Friday, April 16, 2010

குற்றம் பார்க்கின்... [சிறுகதை]


ள்ளிரவு 1.40 மணி!

நான் வேலைமுடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல இன்று அதிகப்படியாகவே தாமதமாகிவிட்டது. என்ன செய்வது..!? என் வேலை அப்படி..!

இன்றெனப்பார்த்து, என் வண்டி பெட்ரோல் இல்லாமல் நெடுஞ்சாலையில் நின்றுவிட்டது. நேற்றுதான் பெட்ரோல் போட்டேன். ஆனால் ஆஃபீஸில் இன்று எனது நண்பன் ஒருவன், பைக்கை வாங்கி சென்று ஊர்சுற்றுவிட்டு வந்தான். இருந்தாலும், கிளம்பும்போது பெட்ரோல் எவ்வளவு இருக்கிறது என்று செக் செய்யாமல் கிளம்பியது என் தப்புதான். மறதி!

மற்றவர்களைப் போல் என் வீடு, ஆஃபீசுக்கு பக்கமில்லை... 35 கிலோமீட்டர் சென்னையிலிருந்து புறநகருக்குள் செல்லவேண்டும். ட்ரெயினிலும் பயணம் செய்யலாம், ஆனால், நான் அடிக்கடி இரவு வீடு திரும்ப தாமதம் ஆகும் என்பதால், எனக்கு ட்ரெயினை விட, பஸ்ஸை விட என் பைக்தான் சிறந்ததாகப் பட்டது. ஆனால் இன்றிரவு..! சே..! இப்படியா நடக்க வேண்டும்... பசி வேறு பயங்கரமாக வயிற்றைக் கிள்ளுகிறது.

நகரத்தை தள்ளி புறநகர் பகுதியிலுள்ள ஒரு மெயின் பஸ் ஸ்டாண்டிலிருந்து பைக்கை தள்ளியபடி நடந்துக்கொண்டிருக்கிறேன். பைபாஸ் சாலையைக் கடந்து... என் வீட்டைட சென்றடையா, இன்னும் குறைந்தது 12 கிலோமீட்டராவது செல்ல வேண்டும். இந்நேரம் எந்த வண்டியும் சாலையில் போகவில்லை. ஒரே ஒரு லாரி கடந்து சென்றது, ஆனால் அது வட இந்திய கண்டெய்னர் லாரி, என்னைக் கண்டுக்கொள்ளவே இல்லை! பாவம், ஒவ்வொரு ஊரிலும் அந்த லாரிக்காரன், என்னைப்போல் இருப்பவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தால், ஊர் போய் சேர்வதற்குள் அவன் ஆயுள் முடிந்துவிடும். அதனால், அவன் என்னைப் புறக்கணித்தத்தில் எனக்கு கோபமொன்றும் இல்லை...

தூரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் தெரிந்தது. ஆனால், வேஸ்ட்தான், ஏனென்றால், அந்த பங்க் கடந்த 3 மாதமாக மூடப்பட்டிருக்கிறது. என்ன காரணமோ! என்னவோ! மூடிவிட்டார்கள். ஆனால் எனக்குள் வேறொரு எண்ணம் வந்தது. பேசாமல் வண்டியை இந்த காலி பெட்ரோல் பங்க்கில் பார்க் செய்துவிட்டு, வீட்டிற்கு கைவீசியபடியாவது நடந்து போகலாமே..! தேவையில்லாமல் இந்த பைக் சுமையை தள்ளிக்கொண்டு போவானேன்..! சரி, என்று தோன்றியதால் அந்த இயங்காத பெட்ரோல் பங்க்கில் வண்டியை உள்புறமாக தள்ளிச்சென்று, மறைவாக பார்க் செய்தேன்.
சுற்றிலும், கும்மிருட்டு... தெருவிலாவது நிலாவெளிச்சம் தெரிகிறது. ஆனால், இங்கே மேலே போடப்பட்டுள்ள கூரையில் நிலவொளியும் மறைந்துக் போய் வெறும் இருள்மட்டுமே தெரிந்தது. கைகால்களை முறித்துக் கொண்டு அந்த பங்க்கை கொஞ்சம் கூர்ந்து பார்த்தேன். ஆளில்லாத பங்க்தான் என்றாலும், யாரோ இருப்பது போலவே ஒரு ஃபீலிங். திடீரென்று இந்த எண்ணம் வந்ததும், சற்றே பயம் தோன்றியது. சரி கிளம்பிவிடலாம் என்று கிளம்ப எத்தணித்த போது, யாரோ ஒரு பெண் அழும் குரல் கேட்டது.

'ஹ்ம்ம்ம்..ஹ்ங்ங்ங்....ஹ்ம்ம்ம்..!'

எனக்கு ஈரக்குலை நடுங்கியது. நான் கேட்பது உண்மையா இல்லை என் மனப்பிராந்தியா என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்த நேரம், இப்போது அந்த அழுகுரல் கொஞ்சம் சத்தமாகவே கேட்டது

'ஹ்ம்ம்ம்மாஆஆஆ.. ஹ்ம்ம்..'

நான் அங்கிருந்து ஓட்டம் எடுக்கலாமா என்றுகூட எண்ணினேன். ஆனால், எனக்கே நான் பயப்படுவது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. சரி மெதுவாகவே செல்லலாம் என்று மெல்ல அடியெடுத்து வைக்கப் போக, இருட்டில் ஒரு இரும்பு ட்ரம்மில் கால்களால் முட்டிக்கொண்டேன்.

டங்ங்ங்ங்.. என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. அந்த சத்தம் என் பயத்தை அதிகரிக்கவே நான் ஓட்டமாய் ஓடத் துவங்கினேன்.

அந்த ட்ரம் சத்தம் அடங்கியதும், மீண்டும் குரல் கேட்டது.

'யாராஆஆவ்து இருக்கீங்க்லாஆஆ.. ஹ்ம்ம்.. ' மீண்டும் அழுதபடி அந்த குரல் தொடர்ந்தது, 'ப்ப்லீஈஈஈஸ் பதில் சொல்ல்ங்க... ஹ்ங்ங்... ம்ம்ம்மாஆஆ..'

நான் நின்றேன். இது மனிதக்குரல்தான், அதுவும் பெண்குரல்... வேறு எதுவாகவும் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் இப்படி பூட்டப்பட்ட பங்க்கிலிருந்து எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் குரல் வந்த திக்கில தேடினேன்.

'ப்லீஈஈஈஸ்....' மிகவும் தளர்வாக கேட்ட அந்த குரல், தரையிலிருந்து வருவதைத் தெரிந்துக் கொண்டேன்.

கையில் டார்ச் எதுவும் இல்லையே என்று யோசித்தபடி தடவித் தடவி, தரையில் பார்க்க, ஆள் மட்டும் புகுமளவிற்கு ஒரு இரும்பு மூடி தட்டுப்பட்டது. பெட்ரோல்-ஐத் தரைக்கடியில் தேக்கிவைக்கும் சம்ப் வகை டேங்க் என்பது புரிந்தது. அங்கிருந்துதான் குரல் வந்தது என்பதை தெரிந்துக் கொண்டு அந்த சம்ப்-ன் மூடியைத் திறந்தேன். உள்ளே கும்மிருட்டு. கொடுமையே! இங்கிருந்தா குரல் வந்தது என்று எண்ணியபடி உள்ளே எனது செல்ஃபோன் வெளிச்சத்தை பரப்ப, உள்ளே... ஒரு பெண் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சரிந்திருந்தது கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்தது.

'ஹலோ..'

'ண்ணா..!?!'

அண்ணா என்று பரிதாபமாக அந்த பெண் அழைத்தது கொஞ்சம் தைரியம் தரவே நான் தெம்பாக கேட்டேன், 'யாரும்மா நீ..'

'ண்ணா... என்னை... ங்ங்கிருந்து கூட்டிட்ட்ட்ட் போண்ணா..'

பாவமாக இருந்தது. யாரிவள், உற்றுப்பார்க்க, பள்ளிச்சீருடையில் இருப்பது தெரிந்தது. ஆனால், சீருடை கிழிப்பட்டு, ரத்தம் படறியிருந்தது. யோசிக்காமல் உள்ளே இறங்கினேன். துவாரம் மிகவும் சிறியது என்பது இறங்கும்போது புரிந்தது.

உள்ளே பயங்கர துர்நாற்றம்... தரைமுழுதும் ரத்தம்...  கைகால்கள் கட்டிய நிலையில் அந்த பெண் அறைமயக்க நிலையில் சுருண்டு படுத்திருந்தாள்.

'ஹய்யோ...! கடவுளே..! உனக்கென்னம்மா ஆச்சு..' என்று பதறியபடி அவளை தட்டியெழுப்ப, பாவம், அலங்கோலமாயிருந்தாள்.

'அந்த விநோத்-ம், பாலுவும் என்னைக் கடத்திட் வந்து... வந்து..' அதற்குமேல் சொல்லவிருப்பமில்லாமலும் தெம்பில்லாமலும் அழுதாள்..

'யாரு விநோத், யாரு பாலு..?'

'என் க்ளாஸ்மேட்ஸ், கெட்ட பசங்க.. என்னை கடத்திட் வந்த்ட்டாங்ங்ங்'

'அடக்கடவுளே!' எனக்கும் இப்போது அழுகை வந்தது, யாரோ இவளது க்ளாஸ்மேட்ஸ் இவளை கடத்திக்கொண்டு வந்து பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டேன்.

'எப்போம்மா கடத்துனாங்க..' என்று கேட்க

'தெர்லண்ணா..' என்றாள்

அவள் சொன்ன பதில், என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. செல்ஃபோனில் மும்முரமாக போலீஸ் நம்பரை டயல் செய்யப் முயல, உள்ளே அந்த சம்ப் டேங்கில் சுத்தமாக சிக்னல் கிடைக்கவில்லை...

'சே..! இங்க சிக்னல் கிடைக்கமாட்டேங்குது.. இரும்மா... நான் மேல போய் ஏதாவது கொண்டு வர்றேன்... பயப்படாதே என்ன?!' என்று அவளையும் தூரத்தில் விழுந்து கிடக்கும் அவள் ஸ்கூல் பேக்-ஐயும் பார்த்தபடி மீண்டும் மேலே ஏற முயன்றேன். திரும்பி வந்ததும், அவள் ஸ்கூல் பேக்-ல் ஏதாவது விவரம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். குறைந்தபட்சம் அவள் பெயராவது அதில் இருக்கும்தானே.. என்று யோசித்தபடி மேலே ஏறினேன். இறங்குவதைவிட ஏறுவது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.

வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். இருட்டு மட்டுமே அங்கு தெரிந்தது. என் செல்ஃபோன் வெளிச்சம் சுத்தமாக போதவில்லை...

உள்ளே துடித்துக் கொண்டிருக்கும் அந்த பெண்ணின் நிலை மிக மோசமாக இருந்ததை எண்ணி வருந்தினேன். ஏகப்பட்ட ரத்தம் வெளியேறியிருக்கிறது. அவள் பிழைப்பது கடினம்தான் என்றும் தோன்றியது. அந்த டேங்கிற்குள் அடித்த துர்நாற்றம் இன்னமும் குமட்டிக் கொண்டு வந்தது. இப்படிப்பட்ட ஒரு இடத்தில், மிருகத்தனமாய் கைகால்களை கட்டி இப்படி சேதப்படுத்தியிருக்கிறார்கள். பாவிகள். இவர்களை சும்மா விடக்கூடாது. கண்டிப்பாக சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க வேண்டும் என்று எண்ணியபடி அங்குமிங்கும் புலம்பிக்கொண்டே அலைந்துக் கொண்டிருந்தேன்.

தூரத்தில் டார்ச் லைட் வெளிச்சம் தெரிந்தது... யாரது..!?

இல்லை..! அது டார்ச் லைட் வெளிச்சமில்லை, பைக்-ன் ஹெட்லைட் வெளிச்சம். ஒரு பைக்கில் மூன்று பேர் ட்ரிபிள்ஸ் வந்துக் கொண்டிருந்தனர். ஹைவேயைக் கடக்கும் பயணிகள் என்றுதான் முதலில் நினைத்தேன், ஆனால், அவர்களின் பைக் நேராக பெட்ரோல் பங்கிற்குள்தான் வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! முதலில் பயம்தான் வந்தது.  செல்ஃபோன் வெளிச்சத்தையும் அணைத்தேன். இருட்டில் தடவித் தடவி சென்று, முன்னம் நான் கால்களில் இடித்துக் கொண்ட இரும்பு ட்ரம்-ஐ அடைந்தேன். அதன் மறைவில் அமர்ந்துக் கொண்டேன். அந்த பைக் உள்ளே வந்து நின்றது. முகம் பாதியாக தெரிந்தது. இறங்கிய மூன்று பேரும் பொடிசுகள். மிஞ்சிப்போனால், 17 வயதிருக்கும். ஆனால், முகத்தில் அந்த 17ஐவிட அதிகக் குரூரம் இருந்தது. சரக்கடித்திருந்தார்கள்! வாசம் அடித்தது, ஒருவன் பாக்கு போட்டிருந்த வாசமும் சேர்ந்தடித்தது.

'டேய் ஜோசப்பு, புள்ள உள்ளத்தான் இருக்கு..! போ! போய் விளையாடு!'

'நீங்க ரெண்டு பேரும் வரலியா..?'

'ரெண்டு நாளா நாங்கத்தான்டா மாத்தி மாத்தி சாப்பிடுறோம். இன்னிக்கி நீ தனியா என்ஜாய் பண்ணு போ' என்று கூறியவனும் மற்றவனும் பைக்கிற்கு கீழேயே அமர்ந்துக் கொள்ள, அடுத்தவன்  நடந்து சென்று, என்னைக் கடந்து, அந்த சம்ப் துவாரத்திற்குள் இறங்கினான். அப்போதுதான் கவனித்தேன். அதுவரை அழுதுக்கொண்டிருந்த அந்த பெண்ணின் சத்தம், இப்போது சுத்தமாக கேட்கவில்லை..! என்ன ஆனது அவளுக்கு... ஒருவேளை..? என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும்போதே உள்ளே சென்றவன் பதறியபடி மேலேறிவந்தான்.

'டேய் விநோத்தே..! அவ செத்துக்கிடக்கிறாடா..'

'என்னடா சொல்றே..?'

அடக்கடவுளே! நான் நினைத்தது சரிதான் அவள் இறந்துவிட்டிருக்கிறாள். இறக்காமல் என்ன, உள்ளே போனபோது எவ்வளவு ரத்தம் வெளியேறியிருந்ததே..! இந்த சண்டாளர்கள் இப்படி ஒரு சின்னப் பெண்ணின் உயிரை பலியிட்டிருக்கிறார்களே. நான் பார்த்தும் ஒன்றும் செய்யமுடியாதவனாகிவிட்டேனே..! என்று என்னென்னமோ மனதிற்குள் நான் புலம்பிக் கொண்டிருக்க.. என்னையுமறியாமல் கண்களில் நீர் பெருகி ஓடிக்கொண்டிருந்தது.

அந்த மூவரும், ஒவ்வொருவராய் உள்ளே இறங்கினார்கள். நான் உபயோகித்துபோலவே ஒருவன் செல்ஃபோன் வெளிச்சத்தை உபயோகித்தபடி உள்ளே இறங்கினான்.

'ண்ணாஆஆஆ' என்று அவள் பாவமாய் அழைத்தது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. செல்ஃபோன் வெளிச்சத்தில் நான் பார்த்த, பயந்துபோயிருந்த அவளது முகம் கண்களில் தெரிந்து மறைந்தது. ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது, இவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்று அதிகமாய் கோபமும் வந்தது. டேங்கிற்குள் இறங்கிய மூவரும் பேசிக்கொண்டது துல்லியமாய் கேட்டது.

'த்தா 2 நாள்லியே செத்துதொலச்சிட்டா, ஒரு நாலு நாலாவது வச்சிருந்து **********னு பாத்தா... இப்டி ஆயிடுச்சே'

அந்த மூவரில் ஒருவன் அவள் இழப்பை வேறுவிதமாய் பேசிய இந்த பேச்சு என் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

'சரிடா, நான் கிளம்புறேன், வீட்ல தேடுவாங்க' என்று அந்த புதியவன் கிளம்ப பார்த்தான்.

'ஏய்...  இர்றாஆஆ... அதுக்குள்ள எஸ்-ஆவரெ... இரு.. பாடிய வெளிய எடுத்து எங்கனா போட்டு போயிடலாம்'

இவர்களை என்ன செய்யலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று என் செல்ஃபோன் அதிக ஒலியுடன் ஒலித்தது. இளையராஜாவின் மெலோடி பாடலில் வரும் இண்டர்ல்யூட் இசை ஒன்று ரிங்டோனாக வைத்திருந்தேன்... ஆனால், காதுக்கினிய அந்த ஒலி, இப்போது எனக்கு சாவு மணியாக மாறிவிடுமே என்ற பதட்டம் என்னுள் பரவ... சைலன்ட் மோடில் போட தடுமாறினேன். அதற்குள்...

'ஏய், மேல யாரோ இருக்காங்கடா..' ஒருவன் உஷாரானான். நான் பதறி எழுந்துவிட்டேன். என்ன செய்ய சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்க.. ஒருவன் உள்ளிருந்து வெளியே தொங்கியபடி குரங்குப்போல் மேலே ஏறிக்கொண்டிருந்தான். இரும்பு ட்ரம்முக்கருகில் நான் நின்றிருந்ததைப் பார்த்தான்.

'ஏய்..! யார்றா நீ..'

நான் ஆவேசமாக ஒடி வந்து, அவனை நோக்கி என் காலால் ஓங்கி ஒரு உதை உதைத்தேன். பதறியடித்து டேங்கிற்குள் விழுந்தான். அடுத்தவன் சுதாரிப்பதற்குள் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் மறைவாய் ஒளிந்திருந்த இரும்பு ட்ரம்மை அந்த சம்ப் டேங்க்கின் துவாரத்தின்மீது நகர்த்திவிட முயன்றேன். ட்ரம் மிகவும் கனமாக இருந்ததால், சிரமமாய் இருந்தது. இதற்குள் குழியிலிருந்து இன்னொருவன் மேலே ஏற முயன்று கொண்டிருந்தான். நான் ட்ரம் நகர்த்துவதைப் பார்த்ததும்...

'ஏய்... ஏய்... த்தா இர்றா.. ஏய்' என்று கோபமாய் கத்திக்கொண்டிருந்தான். நான் ட்ரம்-ஐ கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்தி, ஒருவழியாக அந்த துவாரத்தை மூடிவிட்டேன். என் செல்ஃபோன் ஒலிப்பது நின்றது.

அமைதி...

ஃபோனை எடுத்துப் பார்த்தேன். என் மனைவி அழைத்திருந்தாள்.

எங்கோ பக்கத்து தெருவில் கேட்பது போல் சம்ப் டேங்கிலிருந்து அந்த மூவரும் கதறும் குரல் கேட்டது.

'ஏஏ...ய்...' என்ற வார்த்தையைத் தவிர, வேறு வார்த்தைகள் எதுவும் சரியாக கேட்கவில்லை. மூவரில் யாரோ ஒருவர் அழுவது போலவும் கேட்டது. சில சமயம் ட்ரம்மை எம்பி எம்பி அடிப்பதும் தூரத்திலிருந்து கேட்பது போல் கேட்டது.

ட்ரம்மிற்குள் செல்ஃபோன் வெளிச்சமடித்துப் பார்த்தேன். அழுக்குத் தண்ணீர் பாதி அளவிற்கு நிரம்பியிருந்தது. நான் ஓடிச்சென்று பெரிய சைஸ் கற்களை தேடித் தேடி கொண்டுவந்து ட்ரம்மை நிரப்பினேன்.

கொஞ்சம் அயர்ந்து தரையில் அமர்ந்தேன். இன்னமும் அழுகை வந்தது.

மணி பார்த்தேன். 2.30...

நான் செய்த்து சரியா..!

சரிதான்...! என்று அந்த பெண் எனக்குள்ளிருந்து சொல்வது போல் தோன்றியது.
மூவரும் அந்த கும்மிருட்டில் கிடந்து சாகட்டும். பாவம்! அந்த பெண். அவள் பெயரும் தெரியவில்லை. இந்த விஷ ஜந்துக்களால் கடத்தப்பட்டு சீரழிந்து செத்தும் போயிருக்கிறது. அவர்களுக்கு தண்டனை வேண்டாமா..! போலீஸ கேஸ் என்று போனாலும் இவர்களுக்கு அதிகப்பட்சம் சிறைத்தண்டனை கிடைக்கும். ஆனால், நான் இப்போது அவர்களுக்கு கொடுத்திருப்பது, கொடுமையான சிறைத்தண்டனை. அந்த பெண் பசியிலும், தாகத்திலும், வலியிலும் வாடி இறந்ததுபோல். அதே பெண்ணின் பிணத்தை அருகில் வைத்துக் கொண்டு பசியிலும், பயத்திலும், நாற்றத்திலும் வாடி இந்த மூவரும் சாகட்டும். யாருக்கும் இவர்கள் உள்ளே இருப்பது தெரியப்போவதில்லை. செல்ஃபோனும் உதவாது. சிக்னல் கிடைக்காது. இந்த சம்ப் டேங்க்தான் அவர்களுக்கு சமாதி. சாகுங்கள்! இவர்கள் விஷயத்தில் குற்றம், பாவம் , என்றெல்லாம் பார்க்ககூடாது என்று எனக்குள் சொல்லிக்கொண்டு ஒரு புது தெம்பு பிறந்தவனாய் எழுந்தேன்.
இந்த தண்டணையை இவர்களுக்கு இன்று நான் கொடுக்க வேண்டும் என்றுதான் என் பைக் பெட்ரோல் தீர்ந்து நின்றதோ..!  தேவையில்லாத முடிச்சு..! முடிந்தது..! எல்லாம் முடிந்தது..! கிளம்பு என்று எனக்குள் சொல்லிக்கொண்டு நடந்தேன்.

அவர்கள் வந்திருந்த பைக்-ஐ சமீபித்தேன். அந்த காலி பெட்ரோல் பங்க்கில் அங்குமிங்கும் தேடி ஒரு பழைய பாட்டில் தேடி எடுத்தேன். அவர்கள் வந்திருந்த பைக்கிலிருந்து பெட்ரோலை பாட்டிலில் இறக்கினேன். நிமிர்ந்து பார்க்க... 'PURE FUEL' என்று அந்த பங்க்கின் வாசகம் கண்ணில் தெரிந்தது. பாட்டிலை எடுத்துச் சென்று என் பைக்கில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டேன். மீண்டும் அவர்களின் பைக்கை நெருங்கி, அதைத் தள்ளிச்சென்று, பங்க்கின் பின்புறம் வந்தடைந்தேன். அங்கு ஒரு விவசாய நிலப்பகுதியும், சற்று தூரத்தில் ஒரு பம்புசெட்டும், ஆழ்கிணறும் நிலாவெளிச்சத்தில் தெரிந்தது. யோசிக்காமல், அந்த பைக்கை அந்த கிணற்றுக்குள் தள்ளினேன். அதுவும், பெரிய சத்தத்துடன் விழுந்தது. யாராவது வருவார்களோ! அவசரப்பட்டு சத்தம் செய்துவிட்டோமோ! என்று பயந்தேன். ஆனால், யாரும் வரவில்லை. பரவாயில்லை... பிழைத்தோம்... என்று எண்ணி திரும்பவும் பங்க்கை அடைந்தேன்.

மிக மெதுவாய் அந்த சம்ப் டேங்க்கிலிருந்து சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவு நள்ளிரவு அமைதியிலேயே மெதுவாய் கேட்கும் இந்த சத்தம், பகலில் கண்டிப்பாய் ஜனநடமாட்ட சத்தத்திற்குள் அமுங்கிவிடும் என்றுதான் தோன்றியது. பைக்கை கிளப்பிக் கொண்டு மனைவிக்கு ஃபோன் செய்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.

மூன்று நாட்களுக்குப் பிறகு...

நடந்துமுடிந்த சம்பவம் வெள்ளியன்று நடந்ததாலும், அடுத்த இரண்டு நாட்கள் எனக்கு ஆஃபீஸ் லீவு என்பதாலும் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு நான் போகவில்லை. இன்று திங்கள் ஆபீஸிற்கு கிளம்பினேன். அந்த பங்க் வழியாக செல்லும்போது கேஷூவலாக ஒரு பார்வையை வீசினேன்.

ட்ரம் இன்னும் அந்த சம்ப் டேங்க்கின் துவாரத்தின் மீதுதான் இருந்தது!


Signature

26 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

சரியான திகில் + அந்த சிறுமி கேரகடர் பாவமுமாய்
இருந்தது.

சீமான்கனி said...

நல்ல சுவாரசியமான கதை ஹரீஷ்...அவன் செய்தது சரிதான்...
கடைசிவரை ஒரு பயத்தை தக்கவைத்து வந்தது கதை...தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துகள்...

DREAMER said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா நண்பா..! மூன்று பேரை கெட்டவர்களாக காட்ட, அந்த சிறுமியை பாவமாக காட்டவேண்டியிருக்கிறது!

வாங்க சீமான்கனி,
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன். வாசிப்புக்கும், வாழ்த்துக்கு நன்றி!

-
DREAMER

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ட்ரீமர், நான் உங்கள் கதைகளின் பரம ரசிகை ஆகிக் கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் யோசித்து எழுதுகிறீர்கள். பெண் குழந்தையைப் பெற்றவர்களின் வயிற்றில் பயம் பரவ வைத்து விட்டீர்கள்.

நாடோடி said...

க‌தை ந‌ல்ல‌ இருக்கு... இறுதிவ‌ரை சுவர‌ஸ்ய‌ம்.

எல் கே said...

super story. saryina theerpu

DREAMER said...

வாங்க நாய்க்குட்டி மனசு,
மிக்க நன்றி! உங்களது வாழ்த்து, இன்னும் நிறைய யோசித்து எழுத ஊக்கம் கொடுக்கிறது.

வாங்க நாடோடி நண்பரே..!
வாழ்த்துக்கு நன்றி!

வாங்க LK,
வாழ்த்துக்கும், தீர்ப்பை ஆதரித்ததற்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

-
DREAMER

Raghu said...

ஹ‌ரீஷ், என்ன‌ சொல்ற‌துன்னு தெரிய‌ல‌....ச‌மீப‌த்தில்‌ நீங்க‌ எழுதிய‌தில் மிக‌ச்சிற‌ந்த‌ க‌தை இது..ஆர‌ம்ப‌த்துல‌ இருந்த‌ த்ரில் க‌டைசி வ‌ரைக்கும் கொஞ்ச‌மும் குறைய‌ல‌!

//அவர்கள் வந்திருந்த பைக்-ஐ சமீபித்தேன்//

'ச‌மீபித்தேன்'னா என்ன‌?

angel said...

ஹப்பா நான் ரொம்ப பயத்துடன் தான் படித்தேன் அந்த பெண் தான் மிகவும் பாவம். மேலும் அவன் செய்தது சரியே

DREAMER said...

வாங்க ரகு,
மிக்க நன்றி! சமீபித்தேன் என்றால் நெருங்கினேன் என்று அர்த்தம்.

வாங்க Angel,
பயத்துடன் படித்து ரசித்தத்ற்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

-
DREAMER

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வெறும் thriller னு இல்லாம மெசேஜ் சேத்தது நல்ல இருக்கு... பாவம் அந்த பொண்ணு... 17 வயசுல அந்த பசங்க.... ச்சே....(நல்ல எழுதி இருக்கீங்க)

DREAMER said...

வாங்க அப்பாவி தங்கமணி,
ரசித்துப் படித்ததற்கும் மெசேஜை பாராட்டியதற்கும் மிக்க நன்றி!

-
DREAMER

Madhavan Srinivasagopalan said...

The story insists good 'Morality'.
In current status of our country, it's true that the culprits will come out any punishment with the link of 'poewer'ful persons. Only this kind of punishment is suitable.
It reminds of 'Rajesh Kumar' Story, that one male & female gets into illicit relationship cheating their partners.. & cunningly killing them to continue their relationship.. The story ends with the unexpected 'Electrocuting' death for both of them.

வேங்கை said...

ஹரிஷ் சூப்பர் முடிவு ..........
கதை ஆரம்பம் முதல் பயம் தொற்றி கொண்டது
நல்லா இருக்கு ஹரிஷ்

DREAMER said...

வாங்க மாதவன்,
கதையை படித்து ரசித்து அதன் முடிவை ஆதரித்ததற்கு மிகவும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

வாங்க வேங்கை நண்பரே!
வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

-
DREAMER

Padmahari said...

கதை சூப்பர்! மனிதாபமானம், யதார்த்தம், இயற்கை, குரூரம், கோபம், பரிதாபம்....இப்படி எல்லாம் சேர்ந்த உணர்வுக் கலவையோடு, நிரம்பவே சஸ்பென்ஸ் கலந்து.....கலக்கிட்டீங்க ஹரீஷ்! வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க....நன்றி!
http://padmahari.wordpress.com

DREAMER said...

வாங்க ஹரிஜி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிஜி, கண்டிப்பா தொடர்ந்து எழுதுறேன்...!

-
DREAMER

செந்தில் நாதன் Senthil Nathan said...

எப்பவும் போல "அருமை" :)

DREAMER said...

நன்றி செந்தில்நாதன்..!

கமல் said...

வணக்கம்!

சார் உங்கள் எழுத்து மீண்டும் மீண்டும் படிக்க தோனுது சார் ...

DREAMER said...

வாங்க கமல்,
மீண்டும் மீண்டும் படித்து ரசித்ததுக்கு மிக்க நன்றி!

Anonymous said...

Hello Hareesh...

Brilliant writing... Congrats... I missed ur blog so long...

Ragu G J.

DREAMER said...

Welcome Ragu,
Happy to see your comments in all my stories..!

தகாரா said...

super ending sir...

VampireVaz said...

Crisp suspense

அருள் said...

தோழர் இந்த கதையை குறும்படமாக எடுக்க தங்கள் அனுமதி தேவை....

Popular Posts