Sunday, February 13, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 1

முதல் நாள் எங்களது தயாரிப்பாளர் திரு. KTVR லோகநாதன் சார் அவர்களின் கல்லூரியில் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஒரு சின்ன விழாவோடு படப்பிடிப்பு துவங்கியது. வந்திருந்த அனைவரும் வாழ்த்தி படப்பிடிப்பை துவங்கி வைத்தனர்.

ஷூட்டிங் என்றாலே வேடிக்கை பார்ப்பவர் கூட்டம் அதிகமிருக்கும், அதுவும் 3D படம் என்றதும் இன்னும் ஆர்வமாக மானிட்டர் அருகில் வந்து பலரும் சூழ்ந்து கொண்டு மானிட்டரை எட்டிப் பார்க்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்த செக்யூரிட்டிக்களை போட்டால், அவர்களும் சேர்ந்து கொண்டு மானிட்டரை ஆர்வமாக பார்க்கின்றனர். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் மானிட்டரில் தெரியும் பிம்பம் போதையில்  பார்ப்பது போல் இரண்டிரண்டாக தெரியும். பிரத்யேக கண்ணாடி அணிந்து பார்த்தால் மட்டுமே அவை 3D எஃபெக்ட் தரும். நானும் ஹரியும் கண்ணாடிகளை அணிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, பின்னால் நிற்கும் பலரும் எங்களிடம் வந்து கண்ணாடியை போட்டு பார்க்க ஆர்வம் தெரிவிக்கின்றனர்.நாங்கள் இப்படத்தை குழந்தைகள் படமாக எடுத்துவிடக்கூடாது என்ற முடிவில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இன்னமும் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் பெரியவர்களை காட்டிலும் பல குழந்தைகள்தான் ஆர்வமாக பார்க்கிறார்கள்.

கல்லூரியில் ஒரு காதல் காட்சி படம்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன், 'அங்கிள்... அங்கிள்...? இது 3D படமா..?' என்று ஆர்வத்துடன் கண்கள் விரித்து கேட்டது மிகவும் மகிழ்ச்சியளித்தது, ஆனால் கூடவே எங்கள் இருவரது (நானும் ஹரியும்) மனதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது ஏன் என்று பதிவின் முடிவில் சொல்கிறேன்.

எங்கள் படத்தின் கதாநாயகி சனம்
 
, படப்பிடிப்பில் இடைவேளையின்போது ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதை ஒரு நிருபர் படம் பிடித்து கொண்டிருந்தார். 'சாப்பிடும்போது படம் எடுக்க வேண்டாமே ப்ளீஸ்' என்று அவர் சொல்லி அந்த நிருபரை அனுப்பிவிட்டார். ஆனால், அன்று மாலையே, அவர் ஒரு கையில் ஆப்பிளுடன் பார்த்து சிரித்து கொண்டிருப்பது போன்ற அந்த புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியாகிவிட்டது, அனைவரும், கையில் ஆப்பிள் வைத்து கொண்டு அவர் முன்னே சென்று நின்று, அந்த புகைப்படத்தை காட்டி, அவரை வெறுப்பேற்றி கொண்டிருந்தோம்.


நேற்று ஒரு வெள்ளைக்காரர், ஒரு பெண்ணைப் பார்த்து 'நீ கேர்ப்பமாயிருக்கே..!'  (நீ கர்ப்பமாயிருக்கே) என்று சொல்ல வேண்டிய காட்சி, ஆனால் அவர் அந்த பெண்ணுக்கு அருகில் நிற்கும் ஒரு ஆணிடம் 'நீ கேர்ப்பமாயிருக்கே..' என்று கூற, அவர் பதறியடித்து 'நானில்ல... நானில்ல..' என்று அலறவும். கூடியிருந்த குழு மொத்தமும் சிரித்துவிட்டது.

நேற்று திரு. பாலா சிங் அவர்கள், தான் நடித்து முடித்த காட்சியை 3D-யில் கண்டுகளித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உடன் வந்திருந்த வெள்ளைக்கார துரையும் இப்படத்தை 'அங்கு அனுப்புங்கள் இங்கு அனுப்புங்கள்' என்று ஏகத்துக்கும் பரிந்துரைத்து கொண்டிருந்தது மகிழ்ச்சியளித்தது..!

Out of Topic
கேணிவனத்திற்கு தகவல்களை சேகரித்த விவரங்களை எழுதுவதாக கூறியிருந்தேன். அதை எழுதுவதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை..! ஆனால் கண்டிப்பாக அந்த விவரங்களை 'கேணிவனம்' புத்தக வடிவில் வரும்போது இணைத்து எழுதுகிறேன். பிறகு பதிவிலும் பதிகிறேன்.

(அந்த சிறுவன் கேட்டதில் மகிழ்ச்சி + அதிர்ச்சி என்று சொல்லியிருந்தேன்.
மகி்ழ்ச்சி = அவன் ஆர்வத்துடன் கண்கள் விரித்து கேட்டது.
அதிர்ச்சி = 'அங்கிள்' என்று அழைத்தது.)

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!

ஹரீஷ் நாராயண்

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவம் 2-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்


Signature

Saturday, February 05, 2011

"அம்புலி - 3D" A Steroscopic Thriller : எனது அடுத்த திரைப்படம்
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இன்று உங்களுடன் ஒரு நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று முதல்... "அம்புலி" என்ற 3D திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். 20 வருடத்திற்கு  பிறகு வரும் இந்த 3D திரைப்படத்தை குழந்தைகள் படம் போலல்லாமல், வளர்ந்த குழந்தைகளும் பார்க்கும் விதத்தில் படமாக்கவிருக்கிறோம்.

இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, திரு. ரா. பார்த்திபன் அவர்கள், இதில் ஒரு பெரும்பங்காற்ற இருக்கிறார்.

KTVR CREATIVE REELS சார்பில் திரு. V. LOGANATHAN அவர்கள் தயாரிக்கிறார். நானும் எனது நண்பர் ஹரி ஷங்கரும் இப்படத்தை இயக்குகிறோம். எங்களது முந்தைய திரைப்படத்தை வித்தியாசமாக படம்பிடித்து கொடுத்த நண்பர் சதீஷ். G இப்படத்தின் ஒளிப்பதிவாளர். 

நீண்ட நாட்களாக பதிவை எழுத முடியவில்லையே என்றிருந்தேன். இனி, 'அம்புலி' படப்பிடிப்பில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Popular Posts