Sunday, March 10, 2013

துபாய் பயணம் #1


 முதல் பயணம்

ஐக்கிய அரபு அமீரகத்தில்  இரண்டாம் பெரிய நகரமான துபாயில் எங்கள் நண்பரும் UTS-ன் தலைவருமான  திரு.ரமேஷ் விஸ்வநாதன் அவரிடமிருந்து ஒரு இமெயில்... அதில், UAE தமிழ்ச்சங்கம் நடத்தும் குறும்படவிழாவிற்கு நடுவராய் கலந்துக் கொள்ள நண்பர் ஹரியையும் என்னையும்  அன்போடு அழைத்திருந்தார்.

உள்ளூரில் சில கல்லூரிகளுக்கு நடுவராய் சென்று நானும் நண்பர் ஹரியும் குறும்படவிழாக்களில் கலந்து கொண்டுள்ளோம் என்றாலும், வெளியூருக்கு சென்று கலந்து கொள்ளும் முதல் குறும்படவிழா என்பதாலும்... வெளியூரில் வசிக்கும் தமிழ் நண்பர்களை சந்திக்கும்  ஒரு அரிய வாய்ப்பாய் இது அமையும் என்பதாலும் உடனே எங்கள் சம்மதத்தை குறிப்பிட்டு பதில் அனுப்பினோம்.

துபாய் எனக்கு இதுதான் முதல் விசிட்..!

துபாய்ல எங்க இருக்கே..? ஷார்ஜாவா..? அபுதாபியா..? என்று வரிசையாய் நகைச்சுவை நடிகர் வடிவேல்  சொன்ன ஊர்களை நேரில் பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்தது.. ஆனால், துபாய் பயணம் இந்தமுறை சற்று அவசரமாகவே அமைந்தது... காரணம் கோயம்புத்தூரில் அம்புலி திரைப்பட தயாரிப்பாளரின் கல்லூரியில் நடந்த ஒரு கலைநிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்த்தால், அங்கிருந்து சென்னை வந்த்துமே, அன்று மாலையே துபாய்க்கு புறப்பட வேண்டிய கட்டாயத்தில் அடித்து பிடித்து பேக்கிங் செய்துகொண்டு ஏர்போட்டுக்கு கிளம்பினோம்...

பிப்ரவரி 8ஆம் தேதி அதிகாலை 3.40 மணி விமானத்தில் பயணம் இனிதே துவங்கியது...


ஷார்ஜா விமான நிலையம் அதிகாலை 6.30 மணியளவில் எங்களை தரையிறக்கிக் கொண்டது.

சென்னையை ஒப்பிடுகையில் ஷார்ஜா விமான நிலையம் மிகவும் சிறியது. உள்ளே ஒரு இடத்தில் எங்கள் சக பயணிகளில் எங்களைப்போல் முதலில் வருபவர்களின் விசாவில் கண்களை ஸ்கேன் செய்து சீல் செய்து கொள்ளும் வரிசையில் நின்றிருந்தனர். நாங்களும் நின்றோம்.... கவுண்ட்டரில் ஷேக் உடை அணிந்த விசா இன்ஸ்பெக்டர்.. கண்களை ஸ்கேன் செய்யவேண்டும் என்று சொன்னார்.. நான் கண்களை கேமிராவில் காட்டியதும்... MORE (இன்னமும் கண்களை அகலமாய் திற) என்றார்.. திறந்தேன்.. MORE (மேலும் அகலமாய் திற..) என்றார்... என்னால் முடிந்தவரை அகலமாய் திறந்தேன்... இருந்தும் கூட...அவர் முகத்தில் திருப்தியே இல்லை..! வேண்டாவெறுப்பாய் 'ப்ச் 'என்று அலுத்துக் கொண்டே விசாவில் சீல் போட்டுக் கொடுத்தார்... இதற்குமேல் கண்ணை தறிக்கவேண்டுமானால், நான் கண்களை கழட்டி அவர் கையில்தான் கொடுக்க வேண்டும்.

ஒருவழியாக ஃபார்மாலிட்டிக்களை முடித்துக் கொண்டு விமான நிலையத்தைவிட்டு வெளியேறியதும். அழகான தமிழில் 'வணக்கம்' என்று எங்களை இருவர் வரவேற்றனர். அவர்கள் UAE தமிழ் சங்கத்தின் சார்பாய் எங்களை அழைத்து செல்ல வந்திருந்த திரு.ரமணி மற்றும் திரு.கணேசன் என்ற இரு நண்பர்கள்.

பரஸ்பரம் விசாரித்துக் கொண்டும் ஷார்ஜாவின் இளம் காலை வெயிலை ரசித்தபடியும் வழியில் ஒரு பெட்ரோல் பங்க்-லிருக்கும் இன்-அவுட் கடையில் 'டீ' குடித்தபடி சற்றே விஸ்வரூபத்தை விவாதித்தோம். அவர்களது ஊரில், விஸ்வரூபத்திற்கு நிரந்தர தடை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும், நிறைய படங்கள் அங்கே ரிலீஸ் ஆகாததால் டவுண்லோடுதான் ஒரே ஆப்ஷன் என்பதையும் தெரிவித்தனர்.  மேலும், 'நாங்கள் அம்புலியையே டவுண்லோட் செய்துதான் பார்த்தோம்... மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றும் கூறினர்... 

திரு. ரமணி அவர்களை இதற்கு முன்னர் நான் எங்கேயோ பார்த்தது போலவே இருந்தது...  உடன் வந்திருந்த திரு.கணேசன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தார்... அதற்கு காரணம், அவரது பெற்றோர்கள் நாளை துபாய் வரவிருப்பதாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்...

பொதுவாகவே, எல்லா வண்டிகளும் 120 கி.மீ. வேகத்தில் சரமாரியாக கடந்து கொண்டிருந்தது... 150 தாண்டினால், ரோட்டோரமாய் ஆங்காங்கே இருக்கும் கேமிராக்கள் படம் பிடித்து காட்டிக் கொடுத்துவிடுமாம்... அபராதத் தொகை மிக அதிகம் என்றார்கள்.

அடுத்ததாய், எங்களை கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்து சென்று, சற்றே ரிஃப்ரெஷ் ஆனதும், அருகிலிருந்த 'சங்கீதா ரெஸ்டாரெண்டி'ற்கு அழைத்து சென்றனர்.  நம்மூர் சுவையிலேயே இட்லியும், தோசையும் சுவைத்தோம். தோசை மட்டும் சுமார்.. மீண்டும் கெஸ்ட் ஹவுஸில் எங்களை விட்டுவிட்டு ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு சென்றனர்... உண்மையிலேயே களைப்பு ஆக்கிரமித்ததால்  ரூமிலிருந்தபடி ஜன்னல்வழியே சில ஃபோட்டோக்களை மட்டும் க்ளிக்கிக் கொண்டு படுத்துறங்கிவிட்டோம்...

ஜன்னல்வழியே எடுத்த ஃபோட்டோ

சரியாக மதியம் 2 மணிக்கு மீண்டும் டெலிஃபோன் ஒலித்தது... WAKEUP CALL...

(தொடரும்)


Signature

Popular Posts