மனதை எளிதில் மெஸ்மரித்துவிடக்கூடிய நீளமான NH4 ஹைவே சாலையில், எனது புதிய காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தேன்.
3 நாட்கள் பெங்களூர் குளிரில் தங்கியதால் காரில் ஏசி போடவில்லை, சைடு கண்ணாடிகளையும் இறக்கிவிட்டிருந்தேன். உஷ்ஷ்.. என்ற காற்றை இரசித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தேன். மாலை 4.30 மணி, எஃப்.எம்.-இல் "அவளுக்கென்ன அழகிய முகம்.." என்று டி.எம்.எஸ். என் பயணத்தின் இனிமையை கூட்டிக்கொண்டிருந்தார்.
என்னதான் நான் 60 கி.மீ. வேகத்தில் தெளிவாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாலும், கொஞ்சம் தூக்கம் வருவது போல எனக்குள் ஒரு உள்ளுணர்வு பயமுறுத்தியது. சேஃப்டிக்காக, 'ஷெல் பங்க்'கிலிருந்து 'ரெட் புல்' வாங்கி வைத்திருந்தேன். எடுத்து குடிக்கலாமே..? என்று தோன்ற எடுத்து சீல் உடைத்து, குடித்தேன்.
"ஹ்ஹ்ஹாஆஆஆ..?" புத்துணர்ச்சியாகத்தான் இருந்தது.
இன்னும் ஒரு சிப் குடிப்போம் என்று இம்முறை நான் டின்னை உயர்த்திய போது, திடீரென்று டப்- என்று ஒரு பயங்கர சத்தம்... பயந்து போய், சத்தத்தின் காரணமறிய நான் திரும்பி பார்த்தேன், எனக்கு வலது பக்கத்தில் பைக்கில் இரண்டு வாலிபர்கள் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் எனது கார் கதவில் பலமாக தட்டியிருக்கிறான் என்பதை உணர்ந்தேன்.
நான் அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் பைக்கின் வேகத்தை கூட்டி சிரித்தபடி என்னை முந்திக் கொண்டு சென்றார்கள். அவர்களில் பின்னாலிருந்தவன், வாய்முழுக்க பாக்கு போட்டிருந்தான். என்னைப் பார்த்து திரும்பியபடி, துப்பினான். என் கார் விண்ட்ஷீல்டு கண்ணாடியில் அவன் துப்பிய எச்சில் சிகப்பு நிறத்தில் வந்து விழுந்தது.
எனக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால் அவர்கள் உருவமும், உடையும், வளைந்து வளைந்து பைக் ஓட்டும் விதமும் கண்டிப்பாக இவர்கள் ரவுடிகள் என்று எனக்கு உணர்த்தியது. கூடவே எனது மனைவி குழந்தைகளை நினைக்க, இவர்களுடன் சண்டை போட்டு எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், என் குடும்பம்? என்ற பாமர பயம் வந்தது.
கோபத்தை அடக்கிக் கொண்டேன்.
அவர்கள் தூரச்சென்று மறைந்தார்கள். வைப்பரை போட்டு நீர்ப்பீய்ச்சி கண்ணாடியை துடைத்தபடி எனது இனிமை பயணத்தை தொடர்ந்தேன். ஒரு 5 நிமிடம் ஆகியிருக்கும். தூரத்தில் அந்த ரவுடிகள் தெருவோரமாக நின்றிருப்பது தெரிந்தது. ஆனால், இம்முறை, ஒருவன்தான் நின்றிருந்தான், இன்னொருவன் எங்கே என்று நான் தேடியபோது அவன் ரோட்டில் ஓரமாக விழுந்திருந்தான்.
நின்றிருந்தவன், காதில் செல்ஃபோன் வைத்து யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். நான் அவனை நெருங்க, அவன் செல்ஃபோன் பேசிக்கொண்டே லிஃப்ட் கேட்பது போல் கை காட்டினான். ரோட்டில் இரத்தம் படிந்திருப்பதை கவனித்தேன். பைக் சறுகி இருவரும் விழுந்திருக்கிறார்கள் என்றும், அதில் ஒருவனுக்கு பலத்த காயம் அல்லது மரணம் என்றும் யூகித்தேன்.
நான் காரை நிறுத்தலாமா என்று நினைத்து வேகத்தை குறைத்துக் கொண்டே நெருங்கினேன். ஆனால் நிறுத்தவில்லை. அருகில் செல்ல செல்ல அவன் என்னை நெருங்கி வந்தான்.
'ஏய்... ஏய்... வண்டிய நிறுத்துடா..? ஏய்..' என்று மிரட்டிக் கொண்டே வந்தான்.
அவனது அணுகுமுறை என்னை பயமுறுத்தியது. ஒருவேளை இவர்கள் இருவரும் பேசிவைத்துக் கொண்டு ஏதாவது வழிப்பறி செய்கிறார்களோ என்று தோன்றியது. சட்டென்று காரின் வேகத்தை கூட்டினேன். அவன் ஒரு பத்தடி என்னை துரத்தி வந்தான். நான் சிக்கவில்லை.
எனக்கு என் பயணத்தை இரசிக்கும் எண்ணமே மறந்துவிட்டது. என்னமோ ஒருமாதிரி தோன்ற ரேடியோவை அணைத்துவிட்டேன். காற்று வீசும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. எதேச்சையாக ரியர் வீயூ மிரரில் பார்க்க, தூரத்தில் ஒரு பைக் என் காரை நெருங்குவது தெரிந்தது. இது வேறு பைக்தான். இருந்தாலும் பயமாகவே இருந்தது. வேகத்தை கூட்டலாமா குறைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, அந்த பைக் என் காருக்கு வலது பக்கம் கடந்து கொண்டிருந்தது. அதில், என்னை சற்றுமுன் கலாய்த்து காரில் எச்சில் துப்பிய இருவரையும் சேர்த்து 3 பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
துப்பியவன் பைக்கில் கடைசியாக உட்கார்ந்திருந்தான், ஓட்டுபவன் புதியவன், நடுவில் இருப்பவன்தான் ரோட்டில் அடிபட்டு விழுந்து கிடந்ததவன் என்பதை பார்த்தேன். 'அடப்பாவமே!' உண்மையிலேயே அவனுக்கு அடிப்பட்டிருந்தது.
"சே! காரை நிறுத்தியிருக்கலாமோ" என்று யோசித்தேன். லிஃப்ட் கேட்டவன் என்னை கடுமையாக முறைத்து கொண்டே சென்றான். அவன் முறைப்பதை பார்த்தால், நான்தான் என்னமோ, அவன் நண்பனின் காயத்திற்கு காரணம் என்பது போல் இருந்தது. பைக்கில் அந்த மூவரும் என்னை கடந்து மீண்டும் வேகமாக சென்று மறைந்தார்கள்.
எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. யாரிவர்கள் என்னையே சுற்றி சுற்றி இப்படி போய்க்கொண்டிருக்கிறார்களே என்று தோன்றியது. இது சரியில்லை என்று நினைத்து, காரை ரோட்டோரமாக நிறுத்தினேன். வாட்டர் பாட்டிலால் முகம் கழுவினேன். மனதில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்-ன் 'ட்யூயல்' என்ற படம் நினைவுக்கு வந்தது. லாரிக்கார அரக்கனால் கதாநாயகன் துரத்தப்பட்டு அரும்பாடுபடுவது நினைவுக்கு வந்தது. எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன்.
டேஷ்போர்டிலிருந்து ஒரு 'ஆர்பிட் மிண்ட்' எடுத்து போட்டுக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் பயணத்தை துவங்கினேன்.
மீண்டும் எப்.எம்-ஆன் செய்தேன். சேனலை மாற்றி மாற்றி, ஒரு துடிப்பான இங்லிஷ் பாப் பாடலை வைத்துக் கொண்டேன். பயணத்தை மீண்டும் இரசிக்க ஆரம்பித்தேன்.
2 நிமிடம்கூட போயிருக்காது. ஒரு சின்ன ஜங்ஷன் வந்தது. அங்கே இடதுபக்கம் கும்பல் கூடியிருந்தது. ஆர்வம் காரணமாக எஃப்-எம் சவுண்டை குறைத்துவிட்டு, கூடியிருந்த கும்பலை கொஞ்சம் தாண்டி காரை ஓரமாக நிறுத்தினேன். அந்த ஊர்க்காரர் ஒருவர் "May I Help You" என்பது போல் நின்றிருந்தார்.
காரிலிருந்தபடியே அவரிடம், "என்ன ஆச்சு சார்...?" என்றேன்.
"குடிகார பயலுக சார், குடிச்சிட்டு ரோட்டுல பைக்கை ஏரோப்ளேன் மாதிரி ஓட்டியிருக்காங்க, கீழே விழுந்து ஒருத்தனுக்கு பின்மண்டியில அடி, இன்னொரு ஃப்ரெண்டை வரவழைச்சு பைக்ல ஹாஸ்பிடலுக்கு டிரிபிள்ஸ் ஏத்திட்டு போயிருக்காங்க, வழியிலியே தலை தொங்கிடுச்சி..." என்றார்
நான் எனது இடது பக்க சைடு கண்ணாடி வழியாக பார்க்க, கும்பல்களுக்கு நடுவே ஒருவன் படுத்திருந்தான். அவனுக்கு அருகில் என்னிடம் லிஃப்ட் கேட்டவன் அல்லது என் காரின் மீது துப்பியவன், இப்போது திரும்பி என் காரைப் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்குள் ஏதோ ஒரு வித தயக்கம் வந்தது. அவன் சட்டென்று எழுந்து என் காரை நோக்கி வேகமாக நடந்து வந்தான்.
வரும்போதே சத்தமாக, "ஏய்... நாயே... நில்லுடா.. ஓ********* " என்று சரளமாக கெட்ட வார்த்தைளால் திட்டிக் கொண்டு வந்தான். எனக்கு அங்கிருந்து கிளம்புவதுதான் உசிதம் என்று தோன்ற, உடனே காரை கிளப்பினேன். என்ன நடக்கிறது என்று தெரிந்துக் கொள்ள சைடு மிரரில் பார்த்தேன்.
அய்யோ..!
அவன் பைக்கில் ஏறி கிக் ஸ்டார்ட்டரை உதைத்துக் கொண்டிருந்தான். இந்த காட்சி என்னை மேலும் பயமுறுத்தியது. நான் இதுவரை தாண்டாத வேகத்தை எனது ஸ்பீடாமீட்டர் காட்டிக் கொண்டிருக்க, அந்த வேகத்தினால், சாலையோர மரங்களை வேகமாக பின்னுக்கு தள்ளிக்கொண்டிருந்தேன்.
நீண்ட தூரம் வந்தது போல் தோன்றியது. இன்னும் எவ்வளவு நேரத்தில் சென்னையில் இருக்கலாம்..? என்று யோசித்த போது, ரியர் வியூ மிரரில் அந்த பைக்காரன் வெறியுடன் துரத்தி வருவது தெரிந்தது. சென்னையை சென்றடைவோமா? என்று சந்தேகம் தோன்றியது.
அவன் என்னை சுலபமாக நெருங்கிக் கொண்டிருந்தான். எனக்குள் பயம் என் காரின் வேகத்தை போல் அதிகமாகி கொண்டே இருந்தது. அவன் நெருங்கியே விட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பி அவனைப் பார்க்க, அவன் முகத்தில் அப்படி ஒரு வெறி, சத்தியமாக நான் அவன் நண்பனை ஒன்றுமே செய்யவில்லை, மாறாக இவன்தான் என் காரில் துப்பினான், நியாயப்படி நானல்லவா இவன்மீது கோவப்பட வேண்டும். ஆனால் நான் காரை நிறுத்தியிருந்தால் ஒருவேளை இறந்தவனை காப்பாற்றியிருக்கலாமோ... நான் நிறுத்தத்தான் இருந்தேன். இவன் என்னை அணுகிய விதம் என்னை பயமுறுத்தியது. அதனால்தான் நிறுத்தாமல் சென்றேன்.
இவனிடம் எதையும் விளக்கிக் கூற முடியாது. மரண துக்கத்திலிருப்பவர்களின் கோபம் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தால், இவனை எப்படி தவிர்ப்பது என்றுதான் பயந்துக் கொண்டிருந்தேன். நான்கு கதவின் கண்ணாடிகளையும் ஏற்றிவிட்டேன். இது அவன் கோபத்தை மேலும் ஏற்றிவிட்டிருக்கவேண்டும். அவன் முகத்தில் விகாரம் ஏறியது.
அவன் எனது வலது பக்கமாக பைக்கில் நெருங்கி வந்து காரின் கதவை பலமாக தட்டி காரை நிறுத்துமாறு கூறிக்கொண்டிருந்தான்.
"ஏய்... ஏய்... த்********** ***********, நிறுத்துடா, காரை நிறுத்துடாங்**********.. இப்ப நிறுத்திறியா இல்லியா...********** " என்று கத்திக் கொண்டே கூடவந்துக் கொண்டிருந்தான். நான் என்ன செய்வது என்று தெரியாமல், என் உயிர் பயத்தை காலில் தேக்கி ஆக்ஸிலேட்டரில் செலுத்தினேன். 'பட்'டென்று ஒரு பெரிய சத்தம் பின்பக்கம் கேட்டது. இப்போது அவனைக் காணவில்லை...
ஒருவேளை பின்தங்குகிறானோ? என்று பார்ப்பதற்காக, வலது பக்க சைடுமிரரில் பார்க்க, அவனைக் காணவில்லை, அந்த சாலையில் மேம்பாலக் கட்டுமானப்பணியில், பில்லர்கள் மட்டும் கட்டி எழுப்பி வேலை நிறுத்தப்பட்டிருந்தது. ஒருவேளை பில்லர்களின் மறைவில் அவன் வருவது தெரியவில்லையோ.? என்று எண்ணினேன்.
காரின் வேகத்தை குறைத்து ஓரமாக நிறுத்தி திரும்பி பார்த்தேன். அவன் வரவேயில்லை... எனக்கு ஆச்சர்யம்..! அவ்வளவு கோபமாக வந்தவன் எங்கு போயிருப்பான் என்று தோன்றியது. காரிலிருந்து இறங்கி பின்பக்கமாக கொஞ்சம் நடந்து வந்தேன். ஒரு தூண் முக்கால்வாசி ரோட்டை மறைத்து கொண்டு இருந்தது. இதன் மறைவில் ஒருவேளை ஒளிந்திருக்கிறானோ..? என்று பயந்தேன்... போய்த்தான் பார்ப்போமே என்று தூணின் மறுபக்கம் செல்ல...
அங்கே...
அவன் பைக்கில் வேகமாக வந்து அந்த தூணில் மோதியதால் நசுங்கி இறந்திருந்தான்...
எனக்கு அதைப் பார்க்கவே தலை சுற்றியது.
யாரிவன்..?
இவன் நண்பன் ரோட்டில் விழுந்து இறந்ததற்கு என்னை ஏன் துரத்தினான்..?
லிஃப்ட் கொடுக்க மறுத்ததற்காகவா..! நான் ஏதாவது தப்பு செய்தேனா.?
இப்படி எதிரில் இருக்கும் பில்லரும் தெரியாதபடி குடித்திருக்கிறான்.
எது எப்படியிருந்தாலும், வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு பய(ண) அனுபவத்தை எனக்குள் விதைத்துவிட்டான்... என்று எண்ணி அங்கிருந்து என் காருக்கு தடுமாறியபடி விரைந்தேன்... தூரத்தில் ஒரு எருமை மாடு மட்டும் இந்த சம்பவத்தை சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தது. கிளம்பினேன்.
தொடரும்...
.
.
.
தொடரும் இந்த கதைக்கல்ல... இவன் கொல்லாமல் விட்டதால் என் உயிர்துடிப்பு... தொடரும்...
9 comments:
சொன்ன நம்பமாட்டீங்க, முதல் ரெண்டு மூணு பத்தி படிக்கும்போதே Duel ஞாபகம் வந்துடுச்சு. அப்புறம் பாத்தா நீங்களும் அதை குறிப்பிட்டிருக்கீங்க:)
கதை செம ஃப்ளோ.....ரொம்ப நாளைக்கப்புறம், பேய், பூதம் இல்லாத ஒரு த்ரில்லிங்கான ஹரீஷ் கதை படிச்ச ஃபீலிங்:))
//தூரத்தில் ஒரு எருமை மாடு மட்டும் இந்த சம்பவத்தை சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தது//
Mr. M.தர்மன்?
Sorry, Comment Moderationனு தப்பா சொல்லிட்டேன். Show word verification for commentsஅ Noன்னு செட் பண்ணிடுங்க
வாங்க ரகு,
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, எனக்கு இந்த கதையை டைப் பண்ணும்போது, உண்மையிலேயே த்ரில்லா இருக்கா, இல்லை எனக்குத்தான் த்ரில்லா தோணுதான்னு பயந்துட்டிருந்தேன். நல்ல வேளை, நீங்க த்ரில்லாத்தான் இருக்குன்னு சொல்லியிருக்கீங்க...
//தூரத்தில் ஒரு எருமை மாடு மட்டும் இந்த சம்பவத்தை சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தது//
இது ஒரு story finishing-க்கும், ஒரு dry feel வர்றதுக்காகவும் இணைச்சிக்கிட்டேன்.
//Show word verification for commentsஅ Noன்னு செட் பண்ணிடுங்க//
பண்ணிட்டேன்
superb...
ThanX sundar..!
உங்கள் கனவுகளில் என்னையும் இணைத்துக்கொண்டேன். உங்கள் கனவுளில் NH4-ல் ஒரு பயணம் எதிர்பாராத கனவுதான்..
Chilling with an ambiguous ending.. bravo!
மெரற்றிங்க பாஸ்
நல்லதொரு த்ரில்லிங் பயணம்..
Post a Comment