வணக்கம் நண்பர்களே,
16ஆம் தேதி, லேசான தூறலுடன் தொடங்கிய மயக்கும் மாலை பொழுதில், நானும் எனது படக்குழுவினரும், அரங்கிற்கு வந்து சேர்ந்தோம். கூட்டம் மிக குறைவாகவே இருந்தது... வெளியே காலையில் எனது உதவி இயக்குனர் வந்து ஒட்டிவிட்டு சென்ற 'ஓர் இரவு' போஸ்டர் தெரிந்தது.
அரங்கினுள்ளே இன்னும் முந்தைய திரைப்படம் ஓடிக்கொண்டிருந்ததாக தெரிந்தது. காத்திருந்தோம். வெளியே கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. ஒருசிலர், போஸ்டரை காட்டி, 'இது நல்ல படம்' என்று தம் நண்பர்களிடம் சான்று அறிவித்துக் கொண்டிருந்தது எங்களுக்கு தெம்பூட்டியது.
முந்தைய திரைப்படம் முடிந்து, கூட்டம் வெளியே வந்ததும், புதுக்கூட்டம் அரங்கிற்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. நாங்களும் உள்ளே சென்று, 'ஓர் இரவு' டிவிடி-ஐ ப்ரொஜெக்டர் ஆபரேட்டரிடம் கொடுத்து, சோதனை ஓட்டம் பார்த்துக் கொண்டோம்.
5.30 மணிக்கு, படம் போடுவதற்கு முன், ரேவதி மேடம் வந்து ஒரு சின்ன உரை நிகழ்த்தினார்கள். ''திரைப்படம் பார்க்கும்போது, தயவு செய்து, செல்ஃபோன் பேசுவதையோ, SMS அனுப்புவதையோ, எழுந்து வெளியே அடிக்கடி சென்றுவருவதையோ தவிருங்கள். அமைதியாக படத்தைப் பாருங்கள். கலாட்டா செய்து கொண்டு பார்ப்பதற்கு இது பொது திரையரங்கு அல்ல, நீங்களெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியன்ஸ் என்பதால், கண்ணியம் காத்திருங்கள்'' என்று மிகச்சுருக்கமாக பேசிவிட்டு சென்றார்கள்.
பிறகு ஒருவர் எங்களிடம் (3 இயக்குனர்கள் நான், ஹரி ஷங்கர் மற்றும் கிருஷ்ண சேகர்) வந்து, இயக்குனர் அறிமுகம் கொடுக்கலாமா..? ஏதாவது பேசுகிறீர்களா..? என்று கேட்டார். இல்லை சம்பிரதாயங்கள் வேண்டாம் முதலில் அனைவரும் படத்தை பார்க்கட்டும் என்று தவிர்த்துவிட்டோம்.
பிறகு, ஒரு இளம்பெண் 'ஓர் இரவு' திரைப்படத்தை பற்றி சின்ன அறிமுக உரையை நிகழ்த்திவிட்டு சென்றார். விளக்குகள் அணைக்கபட்டன, நாங்கள் மூவரும், முதல் வரிசையில் அமர்ந்து கொண்டோம். படம் திரையிடப்பட்டது.
நாங்கள் எதிர்ப்பார்த்தைவிட கூட்டம் நிரம்பி வழிந்தது. ரேவதி மேடம் கூறியது போல், அனைவரும் கண்ணியமாகவே படம் பார்த்தனர்.
சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்தேன், அரங்கம் நிறைந்திருந்தோடில்லாமல், அதிகம் பேர், நின்று கொண்டும் படம் பார்த்து கொண்டிருந்தது மிகவும் ஊக்கமளித்தது.
7 இடங்களில் கைத்தட்டல்கள் எழுந்தது சந்தோஷமாக இருந்தது.
இரண்டு மணிநேர திரைதியானம் முடிந்து விளக்குகள் போடப்பட்டதும், மீண்டும் கைத்தட்டல், ஏதேதோ பேசியபடி அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். அதில் எங்களது பின்னால் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், எங்கள் மூவரில், 'கிருஷ்ண சேகர்' என்பவரை அடையாளம் கண்டுபிடித்தார் (அவர் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்ததால்). உடனே, எங்கள் மூவரையும் தெரிந்து கொண்டு, சூழ்ந்து கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து, VisCom மாணவர்கூட்டம் எங்களை சூழ்ந்துகொண்டது. இப்படிப்பட்ட படத்திற்கு ஏன் மிக குறைவான பப்ளிசிட்டி செய்தீர்கள் என்று கேட்டார்கள். மீண்டும் திரையிட்டால் எங்கள் ஆதரவு நிச்சயம் என்றார்கள். ஒரு சிலர் தமது கல்லூரியில் இப்படத்தை ஸ்பெஷல் ஸ்கீரினிங் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி அனுமதி கேட்டார்கள். மேலும், மற்ற திரைப்பட விழாக்களுக்கும் தவறாமல் இப்படத்தை அனுப்பும்படி அன்புக்கட்டளையிட்டார்கள். அடுத்த படத்தை பற்றி ஆவலோடு விசாரித்தார்கள். சிலர் உதவி இயக்குனராக சேர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். இப்படியாக, சுமார் 20 நிமிடங்கள் பேசிவிட்டு அவரவர்கள் விசிடிங் கார்டுகளை கொடுத்தும் வாங்கியும் சென்றது மிக மகிழ்ச்சியான அனுபவம்.
பிறகு, 3 CIFF Volunteer பெண்கள் 'ஓர் இரவு' பற்றி விழா தினசரியில் எழுதுவதற்காக பேட்டி எடுத்துவிட்டு சென்றனர்.
மறக்கமுடியாத அனுபவமாக அன்றைய மாலை அமைந்தது.
விழா தினசரியில் வெளியான 'ஓர் இரவு' திரையிடப்பட்ட அனுபவம் இதோ உங்களுக்காக..!
பின்குறிப்பு - புகைப்படம் எடுக்க முடிவில்லை..! மன்னிக்கவும்..!
அன்புடன்
HARESH NARAYAN