Saturday, December 22, 2012

3D சினிமாவில் புதிய தொழில்நுட்பம் :HIGH FRAME RATE

ஒரு ரசிகர், திரைப்படம் பார்க்கும்போது, தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து பார்த்தாலேயொழிய அந்த திரைப்படம் வெற்றிப்பெறாது...

இந்த 'மெய்மறந்து' என்னும் உணர்வை கொடுக்க, சினிமாவின் ஆதிகாலத்தில் பிம்பங்கள் உதவி வந்தது... பிறகு சத்தம், இசை, ஜாலம், வண்ணம், அதிலேயே துல்லியம் என்று மாறி மாறி பரிணமித்து வந்த சினிமாவில், சில ஆண்டுகளுக்கு முன் 3D என்னும் தொழில்நுட்பம் மேலும் ஒரு மைல்கல்-ஆக அமைந்தது... அந்த வரிசையில் தற்போது, HIGH FRAME RATE 3D (சுருக்கமாக HFR 3D) என்னும் மேலுமொரு தொழில்நுட்பம் தலைதூக்கியுள்ளது.

இதை முதலில் முயன்ற பெருமை, கிங்-காங், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற வெற்றித் திரைப்படங்களின் இயக்குனர் திரு.பீட்டர் ஜாக்ஸன் அவர்களை சேர்ந்துள்ளது...

இவர் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட THE HOBBIT திரைப்படம் HFR3Dயில் வெளியிட்டுள்ளார்.


இந்த HFRஐப் தெரிந்துக் கொள்வதற்கு முன் FRAMES PER SECOND (FPS) பற்றி ஒரு சிறு விளக்கம் இதோ...

ஒருவர் கை அசைப்பது போல் ஒரு வீடியோ இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்... அந்த கை அசைக்கப்படுவதை 24 ஃபோட்டோக்களாக எடுத்து, அந்த 24 ஃபோட்டோக்களையும் ஒரு நொடியில் சேர்த்து ஓட்டிக்காட்டும்பொழுது, அந்த கை அசைவது போல் அந்த ஒரு விநாடியில் தெரியும்... இப்படியே ஒவ்வொரு விநாடிக்கும் 24 ஃபோட்டோக்கள் ப்ரொஜெக்டரில் ஓடும்... இந்த ஃபோட்டோக்களை FRAMES என்று அழைப்பார்கள்... இதை, 24FPS (Frames Per Second) என்று சொல்வார்கள்... ஆக ஒவ்வொரு திரைப்படமும் 24FPS என்ற விகித்ததில்தான் அகில உலகிலும் திரையிடப்பட்டு வந்தது... (டெலிவிஷனுக்கு தனிக்கணக்கு..)

தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த HFR மூலம் ஒரு விநாடிக்கு 48 FRAMEகள் ஓடும்... 24ல் கிடைக்கும் துல்லியத்தைக் காட்டிலும் மேலும் துல்லியம் காட்ட விழையும் ஒரு புது தொழில்நுட்பம்.

ஆனால், இந்த தொழில்நுட்பத்தில் ஒரு குறைபாடு இருக்கிறது... சினிமா என்பது ஒரு நவீன நிழல் நாடகம்.. ஒரு 'மாயை' என்றுகூட சொல்லலாம். அந்த மாயையில் படம் பார்க்கும் ரசிகர்களை ஒரு டிரான்ஸ் நிலைக்கு கொண்டு சென்று கதை கூறி அவர்களை எண்டர்டெயின் செய்ய வேண்டும். அந்த மாயையிலிருந்து விலகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால், அவர்களால் தன்னை மறந்து திரைப்படத்தில் ஆழ்ந்து போக முடியாது.

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த 48FPSல் காட்டப்படும் துல்லியம் சிறு சிறு துரும்புகளின் நிஜ வண்ணத்தை காட்டிவிடுவதால், ஒரு விஷயத்தை பொய் என்று ரசிகர்களை நம்பவைப்பது சிரமமாகிவிடுகிறது. இப்படியிருக்கும்போது, ஒரு தங்கமுலாம் பூசப்பட்ட அட்டைக்கத்தியை தங்கம் என்று நம்பவைக்க, திரையில் முடியாமல் போகிறது. பிறகு எப்படி மக்கள் படத்தில் லயிக்க முடியும்?

ஈஸ்ட்மேன் கலரில் வந்த சரித்திர படங்களுக்கும் தற்போது எடுக்கப்படும் சரித்திர படங்களையும் பார்க்கும்போது, ஈஸ்ட்மென் கலரில் இருக்கும் சரித்திர நம்பகத்தன்மை தற்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. (உதாரணம், கர்ணன் படத்தின் சரித்திரத்தன்மையையும், பொன்னர் சங்கர் படத்தின் சரித்திரத்தன்மை.. நான் படத்தின் தரத்தை ஒப்பிட்டு கூறவில்லை... தொழில்நுட்பத்தை மட்டுமே கூறுகிறேன்)

நான் 48FPSயில்  வெளியாகியிருக்கும் THE HOBBIT திரைப்படத்தை சத்தியம் சினிமாஸ்-ல் HFR3Dயில்தான் பார்த்தேன்... இந்த தொழில்நுட்பம் பிடித்துப்போனால் இதை நான் இயக்கவிருக்கும் அடுத்த 3D படத்தில் உபயோகிக்கலாம் என்ற ஆசைதான் காரணம்... ஆனால், இந்த HFR3Dயின் விளைவு, படம் பார்க்கும்போது சற்றே கவனச்சிதறலாய்த்தான் எனக்கும் எனது நண்பர்களுக்கும் பட்டது...

இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், இந்த தொழில்நுட்பத்தை ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டபோது, சில பத்திரிகையாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் இந்த தொழில்நுட்பம் கவனச்சிதறலாய் பட்டுள்ளது... எனவே, இன்னமும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காத நிலையில்தான் இந்த HFR3D இருக்கிறது. ஆனால், இதை இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன் பரிணாமம் என்றே கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பம் பழக மக்களுக்கு நிச்சயம் அவகாசம் தேவைப்படும் என்றும், இந்த முறையில் 3D படம் பார்க்கும்போது, கண்களில் ஏற்படும் சிரமம் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் தேவையோ என்றுகூட குழப்பம் ஏற்படுகிறது...

நீங்கள் இந்த படத்தை HFR3D தொழில்நுட்பத்தில் பார்த்திருக்கிறீர்களென்றால், நிச்சயம் உங்கள் கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்...




Signature

3 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒரு விஷயத்தை பொய் என்று ரசிகர்களை நம்ப வைப்பது சிரமமாகி விடுகிறது///
பொய் என்று நம்ப வைக்கவா? உண்மையென்று நம்ப வைக்கவா? டவுட்டு...

வவ்வால் said...


ஹாபிட் 48 ஃபிரேம்கள் வேகத்தில் படப்பதிவு செய்திருப்பதால் அசைவுகள் துல்லியமாக பதிவாகும் தவிர காட்சியின் துல்லியம் கூடும் என நினைக்கவில்லை.

வழக்கமான திரைச்சுருள் திரையிடும் போது கூட 24frames per sec , எனப்படம் பிடிக்கப்பட்டதை 72 frames per sec என்ற வேகத்தில் திரையில் தெரிய வைப்பதுண்டு, அதாவது ஒரே ஃபிரேம் 3 முறை திரையில் விழும், இதற்காக ஒரு வேகமா சுழலும் ஷட்டர் அமைப்பு புரொஜெக்டர் முன்னால் உள்ளது,இதன் மூலம் நமது விழிக்கு காட்சி நிலைப்பு தன்மை மற்றும் மூளையின் செயல்பாட்டினை சற்றே ஏமாற்றி சீரான இயக்கம் உருவாக்க வைக்கப்படுகிறதாம்.

ஆரம்பகாலத்தில் திரைச்சுருள் வைத்தே 44 ஃபிரேம் ரேட்டில் படம்ப்பிடித்து, படம் காட்டியும் உள்ளார்கள், அப்போது ஃபில்ம் ரோல்கள் நைட்ரோ செல்லுலோஸ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதால் தீப்பிடித்துக்கொண்டதால், பின்னர் 24 ஃபிரேம் ரேட்டுக்கு மாறிக்கொண்டார்கள் எனப்படித்துள்ளேன்.

வழக்கமாக டிஜிட்டல் புரொஜெக்‌ஷனிலும் 24 பிரேம்களில் படம் பிடிக்கப்பட்ட காட்சியை digital இல் 48 frames per sec என்ற வேகத்தில் தான் திரையிடுகிறார்கள். இன்னும் பல வேகங்களில் திரையிடுவது வழக்கம்,புரொஜெக்டரைப்பொறுத்து, Digital Cinima Initiaitve (DCI)தளத்தில் விரிவாக உள்ளது.

24 ஃபிரேம் வேகத்தில் படம்பிடித்து , பின்னர் 48 ஃபிரேமில் திரையிடுவதை, தற்போது 48 ஃபிரேம் வேகத்தில் படம் பிடித்து 48 ஃபிரேம் வேகத்தில் திரையிடுகிறார்கள், இதனால் நமக்கு சீரான அசைவுகள் கிடைக்கும் , அதை தவிர காட்சி துல்லியம்(ரெசொல்யுஷன்) அதிகரிக்கும் என சொல்ல முடியாது.

Unknown said...

Good collective info Hareesh...

Popular Posts