Monday, April 02, 2012

ஒரு பெண்... ஒரு பூச்சி... [சிறுகதை]






ரந்து விரிந்திருந்து அந்த மணற்பரப்பில் திடீரென்று விழுந்த ஒளிக்கீற்றில் இரண்டு நிர்வாண உடல்கள் பொத்தென்று விழுந்தது...


விழுந்தவர்களில் ஒரு ஆண் ஒரு பெண்... இருவரும் அசிங்கமில்லாத முழு நிர்வாணக் கோலத்திலிருந்தனர்... ஒருவரையொருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்... சுற்றிலும் வெற்று மணலும், ஆங்காங்கே முளைத்திருந்த காட்டுச்செடிகள் கரிய நிழலும் தெரிந்துக் கொண்டிருந்தது...


இருவரும் வெவ்வேறு திசையில் ஓடிப்போய் அந்த காட்டுச்செடிக்குப்பின்னால் மறைவாய் நின்றுக் கொண்டனர்.. சுற்றும் முற்றும் பார்த்தனர்... 


அந்த இடம், ஏதோ ஆறு ஓடும் தடம்போல் தோன்றியது...


அந்த ஆண்... அந்த இடத்தை அறிந்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்... பார்வையால் தூரங்களை அளந்தான்... வெகு தொலைவில் ஒரு ஓலைக்குடிசை மட்டும் தெரிந்தது...


அந்த பெண்ணைப் பார்த்து... அந்த குடிசைக்கு போகலாம்... என்று சைகை செய்தான்


இருவரும் அந்த குடிசையை நோக்கி ஓட ஆரம்பித்தனர்...
--------------------


குடிசைக்குள்... ஒரு லாந்தர் விளக்கு மிகவும் குறைவான வெளிச்சத்துடன் எறிந்துக் கொண்டிருந்தது...  தரையில் ஒரு மூதாட்டி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கருகில் ஒரு நாய் உறங்கிக் கொண்டிருந்தது...


ஏதோ உள்ளுணர்வால், திடீரென்று அந்த நாய் விழித்துக் கொண்டது... குடிசையின் பின்வாசலைப் பார்த்து குரைத்தது...


'வௌவ்... வௌவ்...' என்ற பயங்கர குரைத்தலைக் கேட்டு பாட்டி திடுக்கிட்டு கண்விழித்தாள்.


தூக்கம் கலைந்த பாட்டி, 'ஏய் மணி... கம்முனக்கட..' என்று அதட்டியபடி மீண்டும் உறங்க எத்தணித்தாள்


நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருக்கவே... எழுந்து சென்று பின்வாசல் பக்கம் நோட்டம் விட்டாள்... நாய் அவளுக்கு முன்பாய் தாவிச் சென்று வெளியே ஒரே திசையைப் பார்த்து குரைத்தது... 


வெளியே துணி காயவைக்கும் கம்பியைப் பார்த்த அந்த மூதாட்டி  'அடப்பாவிகளா... கனவாணிப்பசங்களா... எம் புடவையை கொண்டு போய்ட்டீங்களா..' என்று புலம்ப ஆரம்பிக்க...


'இல்ல பாட்டி... நான்தான் எடுத்தேன்... மன்னிச்சிக்குங்க' என்று ஒரு இனிமையான பெண்ணின் குரல் கேட்டது.. குரல் வந்த பக்கமாய் பார்த்து நாய் மீண்டும் வெறியுடன் குரைக்க...


'ந்தா.. மணி... சும்மாயிரு...' என்று அந்த பாட்டி குரல் வந்த பக்கமாய் பார்வையை கூர்மையாக்கினாள்  அங்கே ஒரு அழகான இளம்பெண் தனது சேலையை வெறுமனே சுற்றியபடி உடல்மறைத்து இருட்டில் நின்றிரு்நதாள்...


'யாரும்மா நீ..' என்று அந்த இளம்பெண்ணைப் பார்த்து பாட்டி கேட்க... புடவையை  கட்டத்தெரியாமல் வெறுமனே சுற்றியிருந்த அந்த அழகான பெண் அருகில் வந்தாள்...


பாட்டி குழப்பத்துடன் 'இந்நேரத்துல தனியா இங்கென்னம்மா பண்றே..'


'அவ தனியா இல்ல பாட்டி... நானும் கூட இருக்கேன்..' என்றபடி அந்த பெண்ணுக்குப் பின்னால், அவளுடன் வந்த ஆணும், நிர்வாணக்கோலத்தில் தன்னை மறைத்தபடி எட்டிப்பார்த்தான்.


நாய் மீண்டும் குரைத்தது...


பாட்டியின் கண்கள் குழப்பத்தில் விரிந்தது...
-------------------------


குடிசைக்குள் விளக்கு பிரகாசப்படுத்தப்பட்டிருக்க... அந்த ஆணும் பெண்ணும் பழைய சோற்றை குழைத்து பசியாறிக் கொண்டிரு்நதார்கள்... பாட்டி இவர்கள் வெறியுடன் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.


'யாருப்பா நீங்க..?'


'என் பேரு கவின்... இவ மின்மினி...'


'ரெண்டு பேரும் காதலிச்சி வூட்டை வுட்டு ஓடி வந்துட்டீங்களா..?'


'ஆமா.. பாட்டி...' என்று வாயில் பழைய சோற்றுடன் கவின் பதிலளித்தான்...


'ஏன் இப்படி அம்மணக்கட்டையா சுத்திட்டிருக்கீங்க... யாராவது வழிப்பறி பண்ணிட்டாங்களா..?' என்று பாட்டி கேட்க


'இல்ல பாட்டி.. சொன்ன நீங்க நம்பமாட்டீங்க... நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் உசுருக்குசுரா காதலிச்சோம்... ஒரு நாள் ராத்திரி எங்களை வேற்றுகிரகவாசிகள் கடத்திட்டாங்க..'  என்று அதிர்ச்சியுடன் மின்மினி கூறினாள்...


பாட்டி ஏளனச்சிரிப்புடன் 'என்ன..? வேற்றுகிரகவாசிகளா..?' என்றாள். இவர்கள் பேசுவது புரியாமல் நாய் மூவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது...


'ஆமா பாட்டி... நான் சொல்லலை நீங்க நம்பமாட்டீங்கன்னு..?!'


அவளைத் தொடர்ந்து கவின், 'ஒரு வாரம் செவ்வாய் கிரகத்துல வச்சிருந்து என்னென்னமோ சோதனை செஞ்சாங்க... அப்புறம் இன்னிக்கு கொண்டாந்து விட்டுட்டாங்க..'


'ஒரு வாரமா வேற கிரகத்துல இருந்தீங்களா..? அதான் இந்த பழைய சோத்த இப்படி துண்றீங்களா..?அங்க என்ன துண்ணீங்க..?' என்று பாட்டி கேட்க


'ஏதோ நீலக்கலர்ல... பாதி திரவமா கொடுத்தாங்க.. அதை நினைச்சாலே..! உவ்வே..!' என்று மின்மினி கூறும்போதே வாந்தி எடுத்தாள்...


பாட்டி திடுக்கிட்டாள்...


'என்னப்பா... பொண்ணு மசக்கையா..?' என்றவள் கவினைப் பார்க்க...


அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஒரு சின்ன மௌனத்திற்கு பின், 'இருக்கலாம்...' என்றவன் சந்தேகத்துடன் கூறி மீண்டும் சாப்பிடத் துவங்கினான்...


'செவ்வாய் கிரகத்துல ரெண்டு பேரும் கூடுனீங்களா..?'


'கூடச்சொன்னாங்க... 7 நாளும் கூடவெச்சாங்க..! இது என்ன இடம் பாட்டி..?' என்றான்


'செந்தூரம் கிராமம்'


'பக்கத்துல பெரிய ஊர் என்னயிருக்கு.?'


'பூந்தமல்லி...'


'நல்ல வேளை பக்கம்தான்... நாங்க ஆவடி பக்கத்துல சேக்காடுக்கு போகணும்... எங்க வீட்டுல என்ன களேபரமோ தெரியல... 7 நாளா எங்களை காணாம போலீசுக்கு போயிருந்தாலும் போயிருப்பாங்க...'


'இந்நேரத்துல வேண்டாம் கண்ணு... ரெண்டு பேரும் விடிஞ்சதும் கிளம்புங்கய்யா...' என்று கரிசனத்துடன் அந்த பாட்டி கூறியதை கவின் ஏற்றுக் கொண்டான்


'சரி பாட்டி..' என்றவன் மின்மினியைப் பார்க்க, அவளும் சரி என்று நன்றியுடன் தலையசைத்தாள்...


---------------


அடுத்த நாள்...


ஒரு ஃப்ளாட்டில் ரேடியோவில் 'தர்மயுத்தம்' படத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்த்  நடித்த பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது...


'ஒரு தங்க ரதத்தில்... பொன்மஞ்சள் நிலவு... ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு...'


இதை கேட்டுக் கொண்டே, நைட்டி அணிந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது நரைத்த தலைமுடியை கையில் கோதியபடி வீட்டுக் கதவைத் திறந்தாள்... வெளியே நியூஸ் பேப்பரும் பால் பாட்டிலும் இருந்தது... அதை எடுக்க குனிந்து மீண்டும் நிமிரவும் எதிரில் கவினும், மின்மினியும் நின்றிருந்தனர்... 


கவினைக் கண்ட அந்த நடுத்தர வயது பெண்மனிக்கு முகத்தில் ஏகப்பட்ட குழப்ப ரேகைகள் தோன்றியது.. 'நீங்க.. நீ..' என்று அவள் கண்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு புருவம் உயர்த்த... 'கவின்... அண்ணா...' என்று கத்தியே விட்டாள்...


கவினும் குழப்பத்துடன் அவளைப் பார்த்து கண்கள் விரிய... அவள் கண்கள் சொறுகி மயக்கம் வந்து விழப்போனாள். மயங்கிவிழுவதைப் பார்த்து கவினும், மின்மினியும் அவளை கைத்தாங்களாய் பிடித்துக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பயத்துடன் பார்த்துக் கொண்டனர்...


வீட்டிற்குள்ளிருந்து அந்த பெண்ணின்  கணவர்.. ஓடிவந்து.. 'ஹே... ஹேமா என்னாச்சு... டேய்.. யார் நீங்க...' என்று அருகிலிருந்த கவினையும் மின்மினியையும் பார்த்து கேட்க...


'சார் இவ என் சிஸ்டர்தான்... ஹேமலதா..' என்று கவின் கூறினான்...


'என் பொண்டாட்டிக்கு தம்பி யாரும் இல்லியே...' என்று கணவன் குழம்பினான்


'நான் தம்பியில்ல சார்... இவளோட அண்ணன்..' என்றான்...


கணவன் குழப்பத்துடன் தனது மனைவியையும் கவினையும் மாறி மாறி பார்த்தான்... ஆனால் கவின் குழப்பத்துடன் மயங்கி கிடக்கும் பெண்ணைப் பார்த்து 'இவ என் தங்கைதான்... ஆனா, ஏன் இப்படி வயசானமாதிரியிருக்கா..?' என்று கேட்க ஹேமாவின் கணவன் அவளை ஏற இறங்க பார்த்தான்....


------------


சற்று நேரத்தில் அந்த வீட்டினுள் கவின் ஆச்சர்யத்துடன் நியூஸ் பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் மின்மினி அமைதியாகவும், ஹேமாவின் கணவன் குழப்பமாகவும் அமர்ந்திருக்க, ஹேமா சோஃபாவில் கிடத்தப்பட்டிருந்தாள்...


கவின் புலம்பினான் 'இப்போ வருஷம் 2040-ஆ... என்னால நம்பவே முடியல சார்... நானும் மின்மினியும் காணாம போனது 2013ல, நாங்க தொலைஞ்சி போய்  7 நாள்தான் சார் ஆச்சு.. ஆனா...'


'நீங்க சொல்றது ஒண்ணும் எனக்கு புரியல...' என்று அந்த கணவன் இன்னும் கடுப்பாகவே இருந்தான்


'சார்.. நான்தான் சொல்றேனே... நான் ஹேமாவோட அண்ணன்... 7 நாளுக்கு முன்னாடி என் லவ்வரோட செவ்வாய் கிரக வாசிங்களால ரெண்டு பேரும் கடத்தப்பட்டோம்... எ ப்யூர் அப்டக்ஷன்...  7 நாள் எங்களை செவ்வாய் கிரகத்துல வச்சிருந்துட்டு இப்போ கொண்டுவந்து விட்டுட்டாங்க.. இங்க வந்து  பாத்தா... 27வருஷமாச்சுன்னு சொல்றீங்க... ஹவ் கம் சார்..?' என்று கவின் புலம்பினான்


இதற்குள் ஹேமா மெல்ல கண்விழித்தாள்...


'அண்ணா... கவின் அண்ணா..? எப்படின்னா இருக்கே..?' என்று கவினையும் மின்மினியையும் மாறி மாறி பார்த்தபடி அழுகையுடன் கேட்டாள்... கவின் எழுந்து சென்று அவளைக் கட்டிக் கொண்டான்.


'ஹேமா... இப்பவாவது என்னை கண்டுபிடிச்சியே... நான் நல்லாருக்கேம்மா... நீ எப்படி இருக்கே..! அப்பா அம்மா. எங்க?' என்றவன்  கேட்க


'ரெண்டு பேரும்..!' என்று அவள் மேற்கொண்டு சொல்ல முடியாமல் மீண்டும் அழத்துவங்க்கினாள்... அவளது கணவன் தொடர்ந்தான்...


'அவங்க ரெண்டு பேரும் அமர்நாத்துக்கு டூர் போனவங்க... அங்க லேண்ட்ஸ்லைட்ல மாட்டிக்கிட்டு இறந்துட்டாங்க...' என்றான்


'ஓ...' என்று கவினும் சோர்ந்தான்... மின்மினி அவனை தேற்றினாள்


'அழாதேப்பா..' என்று ஆறுதல் கூறினாள்... அவன் அவளைக் கட்டிக்கொண்டான்.


'நீ எப்டீண்ணா அப்படியே இருக்கே..! மின்மினியும் அப்படியே இருக்காங்க... நீங்க ரெண்டு பேரும் திடீர்னு ஓடிப்போனதும் நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா..?'


'நாங்க ஓடிப்போலேமா... எங்களை கடத்திட்டாங்க..?'


'யார்ணா..?'


'செவ்வாய் கிரகத்து ஆளுங்க..'


'என்னண்ணா சொல்றே..?'  என்றாள்... இதற்குள் அந்த அறைக்குள் ஒரு இளம்பெண் நுழைந்தாள்... அனைவரதுஉ கவனமும் அவள் மீது திரும்பியது...


ஹேமா அவளைப் பார்த்ததும் உற்சாகமாக... 'வீணா..?! இதுதான் உன் மாமாடி..! ஃபோட்டோல காட்டுவேனே..! ஞாபகமிருக்கா..? அண்ணா... இது என் பொண்ணுண்னா, வீணா... 25 வயசாகுது...' என்று கூறினாள்...


அவள் கவினை ஆழமாய் பார்த்தாள்... அவனுக்கு 22 வயதுதான்...


'இவர் என் மாமாவா... லவ் பண்ணி ஓடிப்போனதா சொல்லுவியே இவர்தானா அது..? யூ ஆர் சோ யங் டு பீ மை மாமா...  இவங்கதான் உங்க கேர்ள்ஃப்ரெண்டா... சோ க்யூட் அண்ட் யங்... ஹாய்..' என்றாள்


மின்மினியும் பதிலுக்கு  'ஹாய்' என்றாள்...


அவள் மேற்கொண்டு அங்கு நிற்காமல், 'ஐம் கெட்டிங் லேட் ஃபார் மை காலேஜ்... சீ யூ கைஸ் இன் தி ஈவ்னிங்... வந்ததும் உங்க லவ் ஸ்டோரிய நிச்சயம் எங்கிட்ட சொல்லனும் மாமா... பாய் ஆல்... பாய் மா' என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வீல்-ஐ எடுத்து நான்காய் திறக்க அது சைக்கிளாகிப் போனது... அதை தோளில் தூக்கிக் கொண்டு ஏதோ ஆங்கிலப்பாடலை முணகிக் கொண்டே படியிறங்கினாள். 


ஹேமா வியந்தாள்... இது என்ன குழப்பம்... தன் பெண்ணுக்கு தன் அண்ணனைவிட மூன்றுவயது அதிகம்... அடக்கடவுளே..! எப்படி மாறியது இந்த கணக்கு என்று பயந்தாள்...


உடனே வீணா மீண்டும் உள்ளே எட்டிப்பார்த்து 'ம்மா.. சொல்ல மறந்துட்டேன்... கரண்ட் கார்டு ஃரேடியோவுக்கு மேல வச்சிருக்கேன்... அப்பா இன்னிக்கு மறக்காம ரேஷனுக்கு போய் ரீசார்ஜ் பண்ணிட்டு வந்துருங்க...'என்று மீண்டும் அங்கிருந்து மறைந்தாள்


மின்மினி குழப்பத்துடன் அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள். கவின் பேப்பரில் 'கன்னித்தீவு' படித்துக் கொண்டிரு்நதான்...


'1. சிந்துபாத்  பாறை வடிவிலிருந்த அந்த அரக்கனை அடையாளம் கண்டுகொண்டான்... 2. அருகில் சென்று அந்த பாறையை மலையிலிருந்து உருட்டி கீழேயிருக்கும் கடலில் தள்ளிவிட்டான்... 3. பாறை கீழேவிழுந்து வெடித்துச் சிதறியது... 4. 'ஹா..ஹ்..ஹா... என்னை ஏமாற்ற பார்த்தாயா.. என்று சிந்துபாத் வீரத்தோடு சிரித்தான் (தொடரும்)' என்றது கன்னித்தீவு...


ஹேமா கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் 'கொஞ்சம் இருங்க நான் குடிக்க காஃபி கொண்டு வர்றேன்...' என்று எழுந்தாள்


கவின் அவளிடம், 'ஹேமா... டிவி போடேன்...'


'இல்லண்ணா... டிவியெல்லாம் அவுட் ஆஃப் டேட், ஸோலார் ரேடியோதான்... இப்போ எல்லாமே சோலார் சோர்ஸ்தான்... பவர் ரொம்ப ரேஷன்... ஃபேண் போடுலாம்னு பாத்தா இப்போபாத்து கரண்ட் தீந்துடுச்சு... இன்னிக்கி ரேஷனுக்கு போய் கரண்ட் கார்ட்-ஐ ரீசார்ஜ் பண்ணாத்தான் வீட்டுல ஃபேன்கூட சுத்தும்... என்னங்க.. வீணா சொன்னமாதிரி'


'ஆங்.. ஆங்.. போறேன் போறேன்...' என்று அவள் கணவன் புரிந்துக் கொண்டு பதிலளித்தான்.


'என்னது கரண்ட்டு ரேஷன்ல வாங்கணுமா..?' என்று மின்மினி கேட்டாள்


இதுவரை அமைதியாயிருந்த ஹேமாவின் கணவன் 'ஆமா மச்சான்... ஒரு வீட்டுக்கு மாசத்துக்கு 30 மணி நேரம்தான் கரண்ட்... எல்லாம் ரேஷன்தான்... எப்பபெப்போ வேணுமோ அப்பப்போ கரண்ட் கார்டு ஸ்வைப் பண்ணி யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்... இருங்க உங்க ரெண்டு பேருக்கும் நல்ல ட்ரெஸ் எடுத்துட்டு வர்றேன்...' என்று ஹேமாவின் கணவரும் அங்கிருந்து எழுந்து சென்றார்... கவினும் மின்மினியும் ஒருவரையொருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்...


-----------------


அன்று மாலை வீணாவும், கவினும், மின்மினியும், அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்றிருந்தனர்... சுற்றித்தெரிந்த  அத்தனை கட்டிடங்களும் உயரமான கோபுரங்களுமென்று கொஞ்சம் கூட சீரில்லாத குப்பைக்களங்கள் போலிருந்தது... ஒரே நல்ல விஷயம்... எல்லா மாடியிலும் கண்ணாடிக்கூண்டு போன்று ஒரு சிறு பகுதியில் எல்லோரும் செடிகளை வளர்த்து ஒரு குட்டிப்பூங்கா போன்ற அமைப்பு சீராய் அமைந்திருந்தது... ஆனாலும், சுற்றுச்சூழலின் அசுத்த தன்மை, ஒருவித மாசுப்படிந்த கலரை சென்னை நகரத்துக்கு கொடுத்திருந்தது... இதனால் அந்த நகரம் மொத்தமாய் பார்க்க ஒரு அழுக்கான கார்ப்பரேட் சேரி போல காட்சியளித்தது...


வீணா தனது பெற்றோர்களின் கல்யாண ஆல்பத்திலிருந்து தனது பெர்சனல் ஆல்பம் வரைக்கும் கவினுக்கும், மின்மினிக்கும் காட்டிக்கொண்டிருந்தாள்...


கவின் ஆவலாக அந்த ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான்... மூவரும் சிரித்தபடி அந்த ஆல்பத்தை முழுவதுமாக பார்த்து முடித்திருந்தனர்...


வீணா மின்மினியைப் பார்த்து, 'என் ட்ரெஸ்ல என்னைவிட நீங்கதான் ரொம்ப அழகாயிருக்கீங்க மினி... உங்களை மினின்னு கூப்பிடலாம்லா..?' என்றாள்... பதிலுக்கு மின்மினி ஒரு சிரிப்பை உதிர்த்தாள்... 


வீணா மீண்டும் கவினிடம் திரும்பி 'என்ன மாமா, இவங்க இப்படி வெட்கப்படுறாங்க... இப்படி பேசாமலே இருந்தும் எப்படி உங்களை கவுத்தாங்க..?'


'ஃபேஸ்புலதான்..!!! வீட்டுக்கு பக்கத்துலியே இருந்தாளும் இவளை நேர்ல பாத்து பேசுனதைவிட, ஃபேஸ்புக்லதான அடிக்கடி பாத்து Chat பண்ணுவோம்... இவளோட ஃபோட்டோஸை மணிக்கணக்கா உத்துப் பாத்துட்டிருப்பேன்' என்றான் கவின்


'ஃபேஸ்புக்கா... யூ மீன் தட் ஓல்டு சோஷியல் நெட்வெர்க் சைட்..?'


'ஃபேஸ்புக் ஓல்டா.. இப்போ இல்லியா..?' என்றாள் மின்மினி


'உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்னா, ஃபேஸ்புக்லாம் இப்போ சுதேசமித்திரன் மாதிரி அதரப்பழசு...' என்றாள்


'ஓ இப்போ மொபைலாவது இருக்கா இல்லியா..?' என்று மின்மினி ஆச்சர்யமாக கேட்டாள்....


'யூ மீன் கைல தனியா ஒரு பீஸை வச்சுக்கிடு டயல் பண்ணி பேசுவீங்களே அதுவா..? நோ... வே..!'


'அப்போ நீ எப்படி பேசுவே..' என்று கவின் கேட்டான்.


'வெயிட்...' என்று நிமிர்ந்தவள்... 'ஒமேகா... வேக் அப்' என்றதும் தனது கழுத்தில் மாட்டியிருந்த டாலர் சமாச்சாரத்திலிருந்து ஒரு ஒளிப்பிழம்பு அவளுக்கு எதிரில் காற்றில் ப்ரொஜெக்ட் ஆகி திரைபோல் காட்டியது...


'கால் ரூடி...' என்றாள்.  தன் கழுத்துக்கெதிரில் இருந்த திரையில் இரண்டு மூன்று பெயர்கள் வந்து நின்றது... ஜான் ரூடி, ரூட்யார்ட் கிப்ளிங்... என்று திரை காட்டிஇயது... 'நோ.. நோ..  ரூடி அலியாஸ் ருத்ரமூர்த்தி' என்றாள்


உடனே மறுமுனையில் ரூடி என்ற பெயருக்கு சற்றும் பொறுந்தாத ஒரு இளம் வழுக்கு மண்டையன் பேசினான்


'ஹே வீணா... வணக்கம்' என்றான்


'வணக்கம் ரூடி... என்னடா பண்றே..?'


'இன்னிக்கு என் சிறுகதை ரேடியோல வருது...  கேட்கிறதுக்காக காத்துட்டிருக்கேன்...'


'நல்ல வேளை ஞாபகப்படுத்தினே..!'


'நீயும் கேக்கப்போறியா..?'


'இல்ல... உன் கதை வருதுன்னு சொன்னதால ரேடியோ கிட்டயே போவமாட்டேன்...'


'ஹே.. கமான் வீணா... அவ்ளோ ஒண்ணும் மோசமா இருக்காது..'


'ஓகே.. வில் ட்ரை... நன்றி வணக்கம்..' என்று அவன் திரையிலிருந்து மறைந்ததும் 'ஒமேகா  ஸ்லீப்' என்றாள்... உடனே திரை மறைந்து, மீண்டும் அவள் கழுத்தில் டாலர் மட்டும் தொங்கிக்கொண்டிருந்தது...


கவினும் மின்மினியும் ஏதோ மேஜிக் பார்த்தவர்கள் போல ஒருவரை ஒருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர்...


'ஓகே... இப்போ சொல்லு கவின் மாமா... உங்க லவ் ஸ்டோரி என்ன..?' என்று வீணா இருவர் பக்கமாய் திரும்பி கேட்டாள்
----------------------


அதே நேரம்... அவர்கள் வீட்டுக்குள் பெட்ரூமில் ஜன்னலோரம் அமைந்திருந்த இரட்டை நாற்காலியில் ஹேமாவும் அவளது கணவனும் அமர்ந்துக் கொண்டிருக்க... ஹேமா தன் கணவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்...


'இவங்க ரெண்டு பேரும் தொலைஞ்சி போனது 2013ல, அப்போ மலிவு மின்சாரத்துக்கு பற்றாக்குறை வந்து, தினமும் விட்டு விட்டு 15 மணி நேரம் பவர் கட் பண்ணுவாங்களே நினைவிருக்கா...'


'ஆமா தெரியும் எங்க ஏரியாவுலயும் பண்ணுவாங்களே...  போராட்டமெல்லாம் நடந்தது. ஆனா அப்போக்கூட ஒரு நாளைக்கு தாராளமா 10 மணி நேரம் கரண்ட் இருந்த்து... இப்போதான்... !' என்று கணவன் அவளை ஆமோதித்தான்


'ஹ்ம்... அப்போ இங்க எல்லாமே தனித்தனி வீடுங்களா இருந்தது... எல்லாரும் ஈவ்னிங் கரண்ட் ஆஃப் ஆனதும்... மாடியில வந்து ஒண்ணுக்கூடுவோம்...'
---------------------


மாடியில் இதே விஷயத்தை மின்மினியும் வீணாவிடம் விளக்கிக் கொண்டிருந்தாள்...


'எல்லாரும் மாடியில ஜாலியா பேசுவோம்... பாட்டுக்கு பாட்டு விளையாடுவோம்... ராத்திரி நிலாச்சோறு சாப்பிடுவோம்.. இப்படி எங்க ஏரியாவே கரண்ட் கட்-ஐ தனக்கு சாதகமா மாத்திக்கிட்டு அனுபவிச்சிட்டிருந்தோம்...'


கவினும் தொடர்ந்தான், 'எனக்கு பக்கத்து வீட்டுல இருந்த இவ மேல லவ் ஆயிடுச்சு... எனக்கு இவகிட்ட ரொம்ப பிடிச்சதே இவ பேருதான்... மின்மினி... கரண்ட் கட் ஆனாலும், இருட்டுல அவ்வளவு பிரகாசமா தெரியுற முகம்.. ஆப்தான பேரு... இவளுக்கு பேரு வச்சவங்க செம்ம கில்லாடி... எப்படியோ இவளுக்கும் என்னை பிடிச்சு போச்சு...'


'ஓ... சோ ரொமேண்டிக் மாமா' என்று வீணா ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள்...
------------------


அறையில் ஹேமா தன் கணவனிடம் தொடர்ந்தாள்....


'தினமும் கரண்ட் கட்-ஆகி மறுபடியும் கரண்ட் வந்ததும் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்குள்ள போயிடுவாங்க... ஆனா இவங்க ரெண்டு பேரு மட்டும் மாடியிலியே இருந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருப்பாங்க... எங்க வீடுலியே இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்... வீட்ல சொல்லிடலாம்னு நான் அண்ணாகிட்ட கேட்டப்போ... இன்னும் கொஞ்ச நாளாகட்டும்னு தட்டிக்கழிச்சுக்கிட்டு வந்தான்... ஆனா... ஒருநாள் எங்கப்பாவுக்கு விஷயம் தெரியவந்துடுச்சு... ரெண்டு குடும்பத்துக்கும் பயங்கர சண்டை...'
------------------


அதே நேரம் மாடியில்...


மின்மினி 'ஆஆஆ' என்று அலறினாள்...


கவின் திடுக்கிட்டான்... 'என்ன ஆச்சு மின்மினி..?'


ஒரு கரப்பான்பூச்சி மின்மினியன் உடையில் ஏறிக்கொண்டிருந்தது...


கவின் அந்த கரப்பானை உற்றுப்பார்த்து, அதன் மீசையைப் பிடித்து எடுத்தான்


'எப்படியோ தப்பிச்சிடுச்சு..! ஊரு என்னதான் மாறினாலும், கன்னித்தீவும், கரப்பான்பூச்சியும் அழியவே மாட்டேங்குதுல்ல...' என்று கவின் சிரித்தபடி கூற... வீணாவும் இதை ரசித்தாள்...


--------------------


அறையில் ஹேமா தொடர்ந்தாள்...


'ஒரு நாள் ராத்திரி... எல்லாரும் மாடியில இருக்கும்போது, ஒரு பெரிய வெளிச்சம் மின்னல் மாதிரி ஆனா நீலக்கலர்ல வானத்துல வந்துப்போச்சு... எல்லாரும் ஆச்சரியமா அதையே பாத்துட்டு இருந்தாங்க... அன்னிக்கு மட்டும்... கரண்ட் வழக்கத்தைவிட 3 மணி நேரம் எக்ஸ்ட்ரா கட் ஆச்சு... வழக்கம்போல, கரண்ட் வந்ததும் எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்குள்ள போயிட்டாங்க... ஆனா, எங்கண்ணாவும்... மின்மினியும் வரவேயில்ல... ரொம்ப லேட்டானதால, அப்பா ரொம்ப சத்தம் போட்டார்... மாடியில போய் கூட்டிட்டு வர்றேன்னு மேல போனார்... கையும் களவுமா மாட்டிக்கப்போறாருன்னு நான் ரொம்ப பயந்தேன்... ஆனா... ஆனா... மேல அண்ணாவைக் காணோம்... மின்மினியையும் காணோம்னு அவங்க மாடியில அவங்கப்பா அம்மாவும் தேடிட்டு இருந்தாங்க... பெரிய பிரச்சினையாச்சு... ரெண்டு பேரும் ஓடிப்போயிட்டாங்கன்னு போலீஸ்கிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்து, அது இதுன்னு ஏகப்பட்ட கலவரமாச்சு... அவமானம் தாங்க முடியாம மின்மினியோட  ஃபேமிலி காலி பண்ணிக்கிட்டு இந்த ஏரியாவை விட்டே போயிட்டாங்க...' என்று நடந்த விஷயத்தை கூறி முடித்தாள்


ஹேமாவின் கணவன் தொடர்ந்தான், 'ஆனா, அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போகலையில்லியா... செவ்வாய் கிரகத்துக்காரங்க வந்து கடத்திட்டு போயிருக்காங்கன்னு இவங்க சொல்றாங்க... இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கருதுன்னே தெரியல ஹேமா...' என்றான்


'தெரியலீங்க... எப்படியோ... எங்கண்ணா திரும்பி வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... அவன் வயசு அப்படியே இருந்தா என்ன... எனக்கு எங்கண்ணா அண்ணாதான்... அவனுக்கு ரொம்ப பிடிச்ச மாங்காய் சாம்பாரும்... மட்டன் வறுவலும் செஞ்சி வச்சிருக்கேன்... இருங்க கூட்டிட்டு வர்றேன்...' என்றுகூறிவிட்டு எழுந்தாள்... சோலார் பேணலில் இயங்கும் லிஃப்டில் ஏறினாள்... 34ஆவது நம்பர் பட்டனை அழுத்தி லிஃப்டுக்குள் காத்திருந்தாள்... அறை திறந்தது... வெளியேறி மீண்டும் சில படிகளேறி மொட்டை மாடிக்கு வந்தடைந்தாள்...


'அண்ணா..' என்று சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள்...


மாடி காலியாக இருந்தது...


'வீணா..?' என்று மீண்டும் சத்தம் போட்டாள்... யாரும் இல்லை...


'இங்கேதானே பேசிட்டிருக்கேன்னு சொன்னா..? எங்கே போனாங்க..?' என்று குழம்பியபடியே... திரும்பி பார்த்துக் கொண்டிருக்க... திடீரென்று ஒரு மின்னல் வெளிச்சம் போல நீலக்கலரில் ஊரெங்கும் பரவி அடங்கியது...


ஹேமாவிற்க்கு வயிற்றுக்குள் ஏதோ புளியைக் கரைத்தது போலிருந்தது... அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள்... தூரத்தில் ஒரு நட்சத்திரம் மட்டும் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதுபோல் தெரிந்தது... பயத்தில் மயங்கி விழுந்தாள்...
----------------


வீணா மெல்ல கண் திறந்தாள்... அவள் ஏதோ ஒரு விசேஷ ராட்டினம் போன்ற ஒரு கூண்டில் இருப்பதை உணர்ந்தாள்.... இது என்ன இடம் என்று குழப்பத்துடன் சுற்றிலும் பார்க்க...


அவளுக்கு எதிரே ஒரு விநோத உருவம் நின்றிருந்தது.. அந்த உருவத்துக்கு அருகில் கவினும், மின்மினியும் புன்னகையுடன் நின்றிருந்தனர்... ஒரு சின்ன வித்தியாசம் அவர்களது கண்கள் இப்போது முழுவதுமாய் கருப்பு நிறத்தில் இருந்தது... கண்ணிமை மேலும் கீழும் என்றில்லாமல் இடமும் வலமுமாய் அடித்துக் கொண்டது... அந்த உருவம் இவர்களிடம் ஏதோ ஒரு விநோத குரலில் புரியாத பாஷையில் பேசிக்கொண்டிருந்தது... 


அந்த உரையாடலின் தமிழாக்கம்


'உங்களை பூமிவாசிகள் சந்தேகிக்கவில்லையே..?'


'இல்லை... எங்களை நம்பிவிட்டார்கள்... மேலும், நாங்கள் கடத்தபட்டது செவ்வாய் கிரகத்து மக்களால்தான் என்றும் அவர்களை நம்பவைத்துவிட்டோம்...'


'நல்லது அவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு சென்று முழுமையாக தேடவே பல வருடங்களாகும்... இதில் சூரியகுடும்பத்தை தாண்டி வசிக்கும் நம்மை அவர்கள் அண்டுவதற்கு நிச்சயம் பல நூற்றாண்டுகளாகும்..' என்ற அந்த விநோத உருவம் வீணாவை உற்றுப் பார்தது... 'இவளைப் கடத்துவதில் சிரமமேதுமில்லையே..?' என்று கேட்டது...


'இவள் தானாகவே எங்களிடம் தனியாக வந்து மாட்டிக் கொண்டாள்... ஆனால், இந்த பூச்சியைப் பிடிக்கத்தான் பெரும்பாடு படவேண்டியிருந்தது...' என்று கவின் வடிவிலிருந்த அ(து)வன்  தனது பாக்கெட்டிலிருந்த கரப்பான் பூச்சியை எடுத்துக் காட்டினான்...


அந்த விநோத உருவம் ஆர்வமாக கரப்பான்பூச்சியை பார்வையிட்டது... 'பல ஆண்டுகளாய் பூமியில் வாழும் உயிரினம்... இதுதான்... ஆஹா.. ஒரு மனிதப்பெண்... ஒரு பூச்சி... நாம் நினைத்தது கிடைத்துவிட்டது... இனி நம் கிரகம் சுபிட்சமடையும்' என்று சிரிக்கத் தெரியாமல் ஒரு விநோத சப்தமிட்டது..!!!


- நிறைவு -


Signature

11 comments:

Ashoke said...

Good one :)

DREAMER said...

Thanks Ashoke

swamirajan said...

Hai Hareesh, Nice One... 2040 layum "சிந்துபாத்" mudiyatha :)

Raghu said...

வாவ்! செம ப்ளோ ஹரிஷ்...அங்கங்கே கொஞ்சம் சுஜாதா'க்கம் :)

அடுத்து என்ன அடுத்து என்னங்கற டெம்போவை செமையா பண்ணியிருக்கீங்க. க்ளைமாக்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் க்ரிப் இருந்திருக்கலாம். மத்தபடி கதை அட்டகாசம்....இதை வைத்து ஒரு தொடர்கதை கூட முயற்சிக்கலாம் ஹரிஷ்..

DREAMER said...

வணக்கம் Sawme,
சிந்துபாத் கதையை ஒரு ஏலியன் படித்துப் பார்த்து பிரமிக்கும் அளவிற்கு அதன் தொடர்ச்சி இருந்தால் எப்படியிருக்கும் என்ற ஒரு ஹாஸ்யம்தான்...

DREAMER said...

வணக்கம் ரகு,
சுஜாத்தாக்கம் இல்லாமல் இப்படி ஒரு கதையை யோசிச்சிக்கூட பாக்க முடியுமா... நம்மூரு Arthur Clarke இல்லையா அவர்... இக்கதையை சிறுகதையா எழுதுறதுக்கே கிட்டத்தட்ட ஒரு வாரம் பைத்தியம் பிடிச்ச மாதிரி அலைஞ்சிட்டிருந்தேன்... தொடர்கதைன்னா ரொம்ப கஷ்டம்தான்... ஆனா நிச்சயம் நல்லா வந்திருக்கும்... (ஒரு குட்டித் தகவல்... வேற ஒரு தொடர்கதை ரெடியாயிட்டிருக்கு...)

Unknown said...

பெயர் தேர்வு அருமை.... கவின், மின்மினி... super.... கலக்குங்க......

DREAMER said...

நன்றி நந்தா...!

செல்வா said...

அட்டகாசமான கற்பனைங்க. ரசித்துப் படித்தேன். அடுத்து என்ன என்னனு ஒரே மூச்சுல படிக்க வச்சுட்டீங்க. கலக்கல்ஸ் :)))))

DREAMER said...

வணக்கம் செல்வக்குமார்,
ரசித்து படித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..!

harshithadolly said...

kathai arumai ariviyal sammanthapattathu iruppinum ungal karpanaithiranirku nigar neengale hareesh

Popular Posts