Sunday, August 21, 2011

அம்புலி 3D பாடல்கள்...




அம்புலி 3D திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது. என்னுடன் படித்த பள்ளி நண்பர்களும், கல்லூரி நண்பர்களும், உடன் வேலைசெய்த நண்பர்களும் வந்திருந்தனர். வலையுலக நண்பர்களில் 'கேபிள் சங்கர்' சில பதிவர்களுடன் வந்திருப்பதாக தெரிவித்தார். வந்திருந்து வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி..!


விழா நடந்தேறிய விதத்தையும் புகைப்படத்தையும் பிறகு பதிகிறேன்..! முதலில் செவிக்கு உணவு...

அம்புலி திரையிசை பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கேட்டுவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.


01. HAPPY FAREWELL DAY
பாடகர்கள் : பென்னி தயாள், பாப் ஷாலினி, S ரஷ்மிதா, ப்ரியங்கா
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : மெர்வின் சாலமன்



அம்புலி படத்தின் 4 இசையமைப்பாளர்களில் இந்த பாடலுக்கு இசையமைத்த மெர்வின் சாலமன் எங்கள் குழுவுக்கு புதியவர், நால்வரில் இளையவர்.  'பொறியல்' என்ற RockBand நடத்தி வரும் இளைஞர்.கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மெர்வினை ஒரு RockBand நிகழ்ச்சியில் சந்தித்து தேர்வு செய்தோம்.இந்த பாடலை அவர் கம்போஸ் செய்யும்போது, கல்லூரியில் அவருக்கு இறுதியாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. பாவம்... புத்தகத்தையும், கீ-போர்டையும் ஒன்றாக வாசிக்க வேண்டிய கட்டாயம்... ஆனால் பாடப்பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டார், பாடல் பரீட்சையில் வெற்றி பெற்றிருக்கிறாரா என்று நீங்கள் கேட்டுப் பார்த்து சொல்லுங்கள்...

---------------------------------------------------------

02. நெஞ்சுக்குள்ள யாரு....
பாடகர்கள் : கார்த்திக், சின்மயி
பாடல் : கவிஞர் தாமரை
இசை : சாம் C.S.



இந்த பாடலின் இசையமைப்பாளர் சாம் C.S. எங்கள் நீண்ட நாளைய நண்பர், கலையம்சத்தில் பன்முகம் கொண்டவர். எனக்கு முதலில் பாடலாசிரியரென அறிமுகமானாலும் அவர் இசையில் வல்லவர் என்பது அவர் இசையமைத்த "14 For Teen" என்ற ஆல்பம் மூலமாக உணர்ந்தேன். மெலோடி பாடல்கள் இவரது ஸ்பெஷாலிட்டி. அம்புலியில் இனிமையான ஒரு செமி ஃபேன்டஸி மெலோடியை அவரிடம் கேட்டபோது அவர் இசைத்து கொடுத்த பாடல்தான் இந்த 'நெஞ்சுக்குள்ள யாரு...'

---------------------------------------------------------


03. மழைக்காடே... மணல்மேடே....
பாடகர்கள் : மதுபாலகிருஷ்ணன்
பாடல் : நெல்லை ஜெயந்தா
இசை : K. வெங்கட் பிரபு ஷங்கர்




இந்த பாடலுக்கு இசை வெங்கட் பிரபு ஷங்கர் (நண்பர் ஹரியின் தம்பி)... இவர் இளையராஜா சாரின் தீவிர ரசிகர். அம்புலி படத்தின் பின்னனி இசையில் ஒரிஜினல் ஸ்கோர் இவர்தான். எனவே, கதையினூடே வரும் ஒரு சந்தர்ப்பத்தில் கிராமத்து மக்களின் ஒட்டுமொத்த வலியை பிரதிபலிக்கும் பாடலான இந்த 'மழைக்காடே மணல்மேடே' பாடலை இவரே இசையமைத்து பாடல் வடிவம் கொடுத்தார்... கேட்டுப்பாருங்கள்.. எப்படியாவது இவரது பாடலை இளையராஜா சாரிடம் போட்டு காட்டி கருத்து கேட்க வேண்டும் என்பது எங்கள் குழுவினரின் உள்ளாசை... அவரிடம் கேட்கும்போது கேட்டுக் கொள்ளலாம். இப்போது நீங்கள் கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள்


---------------------------------------------------------


04. சந்திரன சூரியன....
பாடகர்கள் : விஜய்பிரகாஷ்
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : சதீஷ்




சதீஷ்... இவரை சில வருடங்களுக்கு முன்பு சந்திக்கும்போது 'ஐயப்பன் பக்தி பாடல்களை வெளியிட முயன்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த ட்யூன்கள் மிக அருமையாக இருந்து. எனது முதல் குறும்படமான 'இராமன் எஃபெக்ட்'-ற்கு இவர்தான் சிறப்பாக இசையமைத்து கொடுத்தார். அதன்பிறகு 'ஓர் இரவு', இப்போது 'அம்புலி'யில் முக்கியமான ஒரு கூட்டுப்பிரார்த்தனை பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். எந்த ஒரு கடவுளையும் குறிப்பாக சொல்லாமல் பொதுவாக ஆதிசக்தியை வணங்குவது போன்ற ஒரு பாடல் இது. இந்த பாடல் படப்பிடிப்பின் போதுதான் கிலியான சில அனுபவங்கள் ஏற்ப்பட்டது என்று எனது படப்பிடிப்பு அனபவத்தில் எழுதியிருக்கிறேன்.




---------------------------------------------------------


05. Rock'N Roll
பாடகர்கள் : ரஞ்சித், பாப் ஷாலினி
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : சாம் C.S.




70-களில் ஈஸ்ட்மென் கலரில் பார்க்கும் சில பாடலை போன்ற ஜாலியான பாடலிது. கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் மிகவும் ரசித்தபடி எழுதி கொடுத்தார். இசையமைப்பாளர் சாம், இந்த பாடலில் 70களில் ஸ்டைலில் விசில், பியானோ, ட்ரம்ஸ் என்று உபயோகித்து வாசித்து கொடுத்தார். குறிப்பாக பாடலுக்கு நடுவில் வரும் ஒரு பியானோ ரன்னிங்-ஐ பலமுறை ப்ராக்டீஸ் செய்து, ஒரு நள்ளிரவில் வாசித்து காட்டினார். அதை அவர் வாசிப்பதை பார்த்தாலே டான்ஸ் ஆடுவது போலிருக்கும்... எனவே, இது நிச்சயமாக கேட்பவர்களை ஆடத்தூண்டும் என்ற நம்பிக்கையில்.... இதோ...





---------------------------------------------------------


06. ஆத்தா நீ பெத்தாயே....
பாடகர்கள் : தஞ்சை செல்வி
பாடல் : நெல்லை ஜெயந்தா
இசை : K. வெங்கட் பிரபு ஷங்கர்




தூங்க வைப்பதற்கு பாடப்படும் தாலாட்டு பாடலை சற்றே மாற்றி 'தூக்கம் தொலைத்து மிரட்சியில் படுத்திருக்கும்' ஒரு கிராமத்து மக்களுக்காக, ஒரு வயதான மூதாட்டி பாடுவதை போன்ற பாடல் இது. இதை 'பாட்டியின் புலம்பல்' என்றும் கூறலாம். இப்பாடலுக்கு இசை K. வெங்கட் பிரபு ஷங்கர், இந்த பாடலுக்காக இவர் ஏற்கனவே 2 ட்யூன்களை இசைத்து வைத்திருந்தார். ஆனால், அவை போதாமல் இன்னும் தேவை தேவை என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கவே, ஒரு நாள் (சற்றே) கோபமாக, இரவு வேளையில் சுமார் 2 மணி நேரத்திற்குள் இந்த பாடலுக்கான ட்யூனையும் முடித்து, அதற்குமேல் சிறப்பு சப்தங்களை சேர்த்து அலங்கரித்து காட்டினார். அது மிகவும் திருப்திகரமாக அமைந்தது. பாடலை 'ஈசன்' புகழ் 'தஞ்சை செல்வி' அவர்கள் உணர்ந்து பாடிக் கொடுத்தார். பாடலுக்கேற்ற முகபாவங்களுடன் மிகவும் சிறப்பாக கலைராணி மேடம் நடித்து கொடுத்தார்.


---------------------------------------------------------


07. Theme of AMBULI
இசை : K. வெங்கட் பிரபு ஷங்கர்



படம் வெளியாவதற்கு முன் ஒரு படத்தின் கதையை பொதுவாக வெளியில் சொல்லமாட்டார்கள். ஆனால், இசையமைப்பாளர் பிரபு தைரியமாக இந்த அம்புலியின் கதையை இசைவடிவில் தீம் மியூஸிக்காக சொல்லியிருக்கிறார். நல்லவேளை வார்த்தையாக விளங்கி கொள்ள முடியாது என்றாலும் இசை மொழியில் சொல்லப்பட்டதால் உணர்வாய் உணர்ந்து கொள்ளுங்கள்...


---------------------------------------------------------


08. 3D ERA
பாடகர்கள் : நரேஷ் ஐயர், ப்ளாஸி
பாடல் : ப்ளாஸி & அம்புலி டீம்
இசை : சதீஷ்



அம்புலி, தமிழ் சினிமாவில் முதல் முழுநீள 3D டிஜிட்டல் திரைப்படம் என்பதை பிரகடனப்படுத்தும் வகையில் அமைந்த கொண்டாட்டமான இந்த பாடல் கடைசி நிமிடத்தில் முடிவாகி ஆடியோ வரிசையில் சேர்க்கப்பட்டது. ஆனால், பாடலில் அந்த கடைசி நேர அவசரம் தெரியாதபடி மேன்மை தீட்டியவர் இசையமைப்பாளர் சதீஷ். இந்த பாடலை எங்களால் மறக்கவே முடியாது. காரணம், ஒரு நாள் டின்னர் முடித்துவிட்டு இரவு வேளையில் அலுவலகத்தில் அம்புலி குழுவினர்கள் அனைவரும் கும்பலாக அமர்ந்து இந்த பாடலுக்கான தமிழ் வரிகளை கூவி கூவி பாடிப்பார்த்து எழுதினோம் (பாவம் அபார்ட்மெண்ட்-ல் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்). 'நன்றாக வந்துள்ளதோ..?' என்ற சின்ன நம்பிக்கை பிறந்ததுமே சேவல் கூவியது. பேனா மூடி மூடப்பட்டது. 'நரேஷ் ஐயர்' குரலில் குதூகலம் கொஞ்ச,. ஆங்கில வரிகளை 'ப்ளாஸி' எழுதியும் பாடியும் பாடலை பிரமாதப்படுத்திவிட்டார்கள்.


---------------------------------------------------------

எட்டு பாடல்களும் கேட்டுவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பாடலை உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!


அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Songs Courtesy : www.raaga.com
Source : http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003125


Signature

21 comments:

udaya said...
This comment has been removed by the author.
udaya said...
This comment has been removed by the author.
udaya said...

hi sir..i have attend audio launch function. i am a santhosh frnd who is a ass camera man in ur movie. funtion is realy awesme. great team effort. each and every events are very creative. trailer and songs give a new experiance. esply rock and roll song is superb one small adive make that song for ur ad in tv trailer it will be sure hit. i am waiting for the movie to see a first day with first ticket. all the best sir... i am waiting for the 100th day funtion u must invite me........

DREAMER said...

Hi Udaya, thanks for attending the function... and yes, we're planning for song trailer. I'll surely invite you to all events related to this movie. Thanks again

Regards
HARESH NARAYAN

udaya said...

its my plre sir

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

அடிச்சு தூள் பரத்துங்கள் ஹரீஷ்..

Madhavan Srinivasagopalan said...

மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்..

Unknown said...

அன்புள்ள இயக்குனருக்கு, தங்களது அம்புலி 3டி திரைப்படத்தின் பாடல்களை கேட்டேன். அனைத்து பாடல்களும் நன்றாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நன்றாக் உள்ளது. உங்கள் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் இத்திரைப்படம் வெற்றியடைய வாழ்த்தி விடைபெறுகிறேன்.
நன்றி
கார்த்திக்

DREAMER said...

வணக்கம் கவி அழகன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் கேபிள்ஜி,
வந்திருந்து நேரில் வாழ்த்தி சென்றதில் எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி..!

வணக்கம் மாதவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் கார்த்திக்,
பாடல்களை கேட்டு பாராட்டியதற்கும், படம் வெற்றி பெற வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி..!

-
DREAMER

ஆர்வா said...

ஹாய் ஹரீஷ் சார்.. பாடல்களை எல்லாம் கேட்டேன் அசத்தலா வந்திருக்கு.. ஃபேர்வெல் பாடலில் எல்லா வாத்தியங்களும் கொடுக்கும் கொண்டாட்டம் அசத்தல். இனி காலேஜ் ஃபேர்வெல்லில் எல்லாம் இந்த பாடல்தானோ? சின்மயி எனக்கு மிகப்பிடித்த சிங்கர்.அவரின் வசீகரக்குரலில் கூடவே கார்த்திக்கும் சேரந்து கொள்ள அமர்க்களமாய் இருக்கிறது. நீர்மூழ்கி கப்பல் போன்ற வர்ணனையை தாமரை பயன்படுத்தி இருக்கும் அருமை. செல்ல செல்ல செல்ல என்று கார்த்திக் நம்மை அந்தப்பாடலோட இழுத்துக்கொண்டு போகிறார். தஞ்சை செல்வியின் குரலில் தெறிக்கும் அமானுஷ்யமும் நிறைய கதைகளை சொல்கிறது.. இசையமைப்பாளர்களுக்கு என்னுடைய
வாழ்த்துக்கள்.. விரைவில் திரைப்படத்தை காண ஆவலாய் இருக்கிறோம். வாழ்த்துக்கள்..

SENTHIL MURUAGN said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

Lusty Leo said...

ஹரீஷ், பாட்டெல்லாம் சூப்பர். படமும் சூப்பராக வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹரிஷ் சார் பாடல்களை இப்போது தான் கேட்டேன்.ரொம்ப நல்லா வந்து இருக்கு.கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு.இசையமைப்பாளர்கள் 4 பேரும் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்கள்.அவர்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.பின்னனி இசையும் ரொம்ப முக்கியம் அதை நல்லபடியாக செய்யவும்,பாடல்கள் நல்லா ஹிட் ஆகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.பாடகர்களும் அழகாக பாடி அசத்தியிருக்கிறார்கள்,படத்தை பார்க்கும் ஆவல் இன்னும் அதிகமாகிக்கொண்டே போகிறது.காத்துகொண்டிருக்கிறோம் அம்புலியை ஆச்சர்யத்துடன் பார்க்க...வாழ்த்துக்கள் சார்...

DREAMER said...

வணக்கம் கவிதை காதலன்,
பாடல்கள் கேட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி..! சின்மயி எனக்கும் மிகவும் பிடித்த சிங்கர்... உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..!

வணக்கம் செந்தில் முருகன்,
வெற்றி பெற வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..!

வணக்கம் லஸ்டி லியோ,
பாடல்களை கேட்டு வாழ்த்தியதற்கும், அம்புலி வெற்றி பெற வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி..!

வணக்கம் ஸ்வீட் ராஸ்கல்,
உங்கள் சார்பாக, உங்கள் வாழ்த்துக்களை 4 இசையமைப்பாளர்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். பின்னனி இசை அருமையாக அமைந்து கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கும் படத்துக்கான காத்திருப்புக்கும் மிக்க நன்றி..!

-
DREAMER

Abbas said...

Hi Harish,

I am in Chennai now for short visit. The saw the Trailer with my friends and it looks great. I ll listen the music. I am very excited to see the moview. When will be the release ?

All the Very Best and Advance congrates for the great success !!

Cheers,
Abbas

அருண் said...

I'm Arun from srilanka,அம்புலி படத்தில் எல்லா பாட்டையும் கேட்டேன்,"நெஞ்சுக்குள்ள யாரு" சூப்பர் மெலடி,அடிக்கடி கேட்டுகிட்டு இருக்கேன்.சாம் c.s கு என்னோட வாழ்த்துக்கள்.மற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகம்,படத்தோட தீமை கேட்டுட்டு நைட்டு தூங்குறதுக்கே பயமா இருந்துச்சு.all the best for ur cast & crew...உங்களின் முந்தைய படமான ஓர் இரவு படத்தை பார்க்க முடியவில்லை.
டிவிடியும் கிடைக்கல.இந்த படத்தை முடிஞ்சா உலகம் பூராவும் வெளியிடுங்க,இலங்கை உட்பட.
பாடல்களையும் இங்கே ரேடியோல கேட்டதா ஞாபகம் இல்ல.இலங்கையில இந்த பாடல்களை வெளியிட முடியாதா?

கவி அழகன் said...

ஆச்சரியமா இருக்கு இவ்வளவு சிம்பிளா இருக்கிங்க ஒரு பட இயக்குனர் .

நம்ப முடியவில்லை உண்மையில் நீங்க இயக்குனர் தானே ??

ஒரு பட இயக்குனர் ஏன் வலையுலக நண்பர் என்பதில் பெருமை

உங்கள் பாடம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

DREAMER said...

Hello Abbas,
Happy that you're(or were by now) in chennai... Sorry couldn't post a quick reply, got stuck in post production works. Regarding release we're still working on it. I'll share with know as soon as its fixed. Thanks for your wishes..!

வணக்கம் அருண்,
பாடல்களை கேட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி... உங்களது வாழ்த்தை இசையமைப்பாளர் சாம்-இடமும் தெரிவித்து விடுகிறேன். இங்கேயும் இன்னும் ரேடியோவில் பாடல்கள் ஒலிபரப்ப படவில்லை..! காரணம் தெரியவில்லை..! முயன்று கொண்டிருக்கிறோம். இலங்கையில் பாடல் வெளியிட என்ன வழிமுறைகள் என்று இலங்கை நண்பர்கள் யாராவது தெரிந்தால் பகிரவும்..!

வணக்கம் கவிஅழகன்,
படத்தையும் இயக்கியிருக்கிறேன். அவ்வளவே..! உங்கள் வாழ்த்தையும் நட்பையும் பெற்றுக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..!

-
DREAMER

நம்பிக்கைபாண்டியன் said...

இயக்குனர் அண்ணா,தமிழில் நேரடி 3D படங்கள் அதிகம் வருவதில்லையே என்ற மனக்குறை பலருக்கு உண்டு, அதை நீக்க உங்கள் அம்புலி படத்தில் வெற்றி அடித்தளம் அமைத்து கொடுக்க வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!

DREAMER said...

வணக்கம் நம்பிக்கைபாண்டியன்,
முதல் முறை என்பதை உணர்ந்து கவனத்துடன் செயலாற்றி வருகிறோம்... இதற்கும் மேல் படத்தின் வெற்றிக்கு உங்களைப் போன்ற நண்பர்களின் வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் கிடைத்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது...

-
DREAMER

Popular Posts