இன்று மாலை நிகழ்ந்த சந்திர கிரகணத்தை, 'அம்புலி 3D' குழுவினர்கள் சேர்ந்து எங்கள் அலுவலக மாடியில் கண்டு களித்தோம். கேமிராமேன் சதீஷ், இன்று நிகழ்ந்த கிரகணத்தை 'ஸ்டாக் ஷாட்'டாக வைத்துக் கொள்வதற்காய் ஷூட் செய்து கொண்டிருந்தார். சுற்றிலும் நின்றிருந்த நாங்கள் ஒவ்வொருவரும் கிரகணத்தைப் பற்றிய அவரவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தோம்
அறிவியல் ரீதியாய் அதற்கு ஆயிரம் அர்த்தம் கூறினாலும், எனக்கு கிரகணத்தை பார்த்து சிலாகிக்கும்போது, சிறுவயதில் என் தாத்தாவிடம் கேட்ட சந்திரமண்டல கதைகள் நினைவுக்கு வந்துக் கொண்டிருந்தன... இது போன்ற ஸ்பேஸ் ஃபேண்டஸி ரசத்துடன் கூடிய நம்மூர் பழங்கதைகளுக்கு(ம்) என்னை ரசிகனாக்கிய என் தாத்தா கண்டிப்பாக மேலிருக்கும் நட்சத்திரங்களின் நடுவே ஜொலித்துக் கொண்டிருப்பார் என்று அறிவியல் அறிவை தோற்கடித்து நம்பத்தூண்டுகிறது என் நெஞ்சம்.
முன்பெல்லாம் நிலாச்சோறுக்கு அடிக்கடி கூடும் குடும்பக் கூட்டம்...
அரிதாய் தோன்றும் கிரகணத்தை காண அவரவர்வீட்டு மாடியில் கூடியிருந்தது...
தூரத்து மாடியில் எஃகோ எஃபெக்டில் கேட்கும் முகம்தெரியா குழந்தைகளின் குதூகலக்குரல் கிரகணத்துக்கு மேலும் கிராக்கி கூட்டிக்கொண்டிருந்தது...
தியேட்டரில், படத்தின் நடுவே கரண்ட் கட் ஆவதுபோல்...
கிரகணத்தை ஆழ்ந்து ரசிக்கும்போது குறுக்கே வந்து தொலைத்த மேகத்திரளை திட்ட மனம் வரவில்லை...
தோன்றி... மறைந்து... பின்தோன்றும் இந்த மாயை...
இயற்கை, சிலமணித்துளிகளே வானில் நிகழ்த்தும் கிராஃபிக்ஸ் காட்சி...
கிரகணம்...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்