Friday, June 27, 2014

'ஆ'மயம் 14 - CROCIN என்கிற மசால் தோசைமுதல்முறை கடல் கடந்து வெளியூர் போகும்போது புதிய உணவு வகை, புதிய நீர் என்று சில அசௌகர்யங்கள் ஏற்படுவது வழக்கம்.. அந்த அசௌகர்யங்கள் நாளடைவில் வளர்ந்து, நம்மூரை மிகவும் ஞாபகம் வர செய்து ஜூரமாய் வெளிப்பட்டு விடும். அதே போலத்தான், 'ஆ' படத்தில் 'சிங்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த பாலா'வுக்கும் ஜப்பான் பயணம் மேற்கொண்டதும், முதலில் குதூகலமாய் இருந்தாலும், ஓரிரு நாளிலேயே மேற்சொன்ன ஜூரம் தொற்றிக்கொண்டது.

அப்படி ஒன்றும் கடுமையான ஜூரம் இல்லை.. ஆனால், மருந்து கொடுத்தாலும் தீராத வகையான ஜூரம்... ஷூட்டிங் என்னமோ பாதிப்பில்லாமல் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.. ஷெட்யூல்படி ஒரேயொரு காட்சியில் மட்டும் பாலாவை நடிக்கவைக்கமுடியாமல் போனது... அவரில்லாத அந்த காட்சியில்... 'அவனுக்கு ஜூரம்டா... சுஷூ* சாப்பிட்டு சுருண்டு படுத்துட்டான்..' என்று டைலாக் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருந்தது..  இனி எப்படி சமாளிப்பது என்று முழித்துக் கொண்டிருந்தோம்.

எங்களது ஜப்பான் ஷூட்டிங்கிற்கு உதவிய திரு.ஹரி நாராயண் அவர்களின் GOVINDA'S RESTAURANTக்கு சென்றிருந்தோம்... அது ஜப்பானில் அரிதாக கிடைக்கக்கூடிய PURE VEGETARIAN வகைகளில் மிகவும் பிரசித்தமான INDIAN RESTAURANT அங்கு நம்மூர் மசால் தோசையை சுடசுட  கொண்டு வந்து பாலாவின் முன்னால் வைத்ததுதான்... பாலாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது பாருங்கள்... ஆனானப்பட்ட மருந்து மாத்திரையில் குணமாகாத ஜூரத்தை ஒரு மசால் தோசை போக்கியது... அந்த மசால் தோசை புண்ணியத்தால் ஷூட்டிங் மேலும் சிறப்பாக தொடர்ந்தது...


'இது மசால் தோசையல்ல... என் ஜூரத்தை போக்க வந்த CROCIN' என்று பாலா சொன்னது இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை.. 

பிறகென்ன, ரெகுலராக நாங்கள் அங்கேயே சாப்பிட ஆரம்பித்தோம் என்று சொல்லித்தானா தெரியவேண்டும்...

(தொடரும்)

---------------------
* Sushi - ஜப்பான் டிஷ்


Signature

Wednesday, June 25, 2014

'ஆ'மயம் 13 - உலகம் சுற்றும் வாலிபன்எக்சாம் எழுதும்போது அடிஷனல் ஷீட் வாங்கி பார்த்திருக்கிறேன்.. 'ஆ' படத்தின் கதைநாயகன் கோகுல் தனது பாஸ்போர்ட் புக்-கில் அடிஷனல் புக் வாங்கி வைத்திருப்பவர்... அந்தளவுக்கு உலகத்தில் பல ஊர் சுற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். இவரை உலக சுற்றும் வாலிபன் என்று சொல்வது சாலப்பொருந்தும்.  எங்கள் குழுவில் இவருடன் எப்போது ஃபோன் பேசினாலும், 'இந்தியாவுல இருக்கீங்களா..?' என்றுதான் பரிகசித்துதான் பேச ஆரம்பிப்போம்...

Gokul

இவர் இதற்கு முன்னமே நான்கு முறை ஜப்பானிற்கு சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இவரும் சிவகார்த்திகேயனும் இணைந்து ஜப்பானில் நிகழ்ச்சி நடத்திய வரலாறும் உண்டு என்று தெரிந்தது.. இதனால், கோகுலுக்கு அந்த ஊரில் ரசிகர்கள் அதிகம்... நம்மூர் தமிழ் மக்கள் மட்டுமின்றி, அந்த ஊர் நேட்டிவ் ஜப்பானிய மக்களிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு என்று அங்கு சென்றபோதுதான் பார்க்க முடிந்தது...

Aaaah Team Nori & Tamami

கோகுல் ஜப்பான் வந்திருப்பது தெரிந்து, அதுவும் ஷூட்டிங் செய்ய வந்திருப்பது தெரிந்து, பல பேர் (ஜப்பானியர்கள் உட்பட) வெகு தூரத்திலிருந்து வந்து அவரை பார்த்து பேசி வாழ்த்திவிட்டு செல்வது தினமும் நடந்து கொண்டிருந்தது. அதில் குறிப்பானவர்... தமாமி  மற்றும் நோரி என்ற ஜப்பானிய நண்பர்கள்... இவர்கள் நம்மூர் கணக்குப்படி சுமார் செங்கல்பட்டு அளவு தூரத்திலிருந்து  அவர்கள் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு வந்து அவரிடம் பேசி வாழ்த்திவிட்டு ஃபோட்டோவெல்லாம் எடுத்து கொண்டு சென்றது ஆச்சர்யமாக இருந்தது.

During Hat Mime Performance

இதுமட்டுமின்றி, நாங்கள் ஜப்பானியர்களோடு ஷூட் செய்துக்கொண்டிருக்கும்போது, ஷூட்டிங் இடைவேளையில் இவரது ஃபேமஸ் மைமிங்கான 'ஹேட் மைம்' செய்து காட்டினார்.. அதை பார்த்த மாத்திரத்திலிருந்து, அங்கிருந்த நடிகர்கள் 12 பேரும் இவருக்கு புது ரசிகர்களாகிவிட்டார்கள். Proud to be his friend...

(தொடரும்)


Signature

Monday, June 23, 2014

'ஆ'மயம் 12 - பேய் பயம்


படத்தில் நடிக்க வந்த ஜப்பானியர்களிடம்.. முறையே வணக்கம் வைத்து அவர்களுடன் நடிப்பதற்கு முன் சற்றே கலந்துரையாடினோம்... யார் முதலில் பேசுவது என்று இருந்த தயக்கத்தை நான் உடைத்தேன்.. 'அனைவருக்கும் கொனிச்சிவ்வா...' (வணக்கம்) என்றேன்... அவர்கள் அனைவரும் அவர்கள் முறைப்படி குனிந்து வணக்கம் வைத்தார்கள்...

அடுத்ததாக, 'நீங்கள் நடிக்கப்போவது ஹாரர் படம்' என்று கூற... கொல்லென்று சிரித்தார்கள். எங்களுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது... ஒரு பெண் நடிகை எங்களிடம் ஜப்பான் மொழியில் ஏதோ சொல்ல... அது புரியாமல் நாங்கள் பேய் முழி முழிக்க... உடன் இருந்த நண்பர் திரு.கௌரி ஷங்கர்.. மொழிப்பெயர்த்தார்... அவர்களில் பலருக்கு பேய் என்றால் பயங்கர பயமாம்... அவர்கள் இதுவரை முழுதாக எந்த ஹாரர் படத்தையும் பார்த்ததில்லையாம்... இடையிடையே கண்கள் மூடிக்கொள்வார்களாம்... அட பெண்கள்தான் அப்படி என்றால், கூட நடித்த ஆண்களும் அதையேத்தான் கூறினார்கள்.


ஜப்பானில் ஹாரர் படங்கள் ஃபேமஸ் என்றுதானே  இவ்வளவு தூரம் வந்து படமாக்க விரும்பினோம்.. இப்படி வந்தவர்கள் பயந்தால் எப்படி..? என்று முழித்திருக்க... 'கோழி குருடா இருந்தா என்ன..? குழம்பு ருசியா இருந்தா சரி..' என்ற கவுண்டர் தியரிப்படி, 'நடிகர்களுக்கு பயம் இருந்தால் என்ன... பார்ப்பவர்களுக்கு பயம் வந்தால் சரி...' என்று ஷூட்டிங்-ஐ தொடர்ந்தோம்... அவர்களது பேய் பயம் திரையில் தெரியும்படி நன்றாக நடித்து கொடுத்ததால், அவுட்புட்-ல் ஆல் இஸ் வெல்... அது போதுமே..!!!

குறிப்பாக, பேபி மியாபி என்ற குட்டிப்பெண் பேயைக்கண்டு பயப்படுவது போலவும்... பிறகு அவளே (சாரி.. கதை சொல்லக்கூடாது) அசத்தினாள்.. இரவு ஷூட்டிங்கில் தூங்காமல் நடித்து கொடுத்த அந்த பேபி மியாபி, சென்றமுறை அம்புலியில் நடித்த 'நான் கடவுள்' ராஜேந்திரன் கதாபாத்திரத்தின் மகளாக வரும் செவ்வந்தி (பேபி ப்ரியா) கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தினாள்...

(தொடரும்)


Signature

Thursday, June 19, 2014

'ஆ'மயம் 11 - நடுக்கம்


ஜப்பான் என்றால் எது ஃபேமசோ இல்லையோ நில நடுக்கம் பூகம்பம் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மிகவும் ஃபேமஸ். நாங்கள் ஷூட் செய்தபோது பெரிய அளவில் இல்லை என்றாலும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் மட்டும் நடந்தது...


ஜப்பானில் ஒரு வீட்டில் ஷூட்டிங் செய்துக்கொண்டிருந்தோம். அந்த வீட்டின் நடுவே அழகாக ஒரு மினி விளக்கு அமைக்கபட்டிருந்தது... அந்த காட்சி ஷூட் செய்து முடித்ததும். அந்த வீட்டு ஓனர் திரு.முரளி மற்றும் திருமதி. வள்ளி முரளி அவர்கள், இப்போது ஒரு சின்ன நிலநடுக்கம் வந்து சென்றது என்று பேசிக்கொண்டனர்..

எங்களுக்கு உடனே 2012, DAY AFTER TOMORROW போன்ற விஷூவல்கள் உள்ளுக்குள் தோன்றி கிலியை ஏற்படுத்த... முகத்தை மட்டும் தைரியமாக வைத்துக் கொண்டு, 'எங்களுக்கு எதுவுமே நிலநடுக்கம் தெரியவில்லையே' என்று கேட்டதற்கு, ஜப்பானில் உள்ள பெரும்பாலான வீடுகள் நிலநடுக்கத்தையும், பூகம்பத்தையும் தாங்கும்படியாய் விசேஷ அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால் நடுக்கம் ஏற்படும் போது நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாது என்று கூறினார்.

பின்னே எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, நாங்கள் ஷூட் செய்த வீட்டின் நடுவே தொங்கும் அந்த விளக்கில் ஒரு சின்ன செயின் தொங்கிக் கொண்டிருந்தது.. (லைட் ஸ்விட்ச்தான்) அந்த செயின் ஆடினால், நிலம் நடுங்கி கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம்.

செயின் தெரிகிறதா..? நிலநடுக்கத்தையும்,  பூகம்பத்தையும், இன்னபிற இயற்கை சீற்றங்களையும் அறிய எத்தனையோ வகையிருக்கிறதில்லையா... அதுபோலதான் இதுவும்.. என்று கூறினர்.. அனைவரும் அந்த செயினையே கொஞ்ச நேரம் சத்தமின்றி பார்த்துக் கொண்டிருந்தோம்.. அது மெல்ல ஆடுவது போலவே எங்களுக்கு தெரிந்து கொண்டிருந்தது...

அந்த ஹாலில் அடுத்து கேட்ட சத்தம்... 'பேக் அப்'


Signature

Saturday, June 14, 2014

'ஆ'மயம் 10 - சினிமா (எ) சாத்தான்காரர்கள்


ஜப்பானில் ஸ்டுடியோவில் பெரும்பாலும் இரவு நேர ஷூட்டிங்தான் போய்க்கொண்டிருந்தது... சீர் என்றால் அப்படி ஒரு சீரான அமைப்பு அந்த ஸ்டுடியோ க்ரியேச்சூரில். இரவு 11 மணி முதல் காலை 8 மணி வரை ஃப்ளோர் எங்கள் வசம். இரவு 10:55க்குதான் ஃப்ளோர் சாவி கையில் கொடுக்கப்படும்... உள்ளே செல்லும்போது, நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கும் பொருட்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. குண்டூசியானாலும் சரி, X-Ray Machine ஆனாலும் சரி, புத்தர் சிலையானாலும் சரி... அது எவ்விடத்திலிருக்கிறதோ அதை ஃபோட்டோ எடுத்து வைத்து கொள்ள வேண்டும். காலை மீண்டும் ஃப்ளோரை ஒப்படைக்கும்பொழுது.. அந்தந்த பொருட்களை அதே இடத்தில் (ஃபோட்டோவை பார்த்து) அடுக்கி வைத்துவிட்டு.. சுத்தமாக அறையை காலி செய்து 7:55க்கு சாவியை திருப்பி கொடுத்துவிட வேண்டும். இதில் கொஞ்சம் பிசகினாலும், வாடகை கூட்டப்படும், பொருட்களின் சேதாரத்திற்கேற்ப ஃபைன் போடப்படும்.

FUMIKO MASE

இந்த விதிமுறைகள் எல்லாம் பயமுறுத்துவதற்காக அல்ல... வேலை சுத்தமாக இருக்க மட்டுமே.. எனவே இதை பின்பற்றுவதில் தவறொன்றுமில்லை.. காரணம், நாங்கள் சென்னையில் ஒரு பிரதான பகுதியில் இருக்கும் ஒரு ஸ்கூலை ஷூட்டிங்கிற்கு கேட்டபோது, சினிமாக்காரர்கள் எல்லாம் சாத்தான்கள்.. அவர்களுக்கு ஸ்கூல் கொடுக்கூடாது.. என்று கூறினார்கள். எங்களுக்கு அவமானமாகிவிட்டது.. ஏன் இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்க, ஏற்கனவே அந்த ஸ்கூலை ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஷூட்டிங்கிற்கு கொடுக்கவும், அவர்கள் ஷூட்டிங் நடத்தியபோது, அவ்விடத்தை போதுமானளவிற்கு சேதாரம் விளைவித்து, அசுத்தம் செய்துவிட்டு போயிருப்பதே இவர்களின் சாத்தான் பயத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படது. எனவே, மேலே சொன்ன விதிமுறைகள் ஒருவகையில் நம்மை சாத்தானாக்காமல் காப்பாறும் வல்லமை படைத்தது...

Knock Knock - Its a wrong Door
நாங்கள் புக் செய்திருந்த ஃப்ளோர் அந்த பில்டிங்கின் கடைசி மாடிக்கு ஒரு அடுக்கு கீழே இருந்தது... எங்கள் கேமிராமேன் இரவு இடைவேளையில் சுமார் 2:30 மணிக்கு ப்ரேக் முடித்துவிட்டு ஷூட்டிங் ஃப்ளோர்தான் என்று தப்பாக நினைத்து ஏதோ ஒரு ஃப்ளோரை தட்ட.. அறைக்கதவை ஒரு சுமோ மனிதர் (ஜப்பானிய மல்யுத்த குண்டு வீரர்) திறந்திருக்கிறார்.


அவர் கண்களில் அப்படி ஒரு தூக்கம கலைந்த கோபம் கொப்பளித்திருக்கிறது. 'என்ன' என்று கேட்க.. சதீஷ் (கேமிராமேன்) பணிவாக ஷூட்டிங் என்று கூறியிருக்கிறார். அவர், 'ஸ்டுடியோ கீழே' என்று கோபமாக கைகாட்டிவிட்டு கதவை படார் என்று கோபத்துடன் சாத்திவிட்டு ஏதோ புலம்பியபடி போயிருக்கிறார்... ஒரு நிமிடம் அவர் தன்னை தொடைபிடித்து தூக்கி மல்யுத்த ஸ்டைலில் படிகளில் உருட்டிவிட்டுவிடுவாரோ என்று பயந்ததாக பிறகு சதீஷ் தெரிவித்தார்...

Image Courtesy : http://www.akiodesigns.com

(தொடரும்)


Signature

Thursday, June 12, 2014

'ஆ'மயம் 09 - ஜப்பான் சிப்ஸ்ஹாஸ்பிட்டல் பர்மிஷன் மறுக்கப்பட்டதும், திரு.கௌரி ஷங்கர் அவர்கள் மூலம் ஸ்டுடியோ கிரியேச்சூர் என்று ஒரு ஸ்டுடியோவை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் தங்குமிடத்திலிருந்து 1.30 மணி நேரம் பயணித்து ஸ்டுடியோ சென்றடையவேண்டும். சென்றோம். ஏற்கனவே, இமெயில் மூலம் இந்தியாவிலிருந்தபடியே ஜப்பானிய நடிகர்களுக்கான தேர்வு நடத்தியிருந்ததால் சிரமம் இருக்கவில்லை... 

இந்தியாவிலிருந்து நாங்கள் கிளம்பும்போதே திரு.ஹரி நாராயண் சொல்லியிருந்த முக்கியமான வாக்கியமே அங்கும் எங்களுக்கு தெரிவிக்கபட்டது. அதென்னவென்றால்... ஜப்பானியர்கள்... PUNCTUALITYக்கு மிகவும் பெயர் போனவர்கள்... அதனால், எக்காரணத்தைக் கொண்டும், ஜப்பானியர்களுடன் பழகும்போது, காலதாமதம் என்ற ஒன்றை அடியோடு மறந்துவிடவேண்டும் என்று கூறினார்கள்.. அது 100% உண்மை... நாங்கள் ஸ்டுடியோ சென்றடைவதற்கு 15 நிமிடம் முன்னாலேயே ஜப்பானிய நடிகர்கள் அனைவரும் அங்கு ஆஜர்... 

எங்களது ஜப்பானிய நடிகர்கள் அனைவரும் ஒரு தியேட்டர் குரூப்பை சேர்ந்தவர்கள்... சிரித்த முகத்தோடு எங்களை அவர்கள் பாணியில் வரவேற்றார்கள்... ஃபுமிகோ, ஆயாகோ, ஷிராகா, சாக்யோ, பேபி மியாபி, யூகி, etc. என்று அனைவரோடும் நடந்தேறிய பரஸ்பர அறிமுகங்களுக்கு பிறகு, ஸ்டுடியோவிற்குள் நுழைந்தோம்... ஸ்டுடியோ இரவு 11 மணியிலிருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்ததால், 10.55க்கு எங்களுக்கான ஃப்ளோரின் சாவி கொடுக்கப்பட்டது... உள்நுழைந்தோம்... எங்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்த ஹாஸ்பிட்டல் செட்-அப்-ஐ பார்த்து... பணியை துவங்கினோம்... நடிகர்களுடன் அவர்களோடு கதையைப் பற்றி கலந்துரையாடினோம். ஜப்பானிய மொழியில் எங்களுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் திரு.கௌரி ஷங்கர் மற்றும் திரு.மனோஜ் உதவினர்...

ஜப்பான் நண்பர்களுடன்...

இந்த இடத்தில் நடந்த ஒரு ஹாஸ்யத்தை சொல்ல வேண்டும்

ஷூட்டிங் நடுவே ப்ரேக்கின் போது... நானும் ஹரியும் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி ஏதாவது குடிக்க அந்த ஊர் காஃபி டீ கிடைக்குமா என்று அலைந்து ஒரு சூப்பர் மார்கெட்டிற்குள் நுழைந்தோம்... ஒரே ஒரு நபர்தான் இருந்தார்.. அங்கு ஹாட் காஃபியை வாங்கிக்கொண்டு கேமிராமேன் சதீஷூக்கு ஃபோன் செய்ய... அவர் தனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வருமாறு கூறினார்... ஆனால் ஸ்ட்ரிக்டாக வெஜிடேரியன் ஐட்டம்தான் வேண்டும் என்று கேட்க... அந்த கடைக்காரரிடம்  வெஜிடபிள் பர்கர் கேட்டோம்.. அவர் நடந்து சென்று ஒரு அலமாறியிலிருந்து பர்கரை எடுத்து எங்களுக்கு குனிந்தபடி பணிவோடு கொடுத்தார்... அதை உற்றுப்பார்க்க.. அதில் இறைச்சி இருப்பது தெரிந்தது... 'இது என்ன என்று கேட்டேன்..' 'அது பன்றி இறைச்சி' என்றார்... 'நான் உங்களிடம் வெஜிட்டபிள் பர்கர்தானே கேட்டேன்' என்று கூற... அந்த இறைச்சியோடு சேர்ந்து ஒட்டப்பட்டிருக்கும் கோஸ் கேரட் இத்யாதிகளை காட்டி 'இதோ இதில் வெஜிடபிளும் இருக்கிறதே' என்றார்... 'நோ தேங்க்ஸ்' என்று அவருக்கு புரியாத ஆங்கிலத்தில் கூறிவிட்டு... வெளியேறினோம்... இதை கேமிராமேனிடம் கூற... அவர் ஏக்கப்பெருமூச்சு விட்டதை பார்த்து, அருகில் இருந்த கேமிரா அசிஸ்டெண்ட் மணிகண்டன் இந்தாங்க இதை சாப்பிடுங்க என்று தனது சிப்ஸ் பேக்கெட்-ஐ நீட்டினார்... ஒருவழியாக வெஜிட்டேரியனில் ஏதோ ஒன்று கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் இருவரும் அதை சாப்பிட்டு கொள்ள மீண்டும் ஷூட்டிங்-ஐ தொடர்ந்தோம்.. அடுத்த நாள் அந்த சிப்ஸ்... ஃபிஷ் ஆயிலில் செய்யப்பட்டது என்று தெரிந்தது... :)

(தொடரும்)


Signature

Saturday, June 07, 2014

'ஆ'மயம் 08 - Video Blog Episode 01 : Tokyo Diary

'ஆ' திரைப்படத்தின் மேக்கிங் போது எடுத்த சின்ன சின்ன வீடியோக்கள், வீடியோ பதிவாய் இதோ உங்கள் பார்வைக்கு

Episode 01 - Tokyo Diary


அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Friday, June 06, 2014

'ஆ'மயம் 07 - ஆ கதைகள் 1, 2 & 3

டிஸ்கி : 'ஆ' ப்ரொமோஷனுக்காக எழுதப்பட்ட குட்டிக்கதைகள். இந்த கதைகளுக்கும், படத்தின் கதைக்கும் திகிலைத்தவிர எந்த சம்மந்தமும் கிடையாது...

ஏற்கனவே 'ஓர் இரவு' பப்ளிசிட்டியின் போது 'ஓர் இரவு கதைகள்' என்று குட்டி குட்டி ஹாரர் கதையை முயன்றிருந்தேன்... இருப்பினும்.. முயற்சிக்கு Expiry Date கிடையாது என்பதால்.. மீண்டும் அதே குட்டி குட்டி ஹாரர் கதை முயற்சி... இந்த 'ஆ' கதைகள்கதை #01 : 666

பென்னி அன்று மிகவும் சந்தோஷமாய் இருந்தான்.. 6 மாதம் முன்பு புக் செய்திருந்த அவனது பைக் இன்று எந்த நிமிடமும் டெலிவரி செய்யப்படும்...

டைம் பார்த்தான்... 6 மணி அடிக்க இன்னும் 6 நிமிடம் இருந்தது...

நேரத்தை போக்குவதற்காக... FACEBOOK திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்... அதில் ஒரு ஹாரர் திரைப்படத்தின் புகைப்பட பகிர்வு இருந்தது. அதில், 666 என்ற சாத்தானின் எண் பற்றிய குறிப்புகள் இருந்தது... அந்த புகைப்படத்தை குறைந்தபட்சம் 6 பேருக்காவது பகிர வேண்டும் என்றும்.. இல்லாத பட்சத்தில்... அந்த சாத்தான் எண் பேய்வடிவம் கொண்டு இதை படிக்கும் நபரை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும்... எச்சரிக்கை இருந்தது... பென்னி சிரித்தான்... Close செய்தான்... திடீரென்று பின்னாலிருந்து டங் டங் என்ற கடிகார பெல்.. 6 முறை ஒலித்து அடங்கியது... பயத்துடன் திரும்பி கடிகாரத்தை பார்த்தான்... அதில் 666 என்றிருந்தது... '6 மணி',' 6ஆம் தேதி', '6 மணி' என்று தெரிந்தது... ஏதோ ஒரு வித பயுணர்வு அவனுள் உழன்றது... ஒரு சின்ன இடைவெளியில் தன்னைத்தானே சுதாரித்து கொண்டு மீண்டும் Facebookல் தனது GirlFriendடன் Chat செய்ய விரும்பி அவளுக்கு செய்தி அனுப்பினான்.. அப்போது, பின்னாலிருந்து காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டது...

சந்தோஷத்துடன் ஓடி சென்று கதவை திறக்க... அவன் எதிர்ப்பார்த்து காத்திருந்த புது பைக் டெலிவரி ஆனது... அதை மகிழ்ச்சியுடன் சுற்றி சுற்றி பார்த்து சிலாகித்துக்கொண்டான்... முடிவாய் பென்னி பார்த்த ஒருவிஷயம் அவனை கலவரமடைய வைத்தது... அது... வண்டியின் நம்பர் ப்ளேட்... "TN 20 EV 6666" என்றிருந்தது...

பென்னி, "ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

கதை #02 ; பரிசு

அந்த மலைதேசத்து வளைவுப்பாதையில்... அடிக்கும் பேய்மழையை பொருட்படுத்தாமல் முகில்-ன் கார் வேகமாக போய்க்கொண்டிருந்தது...

காருக்குள் இயங்கும் ஏசி-யையும் தாண்டி முகில்-க்கு வியர்த்துக் கொண்டிருந்தது...

தனது மனைவிக்கு Surprise Birthday Giftஆக கொடுப்பதற்காக வாங்கிய அதே காரில், அவளது பிணத்தை ஏற்றி செல்வான் என்று அவன் எள்ளளவும் நினைத்து பார்க்கவில்லை...

என்ன செய்ய.. விதி... விளையாடியது..

பிறந்தநாளதுவுமாக அவளுக்கு கிஃப்ட் கொடுக்க surpriseஆக அவன் வீட்டுக்குள் நுழைய... அவளது துரோகம் கண்முன்னே... முகிலுக்கு தெரியவர... ஷண நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது...

விளைவு... பின்சீட்டில் அவள் பிணம்...

துரோகம்... ஆத்திரம்... ஏமாற்றம் என்று மாறி மாறி அவனுள் கோபம் பொங்கி கொண்டிருக்க... ஒரு ஓரமாய் அவள் மீது கொண்டிருந்த காதல் வலித்தது.. அவளை மிகவும் Miss செய்வதாய் உணர்ந்தான்... திடீரென்று அவன் மனதில் ஒரு Vibration... மொபைல் ஒலித்தது... வண்டி ஓட்டியபடி எடுத்து பார்த்தான்...

அவன் மனைவி நம்பரிலிருந்து... 'ONE SMS RECEIVED' என்று தெரிந்தது...

அவள் பிணத்தை காரில் புதைக்கும்போது... அவள் மொபைலையும் உள்ளே வைத்து கட்டியது நினைவுக்கு வந்தது... பிறகு எப்படி..?

குழப்பத்துடன் SMSஐ படித்தான்...

"MISS YOU TOO DARLING... JOINE ME" (தமிழாக்கம்... உன்னை பிரியமுடியாது கண்ணா... நீயும் என்னுடன் சேர்ந்துவிடு) என்றிருந்தது..

பயத்துடன் மெல்ல.. நிமிர்ந்து காரின் மேலிருக்கும் Rear View கண்ணாடியை பார்த்தான்

அதில் கோரமாய் அவன் மனைவியின் பிணம் அவனையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

கதை #03 : எனக்கு பிடித்த புக் (மீள்பதிவு)

புத்தகங்களைவிட தூசி அதிகம் படிந்திருந்த அந்த பழைய புத்தக கடைக்குள் ரவி நுழைந்தான்...
வெகுநேரமாய் அங்குமிங்கும் தேடியபடி இருந்தவனை நோக்கி கடைக்காரர் வந்தார்...

ரவி அவனிடம், "ஏதாவது திகில் கதை நாவல் இருக்கா..?" என்று கேட்க

கடைக்காரன் ஒருவித மர்ம சிரிப்புடன் மேல் அலமாறியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து கொடுத்தான்

ரவி அதை ஆர்வத்துடன் பார்த்தபடி, 'இந்த புக்.. நல்லா திகிலா இருக்குமா..?"

கடைக்காரன், "நானே பலமுறை படிச்சி பயந்துருக்கேன் சார்.."

ரவி ஏளனமாக சிரித்தபடி "ஹாஹ்ஹா... அப்படியா.. அப்படி எத்தனைவாட்டி படிச்சி பயந்திருக்கீங்க..?" என்று கூற

"சாகுறதுக்கு முன்னாடி 4 தடவை.. செத்ததுக்கப்புறம் 3 தடவை படிச்சிருக்கேன்" என்று கூறியபடி வெளிச்சத்திற்கு வர, புத்தக கடைக்காரன் கண்கள் இருக்குமிடத்தில் வெற்றிடமாய் இருந்தது...

ரவி, "ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

(தொடரும்)

Image Courtesy : http://wilsonkhoo.wordpress.com


Signature

Wednesday, June 04, 2014

'ஆ'மயம் 06 - ஜப்பான்ல கூப்டாக


ஜப்பான் என்றதும் எனக்கு 'ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக..' என்ற கோவை சரளா அவர்களின் குரல்தான் நினைவுக்கு வரும்.. தமிழ் சினிமாவில் ஜப்பான் என்றால் கல்யாணராமன் படத்தில் .தெத்துப்பல்லோடு கமல்ஹாசன் கண்முன் தெரிவார்... ஹாரர் படம் என்று  வந்துவிட்டால் எனது டாப் 10 ஹாரர் பட வரிசையில் ரிங்கூ (பிறகு ஆங்கிலப்படமாக ரீமேக்கபட்ட The Ring) என்ற படம்  நினைவுக்கு வரும். அந்த படத்தை தொடர்ந்து நான் பார்த்த பல ஜப்பானிய ஹாரர் படங்கள் கண்முன் வந்து செல்லும். அப்படி ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த J-Horror வகை படங்கள் எடுக்கப்பட்ட இடத்தில் நாமும் ஒரு ஹாரர் படத்தை எடுக்க வேண்டும் என்று செய்த முயற்சியின் விளைவாய் அமைந்தது எங்கள் ஜப்பான் பயணம்.  

'ஆ' படத்தின் ஒரு காட்சிப்படம்

இந்த முயற்சிக்கு எங்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்தவர் MSG Groups நிறுவனர் திரு.ஹரி நாராயண் அவர்கள். ஜப்பான் தமிழ் சங்கத்தின் சார்பாக இவர் ஏற்கனவே கோகுல்-ஐ வைத்து பல கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார. இதனால், கோகுலின் ரசிகர்கள் ஜப்பானில் அதிகம். அதில் ஹரி சாரும் ஒருவர். அவர் கோகுல் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால், அவரது வளர்ச்சிக்கு என்னால் முடிந்தமட்டும் உதவி செய்கிறேன் என்று கூறி.. சொல்லிய வண்ணம் செயல்படுத்தி காட்டினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடினமாக கிடைத்த ஜப்பான் படப்பிடிப்பு பர்மிஷன் மற்றும் விசாவிற்கு பிறகு, ஒரு நன்னாளில் ஜப்பானில் தரையிறங்கினோம்... அமைதியாக இயங்கும் ஏர்போட்டிலிருந்து வெளிவந்ததும் நண்பர் திரு.கௌரி ஷங்கர், திரு. முரளி, திரு. கார்த்திக் & விக்கி என்று ஜப்பானிய தமிழ் சங்க நண்பர்கள் எங்ளை குடும்பத்தினராய் பாவித்து வரவேற்றனர். அதுவும் கோகுலை கண்டதும், அவர்கள் குதூகலமடைந்து பேசி பழகியது, அவரது முந்தைய கலைநிகழ்ச்சிகளின் வெற்றியை பறைசாற்றியது.

அருமையான க்ளைமேட்டில் ஒரு சிறு பயணத்தில் எங்கள் தங்குமிடத்திற்கு வந்தடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த பில்டிங்-ன் பால்கனியிலிருந்து பார்த்தால் சீரான 'அராகாவா' நதியோட்டம் என்று ரம்யமான ஒரு சூழல். ஒரு பரபரப்பான சிட்டிக்கு நடுவே ஒரு அமைதியாய் ஓடும் ஆறு பார்க்க அவ்வளவு அழகு... ஒருவேளை சென்னையில் கூவம் சுத்தமாக இருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று குழப்பத்தோடு அன்றிரவு உறங்கினேன்.

அடுத்த நாளிலிருந்து பரபரப்பாக எங்களது ஷூட்டிங் வேலைகளை துவக்க ஆரம்பித்தோம். ஷூட்டிங் நடத்த வேண்டிய இடங்கள், தேர்வு செய்திருந்த ஜப்பானிய நடிகர்களோடு சந்திப்பு.. அவர்களோடு கதையாலோசனை என்று எங்களது வேலை துவங்கியபோதும், நாங்கள் பயணப்பட்ட இடத்தில் ஜப்பானின் சில அதிசய பழக்கவழக்கங்களை காண நேரிட்டது.. அதில் முக்கியமாக பலர் சைக்கிள் ஓட்டி செல்வதை காண நேர்ந்தது.. கோட் சூட் என்று அணிந்து ஒரு ஆபிசராய் தெரியும் நபர் கூட, கூச்சப்படாமல்(?) சைக்கிள் ஓட்டி செல்கிறார்... சைக்கிள் ஜப்பானில் கொண்டாடப்படுவது தெரிந்தது... அவர்களின் இளமையான தோற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருக்க வேண்டும்.நாங்கள் ஷூட்டிங்கிற்காக கேட்டிருந்த ஒரு ஹாஸ்பிடல் கடைசி நேரத்தில் பர்மிஷன் இல்லாமல் மறுக்கப்பட்டது. காரணம், ஒரே ஒரு கடைசி பேஷண்ட் இருக்கும்வரையிலும் அந்த ஹாஸ்பிட்டல் ஷூட்டிங்கிற்கு வழங்கப்படக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் என்றார்கள்...

(தொடரும்)Signature

Monday, June 02, 2014

www.aaaahmovie.com : Aaaah Movie's Website Launched

Hello Friends,

Happy to announce that we have launched "Aaaah" film's official website.

URL : www.aaaahmovie.com

Please visit the site for more updates about the film.

More things are awaiting to be unveiled. Stay tuned...

Regards
HARESH NARAYAN


Signature

Popular Posts