என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் ரகுவுக்கு நன்றி!
சென்னை வேப்பேரியில் உள்ள 'பெயின்ஸ் பாப்டிஸ்ட்' என்ற மெட்ரிக் பள்ளியில் படித்தேன். படிப்பில் சூப்பர் இல்லையென்றாலும், சுமாராக படிப்பேன். ஆனாலும், கடைசி பெஞ்சில்தான் என்னை உட்கார வைத்தார்கள். காரணம், நான் உயரம் அதிகம். லாஸ்ட் பெஞ்ச்-ல் அமர்ந்ததால் சில சௌகரியங்கள்தான். நன்றாக அரட்டையடிக்க முடிந்தது. பல தலைப்புகளில் அரட்டை அடித்து அடித்து அங்கேதான் 'உலகப்பொது அறிவு!?!?' விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
நான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது, கராத்தே கற்றுக்கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் பள்ளியில் கராத்தே வகுப்பில் சேர்ந்தேன். 3 வாரம் கடுமையான பயிற்சிகள். 'ஹே ஹே' என்று ஆக்ரோஷமாக குரல் எழுப்பி காற்றில் கைகளை குத்திக்கிழித்து கொண்டு கம்பீரமாக நடந்துக்கொண்டிருந்த அந்த 3 வாரமும் மனதில் நல்ல ஒரு உத்வேகம். எப்படியும் கராத்தேவில் பெரியா ஆளாய் வரலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால், எனது கராத்தே மாஸ்ட்டர் திடீரென்று 3 நாட்களுக்குமேல் வகுப்புக்கு வரவில்லை... எப்போது கேட்டாலும், லீவ்... என்றார்கள். என்ன ஏது என்று தெரியாமல், சீனியர் ஒருவர் வழிநடத்த, வெறுமே 'ஹேய் ஹேய்' என்று சற்று டல்லாக நின்று கத்திக் கொண்டிருந்தோம். பிறகுதான் ஒரு உண்மை தெரியவந்தது, எங்களது கராத்தே மாஸ்ட்டர், தனது காதலியுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக சொன்னார்கள். கராத்தே வகுப்பு கேன்ஸல்... அவர் காதலியை இழுத்துக்கொண்டு மட்டும் ஓடவில்லை..! நான் வருங்காலத்தில் கராத்தேவில் வாங்கவிருந்த 'கருப்பு பெல்ட்'டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்..! இல்லையென்றால் நானும் இன்று ஒரு கராத்தே மாஸ்ட்டராகி, அநியாயங்களை தட்டி கேட்கும் ஒரு ஹீரோவாக இருந்திருப்பேன்.
இது தவிர என் நினைவுக்கு வருவது, நண்பர்களுடன் க்ரிக்கெட் ஆடி, ஒருமுறை ஒரு நண்பனின் கண்பட்டி கிழிந்து, ரத்தம் சொட்ட சொட்ட அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற நாளிலிருந்து பேட்-ஐயும் பந்து-ஐயும் பரங்குமேல் தூக்கி போட்டது. இன்னொரு சம்பவம், நண்பனின் காதலி ஒருத்தி திடீரென்று மொட்டை அடித்துவர, அவன் அழுது புலம்பி பிறகு காதலியை மறந்த வேடிக்கையான சம்பவம், இதை ரொம்ப நாளாக நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தோம். 'உன் காதலுக்கு கண்ணு மட்டுமில்லடா... முடியுமில்ல..' என்று கூறி ஓட்டிக்கொண்டிருந்தோம். இருந்தாலும் அவன் காதல் ஒரு 6 மாதம் பொறுத்திருக்கலாம்..!
சினிமா சினிமா..
இது எல்லாவற்றையும்விட என்னுள் நிகழ்ந்த இன்னொரு முக்கியமான மாற்றம் ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் மட்டுமே பார்த்து வந்த சினிமா என்கிற விஷயம், என் ஆழ்மனதில் பதிந்து ஒரு அங்கமாக மாறிய ஒரு முக்கிய சம்பவம் அது. அதற்கு காரணம் நான் பார்த்து மிகவும் மலைத்துப் போன ஒரு படம்.
திரைப்படம் பார்க்க என் பெற்றோர்களுடன் தியேட்டருக்கு போவது மட்டுமே வழக்கமாக இருந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி, முதல்முறையாக நான் ஒரு படத்திற்கு என் நண்பர்களுடன் சென்றேன். படம் : 'ஜூராஸிக் பார்க்'. என் வீட்டுக்கு அருகில் இருந்த, 'புரசைவாக்கம் வசந்தி' தியேட்டருக்கு சென்றேன். அரங்கின் உள்ளே... ஒரு 2.15 மணி நேர ஆச்சர்யம், அந்த படம் முழுவதும் என்னை ஆக்கிரமித்திருந்தது. அன்று இரவு முழுவதும் அந்த படத்தை பற்றியே நினைப்பாக இருந்தது. எனக்கு ஜூரம் வந்துவிட்டது. என் பெற்றோர்கள் பயந்துவிட்டார்கள்... நான் பயந்துவிட்டேனோ என்று அலறினார்கள். ஆனால் ஜூரத்தின் காரணம், பயம் அல்ல, அந்த படத்தின் பாதிப்புதான் என்று எனக்கு தெளிவாக புரிந்தது. ஒரு படத்தை இந்தளவுக்குக் கூட ஈர்ப்புத்தன்மையோடு எடுக்க முடியுமா என்று மலைத்துப் போனேன். இதன்பிறகு நான் திரைப்படம் பார்த்த கண்ணோட்டம் மாறியது. ஒவ்வொரு படத்திலும் நான் ஜூராஸிக் பார்க்கின் ஈர்ப்புத்தன்மையை தேடினேன். வெகு சில படங்களிலேயே அது கிடைத்தது.
இந்தப்படம் பார்ப்பதற்கு முன்வரை, நான் எனது Career குறித்து சொந்த கருத்தாக எந்தவொரு முடிவும் எடுத்ததில்லை... அம்மா டாக்டராக வேண்டும் என்பார்கள், அப்பாவும் சம்மதிப்பார், உறவினர்கள் சிலர் வேறு சில ஐடியாக்களை சொல்வார்கள். நானும் சரி ஆயிட்டாப்போச்சு என்று தலையாட்டுவேன். ஆனால், இந்த படம் பார்த்தபிறகு எப்படியாவது நாமும் ஒரு திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று ஒரு ஆசை வந்தது. பிறகு எப்படி சும்மா இருக்க முடியும்..! நண்பர்களிடம் சில புனைவு கதைகளை கூற ஆரம்பித்தேன்! பாவம், எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ..! ஆனால், 'நல்லாயிருக்கு கதை' என்று உற்சாகப்படுத்தினார்கள்.
நடிகன்
இந்த நேரத்தில் பள்ளி ஆண்டுவிழாவில், ஒரு நாடகம் இயக்க விண்ணப்பத்திருந்தேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை..! வேண்டுமானால் நாடகத்தில் நடி' என்று கேட்டார்கள். சரி என்று ஒப்புக்கொண்டேன். என்ன கதாபாத்திரம் கிடைக்கும், எப்படி நடிக்கலாம், என்று என்னென்னமோ என் எண்ணங்கள். ஆனால், நடிக்க கிடைத்த கதாபாத்திரம் என்ன தெரியுமா, ஒரு பிணத்தை தூக்கிச்செல்லும் நால்வரில் ஒருவன். இங்கும் உயரம்தான் காரணம். மற்ற மூவரும் என் உயரம் என்பதால் எனக்கு இந்த பாத்திரம்தான் கிடைத்தது.
பித்து கம்பெனி
பத்தாவது படிக்கும்போது, பார்த்தசாரதி என்ற இன்னொரு நண்பனும் இதே போல் இயக்குனராக வேண்டும் என்ற பித்துபிடித்து அலைவதாக (அப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள்) கூறி என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார்கள். நானும் அவனும் சேர்ந்து பித்துபிடித்து அலைந்தோம். லாஸ்ட் பெஞ்சில் உட்கார்ந்துக் கொண்டு கதை கதையாக பறிமாறிக்கொண்டோம். எங்கள் இருவரின் ஆர்வம் பள்ளிக்கே தெரிந்தது. ஏதோ, படிப்பில் கோட்டைவிடாமல் இருந்தால் சரி, என்று விட்டுவிட்டார்கள்.
முதல் படப்பூஜை
பத்தாம் வகுப்பு, பப்ளிக் எக்ஸாம் நெருங்கும் சமயம், நானும் பார்த்தசாரதியும்... ஒரு முடிவுக்கு வந்தோம். பப்ளிக் எக்ஸாம் முடிந்ததும், விடுமுறையில் ஒரு படத்தை எடுத்துவிடலாம் என்று... முடிவுசெய்தோம். ஆர்வமிகுதியால் ஏற்ப்பட்ட முடிவுதான். கதை தயார் செய்தோம், ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் கதை, 'இடைக்கண்' என்று பெயர் வைத்தோம், படத்திற்கு, நண்பன் பார்த்தசாரதி வீட்டிலேயே பூஜை போட்டோம். நண்பர்கள் பலரும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஜெயமுருகன் என்று ஒரு நண்பன் தனது அப்பா அட்வர்டைஸிங் துறையில் இருப்பதாகவும், அவரிடமிருந்து நல்ல ஒரு கேமிராவை வாங்கி வருவதாக வாக்களித்தான். நான் கீ-போர்டு வாங்கி கற்றுக்கொண்டிருந்த சமயம் என்பதால், நானே இசையையும் கவனிப்பதாக முடிவானது. தீம் மியூஸிக் ரெடி செய்தோம், அதை ஒரு ரெக்கார்டிங் கடைக்கு போய் கேஸட்டில் பதிவு செய்து நண்பர்களின் பெற்றோர்கள், எங்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் என்று பலருக்கும் போட்டுக்காட்டி பாராட்டுக்களை பெற்றோம்.
பப்ளிக் எக்ஸாம் முடிந்தது...
என்னையும் என் நண்பன் பார்த்தசாரதியையும் தவிர, எங்களுடன் சுற்றிக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் அனைவரும், மிகக்குறைந்த மதிப்பெண் வாங்கி தேறியிருந்தார்கள்.
செம்ம டோஸ்..! எல்லா வீட்டிலிருந்தும் எங்கள் படத்துக்கு கோர்ட் நோட்டீஸ் இல்லாமலே தடை அறிவிக்கப்பட்டது, எப்படியோ நானும் பார்த்தசாரதியும், வீட்டில் டோஸ் வாங்காமல் தப்பித்தோம். ஆனாலும், வீட்டில் எங்கள் கலைக்கனவுக்கு, முன்பு கொடுத்த ஒத்துழைப்பு இல்லாமல் போனது. நானும் என் பெற்றோர்களை சமாதானம் செய்து, 'சரி போனாபோவுது, நான் டாக்டரே ஆயிடுறேன்' (என்னமோ! டாக்டர் சீட்டு சும்மா கொடுக்கிறமாதிரி) என்று அவர்களுக்கு சமாதானம் சொல்லும்விதயாம் கமிட் செய்துகோண்டேன். ஆர்வம் குறைந்ததே தவிர ஆசை குறையவில்லை, +2 தேர்வில், நல்ல மதிப்பெண்தான் ஆனால், வெட்னரி டாக்டர் சீட்டுக்குக்கூட அந்த மார்க் போதவில்லை. என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்துப் பார்க்க, நாளை நாம் எடுக்கப்போகும் படத்துக்கு ஸ்க்ரிப்ட் டைப் செய்யவும், டைட்டில் கிராஃபிக்ஸ் போன்ற கிராஃபிக்ஸ் சமாச்சாரங்களை செய்யவும், போஸ்ட்டர் டிஸைன் செய்யவும் என்று இப்படி பல விஷயங்களுக்கும் சாதகமாக இருப்பது கம்ப்யூட்டர் கல்விதான் என்று தோன்றியதால், BSc. Computer Scienceல் சேர்ந்தேன்.
என் வீடு 'திருநின்றவூர்'இல் (ஆவடிக்கு அருகில்), என் கல்லூரியோ மீஞ்சூரில்(அங்கேதான் சீட் கிடைச்சுது), வீட்டிலிருந்து கல்லூரிக்கு 2 மணி நேரத்துக்குமேல் இரயிலில் பயணம்.
பயணத்தில் பொழுதுபோகவேண்டுமே என்று புத்தகங்களை மூர்மார்க்கெட்டில் வாங்கி படிக்கும் பழக்கம் ஏற்பட்டது, ராஜேஷ்குமார், ப.கோ.பி, இந்திரா சௌந்தர்ராஜன், (சுஜாதா புத்தகங்கள் மட்டும் ஏனோ அப்போது மூர்மார்க்கெட்டில் கிடைக்கவில்லை) என்று புத்தகத்தம் பக்கம் கவனம் திரும்பியது. இதுநாள்வரை மிகவும் சுருங்க சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறோம் என்று எனக்கு இந்த புத்தகங்கள் உணர்த்திக்கொண்டிருந்த காலக்கட்டம். கல்லூரியில் புதிதாய் கிடைத்த நண்பர்களுக்கு கதை சொல்லி(வேற வழி), அவர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தேன். 'மச்சான், நீ பெரிய ஆளா வருவேடா' என்று திருட்டு தம் அடித்துக்கொண்டே என் நண்பன் ஒருவன் சொன்னதும், சிகரெட் புகையில் 'வருவேடா! வருவேடா வருவேடா!' என்று கிராஃபிக்ஸில் தோன்றியபடி அசரீரி ஒலிக்க, அந்தப்புகை கிராஃபிக்சுடன் எனது பதின்ம வயது ஃப்ளாஷ்பேக்-ஐ முடித்துக் கொள்கிறேன்.
இன்றளவும் கலைத்துறையில் கால்பதிக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன்..!
இப்படியாக, என் பதின்ம வயது நினைவுகளில் பெரும்பாலும் என்னை சினிமாவே ஆட்கொள்கிறது. பல்சுவையான நிகழ்வுகளை எதிர்ப்பார்த்து நீங்கள் படிக்க வந்திருந்து உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தால் தயவு செய்து மன்னித்துவிடவும்.
சுவாரஸ்யமான தலைப்பைக் கொண்ட இந்த தொடர்பதிவைத் தொடர இந்த நண்பர்களை அழைக்கிறேன்.
22 comments:
சுவாரசியங்கள் நிறைந்ததுதான் teen age .
நல்லா எழுதிருக்கீங்க
விரைவில் கலைத்துறையில் சாதிக்க
வாழ்த்துக்கள் ஹரீஷ்.
//நண்பனின் காதலி ஒருத்தி திடீரென்று மொட்டை அடித்துவர, அவன் அழுது புலம்பி பிறகு காதலியை மறந்த வேடிக்கையான சம்பவம்,//
ரொம்ப ரசித்தேன் ஹரீஷ்..
உங்க கனவு மெய்ப்பட வேண்டும். நிச்சியம் மெய்ப்படும். வாழ்த்துக்களுடன், அநன்யா
கடந்த கால நினைவுகள் நல்லா இருக்கு ஹரீஸ்...... என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி..... ஆனா ஏற்கனவே இந்த தலைப்பு தொடர்பதில் நான் எழுதிவிட்டேன்.. இன்னும் ஒரு நல்ல தலைப்பில் கூப்பிடுங்க எழுதிடுவோம்....
அப்புறம் உங்களுடைய கலையுலக கனவு நிச்சயம் ஜெயிக்கும்.... அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்....
நன்றி பத்மா, உண்மைதான் நிறைய சுவாரஸ்யங்கள்...
நன்றி சைவகொத்துப்பரோட்டா, தொடர் ஆதரவிற்கும் வாழ்த்துக்கும்...
நன்றி அநன்யா, ரசித்து படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!
நன்றி நாடோடி நண்பரே, உங்களை இன்வைட் பண்ணும்போதே ஒரு டவுட் இருந்தது. நீங்க முன்னாடியே இதை எழுதியிருப்பீங்களோன்னு... சரி, வேறொரு நல்ல தலைப்பில் அழைப்பு விடுக்கிறேன்.
-
DREAMER
அழகான பதின்ம கால பகிர்வு ஹரீஷ்...சுவாரசியம் குறையாத எழுத்து நடை....
கலை துறையில் சிறப்பாய் சாதிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...
வாங்க சீமான்கனி,
படித்து ரசித்து, நான் சாதிக்க வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி!
தங்கள் தலையின் பின் ஒரு ஒளி வட்டம் தெரிகிறது ட்ரீமர். நீங்கள் நிச்சயம் பெரிய இயக்குனராகும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்த்துக்கள். பதின்ம வயதில் அவ்வளவு நல்லவரா நீங்க?
பதின்ம அனுபவங்கள் என்று எழுதிய அநேகரும் அலுக்கவைக்கும் வகையில் காதல் அனுபவங்களையே எழுதித் தீர்த்திருக்க, நீங்கள் அழகாக உங்கள் வருங்காலக் கனவைக் குறித்து விளக்கியிருந்தது அருமை!! நீங்கள் விரும்பும் துறையில் சிறக்க வாழ்த்துக்கள்!!
நீங்கள் நினைத்ததுபோல் படம் இயக்கும்போது, தற்போதைய மசாலாப் படங்கள் போலல்லாமல் ரசனையாக எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்!!
இதெல்லாம் சரியில்ல ஹரீஷ், எந்த சேட்டையும் பண்ணலியா? என்ன பையன் நீங்க?
//இல்லையென்றால் நானும் இன்று ஒரு கராத்தே மாஸ்ட்டராகி, அநியாயங்களை தட்டி கேட்கும் ஒரு ஹீரோவாக இருந்திருப்பேன்//
ஹாஹ்ஹா நீங்களுமாஆஆஆஆ?
சொன்னா நம்பமாட்டீங்க, நானும் முதன் முதல் நண்பர்களோட போய் பார்த்த படம் 'ஜுராஸிக் பார்க்'தான். ஸ்கிரீன்ல டைனோசரை முதல் தடவை பார்க்கும்போது புல்லரிச்சு போனது இன்னும் நினைவிருக்கு!
ஒரே Genreல் மட்டும் மாட்டிக்காதீங்க ஹரீஷ். சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க :)
நன்றி நாய்குட்டி மனசு,
பதின்ம வயதில் 'மட்டும்தான்' நல்லவனா இருந்திருக்கேன்னு நினைக்கிறேன்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஹூஸைனம்மா!
கண்டிப்பா மசாலாப் படங்களைப் எடுக்கும் எண்ணமில்லை... அப்படி எடுக்காததால்தான் என் கனவு நிறைவேற காலதாமதமாகிக்கொண்டிருக்கிறது.
வாங்க ரகு,
சேட்டைகள் கம்மிதான்... ஒரு அழகான பொண்ணைப் பாத்தாக்கூட, 'இவ நாளைக்கு நம்ம படத்துல ஹீரோயினா நடிச்சா நல்லாருக்குமா'ன்னுதான் என் ஃப்ரெண்டு பார்த்தசாரதிகிட்ட கேட்பேன். அவனும் அதே ரீதியலதான் பதில் சொல்லுவான். பிறகு கிடைச்ச சில கேர்ள்ஃப்ரெண்ட்ஸ் இங்கிலிஷ்ல கூச்சப்படாம பேசிப்பழக உதவினாங்க, அவங்ககூடவும் ரொம்பல்லாம் பேச்சு கிடையாது. ஆனா, ஜென்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்ததுக்கப்புறம்தான், நான் படிச்ச ஸ்கூலின் அருமை புரிஞ்சுது...
//ஒரே Genreல் மட்டும் மாட்டிக்காதீங்க//
முடிஞ்சவரைக்கும் வித்தியாசங்கள் காட்ட முயற்சிக்கிறேன். ஒரு வித்தியாசம் காட்டினதுக்கே(ஓர் இரவு) ஒராண்டாக வெயிட்டிங்... இருந்தாலும், அடுத்தடுத்து புதுமுயற்சியாத்தான் கொடுக்கனும்னு என் டீமுக்கே ஒரு பிடிவாதம் இருக்கு. அதனோட Validity இன்னும் எவ்வளவு நாள் தாக்குபிடிக்கும்னு தெரியல..!
Harish ,
I read your story .You always divert your way on U turn .Now try and enter cini field you will get good and bad experience in the field because a big money rotating area
Abirami Fashions,
thanX for your suggestion. I've almost entered the field & yes it is a mixed experience, as you said. ThanX for showing interest... Keep visiting..!
Good.
Best wishes for a bright future in the film world.
ThanX for your wishes, Kasu Shobana..!
-
DREAMER
உங்களுடைய பழைய இடுகை சிலவற்றை படிக்க பாக்கியம் பெற்றேன்.
எதோ புல்லரிக்கும் உணர்வு உள்ளுக்குள்..
மாய மற்றும் யதார்த்த....
வாழ்த்துக்கள் தல..
All the best for your future!!! next padhivu yeppo poduvinga? nan daily vandhu pathutu irukken
நன்றி சிவாஜி சங்கர்,
பழைய இடுகைகளையும் தவிர்க்காமல் படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி
வாங்க Gomy,
தாமதத்திற்கு மன்னிக்கவும், திருப்பதியில் உறவினர் ஒருவரின் கல்யாணத்திற்காக போயிருந்தேன். அதான் ஒண்ணும் எழுதமுடியலை... சீக்கிரமே எழுதுறேன். இப்போதைக்கு ட்ரிப்ல எடுத்த சில ஃபோட்டோஸ்தான் கைவசம் இருக்கு..! கோவிச்சுக்காம் சும்மா பாத்து வையுங்க...
-
DREAMER
நல்லா எழுதி இருக்கீங்க. Thriller மட்டுமில்ல காமெடி கூட நல்லா பண்றீங்க.. எழுத்து நடை நல்லா இருக்குங்க... ஏதோதோ சொல்லி எங்களையும் கொசுவத்தி சுத்த வெச்சுடீங்க.சீக்கரம் சினி பீல்ட்லயும் கலக்க வாழ்த்துக்கள்
வாங்க அப்பாவி தங்கமணி,
எழுத்து நடையையும், காமெடியையும் பாராட்டியமைக்கு நன்றி... என்னது? உங்களுக்கும் கொசுவத்தி சுத்த வச்சிட்டேனா..? சீக்கிரமே உங்கள் வாழ்த்துப்படி வெள்ளித்திரையில் கதை சொல்கிறேன்!
-
DREAMER
அழகான பதின்ம கால பகிர்வு ஹரீஷ்...சுவாரசியம் குறையாத எழுத்து நடை.... கலை துறையில் சிறப்பாய் சாதிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...
Post a Comment