Friday, January 22, 2010

"புலம்பல்" - சிறுகதை



5 விநாடிக்குமுன் ஒரு லாரிக்காரன், நான் ரோட்டை கடக்கும்போது என் மீது லாரியை ஏற்றிவிட்டு சென்றுவிட்டான். என் உடம்பிலுள்ள குடல்கள், ஈரல்கள், எல்லாமும் வெளியே ரோட்டில் சிதறிக்கிடக்கிறது. என் கடைசி மூச்சுக்காற்று கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையிலும் என் மனது ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறது. அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன்.

முதலில் நான் என்னைப் பற்றி சொல்லியாக வேண்டும். எனக்கு பெயரெதுவும் சூட்டப்படவில்லை. எனக்கென்று சொந்தமாக ஒரு வீடில்லை, ஆனால் ஒரு தெரு இருக்கிறது. நான் எங்கள் தெருவுக்கே காவல்காரன். வேற்றுத்தெருவாசிகள் யாராவது எங்கள் தெருவுக்குள் வந்தால், அவ்வளவுதான், அவர்களை ஓட ஓட விரட்டியடித்துவிட்டுத்தான் மறுவேலை. இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு நான் யார் என்று தெரிந்திருக்குமே..? இன்னும் இல்லையா..? சரி நானே சொல்லிவிடுகிறேன். நான் நன்றிக்கு பெயர் போனவன்... ஆம்... இப்போது நீங்கள் கணித்தது சரிதான். நான்தான் இந்த தெருவின் ஃபேமஸ் நாய்.

என்னடா போயும் போயும் இந்த நாய் சொல்வதை நாம் கேட்கவேண்டுமா என்று சலித்துக்கொள்ளாதீர்கள். கொஞ்ச் கேட்டுத்தான் பாருங்களேன்... அய்யோ... வலிக்கிறது... உயிர்வலியில்லையா... கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. பரவாயில்லை, நான் சொல்லவேண்டியதை சொல்லிவிடுகிறேன். முதலில் இந்த சாலை நெரிசல்களைப் பற்றி நான் சொல்ல வேண்டும். ஏன் மனிதர்கள் நீங்கள் இவ்வளவு சிரம்ப்படுகிறீர்கள்..? இல்லை, நான் ஒன்று தெரியாமல் கேட்கிறேன்..? இப்போது ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கு போக வேண்டுமென்றால், எங்கள் இனத்தவர்களுக்கு குறைந்தது 2 நிமிடம் பிடிக்கும். ஆனால் மனிதர்கள் நீங்கள் வண்டியில் ஹாயாக, அரை நொடியில் சென்றடைந்துவிடுவீர்கள். ஆனால், இப்போது சாலை நெரிசல் காரணமாக நீங்கள் எங்குப் பார்த்தாலும் டிராஃபிக் ஜாம் என்ற பெயரில் வண்டில் அமர்ந்தபடி கடிகாரத்தை பார்த்துக்கொண்டு ஒரே இடத்தைவிட்டு நகராமல் குறைந்தது 20 நிமிடமாவது செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட நீங்கள் நடந்து போனாலே சீக்கிரமாக சென்றுவிடலாமே..! நான் ஒன்றும் உங்களை வண்டியே ஓட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை... ஓட்டுங்கள்... ஆனால் முடிந்தவரை நடந்து பழகுங்கள்.

உங்கள் வீட்டிலிருந்து குறைந்தது ஒரு 3 கி.மீ. வரை உங்களுக்கு எந்த வேலையாக இருந்தாலும் நடந்து சென்று பழகிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், ஒரு காலத்தில் நீங்கள் நடக்கவே மறந்து விடுவீர்கள். நான் சொல்வது கேலியல்ல.... நீங்களே உங்கள் தெருவில் சென்று எத்தனைபேர் நடக்கிறார்கள் என்று சும்மா இருக்கும்போது எண்ணி பாருங்கள். அப்போது உங்களுக்கே புரியும் எத்தனை பேர் நடக்க மறந்திருக்கிறார்கள் என்று...

அய்யோ...! ஆ..!

ஒன்றுமில்லை, ஒரு ஷேர் ஆட்டோக்காரன் நான் இங்கு சாலையில் துடித்துக்கொண்டிருப்பதுகூட தெரியாமல் (அல்லது தெரிந்தே) மீண்டும் என் மீது ஏற்றிவிட்டு சென்றுவிட்டான்... அதுவும் ராங் சைடில் வந்து... சே! அப்படியென்ன ஒரு அலட்சியம்... ஒரு உயிர் போய்க்கொண்டிருக்கிறது கூட தெரியாமல்... அதுமட்டுமல்ல அவன் ஆட்டோவை சற்று கவனியுங்கள். குழந்தைகளை அநியாயத்திற்கு ஏற்றியிருக்கிறான்... குறைந்தபட்சம் ஒரு 12 குழந்தைகளை சுமந்து கொண்டு போய்க்கொண்டிருக்கிறான்... ஆண்டவா... இது என்ன நியாயம்... இப்படி போகிறவர்களை டிராஃபிக் போலீஸ்கள் தட்டி கேட்க மாட்டார்களா..?

சரி நான் ரொம்ப நேரம் பேசமுடியாது... சீக்கிரம் சொல்லிவிடுகிறேன்... என்னடா இவன் இவ்வளவு பேசுறானே, அப்படி இந்த நாய் ரோட்டை க்ராஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று நினைப்பவர்களுக்கு... இதோ என் பதில்... இந்த ரோட்டிற்கு அந்த பக்கத்தில்தான் என் காதலி இருக்கிறாள். அவள் அவ்வளவு அழகு... அவளும் நானும் தினமும் சாயங்கால வேளையில் ஒன்றாக வாக்கிங் சென்று வருவோம். அதான் ரோட்டை க்ராஸ் செய்தேன். என் போறாத வேளை... இப்படி அடிப்பட்டு இறக்க வேண்டும் என்று இருக்கிறது. யாராவது என் காதலியைப் பார்த்தால் என்னை நினைத்துக் கொண்டு 2 பிஸ்கெட் வாங்கிப் போடுங்கள்...

நான் வருகிறேன்... சாரி... போகிறேன்...

Signature

8 comments:

Raghu said...

//டிராஃபிக் போலீஸ்கள் தட்டி கேட்க மாட்டார்களா//

மாச‌க் க‌டைசியில‌ த‌ட்டி கேப்பாங்க‌

//அதான் ரோட்டை க்ராஸ் செய்தேன்//

அதாவ‌து...நான் சொல்ல‌ வ‌ந்த‌து என்ன‌ன்னா....ஹிஹி...அப்புற‌ம் போன் ப‌ண்ணி சொல்றேன்:)))

DREAMER said...

ஹாய் ரகு,
இந்த கதை உங்களுக்கு ஞாபகமில்லியா...? இது நம்ம "Just Look"க்காக எழுதினது. சரி, இங்க போட்டா இன்னும் நிறைய பேரு படிப்பாங்களேன்னு போட்டேன்.

Raghu said...

அதேதான் த‌ல‌, ந‌ல்லா ஞாப‌க‌ம் இருக்கு, ந‌ம்ம‌ ப‌ர‌த் ப‌ய‌ ப‌ண்ண‌துதானே!

DREAMER said...

ஹா ஹா, ஆமா, பரத் நைட் ஷிஃப்ட் முடிச்சிட்டு வீட்டு போகையில ஒரு நாய கொண்ணுட்டு, நாய் பாவம் பொல்லாததுன்னு புலம்பிட்டிருப்பாரே... அதை வச்சி எழதினதுதான்... சமீபத்துல JUST LOOK 3 இஷ்யூஸ்-ம் கிடைச்சிது. நாமளும் ஆஃபீஸ்ல வேலையத் தவிர ஏதோ பண்ணியிருக்கோங்கிறதுக்கு ஒரு ஆதாரம். உங்ககிட்ட backup இருக்கான்னு சொல்லுங்க... இல்லண்ணா அனுப்பி வைக்கிறேன்.

Raghu said...

என்ன‌ இப்ப‌டி சொல்லிட்டீங்க‌, ந‌ம‌க்கு பின்னாடி வ‌ர்ற‌ ச‌ந்த‌திக‌ள் தெரிஞ்சுக்க‌ணும்க‌ற‌துக்காக, நம்மால‌ க‌ல்வெட்டுலாம் ரெடி ப‌ண்ண‌முடியாது, அத‌னால‌ நானும் backup வெச்சிருக்கேன்:)

Raghu said...

Comment Moderationஅ எடுத்து விட்டுடுங்க‌, க‌மெண்ட் போடும்போது பேஜாராக்கீது!

Kiruthigan said...

அசத்திட்டீங்க..

Anonymous said...

kathaii arumai biscuits vangithara naan ready aanaal kathaliyayi enge theduven

Popular Posts