Saturday, May 08, 2010

எனக்கு பிடித்த 10 படங்கள் - [தொடர்பதிவு]


என்னை இந்தத் அருமையான தலைப்புக் கொண்ட தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் ரகு-விற்கு மிக்க நன்றி..!

ரு திரைப்படத்தை திருப்தியாக பார்ப்பது ரசிப்பது என்பது ஒரு கலை...

ஒருவிதமான வாசனை கலந்த ஏசியின் குளிர்ச்சி நிரப்பப்பட்ட ஒரு அரங்கில்... அரையிருட்டில் மிதமான வெளிச்சத்தில் நமக்கென்று காத்திருக்கும் இருக்கையை தேடிப்பிடித்து... சாய்ந்தமர்ந்து... ஒரு 2 நிமிடத்திற்குப் பிறகு, திரையில் வந்தவர்களுக்கு "WELCOME" என்று ஒரு SLIDE போடுவார்களே அதைப் பார்த்துவிட்டு, சில விளம்பரப்படங்களைப் பார்த்துவிட்டு... எப்போது படம் வரும்... என்று ஒருவித எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்து... சென்ஸார் சான்றிதழிலிருந்து தொடங்கி விடாமல் படம் பார்க்க வேண்டும்.

அப்போதுதான் எனக்கு படம் பார்த்த திருப்தி இருக்கும்.

அதுவும் வெகுநாட்களாக காத்திருந்து ரிலீசான பெரிய ஸ்டார்களின் படமோ அல்லது ப்ராமிஸிங் டைரக்டரின் படமோ அல்லது அட்டகாசமான ஆங்கிலப்படமோ என்றால் சொல்லவே வேண்டாம். திரையரங்கிலும் திருவிழாதான்.

இப்படி நான் எல்லாப்படங்களையும் பார்த்ததில்லை என்றாலும், இப்படி பார்க்க வேண்டும் என்றுதான் ஆசை...

தற்போது இதுபோல் காத்திருப்பது, திரு.மணிரத்னம் அவர்களின் 'ராவணன்' படத்திற்கு...
சரி தலைப்புக்கு வருவோம்...

 
நெஞ்சில் ஒர் ஆலயம் (1962)
திரைப்படத்தில் பலரும் க்ளாஸிக் க்ளாஸிக் என்று ஒரு வார்த்தை அடிக்கடி உபயோகிப்பார்களே... அந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புகட்டிய படம் இது... எத்தனை முறை பார்த்தாலும், அப்படியே மெய்மறந்து பார்க்கும் ஒரு உன்னத அனுபவத்தை இந்தபடம் பலமுறை எனக்கு கொடுத்திருக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் GEM...

கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா மூன்று பேரும் போட்டி போட்டுக்கொண்டு கலக்கியிருப்பார்கள்...
 
  • 'என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..'
     
  • 'வருவாயென நான் தனிமையில் நின்றேன்...' (எங்கிருந்தாலும் வாழ்க... பாடலின் சரணம்)
     
  • 'ஒருவர் வாழும் ஆலயம்' (கோரஸ்)

காதலில் கண்ணியம் காட்டிய இந்தத் திரைப்படம்... என்றும் என்றென்றும் என் ஃபேவரைட்...

 
 ஔவையார் (1963)
'10 கமாண்ட்மெண்ட்ஸ்' என்ற ஒரு ஆங்கிலப் படத்தில்,  மோஸஸ்-க்கு கடல் இரண்டாகப் பிளந்து வழிவிடும் காட்சியை பிரம்மிப்பாக எடுத்திருப்பார்கள். அதற்கு இணையாக, நம் நாட்டிலும், ஒரு பிரம்மாண்ட காட்சியாக, இந்தப்படத்தின் கடைசிக் காட்சிகளில் ஔவையார் பாடலுக்கு பூமி வாய்ப்பிளந்து இரண்டாகப் பிளக்கும் காட்சியைப் எடுத்திருப்பார்கள்.

அதுமட்டுமின்றி, பல யானைகள் மிரண்டு ஓடுவதுபோல் ஒரு அற்புதமான போர்களக்காட்சியை படம்பிடிதிருப்பார்கள் பாருங்கள். இன்றும் பார்த்து பார்த்து வியக்கும்படி படமாக்கியிருப்பார்கள். இப்படி பல பிரம்மாண்டங்கள் இருந்தாலும், கூடுதல் அழகாக, தமிழ் கொஞ்சி விளையாடும் இந்தப் படம், எனக்கு பிடித்த ஔவைப் பாட்டியைப் பற்றிய கதை என்பதால் மிகவும் பிடித்துப் போனது.


ஆயிரத்தில் ஒருவன் (1965) 
எம்.ஜி.ஆர் அவர்களின் இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தில் ஆங்கில சரித்திரப்படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலும், அன்புக்கு அடங்கும் தன்மையும், சமயத்தில் சீரிப்பாயும் விதமும், கத்திசண்டையும், அரேபியன் ஸ்டைலில் இசையும், ஒரு சிந்துபாத் கதையை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியது. இன்றும் இந்தப்படம் பார்க்கும் போது குழந்தையாய் மாறி ரசிக்க ஆரம்பித்துவிடுகிறேன்.
 
            • 'அதோ அந்தப் பறவை போல ஆட வேண்டும்...
            • 'ஓடும் மேகங்களே...'
            • 'ஏன் என்ற கேள்வி...'  என்று பாடல்களும் அட்டகாசம்.


திருவிளையாடல் (1965)
இந்தப் படத்தின் ஒலிச்சித்திரத்தை ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டை ஒட்டியிருக்கும் கோவிலில் போட்டு போட்டு, பார்க்கும் முன்பே இந்தப் படத்தின்மீது ஒரு தனி எதிர்ப்பார்ப்பு உண்டாகிவிட்டது. எப்போது முதல்முறை பார்த்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால், முதல்முறை பார்த்தபோது, வசனத்தை உச்சரித்துக்கொண்டே பார்த்தேன். அந்தளவுக்கு வசனங்கள் மனனம் ஆகியிருந்தது. ஆனாலும், அட்டகாசமான கிராஃபிக்ஸ் காட்சிகளில் கடவுளைக் காட்டியவிதம் (அந்தகாலத்திலேயே) அருமை... அதுவும் சிவபெருமானின் இண்ட்ரொடக்ஷன்... வாத்தியங்கள் முழங்க, ஆடல் பாடலுடன் அட்டகாசமான ஆரம்பமாகயிருந்தது பிரமிக்க வைத்தது (இதெல்லாம் ஆடியோ கேசட்ல சொல்லவேயில்லியே என்றிருந்தேன்).

 
அதே கண்கள் (1967)
ஒரு த்ரில்லர் படம் எப்படியிருக்கும் என்று எனக்கு கற்றுத்தந்த படம். தொடர்கொலைகள், சுற்றியிருக்கும் அனைவரும் வில்லன் நடிகர்கள், யார் கொலைகாரன் என்று ஏகத்துக்கும் அட்டகாசப்படுத்தியிருந்தார்கள். இன்று நான் எனது கதைகளுக்கு கடைசியில் எதிர்பாராத ட்விஸ்டுகளை வைப்பதற்கு இந்தப்படமும் ஒரு முக்கியக் காரணம். அந்த 'சடன் டெத் ஸ்டோரி ரைட்டிங் ஸ்டைல்'ஐ (சுஜாதா அவர்கள் சொன்ன Definition) இந்தப் படத்தில் காட்சிப்பாடமாக நான் கற்றுக்கொண்டேன்.

ஈஸ்ட்மென் கலர் இந்தப்படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ் என்றுதான் சொல்லவேண்டும் அந்தளவுக்கு ஒரு ஹிட்ச்காக் பட லுக்-ஐ கொண்டுவந்திருப்பார்கள். அன்று பயந்தும், இன்று வியந்தும் பார்க்கும் படம் இது.

இசையிலும் ராக் ஸ்டைலில், கண்ணுக்கு தெரியாதா... ஓஹோ எத்தனை அழகு... என்று கலக்கியிருப்பார்கள்...

 
காசேதான் கடவுளடா (1972)
எங்கள் பெரியப்பா வீட்டில் அவர்கள் புது கலர்டிவி வாங்கியபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அன்று மதியம், அசைவ சாப்பாட்டை வெளுத்துக்கட்டி முடித்து சாவதானமாக புது டிவி பார்க்க அமர்ந்தபோது, இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. இந்த படம் ப்ளாக் & ஒயிட் படம்தான் என்றாலும் சிரிக்க வைத்து என்னை கட்டிப்போட்டது. அதற்கு முக்கியக் காரணம், நாடகபாணியில் அமைந்த இப்படத்தின் திரைக்கதை. குறிப்பாக தேங்காய் சீனிவாசன் அவர்களின் சென்னை Modulation டைலாக்கும், நடிப்பும் அட்டகாசமான நகைச்சுவையாய் என்னை மிகவும் ஈர்த்தது.

க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க... கலாட்டா அதிகமாகிக்கொண்டே போக, அனைவரும் நகைச்சுவையில் புரட்டி எடுத்தார்கள். வயிறுவலிக்க சிரித்துப்பார்த்த படமான இதுவும் என் ஃபேவரைட்.

 
சலங்கை ஒலி (1983)
இந்தப்படம் நேரடித் தமிழ்ப்படம் இல்லையென்றாலும், இது ஒரு மாற்றுமொழிப்படம் என்று நான் கருதவேயில்லை... அந்தளவுக்கு இந்தப்படம் அமைந்தது சிறப்பு. சமீபத்தில் கணேஷ் என்ற எனது நண்பர் ஒருவர் மிகவும் வற்புறுத்திப் பரிந்துரைக்க, டிவிடி வாங்கிப் பார்த்தேன். இரவு 11.30 மணிக்கு பார்க்க ஆரம்பித்த இந்தபடத்தை, வெளியுலக இரைச்சலின்றி, அமைதியான சூழ்நிலையில் நான் பார்த்தபோதிலும், மனதளவில் சத்தமாக அழுதுக்கொண்டிருந்தேன். எனக்கும் தெரியாமல் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. கன்னப்பிரதேசங்கள் ஈரமாய் நனைந்தபடி பார்த்து முடித்தேன். நான் எந்த்ப படத்தைப் பார்த்தும் இப்படி ஃபீல் ஆனதில்லை.

வறுமைச் சூழலில் வாழும் ஒரு கலைஞனின் வாழ்க்கையும், அவன் அந்தக் கலையின்பால் கொண்டிருக்கும் பக்தி, அதை  அவனுக்குள் புடம்போடப்பட்டு வெளிக்கொணர முடியாமல் தவிக்கும் தவிப்பையும், ஒரே ஒரு மேடைக் கிடைக்காமல், கிடைக்கும்போதும் அரங்கேற முடியாமல், காதலும் கைகூடாமல், ஆனாலும், சோகத்தை வெளிக்காட்டாத ஒருவித நகையுணர்வோடு வாழும் அந்தப் பாத்திரம். வாய்ப்பே இல்லை..! கமல் அவர்கள் மீதும், இயக்குனர் K. விஸ்வநாதன் அவர்கள் மீதும் பெரும் மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

'தகிடததிமி..' என்ற அந்தப் பாடல் இன்றும் எங்காவது கேட்கும்போது, கண்களை மூடிக்கொண்டு, அந்தப் கற்பனைக் கலைஞன் கதாபாத்திரத்துக்கு மரியாதை செலுத்தத் தோன்றுகிறது.

 
 குணா (1991)
இந்தப் படம் வெளியான புதிதில் பார்க்கவே தோன்றவில்லை... ஏனோ தெரியவில்லை..! கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது, ஜூரத்திற்காக வீட்டில் லீவ் போட்டு படுத்திருக்கும்போது போரடிக்கிறதே என்று டிவியில் இந்தப் படத்தைப் பார்த்தேன்... படம் பார்த்து முடித்தும், ஜூரம் போய்விட்டது.  அந்தளவுக்கு மருந்தாய் அமைந்தப் படம். கமல் அவர்கள் தனது கெட்டப்-ஐ முற்றிலுமாக மாற்றி கருப்பாக, அரைபைத்தியம்போல் நடிப்பில் பொளந்துக் கட்டியிருப்பார்.

இன்றும் கொடைக்கானல் போகும்போதெல்லாம், குணாவும், அபிராமியும் ஏதோ ஒரு கிடுகிடு பள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. இந்தப் படத்தைத் தழுவி இதுநாள் வரை பல படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படத்தை பார்க்கும்போதெல்லாம் மணம் கணத்துவிடுகிறது. 'உன்னை நானறிவேன்' என்ற பாடலின் இறுதியில், ரேகா போனபிறகு, தூங்கிக்கொண்டிருக்கும் கமலின் அருகில் வந்து S. வரலட்சுமி இரண்டே வரிகள் பாடுவார்... அந்த இரண்டு வரிகள் டிவிடியில் பல முறை ரீவைண்டு செய்துக் கேட்டிருக்கிறேன். அப்படி ஒரு காந்தக்குரல்...


கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்த படம். முதலில் இந்தப் படத்தின் தலைப்பு... விளம்பரம் வந்த நாளிலிருந்து ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே வந்தது. காலேஜை கட்டடித்துவிட்டு, திருவொற்றியூரில் ஒரு தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆரம்ப காட்சிகளில், நந்திதா தாசும், சக்ரவர்த்தியும் ஒரு குளத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, மனைவி தனக்குப் பிடித்த விஷயங்களை கூறிக்கொண்டே வருவாள். கமலஹாசன், சாமி, பள்ளியில் லவ்லெட்டர் கொடுத்த பையன், பிறகு கணவன் என்று கூறிக்கொண்டேவர, பிறகு..? என்று கணவன் கேட்க, மனைவி மண்ணை எடுத்துக் காட்டுவாள். பயங்கர நெகிழ்ச்சியான காட்சி அது...

அதே போல், ஒரு காட்சியில் கர்ப்பிணியாக இருக்கும் அந்த இலங்கைப்பெண், சாப்பிடும்போது, எங்கோ வெடிக்கும் வெடிகுண்டு சத்தத்தில் வீட்டில் அதிர்வு தெரிய விளக்கு அணைந்து அணைந்து எரியும், அப்போது, அந்த வீட்டிலிருப்பவர்கள் தவிக்கும் தவிப்பு... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பாத்திரப்படைப்பும், அந்த பாத்திரத்திற்கான தேர்வும் மிக நேர்த்தியாக இருக்கும். நந்திதா தாஸ் அந்த இலங்கைப் பெண் வேடத்தில் கனக்கச்சிதமாக பொருந்தியிருப்பார். பிரகாஷ்ராஜ் அவர்களும் சிங்களத்தாராக சப்போர்ட்டிங் கேரக்டரில் மிகவும் அழகாக நடித்திருப்பார். 

'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற மெட்டை ஆங்காங்கே ஒரு பெண் ஹம் செய்வதுபோல் வரும் பின்னனி இசையில் மெய்சிலிர்க்கும்.

எனக்கு இன்றுவரையும் மிகவும் பிடித்த பாடல் இந்தப்படத்தில் இடம்பெறும், 'வெள்ளைப்பூக்கள் உலகம் என்றும் மலரவே...' என்ற பாடல்தான். (இன்றும் எனது காலர்ட்யூன் இதுதான்).

ஹேட்ஸ் ஆஃப் டு மணி சார்...

அன்பே சிவம் (2003)
இந்தப் படம் பல நபர்களின் ஃபேவரைட் வரிசையில் இடம்பெற்றிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை... கார்டூனிஸ்டு & விமர்சகர் 'மதன்' அவர்களின் விகடன் கேள்வி-பதில் பகுதிகளின் ரசிகன் நான். அவரது நடைகளை அவரது புத்தகத்தில் வியந்திருக்கிறேன். அதே போல், அவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதுகிறார் என்று தெரிந்ததும், இந்தப் படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன். ஆவல் வீண் போகவில்லை...

கல்லூரி வகுப்பை கட்டடித்துவிட்டு பாரத் தியேட்டரில் பார்த்தேன்.

இந்தப் படம் ரிலீஸாகும்போது, விஷூவல் ட்ரீட்மெண்ட், அது இது என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார்கள். ஆனால் பார்த்தபிறகு தெரிந்தது, உண்மையில் இந்தப் படம் விஷூவல் ட்ரீட்மெண்ட்தான் என்று.

நான் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, என்னிடம் சிறு சிறு மாற்றங்களை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். அதீத கஷ்டங்கள் வரும் காலக்கட்டங்களில் என்னை நான் நல்லசிவத்தோடு ஒப்பிட்டு நிம்மதியடைவேன். அந்த கதாபாத்திரத்தின் கஷ்டத்தைவிடவா இது பெரிது! என்று தோன்றும், எனக்கருகில் நல்லசிவம் அமர்ந்துக் கொண்டு வாழ்க்கையின் யதார்த்தங்களை போதிப்பதுபோல் தோன்றும்.

னக்கு பிடித்த 10 படங்கள் மட்டுமல்ல, கூட ஒரு இலக்கம் சேர்த்தாலும் மகிழ்ச்சியோடு எழுதுவேன். இருந்தாலும், படிப்பவர்களின் நலன்கருதி 10-த்துடன் நிறுத்திக்கொள்கிறேன்...

சினிமாவை நிஜவாழ்க்கையில் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள்! ஆனால், எனக்குப் பிடித்த இந்தப் படங்களில் வரும் சில கதாபாத்திரங்களை நிஜத்தில் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருப்பதாய் ஒரு சௌகர்யத்துக்காக நம்புவதாய் எழுதியிருக்கிறேன். இதை சில இடங்களில் சுட்டிக்காட்டியிருப்பது அதீதம் என்று தோன்றினால், தயவு செய்து மன்னித்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். என்ன செய்றதுங்க..! சினிமாவின் பாதிப்பு எனக்கு கொஞ்சம் ஓவர் டோஸாகவே இருக்கிறது.

இந்தத் தலைப்பைத் தொடருமாறு, இந்த நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்


Signature

16 comments:

Ananya Mahadevan said...

:O
அதெப்படி ஹரீஷ், எனக்கு பிடிச்ச லிஸ்டை நீங்களே போட்டுட்டு மறுபடியும் போடச்சொன்னா? ஹ்ம்ம்.. ஒரு மூணு படங்கள் தவிர மெஜாரிட்டி எல்லாமே நீங்க கவர் பண்ணியாச்சு.
சரி பார்க்கறேன். தொடர் பதிவுக்கு கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றீஸ்.
சலங்கை ஒலி, அதே கண்கள், அன்பே சிவம் சரியான செலக்‌ஷன் போங்க. :)) இதுல விசேஷம் என்னன்னா, நீங்க மேற்சொன்ன படங்கள் டி.வீ.டி வெச்சுட்டு இருக்கேன். அவ்ளோ இஷ்டம்.
சமீபமா நீங்க சொன்னாப்ல தாரை தாரையா கண்ணீரோடு நான் பார்த்த படம்.. சரி சரி பதிவுலேயே சொல்லிடுறேன்.
மிக்க நன்றீஸ் :))

சீமான்கனி said...

//காசேதான் கடவுளடா,சலங்கை ஒலி, குணா// தொலைக்காச்சியில் எப்போது வந்தாலும் விரும்பி பார்க்கும் படங்கள்...

//கன்னத்தில் முத்தமிட்டால் அன்பே சிவம்//
இந்த படங்கள் எனக்கு ரெம்ப பிடிக்கும் என்ன காரணமோ தெரியல ஒருதடவைகூட முடிவதில்லை....நல்ல தொகுப்பு ஹரீஷ்...என்னையும் அழைத்ததிற்கு நன்றி....

பத்மா said...

நல்ல தொகுப்பு நல்லா எழுதிருக்கீங்க
.
சொல்றாபோல படத்தோட தொடர்பு கொண்ட நினைவுகள் படத்தை இன்னும் நேசிக்க வைக்குது .எனக்கு உங்கள் தெரிவு அத்தனையும் பிடித்திருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தொகுப்பு

DREAMER said...

நன்றி அநன்யா,
அடடே! நீங்களும் அழுதுக்கிட்டுத்தான் பாத்தீங்களா... சரியாப்போச்சு..! உங்க பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்...

நன்றி சீமான்கனி,
நானும் டிவியில் போட்டல், முடிந்தவரை லீவ் போட்டுட்டாவது இந்தப் படங்களைப் பாத்துடுவேன்... உங்க பிடித்த 10 லிஸ்டுக்கு ஆவலுடன் வெயிட்டிங்...

வாங்க பத்மா,
எழுத்தையும் தெரிவுகளையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி..! உண்மைதான், இப்படத்தின் நினைவுகள் பொக்கிஷம்தான்...

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் சார்...

-
DREAMER

நாடோடி said...

ந‌ல்லா தொகுத்திருக்கீங்க‌ ஹ‌ரீஸ்... அனைத்தும் நானும் பார்த்து ர‌சித்த‌ ப‌ட‌ங்க‌ள்... ந‌ம்ம‌ளையும் ஆட்ட‌த்துக்கு கூப்பிட்டு இருக்கீங்க‌..ரெம்ப‌ ந‌ன்றி.

Raghu said...

இதுல‌ இன்னும் நெஞ்சில் ஓர் ஆல‌ய‌மும், ச‌ல‌ங்கை ஒலியும் நான் பார்க்க‌ல‌ ஹ‌ரீஷ். பொதுவா கொஞ்ச‌ம் சோக‌ம் இருக்க‌ற‌ ப‌ட‌ங்க‌ளை விரும்பி பார்ப்ப‌தில்லை.

'க‌ன்ன‌த்தில் முத்த‌மிட்டால்' முத‌ல் நாள் ந‌ண்ப‌ர்க‌ளோடு பார்த்தேன். ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அவ்வ‌ள‌வா பிடிக்க‌ல‌. ஆனா நான் உறைஞ்சு போய் இருந்தேன். முத‌ல்ல‌ விய‌க்க‌ வெச்ச‌து, மூணு குழ‌ந்தைங்க‌ளுக்கு அப்பா அம்மாவா ந‌டிச்ச‌ மாத‌வ‌னும் சிம்ர‌னும். இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ போரை ஒரே ஒரு ச‌ண்டைக்காட்சியிலேயே (ச‌ண்டைக்காட்சி என்ற‌ வார்த்தையே ச‌ரியான்னு தெரிய‌ல‌) அவ்வ‌ள‌வு த‌த்ரூப‌மா பிச்சு உத‌றியிருந்தார் இய‌க்குந‌ர். 'விடை கொடு எங்க‌ள் நாடே' பாட‌ல் பார்க்கும்போது அவ்வ‌ள‌வு வ‌லி. இதோ இதை த‌ட்ட‌ச்சு செய்யும்போதே அந்த‌ காட்சி ம‌ன‌சில் வ‌ந்து மெய்சிலிர்க்குது.

இல‌ங்கையில‌ ந‌ட‌க்க‌ற‌ கூட்ட‌த்தில் மாத‌வ‌ன் பேச‌ ஆர‌ம்பிப்பார் 'உல‌க‌த்திலேயே ரொம்ப‌ கொடுமையான‌ விஷ‌ய‌ம் ஒரு எழுத்தாள‌னை பேச‌ சொல்ற‌துதான்'.....குசும்பு(வ‌ச‌ன‌)க‌ர்த்தா சுஜாதா!

க‌டைசிக் காட்சியில் ந‌ந்திதா தாஸ் பிரிஞ்சு போகும்போது கீர்த்த‌னா 'அம்மா'ன்னு கூப்பிட‌, ர‌ஹ்மானோட‌ பிஜிஎம் உருக்கி எடுத்த‌து என்னை. என்ன‌ சொல்ற‌து...இட்ஸ் எ ம‌ணிர‌த்ன‌ம் மூவி!

DREAMER said...

வாங்க நாடோடி நண்பரே,
தொகுப்பை பாராட்டியதற்கு மிக்க நன்றி! அடுத்து உங்க தொகுப்புக்காக வெயிட்டிங்...

வாங்க ரகு,
ஐயோ, நீங்கவேற கன்னத்தில் முத்தமிட்டால் படத்தைப் பத்தி இவ்வளோ ஞாபகப்படுத்தி உசுப்பேத்திவிட்டுட்டீங்க... இப்ப அந்தப் படத்தை மறுபடியும் பாக்கணும்போல இருக்கு... (நல்லவேளை DVD இருக்கு). மணிரத்னம் மணிரத்னம்தான்...

தவறாம நெஞ்சில் ஓர் ஆலயமும், சலங்கை ஒலியும் பாருங்க்... நானும் உங்களை மாதிரிதான் டிராஜிடி படங்களை அவ்வளவாக விரும்புவதில்லை... ஆனால், இது வேறு டைப்... உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.

-
DREAMER

Anonymous said...

ஹரீஷ்,
உங்க திரைப்பட தெரிவுகள்ல ஔவையார், அதே கண்கள், ஆயிரத்தில் ஒருவன், காசேதான் கடவுளடா தவிர மத்த 6 படங்களும் நம்ம ஃபேவரைட்தான். நல்லா எழுதியிருக்கீங்க! உங்க பயணத்தில் பிடித்தது எல்லாம் நல்லா இருக்குங்க! உங்க மாயக்கரை படிச்சிட்டு மறுமொழியறேன். நன்றி!

Priya said...

உங்க தேர்வுகள் அனைத்தும் அருமை. இதில் எனக்கு மிக மிக பிடித்த படம் கன்னத்தில் முத்தமிட்டால். உங்களை போலவே எனக்கும் படத்தின் தலைப்பு பிடித்திருந்தது. இன்றும் நான் மெய்மறந்து கேட்கும் பாடல் "ஒரு தெய்வம் தந்த பூவே"

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல தேர்வுங்க. அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால், சலங்கை ஒலி மூணும் எனக்கும் கூட பிடித்தவை. என்னையும் தொடர அழைச்சதுக்கு மிக்க நன்றி. ஏற்கனவே தோழி பத்மா இதே தொடர் பதிவுக்கு அழைச்சு இருக்காங்க. ரெண்டு பேருக்குமா சேத்து சீக்கரம் போட்டுடறேன். நன்றி மீண்டும்

DREAMER said...

வாங்க ஹரி,
எனக்குபிடித்த லிஸ்டில் உள்ள சில படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி... மாயக்கரை கதைக்கு உங்கள் மறுமொழிக்காக காத்திருக்கிறேன்...!

வாங்க Priya,
தெரிவுகளை பாராட்டியதற்கு மிக்க நன்றி! இப்போதும், நான் பைக் ஓட்டும்போது, ஹெல்மெட்டுக்குள் சத்தமாக பாடும் பாடல் 'ஒரு தெய்வம் தந்த பூவே..' (நான் மட்டும் கேட்பதால் உலகம் தப்பித்தது) உங்களுக்கும் அந்தப் பாடலும் படமும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..!

வாங்க அப்பாவி தங்கமணி,
பொறுமையாக எனக்குப் பிடித்த படங்களை, ரசித்து படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி! உங்களது 'பிடித்த படங்களின் லிஸ்ட்டு'க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

-
DREAMER

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

தொடர் பதிவு போட்டாச்சு Brother... பாத்துட்டு சொல்லுங்க... அழைச்சதுக்கு மறுபடியும் நன்றி

Ananya Mahadevan said...

Hareesh Bhai,
போட்டாச்சு போட்டாச்சு..
தொடர் பதிவு போட்டாச்சுலே..
http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post_12.html
வந்து பார்த்துட்டு போணி பண்ணிட்டு போங்க.

Anonymous said...

harish ungalirkku piditha padangalil salngai oli anbe sivam intha irandum enakku migavum piditha padam oru deivam thantha poove ndra paatum pidithavaiye

Schillerlvgq said...

வாங்க நாடோடி நண்பரே, தொகுப்பை பாராட்டியதற்கு மிக்க நன்றி! அடுத்து உங்க தொகுப்புக்காக வெயிட்டிங்... வாங்க ரகு, ஐயோ, நீங்கவேற கன்னத்தில் முத்தமிட்டால் படத்தைப் பத்தி இவ்வளோ ஞாபகப்படுத்தி உசுப்பேத்திவிட்டுட்டீங்க... இப்ப அந்தப் படத்தை மறுபடியும் பாக்கணும்போல இருக்கு... (நல்லவேளை DVD இருக்கு). மணிரத்னம் மணிரத்னம்தான்... தவறாம நெஞ்சில் ஓர் ஆலயமும், சலங்கை ஒலியும் பாருங்க்... நானும் உங்களை மாதிரிதான் டிராஜிடி படங்களை அவ்வளவாக விரும்புவதில்லை... ஆனால், இது வேறு டைப்... உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். - DREAMER

Popular Posts