மேஸ் கேம் (வழி கண்டுபிடிக்கும் புதிர்ப்போட்டி) விளையாடியிருக்கிறீர்களா..?
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்... முயல் ஒரு மேல் மூலையில் இருக்கும்... கீழ்மூலையில் கேரட் துண்டு ஒன்று இருக்கும்... பசியோடிருக்கும் முயலுக்கு கேரட் துண்டை கண்டுபிடிக்க உதவுங்கள் என்று வினவப்பட்டு, இருவருக்குமிடையே குறுக்கும் நெடுக்குமாய் ஏக குழப்பத்தில் கோடுகள் இருக்கும்... கோட்டை வரைந்து பார்க்கும்போது சுற்றி சுற்றி எங்கோ போய் எங்கோ வந்து கடைசியில் மூச்சிரக்க முயல் கேரட் சாப்பிடும்...
(உதாரணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்)
பிரபல எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங்-ன் நாவலைத் தழுவி 'தி ஷைனிங்' என்ற மிகச்சிறந்த த்ரில்லர் படம் ஒன்று வந்தது (டைரக்ட் : ஸ்டான்லி கூப்ரிக்). அதில் க்ளைமேக்ஸ் காட்சியில் கோடாரியுடன் துரத்தும் வில்லனிடமிருந்து உயிருடன் தப்பிக்க ஒரு தாயும் மகனும் ஒரு பூங்கா போன்ற அமைப்புக்குள் ஓடுவார்கள். அது ஒரு மேஸ் போன்ற அமைப்புடைய பூங்கா... ஓடும்போது முட்டுச்சந்து இருந்தால் திரும்பி வரும் வழியில் கொலைகாரனிடம் மாட்டிக்கொள்ளும் அபாயம் கொண்ட மேஸ் பூங்கா வடிவமைப்பு அது. அதைப் பார்க்கும்போது நமக்குள் இப்படி உண்மையிலேயே ஒரு மேஸ் அமைப்பில் மாட்டிக் கொண்டால் நாம் என்னவாவது என்ற ஒரு கிலி ஏற்படும்... அந்த கிலி இப்போது பட்டப்பகலில் உண்மையாகியுள்ளது. சென்னை மவுண்ட் ரோட்டில் நுழைந்து பாருங்கள் எங்கு போய் எங்கே வெளியே வரமுடியும் என்று தெரியாமல் நீங்கள் த்ரில்லாய் திணறுவது கியாரண்டி...
புதிதாய் மாற்றியமைக்கப்பட்டுள்ள பாதை இதுதான்...
இதற்கும் மேலே குறிப்பிட்டுள்ள
மேஸ் கேமிற்கும் வித்தியாசம்
மிகக்குறைவுதான் இல்லையா..?
இரண்டு வாரத்துக்கு முன்பு, ஒரு ரேடியோ பேட்டிக்காக எங்கள் குழுவுடன் நடிக நண்பர் பாஸ்கியும் அழைக்கப்பட்டிருந்தார். அவரை பிக்-அப் செய்வதற்காக அவர் பணிபுரியும் ஐ.ஓ.பி பேங்க்-ற்கு (Mighty மவுண்ட் ரோடு கிளை) சென்றுக் கொண்டிருந்தோம். ஃபோனில் பேசும்போது அவர், '1.30 மணிக்கு நான் ரெடியா இருக்குறேன். நீங்க என்ன பண்ணுங்க..! பெங்களூர் போயிட்டு அப்படியே மவுண்ட் ரோடு வந்துருங்க... அதுதான் ஷாட் ரூட்' என்றார்.. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... இவர் ஏதோ விளையாடுகிறார் என்று அவரை பிக்-அப் செய்ய வழக்கமான வழியில் வந்து மவுண்ட் ரோட் நுழைய சென்றோம். அன்று காலைதான் மவுண்ட் ரோடு வழியெங்கும் விழிபிதுங்குவதுபோல் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
அங்குசுற்றி... இங்குசுற்றி... ஒரு வழியாக அவர் ஆஃபீஸ் வாசலையடை அரை மணி நேரம் லேட்டானது... சாரி சொன்னதுக்கு... 'சாரியெல்லாம் எதுக்கு சார்..? நீங்க பேங்களூர் ரூட் வழியா வரலியா..!?' என்று சிரித்துக் கொண்டே காரில் ஏறினார். அப்போதுதான் அவர் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்தது.
மெட்ரோ ரயிலெல்லாம் ஓகேதான்... பெட்ரோல் விற்கும் விலையில், அனைவரும் லைசன்ஸ் டெஸ்ட்டின் போது எட்டுப்போட்டு காட்டியது போல் சுற்றிக்கொண்டிருப்பது பார்க்க பாவமாய்த்தான் இருக்கிறது. இந்த புதுக்குழப்பங்களால், ஆம்புலன்ஸ் ஒன்று டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு கடக்க சிரமப்படுவதை கண்ணால் பார்த்தேன்.
ஆம்புலன்ஸ் எதிரில் இருக்கும் ஆஸ்பத்திரியை கண்ணில் மட்டுமே பார்த்துவிட்டு ஒன்வேயில் எங்கோ சுற்றிவிட்டு பேஷண்டை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் என்னவாவது..? கொடுமைதான். டிராஃபிக் போலீசையும் குற்றம் கூறுவதற்கில்லை... கத்தி கத்தி டிராஃபிக் க்ளியர் செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். பூந்தமல்லி ஹைரோடில் சில வழிகள் இந்நேரம் முதல் இந்நேரம் வரை என்று போர்டு மாட்டி வைக்கப்பட்டுள்ளது... ஏக குழப்பம்.
பயணத்தின்போது 'எங்கே செல்லும் இந்த பாதை..? யாரோ யாரோ அறிவாரோ' என்று வண்டி ஓட்டுபவர்கள் ஏர்வாடி எக்ஸ்பரஷன் கொடுப்பதை பார்க்க முடிகிறது....
7 comments:
வருங்காலத்தில் வரும் வசதிக்காக இப்போ சில சங்கடங்களை சகித்துகொள்ளதான் வேண்டும்
After Metro Rail Project, there will be a free traffic for sure. No pain No gain - Said by my sweet Padmashree Kamala Hassan. - Ranga
கத்திபாராவில் மேம்பாலம் கட்டும்போதும் இதே அவஸ்தைதான் ஹரிஷ்...சில சமயம் கிண்டியிலேயே ட்ராஃபிக் தேங்கி நிற்கும்..மழை நாளில் கேட்க வேண்டாம். எப்போதுதான் இந்த மெட்ரோ ரயில் வருமோ தெரியவில்லை :(
ரங்கா, கமல் சொன்னது FMலதான் :-) ஆக்சுவலா பாடி பில்டிங்கில்தான் இந்த quoteஐ உபயோகப்படுத்துவார்கள்.
தகவலுக்காக: http://en.wikipedia.org/wiki/No_pain,_no_gain
வணக்கம் ராஜா,
சங்கடங்கள்தான்... கொஞ்சம் சரிவர ப்ளான் செய்து பகுதி பகுதிகளாக செய்தால நிச்சயம் சங்கடங்கள் குறையவாவது செய்யும். நான் பாங்காக் சென்றிருந்தபோது ஒரு மேம்பாலப்பணி இரவு நேரத்தில் வெகுதுரிதமாக நடந்துக்கொண்டிருந்தது. டாக்சி டிரைவரிடம் கேட்டதற்கு பகலில் அவ்விதம் ட்ராஃபிக் ப்ளாக் செய்ய அனுமதியில்லையாம். பகலில் அதே பகுதிக்கு சென்றபோது வேலை நடக்கும் தடமேயில்லை... அனைவரும் வழக்கம்போல் சுமூகமாக பிரயாணித்துக் கொண்டிருந்தார்கள். வெளியூரை கம்பேர் செய்கிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம். எனக்கு தெரிந்த உதாரணத்தை சொன்னேன்... இங்கு எல்லோரும் எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறார்கள் என்பதால் சங்கடங்கள் அதிகமாகிறது... நிச்சயம் உங்கள் இன்றைய பதிவை பார்த்து கமெண்டுகிறேன்
வணக்கம் ரங்கா,
Exercise செய்யும்போது வரும் painஆகயிருந்தால் பரவாயில்லை... இது நம்மை அடிக்கும்போது ஏற்படும் painஆகவல்லவா இருக்கிறது... Anyway, looking for that Mighty Metro Train soon...
வணக்கம் ரகு,
எல்லா ஏரியாவிலும், ஒரே நேரத்தில் பாதைகளை குறுக்கி சென்னையே உருக்குலைந்து போயிருக்கிறது. ஏதோ.. நல்லது நடந்தால் சரி என்று ஏக்கப்பெருமூச்சு விடத்தான் நம்மால் முடிகிறது
மெட்ரோ ரயில் வருவதற்குள் இன்னும் என்னென்ன குளறுபடி நடக்குமோ?
வணக்கம் ரஹும் கஸாலி நண்பரே,
ஆம்... சரியாக சொன்னீர்கள். குளறுபடிகள் குறுகிய காலத்தில் நடந்து முடிந்தாலாவது சமாளிக்கலாம்... காலம் கடத்துவது சகலருக்கும் சங்கடமே...
Post a Comment