Showing posts with label ஷூட்டிங். Show all posts
Showing posts with label ஷூட்டிங். Show all posts

Monday, June 23, 2014

'ஆ'மயம் 12 - பேய் பயம்


படத்தில் நடிக்க வந்த ஜப்பானியர்களிடம்.. முறையே வணக்கம் வைத்து அவர்களுடன் நடிப்பதற்கு முன் சற்றே கலந்துரையாடினோம்... யார் முதலில் பேசுவது என்று இருந்த தயக்கத்தை நான் உடைத்தேன்.. 'அனைவருக்கும் கொனிச்சிவ்வா...' (வணக்கம்) என்றேன்... அவர்கள் அனைவரும் அவர்கள் முறைப்படி குனிந்து வணக்கம் வைத்தார்கள்...

அடுத்ததாக, 'நீங்கள் நடிக்கப்போவது ஹாரர் படம்' என்று கூற... கொல்லென்று சிரித்தார்கள். எங்களுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது... ஒரு பெண் நடிகை எங்களிடம் ஜப்பான் மொழியில் ஏதோ சொல்ல... அது புரியாமல் நாங்கள் பேய் முழி முழிக்க... உடன் இருந்த நண்பர் திரு.கௌரி ஷங்கர்.. மொழிப்பெயர்த்தார்... அவர்களில் பலருக்கு பேய் என்றால் பயங்கர பயமாம்... அவர்கள் இதுவரை முழுதாக எந்த ஹாரர் படத்தையும் பார்த்ததில்லையாம்... இடையிடையே கண்கள் மூடிக்கொள்வார்களாம்... அட பெண்கள்தான் அப்படி என்றால், கூட நடித்த ஆண்களும் அதையேத்தான் கூறினார்கள்.


ஜப்பானில் ஹாரர் படங்கள் ஃபேமஸ் என்றுதானே  இவ்வளவு தூரம் வந்து படமாக்க விரும்பினோம்.. இப்படி வந்தவர்கள் பயந்தால் எப்படி..? என்று முழித்திருக்க... 'கோழி குருடா இருந்தா என்ன..? குழம்பு ருசியா இருந்தா சரி..' என்ற கவுண்டர் தியரிப்படி, 'நடிகர்களுக்கு பயம் இருந்தால் என்ன... பார்ப்பவர்களுக்கு பயம் வந்தால் சரி...' என்று ஷூட்டிங்-ஐ தொடர்ந்தோம்... அவர்களது பேய் பயம் திரையில் தெரியும்படி நன்றாக நடித்து கொடுத்ததால், அவுட்புட்-ல் ஆல் இஸ் வெல்... அது போதுமே..!!!

குறிப்பாக, பேபி மியாபி என்ற குட்டிப்பெண் பேயைக்கண்டு பயப்படுவது போலவும்... பிறகு அவளே (சாரி.. கதை சொல்லக்கூடாது) அசத்தினாள்.. இரவு ஷூட்டிங்கில் தூங்காமல் நடித்து கொடுத்த அந்த பேபி மியாபி, சென்றமுறை அம்புலியில் நடித்த 'நான் கடவுள்' ராஜேந்திரன் கதாபாத்திரத்தின் மகளாக வரும் செவ்வந்தி (பேபி ப்ரியா) கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தினாள்...

(தொடரும்)


Signature

Saturday, November 05, 2011

"அம்புலி 3D" ஷூட்டிங் ஆல்பம் - பகுதி 2

புகைப்படம் #008
எடுத்த நாள் : February 12, 2011
இந்த புகைப்படம் KTVR கல்லூரியில் நள்ளிரவு படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது... ரேடியோவில் கேட்கும் எம்.ஜி.ஆர். பாடலை ('ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன்...') நாயகன் அஜய் கேட்டு நடனமாடுவது போன்ற காட்சியமைப்பு...  உற்சாகமான பாடலென்பதால் அனைவரும் தூக்கத்தையும் களைப்பையும் மறந்து செயலாற்ற அப்பாடல் உதவியாக இருந்தது...
------------------------------


புகைப்படம் #009
எடுத்த நாள் : March 09, 2011
நாயகன் அஜய் சைக்கிளில் 3D ரிக் சங்கதிகளை மாட்டிக்கொண்டு வண்டி ஓட்ட ஆயத்தமானபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...
------------------------------


புகைப்படம் #010
எடுத்த நாள் : April 14,, 2011
'குட்டுப்பட்டாலும் மோதிர கையால் குட்டுப்பட வேண்டும்' என்று சொல்வார்கள்... இந்த காட்சியில் நாயகன் ஸ்ரீஜித். நடிகர் திரு.தம்பி ராமையா அவர்களிடம் அறை வாங்குவது பல ரீடேக் எடுக்கபட்டபோது எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு...
------------------------------

புகைப்படம் #011

 எடுத்த நாள் : March 04, 2011
நடிகை உமா ரியாஸ் மேடம் , 40 அடி க்ரேனில் மேலே ஏற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை கேமிராமேனிடம் தெரிவிக்க... படப்பிடிப்பின் ஓய்வுநேரத்தில் நிறைவேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

 ------------------------------

 புகைப்படம் #012
எடுத்த நாள் : February 16, 2011
நடிகை கலைராணி மேடம், இரகசியங்களை காலம்காலமாக சுமக்கும் ஒரு சீமாட்டி என்ற மூதாட்டியின் கதாபாத்திரத்தில் நடித்தப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்... க்ளாப் அடிப்பவர் உதவி இயக்குநர் உசேன்... பின்னால் கருப்பு சட்டையில் நடிகர் ஜெகன்... மற்றும் ஸ்ரீஜித் அஜய் (மறைவாய்)
 ------------------------------

புகைப்படம் #013 
எடுத்த நாள் : March 17, 2011
கலை இயக்குநர் ரெமியன் அவர்கள், ஒரு ஊதுபத்தி தொழிற்சாலை செட் போட்டு முடித்த சந்தோஷத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு... அருகில் தொப்பி போட்டு நடப்பவர் துணை கலை இயக்குநர் அஷோக் அவர்கள்.... 
 ------------------------------


புகைப்படம் #014

எடுத்த நாள் : February 02, 2011
கலை இயக்குநரின் மற்றுமொரு கலைவெளிப்பாடாய் இந்த மரவீடு செட்... இத்தனை பேரின் பாரத்தை தாங்கியபடி சற்றே உயரத்தில் கட்டப்பட்ட செட்... நானும் (ஹரீஷ் நாராயண்) நண்பர் ஹரியும் மாணிட்டரை பார்த்தபடியிருக்க, பின்னனியில் படக்குழுவினர் அடுத்த காட்சிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...

(தொடரும்)


Signature

Monday, October 17, 2011

"அம்புலி 3D" ஷூட்டிங் ஆல்பம் - பகுதி 1

அம்புலி 3D திரைப்படத்தளத்தில் எடுத்த சில புகைபடங்களை, அவற்றை எடுக்கும்போது நடந்த சுவாரஸ்ய தகவல்களை எழுதி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..!

புகைப்படம் #001

எடுத்த நாள் : February 08, 2011

ஒரு பாடல் காட்சியின்  படப்பிடிப்பில் இடைவேளையின்போது எடுத்த புகைப்படம்... நடனக்கலைஞர் சந்தியா அபிநயம் பிடிக்கும் முறையை நடிகை சனம் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்...
------------------------------------------------------------------------


 புகைப்படம் #002
 எடுத்த நாள் : February 11, 2011

(இடம்) : துணை இயக்குநர் தினேஷா நடித்துக்காட்டுகிறார்

(வலம்) : நடிகை உமா ரியாஸ் அவர்கள்... குழந்தை நட்சத்திரம் ஃபாஸில்-உடன் சேர்ந்து நடிக்கும்போது எடுத்த புகைப்படம்
------------------------------------------------------------------------

புகைப்படம் #003
 எடுத்த நாள் : February 10, 2011


ஒளிப்பதிவாளர் சதீஷ். ஜி சுமார் 100 அடி  உயரத்திலிருந்து ஒரு அபாயகரமான காட்சி ஒன்றை படம்பிடிக்கும்போது எடுத்த புகைப்படம்
------------------------------------------------------------------------


புகைப்படம் #004
 எடுத்த நாள் : February 11, 2011


இடைவேளையில்... உதவி இயக்குநர்கள் குழு ஒன்றுகூடி எடுத்துக்கொண்ட புகைப்படம்...

பின்னனி குரல் : 'ஷாட் ரெடி... அஸிஸ்டெண்ட்ஸ்லாம் எங்கப்பா போய் தொலஞ்சீங்க...? ஒருத்தரையும் காணோம்...!'
------------------------------------------------------------------------


புகைப்படம் #005
 எடுத்த நாள் : April 15, 2011


'ராக் & ரோல்' பாடல் படப்பிடிப்பின்போது டான்ஸ் மாஸ்டர் தினாவும் அவரது உதவியாளர்களும் நடிகர்களுக்கு நடனப்பயிற்சியளித்த போது எடுத்த புகைப்படம்
------------------------------------------------------------------------


புகைப்படம் #006
எடுத்த நாள் : February 11, 2011 


(இடது) படத்தின் 2 இயக்குநர்களில் ஒருவரான ஹரிஷங்கர், நடிகர் அஜய்-க்கு சைக்கிளை ஃப்ரேமில் எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்று தடம் குறித்து காட்டியபோது எடுத்தது...

(வலது) பயிற்சிக்கு பிறகு நடிகர் அஜய், ஸ்ரீஜித்துடன் சைக்கிளில் தடம் மாறி சுவற்றில் முட்டிக்கொண்டபோது எடுத்த புகைப்படம்...
------------------------------------------------------------------------


புகைப்படம் #007
எடுத்த நாள் : April 25, 2011


இந்த காட்சி பாடலுக்கு இடையில் வரும் ஒரு இன்ஸர்ட்... காட்சிப்படி நடிகர் தம்பி ராமையா அவர்களுக்கு மாணவர்கள் தயிர் சாதம் ஊட்டிவிடுவது போல் எடுக்கவேண்டியது... சில எக்ஸ்ட்ரா டேக் வாங்கியபின் காட்சிமுடிந்து  டின்னர் ப்ரேக் விடப்பட்டது.. 'தம்பியண்ணன்' (இப்படி நான் அவரை அழைப்பது வழக்கம்) அவர்களை சாப்பிட அழைத்தபோது 'அடப்போ தம்பி... அதான் பசங்க எல்லாம் போதுமானளவுக்கு ஊட்டிவிட்டுட்டாங்களே... எனக்கு டின்னரே வேண்டாம்...' என்று கூறிவிட்டார்...


மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Thursday, June 30, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 7


டிஸ்கி : Post Production வேலை முழுமூச்சில் நடந்துவருவதால் தொடர்ந்து துரிதமாக பதிவிட முடியவில்லை..!


தேனியில் அம்புலி


படத்தின் முக்கியமான காட்சிக்காக காட்டுக்குள் இருக்கும் ஒரு பழைய கோவில்  போன்ற அம்மைப்பு தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியை தேர்வு செய்து வைத்திருந்தோம். அதுவும், அந்த இடம் இதுவரை எந்தவொரு ஷூட்டிங்கும் எடுக்கப்படாத கன்னிநிலம். எப்படியாவது அனுமதி வாங்கிவிடலாம் என்று பெரும்பாடுபட்டும் கடைசிவரை அங்கு ஷூட்டிங் பர்மிஷன் கிடைக்கவில்லை..! வேறு இடம்தான் பார்க்க வேண்டும் என்றானது.

தொடர்ச்சியாக நடத்த எண்ணிய ஷூட்டிங் தடைபடக்கூடாது என்பதால், இரவெல்லாம் ஷூட்டிங் முடித்துவிட்டு, பகலில் நானும் ஹரியும், மானேஜர்களுடன்... காட்டுக்கோவில்களை தேடும் படலம் நடத்தினோம்.

பகலில் ஓய்வெடுக்காமல் இரவில் ஷூட்டிங் நடத்துவது கஷ்டமாக இருந்ததால், எங்களது ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் திரு. சந்தனபாண்டியன் அவர்கள், காரை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக... இல்லையில்லை... காடு காடாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். பார்க்கும் பழைய கோவில்களையெல்லாம் வீடியோ பிடித்து வந்து எங்களிடம் காட்டிக் கொண்டிருந்தார்... ஆனால் இடம் சரியாக மாட்டவேயில்லை..!

ஒருவழியாக, ஆண்டிப்பட்டிக்கு அருகே தெப்பம்பட்டியில், பளியர்கள் வழிப்படும் வேலப்பன் கோவிலுக்கு அருகாமையில் மலையடிவாரத்தில் ஒரு பழைய கோவில் கிடைத்தது. உடனடியாக அந்த கோவிலை, கலை இயக்குநர் திரு. ரெமியன் அவர்களிடம் ஒப்படைத்தோம். அவரும்  story board drawingல் வரையப்பட்டிருந்த பழைய கோவிலுக்கு நிகராக, இப்படத்திற்கு தேவையான செட் வேலைகளை துரிதமாகவும் துல்லியமாகவும் முடித்து கொடுத்தார்.
மேட்டூரிலிருந்து தேனிக்கு வந்து சேர்ந்ததும், முதல் வேலையாக அக்கோவிலை சென்று பார்த்தோம். 'கண்டமனூர் ஜமீன்' அவர்களால் கட்டப்பட்ட அந்த கோவில் இன்றும் தன்மை மாறாமல் கலைச்சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்டுக்கு நடுவே கம்பீரமாக நின்றிருந்தது. அடுத்த சில நாட்கள்(ஆவது) இக்கோவிலில் படப்பிடிப்பு நடத்த போவதை எண்ணி நானும் மகிழ்ச்சியடைந்தேன். கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல்லாம், அக்கோவிலின் சுற்றுப்புறங்களை சுற்றிப்பார்த்து கொண்டும், அருகிலிருக்கும் கிராமவாசிகளிடம் கோவிலைப் பற்றிய தகவல்களை சேகரித்து கொண்டும் இருந்தேன்.



'செட்' வேலை சம்மந்தமாக, அந்த கோவில் சிற்பங்களை மோல்டிங் எடுக்க வந்திருந்த நிபுணர்களும், அக்கோவிலின் சிற்பக்கலையை பார்த்து வியந்தார்கள்.


கோவிலின் மூலக்கிரகத்துக்குள் ஏகப்பட்ட குழிகள் தென்பட்டன, விசாரித்ததில், அந்த கோவிலில் புதையல் இருப்பதாக எண்ணி, ஒரு காலத்தில் எங்கெங்கிருந்தோ மக்கள் வந்து கோவிலை சூறையாடியுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும் அக்கோவிலிலிருந்து ஆண்டிப்பட்டியிலிருக்கும் இன்னொரு கோவிலுக்கு சுரங்கம் இருப்பதாகவும், அது காலப்போக்கில் மூடிக்கொண்டதாகவும் குமுதம் நிருபர் ஒருவர் தெரிவித்தார்.

கோவிலைச்சுற்றிலும் புதர்க்காடு மறைத்திருக்க, அந்த பகுதியில் இரண்டு பெரிய ராஜநாகம் இருப்பதகாவும், பணிபுரியும்போது ஜாக்கிரதையாக வேலைசெய்யும்படியும் மக்கள் பயமுறுத்தினார்கள். முதலில் இதை கண்டுகொள்ளாமலிருந்த எங்கள் குழு, ஒரு நாள் (இரவு) கோவில் மண்டபத்தின் மேலே 40 அடி கிரேனை ஏற்றும்போது, பெரிய பாம்புத்தோல் ஒன்று கிடைத்தது.

"தேளையே பார்த்தாச்சு, After All ஒரு பாம்புத்தோல்தானா நம்மை பயமுறுத்தும்" என்று வீர வசனம் பேசியபடி (உள்ளுக்குள் உதறலெடுத்தாலும்) பணியை தொடர்ந்து நல்லபடியாய் நடத்தி முடித்தோம்.  நாங்கள் பாம்புக்கு பயப்படவில்லை என்பதற்கு கீழ்கண்ட ஃபோட்டோவே சாட்சி.

படத்திற்குள் : படமெடுக்கும் பாம்பும், நானும், ஹரியும் மற்றும் நடுவில்
மதுரை மணிகண்டன் (Snakeman)

ஃபோட்டோ எடுக்கும்போது, அந்த பாம்பு என் காதில் எழுப்பிய ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் இருக்கிறதே..! யப்பா..! நல்லவேளை ஃபோட்டோவில் ஆடியோ கேட்காது...

அடுத்த பதிவில், மூணாறு படப்பிடிப்பு அனுபவத்தை பற்றி பகிர்கிறேன்.

(தொடரும்...)


Signature

Monday, May 30, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 6



அவினாசியில் அம்புலி

சென்ற வாரம் பிறந்த ஊரில் (சென்னையில்) ஷூட்டிங் நடந்ததால், ஆர்வத்தில் அதை பற்றி முதலில் எழுதிவிட்டேன். மீண்டும் ரீவைண்டு செய்து, அவுட்டோம் ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களின் pending இதோ...

அவுட்டோர் ஷூட்டிங்கில் கோவை, பழனி, மேட்டூரைத் தொடர்ந்து அவினாசியில் கருமத்தம்பட்டியில் ஒரு புல்வெளியில் ஸ்டண்ட் காட்சிகள் நடந்தது. அங்கு புதுமுகங்களோடு திரு. பார்த்திபன் அவர்களும் இடம்பெறும் காட்சிகள் எடுத்து கொண்டிருந்தோம். வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் , வேறெங்குமில்லாத அளவுக்கு இங்கு மிகவும் அதிகமாக கூடிவிட்டது. சுமார் 2000 ஆட்கள் கூடிவிட்டபடியால் காவலர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் நல்லபடியாக ஷூட்டிங் நடத்தி கொண்டிருந்தோம். கூடுதலாக பார்த்திபன சாரின் ரசிகர் மன்ற ஆட்களும் வந்திருந்து படப்பிடிப்பை நல்லபடியாக நடத்த உதவினார்கள்.

நான்கு திசையிலும் 80 அடி உயரத்தில் லைட் வைப்பதற்கு பயன்படும் கோடாக்கள் சுற்றிலும் வைக்கப்பட்டிருக்க, கேமிராமேன் ரொம்ப நாளாகவே என்னிடம் அந்த கோடாவில் ஒருமுறை ஏறி பார்க்கும்படி கூறியிருந்தார். நானும் பிறகு, பிறகு என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சீக்கிரமாகவே போய்விடவே, அவர் கோடாவில் ஏறுமாறு அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். சரி ஏறித்தான் பார்ப்போமே என்று ஏற ஆரம்பித்தேன். அந்த இடம் புல்வெளி, ஏற்கனவே பரந்து விரிந்து கிடக்கும் மைதானம் என்பதால் காற்று பலமாக அடித்து கொண்டேயிருக்க... பாதி தூரம் ஏறிவிட்டேன். ஆனால் அதற்குமேல் கால்கள் நடுக்கம் காட்ட ஆரம்பித்தன. அப்படியே பாதியில் அமர்ந்துவிட்டேன். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று எண்ணியிருக்க, கீழே பார்த்திபன் சாரின் கார் வந்து நின்றது. இதுதான் சாக்கு என்று கூறி, சரசரவென்று இறங்கி வந்துவிட்டேன். கேட்டதற்கு, பார்த்திபன் சார் வந்துவிட்டார் என்று சொல்லி சமாளித்து வைத்தேன். மீண்டும் அந்த கோடாவை அண்ணாந்து பார்க்க, இதில் தினமும் இரவு முழுவதும் நின்று வேலைபார்க்கும் லைட்மேன்களை எண்ணி மிகவும் வியந்தேன். இதை உணரவைத்த கேமிராமேன் சதீஷூக்கு நன்றி..!


கோடாவில் ஏறும் முயற்சியை கைவிட்டு  பாதியில் அமர்ந்தபடி


 பார்த்திபன் சார் அடித்த ஜோக்கிற்கு சிரித்து, கோடாவிலிருந்து இறங்கிய களைப்பகன்றபடி...

வழக்கமாக வரும் கூட்டத்தைவிட கடைசி நாளான 4ஆவது நாள், கூட்டம் மிகவும் அதிகமாக வந்தவண்ணம் இருந்தன. கூட்டத்தை சமாளிக்கவே பெரும்பாடு படவேண்டியிருந்தது. இதில் காட்சியை எப்படி படம்பிடிப்பது? என்று எண்ணி வருந்தி கொண்டிருக்க, படப்பிடிப்பு குழுவிலிருந்த பலரும் உதவ முன்வந்தார்கள். குறிப்பாக லைட்மேன் சீஃப் திரு.மோகன் அவர்கள், கையில் மைக் பிடித்தபடி கூட்டத்தினரிடம் நகைச்சுவையாக பேசி அவர்களை குதூகலப்படுத்தி நட்பு கொண்டு அவர்களை சமாளித்து கொண்டிருந்தார். குழந்தைகளை "A for AMBULI" (இதிலும் ஒரு பப்ளிசிட்டி பாருங்கள்..!) என்று மேக்கிங்க ஷூட் செய்யும் கேமிராவை பார்த்து கூறும்படி விளையாட்டு காண்பித்து கொண்டிருந்தார்.


கூட்டத்திற்கு மத்தியில் நான், ஹரி மற்றும் எங்கள் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட். பின்னால் நடுவில் நின்றிருப்பவர் லைட் சீஃப் திரு. மோகன்


ப்ரொட்யூஸர் திரு. KTVR லோகநாதன் சாரும் (வலமிருந்து 2ஆவது நபர்) அவரது நண்பர்களும். வலதுபக்கமிருப்பவர் அவரது மகன் டாக்டர். அருண்

குறிப்பாக வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில் ஒருவர், குடித்துவிட்டு வந்து, படத்தில் நடித்தே தீருவேன் என்று அடம்பிடித்து கொண்டிருந்தார். தண்ணியடித்தால் சிலர் குழந்தைகளாகிவிடுகின்றனர். சாக்லெட் வாங்கித்தருவதாக ஏமாற்றுவது போல் சான்ஸ் வாங்கி தருவதாக ஏமாற்ற வேண்டியதாய் உள்ளது. அவர், யார் சொல்லியும் கேட்காமல் குறுக்கே  சுற்றிக்கொண்டிருக்கவே, உதவி இயக்குனர்கள் அவரை தனியாக தள்ளி கொண்டு போய், மேக்கிங் கேமிராவை கொண்டு அவரை பாடச்சொல்லி பேச சொல்லி படம்பிடித்து கொண்டிருந்தனர். அவரும் திருப்தியாக வீடு திரும்பினார். அனேகமாக அடுத்த ப்ராஜெக்டுக்கான முதல் ஆடிஷன் ஃபூட்டேஜ் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

லைட் யூனிட்டில் திரு.பாண்டு என்று ஒரு மும்பைக்காரர் வந்திருந்தார். ஓய்வு நேரங்களில் இவரிடம் தமிழ் வார்த்தைகள் சொல்லி அதை திரும்ப சொல்லக்கேட்டு அவர் கூறும் மழலை தமிழை ரசித்து விளையாடிக் கொண்டிருப்போம். அவரும் இதை ரசித்து விளையாடுவார். பாம்பேவில் ஷூட்டிங்கின்போது கண்டிப்பாக அவரது வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்பு பொழிவார். அவினாசியில் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது, இவருக்கு கோடாவில் தேள் கடித்துவிட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று குணப்படுத்தினார்கள். அடுத்த நாளே அவரும் சகஜமானார். ஆனால் இவருக்கு தேள் கடித்த சமாச்சாரம் எங்களுக்கு அடுத்தநாள் காலைதான் தெரியவந்தது. அவினாசியில் கடைசி நாள் ஷூட்டிங் என்பதால் தடங்கல் ஏற்படாமல் இருக்கும்பொருட்டு இந்த விஷயத்தை மேனேஜர்கள் எங்களிடம் கூறாமல் இரகசியமாக கையாண்டுள்ளனர். நல்லவேளையாக அவருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று தெரிந்த பிறகே நிம்மதியானோம்.

ஆனால் நாங்கள் தேனிக்கு அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு பயணப்படும்போது இன்னொரு விஷயம் கேள்விப்பட்டு பீதிக்குள்ளானோம். அவினாசியில் நாங்கள் ஷூட்டிங் நடத்திய புல்வெளியில், ஆங்காங்கே புல்களினூடே தேள்கள் ஏராளமாக சுற்றித்திரிந்துக் கொண்டிருந்ததாக குழுவில் பலரும் தெரிவித்தனர். நாங்கள் படம்பிடித்தது ஸ்டண்ட் காட்சி என்பதால் புல்வெளியில் சில இடங்களில், தரையில் உட்கார்ந்து, படுத்து, உருண்டு என்று ஷூட்டிங் செய்திருந்தோம். நல்லவேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை..!


அடுத்த பதிவில் தேனியில் நடந்த பகிர்வுகளை பதிகிறேன்...

(தொடரும்..!)




Signature

Tuesday, May 24, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 5

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவம் 1-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவம் 2-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவம் 3-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்
"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவம் 4-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்



சொந்த ஊரில் ஷூட்டிங்

இந்த வாரம் "அம்புலி 3D" திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் Kings Instituteல் சிறப்பாக நடந்தேறியது. என்னதான் வெளியூர் ஷூட் என்றாலும், எனக்கு நான் பிறந்த ஊரில் ஷூட் செய்வது ரொம்பவும் பிடித்திருந்தது.

லோக்கலில் ஷூட்டிங் என்றதும் நண்பர்களும் உறவினர்களும் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க அழைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் வேலை பளுவின் காரணத்தினால் எல்லோரையும் அழைக்க முடியவில்லை..! இன்னொரு முக்கிய காரணம், கதையின் சுவாரஸ்யம் படம் பார்க்கும்போது முழுவதுமாய் அவர்களுக்கு கிட்ட வேண்டும் என்ற ஆசையும், ஷூட்டிங்கை வேடிக்கை பார்ப்பது, சினிமா அல்லாத ஆட்களுக்கு மிகவும் போர் அடிக்கும் என்ற எண்ணமும்தான். இருந்தாலும் நான் நிறைய 'சாரி' கேட்க வேண்டியிருக்கும்... மன்னித்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்.

ஆனாலும், சில நண்பர்கள் ஸ்பாட்டுக்கு வந்து சிறப்பித்தார்கள். குறிப்பாக 'கேபிள் ஷங்கர்' வந்திருந்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு, சத்யம் தியேட்டரின் ஜி.எம். திரு. நிரஞ்சன் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களுக்கு நன்றி..!

கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடம் என்பதால் கூட்டமும் அவ்வளவாய் இல்லை..! அதனால் ஷூட்டிங்கை சுமூகமாக நடத்த முடிந்தது.

இந்த வார ஷூட்டிங்கின் இன்னொரு ஸ்பெஷல், 'மீடியா கவரேஜ்'. தொலைக்காட்சி மற்றும் இணையதள நிருபர்கள் வந்திருந்து பேட்டி கண்டு சென்றனர்.

அதன் ஒரு பகுதி, Behindwood.comல் நேற்று இந்த வீடியோ காணக்கிடைத்தது.

 

மேலும் வலையில் கிடைத்த சில ஃபோட்டோ மீன்கள்

க்ளாப் பலகை

இடமிருந்து : ஹரிஷங்கர், ஹரீஷ் நாராயண் (நான்), வெங்கடம் பிரபு ஷங்கர்


 இடமிருந்து : நானும், திரு. நிரஞ்சன் (G.M. - சத்யம் சினிமாஸ்)


கேமிராமேன் : சதீஷ். G


இசையமைப்பாளர்கள் : வெங்கட் பிரபு ஷங்கர், சதீஷ் குமார் (நால்வரில் இருவர்)


Mr. பாஸ்கி 


All Photo & Video Courtesies : www.Behindwoods.com, www.Indiaglitz.com

படம் 99% முடிந்துள்ளது. இன்னும் 1%, வரவிருக்கும் வாரங்களில் முடிந்துவிடும். அதையும் பகிர்கிறேன்..!



Signature

Saturday, April 30, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 4


Truth is stranger than fiction என்று கூறுவார்கள்... அதே போலத்தான், சமீபத்தில் எங்கள் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம், திரைப்படத்தில் காட்டும் திகிலையும் தாண்டி நிஜத்தில் மிரள வைத்தது. 25ஆம் தேதியன்று, படத்தின் க்ளைமேக்ஸில் இடம்பெறும் கூட்டுப்பிரார்தனை பாடல் ஒன்றை படம் பிடிப்பதற்காக  மேட்டூர் நீர் தேக்கத்தின் பிரம்மாண்ட சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஒரு குட்டி தீவை தேர்ந்தெடுத்திருந்தோம். அந்த தீவிற்கு  'பண்ணைவாடி' என்ற கிராமத்திலிருந்து பரிசல் வழியே போய் சேர வேண்டும். சேர்ந்தோம்.


கரையிலிருந்து தெரியும் தீவு

இரவுப்பாடல் என்பதால்,  சுமார் 300 பேர் கொண்ட குழு இத்தீவில் கூடியிருந்தது. பாடலை ஒலிபரப்பியதும், சற்றைக்கெல்லாம், படைதிரளாக பூச்சிகள் வந்து ரீங்காரமிட்டபடி பறந்து கொண்டு பயங்கர தொந்தரவு கொடுத்தது. மிகுந்த போராட்டத்திற்கு பிறகு, புகை போட்டு பூச்சிகளை வென்று மீண்டும் படம்பிடிக்க ஆயத்தமானோம். மீண்டும் பாடலை ஒலிபரப்பியதும், சற்று நேரத்துக்கெல்லாம் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. காற்றில் பாடலுக்காக போடப்பட்டிருந்த செட் ஆட்டம் காண ஆரம்பித்தது. செட் வீழ்ந்தால், பொருட்சேதமும், நேர விரயமும் அதிகம் என்பதால், ஆளுக்கொரு கொம்பு பிடித்துக் கொண்டு, செட்-க்கு சப்போர்ட் கொடுத்து, மிகுந்த பிரயத்தனத்துடன் செட்-ஐ பாதுகாத்து காற்றிலிருந்து தப்புவித்தோம். காற்றும் கொஞ்சம் தணிந்தது. மீண்டும் பாடல் ஒலிபரப்பியதும், இம்முறை கடுமையான மழை..!


நட்சத்திரங்களல்ல..! பூச்சிகளின் படைத்திரள்..!

இதுவரை பூச்சியையும், காற்றையும் வென்றாலும், அத்தீவு மழைக்கு ஒதுங்க இடமில்லாத தீவு என்பதால், நடிக்க வந்திருந்த ஆட்கள் கரைதிரும்ப வேண்டுமென்று அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள். பரிசல் காரர்களோ, காற்றுடன் மழை வருவதால் பரிசல் எடுக்க முடியாது என்று கைவிரித்தனர். சில தைரியர்கள் தண்ணீரில் இறங்கி கரைக்கு நடக்க ஆரம்பித்தார்கள் (அத்தீவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தடத்தில் நடந்தால், நடந்தே கரை சேரலாம்..! தடம் தெரிந்தவர்கள் மட்டும்..!) தீவிற்கு மின்சாரம் கொண்டுவரும் பொருட்டு, கரையிலிருந்து ஜெனரேட்டரை இயக்கி அதிலிருந்து நீளும் வயர்களை கம்புகள் போட்டு தண்ணீரில் நட்டு வைத்திருந்தோம். இதனால், தண்ணீரில் இறங்கி நடப்பவர்களுக்கு ஷாக் அடிக்கும் ஆபத்து உண்டு என்று பயந்து, வாக்கி டாக்கியில் ஜெனரேட்டரை அணைத்துவிடும்படி கூறியாயிற்று. ஆனால், ஜெனரேட்டரை அணைத்ததும், தீவிலும், கரையிலும் கும்மிருட்டு..! இருட்டில் கடும் மழையில் நனைந்தபடி அத்தனை பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க, வேறுவழியின்றி அன்றைய படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, முக்கியமான கருவிகளை மட்டும் செட் போடப்பட்டிருந்த அரங்கத்தின் அடியில் பத்திரப்படுத்திவிட்டு தண்ணீரில் இறங்கி கரைக்கு நடக்கலானோம்.

மோனு, மீனு என்று நடிக்க வந்திருந்த இரண்டு குழந்தைகளில், ஒரு குழந்தையை நானும், இன்னொரு குழந்தையை அடியாளாக நடிக்க வந்த திரு.'கேபிள்' மணி என்பவரும் உப்பு மூட்டை தூக்கி கொண்டு நடந்து கொண்டிருந்தோம். என் முதுகில் இருந்த குழந்தை, தைரியமாக நிறைய ஜோக்குகள் சொல்லிக் கொண்டே வந்தது. நானும் பயத்துடன் சிரித்தபடி நடித்துக் கொண்டே நடந்தேன்.

தண்ணிரில் அனைவரும் இறங்கி போய்க்கொண்டிருக்கும்போது, கும்மிருட்டில் திடீரென்று மின்னல் வெளிச்சமடிக்க, சுற்றிலும் நீரும், நடுவே கும்பலாய் மனிதர்கள் நடந்து போவதும் ஏதேதோ திரைப்படங்களில் பார்த்த காட்சிகளை ஞாபகப்படுத்தி கொண்டிருந்தது.

தண்ணீரில் நடப்பது ஒன்றும் அவ்வளவு கிலியாக இல்லை..! நீர்மட்டம் இடுப்புவரை மட்டுமே இருந்தது. ஆனால், அடிக்கும் காற்றுக்கு, இரு பக்கத்திலிருந்தும் தண்ணீர் மேலே பீய்ச்சி அடித்தது மட்டும் சற்று மிரட்டலாக இருந்தது. 'அலை பெரிதானால் என்னவாகும்' என்ற அனாவசிய கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமல் மெல்ல நடந்து கொண்டிருந்தோம். அப்போது, உடன் நடக்கும் கிராமவாசிகளில் ஒருவர் 'மழை வந்தால் ஏரியில் நீர் மட்டம் விறுவிறுவென்று ஏறிவிடும்' என்று ஒரு குண்டை போட்டார்.  உடனே அனைவரது நடையிலும் ஒரு வேகம் கூடியதை கவனிக்க முடிந்தது. வாழ்க அந்த நபர்..!

ஒரு வேடிக்கை என்னவென்றால், அடுத்த நாள்..! (26ஆம் தேதி) போதிய ஏற்பாடுகளோடு வந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்த ஆயத்தமானபோது, அன்றும் கடும் மழை..! கிராம வாசிகள் அனைவரும் எங்களை வாழ்த்த ஆரம்பித்தனர். நாம் படப்பிடிப்பு நடத்த வந்த நேரம், அவர்கள் கிராமத்தில் நல்ல மழை பிடித்துக் கொண்டது என்பது அவர்களுக்கு மகிழ்ச்சி..! பாடலைப் போட்டதும் மழை வருகிறதே..! பாடல் ஒருவேளை ஹம்ரிதவர்ஷினி ராகமோ..? என்று நாங்கள் வெறுப்பில் புலம்பி கொண்டிருந்தோம். அன்றும் படப்பிடிப்பு ரத்து..! அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை..! அன்றும் மழை வர வாய்ப்பிருக்கிறது என்று கூகிளார் கூறவே..! ரிஸ்க் எடுக்க வேண்டாமென்று எண்ணி..! தீவுக்கே போகவில்லை..!



படப்பிடிப்பில்...

எங்கள் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கிராமத்து மக்கள், அவர்களாகவே ஒரு பரிகார பூஜையை நடத்தி கொடுத்தார்கள். அந்த அன்புக்கு எங்கள் குழு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்...! 4ஆவது நாள்..! 28ஆம் தேதி அன்று இரவு நல்ல வேளையாக (?) மழை வராததால் பாடல் படப்பிடிப்பு அன்றிலிருந்து நல்லபடியாக நடந்தது.

(அனுபவம் தொடரும்..!)




Signature

Sunday, March 27, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 3


பழனியில் 'அம்புலி 3D' படப்பிடிப்பு

ரயில் பயணத்தில் அனைவரும் கோறும் குட்டி வரம், ஜன்னலோர சீட்டு..! அந்த ஜன்னலோர சீட்டுக்கு அழகு சேர்ப்பது, பயணத்தில் அதன்வழியே தெரியும் மலைமுகடுகள்.

எனது சிறுவயது முதலே மலைகளை  பார்த்தால் ரொம்பவும் பிடிக்கும். லீவில் உறவினர்கள் வீட்டுக்கு போவதாய் இருந்தால், அவர்கள் ஊரில் மலை இருக்கிறதா என்று உடனே மனம் எதிர்ப்பார்க்க ஆரம்பிக்கும், அந்த ஆசையாலோ என்னமோ, நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பழனி ஊர் மிகவும் பிடித்துவிட்டது.  காரணம், ஊர் எல்லையில் தெரியும் கொடைக்கானல் மலைத்தொடரும், பழனி மலையும், எங்களுக்கு உடனிருந்து உதவிய நண்பர்களும்..!
பழனியை பற்றி சங்க காலத்தில் எத்தனை பாடல்கள் இருந்தாலும்,, 'பழம் நீயப்பா..! நியானப்பழம் நீயப்பா..!' என்ற அவ்வையின் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் பாடல் சட்டென நினைவுக்கு வருவதால், இதை பாடல் பெற்ற ஸ்தலம் என்றே கூறலாம்.

பழனியில் எங்கள் குழு தங்கியிருந்த ஹோட்டல் (Temple View)லிருந்து தினமும் பழனி மலையை பார்த்தபடி லொகேஷன் ஸ்பாட்டுக்கு கிளம்பியதை மிகவும் மங்களகரமாக கருதினோம்.

பார்த்திபன் கனவுபார்த்திபன் சாரை வைத்து படத்தை இயக்குவேன் என்று கனவிலும் நினைத்தது கிடையாது. அந்த கனவு பலித்த(துக்கொண்டிருப்ப)தில் மகிழ்ச்சி. இயக்குநர் மற்றும் நடிகர் என்பதால் காட்சியை உள்வாங்கி கொண்டு கலக்குகிறார். 3D படம், வித்தியாசமான கதாபாத்திரம், என்ற அம்சங்களை நன்றாக புரிந்து கொண்டு அட்டகாசப்படுத்துகிறார். அவருடன் வேலை செய்யும் போது களைப்பு தெரியாதபடி கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தது எங்கள் குழுவினருக்கு உற்சாகமளித்தது.



உதாரணம், அவர் ஒரு கட்டை ஏணியில் ஏறி கீழே இறங்குவது போன்ற காட்சி எடுக்க வேண்டும், எடுக்கப்பட்டது..! எங்கள் உதவி இயக்குநர் தினேஷிடம் 'சார் பத்திரமாக இறங்க கை கொடுக்கும்'படி கூற, 'நல்லா நடிச்சா மட்டும் கை கொடுங்க சார்..! இல்லண்ணா வேணாம்..' என்று கூறிவிட்டு அவரே இறங்கிவிட்டார். இது போல் வார்த்தைக்கு வார்த்தை அவரது பாணியில் பேசி நடித்து கொடுத்தார்.
ஷூட்டிங் பழனிக்கு வெளிப்புறமாய் இரவு நேரங்களில் மட்டுமே நடந்ததால், வேடிக்கை பார்க்கும் கூட்டம் கம்மியாகவே இருந்தது, நாங்களும் இருந்த கூட்டத்தை சுலபமாக கன்ட்ரோல் செய்து கொண்டோம், ஆனால், பார்த்திபன் சார் வந்தபிறகு கூட்டம் அதிகமாகிவிட்டது, காவலர்கள் தேவைப்படுமளவிற்கு கூட்டம் சேர்ந்துவிட்டது. அதுவும் குறிப்பாக, பழனியாண்டவருக்கு மாலையணிந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்தான் அதிகம்.

பாஸ்... என்கிற பாஸ்கி..!
அரி கிரி அசெம்ப்ளியில் ஆரம்பித்து இன்று இண்டர்நேஷனல் க்ரிக்கெட் மேட்ச்க்கு தமிழ் கமெண்ட்ரி கொடுக்குமளவிற்கு பிஸியானவர். இவர் எங்களது திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்பாட்டில் இவரை நகைச்சுவை வங்கி என்றுதான் சொல்வோம். எங்கே உள்வைத்திருக்கிறாரோ தெரியவில்லை, ஜோக்குகளை Withdrawal செய்துகொண்டேயிருக்கிறார்.

சாப்பிடும்போது அதிகம் பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இவர் சாப்பிடும்போது பேசுவதை கேட்க, ஒரு கூட்டமே கூடும். இவருக்கு டாக்டர் பட்டம் தாராளமாக கொடுக்கலாம், காரணம், வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழி மட்டும் பலிக்கிறதாயிருந்தால், இவரால் பலபேரை குணமாக்க முடியும்.

'நான் கடவுள்' ராஜேந்திரன்
வில்லனாய் சினிமாவில் தெரிபவர்கள் நேரில் மிகவும் மென்மையானவர்கள் என்ற கூற்றை நம்பியார் சார் காலத்திலிருந்தே சொல்வார்கள், கேள்விப்பட்டிருக்கிறேன். அது எந்தளவுக்கு உண்மை என்று இவரை நேரில் சந்தித்து தெரிந்து கொண்டேன். மிகவும் ஒரு எளிமையான ஒரு மனிதர். நல்ல நண்பர்..! கடும் உழைப்பாளி..! இவரது உழைப்பை யாரும் எள்ளளவும் குறை கூற முடியாது. தேவையான காட்சியை, எந்தளவுக்கும் சிரமம் எடுத்தும் நடித்து கொடுக்க கூடியவர். கடந்து வந்த பாதையை மறக்காதவர் அனைவரிடம் அன்பாக பழகுபவர்.



கேமிராமேன் சதீஷ், இவரிடம் சென்று, சமீபத்தில் இவர் நடித்த வெற்றிப்படமான 'பாஸ் என்கிற பாஸ்கரனில்' இவர் கூறும் 'வாப்பா தலதளபதி..' என்ற வசன உச்சரிப்பில், 'வாப்பா ஹரி ஹரீஸ்ஸே..!' (என்னையும் ஹரியையும்) என்று பேச சொல்லி கேட்டு, அதை மொபைலில் ரெக்கார்ட் செய்து இடைவேளைகளில் போட்டு காட்டி வெறுப்பேற்றி கொண்டிருந்தார்.

அம்புலி 3D, த்ரில்லர் படம்தான் என்றாலும், என்னதான் இரவு முழுக்க களைப்புடன் பணிபுரிந்தாலும், காலையில் மீண்டும் அறைக்குவந்து படுக்கும்போது, தூரத்தில் பழனிமலையில் ஸ்பீக்கரில் ஒலிக்கும் திருப்புகழ் பாடல்களை கேட்டபடி தூங்கும் சுகம் மிகவும் பிடித்துப்போய்விட்டது. மீண்டும் ஒருமுறை கண்டிப்பாக இந்த வரம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படப்பிடிப்பின் போது எங்களை சொந்த பிள்ளைகளாய் எண்ணி உதவிய 'பழனி ஆறுமுகம்' ஐயா அவர்களுக்கும், படப்பிடிப்பு முடிந்ததும் பழனி மலைக்கு அழைத்து சென்று வழிபாட்டிற்கு வழிகாட்டிய ராம்குமார் என்ற நண்பருக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது, அம்புலியில் கிராமத்து காட்சிகளை மேட்டூர் அணை அருகேயுள்ள கொளத்தூர் மற்றும் பண்ணைவாடி கிராமத்தில் படம்பிடித்து வருகிறோம். இங்கு நேர்ந்த அனுபவங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன். இப்போதைக்கு நிறைய வேலை இருப்பதால்... குட்பாய்..!


'தம்பீ..! ஷாட் ரெடியா..?'


(தொடரும்)



Signature

Sunday, February 13, 2011

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள் - 1





முதல் நாள் எங்களது தயாரிப்பாளர் திரு. KTVR லோகநாதன் சார் அவர்களின் கல்லூரியில் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஒரு சின்ன விழாவோடு படப்பிடிப்பு துவங்கியது. வந்திருந்த அனைவரும் வாழ்த்தி படப்பிடிப்பை துவங்கி வைத்தனர்.

ஷூட்டிங் என்றாலே வேடிக்கை பார்ப்பவர் கூட்டம் அதிகமிருக்கும், அதுவும் 3D படம் என்றதும் இன்னும் ஆர்வமாக மானிட்டர் அருகில் வந்து பலரும் சூழ்ந்து கொண்டு மானிட்டரை எட்டிப் பார்க்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்த செக்யூரிட்டிக்களை போட்டால், அவர்களும் சேர்ந்து கொண்டு மானிட்டரை ஆர்வமாக பார்க்கின்றனர். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் மானிட்டரில் தெரியும் பிம்பம் போதையில்  பார்ப்பது போல் இரண்டிரண்டாக தெரியும். பிரத்யேக கண்ணாடி அணிந்து பார்த்தால் மட்டுமே அவை 3D எஃபெக்ட் தரும். நானும் ஹரியும் கண்ணாடிகளை அணிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, பின்னால் நிற்கும் பலரும் எங்களிடம் வந்து கண்ணாடியை போட்டு பார்க்க ஆர்வம் தெரிவிக்கின்றனர்.



நாங்கள் இப்படத்தை குழந்தைகள் படமாக எடுத்துவிடக்கூடாது என்ற முடிவில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இன்னமும் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் பெரியவர்களை காட்டிலும் பல குழந்தைகள்தான் ஆர்வமாக பார்க்கிறார்கள்.

கல்லூரியில் ஒரு காதல் காட்சி படம்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன், 'அங்கிள்... அங்கிள்...? இது 3D படமா..?' என்று ஆர்வத்துடன் கண்கள் விரித்து கேட்டது மிகவும் மகிழ்ச்சியளித்தது, ஆனால் கூடவே எங்கள் இருவரது (நானும் ஹரியும்) மனதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது ஏன் என்று பதிவின் முடிவில் சொல்கிறேன்.

எங்கள் படத்தின் கதாநாயகி சனம்
 
, படப்பிடிப்பில் இடைவேளையின்போது ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதை ஒரு நிருபர் படம் பிடித்து கொண்டிருந்தார். 'சாப்பிடும்போது படம் எடுக்க வேண்டாமே ப்ளீஸ்' என்று அவர் சொல்லி அந்த நிருபரை அனுப்பிவிட்டார். ஆனால், அன்று மாலையே, அவர் ஒரு கையில் ஆப்பிளுடன் பார்த்து சிரித்து கொண்டிருப்பது போன்ற அந்த புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியாகிவிட்டது, அனைவரும், கையில் ஆப்பிள் வைத்து கொண்டு அவர் முன்னே சென்று நின்று, அந்த புகைப்படத்தை காட்டி, அவரை வெறுப்பேற்றி கொண்டிருந்தோம்.


நேற்று ஒரு வெள்ளைக்காரர், ஒரு பெண்ணைப் பார்த்து 'நீ கேர்ப்பமாயிருக்கே..!'  (நீ கர்ப்பமாயிருக்கே) என்று சொல்ல வேண்டிய காட்சி, ஆனால் அவர் அந்த பெண்ணுக்கு அருகில் நிற்கும் ஒரு ஆணிடம் 'நீ கேர்ப்பமாயிருக்கே..' என்று கூற, அவர் பதறியடித்து 'நானில்ல... நானில்ல..' என்று அலறவும். கூடியிருந்த குழு மொத்தமும் சிரித்துவிட்டது.

நேற்று திரு. பாலா சிங் அவர்கள், தான் நடித்து முடித்த காட்சியை 3D-யில் கண்டுகளித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உடன் வந்திருந்த வெள்ளைக்கார துரையும் இப்படத்தை 'அங்கு அனுப்புங்கள் இங்கு அனுப்புங்கள்' என்று ஏகத்துக்கும் பரிந்துரைத்து கொண்டிருந்தது மகிழ்ச்சியளித்தது..!

Out of Topic
கேணிவனத்திற்கு தகவல்களை சேகரித்த விவரங்களை எழுதுவதாக கூறியிருந்தேன். அதை எழுதுவதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை..! ஆனால் கண்டிப்பாக அந்த விவரங்களை 'கேணிவனம்' புத்தக வடிவில் வரும்போது இணைத்து எழுதுகிறேன். பிறகு பதிவிலும் பதிகிறேன்.

(அந்த சிறுவன் கேட்டதில் மகிழ்ச்சி + அதிர்ச்சி என்று சொல்லியிருந்தேன்.
மகி்ழ்ச்சி = அவன் ஆர்வத்துடன் கண்கள் விரித்து கேட்டது.
அதிர்ச்சி = 'அங்கிள்' என்று அழைத்தது.)

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!

ஹரீஷ் நாராயண்

"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவம் 2-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும்


Signature

Popular Posts