Tuesday, February 16, 2010

முடிவு - [சிறுகதை]


Justify Full01
நடப்பது

ரயில்வே தண்டவாளத்தில் முகிலன் மிகவும் சோகமாக நடந்து கொண்டிருந்தான். அவனை இப்போது யார் பார்த்தாலும் தற்கொலை செய்து கொள்ள போகிறான் என்று கண்டுபிடித்து காப்பாற்றிவிடுவார்கள். ஆனால் அந்த நேரம் அங்கு யாரும் இல்லாமல் இருந்தது முகிலனின் அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை.

தூரத்தில் ட்ரெய்ன் ஹாரன் சத்தம் கேட்டது. முகிலனின் உடம்பு முழுவதும் ஒருவித நடுக்கம் பரவியது. அழுத்தமாக மூச்சு விட்டுக் கொண்டான்.

இப்போது ட்ரெய்ன் நெருங்கும் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டே வந்தது. தண்டவாளத்தில் ஆள் நிற்பது ட்ரெய்ன் டிரைவருக்கு தெரியாதபடி அந்த பாதை வளைந்து காணப்பட்டது.

ட்ரெய்ன் சத்தம் இப்போது மிக அருகில் கேட்க, முகிலன் அப்படியே தண்டவாளத்தில் காதுகளை பொத்திக் கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

டிரைவர் கடைசி நிமிடத்தில் முகிலனை பார்த்திருக்க வேண்டும். உடனே ஹார்ன் அடித்தார்.

ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆங்ங்ங்ங்ங்ங்ங்.....

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ட்ரெய்ன் ஹாரன் சத்தத்தோடு முகிலின் அலறல் சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இப்போது ட்ரெய்ன் கடந்து போகும் சத்தம் மட்டும் கேட்டது. முகிலன் வலி எதுவும் உணராதவனாக கண்களை மெல்ல திறந்து பார்த்தான். ட்ரெய்ன் பக்கத்து தண்டவாளத்தில் போய்க்கொண்டிருந்தது.

'ஆஆஆஆஆஆஆ....' கதறி அழுதான்.

ஒரு தற்கொலையை கூட தன்னால் ஒழுங்காக செய்ய முடியவில்லையே. இவ்வளவு கெட்ட நேரமா தனக்கு என்று எண்ணி நொந்து கொண்டான்.

நடந்தவற்றை நினைத்து பார்த்தான்.

--------------------


02
நடந்தது

முன்தினம் நள்ளிரவு 2.00 மணி...

பேச்சுலர் அறையின் அத்தனை அடையாளங்களும் அந்த அறையில் படிந்திருந்தது.

கீபோர்டின் டைப்ரைட்டிங் சத்தம் தொடர்ந்து மழை வருவது போல் கேட்டுக் கொண்டிருக்க. அந்த சத்தத்தால் தரையில் படுத்துக் கொண்டிருந்த விக்கி, தூக்கம் கலைந்து கண்திறந்தான். தலையை மட்டும் எம்பி பார்த்தான். முகிலன், கம்ப்யூட்டரில் எதையோ டைப் செய்து கொண்டிருந்த்து தெரிந்தது.

'முகிலா? இந்நேரத்துக்கும் தூங்க விடாம என்னடா டைப் பண்ணிட்டிருக்கே..?!'

'சாரிடா, இன்னும் கொஞ்ச நேரம்தான் முடிச்சிடுறேன்.. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா..?' என்று கூறிய முகிலன், கண்ணாடி அணிந்தபடி தனது தட்டச்சு வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான்.

விக்கிக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. எழுந்து அவனருகில் சென்றான்.

'காலையில பண்ணக்கூடாதா..?'

'இல்லடா, இந்த ஸ்க்ரிப்டை நாளைக்கு 'A4 ADz' கம்பெனில சப்மிட் பண்ணணும்டா..'

'அவ்வளவு அவசரமா..?'

'ஆமா, இந்த ஸ்க்ரிப்ட் நாளைக்கு ஓக்கே ஆச்சுன்னா, எனக்கு இமீடியட் பேமண்ட் கிடைக்கும். ஊருக்கு பணம் அனுப்பனும்டா..? அம்மா ஃபோன் பண்ணி புலம்புறாங்க. ஊருல கடங்காரன், மானத்தை வாங்குறானாம்'

'ப்ச், சரி ஏதோ செய்' என்று திரும்பியவன் ஏதோ ஞாபகம் வர, மீண்டும் முகிலனைப் பார்த்து 'ஆமா, நான் ஒரு கான்செப்ட் கேட்டிருந்தேனே..? ஊதுபத்தி AD-க்கு.. முடிச்சிட்டியா..?'

'ஆங்! அது ரெடியா இருக்குடா' என்று கூறிய முகிலன், டேபிள் டிராவை திறந்து, ஒரு ஸ்டிக் ஃபைலை எடுத்து கொடுத்தான். விக்கி அதை வாங்கி படித்து பார்த்தான். அவனுக்கு மிகவும் பிடித்து போனது.

'சூப்பர்டா, நல்லாருக்கு, நான் எங்க டைரக்டர்கிட்ட குடுக்குறேன். என்னன்னு அப்புறம் பாத்துக்கலாம்' என்று ஃபைலை டேபிள் மேல் வைத்துவிட்டு, விக்கி மீண்டும் படுக்க சென்றான்.

தரையில் படுத்தவனிடம், முகிலன் மிகவும் தயக்கத்துடன், 'மச்சான், கேக்குறேன்னு கோச்சுக்காதை... உங்கிட்ட ஒரு 20,000 ரூபா இருக்குமாடா..?'

விக்கி அவனை ஒரு 2 விநாடிகள் பார்த்து, 'ரொம்ப சாரிடா, இப்ப என்கிட்ட பணம் எதுவுமில்ல..' என்று கூறினான்.

'சரிடா, பரவாயில்ல, நீ போய் தூங்கு, நான் இதை சீக்கிரம் முடிச்சிடுறேன்...' என்று கூறி சற்றும் யோசிக்காமல் தனது கவனத்தை கம்ப்யூட்டர் மாணிட்டரில் புதைத்தான்.

--------------------


03
நடப்பது

முகிலன் மீண்டும் தண்டவாளத்தை பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த வண்டியும் வருவது போல் தெரியவில்லை.

எனவே தண்டவாளப் பகுதியை கடந்து போய்க்கொண்டிருந்தான். முடியெல்லாம் கலைந்து, பார்ப்பதற்கு மனநிலை பாதிக்கப்பட்டது போல் காட்சியளித்தான். ஆனால் அவனுக்கு பாதிப்பு மனநிலையால் இல்லை நிதிநிலையால்தான் என்று அவனைப் பார்ப்பவர்களிடம் யார் கூறுவது..?

சுற்றும் முற்றும் பார்த்தான். கொஞ்ச தூரம் நடந்தான்.

தூரத்தில் ஒரு பாலம் தெரிந்தது. கீழே கூவம் நதி ஊர்ந்து கொண்டிருந்தது. கூவத்தில் அடையாளம் தெரியாத நபரின் பினம் கண்டெடுப்பு என்று பலமுறை தினசரிகளில் படித்தது முகிலனுக்கு ஞாபகம் வந்தது. தன் பிணமும் அப்படியே கிடைக்கட்டும் என்று நினைத்தவன், அந்த பாலத்துக்கு அருகில் சென்றான். கண்களை மூடிக் கொண்டு அந்த பாலத்தில் ஏற எத்தணித்தான். தூரத்தில் ஒரு கூட்டத்தின் குரல் கேட்டது.

தடை செய்! தடை செய்!
பி.டி. கத்திரிக்காயை தடை செய்!
தடை செய்! தடை செய்!
பி.டி. கத்திரிக்காயை தடை செய்!

ஒரு மாபெரும் கூட்டம், கையில் 'பி.டி. கத்திரிக்காயை தடை செய்!' என்று பலகைகள் பிடித்தபடி பாலத்தில் நுழைந்து கொண்டிருந்தனர். 'ஹய்யோ! இவர்கள் முன் பாலத்திலிருந்து குதித்தால் கண்டிப்பாக காப்பாற்றி விடுவார்கள் ' என்று நினைத்தவன் உடனே பாலத்திலிருந்து நகர ஆரம்பித்தான்.

தடை செய்!
தடை செய்!


'ஆஆஆஆஆஆஆஆஆஆ' என்று நொந்து போய் கத்தினான். அந்த சத்தம் கூட்டத்தின் சத்தத்தின் நடுவே சத்தமில்லாமல் கேட்டது.

மீண்டும் நடந்த நிகழ்வுகள் அவன் மனதில் ஓடியது.

--------------------


04
நடந்தது

அன்று காலை 9 மணி, முகிலன் தெம்பாகவே இருந்தான். விக்கி எழுந்து பார்த்த போது, சீராக டிரெஸ் செய்து கிளம்ப ஆயத்தமாயிருந்தான்.

'என்னடா, தூங்கவேயில்லியா..' என்று விக்கி ரங்கநாதரைப் போல் படுத்துக்கொண்டே சிரித்தபடி கேட்க

'4 மணிக்கே படுத்துட்டேன்டா'

'4 மணியா! அதுசரி! தூங்குற டைம்தான்டா அது...'

'நீ கிளம்புலயா?'

'டைரக்டர் 11 மணிக்கு மேலதான் வருவாரு... நான் 10.58க்கு ஆஃபீஸ்ல இருந்தா போதும். மணி 9-தானே ஆவுது. இன்னும் ஒரு 1 மணிநேரம் தூங்கிட்டு அப்புறமா ரெடியாயிக்கிறேன்.' என்று விக்கி கூறிவிட்டு மீண்டும் புரண்டு படுத்தான்.

முகிலன் அவனைப் பார்த்து சிரித்தபடி, கதவை மூடிக் கொண்டு கிளம்பினான். அதுதான் அன்று அவன் சிரித்த கடைசி சிரிப்பு

--------------------


05
நடப்பது

பாலத்திலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி ஒரு ஹைவேயில் நடந்து போய்க்கொண்டிருந்தான்.

'எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது. எதுவுமே வேண்டாம் செத்துடலாம்னாலும் ஏதாவது ஒரு விஷயம் தடுத்துக்கிட்டே இருக்கு... இந்நேரம் நான் செத்திருந்தா, எப்படி இருந்திருப்பேன். காத்தா அலஞ்சிட்டிருந்திருப்பேன். எந்த கடன் தொல்லையும் இல்லை, எந்த சச்சரவும் இல்ல, எப்படியாவது இன்னிக்கு செத்துடணும்.... ஆனா எப்படி...?' என்று யோசித்தபடி திரும்பி பார்க்க, தூரத்தில் ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. சட்டென்று அருகிலிருந்த மரத்தில் சென்று மறைந்து கொண்டான்.

இந்த பஸ் அருகில் வந்ததும், குறுக்கே குதித்துவிட வேண்டியதுதான் என்று யோசித்தபடி காத்து நின்றான்.

பஸ் அருகில் நெருங்கி கொண்டிருந்தது, குதிக்க தயாராகிக் கொண்டிருந்த போது அவனது செல்ஃபோன் ஒலித்தது.

'சே! யாரது இந்நேரத்துல..!' என்று எடுத்து பார்த்தான்.

விக்கி காலிங் என்று டிஸ்ப்ளேவில் தெரிந்தது.

எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது

ஸ்ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்று அந்த பஸ் அவனைக் கடந்து சென்றது.

'நோஓஓ ஆஆஆஆஆ சே!' என்று மீண்டும் நொந்துக் கொண்டான்.

--------------------


06
நடந்தது

அன்று காலை 10 மணிக்கு...

A4 ADz மெயின் கேட் சாத்தப்பட்டிருந்தது. வெளியில் வயதான செக்யூரிட்டி கடுப்பாக அமர்ந்திருந்தார். முகிலன் அவரை நெருங்கினான்.

'என்ன வேணும்?' என்று செக்யூரிட்டி நபர் கேட்டார்

'எண்ட்ரி போடணும்'

'கம்பெனி மொத்தமா மூடிட்டாங்க! போயா..!'

'மூடிட்டாங்களா..' என்றதும் முகிலன் வயிற்றில் ஏதோ ஒரு விஷயம் கிலிமூட்டியது. அவன் மனது அவனுக்குள் புலம்ப ஆரம்பித்தது.

'ஹய்யோ, இந்த கம்பெனிய நம்பித்தானே எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணியிருந்தேன். அம்மா ஃபோன் பண்ணா என்ன சொல்றது. வேற யார்கிட்ட போய் பணத்தை கேக்குறது. எதுக்கு கம்பெனிய மூடிட்டாங்க. என் கெட்ட நேரம் இவங்களுக்கும் தொத்திக்கிச்சா... 4 நாள் முன்னாடி ஃபோன்ல கான்செப்ட் சொன்னப்போ சந்தோஷமா கேட்டாங்களே..! எப்படியும் இன்னிக்கி பணம் கிடைச்சிடும்னு நினைச்சேனே!'

'தம்பி... ஹலோ... உன்னைத்தாம்பா... இங்க நின்னுக்கிட்டு ஃபீல் பண்ணாத கிளம்பு..?' என்று வாட்சுமேன் அவன் நினைவுகளை களைத்தார்...

'எ..ஏன் ம்ம்...மூடிட்டா....ங்...?'

'ஆங்?'

'ஏன் கம்பெனிய மூடிட்டாங்க..?'

'ஏதோ ஷேர் மார்கெட்ல இவங்க பங்குல்லாம் பயங்கர நஷ்டமாயிடுச்சாம். 3 நாளைக்கு முன்னாடியே மூடிட்டாங்க... நானும் இன்னும் ஒரு வாரந்தான். சம்பளம் கொடுத்தாங்கன்னா போயிட்டேயிருப்பேன். கிளம்புப்பா' என்று கடுப்பை காட்டினார்.

அங்கிருந்து நகர்ந்தவன், அந்த கம்பெனியின் க்ரியேட்டிவ் ஹெட் அன்பரசனுக்கு ஃபோன் செய்தான்..

நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தற்சமயம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று கணிணிக் குரல் கேட்டது.

--------------------


07
நடப்பது

மீண்டும் ஹைவேயில் மரத்தின் கீழ் நின்றிருந்தான். தூரத்தில் ஒரு டேங்க்கர் லாரி வருவது தெரிந்தது.

இம்முறை மிஸ் பண்ணக் கூடாது. எப்படியாவது குதித்துவிட வேண்டும் என்று கையிலிருந்த செல்ஃபோனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மீண்டும் குதிக்க தயாராக நின்றான்.

டேங்க்கர் லாரி அருகில் வந்து கொண்டிருந்தது. மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று ரோட்டில் குதித்தான்.

லாரி சட்டன் பிரேக் அடித்து மிகவும் சிரமப்பட்டு ரோட்டை குறுக்க மறைத்ததுபோல் நின்றது. முகிலன் எம்பி பார்த்தான். அவனுக்கும் லாரியின் சக்கரத்திற்கும் 10 இன்ச் இடைவெளி இருந்தால் அதிகம். அவ்வளவு நெருக்கமாக நின்றிருந்த லாரியிலிருந்து இருவர் குதித்து இறங்கி வந்தனர். கீழே முகிலன் உயிருடன் லாரி டயரை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவர்களுக்கு பயங்கர கோபம் வந்தது. முகிலனை அலேக்காக தூக்கியபடி டிரைவர் வசைமொழி பாட ஆரம்பித்தான்.

'ஓ*** டேய், சாவுகிராக்கி, என்ன ம**** இங்க வந்து விழுறே... ' என்று திட்டிக் கொண்டே கன்னத்தில் 2 முறை அறைந்தான். உடன் இருந்த க்ளீனர் இப்போது முகிலனை பின்மண்டையிலிருந்து தட்டியடித்த படி 'மவனே யாருகிட்ட... காசு புடுங்குற ப்ளான்ல குதிச்சிருப்பாண்ணே..? அதானெடா..? டேய் நாயே, லாரி கவுந்திருந்தா ஒங்கொப்பனா வந்து காசை குடுப்பான்'

மாறி மாறி இருவரும் அவனை அடித்துக் கொண்டிருக்க, வலி தாங்காமல் அழுதபடி முகிலன் 'சாரி, சாரிங்க..' என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

'என்னடா சாரி, நாய, இரு உன்னையெல்லாம் போலீஸ்ல மாட்டிவிட்டாத்தான் திருந்துவே..' என்று கூறியவன் 'டேய் கந்தா, இவனை புடிச்சி லாரில ஏத்து, போற வழியில போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்துட்டு போலாம்' என்று டிரைவர் கூறியதைக் கேட்ட முகிலனுக்கு நிலைமை மோசமாவது புரிந்தது. உடனே அவர்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.

'ஏ... ஏய், புட்றா அவனை... ஏய்.... த்த்தெரி' என்று டிரைவர் ஒரு 5 அடி ஓடி துரத்துவது போல் பாவ்லா செய்துவிட்டு நின்றார்.

முகிலன் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தான்.

--------------------


08
நடந்தது

அன்று காலை 11.00 மணிக்கு

என்ன செய்வதென்று தெரியாமல் முகிலன் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தான்.

அவன் செல்ஃபோன் ஒலித்தது.

'அம்மா காலிங்' என்று டிஸ்ப்ளேயில் தெரிந்தது.

தயக்கமாகத்தான் எடுத்தான்.

'ம்மா...?'

ஆனால், மறுமுனையில் ஒரு ஆண்குரல் கேட்டது 'அண்ணே நான் அகிலன் பேசறேண்ணே... அம்..அம்மாவுக்கு... நெஞ்சுவலி வந்து படுத்து கிடக்கிறாங்கண்ணே..! டாக்டருகிட்ட போவக்கூட காசில்லண்ணே..! ஏதாச்சும் பண்ணுண்ணே..! எனக்கு பயமாயிருக்குண்ணே!' என்று அழ ஆரம்பித்தான்.

'எ...என்னடா சொல்றே..? எப்..படி, என்ன ஆச்சு!'

'அந்த கடங்காரன் வந்து பயங்கரமா சத்தம் போட்டுட்டு போயிட்டாண்ணே! கேவலம் 20 ஆயிரம் பணத்துக்கு என்னென்னமோ பேசிட்டாண்ணே! அம்மாவுக்கு அவமானமாயிருச்சி...! தெருவே கூடி நின்னு வேடிக்க பாத்துச்சு..! அம்மா ரொம்பவும் அழுதுச்சுண்ணே! அப்பிடியே நெஞ்சை பிடிச்சிக்கிட்டு உக்காந்திடுச்சி' என்று அழுதபடி கூறினான்.

இடிந்து போய் பஸ் ஸ்டாண்டு ப்ளாட்பாரத்தில் அமர்ந்தான்.

'சீக்கிரம் வந்துருண்ணே! எனக்கு பயமாயிருக்கு..! மறக்காம பணத்தை எப்டியாச்சும் கொண்டுவந்துரு! அந்த கடங்காரன் மூஞ்சில வீசிட்டுத்தான் மறுவேலை.' என்று கூறி ஃபோனை வைத்துவிட்டான்.

இவன்கிட்ட என்னன்னு சொல்றது, AD கம்பெனி மூடிட்டதையா! நண்பன்கிட்ட காசு கேட்டு கிடைக்கலைன்னா! என்ன சொல்லியும் என்ன, அம்மாவுக்க நெஞ்சுவலி வந்துடுச்சு, ஊருக்கு போகவும் காசில்லாம ப்ளாட்பாரத்துல உக்காந்திட்டிருக்கேன். இதுக்கு மேலயும் உயிர் வாழ்ந்து என்ன பண்றது, பேசாம செத்து தொலைக்க வேண்டியதுதான்

என்று முடிவெடுத்து கிளம்பினான்.

--------------------


09
நடப்பது

நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தபடி ஹைவே ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த முகிலனின் செல்ஃபோன் மீண்டும் ஒலித்தது.

அன்பரசன் - A4 ADs என்று டிஸ்ப்ளே காட்டியது.

மூச்சுவாங்கியபடி ஓரமாக நின்று பேசினான்.

'ஹ..லோ..'

'தம்பி நான் அன்பரசன் பேசறேம்ப்பா, நீ சொன்ன கான்செப்டுக்கு இன்னிக்கி ஸ்க்ரிப்ட் கொண்டுவர்றேன்னு சொன்னியே..? ரெடியா..?'

மூச்சு வாங்கியபடி 'சா...ர்... ரெடி... சார்... நா... நான் ஆஃபீஸ்க்கு வந்தேன். ஆனா... கம்பெனி... மூடிட்டாங்கன்னு... வாட்சுமேன் சொன்னாரு சார்..'


'ஆமாப்பா, A4 ADs மூடிட்டாங்க, நான் 2 நாள் முன்னாடி 'AD ATTRACTION'ல ஜாய்ன் பண்ணிட்டேன். இப்போ இங்க எல்லாமே டபுள் பேமண்ட் , உன் ஸ்க்ரிப்டுக்கும் டபுள் பேமண்ட் வாங்கி தர்றேம்ப்பா.. சீக்கிரம் கொண்டுவா.. அட்ரஸ் மெசேஜ் பண்ணிவிடுறேன். ஈவினிங் 4 மணிக்கு உன்னை எக்ஸ்பெக்ட் பண்றேன்' என்று கூறி ஃபோனை கட் செய்தார்.

முகிலனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. சற்றுநேரம் முன் அவன் குறுக்கே விழுந்த லாரி இப்போது அவனை கடந்து சென்றது. உள்ளிருந்த க்ளீனர் அவனை முறைத்துக் கொண்டே சென்றான். முகிலன்அவனைப் பார்த்தான். க்ளீனர் நாக்கை கடித்து ‘ஜாக்கிரதை’ என்பது போல் விரல் காட்டினான்.

முகிலன் முகம் மலர்ந்தபடி திரும்பிக் கொண்டிருந்தான், வரும் வழியில் பாலத்தை கடந்து வந்தான்.

மீண்டும் செல்ஃபோன் ஒலித்தது

அம்மா காலிங் என்று டிஸ்ப்ளேயில் வந்தது

'ஹலோ'

'அண்ணே! கிளம்பிட்டியா?'

'இல்லப்பா இப்போதான் பணம் ஏற்பாடாயிருக்கு, இனிமேதான் கிளம்பணும்'

'வேண்டாண்ணே! அவசரமில்ல! அம்மாக்கு சரியாப்போச்சு'

'எப்படிடா..?'

'நம்ம பக்கத்தூரு தாய்மாமாகிட்ட ரொம்ப நாளு பேச்சுவார்த்தை இல்லாம இருந்தோமில்ல? அவருக்கு ஃபோன் போட்டு வெக்கத்தைவிட்டு நிலைமையப் சொன்னேன். அவரு உடனே பதறிப் போய் தங்கச்சின்னு ஓடி வந்து கடனையெல்லாம் அடச்சிட்டாரு, டாட்டரையும் அழச்சிட்டு வந்தாரா, அம்மாவும் குணமாயி எழுந்து உக்காந்திருச்சி..! நீ பொறுமையாவே வாண்ணே..!' என்று கூறி ஃபோனை வைத்தான்.

முகிலன் கண்களில் நீர் வழிந்தது. முகம் மலர்ந்ததபடி பாலத்தின்கீழ் பார்த்தான். நல்லவேளை குதிக்கவில்லை என்று அங்கிருந்து தனது ரூமை நோக்கி நடையைத் தொடர்ந்தான்.

இப்போது அவன் முதலில் நின்றிருந்த தண்டவாளத்தை கடந்துக் கொண்டிருந்தான்.

மீண்டும் ஃபோன் ஒலித்தது.

விக்கி காலிங் என்று டிஸ்ப்ளேயில் வந்தது

'ஹே விக்கி?'

'டேய், என்னடா ஃபோன் பண்ணா எடுக்க மாட்டியா...?'

'சாரிடா..! என்ன விஷயம்?'

'நீ என்கிட்ட குடுத்தியே ஊதுபத்தி கான்செப்ட், அதை எங்க டைரக்டர் ஓகே பண்ணிட்டாருடா, நல்ல பேமண்ட், 2 நாள்ல காசு கைக்கு வந்துரும். இன்னும் 5 ஐடத்துக்கு கான்செப்டு வேணுமாம், உன்னையே எழுதச்சொல்றாரு... சரியா...? அப்புறம் நீ கேட்ட 20,000 ரூபாய இப்போதைக்கு முன்பணமா கேட்டு வாங்கிட்ட வர்றேன். சரியா? சந்தோஷம்தானே..?'

'சரிடா, ரொம்ப தேங்கஸ்டா, ரொம்ம்ம்ம்ம்ப தேங்க்ஸ்' என்று கூறியபடி திரும்பினான்.

அவனுக்கு வெகு அருகில்... ஒரு பெரிய ட்ரெய்ன் இன்ஜின் வேகமாக வருவது தெரிந்தது.

ப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆங்ங்ங்ங்ங்ங்ங்'

‘ஆஆஆஆஆஆஆஆ’

இம்முறை முகிலன் நின்றிருந்த தண்டவாளத்திலேயே இரயில் சென்றது.

---- முடிவு ----


Signature

18 comments:

Raghu said...

முத‌ல் ரெண்டு ப‌த்தியிலேயே கிர்ர்ர்ர்ர்ர்னு எகிற‌வைக்க‌ ஆர‌ம்பிச்சுட்டீங்க‌

"09 ப‌டிப்ப‌து" ப‌டிக்கும்போதே முடிவு கெஸ் ப‌ண்ணிட்டேன் (ஹ‌ரிஷிஸ‌ம் என‌க்கு தெரியாதா என்ன‌?...:))

சின்ன‌ விஷ‌ய‌ம், ஒரு இட‌த்துல‌, A4 ADZனு இருக்கு, இன்னொரு இட‌த்துல‌ A4 ADSனு இருக்கு

க‌தை செம‌ ஃப்ளோ டைர‌க்ட‌ர்:)

DREAMER said...

வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரகு...

//A4 ADZனு இருக்கு, இன்னொரு இட‌த்துல‌ A4 ADSனு இருக்கு//

மாத்திடுறேன்...

CS. Mohan Kumar said...

செமையா இருக்குங்க கதை; வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

அருமையான நடை, கதை நல்லா இருக்கு நண்பா.

DREAMER said...

மோகன் குமார்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

DREAMER said...

சைவகொத்துப்பரோட்டா
நன்றி நண்பா..!

வேங்கை said...

முடிவு சூப்பர் நண்பரே

எல் கே said...

nalla iruku

DREAMER said...

@sathismsc
நன்றி நண்பரே

@LK
மிக்க நன்றி

Rajeswari said...

நல்லா இருக்கு...

DREAMER said...

வாங்க ராஜேஷ்வரி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

Anonymous said...

miga arumai

DREAMER said...

நன்றி அனானி...

க ரா said...

கதை சூப்பர்.

DREAMER said...

நன்றி திரு. க.இராமசாமி...

Kiruthigan said...

நான் என்னத்த புதுசா சொல்ல.. அதான் எல்லாலும் சொல்றாங்களே...!!!

VampireVaz said...

Konnutteenga Hareesh (Literally)!

Aba said...

memento????

Popular Posts