Saturday, January 30, 2010

NH4-ல் ஒரு பய(ண)ம் - [சிறுகதை]மனதை எளிதில் மெஸ்மரித்துவிடக்கூடிய நீளமான NH4 ஹைவே சாலையில், எனது புதிய காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தேன்.

3 நாட்கள் பெங்களூர் குளிரில் தங்கியதால் காரில் ஏசி போடவில்லை, சைடு கண்ணாடிகளையும் இறக்கிவிட்டிருந்தேன். உஷ்ஷ்.. என்ற காற்றை இரசித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தேன். மாலை 4.30 மணி, எஃப்.எம்.-இல் "அவளுக்கென்ன அழகிய முகம்.." என்று டி.எம்.எஸ். என் பயணத்தின் இனிமையை கூட்டிக்கொண்டிருந்தார்.

என்னதான் நான் 60 கி.மீ. வேகத்தில் தெளிவாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாலும், கொஞ்சம் தூக்கம் வருவது போல எனக்குள் ஒரு உள்ளுணர்வு பயமுறுத்தியது. சேஃப்டிக்காக, 'ஷெல் பங்க்'கிலிருந்து 'ரெட் புல்' வாங்கி வைத்திருந்தேன். எடுத்து குடிக்கலாமே..? என்று தோன்ற எடுத்து சீல் உடைத்து, குடித்தேன்.

"ஹ்ஹ்ஹாஆஆஆ..?" புத்துணர்ச்சியாகத்தான் இருந்தது.

இன்னும் ஒரு சிப் குடிப்போம் என்று இம்முறை நான் டின்னை உயர்த்திய போது, திடீரென்று டப்- என்று ஒரு பயங்கர சத்தம்... பயந்து போய், சத்தத்தின் காரணமறிய நான் திரும்பி பார்த்தேன், எனக்கு வலது பக்கத்தில் பைக்கில் இரண்டு வாலிபர்கள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் எனது கார் கதவில் பலமாக தட்டியிருக்கிறான் என்பதை உணர்ந்தேன்.

நான் அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் பைக்கின் வேகத்தை கூட்டி சிரித்தபடி என்னை முந்திக் கொண்டு சென்றார்கள். அவர்களில் பின்னாலிருந்தவன், வாய்முழுக்க பாக்கு போட்டிருந்தான். என்னைப் பார்த்து திரும்பியபடி, துப்பினான். என் கார் விண்ட்ஷீல்டு கண்ணாடியில் அவன் துப்பிய எச்சில் சிகப்பு நிறத்தில் வந்து விழுந்தது.

எனக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால் அவர்கள் உருவமும், உடையும், வளைந்து வளைந்து பைக் ஓட்டும் விதமும் கண்டிப்பாக இவர்கள் ரவுடிகள் என்று எனக்கு உணர்த்தியது. கூடவே எனது மனைவி குழந்தைகளை நினைக்க, இவர்களுடன் சண்டை போட்டு எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், என் குடும்பம்? என்ற பாமர பயம் வந்தது.

கோபத்தை அடக்கிக் கொண்டேன்.

அவர்கள் தூரச்சென்று மறைந்தார்கள். வைப்பரை போட்டு நீர்ப்பீய்ச்சி கண்ணாடியை துடைத்தபடி எனது இனிமை பயணத்தை தொடர்ந்தேன். ஒரு 5 நிமிடம் ஆகியிருக்கும். தூரத்தில் அந்த ரவுடிகள் தெருவோரமாக நின்றிருப்பது தெரிந்தது. ஆனால், இம்முறை, ஒருவன்தான் நின்றிருந்தான், இன்னொருவன் எங்கே என்று நான் தேடியபோது அவன் ரோட்டில் ஓரமாக விழுந்திருந்தான்.

நின்றிருந்தவன், காதில் செல்ஃபோன் வைத்து யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். நான் அவனை நெருங்க, அவன் செல்ஃபோன் பேசிக்கொண்டே லிஃப்ட் கேட்பது போல் கை காட்டினான். ரோட்டில் இரத்தம் படிந்திருப்பதை கவனித்தேன். பைக் சறுகி இருவரும் விழுந்திருக்கிறார்கள் என்றும், அதில் ஒருவனுக்கு பலத்த காயம் அல்லது மரணம் என்றும் யூகித்தேன்.

நான் காரை நிறுத்தலாமா என்று நினைத்து வேகத்தை குறைத்துக் கொண்டே நெருங்கினேன். ஆனால் நிறுத்தவில்லை. அருகில் செல்ல செல்ல அவன் என்னை நெருங்கி வந்தான்.

'ஏய்... ஏய்... வண்டிய நிறுத்துடா..? ஏய்..' என்று மிரட்டிக் கொண்டே வந்தான்.

அவனது அணுகுமுறை என்னை பயமுறுத்தியது. ஒருவேளை இவர்கள் இருவரும் பேசிவைத்துக் கொண்டு ஏதாவது வழிப்பறி செய்கிறார்களோ என்று தோன்றியது. சட்டென்று காரின் வேகத்தை கூட்டினேன். அவன் ஒரு பத்தடி என்னை துரத்தி வந்தான். நான் சிக்கவில்லை.

எனக்கு என் பயணத்தை இரசிக்கும் எண்ணமே மறந்துவிட்டது. என்னமோ ஒருமாதிரி தோன்ற ரேடியோவை அணைத்துவிட்டேன். காற்று வீசும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. எதேச்சையாக ரியர் வீயூ மிரரில் பார்க்க, தூரத்தில் ஒரு பைக் என் காரை நெருங்குவது தெரிந்தது. இது வேறு பைக்தான். இருந்தாலும் பயமாகவே இருந்தது. வேகத்தை கூட்டலாமா குறைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, அந்த பைக் என் காருக்கு வலது பக்கம் கடந்து கொண்டிருந்தது. அதில், என்னை சற்றுமுன் கலாய்த்து காரில் எச்சில் துப்பிய இருவரையும் சேர்த்து 3 பேர் உட்கார்ந்திருந்தார்கள்.

துப்பியவன் பைக்கில் கடைசியாக உட்கார்ந்திருந்தான், ஓட்டுபவன் புதியவன், நடுவில் இருப்பவன்தான் ரோட்டில் அடிபட்டு விழுந்து கிடந்ததவன் என்பதை பார்த்தேன். 'அடப்பாவமே!' உண்மையிலேயே அவனுக்கு அடிப்பட்டிருந்தது.

"சே! காரை நிறுத்தியிருக்கலாமோ" என்று யோசித்தேன். லிஃப்ட் கேட்டவன் என்னை கடுமையாக முறைத்து கொண்டே சென்றான். அவன் முறைப்பதை பார்த்தால், நான்தான் என்னமோ, அவன் நண்பனின் காயத்திற்கு காரணம் என்பது போல் இருந்தது. பைக்கில் அந்த மூவரும் என்னை கடந்து மீண்டும் வேகமாக சென்று மறைந்தார்கள்.

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. யாரிவர்கள் என்னையே சுற்றி சுற்றி இப்படி போய்க்கொண்டிருக்கிறார்களே என்று தோன்றியது. இது சரியில்லை என்று நினைத்து, காரை ரோட்டோரமாக நிறுத்தினேன். வாட்டர் பாட்டிலால் முகம் கழுவினேன். மனதில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்-ன் 'ட்யூயல்' என்ற படம் நினைவுக்கு வந்தது. லாரிக்கார அரக்கனால் கதாநாயகன் துரத்தப்பட்டு அரும்பாடுபடுவது நினைவுக்கு வந்தது. எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன்.

டேஷ்போர்டிலிருந்து ஒரு 'ஆர்பிட் மிண்ட்' எடுத்து போட்டுக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் பயணத்தை துவங்கினேன்.

மீண்டும் எப்.எம்-ஆன் செய்தேன். சேனலை மாற்றி மாற்றி, ஒரு துடிப்பான இங்லிஷ் பாப் பாடலை வைத்துக் கொண்டேன். பயணத்தை மீண்டும் இரசிக்க ஆரம்பித்தேன்.

2 நிமிடம்கூட போயிருக்காது. ஒரு சின்ன ஜங்ஷன் வந்தது. அங்கே இடதுபக்கம் கும்பல் கூடியிருந்தது. ஆர்வம் காரணமாக எஃப்-எம் சவுண்டை குறைத்துவிட்டு, கூடியிருந்த கும்பலை கொஞ்சம் தாண்டி காரை ஓரமாக நிறுத்தினேன். அந்த ஊர்க்காரர் ஒருவர் "May I Help You" என்பது போல் நின்றிருந்தார்.

காரிலிருந்தபடியே அவரிடம், "என்ன ஆச்சு சார்...?" என்றேன்.

"குடிகார பயலுக சார், குடிச்சிட்டு ரோட்டுல பைக்கை ஏரோப்ளேன் மாதிரி ஓட்டியிருக்காங்க, கீழே விழுந்து ஒருத்தனுக்கு பின்மண்டியில அடி, இன்னொரு ஃப்ரெண்டை வரவழைச்சு பைக்ல ஹாஸ்பிடலுக்கு டிரிபிள்ஸ் ஏத்திட்டு போயிருக்காங்க, வழியிலியே தலை தொங்கிடுச்சி..." என்றார்

நான் எனது இடது பக்க சைடு கண்ணாடி வழியாக பார்க்க, கும்பல்களுக்கு நடுவே ஒருவன் படுத்திருந்தான். அவனுக்கு அருகில் என்னிடம் லிஃப்ட் கேட்டவன் அல்லது என் காரின் மீது துப்பியவன், இப்போது திரும்பி என் காரைப் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்குள் ஏதோ ஒரு வித தயக்கம் வந்தது. அவன் சட்டென்று எழுந்து என் காரை நோக்கி வேகமாக நடந்து வந்தான்.

வரும்போதே சத்தமாக, "ஏய்... நாயே... நில்லுடா.. ஓ********* " என்று சரளமாக கெட்ட வார்த்தைளால் திட்டிக் கொண்டு வந்தான். எனக்கு அங்கிருந்து கிளம்புவதுதான் உசிதம் என்று தோன்ற, உடனே காரை கிளப்பினேன். என்ன நடக்கிறது என்று தெரிந்துக் கொள்ள சைடு மிரரில் பார்த்தேன்.

அய்யோ..!

அவன் பைக்கில் ஏறி கிக் ஸ்டார்ட்டரை உதைத்துக் கொண்டிருந்தான். இந்த காட்சி என்னை மேலும் பயமுறுத்தியது. நான் இதுவரை தாண்டாத வேகத்தை எனது ஸ்பீடாமீட்டர் காட்டிக் கொண்டிருக்க, அந்த வேகத்தினால், சாலையோர மரங்களை வேகமாக பின்னுக்கு தள்ளிக்கொண்டிருந்தேன்.

நீண்ட தூரம் வந்தது போல் தோன்றியது. இன்னும் எவ்வளவு நேரத்தில் சென்னையில் இருக்கலாம்..? என்று யோசித்த போது, ரியர் வியூ மிரரில் அந்த பைக்காரன் வெறியுடன் துரத்தி வருவது தெரிந்தது. சென்னையை சென்றடைவோமா? என்று சந்தேகம் தோன்றியது.

அவன் என்னை சுலபமாக நெருங்கிக் கொண்டிருந்தான். எனக்குள் பயம் என் காரின் வேகத்தை போல் அதிகமாகி கொண்டே இருந்தது. அவன் நெருங்கியே விட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பி அவனைப் பார்க்க, அவன் முகத்தில் அப்படி ஒரு வெறி, சத்தியமாக நான் அவன் நண்பனை ஒன்றுமே செய்யவில்லை, மாறாக இவன்தான் என் காரில் துப்பினான், நியாயப்படி நானல்லவா இவன்மீது கோவப்பட வேண்டும். ஆனால் நான் காரை நிறுத்தியிருந்தால் ஒருவேளை இறந்தவனை காப்பாற்றியிருக்கலாமோ... நான் நிறுத்தத்தான் இருந்தேன். இவன் என்னை அணுகிய விதம் என்னை பயமுறுத்தியது. அதனால்தான் நிறுத்தாமல் சென்றேன்.

இவனிடம் எதையும் விளக்கிக் கூற முடியாது. மரண துக்கத்திலிருப்பவர்களின் கோபம் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தால், இவனை எப்படி தவிர்ப்பது என்றுதான் பயந்துக் கொண்டிருந்தேன். நான்கு கதவின் கண்ணாடிகளையும் ஏற்றிவிட்டேன். இது அவன் கோபத்தை மேலும் ஏற்றிவிட்டிருக்கவேண்டும். அவன் முகத்தில் விகாரம் ஏறியது.

அவன் எனது வலது பக்கமாக பைக்கில் நெருங்கி வந்து காரின் கதவை பலமாக தட்டி காரை நிறுத்துமாறு கூறிக்கொண்டிருந்தான்.

"ஏய்... ஏய்... த்********** ***********, நிறுத்துடா, காரை நிறுத்துடாங்**********.. இப்ப நிறுத்திறியா இல்லியா...********** " என்று கத்திக் கொண்டே கூடவந்துக் கொண்டிருந்தான். நான் என்ன செய்வது என்று தெரியாமல், என் உயிர் பயத்தை காலில் தேக்கி ஆக்ஸிலேட்டரில் செலுத்தினேன். 'பட்'டென்று ஒரு பெரிய சத்தம் பின்பக்கம் கேட்டது. இப்போது அவனைக் காணவில்லை...

ஒருவேளை பின்தங்குகிறானோ? என்று பார்ப்பதற்காக, வலது பக்க சைடுமிரரில் பார்க்க, அவனைக் காணவில்லை, அந்த சாலையில் மேம்பாலக் கட்டுமானப்பணியில், பில்லர்கள் மட்டும் கட்டி எழுப்பி வேலை நிறுத்தப்பட்டிருந்தது. ஒருவேளை பில்லர்களின் மறைவில் அவன் வருவது தெரியவில்லையோ.? என்று எண்ணினேன்.

காரின் வேகத்தை குறைத்து ஓரமாக நிறுத்தி திரும்பி பார்த்தேன். அவன் வரவேயில்லை... எனக்கு ஆச்சர்யம்..! அவ்வளவு கோபமாக வந்தவன் எங்கு போயிருப்பான் என்று தோன்றியது. காரிலிருந்து இறங்கி பின்பக்கமாக கொஞ்சம் நடந்து வந்தேன். ஒரு தூண் முக்கால்வாசி ரோட்டை மறைத்து கொண்டு இருந்தது. இதன் மறைவில் ஒருவேளை ஒளிந்திருக்கிறானோ..? என்று பயந்தேன்... போய்த்தான் பார்ப்போமே என்று தூணின் மறுபக்கம் செல்ல...

அங்கே...

அவன் பைக்கில் வேகமாக வந்து அந்த தூணில் மோதியதால் நசுங்கி இறந்திருந்தான்...

எனக்கு அதைப் பார்க்கவே தலை சுற்றியது.

யாரிவன்..?

இவன் நண்பன் ரோட்டில் விழுந்து இறந்ததற்கு என்னை ஏன் துரத்தினான்..?

லிஃப்ட் கொடுக்க மறுத்ததற்காகவா..! நான் ஏதாவது தப்பு செய்தேனா.?

இப்படி எதிரில் இருக்கும் பில்லரும் தெரியாதபடி குடித்திருக்கிறான்.

எது எப்படியிருந்தாலும், வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு பய(ண) அனுபவத்தை எனக்குள் விதைத்துவிட்டான்... என்று எண்ணி அங்கிருந்து என் காருக்கு தடுமாறியபடி விரைந்தேன்... தூரத்தில் ஒரு எருமை மாடு மட்டும் இந்த சம்பவத்தை சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தது. கிளம்பினேன்.

தொடரும்...
.
.
.
தொடரும் இந்த கதைக்கல்ல... இவன் கொல்லாமல் விட்டதால் என் உயிர்துடிப்பு... தொடரும்...

Signature

Monday, January 25, 2010

ஹைக்கூ...
Signature

Friday, January 22, 2010

"புலம்பல்" - சிறுகதை5 விநாடிக்குமுன் ஒரு லாரிக்காரன், நான் ரோட்டை கடக்கும்போது என் மீது லாரியை ஏற்றிவிட்டு சென்றுவிட்டான். என் உடம்பிலுள்ள குடல்கள், ஈரல்கள், எல்லாமும் வெளியே ரோட்டில் சிதறிக்கிடக்கிறது. என் கடைசி மூச்சுக்காற்று கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையிலும் என் மனது ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது. அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன்.

முதலில் நான் என்னைப் பற்றி சொல்லியாக வேண்டும். எனக்கு பெயரெதுவும் சூட்டப்படவில்லை. எனக்கென்று சொந்தமாக ஒரு வீடில்லை, ஆனால் ஒரு தெரு இருக்கிறது. நான் எங்கள் தெருவுக்கே காவல்காரன். வேற்றுத்தெருவாசிகள் யாராவது எங்கள் தெருவுக்குள் வந்தால், அவ்வளவுதான், அவர்களை ஓட ஓட விரட்டியடித்துவிட்டுத்தான் மறுவேலை. இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு நான் யார் என்று தெரிந்திருக்குமே..? இன்னும் இல்லையா..? சரி நானே சொல்லிவிடுகிறேன். நான் நன்றிக்கு பெயர் போனவன்... ஆம்... இப்போது நீங்கள் கணித்தது சரிதான். நான்தான் இந்த தெருவின் ஃபேமஸ் நாய்.

என்னடா போயும் போயும் இந்த நாய் சொல்வதை நாம் கேட்கவேண்டுமா என்று சலித்துக்கொள்ளாதீர்கள். கொஞ்ச் கேட்டுத்தான் பாருங்களேன்... அய்யோ... வலிக்கிறது... உயிர்வலியில்லையா... கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பரவாயில்லை, நான் சொல்லவேண்டியதை சொல்லிவிடுகிறேன். முதலில் இந்த சாலை நெரிசல்களைப் பற்றி நான் சொல்ல வேண்டும். ஏன் மனிதர்கள் நீங்கள் இவ்வளவு சிரம்ப்படுகிறீர்கள்..? இல்லை, நான் ஒன்று தெரியாமல் கேட்கிறேன்..? இப்போது ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கு போக வேண்டுமென்றால், எங்கள் இனத்தவர்களுக்கு குறைந்தது 2 நிமிடம் பிடிக்கும். ஆனால் மனிதர்கள் நீங்கள் வண்டியில் ஹாயாக, அரை நொடியில் சென்றடைந்துவிடுவீர்கள். ஆனால், இப்போது சாலை நெரிசல் காரணமாக நீங்கள் எங்குப் பார்த்தாலும் டிராஃபிக் ஜாம் என்ற பெயரில் வண்டில் அமர்ந்தபடி கடிகாரத்தை பார்த்துக்கொண்டு ஒரே இடத்தைவிட்டு நகராமல் குறைந்தது 20 நிமிடமாவது செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட நீங்கள் நடந்து போனாலே சீக்கிரமாக சென்றுவிடலாமே..! நான் ஒன்றும் உங்களை வண்டியே ஓட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை... ஓட்டுங்கள்... ஆனால் முடிந்தவரை நடந்து பழகுங்கள்.

உங்கள் வீட்டிலிருந்து குறைந்தது ஒரு 3 கி.மீ. வரை உங்களுக்கு எந்த வேலையாக இருந்தாலும் நடந்து சென்று பழகிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், ஒரு காலத்தில் நீங்கள் நடக்கவே மறந்து விடுவீர்கள். நான் சொல்வது கேலியல்ல.... நீங்களே உங்கள் தெருவில் சென்று எத்தனைபேர் நடக்கிறார்கள் என்று சும்மா இருக்கும்போது எண்ணி பாருங்கள். அப்போது உங்களுக்கே புரியும் எத்தனை பேர் நடக்க மறந்திருக்கிறார்கள் என்று...

அய்யோ...! ஆ..!

ஒன்றுமில்லை, ஒரு ஷேர் ஆட்டோக்காரன் நான் இங்கு சாலையில் துடித்துக்கொண்டிருப்பதுகூட தெரியாமல் (அல்லது தெரிந்தே) மீண்டும் என் மீது ஏற்றிவிட்டு சென்றுவிட்டான்... அதுவும் ராங் சைடில் வந்து... சே! அப்படியென்ன ஒரு அலட்சியம்... ஒரு உயிர் போய்க்கொண்டிருக்கிறது கூட தெரியாமல்... அதுமட்டுமல்ல அவன் ஆட்டோவை சற்று கவனியுங்கள். குழந்தைகளை அநியாயத்திற்கு ஏற்றியிருக்கிறான்... குறைந்தபட்சம் ஒரு 12 குழந்தைகளை சுமந்து கொண்டு போய்க்கொண்டிருக்கிறான்... ஆண்டவா... இது என்ன நியாயம்... இப்படி போகிறவர்களை டிராஃபிக் போலீஸ்கள் தட்டி கேட்க மாட்டார்களா..?

சரி நான் ரொம்ப நேரம் பேசமுடியாது... சீக்கிரம் சொல்லிவிடுகிறேன்... என்னடா இவன் இவ்வளவு பேசுறானே, அப்படி இந்த நாய் ரோட்டை க்ராஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று நினைப்பவர்களுக்கு... இதோ என் பதில்... இந்த ரோட்டிற்கு அந்த பக்கத்தில்தான் என் காதலி இருக்கிறாள். அவள் அவ்வளவு அழகு... அவளும் நானும் தினமும் சாயங்கால வேளையில் ஒன்றாக வாக்கிங் சென்று வருவோம். அதான் ரோட்டை க்ராஸ் செய்தேன். என் போறாத வேளை... இப்படி அடிப்பட்டு இறக்க வேண்டும் என்று இருக்கிறது. யாராவது என் காதலியைப் பார்த்தால் என்னை நினைத்துக் கொண்டு 2 பிஸ்கெட் வாங்கிப் போடுங்கள்...

நான் வருகிறேன்... சாரி... போகிறேன்...

Signature

Thursday, January 21, 2010

அவளுடன் நனைந்த மழையில்...

Signature

Sunday, January 17, 2010

கண்டேன்... கண்டேன்... [சிறுகதை]


சத்யம் தியேட்டரில் டெம்பரவரி பார்க்கிங் போட்டுவிட்டு, தியேட்டருக்கு முன்னால் சென்றேன். காணும் பொங்கல் அதுவுமாக ஏகப்பட்ட கும்பல் திமிறிக்கொண்டிருந்தது. கலர் கலராய் பல விதங்களில் பல ஜோடிகள்... ஜோடி நெம்பர் 1, 2, 3, 4 என்று எந்த ரேஞ்சில் போட்டி வைத்தாலும், இங்கு வைக்கலாம்... தகும்... அவ்வளவு ஜோடிகள்... ஜோடியைத் தேடிக் கொண்டு சிலர், ஜோடியை வைத்துக் கொண்டே சைட் அடிக்கும் ஆண், பெண் என்று பலவிதமாக அங்கு உலவிக்கொண்டிருந்தனர்.

டிக்கெட் கவுண்ட்டரில் ஷோ விவரங்கள் மாணிட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.

சே! நான் இதைப் பார்க்கவா வந்தேன். இல்லை நான் பார்க்க வந்தது வேறு...

நான் பார்க்க வந்தது ஒரு பெண்ணை... ஒரு காதலியை... இல்லை இல்லை... என் காதலி இல்லை... எனது நண்பனின் காதலியை தேடிக்கொண்டு வந்திருந்தேன். தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் அவளை தேடுவதற்கான காரணம் வேறு...

இப்போது மிகவும் அவசரத்தில் இருப்பதால் பிறகொரு சமயம் அதை சொல்கிறேன்.

அவள் இங்கு இல்லை, வேறு எங்க போனால் தேடலாம்...?

யோசிக்க நேரமில்லை... அவசரம்... அதுவும் எவ்வளவு அவசரம் தெரியுமா..? உயிர் போகும் அவசரம்...?

யார் உயிர்..? சொல்கிறேன். இதற்குமேலும் சஸ்பென்ஸ் தேவையில்லை...

என் உயிர் நண்பன், ரவீந்தர். பள்ளி காலத்திலிருந்தே நண்பன், அமெரிக்காவில் 2 வருடம் வேலை பார்த்தவன், சமீபத்தில் ரெஸெஷன் பிரச்சினையால் திரும்பி வந்தவன். ஆனாலும், இந்தியாவில் அவனுக்கு நல்ல வேலை கிடைத்தது.. அவனுக்கு ஒரு காதலி, பெயர் அஞ்சலி, ஆர்குட்டில் இருவரும் சிநேகித்து, சந்தித்து, பேசி, பழகி(?) பெற்றோர்கள் பஞ்சாயத்தெல்லாம் நடந்து முடிந்து (நான்தான் இவர்களுக்கு இடையில் தூதுவனாகவெல்லாம் ஃப்ரீலேன்சர் வேலை செய்தேன்) ஒருவழியாக கல்யாணத்திற்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்டினார்கள். சீக்கிரத்தில் கல்யாணம் செய்து கொள்ள தயராக இருந்த நிலையில், ரவீந்தர்தான் 2 வருடம் போகட்டும் என்றான். ஏன் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை, அவர்கள் கல்யாணம்தானே எப்போது வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டனர்.

ஒரு நிமிடம்...

இப்போது மெரினா பீச்சுக்கு வந்திருக்கிறேன்... காணும்பொங்கலதுவும் ஒரே ஒரு பெண்ணை தேடி இப்படி மெரினா பீச்சில் சுற்றுவது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான செயல் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. இருந்தாலும் என்ன செய்வது. என் நிலையில் நீங்களிருந்தாலும் இப்படித்தான்.

"ஏய்" ஒரு பெண் என்னை இடித்துக் கொண்டு செல்கிறாள். சத்தியமாக அவள் வேண்டுமென்றேதான் இடித்தாள். கண்ணகி சிலைக்கு கீழ் இப்படி ஒரு கற்புக்கரசி சே..!

அவளெங்கே..? என்ன கலர் டிரஸ் போட்டு கிளம்பினாள் என்று யாருக்கும் நினைவில்லை. மொபைலை வீட்டில் மறந்துவிட்டு போயிருக்கிறாள்.

'அஞ்சலிஈஈஈ..', கத்தியே பார்த்தேன். யார் யாரோ திரும்பினார்கள்... அதிலும் அவளில்லை...

என் சட்டையை ஒருவன் பார்த்துவிட்டு, என்னை முறைத்துக் கொண்டே சென்றான். அதற்கு காரணம் இருக்கிறது. என் சட்டையில் இரத்தக்கறை... என் நண்பன் ரவீந்தருடைய இரத்தம்தான்... அது சரி, உங்களுக்கு முழுக்கதையும் சொல்லவில்லையே... ரவீந்தருக்கு 2 மணிநேரத்துக்கு முன்னால் ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. நான்தான் அவனை ஜி.எச்-சில் சேர்த்தேன். பாவம்... பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.

அவன் லேசாக எனது காதில் எதையோ முணகினான்.

'டேஹ்ஹ்ய்ய்ய்... அஞ்ஞ்ஞ்ஞ்சலிய ஒருதரவ பாக்க்க்க-உம்..' என்று கூறும்போது, அவன் மூச்சுக்காற்றின் உஷ்ணம் இன்னும் என் காதில் இருக்கிறது. எப்படியாவது இதை ஒரு நண்பனாக நிறைவேற்றியே தீர வேண்டும் என்று பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். அவளது மொபைலுக்கு ஃபோன் செய்த போது, அவள் மொபைலை வீட்டில் மறந்து வைத்துவிட்டு தனது தோழிகளுடன் காணும்பொங்கலுக்கு ஊர்சுற்ற சென்றுவிட்டதாக அஞ்சலியின் அம்மா கூறினாள். அவள் அம்மாவோ, தோழிகள் நம்பர் பார்த்து சொல்ல தெரியாத ஒரு பட்டிக்காடு... அதைப் பற்றி பேசி இப்போது பிரயோஜனமில்லை... சே! எங்கேன்னு போய் அவளைத் தேடுவது..

கடலை நெருங்கிவிட்டேன். அலைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது... எங்கு திரும்பினாலும் ஜனத்திரள். இதில் என்னால் அஞ்சலியை கண்டுபிடிக்க முடியுமா... ஒருவேளை அவள் சிட்டிசென்ட்டர் போயிருந்தால், இல்லை ஸ்பென்ஸர் போயிருந்தால்... இப்படி பிராபப்ளிட்டி எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்போது, எனது செல்ஃபோன் ஒலித்தது

ரவீந்தரின் நம்பர்

'ஹலோ..'

'தம்பீ...' இது ரவீந்தரின் அப்பாவின் குரல்

'என்ன அங்கிள்.. ஏன் அழறீங்க..?'

'ரவீந்தர் போயிட்டாம்ப்பா...' என்று கூறினார்...

.
.
.

என்னால் எதுவும் பேச முடியவில்லை... சே..! நண்பனை இழந்த துக்கம் ஒருபுறமிருக்க, அதைவிட அதிகமாக, நான் இவ்வளவு தூரம் முயற்சி செய்தும் என்னால் அஞ்சலியைக் கண்டுபிடித்து அவனிடம் கொண்டு போய் நிற்க வைக்க முடியவில்லையே என்றுதான் மனது வலித்தது.

உடம்பில் ஒரு தளர்வு ஏற்பட்டது... இனி என்ன தேடியும் பிரயோஜனமில்லை என்று யோசித்து திரும்ப... அங்கே 10 அடி தூரத்தில் அஞ்சலி நின்றிருந்தாள். அந்தபக்கமாக திரும்பி நின்றிருந்தாள். ஆனால் அவளேதான். இதோ! அஞ்சலி... இனிமேல் இவளிடம் போய் என்னத்தை சொல்வது... என்று யோசித்து அவளை நெருங்கும்போதுதான் பார்த்தேன். அவள் இன்னொருவன் தோளில் கை போட்டு நின்று சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்.

அடிப்பாவி, காதல் துரோகி, அங்கே எனது நண்பன் உன்னை கடைசியாக பார்க்க முடியாமல் உயிரை துறந்திருக்கிறான். இங்கே நீ இன்னொருத்தனோடு நின்றுகொண்டிருக்கிறாயே.. பாவி... இவளை நேரில் பார்த்து 4 வார்த்தை திட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்று வேகமாக நெருங்கினேன்.

அவளுக்கு முன்பாக சென்று அவளைத் திட்டலாம் என்று நினைக்கும்போதுதான் அவனருகிலிருப்பவனைப் பார்த்தேன்... 'ரவீந்தர்?'

ரவீந்தரேதான்... இது என்ன ஆச்சர்யம். அவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி.... நான்தானே ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்த்தேன். இதோ என் சட்டையில் இன்னும் அவனது இரத்தம் படிந்திருக்கிறதே... அப்படியானால் இவன் யார்..?

இதற்குள் அஞ்சலி என்னைப் பார்த்துவிட்டாள்

'ஹே.. நீ எங்க இங்க..? ரவீந்தர் கூட வந்தியா..?' என்று கூறி அவனைக் கூப்பிட்டு என்னைக் காட்டுகிறாள்.

அவனும் சகஜமாக.. 'வாடா, இப்போத்தான் நான் வந்தேன்... இவளை கண்டுபிடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி..' என்று கூறினான்.

என்னால் ஒன்றும் பேச முடியவில்லை, செல்ஃபோனை எடுத்து கடைசியாக பேசிய ரவீந்தர் நம்பருக்கு டயல் செய்தேன்... அழுது கொண்டிருந்த ரவீந்தரின் அப்பாதான் எடுத்தார்...

'ஹலோ.. ஹ்ம்ம்ம்ம்'

கட் செய்துவிட்டேன். அவரிடம் என்ன கேட்பது என்று தோன்றவில்லை...

ஏறிட்டு பார்த்தேன்... இருவரும் கைபிடித்து நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்...

இதுவரை ஆவியை பார்த்ததாக பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்... ஆனால் இன்றுதான் நான் முதன்முதலில் ஒரு ஆவியை ஜூன்ஸ் டி-சர்ட்டில் பார்க்கிறேன்... இது அஞ்சலிக்கு தெரியாததுதான் எனக்கு கிலி மூட்டியது..

முடிந்தது... என்று ப்ளாக்கில் பிரசுரமாகியிருந்த அந்த கதை திகிலுடன் முடிய, நிகில் தனது மாணிட்டரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்னடா கதை எழுதுறீங்க..? திகில் கதைன்னு முன்னாடியே எங்கேயாவது போடுறதில்லியா..?' என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டான்.

அவனது பாஸ் அவனிடம் நெருங்கி வர. ப்ளாக் திறந்திருந்த விண்டோஸை மினிமைஸ் செய்து கொண்டான்.

'நிகில், அந்த க்ளைண்டுக்கு மெயில் அனுப்பிட்டீங்களா..?'

'இல்ல..., 2 மினிட்ஸ்... அனுப்பிட்டு சொல்றேன்..' என்றதும் பாஸ் விலகி நடந்துவிட

இந்த கதைக்கு கமெண்ட்ஸும், ஓட்டும் அப்புறமா போட்டுக்கலாம் என்று இமெயில் டைப் செய்ய தொடங்கினான்...

Signature

Saturday, January 16, 2010

"கிரகணம்" - சிறுகதை


சைட் அடித்தல், எஸ்.எம்.எஸ் படித்தல், சிட்டி டிராஃபிக்கில் பைக் ஓட்டுதல், நவீன 3D படங்களை பார்த்து இரசித்தல், வெளிச்சம், நிறங்கள், இயற்கை இப்படி எல்லாவற்றையும் பிரவீன் நேற்றுவரை தனது இரண்டு கண்களாலும் இரசித்து கொண்டுதான் இருந்தான். திடீரென்று இப்படி தனது கண்கள் குருடாகிப் போகுமென்று எதிர்ப்பார்த்திருக்கவில்லை...

முதல் நாளே இ(கு)ருட்டு வாழ்க்கை அவனை மிகவும் பயமுறுத்தியது...

பொங்கலைக் கொண்டாட நண்பனது கிராமத்துக்கு போகாமல் இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்காது... என்ன செய்ய! விதி என்றுதான் சொல்ல வேண்டும்

நண்பண் ஒருவன் அருகில் புலம்பிக்கொண்டிருந்தான் "சே! ஆஃபீஸ்ல லீவு கொடுக்காம இருந்திருந்தா உன் கண்ணு தப்பிச்சிருக்கும்..."

"அதான் ரேடியோவுல அவ்ளோ சொன்னாங்கல்ல, கிரகணத்தை வெறுங்கண்ணால பாக்க கூடாதுன்னு, அப்புறம் யார்டா உன்னை பாக்க சொன்னது..", இன்னொரு நண்பன் செல்ஃபோனில் புலம்பினான்

"ஹய்யோ ப்ரவீன், உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே! இனிமே உனக்கு யாருடா பொண்ணு கொடுப்பா..?" அம்மாவின் அழுகை

இப்படி எல்லாவற்றையும் கடந்து தனது அறைக்குள் வந்தான். காலில் கம்ப்யூட்டர் டேபிள் முட்டியது...

"இனி இந்த கம்ப்யூட்டரை வைத்து நான் என்ன செய்வது" பிரவீனின் மனசாட்சி பேசியது. "இனி இது உதவாது... இல்லை... நான்தான் இனி ஒண்ணுத்துக்கும் உதவாதவன் ஆகிவிட்டேன்... காலம் முழுக்க குருடனாக இருக்க வேண்டியதுதான்."

எஃப் எம் ரேடியோவை தடவி தடவி பெரும்பாடு பட்டு சொடுக்கினான்.

"கங்கண சூரிய கிரகணத்தை காண வந்திருந்த இந்தியாவை சேர்ந்த பல விஞ்ஞானிகள் கருத்தரங்கை முடித்து கொண்டு சந்தோஷமாக தத்தம் ஊருக்கு திரும்பினர். அவர்களுடன் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், இந்த கிரகணம் மிகவும் பயனுள்ளதாய் இருந்ததாக தெரிவித்தனர். மேலும்..." டொக்கென்று எஃப் எம்-ஐ ஆஃப் செய்தான்.

கட்டிலில் படுத்தான்... மனதை ரீவைண்டு செய்தான். நடந்ததை நினைத்துப் பார்த்தான்

15ஆம் தேதி...
கங்கண சூரிய கிரகணம் உச்சத்தில் இருந்த 1.20 மணிக்கு...
மடிப்பாடி கிராமத்தில் தனது நண்பன் ஒருவனின் அறையில் பிரவீன் இருந்தான்.


"ஹேய், பிரவீன் கிரகணசூரியன் அழகா இருக்குடா, வந்து பாருடா... " என்று ஒருவன் அழைக்க

அறைக்குள்ளிருந்த பிரவீன், "டேய் அதான் பாக்கக்கூடாதுன்னு டிவில சொன்னாங்கல்ல அப்புறம் என்ன வந்து பாருடாங்கிறே?"

"ரொம்ப பயப்படாதேடா டிவில வந்து பாக்கத்தான் உன்னை கூப்டேன்"

"டிவிலியா" என்று கூறிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான்.

"ஓ உனக்கு கிரகணம்னா அவ்வளவு பயமா..?" நண்பன் உசுப்பிவிட்டான்

"சே! சே! பயமெல்லாம் ஒண்ணுமில்லடா.." என்றான் பிரவீன

"பயமில்லாமத்தான் உள்ள ரூமுலருந்து கிரகணத்தை பாக்கமாட்டேன்னு கத்துனியா..?", இது இன்னொரு நண்பன்

"நான் எங்கேடா கத்துனேன், தவிர எனக்கென்னடா பயம்.."

"அப்ப ஒண்ணு பண்ணு, கிரகணத்தை உன் டிஜிட்டல் கேமிராவுல ஃபோட்டோ எடுத்துட்டு வா..?" என்றான் ஒரு விஷமி நண்பன்

'ஃபோட்டோவா... எதுக்கு..?" என்று பிரவீன் சற்று தயங்கவே செய்தான்

"ஆ... ஃப்ரேம் போட்டு, பிரவீன் பயமில்லாதவன்னு ஒரு சர்டிஃபிகேட் கொடுக்கத்தான்.."

"என்னடா, ரொம்பத்தான் ஓட்டுறீங்க... ஃபோட்டோத்தானே... இதோ எடுத்துட்டு வர்றேன்" என்று தனது டிஜிட்டல் கேமிராவை எடுத்துக் கொண்டு மாடியேறினான்.

ஒரு நிமிடம்...

இரண்டு நிமிடம்...

மூன்று நிமிடம்...


.
.
.
.
ஏழு நிமிடத்திற்கு பிறகு பிரவீன் இறங்கி வந்தான்.


"இந்தாங்கடா நீங்க கேட்ட ஃபோட்டோ, சூரியனை டைரக்டா பாத்தே ஃபோட்டோ எடுத்தேன்... ஆனா ஃபோட்டோல லென்ஸ் ஃப்ளேர் அடிக்குது. சரியா விழவேயில்ல.." என்று பிரவீன் பெருமையாக ஃபோட்டோவை அனைவருக்கும் காட்டினான்.

அனைவரும் அவன் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தனர்...

பிரவீனுக்கு அனைவரும் அவனை உற்றுப் பார்த்து கொண்டிருந்தது என்னவோ போல் இருந்தது...

"என்னடா அப்படி பாக்குறீங்க..?"

"டேய் உன் கண்ணுல என்னமோ கறுப்பு கலர் பரவியிருக்கு..?"

"என்னடா சொல்றீங்க..?"

"கண் எதாவது வலிக்குதா..?"

"இல்லியே..'

"அப்படியே இரு.." என்று கூறி ஒருவன் அவனை நெருங்கி வந்து அவன் கண்ணை உற்று பார்த்தான்

"டேய், உன் கண்ணுல கருப்பு கலர்ல ஏதோ பரவிக்கிட்டே இருக்குடா..?"

பிரவீன் தனது கண்களை கசக்கி கொண்டான்...

"ஹே பிரவீன், போய் கண்ணாடில பாருடா.." என்றான்

பிரவீன் பதறியடித்துப் போய் கண்ணாடியில் பார்த்தான்...

சாதாரணமாகத்தான் இருந்தது... பின்னாலிருந்து நண்பர்கள் சிரித்தார்கள்

"மாப்ளை பயந்துட்டாண்டா..." என்று கோரஸாக கத்தினார்கள்...

அறையே சிரிப்பில் களை கட்டியது...

மாலை அனைவரும் கிராமத்தில் தோப்பு, மலைக்கோயில், சந்தை, ஜல்லிக்கட்டு என உலா வந்தனர். பொழுது சாயும் வரை அன்றைய மாட்டுப் பொங்கல் திருநாளை நண்பர்கள் நன்றாகவே கொண்டாடினர்.

ஆனால்...

அன்று இரவு, அவர்களது கிராமத்து நண்பன், அனைவரையும் ஒரு தென்னந் தோப்புக்கு அழைத்து சென்றான். அங்கே கள்ளத்தனமாக காய்ச்சும் சாராயத்தை அனைவரும் சியர்ஸ் சொல்லி குடித்தனர். பிரவீனுக்கு அது மிகவும் பிடித்து போகவே, அளவுக்கு அதிகமாக குடித்தான்... அதில் அளவுக்கதிகமாக கலக்கப்பட்டிருந்த மெத்தனாலினால் போதையில் மட்டையாகி சுமோவில் ஏறியவன் மறுநாள் காலை சென்னையில் தனது வீட்டில் வந்து இறங்கும்போது... அவனுக்கு விடியல் தெரியவில்லை...

காலில் விழுந்து, அழுது, கெஞ்சி, உண்மையை மறைக்க உடன் வந்த நண்பர்கள் பழியை கங்கண சூரிய கிரகணத்தின் மீது போட்டார்கள்...

Signature

Friday, January 15, 2010

மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், கங்கண சூரிய கிரகணம்

3 விசேஷங்கள் ஒரே நாளில் வருவது விசேஷம்தானே... இதுல விசேஷம் என்னன்னா, 108 வருஷத்துக்கப்புறம் வந்த 'கங்கண சூரிய கிரகணம்'. ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் இன்னிக்கு கன்னியாகுமரியில விழுந்திருந்தது. எல்லா டிவி சேனல்லியும் லைவ் டெலிகாஸ்ட் காட்டிட்டிருந்தாங்க...

கி.மு. (கிரகணத்துக்கு முன்)
எனக்கு பிடிச்ச 'வெர்டிகல் லிமிட்ஸ்' என்ற ஹாலிவுட் திரைப்படம் (தமிழில்) சுட்டி டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. அதைத்தான் பாத்துட்டிருந்தேன். அந்த படத்தின் விளம்பர ப்ரேக்கில் சேனலை மாற்ற, சன் நியூஸ் சேனலில் 'சூரிய கிரகணம் லைவ் டெலிகாஸ்ட் ஃப்ரம் கன்னியாகுமரி' ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பேசிக்கொண்டிருந்த திரு. முத்து(முழுப்பெயர் கவனிக்கவில்லை) என்ற வானியல் நிபுணர் மிகவும் பொறுமையாகவும், விளக்கமாகவும் பேசியதில் 'வெர்டிகல் லிமிட்ஸ்' க்ளைமேக்ஸை மிஸ் பண்ணிவிட்டேன். இது கி.மு.

கி.பி (கிரகணத்துக்கு பின்)
வேறு சேனல்களில் என்ன பேசுகிறார்கள் என்று பார்த்த போது, ஹிந்த நியூஸ் சேனல்களில் மிகவும் மசாலாத்தனமாக விஞ்ஞானிகளையும், ஜோதிடர்களையும் மோத விட்டு (உண்மையிலேயே பலத்த வாக்குவாதம்) பணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். இந்த வாதம் மேடையிலோ அல்லது ஸ்டுடியோவிலோ நடக்கவில்லை, கிரகணத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சில சிறப்பு தலங்களில் நடந்தது... பார்க்க சுவாரஸ்யமாக இருந்தாலும் நடுவில் ஒருவர் மைக்கை வைத்துக் கொண்டு (காம்பேரர்) அவர்களின் சண்டைக்கு எண்ணையும் நெய்யும் ஊற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்க்கும்போது, சன் நியூஸ் ஏற்பாடு செய்திருந்த நிபுணர் உரையாடல் எவ்வ்வ்வளவோ சிறந்தது என்றுதான் தோன்றியது.

பாராட்டுக்கள், சன் நியூஸ்..

கங்கண சூரியகிரகணம்-னதும் எனக்கு ஞாபகம் வந்தது
இதுதான்...!!!


ஹி! ஹி!

பின்குறிப்பு : கங்கணாவின் தனி புகைப்படம் கிடைக்காததால், கங்கணாவை கட்டிக்கொண்டிருப்பவர் (கிரகண வெளிச்சத்தில்) இருட்டடிக்கப்பட்டுவிட்டார்...

Signature

Thursday, January 14, 2010

தை பொறந்தா ப்ளாக் பொறக்கும்...

நானும் அடிக்கடி ஒரு ப்ளாக் க்ரியேட் பண்ணி ஆனா, தொடர்ந்து எழுத முடியாம போயிடுது... Anywayz. Past is Past... பழைய(ன) ப்ளாகுகளை கழிந்துவிட்டு புதிய(ன) இந்த ப்ளாக்கையாவது தொடர்ந்து எழுதலாம்னுருக்கேன்...ப்ளாக் டைட்டிலைப் ('நானும் ஒரு...' என்ற டைட்டில்) பார்த்தால் கொஞ்சம் கவித்துமா (ஒரு வேளை) தோணலாம். அதென்னமோ ஒரு வார்த்தைக்கப்புறம் மூணு புள்ளி வச்சாவே ஒரு கவிதை ஃபீல் வந்துறுது... என்ன ஃப்ப்ப்பீலிங்-னு தெரியில... ஆனா, அந்த டைட்டிலுக்கு காரணம், நானும் ஒரு ப்ளாக் எழுதலாமே தோணியதால வச்ச டைட்டில்தானே தவிர வேறொன்னும் ஸ்பெஷலா இல்ல...

இன்னிக்கு ரொம்ப ஸ்பெஷல் டே, தைத்திருநாள், உழவர் திருநாள், தமிழ் புத்தாண்டு இப்படி கொண்டாட நிறைய பெயர்கள் இருந்தாலும் எனக்கு பிடிச்ச பெயர் பொங்கல்தான். ஏன்னா,

பொங்கல்னதும் எனக்கு ஞாபகம் வர்றது
இதுதான்...அனைவருக்கு ஹேப்பி பொங்கல்...

Signature

Popular Posts