Monday, March 29, 2010

நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் - 4 [தொடர்கதை]




பாகம் - 4
இறுதி பாகம்

ONE MESSAGE(S) RECIEVEDக்கு அருகிலிருக்கும் ரீட் பட்டனை டச் செய்தான்.

நெ. 23, ட்ரீம்வே நகர்,
புறவழிச்சாலை,
ஸ்ரீபெரும்பத்தூர் ஹைவே

என்றிருந்தது. ரகு ஒன்றும் புரியாமல் அதையேப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று செல்ஃபோன் ஒலித்து.

நிரூபா காலிங்....

பயமாக இருந்தாலும், விடிந்துவிட்ட ஒரு தைரியத்தில் ஃபோனை எடுத்தான்.

மறுபக்கம் அழுகுரல் கேட்டது.

'..லோ..' என்றான்.

அழுகுரல் நின்று, திடீரென்று ஒரு மாதிரியான பயமுறுத்தும் குரல் கேட்டது.

'டேய், ஏண்டா ஃபோனை எடுக்கலை... என்னை அதுக்குள்ள பிடிக்காம போயிடுச்சா உனக்கு..?'

'நீ...நீ... செத்துட்டே..'

'அதனால என்ன..? உனக்கு உண்மையிலேயே என்னைப் பிடிச்சிருந்தா, நாம ஒண்ணு சேரலாம்..'

'...தென்ன... முட்டாள்தனம்..'

'எதுடா முட்டாள்தனம், நீதானே முதல்லே எங்கிட்ட லவ் யூன்னு சொன்னே..?'

'..மா..'

'அப்ப நீ என்கிட்ட வந்துதான் ஆகணும்..'

'மு..முடியாது..'

'நீ வரலைன்னா, நான் உன்னை விடவே மாட்டேன். தினம் தினம் இரவு நேரத்துல உனக்கு ஃபோன் பண்ணிக்கிட்டே இருப்பேன்'

'.....' ரகு என்னென்னமோ முணகிக்கொண்டிருந்தான்.

'உனக்குத்தான் இரவுநேரத்துல பேய்படம் பாத்து பயப்படுறது ரொம்ப பிடிக்கும்னு சொன்னியே... இனிமே என்னைப் பாத்து பயப்படு..'

'வேணா...'

'அப்போன்னா, நான் சொல்ற மாதிரி செய்... என் மொபைல்ல உனக்கு ஒரு SMS வந்திருக்கு.. அதுல இருக்கிற இடத்துக்கு ஒரே ஒரு தடவை வா...'

'........இல்லைன்னா..?'

'இல்லன்னா..! நான் வருவேன்..' என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பயந்துப்போய் அழுதபடி கட்டிலில் உட்கார்ந்தான்.

செல்ஃபோன் மீண்டும் ஒலித்தது. பயந்துப்போய் நடுங்கினான். இந்த முறை ஒலித்தது. அவனது செல்ஃபோன். தினேஷ் காலிங் என்றிருந்தது.

'ஹலோ..'

'என்னடா ரகு, ஜிம்முக்க வரலியா..?'

'.........'

'என்னடா, என்னாச்சு, உடம்பு சரியில்லியா..?' என்று கேட்க.. ரகு அழ ஆரம்பித்தான்.

'ஹே ரகு, அழாதடா... என்னாச்சு சொல்லு....' என்று கேட்டுக் கொண்டேயிருக்க, ரகு பதிலேதும் கூறாமல் அழுதுக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கு பிறகு...

ரகு கட்டிலில் ஒரமாக சாய்ந்தபடி அழுதுவடிந்த முகத்துடன் சுருண்டு உட்கர்ந்திருக்க, கட்டிலில் மறுபக்கம், தினேஷ் அமர்ந்திருந்தான்.

'டேய், என்னால நம்பவே முடியலடா' என்றான்.

ரகு அவனையே பார்த்தான். மெதுவாக மூக்கை உறிஞ்சிக்கொண்டே எழுந்தான்.

அந்த நிரூபாவின் செல்ஃபோனை எடுத்து கையை தூக்கிப்போடுவது போல் மேலே ஓங்கினான்.

'டேய்... டேய்... என்னடா பண்றே... டேய் நிறுத்துடா..'  என்று தினேஷ் கத்திக்கொண்டிருந்ததை கேட்காமல் சூறத்தேங்காய் உடைப்பது போல் ரகு அந்த செல்ஃபோனை உடைத்தான்.

'என்னாச்சுடா உனக்கு, ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பண்றே..?' என்று தலையில் அடித்துக் கொண்டான்.

'மூஞ்சில்லாம் எப்படியிருக்குப்பாரு... பொம்பளைப்புள்ள மாதிரி அழுதிருக்கே... இரு வரேன்' என்று எழுந்து ஹாலுக்கு வந்த தினேஷ் ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு மீண்டும் ரூமுக்குள் நுழைய, தரையில் அந்த செல்ஃபோன் துகள்களெல்லாம் ஒன்று சேர்ந்து, முழுதாக இருந்தது.

தண்ணீர் பாட்டில் தினேஷ் கையிலிருந்து பயத்தில் தானாக கீழே விழுந்தது. ரகு தினேஷைப் பார்த்து மௌனமாய் சிரித்தான். தினேஷ் கண்களை பயம் கவ்வியிருக்க, ரகுவை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

பிறகு....

இருவரும் பைக்கில் போய்க்கொண்டிருந்தார்கள்...

'நீ பயப்படாதே... இந்த விஷயத்துல ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம். எனக்கு தெரிஞ்ச சாமியாரு ஒருத்தரு இருக்காரு..'

ரகு பைக்கில் பின்னாலமர்ந்த நிலையில் சிரித்தான்...

'ஏண்டா சிரிக்கிறே..! இந்தாளு எந்த நடிகையோடும் படுக்காத சாமியாரு.. ஒரிஜினல்... அவருகிட்டப் போனா இந்த விஷயமெல்லாம் சப்பை மேட்டரு..'

சற்று நேரத்தில் அந்த சாமியார் என்பவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர். ஆனால் அவர் பேண்ட் ஷர்ட்டெல்லாம் போட்டிருந்தார்... கண்ணாடியும் அணிந்திருந்தார்.
'உன்னை யாரு தம்பி ரோட்டுல கிடக்குற ஃபோனை எடுக்க சொன்னது. இப்படியா போய் மாட்டுவே...! செத்திருக்கிறது கன்னிப்பொண்ணு, ஆன்ம பலம் அதிகம்அவ்வளவு சீக்கிரத்துல ஆசையை விட்டுக்கொடுக்காது. ப்ச்..! சரி, நான் பாத்துக்குறேன். இப்ப அந்த செல்ஃபோனை வச்சிருக்கியா..' என்று அந்த சாமியார் கேட்க, ரகு அந்த செல்ஃபோனை எடுத்துக் காட்டினான்.

அதை அவர் ஒரு சிகப்புத் துணியில் வாங்கி கைரேகை படாதவாறு பார்த்துக்விட்டுதிருப்பிக் கொடுத்தார். இருவரும் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, எதையோ இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டு பேசினார்.

'நான் மந்திரவாதியில்ல... ஆன்மீகவாதி... அவ்வளவுதான். சாதாரண குடும்பஸ்தன். கவர்மெண்ட் எம்ப்ளாயி, எந்த சூப்பர் பவரும் எங்கிட்ட கிடையாது. எங்கிட்ட மேஜிக்கெல்லாம் எதிர்ப்பாக்காதீங்க. நான் ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாயி, புத்தக அறிவாலயும், சில நல்லவங்க சந்திப்பாலயும், சில விஷயங்களை எப்படி செய்யனும்னு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தெரியும் அவ்வளவுதான். மத்தபடி, எல்லாம் உங்க கையிலதான் இருக்கு. பெருசா எதையும் எங்கிட்ட எதிர்ப்பாக்காதீங்க.. கிளம்புங்க' என்று கூறியவர் எழுந்துக் கொண்டார். ஒரு மஞ்சப்பையில் சில எழுமிச்சம்பழங்களையும், பூக்களையும், கற்பூரங்களையும் எடுத்துக் கொண்டிருந்தார்.

தினேஷ் கேட்டான், 'சாமி, இப்ப நாம எங்கே போறோம்?'

'அந்த SMS குறிப்பிட்டிருக்கிற இடத்துக்கு...'

ஆட்டோவில் மூவரும் சென்றார்கள். வழியில் தினேஷ் ATMல் CASH எடுத்துக் கொண்டான்.

SMSல் குறிப்பிட்டிருந்த அட்ரசுக்கு வந்தடைந்தார்கள். அந்த அட்ரஸிருந்த இடம், ஒரு ரியல் எஸ்டேட் ஏரியாவில், முள் கம்பி போடப்பட்டு, முன்பக்கம் மட்டும் காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு இருந்த ஒரு காலி மனை. உள்ளே 2 கிரவுண்டு பரப்பளவில், நடுவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டிருத்து. அந்த மண்டபத்தில் ஒரு கல்லறை மார்பிளில் கட்டப்பட்டிருந்தது.

ஆட்டோக்காரன் மூவரையும் ஒருமாதிரிப் பார்த்தான்காசு கொடுத்ததும் உடனே அங்கிருந்து பறந்து சென்றான். மூவரும் உள்ளே வந்தார்கள். சுற்றிலும், எந்த வீடும் இன்னும் கட்டப்படவில்லை. கல்லறையில் பூக்கள் அறைகுறையாய் வாடியும் வாடாமலும் ஒருமாதிரி மணம் வீசிக்கொண்டிருந்தது.

ரகுவிற்கு வயத்தை புரட்டியது.

என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தான். அந்த ஆன்மீகவாதி, சட்டென்று அவன் தோள்களில் கைவைக்க பதறியவனாய் திரும்பினான்.

'தம்பி, பயப்படாதே... முதல்லே தைரியமாயிரு... இது ஒரு கல்லறை அவ்வளவுதான். நீ செய்யவேண்டியதெல்லாம் இந்த கல்லறைக்கு பக்கத்துலியே ஒரு சின்ன பள்ளம் தோண்டு 3 அடிக்கு கம்மியில்லாம இருக்கணும். அதுல இந்த செல்ஃபோனையும், இந்த எலுமிச்சம்பழத்தையும் போட்டுட்டு, பள்ளைத்தை நல்லா மூடிடு. அப்புறம் திரும்பிப் பாக்காம வந்துக்கிட்டேயிரு..' என்றார்.

ரகு திரும்பி தினேஷைப் பார்த்தான். அவனும் தோளில் கைவைத்து தைரியம் கொடுத்தான்.

'நாங்க இங்கேயேதான் இருப்போம். பயப்படாதே... ஒரு பத்தடி தள்ளி உக்காந்துக்கிட்டு உன்னோட நன்மைக்காக நான் சில விஷயங்களை ஜபிச்சிட்டிருப்பேன், நீ இதை தனியா செய்யணும்பா. என்ன? புரியுதா..?' என்று கூறியவர் காலம் தாமதிக்காமல், விலகிக்கொள்ள, தினேஷூம் அவருடன் நகர்ந்து கொண்டான்.

அருகிலிருந்து ஒரு கல்-யும் மரக்கிளையையும் எடுத்துக் கொண்ட ரகு, அந்த கல்லறைக்கு அருகே பள்ளம் தோண்ட ஆரம்பித்தான்.


காற்று கொஞ்சம் அதிகாக வீசிகொண்டிருந்தது. சுற்றிலும் யாருமில்லாமல், ஊமை வெயில் வீசிக்கொண்டிருந்தது.

டம்... டம்... டம்....

ரகுவின் காதில் ஏதேதோ குரல்கள் கேட்டது.

'ஹே ரகு, என்னை உனக்கு உண்மையிலேயே பிடிச்சிருக்கா..'

'அதுலென்ன டியர் டவுட் உனக்கு, லவ் யூ..'

'வ்வ்வ்வாஆஆஆஆஆவ்... லவ் யு டூ..'

டம்... டம்... டம்....

சற்றுத் தொலைவில் அந்த ஆன்மீகவாதி தரையில் சப்பனமிட்டு அமர்ந்து கண்களை மூடி ஜபித்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் காதில் குரல்கள்...

'ஹே, உன்னைப் பாக்கணும்போல இருக்குடா..'

'டோண்ட் வர்ரி, நான் ரொம்ப குட்லுக்கிங், கண்டிப்பா உனக்கு பிடிக்கும் டியர்..'

டம்... டம்... டம்....

பள்ளம் தோண்டிமுடித்து உள்ளே அந்த செல்ஃபோனை எடுத்து ஒருமுறை அதன் வால்பேப்பரில் தெரிந்த நிரூபாவைப் பார்த்தான். திடீரென்று அது ஒலிக்கத் துவங்கியது.

'NIRUPA CALLING..... DON't DO THIS.." என்று தெரிந்தது.

'ரகு... சீக்கிரம் போட்டுட்டு வா..' என்று தினேஷ் பின்னாலிருந்து குரல் கொடுத்தான்.

ரகு தீர்மானமாக, அந்த செல்ஃபோனை உள்ளே பள்ளத்தில் போட்டான். அடுத்ததாக எலுமிச்சம்பழத்தையும் போட்டான். குழியை அவசர அவசரமாக மூடினான். மேலே எறி நின்று மெதித்தான். சட்டென்று திரும்பி நின்றுக்கொண்டான். மூச்சு வாங்கியது. அப்படியே ரோபோட் போல நண்பனை நோக்கி நடந்துவந்தான்.

ஆன்மீகவாதி தெம்புடன் எழுந்து நின்றார்.

'இனிமே பிரச்சினையில்ல, திரும்பி பாக்காம போயிட்டேயிருக்க வேண்டியதுதான்' என்று அவனை அழைத்து சென்றார்கள்.

வீட்டு கேட்டைவிட்டு வெளியில் செம்மண் ரோட்டில் வந்து நின்றார்கள்.

'மெயின் ரோடு வரைக்கும் நடந்துத்தான் போகணும்போலிருக்கு..' என்று ஆன்மீகவாதி கூறிக்கொண்டிருக்க, ரகு மட்டும் ஏதோ யோசனையுடன் இருந்தான். தினேஷ் சுற்றும் முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு ஆட்டோ போய்க்கொண்டிருந்தது.

'அதோ அங்க, ஒரு ஆட்டோ போயிட்டிருக்கு, நான் போய் கூட்டிக்கிட்டி வர்றேன்' என்று அங்கிருந்து ஓடினான்.

ஆன்மீகவாதி ரகுவை நெருங்கினார், 'தம்பி! அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே..! அப்புறம் ஏன் பயப்படுறே..! வா போலாம்..' என்று நடக்க முயலும்போது, அவரது செல்ஃபோன் சிணுங்கியது.

'ஹலோ..' மறுமுனையில் ஆன்மீகவாதியின் மனைவி பேசினாள்.


'இதோ வந்துட்டேம்மா... மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுவேன். நானா.. இங்கே ஸ்ரீபெரும்பத்தூர் கிட்ட இருக்கேன்..' என்று அவரது மனைவியுடன் பேசிக்கொண்டே ஒரு 2 அடி முன் நகர்ந்தார்.

ரகு அவரை தொடர்ந்து நடக்க காலை எடுத்தான், அவனது செல்ஃபோன் ஒலித்தது.

'தினேஷ் காலிங்' என்று வந்தது.

'ஹலோ..'

'டேய், ஆட்டோ பிடிச்சிட்டேன்... ரூட் சரியா நினைவில்லை... அப்படியே கொஞ்சம் நடந்து வர்றீங்களா..?' என்றான்.

'எங்க வரணும்..'

'அப்படியே நீ நிக்கிற ரோட்டுக்கு பின்னாடி ஒரு ரோடு இருக்கு பாரு..' என்றான்.

ரகு திரும்பி பார்த்தான். அந்த கல்லறை தெரிந்தது...

* * * * * *
ஆட்டோவில் தினேஷும், ஆன்மீகவாதியும் போய்கொண்டிருந்தார்கள்.

தினேஷ் அழுதுக்கொண்டிருந்தான்.

'தம்பி, விடுப்பா, அவன் விதி அவ்வளவுதான்... படுபாவிப்பய எவ்வளவு சொல்லியும் அஜாக்கிரதையா திரும்பிப் பாத்துட்டான்.' என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

'அதெப்படி சார் திடீர்னு ஆள் காணாம போயிட்டான். எங்கேதான் சார் போயிருப்பான் அவன்?' என்று மெதுவாக அழுதபடி கேட்டான்.

'அந்த கன்னிப்பொண்ணோட ஆன்மா, பயங்கர வலிமையா இருக்கு... அவனை ஸ்தூலமாவே கொண்டு போயிடுச்சி... அங்க நாம நிக்கிறது நம்ம உயிருக்கேக் கூட ஆபத்தா போயிடும். அதான் உன்னை சீக்கிரம் அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டேன். என்னை மன்னிச்சிடுப்பா..' என்றார்

* * * * * *
நெ. 23, ட்ரீம்வே நகர்,
புறவழிச்சாலை,
ஸ்ரீபெரும்பத்தூர் ஹைவே

என்ற அட்ரஸிலிருந்த அந்த கல்லறை ஆள் அரவமின்றி வெறிச்சோடிக்கிடந்தது. அந்த கல்லறைக்குள்ளிருந்து ஒரு புல்லாங்குழல் ரிங்டோன் மண்ணுக்குள் அமுங்கியபடி கேட்டுக்கொண்டிருக்க, அருகிலிருந்து கல்லைறைக்குள்ளிருந்து வேறொரு குரல் கேட்டது.

'நோ.. நோ.. என்னை விட்டுடு... நான் போகணும்.. ப்ளீஸ்... நோ... நான் சாகமாட்டேன்... எனக்கு பயமாயிருக்கு... ப்ளீஸ்.. நிரூபா... நோஓஓஓஓஓஓஓ'

- முடிந்தது -


Signature

Popular Posts