படத்தினும் சுவாரஸ்யமான ஒரு சம்பவம்
Truth is stranger than fiction என்று கூறுவார்கள்... அதே போலத்தான், சமீபத்தில் எங்கள் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம், திரைப்படத்தில் காட்டும் திகிலையும் தாண்டி நிஜத்தில் மிரள வைத்தது. 25ஆம் தேதியன்று, படத்தின் க்ளைமேக்ஸில் இடம்பெறும் கூட்டுப்பிரார்தனை பாடல் ஒன்றை படம் பிடிப்பதற்காக மேட்டூர் நீர் தேக்கத்தின் பிரம்மாண்ட சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஒரு குட்டி தீவை தேர்ந்தெடுத்திருந்தோம். அந்த தீவிற்கு 'பண்ணைவாடி' என்ற கிராமத்திலிருந்து பரிசல் வழியே போய் சேர வேண்டும். சேர்ந்தோம்.
இரவுப்பாடல் என்பதால், சுமார் 300 பேர் கொண்ட குழு இத்தீவில் கூடியிருந்தது. பாடலை ஒலிபரப்பியதும், சற்றைக்கெல்லாம், படைதிரளாக பூச்சிகள் வந்து ரீங்காரமிட்டபடி பறந்து கொண்டு பயங்கர தொந்தரவு கொடுத்தது. மிகுந்த போராட்டத்திற்கு பிறகு, புகை போட்டு பூச்சிகளை வென்று மீண்டும் படம்பிடிக்க ஆயத்தமானோம். மீண்டும் பாடலை ஒலிபரப்பியதும், சற்று நேரத்துக்கெல்லாம் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. காற்றில் பாடலுக்காக போடப்பட்டிருந்த செட் ஆட்டம் காண ஆரம்பித்தது. செட் வீழ்ந்தால், பொருட்சேதமும், நேர விரயமும் அதிகம் என்பதால், ஆளுக்கொரு கொம்பு பிடித்துக் கொண்டு, செட்-க்கு சப்போர்ட் கொடுத்து, மிகுந்த பிரயத்தனத்துடன் செட்-ஐ பாதுகாத்து காற்றிலிருந்து தப்புவித்தோம். காற்றும் கொஞ்சம் தணிந்தது. மீண்டும் பாடல் ஒலிபரப்பியதும், இம்முறை கடுமையான மழை..!
இதுவரை பூச்சியையும், காற்றையும் வென்றாலும், அத்தீவு மழைக்கு ஒதுங்க இடமில்லாத தீவு என்பதால், நடிக்க வந்திருந்த ஆட்கள் கரைதிரும்ப வேண்டுமென்று அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள். பரிசல் காரர்களோ, காற்றுடன் மழை வருவதால் பரிசல் எடுக்க முடியாது என்று கைவிரித்தனர். சில தைரியர்கள் தண்ணீரில் இறங்கி கரைக்கு நடக்க ஆரம்பித்தார்கள் (அத்தீவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தடத்தில் நடந்தால், நடந்தே கரை சேரலாம்..! தடம் தெரிந்தவர்கள் மட்டும்..!) தீவிற்கு மின்சாரம் கொண்டுவரும் பொருட்டு, கரையிலிருந்து ஜெனரேட்டரை இயக்கி அதிலிருந்து நீளும் வயர்களை கம்புகள் போட்டு தண்ணீரில் நட்டு வைத்திருந்தோம். இதனால், தண்ணீரில் இறங்கி நடப்பவர்களுக்கு ஷாக் அடிக்கும் ஆபத்து உண்டு என்று பயந்து, வாக்கி டாக்கியில் ஜெனரேட்டரை அணைத்துவிடும்படி கூறியாயிற்று. ஆனால், ஜெனரேட்டரை அணைத்ததும், தீவிலும், கரையிலும் கும்மிருட்டு..! இருட்டில் கடும் மழையில் நனைந்தபடி அத்தனை பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க, வேறுவழியின்றி அன்றைய படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, முக்கியமான கருவிகளை மட்டும் செட் போடப்பட்டிருந்த அரங்கத்தின் அடியில் பத்திரப்படுத்திவிட்டு தண்ணீரில் இறங்கி கரைக்கு நடக்கலானோம்.
மோனு, மீனு என்று நடிக்க வந்திருந்த இரண்டு குழந்தைகளில், ஒரு குழந்தையை நானும், இன்னொரு குழந்தையை அடியாளாக நடிக்க வந்த திரு.'கேபிள்' மணி என்பவரும் உப்பு மூட்டை தூக்கி கொண்டு நடந்து கொண்டிருந்தோம். என் முதுகில் இருந்த குழந்தை, தைரியமாக நிறைய ஜோக்குகள் சொல்லிக் கொண்டே வந்தது. நானும் பயத்துடன் சிரித்தபடி நடித்துக் கொண்டே நடந்தேன்.
தண்ணிரில் அனைவரும் இறங்கி போய்க்கொண்டிருக்கும்போது, கும்மிருட்டில் திடீரென்று மின்னல் வெளிச்சமடிக்க, சுற்றிலும் நீரும், நடுவே கும்பலாய் மனிதர்கள் நடந்து போவதும் ஏதேதோ திரைப்படங்களில் பார்த்த காட்சிகளை ஞாபகப்படுத்தி கொண்டிருந்தது.
தண்ணீரில் நடப்பது ஒன்றும் அவ்வளவு கிலியாக இல்லை..! நீர்மட்டம் இடுப்புவரை மட்டுமே இருந்தது. ஆனால், அடிக்கும் காற்றுக்கு, இரு பக்கத்திலிருந்தும் தண்ணீர் மேலே பீய்ச்சி அடித்தது மட்டும் சற்று மிரட்டலாக இருந்தது. 'அலை பெரிதானால் என்னவாகும்' என்ற அனாவசிய கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமல் மெல்ல நடந்து கொண்டிருந்தோம். அப்போது, உடன் நடக்கும் கிராமவாசிகளில் ஒருவர் 'மழை வந்தால் ஏரியில் நீர் மட்டம் விறுவிறுவென்று ஏறிவிடும்' என்று ஒரு குண்டை போட்டார். உடனே அனைவரது நடையிலும் ஒரு வேகம் கூடியதை கவனிக்க முடிந்தது. வாழ்க அந்த நபர்..!
ஒரு வேடிக்கை என்னவென்றால், அடுத்த நாள்..! (26ஆம் தேதி) போதிய ஏற்பாடுகளோடு வந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்த ஆயத்தமானபோது, அன்றும் கடும் மழை..! கிராம வாசிகள் அனைவரும் எங்களை வாழ்த்த ஆரம்பித்தனர். நாம் படப்பிடிப்பு நடத்த வந்த நேரம், அவர்கள் கிராமத்தில் நல்ல மழை பிடித்துக் கொண்டது என்பது அவர்களுக்கு மகிழ்ச்சி..! பாடலைப் போட்டதும் மழை வருகிறதே..! பாடல் ஒருவேளை ஹம்ரிதவர்ஷினி ராகமோ..? என்று நாங்கள் வெறுப்பில் புலம்பி கொண்டிருந்தோம். அன்றும் படப்பிடிப்பு ரத்து..! அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை..! அன்றும் மழை வர வாய்ப்பிருக்கிறது என்று கூகிளார் கூறவே..! ரிஸ்க் எடுக்க வேண்டாமென்று எண்ணி..! தீவுக்கே போகவில்லை..!
படப்பிடிப்பில்...
எங்கள் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கிராமத்து மக்கள், அவர்களாகவே ஒரு பரிகார பூஜையை நடத்தி கொடுத்தார்கள். அந்த அன்புக்கு எங்கள் குழு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்...! 4ஆவது நாள்..! 28ஆம் தேதி அன்று இரவு நல்ல வேளையாக (?) மழை வராததால் பாடல் படப்பிடிப்பு அன்றிலிருந்து நல்லபடியாக நடந்தது.
(அனுபவம் தொடரும்..!)