Monday, October 04, 2010

"கேணிவனம்" - பாகம் 19 - [தொடர்கதை]

 
பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------

பாகம் - 19

 இன்ஸ்பெக்டர் வாசு ஃபோனில் பேசிக் கொண்டிருக்க... தாஸூம் சந்தோஷூம் அவர் பேசுவதை ஆவலாக பார்த்துக் கொண்டிருதனர்...

'ஹலோ..?'

'. . . . . . . . '

'அப்படியா..?'

'. . . . . . . . ' 
'அந்த ஃபோன்கால்-ஐ ட்ரேஸ் பண்ண மேட்டர் என்னாச்சு..?'

'. . . . . . . . ' 

'அப்படியா..? வேற எதுவும் வழி இல்லியா..?'

'. . . . . . . . '

'ஓ! சரி... நாம வேற ஏதாவது க்ளூ கிடைக்குதான்னுதான் பாக்கணும்... பை..'  என்று சற்றே வருத்தத்துடன் ஃபோனை கட் செய்தார்...

தாஸ் ஆர்வமாக அவரை நெருங்கி வந்து...

'என்னாச்சு சார்..?' என்று கேட்டான்.

'நீங்க சொன்ன ரிச்சர்ட்... இப்போ இந்தியாவிலியே இல்லியாம். 2 நாளைக்கு முன்னாடியே அவன் ஊருக்கு கிளம்பி போயிட்டானாம்...'

'அடக்கடவுளே... லிஷாவை கடத்துனது அவனும் இல்லியா..?' என்று வருத்தபட்டான்.

சந்தோஷ் ஆர்வமாக, 'சார்... அந்த ஃபோன் காலை ட்ரேஸ் பண்ணீங்களே.. லிஷா இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சா..?' என்று கேட்க...

'இருந்த ஒரே ரூட் அதுதான்... ஆனா, அதுவும் முடியலியாம்... SIM மட்டும் மாத்திப்போட்டு வேற இல்லிகல் மொபைல்ல பேசியிருக்காங்க.. IMEI நம்பர் தப்பா காட்டுதாம். நீங்க அவங்களை பிடிச்சதுக்கப்புறம் இதுக்கும் சேத்து கேஸ் போட்டுக்கோங்கன்னு Network-ல சொல்றாங்களாம்...' என்று கூற, அதை அருகில் நின்று கேட்டுக கொண்டிருந்த சந்தோஷ்  முகம் வாடியது. ஆனால் உடனே அவன் முகத்தில் வேறு ஒரு யோசனை தோன்றியது...

'சார்? இன்னிக்கி அதிகாலையில 5.45 மணிக்கு எனக்கு லிஷா நம்பர்லருந்து ஃபோன் வந்துச்சு... கண்டிப்பா அது அவ மொபைல்லருந்துதான் பேசியிருக்கணும்' என்றான்

'எப்படி சொல்றீங்க..?' சந்தேகத்துடன் இன்ஸ்பெக்டர் கேட்டார்

'ஏன்னா, அவ சந்தோ..ஷ்னு என் பேரை முழுசா சொல்றதுக்குள்ள... அவளை பேசவிடாம அவசர அவசரமா அந்த ஃபோனை யாரோ கட் பண்ணாங்க...' என்று சந்தோஷ் கூற, இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது...

'சான்ஸஸ் இருக்கு... இப்பவே ட்ரை பண்ண சொல்றேன்...' என்று இன்ஸ்பெக்டர் மீண்டும் கான்ஸ்டபிளுக்கு டயல் செய்தார்..

--------------------------------

பாதாள அறையில்...

லிஷா கைகட்டை விடுவிக்க பொறுமையாக முயற்சித்து கொண்டிருந்தாள்.

அவள் முதுகுப்பக்கத்திலிருந்த சுவர், சாய்வு நாற்காலி போல், சாய்ந்த நிலையில் இருந்தது. அந்த சுவரை தடவிப்பார்க்க, அதே அமைப்பில் அது நீண்டு கொண்டே போனது. அந்த அமைப்பு அவளை குழப்பியது.

இது என்ன அமைப்பு..? ஏன் இப்படி சாய்ந்த நிலையில் இங்கு சுவர் அமைந்திருக்கிறது என்று குழம்பிக்கொண்டிருந்தாள். அந்த இடத்தை பற்றி முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. பொறுமையை இழந்து எழுந்தாள்.

தனக்கு சற்று நேரத்திற்கு முன்பு சாப்பாடு கொடுக்க வந்த அந்த ஆள் சென்ற பாதையை நன்றாக பார்த்து வைத்திருந்ததால், அதே பாதையில் இருட்டில் கவனத்துடன் நடந்தாள்.

பொறுமையான நடை...

அடுத்த அடியை கண்களாளில்லாமல், உணர்வுகளால் அளந்து அளந்து நடந்தாள்.

நடுவே, சற்றே பெரியதாய் ஒரு பைப் துவாரம் இருந்தது... உள்ளுக்கு சென்றது.. அந்த துவாரதிதன் ஓரத்தில் மணல்கள் இருந்தது... மேலும் நடந்துப் போக, காலில் ஏதோ முட்டிக்கொண்டது...

முட்டி வலித்தது...

இடறிய பொருள் என்ன என்று தடவிப் பார்த்தாள். அதுவும் ஒரு பைப்தான். சற்றே எம்பி மேல்பக்கமாக இருந்தது... ஒருவேளை இது பாதாள சாக்கடை கூடமாக இருக்குமோ என்று சந்தேகித்தாள். இல்லையென்றால், ஏதாவது ஒரு ஃபேக்டரியின் பாதாள அறையாக இருக்க வேண்டும் என்று ஊகித்தாள்.

தனது கைக்கட்டுக்களையும் விடுவிக்க முயற்சித்தபடியே நடையைத் தொடர்ந்தாள்.. ஒரு கட்டத்தில் கைக்கட்டு அவிழ்த்துக் கொண்டது... சிரமப்படாமல், அலுக்காமல் அந்த கைக்கட்டுக்களை அவள் மிக நிதானமாக கழட்டிக்கொண்டாள். இந்த இடத்தில் கொஞ்சம் பதற்றமடைந்தாலும் மூச்சு திணறும்,

மீண்டும் நடையை தொடர்ந்தாள். இப்போது இரும்பு ஏணி அவளுக்கு அருகில் தட்டுப்பட்டது... அதை பிடித்தபடி அதில் பொறுமையாக ஏற முயற்சித்தாள். மேற்புறமாக ஏறி, மேலே இருந்த இரும்புக் கதவை திறக்க முயற்சித்தபோது, அது வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது...

ஒருவகையில் அவள் இதை எதிர்ப்பார்த்திருந்ததால்... மீண்டும் பொறுமையாக இறங்கினாள். பொறுமையாக நடந்து தான் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர்ந்தாள். அவளுக்கு அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து, மிகவும் கொஞ்சமாக குடித்து கொண்டாள்.

பொறுமையாய் அமர்ந்து, தான் இப்போது இருளில் சுற்றிவந்த இடத்தை, மனக்கண்ணில் கொண்டு வந்து கற்பனையாய் நினைவுகளில் ஒரு ப்ளூப்ரிண்ட் வரைந்து பார்த்துக் கொண்டாள். மீண்டும் முதுகுப்பக்கம் அந்த சாய்வுச்சுவர் அமைப்பு அவளை குழப்பியது...

அந்த ப்ளூப்ரிண்ட்-ஐ மனக்கண்ணில் முழுமையாய் பார்த்தபோது அவளுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது...

தானிருக்கும் இடம் என்ன என்று ஒருவழியாக கணித்துவிட்டாள்... பாதாள அறையில் இருப்பதாய் எண்ணியது தவறு என்று அவளுக்கு பட்டது. அவள் இருக்கும் இடம் இப்போது அவள் கணித்த இடமாய் இருக்கும்பட்சத்தில் அங்கிருந்து தப்பிக்க ஏதாவது செய்யவேண்டும் என்று திட்டம் போட ஆரம்பித்தாள்.

மனதிற்குள் வெவ்வேறு திட்டங்களின் Proobability-ஐ  கணித்துக் கொண்டிருந்தாள். உடல் அயர்ச்சியாகி, கண்கள் சுருங்கி தூக்கம் வருவது போலிருந்தது...

இதுபோல் தனியாக ஒரு பூட்டப்பட்ட இருட்டறையில் இருக்கும்போது, வெளியே என்ன நடக்கிறது, என்ன நாள், என்ன கிழமை, என்ன மணி, வெயிலா, மழையா என்று எதுவுமே தெரியாமலிருக்கும்போதும், நம் உடம்பிலிருக்கும் பயலாஜிக்கல் கடிகாரம், நம் உடம்பின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு தகவல் கொடுக்கும். அதுபோன்ற ஒரு நிகழ்வுதான், இப்போது லிஷாவிற்கு தூக்கம் சொக்கியது...

தன் உடம்பின் பயலாஜிக்கல் கடிகாரம், இது தூங்க வேண்டிய நேரம் என்பதை தெரிவிக்கிறது என்பதை அவளும் சரியாக புரிந்து கொண்டாள்... இந்நேரத்தில் தூங்காமல் செண்டிமெண்டடலாக எதையாவது நினைத்தபடி கண்விழிப்பது எனபது, அவளது 'நாளை'யை பலவீனமாக்கிவிடும் என்று சரியாக புரிந்துக் கொண்டாள்.

சரியான நேரத்தில் தூங்கிவிட்டால், உடல் நலம் நலமாய் தொடரும்.  அப்போதுதான் தப்பித்து கொள்ள திட்டம் தீட்டலாம் செயல்படுத்தலாம்...
என்று முடிவெடுத்த லிஷா, உறங்க ஆரம்பித்தாள்.

--------------------------------

இரவு 11.30 மணி

ANCIENT PARK-ல் பின்பக்கமிருக்கும் பீச் வியூ பூங்காவில், பெஞ்சில் தாஸ் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரிலிருந்த பெஞ்ச்சில் ப்ரொஃபஸர் கணேஷ்ராமும், அவருக்கருகில் சந்தோஷூம் அமர்ந்திருந்தனர்.

சந்தோஷ் தனக்கு எதிரில், கடலும் நிலவும் தெரியும் அந்த ரம்யமான இரவுக்காட்சியை சுரத்தில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தாஸூம் அந்த காட்சியை ரசிக்காமல், முகத்தில் பதற்றம் குடிகொண்டவனாய் சிகரெட் ஊதிக்கொண்டிருந்தான். ப்ரொஃபஸர் அவனது பதற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

'என்னப்பா தாஸ், அவசரமா வரச்சொல்லிட்டு புகை ஊதிக்கிட்டிருக்கே...? என்னை எதுக்கு வரச்சொன்னே..?' என்று ப்ரொஃபஸர் ஆரம்பித்தார்

'சார், நான் உங்ககிட்ட கொடுத்த அந்த கோவில் பெயிண்ட்டிங்-ல வேற ஏதாவது க்ளூ மாட்டுதான்னு பாக்கணும் சார்..' என்றான்

அவர் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு... 'தாஸ், விளையாடாதே..! அந்த பெயிண்டிங்க்-ஐ போதுமானளவுக்கு நான் பாத்துட்டேன். இதுக்குமேலயும் அதுல என்னால எதையும் பாக்க முடியாது...' என்றார்.

'சார், ப்ளீஸ் அந்த பெயிண்டிங்-ல ஒரு சித்தர் உக்காந்திருக்கிறதா நீங்க சொன்னீங்களே..! அந்த சித்தரை பத்தின டீடெய்ல்ஸ் ஏதாவது வேணும் சார்..'

'தாஸ் புரிஞ்சிக்கோய்யா..! நான் அதுல தேடவேண்டியதெல்லாம் தேடிட்டேன்... இனிமே தேடணும்னா, நீ அந்த பெயிண்டிங்-ல குறிப்பா என்னத்தை தேடுறே எதுக்கு தேடுறேன்னு முழுசா சொன்னாதான் மேற்கொண்டு பாக்க முடியும். இல்லன்னா.. கஷ்டம்..' என்றார்.

தாஸ், எதிரிலிருந்த சந்தோஷைப் பார்த்தான். அவன் கண்கள் 40 நாட்களாய் சாப்பிடாதவனைப் போல் தெரிந்தது... அவன் ப்ரொஃபஸரிடம் தொடர்ந்தான்.

'சார், நான் அந்த பெயிண்டிங் பத்தின ரகசியத்தை முழுசா உங்ககிட்ட சொல்லிடுறேன். ஆனா, நீங்க எப்படியாவது நான் எதிர்ப்பாக்குற தகவலை சொல்லணும். ஏன்னா, இதுல ஒரு பொண்ணோட உயிர் சம்மந்தப்பட்டிருக்கு..' என்றான்.

'நீ முதல்ல ரகசியத்தை சொல்லு... நான் என்னால முடிஞ்சதை கண்டிப்பா செய்றேன்..' என்று கூற
தாஸ் பெருமூச்சு விட்டுக் கொண்டு அவன் சிகரெட்டில் கடைசி இழு இழுத்துவிட்டு, அதை தூக்கியெறந்திபடி மீண்டும் ப்ரொஃபஸர் பக்கமாய் திரும்பினான்.

யாரிடமும் சொல்லக்கூடாது என்று நினைத்த கேணிவனத்தை பற்றிய உண்மைகளை கிட்டத்தட்ட எல்லோரிடமும் கூறும் நிலை வந்து விட்டதே என்று வருந்தினான். இருந்தாலும், லிஷாவின் உயிரைவிட இந்த ரகசியம் ஒன்றும் பெரிதல்ல என்ற எண்ணம் அவனை சுதாரித்தது... ப்ரொஃபஸரிடம் கேணிவனத்தை பற்றி கூற ஆரம்பித்தான்.

'சார், நான் உங்ககிட்ட இப்போ சொல்லப் போற விஷயத்தை தயவு செஞ்சி வெளியில எங்கேயும் சொல்லிடாதீங்க...' என்று தாஸ் கூற ஆரம்பிக்க... ப்ரொஃபஸரின் காதுகள் சர்வ வல்லமை பெற்று கேட்டுக் கொண்டிருத்து...
ஆனால் அருகிலிருந்த சந்தோஷ் காதுகளில் தாஸ் கூறும் விஷயங்கள் விழவில்லை... களைப்பு அவன் உடலில் மட்டுமல்ல, மனதிலும்தான்... லிஷாவை தேடியலைந்ததில் முன்னாள் இரவும் தூங்கவில்லை, இன்றும் காலையிலிருந்து களைப்பு, அலைச்சல், சோகம்... இப்படி எல்லாமுமாய் சேர்ந்து உட்கார்ந்த நிலையில் அரைமயக்கத்தில் தள்ளாடிக்கொண்டிருந்தான்... 

மிகச்சில விநாடிகளில், அவனையுமறியாமல் தூங்கிப்போயிருந்தான். கண்களை பாதி திறந்தபடி அரைத்தூக்கத்தில், அவன் கண்முன் தெரியும் கடலும் நிலாவும் அவனுக்குள் 'லூஸிட் ட்ரீமிங்'-ல் மாயக்காட்சிகளை காட்டிக் கொண்டிருந்தது...

அவனும் லிஷாவும் அந்த இரவு நேர கடற்கரையில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்...

ஓடி ஓடி களைத்துப் போய், இருவரும் கரையில் முட்டிபோட்டு அமர்ந்து கொள்ள, லிஷா மணலை தோண்டிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் தோண்டி முடித்தவள், மணலுக்குள்ளிருந்து ஒரு மஞ்சக் கலர் கிஃப்ட் பெட்டியை வெளியில் எடுத்தாள். அவனுக்கு அந்த கிஃப்ட்-ஐ கொடுத்தாள்.

அதை வாங்கிய சந்தோஷ், அந்த கிஃப்ட் பாக்ஸ்-ஐ ஆவலுடன் பிரித்துப் பார்த்தான், உள்ளே...  ஒரு செல்ஃபோன் இருந்தது... அதை எடுத்து ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருக்க, அது ரிங் ஆனது...
 
எடுத்துப் பேசினான்...

'ஹலோ..?'

'டேய்! மரியாதையா குணாகிட்ட மன்னிப்பு கேளு! இல்லன்னா... லிஷாவை கொண்ணுடுவேன்' என்று ஒரு குரல் மிரட்டியது...

அவன் பதறியபடி அருகில் லிஷாவை பார்க்க, அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். குழப்பமாய் அண்ணாந்து நிலவைப் பார்த்தான்... நிலவு கருகி... நிலவுக்குள் குழியாய், இருட்டாய், கிணறின் உள்ளமைப்பு போல் அது நீண்டுகொண்டே போனது...

திடீரென்று அவனுக்கு பின்பக்கமாய் ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டது...

திரும்பி பார்க்க, இன்னோவாவில் தாஸ், டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி அவனை அழைத்துக் கொண்டிருந்தான்.

'சந்தோஷ்!? சந்தோஷ்!?'

மாயக்கனவு கலைந்தது ..

'சந்தோஷ்..?' என்று தாஸ், உட்கார்ந்தபடி பெஞ்ச்சில் தூங்கிக்கொண்டிருந்த சந்தோஷை எழுப்பிக் கொண்டிருந்தான்.

'நீ ரொம்ப டயர்டா இருக்கே..! உள்ளே போய் ஆஃபீஸ்ல படுத்துக்க...' என்று தாஸ் அவனை உலுக்கியெழுப்ப... சந்தோஷ் தன்னிலை எண்ணி வெட்கமடைந்தான்.

'இல்ல பாஸ், நான் தூங்கலை, கண் அப்படியே சொக்கிடுச்சு..' என்றான்.

'சந்தோஷ், தூக்கம், பசி இதெல்லாம் கட்டுப்படுத்த முயற்சிக்காத... தூக்கம் வந்தா போய் தூங்கு... வேண்டியவங்க காணாம போயிட்டா தூங்க கூடாதுன்னு யாரும் சொல்லலை... இப்ப தூங்கினாத்தான், காலையில தெம்பா தேட முடியும்... போ... கூச்சப்படாதே.' என்று அவனை கிட்டத்தட்ட விரட்டினான்.

சந்தோஷ் எழுந்து பூங்காவிலிருந்து பின்வாசல் வழியே மீண்டும் ஆஃபீசுக்கு செல்லும் பாதையில் நுழைந்து மறைந்தான்.
பார்வையிலிருந்து  சந்தோஷ் மறைந்ததும் தாஸ் கடிகாரம் பார்த்தான். 

மணி 2.30

மீண்டும் ப்ரொஃபஸரிடம் திரும்பி கேணிவனம் பற்றிய விஷயங்களை கூறிக்கொண்டிருக்க... ப்ரொஃபஸரைப் போலவே இதை கேட்டுக்கொண்டிருந்த நிலவும் கொஞ்சம் கொஞ்சமாக விடியலால் கரைந்து கொண்டிருந்தது...

இதே கேணிவனத்தைப் பற்றி பிறர் கேட்பதுக்கும், ப்ரொஃபஸரைப் போன்ற ஒரு வரலாற்று ஆர்வலர் கேட்பதுக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது என்று தாஸ் உணர்ந்திருந்ததால், நடந்த சம்பவத்தை, விரிவாக கூறிக்கொண்டிருந்தான்.

அனைத்தையும் கேட்டு முடித்த ப்ரொஃபஸர் அப்படியே ஆச்சர்யத்தில் வாய்பிளந்திருந்தார்.

'தாஸ் என்னய்யா இது... இவ்ளோ பெரிய விஷயத்தை இப்படி அசால்ட்டா சொல்லிட்டிருக்கே..?'

'பெரிய விஷயம்தான் சார்... நம்ம ஊரோட அந்த காலத்து இன்டலெக்சுவல் தன்மையை காட்டுறதுக்கு இப்ப மிஞ்சி இருக்கிற ஒரே ஆதாரம்... இந்த கேணிவனம்தான்..'

'ஆமாய்யா... இது வெளியில தெரிஞ்சா... இண்டர்நேஷனல் லெவல்ல... நம்ம ஊரோட பேரு எங்கேயோ போயிடும்..' என்று ஆர்வம் குறையாமல் அவர் கூற, தாஸ் மறுத்தான்.

'இல்ல சார், வெளிய தெரிஞ்சா... இதை அபகரிக்க வெளிநாட்டுக்காரங்க என்ன வேணும்னாலும் செய்வாங்க..' என்று கூற, ப்ரொஃபஸர் அவன் கருத்துக்கு உடன்படாமல் அவனை ஏளனமாக பார்த்தார். ஆனால், அங்கு பரவியிருந்த அரையிருட்டு வெளிச்சம் அவர் முகத்தை தாஸூக்கு காட்ட மறுத்துவிட்டது...

'சார், இப்ப சொல்லுங்க... இந்த கோவிலைப் பத்தி நீங்க ஹிஸ்ட்ரியில வேற எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கீங்களா..?'

'இல்ல தாஸ்... கேள்விப்பட்டதில்ல... ஆனா, சித்தருங்க அவங்க பாடல்ல, அங்கங்கே துவாரக்கோவில்னு குறிப்பிடுறதை பத்தி படிச்சிருக்கேன். ஆனா, மனுஷன் பிறக்கிற கருவறை வாசலைத்தான் அவங்க துவாரம்-னு பொதுவா ரெஃபர் பண்ணுவாங்க-ன்னுதான் நினைச்சிட்டிருந்தேன். நான் மட்டுமில்ல, சித்தர் பாட்டை மொழி பெயர்க்கிற யாரும்... அப்படித்தான் சொல்லுவாங்க... இந்த சித்தர்களோட Encryption ரொம்பவும் மர்மமானது... ஒருவேளை அவங்க துவாரக்கோவில்னு சொல்லியிருக்கிறது, இந்த மாதிரி கேணிவனக் கோயிலைத்தானோன்னு இப்ப தோணுது' என்று கூற தாஸூம் அதை ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டிருந்தான்.

'சார், இப்போ லிஷா-ங்கிற என்னோட அஸிஸ்டெண்ட் பொண்ணோட உயிரு... நீங்க சொல்ல போற தகவல்லதான் இருக்கு..'

'நான் என்ன சொல்லணும்..?'

'அந்த பெயிண்டிங்-ஐ பார்த்து, அந்த சித்தரை பத்தின தகவல்கள் எதையாவது சொல்லணும்...'

'தாஸ், விளையாடாதே..! அந்த பெயிண்டிங்-ல ஒரு அரசனுக்கு பக்கத்துல உக்காந்திட்டிருக்கிற ஒரு ஆளோட உள்ளங்கால் பகுதி தெரியுதுன்னு சொன்னேன், அவ்வளவுதான்... அதுவும் அவர் சித்தரா இருக்கலாம்னுதான் சொன்னேன். நீ சித்தருன்னே முடிவு பண்ணிட்டியா..?'

'இல்ல சார், சில விஷயங்களை கூட்டி கழிச்சி பாக்கையில அவர் சித்தர்தான் கன்ஃபர்ம் ஆகுது.  பிரம்ம சித்தர்-னு அவரோட பேரு, அவரை பத்தின டீடெய்ல்ஸையும் சேகரிச்சிருக்கேன். நம்ம சென்னையில அயனாவரத்துல பரசுராம ஈஸ்வரர் கோவில்ல அவரோட சமாதி இருந்திருக்கு...' என்று கூற, ப்ரொஃபஸர் அந்த நிலா வெளிச்சத்தில், அவன் முகத்தை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தார்.

'இருந்திருக்குன்னா என்ன அர்த்தம்..? இப்ப இல்லியா..?' என்று கேட்க

'இப்போ இல்லை சார்... இப்போ அது எங்க இருக்குன்னு தெரியணும்... அதுக்குத்தான் அந்த பெயிண்டிங்-ஐ பாத்து சொல்ல சொல்றேன்.'

'இப்ப எதுக்கு அவரோட சமாதி..?'

'யாரோ ஒருத்தர் எனக்கே தெரியாம ஆரம்பத்துலருந்து இந்த கேணிவனம் விஷயத்துல என்னை ஃபாலோ பண்ணியிருக்காங்க... நான் இந்த விஷயத்துல அடுத்த கட்டமா நினைச்சது அந்த சித்தர் சமாதியை கண்டுபிடிக்கிறதைத்தான். அதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு, என் அஸிஸ்டெண்ட்-ஐ கடத்திட்டாங்க... இப்போ அந்த சித்தர் சமாதி இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சி சொல்லலைன்னா அவளை கொல்லப்போறதா மிரட்டுறாங்க...'

'ஓ... அப்படியா...! வேணுமின்னா, பொய்யான ஒரு இடத்தை, சமாதியிருக்கிற இடமா சொல்லி, உன் அஸிஸ்டெண்ட்-ஐ மீட்டுடலாமே..?'

'இல்லை சார், கடத்தினவன், ஒருவேளை உங்களை மாதிரி ஹிஸ்ட்ரி எக்ஸ்பர்ட்-ஆ இருந்து, நான் பொய் சொன்னதை கண்டுபிடிச்சிட்டா, அவ உயிருக்கு ஆபத்து..' என்று கூற, ப்ரொஃபஸர் வெளிறிப்போனார்...

'அடப்பாவி, நான்தான் இந்த பழமை பழமைன்னு வரலாறைக் கட்டிக்கிட்டு அழறேன்னா, கடத்தல்காரங்களும் நம்ம அளவுக்கு வரலாறைப் படிச்சியிருப்பாங்கன்னு சொல்றியா..?' என்று நக்கலடிக்க...

'நான் எதுவும் சொல்லலை சார்... அவளை காப்பாத்தணும்... அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்... அதுக்குத்தான் உங்க ஹெல்ப் கேட்டேன்..' என்று கூறி முடிக்க...

இனி எப்படி அந்த சமாதியை கண்டுபிடிப்பது? என்று  ப்ரொஃபஸருக்குள்ளும் கேள்விகள் எழுந்துக் கொண்டிருந்தது...

விடிந்தது...

இந்த விடியல்... என்ன விடை சொல்லும்... பார்ப்போம்...



Signature

23 comments:

Anisha Yunus said...

ஹரீஷ்ணா,

திங்கள் காலையே இங சுபமா விடிஞ்சிருச்சு இந்த பாகத்தால. நான் எதிர்பார்க்கவே இல்ல இவ்வளவு சீக்கிரம் இந்த பாகத்தை போட்டுடுவீங்கன்னு. தேங்ஸ். கதையோட வேகம் எங்கயோ போகுதுங்ணா. ஆனா இந்த அளவு பிஸியான கதைலயும் உடலை கவனிக்க வேண்டிய விதத்தை லிஷா மூலமாவும் தாஸ் மூலமாவும் அழகா சொல்லியிருக்கீங்க. உண்மையிலேயே இப்பத்திய சமுதாயம் இதுலதான் கோட்டை விட்டுட்டு இருக்காங்க. அருமையா எளிமையா அதை சுட்டிக் காட்டியிருக்கீங்க. அதுக்கும் நன்றி. தொடர் பதிவு எப்போ? (கதைய முடிச்சபின் போட்டாலும் சரி...ஹி ஹி ஹி)

பனித்துளி சங்கர் said...

ஆஹா என்ன நண்பரே சாமதியை அடுத்தப் பதிவில் தேடப்போகிறோமா !?? பயமாத்தான் இருக்கு இருந்தாலும் அதிலும் ஒரு ஆர்வம் கண்டிப்பா அடுத்தப் பதிவிற்கு வந்துவிடுகிறேன் கலக்குங்க

Unknown said...

ஆர்வத்தைக் குறைக்க விடாம கொண்டு போயிட்டு இருக்கீங்க.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணீடுங்க..

அருண் said...

எதோ ஒரு வலைப்பூவில "கேணிவனம்" நல்லாயிருக்குன்னு எழுதியிருந்தாங்க,ஒரே மூச்சில நைட்டே 19 பாகங்களையும் படிச்சி முடிச்சிட்டேன்,சூப்பர்,வார்த்தையே இல்ல.தனியா ரூம்ல இருந்து வாசிக்கிறேன்,என்ன சுத்தி காடும் கேணிவனமும் இன்னும் கதையில வர்ற எல்லாமும் இருக்குது.
அடுத்தது எப்போ?
இன்னும் எத்தன பாகம்?

Kiruthigan said...

எழுத்தாளர் சார் உலகத்தரமான கதை...
அருமையா போய்ட்டிருக்கு..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... செம சஸ்பென்ஸ்... என்னனு ஒண்ணும் சொல்ல முடியல... Nice write up asusual

Gayathri said...

கொஞ்சம் கூட சுவாரசியம் குறையாம போகுது ப்ரோ..
சித்தர் உடல் எங்கே?? சீக்ரம் தேடலை ஆரம்பிக்கவும்...படிக்க படிக்க என்னை சுற்றி ஒரு அமான்யுஷம் இருப்பதுபோல் தோன்றுகிறது..

வேங்கை said...

ஹரிஷ் ஹரிஷ் கொஞ்சம்

ரொம்ப யோசிக்காதிங்க ..........அருமை அருமை

ஆனால் ஹரிஷ் இந்த பாகம் அழகா இருந்தாலும் லேசா இழுக்குது ( தப்பா எடுத்துகாதிங்க ஹரிஷ் )

உங்க கற்பனை, ஆற்றல் இந்த பாகத்தை நிறுத்துது ... வேகம் வேணும் எனக்கு

இந்த பாகம் - ஆளுமை

அனு said...

wow.. ரொம்ப நல்லா இருக்கு..

லிஷா எங்க இருக்கான்னு கொஞ்சம் புரியுற மாதிரி இருக்கு.. ஆனா, லாஜிக் கொஞ்சம் இடிக்குது... சீக்கிரம் அடுத்த பார்ட்-டை போடுங்க.. Cross Verify பண்ணனும்!! :)

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஷ்
வெண்ணிலவும்
இருளில் இருளியதோ
கண்ணிமைக்கும்
நேரத்தில்
கருங்குழி என்றானதோ
கருவிழி மயக்கத்தில்
கனவும்
கரையேறலாம்.........

சைவகொத்துப்பரோட்டா said...

சீக்கிரம் லிஷாவ காப்பாத்துங்க ஹரீஷ்!

Mohan said...

முதல் பகுதியில் இருந்த பரபரப்பை இப்போது வரை தொடர்ந்து மெயின்டெய்ன் பண்ணி வருவதற்கு வாழ்த்துகள். இந்தக்கதை திரைப்படமாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!

எஸ்.கே said...

நன்றாக செல்கிறது தொடர்கதை. சமாதி இருக்குமிடத்தை அறிய நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்!

Deepa said...

வணக்கம் ஹரீஷ்,
கேணிவனம் தனக்குள் முழுமையாய் அனைவரையும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது தனது சுவாரசியங்களால். ரொம்ப விருவிருப்பாக இருக்கு தொடர். அடுத்த பாகம் எப்போது?

நாடோடி said...

விடிய‌ல் ந‌ல்ல‌ப‌டியாக‌ அமைய‌னும் ஹ‌ரீஸ்.. க‌தை ரெம்ப‌ ந‌ல்லா போகுது..

Madhavan Srinivasagopalan said...

//ஆர்வத்தைக் குறைக்க விடாம கொண்டு போயிட்டு இருக்கீங்க.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணீடுங்க.. //

ஒன்னும் அவசரமில்லை.. தகுந்த இடைவேளியுடனேயே, அடுத்த பாகத்தினை பதிவிடவும்..
இல்லேன்னா.. ஆர்வம் இதே போலே இருக்காது....
(அட இங்க கூட நண்பர் அருண கும்ம சான்ஸா..?) -- Sometimes, 'Suspense' is also interesting..

Ramesh said...

ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருக்குங்க...ஆர்வம் அதிகரிச்சிட்டே போகுது...அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க...

Parthasarathy said...

lisha character is super..............enna solradhu ne theriala........ ippadium oru penna endru!

VampireVaz said...
This comment has been removed by the author.
VampireVaz said...

Kenivanam is doing what Da Vinci Code did: enlighten and entertain..

Kalyan said...

vidiyalai thedi aarvamudan kathirukkirom.The facts regarding Gopuram(in a previous part) were interesting.Enlighten us with more such facts.

DREAMER said...

தொடரை தொடர்ந்து வாழ்த்தி ஊக்கமளித்துவரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..! பணிநிமித்தமாக அடுத்த 4 நாட்களுக்கு வெளியூர் செல்ல இருப்பதால், அடுத்த வாரம் செவ்வாய் அல்லது புதன், கேணிவனம் பாகம்- 20 போட்டுவிடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

-
DREAMER

Raghu said...

ஹ‌ரீஷ், நீங்க‌ த‌ப்பா எடுத்துக்க‌மாட்டீங்க‌ங்க‌ற‌ ந‌ம்பிக்கைல‌ ஒண்ணு சொல்றேன். ச‌ந்தோஷ் லிஷா ரொமான்ஸ் பார்ட் ரொம்ப‌ இய‌ல்பா, ய‌தார்த்த‌மாத்தான் இருக்கு. ஆனா க‌தையோட‌ வேக‌த்துக்கு கொஞ்ச‌ம் த‌டையாக‌வும் இருக்கு. ரொமான்ஸை கொஞ்ச‌ம் குறைச்சுக்க‌லாம்னு தோணுது.


//அருண் said...
எதோ ஒரு வலைப்பூவில "கேணிவனம்" நல்லாயிருக்குன்னு எழுதியிருந்தாங்க//

"எதோ ஒரு"வா?....ஹும்ம்ம்ம் :(

Popular Posts