏமாற்றுகிறார்கள். நான் 2006ஆம் ஆண்டு வங்கியில் லோன் போட்டு புது பைக் வாங்கிய சமயம் மேத்தா நகரில் SKYWALKக்கு அடுத்துள்ள இடதுபுற பெட்ரோல் பங்க்கில் 100 ரூபாய் ஏமாற்றப்பட்டேன். அந்த சம்பவத்தை என் நண்பர்களுடன் பகிர, பலரும் இதே போல பல பங்க்குகளில் ஏமாற்றப்பட்டிருப்பதாக கூறி 'ரெட் அலர்ட் மார்க்' செய்த பங்க்குகளை தெரிவித்தார்கள்... கிட்டத்தட்ட பல பங்க்குகள் அந்த லிஸ்ட்டில் உள்ளது தெரியவந்தது... அன்றிலிருந்து இன்றுவரை காராக இருந்தாலும், டூ வீலராக இருந்தாலும், மீட்டரில் ZERO காட்டாமல் பெட்ரோல் போட்டுக்கொள்வதே இல்லை...

இது எப்படி நடக்கிறது..? ஒரு உதாரணம், நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வந்தால், ஏற்கனவே உங்களுக்கு முன்னாலிருப்பவருக்கு 50 ரூபாய் போட்டிருந்தால், மீட்டரை RESET செய்யாமல் உங்களிடம் பேச்சு கொடுத்தபடியே 51ல் ஆரம்பித்து 100 ரூபாய்க்கு போடுவார்கள். இதன்மூலம், பாதிக்கு பாதி அவர்களுக்கு லாபம்... இது அந்த பெட்ரோல் வங்கி முதலாளிக்கும் போய் சேருவதில்லை... அவர்களே பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

மோசடி ஊழியர்கள், வாடிக்கையாளரை ஏமாற்றும் வழிமுறைகள்

பொதுவாய் சில பெட்ரோல் வங்கியில் ஊழியர்கள் கேப் அணிந்திருப்பார்கள்.... அந்த கேப்-ஐ வைத்து உங்களுக்கு முன்னால், சரியாக மீட்டரை மறைத்தபடி நின்று கொள்வார்கள். நீங்கள் அப்படி இப்படி அசைந்து கொடுத்து மீட்டரை பார்ப்பதற்குள் பெட்ரோல் போட ஆரம்பித்து விடுவார்கள்.

சில இடத்தில் PETROL GUN-ன் கருப்பு கேபிள் அந்த மீட்டரின் குறுக்கே ஓடி, மீட்டரை பார்க்க முடியாதபடி மறைத்திருக்கும்... இதனால், தோராயமாகத்தான் உங்களால் மீட்டரை கணிக்க முடியும்.

இன்னும் சில இடத்தில் மீட்டர் RESET ஆவது போல் பீப் சவுண்ட் கொடுக்கும் ஆனால் மீட்டர் RESET  ஆகாது... 'என்ன ZERO வரலை..?' என்று கேள்வி கேட்டால், மீண்டும் சரியாக RESET  செய்துவிட்டு, 'மீட்டர் பிரச்சினை சார்' என்று கூலாக பதில் கொடுப்பார்கள்...

இரண்டு அல்லது மூன்று ஊழியர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் நின்றிருந்தால்... உஷார்.... நிச்சயம் ஏதோ தப்பு நடக்கவிருக்கிறது என்பதை கவனித்து கொண்டு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

ஒருவர் PETROL GUNஐ டேங்க்கிற்குள் செலுத்தியதும் RESET செய்வது போல் பாவ்லா காட்டுவார்... அப்போது இன்னொருவர் வந்து உங்களிடம் காசு கேட்பார்.. நீங்கள் உடனே காசு கொடுத்துவிட்டால் சில்லறை கொடுங்கள்... ரவுண்டாக போட்டுக் கொள்ளுங்கள் என்று பேச்சை மாற்றுவார்... அல்லது உங்கள் வண்டியை புகழ்ந்து பேசியபடி நலம் விசாரிப்பார்.. இல்லையெனில், உங்கள் பைக்கில் பெட்ரோல் KNOBஐ சுட்டிக்காட்டி, 'PETROL KNOB திறந்தேயிருக்கு பாருங்க சார்.. அதை மூடிடுங்க..' என்று கூறுவார்.. வாடிக்கையாளரும் ஓரிரு செகண்ட் அப்படி இப்படி என்று கவனம் சிதறும் அந்த நொடிப்பொழுதில் கவனம் கலையும். இப்படியாக விதவிதமாய் பேசி உங்கள் கவனத்தை திசை மாற்றி... நீங்கள் சுதாரிப்பதற்குள் மீட்டர் ZERO வராமலே ஓட ஆரம்பித்துவிடும்...

ஒரு சில இடங்களில் ZERO பார்த்துவிட்டு பெட்ரோல் போட ஆரம்பித்தாலும் உஷாராக இருக்க வேண்டும்... 200 ரூபாய்க்கு நீங்கள் பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்களென்றால்... 40 ரூபாய்க்கு மீட்டர் ஓடிக்கொண்டிருக்கும்போது, அருகிலிருப்பவர் உங்கள் கவனம் கலைப்பார்... பெட்ரோல் போடுபவர் உடனே மீட்டரை மீண்டும் ZEROஆக்கிவிட்டு உங்கள் வரிசையில் நின்றிருக்கும் அடுத்தவரை அழைத்துவிடுவார்... நீங்களும் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாகிவிட்டது என்று நினைத்து நகர்ந்து விடுவீர்கள்... ஆனால், 40 ரூபாய்க்கான பெட்ரோல்தான் உங்கள் வண்டியில் இருக்கும்...

பைக்கில் அடிக்கும் கொள்ளைகள் இப்படியென்றால் இதில் அடுத்த கட்டம், காரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் கொள்ளை அடிப்பது... காரணம், இதில் தொகை பெரியது... அதுவும் காரில் வருபவர்கள் காரிலிருந்து இறங்காமல் பெரும்பாலும் மீட்டரிலிருந்து சற்று தொலைவிலிருந்தபடி பெட்ரோல் போடுவதால் ஏமாற்றுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகிறது.
காரில் பெட்ரோல் போட வருபவர்களிடம் 'மெம்பர்ஷிப் ப்ளான், ஆயில் சேன்ஞ் பற்றி பேசி கவனத்தை கலைக்க முயல்வார்கள்.

காரிலிருந்து பெட்ரோல் போடும்போது, பெரும்பாலும் இறங்கி அருகில் சென்று மீட்டரை கண்காணித்தபடி போடுவது மிக நல்லது...

உங்கள் வண்டியில் யாரிருந்தாலும், பெட்ரோல் போட்டுவிட்டு வரும்வரை பேசாமல் இருக்கும்படி கூறிவிடுவது நல்லது... பேசினால் கவனம் கலையலாம்..

இப்படி இவர்கள் கொள்ளையடித்து சம்பாதிக்கும் பணம் அந்தந்த பெட்ரோல் வங்கியின் முதலாளிக்கும் போய் சேர்வதில்லை.. இதை இந்த மோசடி ஊழியர்கள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி வைத்து நடத்துவதால், எவ்வளவு ரூபாய் ஏமாற்றியிருக்கிறோம் என்ற கணக்கை அவரவருக்கு தெரிந்த சங்கேத பாஷையில் குறித்துக் கொள்கிறார்கள். அன்றைய நாள் இறுதியில் கலெக்ஷன் கணக்கெடுக்கும்போது, கொள்ளையடித்த பணத்தை தனியாய் எடுத்து பிரித்துக் கொள்கிறார்கள்.

பெட்ரோல் விலை அதிகம் என்று தெரிந்து வருத்தபடும் நாம், இவ்வளவு அதிக விலைக்கு நாம் போட்டுக் கொள்ளும் பெட்ரோல் முழுவதுமாய் நமக்கு வந்து சேருவதில்லும் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வளவு கரெப்ஷன் இருந்தும். இன்றும் சில பெட்ரோல் வங்கிகளில் நாம் கவனக்குறைவாக இருந்தாலும் "சார் ZERO பாத்துக்கோங்க சார்.." என்று நம்மை அழைத்து மீட்டரை காண்பிக்கும் அந்த நல்ல நபர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...


Signature

Popular Posts