Sunday, January 17, 2010

கண்டேன்... கண்டேன்... [சிறுகதை]


சத்யம் தியேட்டரில் டெம்பரவரி பார்க்கிங் போட்டுவிட்டு, தியேட்டருக்கு முன்னால் சென்றேன். காணும் பொங்கல் அதுவுமாக ஏகப்பட்ட கும்பல் திமிறிக்கொண்டிருந்தது. கலர் கலராய் பல விதங்களில் பல ஜோடிகள்... ஜோடி நெம்பர் 1, 2, 3, 4 என்று எந்த ரேஞ்சில் போட்டி வைத்தாலும், இங்கு வைக்கலாம்... தகும்... அவ்வளவு ஜோடிகள்... ஜோடியைத் தேடிக் கொண்டு சிலர், ஜோடியை வைத்துக் கொண்டே சைட் அடிக்கும் ஆண், பெண் என்று பலவிதமாக அங்கு உலவிக்கொண்டிருந்தனர்.

டிக்கெட் கவுண்ட்டரில் ஷோ விவரங்கள் மாணிட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.

சே! நான் இதைப் பார்க்கவா வந்தேன். இல்லை நான் பார்க்க வந்தது வேறு...

நான் பார்க்க வந்தது ஒரு பெண்ணை... ஒரு காதலியை... இல்லை இல்லை... என் காதலி இல்லை... எனது நண்பனின் காதலியை தேடிக்கொண்டு வந்திருந்தேன். தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் அவளை தேடுவதற்கான காரணம் வேறு...

இப்போது மிகவும் அவசரத்தில் இருப்பதால் பிறகொரு சமயம் அதை சொல்கிறேன்.

அவள் இங்கு இல்லை, வேறு எங்க போனால் தேடலாம்...?

யோசிக்க நேரமில்லை... அவசரம்... அதுவும் எவ்வளவு அவசரம் தெரியுமா..? உயிர் போகும் அவசரம்...?

யார் உயிர்..? சொல்கிறேன். இதற்குமேலும் சஸ்பென்ஸ் தேவையில்லை...

என் உயிர் நண்பன், ரவீந்தர். பள்ளி காலத்திலிருந்தே நண்பன், அமெரிக்காவில் 2 வருடம் வேலை பார்த்தவன், சமீபத்தில் ரெஸெஷன் பிரச்சினையால் திரும்பி வந்தவன். ஆனாலும், இந்தியாவில் அவனுக்கு நல்ல வேலை கிடைத்தது.. அவனுக்கு ஒரு காதலி, பெயர் அஞ்சலி, ஆர்குட்டில் இருவரும் சிநேகித்து, சந்தித்து, பேசி, பழகி(?) பெற்றோர்கள் பஞ்சாயத்தெல்லாம் நடந்து முடிந்து (நான்தான் இவர்களுக்கு இடையில் தூதுவனாகவெல்லாம் ஃப்ரீலேன்சர் வேலை செய்தேன்) ஒருவழியாக கல்யாணத்திற்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்டினார்கள். சீக்கிரத்தில் கல்யாணம் செய்து கொள்ள தயராக இருந்த நிலையில், ரவீந்தர்தான் 2 வருடம் போகட்டும் என்றான். ஏன் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை, அவர்கள் கல்யாணம்தானே எப்போது வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டனர்.

ஒரு நிமிடம்...

இப்போது மெரினா பீச்சுக்கு வந்திருக்கிறேன்... காணும்பொங்கலதுவும் ஒரே ஒரு பெண்ணை தேடி இப்படி மெரினா பீச்சில் சுற்றுவது என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான செயல் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. இருந்தாலும் என்ன செய்வது. என் நிலையில் நீங்களிருந்தாலும் இப்படித்தான்.

"ஏய்" ஒரு பெண் என்னை இடித்துக் கொண்டு செல்கிறாள். சத்தியமாக அவள் வேண்டுமென்றேதான் இடித்தாள். கண்ணகி சிலைக்கு கீழ் இப்படி ஒரு கற்புக்கரசி சே..!

அவளெங்கே..? என்ன கலர் டிரஸ் போட்டு கிளம்பினாள் என்று யாருக்கும் நினைவில்லை. மொபைலை வீட்டில் மறந்துவிட்டு போயிருக்கிறாள்.

'அஞ்சலிஈஈஈ..', கத்தியே பார்த்தேன். யார் யாரோ திரும்பினார்கள்... அதிலும் அவளில்லை...

என் சட்டையை ஒருவன் பார்த்துவிட்டு, என்னை முறைத்துக் கொண்டே சென்றான். அதற்கு காரணம் இருக்கிறது. என் சட்டையில் இரத்தக்கறை... என் நண்பன் ரவீந்தருடைய இரத்தம்தான்... அது சரி, உங்களுக்கு முழுக்கதையும் சொல்லவில்லையே... ரவீந்தருக்கு 2 மணிநேரத்துக்கு முன்னால் ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது. நான்தான் அவனை ஜி.எச்-சில் சேர்த்தேன். பாவம்... பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.

அவன் லேசாக எனது காதில் எதையோ முணகினான்.

'டேஹ்ஹ்ய்ய்ய்... அஞ்ஞ்ஞ்ஞ்சலிய ஒருதரவ பாக்க்க்க-உம்..' என்று கூறும்போது, அவன் மூச்சுக்காற்றின் உஷ்ணம் இன்னும் என் காதில் இருக்கிறது. எப்படியாவது இதை ஒரு நண்பனாக நிறைவேற்றியே தீர வேண்டும் என்று பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். அவளது மொபைலுக்கு ஃபோன் செய்த போது, அவள் மொபைலை வீட்டில் மறந்து வைத்துவிட்டு தனது தோழிகளுடன் காணும்பொங்கலுக்கு ஊர்சுற்ற சென்றுவிட்டதாக அஞ்சலியின் அம்மா கூறினாள். அவள் அம்மாவோ, தோழிகள் நம்பர் பார்த்து சொல்ல தெரியாத ஒரு பட்டிக்காடு... அதைப் பற்றி பேசி இப்போது பிரயோஜனமில்லை... சே! எங்கேன்னு போய் அவளைத் தேடுவது..

கடலை நெருங்கிவிட்டேன். அலைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது... எங்கு திரும்பினாலும் ஜனத்திரள். இதில் என்னால் அஞ்சலியை கண்டுபிடிக்க முடியுமா... ஒருவேளை அவள் சிட்டிசென்ட்டர் போயிருந்தால், இல்லை ஸ்பென்ஸர் போயிருந்தால்... இப்படி பிராபப்ளிட்டி எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்போது, எனது செல்ஃபோன் ஒலித்தது

ரவீந்தரின் நம்பர்

'ஹலோ..'

'தம்பீ...' இது ரவீந்தரின் அப்பாவின் குரல்

'என்ன அங்கிள்.. ஏன் அழறீங்க..?'

'ரவீந்தர் போயிட்டாம்ப்பா...' என்று கூறினார்...

.
.
.

என்னால் எதுவும் பேச முடியவில்லை... சே..! நண்பனை இழந்த துக்கம் ஒருபுறமிருக்க, அதைவிட அதிகமாக, நான் இவ்வளவு தூரம் முயற்சி செய்தும் என்னால் அஞ்சலியைக் கண்டுபிடித்து அவனிடம் கொண்டு போய் நிற்க வைக்க முடியவில்லையே என்றுதான் மனது வலித்தது.

உடம்பில் ஒரு தளர்வு ஏற்பட்டது... இனி என்ன தேடியும் பிரயோஜனமில்லை என்று யோசித்து திரும்ப... அங்கே 10 அடி தூரத்தில் அஞ்சலி நின்றிருந்தாள். அந்தபக்கமாக திரும்பி நின்றிருந்தாள். ஆனால் அவளேதான். இதோ! அஞ்சலி... இனிமேல் இவளிடம் போய் என்னத்தை சொல்வது... என்று யோசித்து அவளை நெருங்கும்போதுதான் பார்த்தேன். அவள் இன்னொருவன் தோளில் கை போட்டு நின்று சிரித்து பேசிக்கொண்டிருந்தாள்.

அடிப்பாவி, காதல் துரோகி, அங்கே எனது நண்பன் உன்னை கடைசியாக பார்க்க முடியாமல் உயிரை துறந்திருக்கிறான். இங்கே நீ இன்னொருத்தனோடு நின்றுகொண்டிருக்கிறாயே.. பாவி... இவளை நேரில் பார்த்து 4 வார்த்தை திட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்று வேகமாக நெருங்கினேன்.

அவளுக்கு முன்பாக சென்று அவளைத் திட்டலாம் என்று நினைக்கும்போதுதான் அவனருகிலிருப்பவனைப் பார்த்தேன்... 'ரவீந்தர்?'

ரவீந்தரேதான்... இது என்ன ஆச்சர்யம். அவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி.... நான்தானே ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்த்தேன். இதோ என் சட்டையில் இன்னும் அவனது இரத்தம் படிந்திருக்கிறதே... அப்படியானால் இவன் யார்..?

இதற்குள் அஞ்சலி என்னைப் பார்த்துவிட்டாள்

'ஹே.. நீ எங்க இங்க..? ரவீந்தர் கூட வந்தியா..?' என்று கூறி அவனைக் கூப்பிட்டு என்னைக் காட்டுகிறாள்.

அவனும் சகஜமாக.. 'வாடா, இப்போத்தான் நான் வந்தேன்... இவளை கண்டுபிடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி..' என்று கூறினான்.

என்னால் ஒன்றும் பேச முடியவில்லை, செல்ஃபோனை எடுத்து கடைசியாக பேசிய ரவீந்தர் நம்பருக்கு டயல் செய்தேன்... அழுது கொண்டிருந்த ரவீந்தரின் அப்பாதான் எடுத்தார்...

'ஹலோ.. ஹ்ம்ம்ம்ம்'

கட் செய்துவிட்டேன். அவரிடம் என்ன கேட்பது என்று தோன்றவில்லை...

ஏறிட்டு பார்த்தேன்... இருவரும் கைபிடித்து நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்...

இதுவரை ஆவியை பார்த்ததாக பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்... ஆனால் இன்றுதான் நான் முதன்முதலில் ஒரு ஆவியை ஜூன்ஸ் டி-சர்ட்டில் பார்க்கிறேன்... இது அஞ்சலிக்கு தெரியாததுதான் எனக்கு கிலி மூட்டியது..

முடிந்தது... என்று ப்ளாக்கில் பிரசுரமாகியிருந்த அந்த கதை திகிலுடன் முடிய, நிகில் தனது மாணிட்டரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்னடா கதை எழுதுறீங்க..? திகில் கதைன்னு முன்னாடியே எங்கேயாவது போடுறதில்லியா..?' என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டான்.

அவனது பாஸ் அவனிடம் நெருங்கி வர. ப்ளாக் திறந்திருந்த விண்டோஸை மினிமைஸ் செய்து கொண்டான்.

'நிகில், அந்த க்ளைண்டுக்கு மெயில் அனுப்பிட்டீங்களா..?'

'இல்ல..., 2 மினிட்ஸ்... அனுப்பிட்டு சொல்றேன்..' என்றதும் பாஸ் விலகி நடந்துவிட

இந்த கதைக்கு கமெண்ட்ஸும், ஓட்டும் அப்புறமா போட்டுக்கலாம் என்று இமெயில் டைப் செய்ய தொடங்கினான்...

Signature

6 comments:

Raghu said...

ஹாஹ்ஹா, Hareesh Narayan is back!

க‌தை முடிவுல‌ நான் என்ன‌ நினைச்சேன் தெரியுமா? அஞ்ச‌லியும் புட்டுகிட்டு இருப்பாளோன்னு!

ஆமா, அந்த‌ க‌டைசி ஆறேழு வ‌ரிலாம் யாரேயோ குறிப்பிட‌ற‌மாதிரி இருக்கே...இதுக்கு பேர்தான் உள்குத்தோ?....:)

DREAMER said...

வாங்க ரகு...

//ஹாஹ்ஹா, Hareesh Narayan is back!//

இதெல்லாம் அநியாயம்... ஆவி பேயை வச்சி எழுதினாத்தான் Hareesh Narayan is Back!னு சொல்றீங்க... மனுஷங்களை வச்சி நான் எழுதவே கூடாதா... Oh My GHOST... Sorry... OH MY GOD... இதென்ன கொடுமை...

அப்புறம் அந்த கடைசி ஆறேழு வரி நீங்க சொல்றை 'அவரை' குறிப்பிட்டுத்தான் எழுதுனேன்... ஆனா, அதுல அந்த 'அவரை' மட்டும் குறிப்பிடலை... அந்த நிலையில ப்ளாக் படிக்கிற அனைத்து 'அவர்'களையும் சாரும்...

DREAMER said...

வணக்கம் தினேஷ்...
எப்படி இருக்கீங்க..? ப்ளாக்-ல ஜாய்ன் பண்ணதுக்கு மிக்க நன்றி!...

Shanmugam said...

hmmm..

Nice story....
Good Job Boss..

Keep Writing...

DREAMER said...

@Shanmugam
ThanQ for your appreciation...

Kiruthigan said...

அட்டகாசம்..

Popular Posts