Thursday, March 18, 2010

மயிரிழை - [சிறுகதை]


ன்று திங்கள்..! இன்று எனக்கு விடுமுறை..!

ஞாயிறு விடுமுறை என்றால்தான் பலருக்கும் விருப்பம்... ஆனால் எனக்கு திங்களன்று விடுமுறை வந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். காரணம், திங்கள் அன்றுதான் நம் இயந்திரவாழ்கையின் உச்சம் தெரியும், டிராஃபிக் அதிகம், எல்லோரும் தம் வீட்டையும், தன்னையும் மறந்த நிலையில் செயற்கையாய் ஒரு இயந்திரத்தனத்துக்கு உட்படுத்திக்கொள்வார்கள்... சாரி, எனக்கு இதெல்லாம் பிடிக்காது.

ஆகவே! இன்று, சோம்பல் முறித்து 10 மணிக்கு எழுந்தேன், பெட் காஃபி குடித்துவிட்டு, ஒரு நல்ல ஹாலிடே மூடில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் டிவியில் இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒன்றும் இல்லை... எல்லாமே மறுஒளிபரப்பு ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று ரிமோட்டை தூக்கியெறிந்துவிட்டு, தலையை கோதியபடி யோசிக்கும்போதுதான் முடி அதிகம் வளர்ந்துவிட்டது தெரிந்தது. பேசாமல் சலூனுக்கு போய் வந்தால், இன்றைய நாள் சுபிட்சமாகும் என்று தோன்றவே, பழைய சட்டையை மாட்டிக் அம்மாவிடம் கூறிவிட்டு கிளம்பினேன்.

'ஹேர் வேவ்ஸ் சலூன்’, ஏரியா பஸ் ஸ்டாண்டுக்கு பின்புறம் இருந்தது. மண்டே ஹாலிடேவின் பலனால், க்யூ இல்லை. உள்ளே நுழைந்தேன், ஒரே ஒரு கஸ்டமுருக்கு முடிவெட்டியபடி என் நண்பனும், சலூன் கடை ஓனருமான வேலு என்னை வரவேற்றான்.

'வா தல..', அஜித் ரசிகர்கள் தயவு செய்து கோபிக்க வேண்டாம், அவன் பொதுவாக எல்லோரையும் அப்படித்தான் அழைப்பான்...

'என்ன ரொம்ப நாளா ஆளே காணோம், கடைய மாத்திட்டியோன்னு நினைச்சேன்' என்று சேரில் அமர்ந்திருந்த கஸ்டமருக்கு தலையில் மெஷின் ஓட்டிக்கொண்டே கேட்டான்...

சோம்பேறித்தனம்தான் காரணம் என்று அவனிடம் வெளிப்படையாக சொல்ல முடியாததால், 'இல்ல வேலு... ஆஃபீஸ்ல வேலை அதிகம் லீவே கிடைக்கலை...' என்று பொதுவாக ஒரு பொய்யை சொல்லி வைத்தேன்.

வெளியில் அடிக்கும் ஊமை வெயிலால் உள்ளே புழுக்கமாகத்தான் இருந்தது. ஃபேன் காற்றும் போதவில்லை... ஆனாலும், அந்த கடையை இரசிக்க முடிந்தது. பலவிதமான ஷேம்பூ, ஆஃப்டர் ஷேவ் லோஷன், பவுடர் மற்றும் என்னவென்று தெரியாதபடி ஒரு மாதிரியான வாடை... இப்படி எல்லாமும் கலந்த வாசம் மூக்கை துளைத்தது.

கடையிலிருந்த சோஃபாவில் அமர்ந்தபடி நியூஸ் பேப்பரை எடுத்து புரட்டினேன்... தலைப்பு செய்தி என்னை பயமுறுத்தியது..!

கோவிலில் பயங்கரம்..! உண்டியிலில் 18 மனித காதுகள் மாலையாக கோர்த்து காணிக்கை..!

சென்னை, திவாரிப்பேட்டையில் உள்ள காணாபுரத்தம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தம். வாரந்தோறும வெள்ளிக்கிழமையன்று பக்தர்கள் பெருமளவு கூடுவதும் அன்று விசேஷ பூஜை நடைபெறுவதும் வழக்கம். இந்த வெள்ளிக்கிழமையன்றும் வழக்கத்தைவிட சற்று அதிகமான கூட்டம் கூடியதால் உண்டியல் நிரம்பியது, கோவில் தர்மகர்த்தா, திரு. கிருஷ்ணராஜன், நேற்று ஞாயிற்றுக்கிழமை கோவிலில் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை தரம்பிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மர்ம துணிக்குவியல் கிடைத்துள்ளது. அதில், 18 மனித காதுகள் மாலையாக கோர்த்த நிலையில் இரத்தத் திப்பிகளுடன் கிடந்தது. இதைப் பார்த்த தர்மகர்த்தாவும், பக்தரகளும் பீதியடைந்துள்ளனர். இது யாராவது ஒரு மந்திரவாதி ஆசாமியின் செயலாக இருக்கும் என்று சுற்றுவட்டார மக்கள் நம்புகின்றனர்.

மேலும் என்னால் அந்த செய்தியை படிக்க முடியவில்லை... ஒரு மாதிரி வயிற்றை புரட்டியது...

'சே..!' என்று எனக்கே தெரியாமல் வார்த்தை என் வாயிலிருந்து உதிர்ந்தது.
 
'என்ன தல.. என்னாச்சு..!'

'இல்லப்பா, யாரோ கோவில் உண்டியில 18 மனுஷ காதுகளை வெட்டி மாலையாக் கோர்த்து காணிக்கையாப் போட்டிருக்காங்க..' என்றேன்.

'அதுவா... ஆமாமா... பாத்தேன். நீ என்ன நினைக்கிறே இதைப்பத்தி..'

'என்ன நினைக்கிறதா.. யார் பண்ணாங்களோ தெரியில... கேட்கவே பயமாயிருக்கு...'

'ம்ம்ம்... விடுப்பா... இந்த மாதிரி நியூஸெல்லாம், இந்த காதுல வாங்கி இந்த காதுல விட்டுடனும்..' என்றான்

'என்ன வேலு, கேஷூவலா சொல்லிட்டே... இது என்ன சாதாரண மேட்டரா... 18 காதுன்னா, 9 பேரு இறந்திருக்காங்கன்னுதானே அர்த்தம்..'

'அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றே..?'

'ஆமா, யாராவது காதை மட்டும் வெட்டிட்டு சும்மா விட்டாங்கன்னா, காதறுந்தவன் சும்மாவா இருப்பான். போயி சொல்லிடமாட்டான். சோ..! முதல்ல கொலை பண்ணிட்டுத்தானே காதறுத்திருப்பான்..'

'ஆமா... அதுவும் கரெக்ட்தான்'

'சரிவிடு... இந்த மேட்டரை பேசுனாவே என்னமோ மாதிரியாகுது..’ என்று கூறி என்னை நானே சுதாரித்துக் கொண்டு பேப்பரில் கடைசி பக்கம் புரட்டினேன். விதவிதமான சினிமா போஸ்டர்கள் கண்ணில்பட்டது... குளிர்ச்சியாக இருந்தது. அதில் வெள்ளியன்று ரிலீசான ஒரு படவிளம்பரத்தில் 'அமோக வெற்றியளித்த ரசிகர்களுக்கு நன்றி..!' என்று போட்டிருந்தது...

'என்ன வேலு, 'ஆளுமை' ன்னு ஒரு படம் ரிலீசாச்சே பாத்தியா..? த்ரில்லராமே... நல்லா ஓடுதுன்னு பேப்பர்ல போட்டிருக்கு..?'

'அந்த படமா, வெள்ளிக்கிழமை நைட்ஷோ பாத்தேன். அதெல்லாம் ஒரு த்ரில்லர் படமா..? அவங்களேத்தான் சொல்லிக்கணும்... த்ரில்லர் படம்னா எப்படி இருக்கணும் தெரியுமா..! இது டுபாக்கூரு நியூஸ்... அந்த படம் இங்கிலீஷ் படதோட காப்பி... இங்கிலீஷ்லியே அந்த படம் அவ்வளவு த்ரில்லா இருக்காது... அதைப் போய் காப்பியடிச்சிருக்காங்க...'

'என்னது இங்கிலீஷ் பட காப்பியா இது..?'

'ஆமா... எந்த படம் தெரியுமா.?' என்று முடிவெட்டும் மெஷினை கஸ்டமர் தலையிலிருந்து எடுத்து, மேலே பார்த்தபடி கொஞ்சம் யோசித்துவிட்டு, 'ஆங்...ஷாவனிஸம்னு 2008 வந்த படம்... அது ஹீரோயின் சப்ஜெக்டு அதை ஹீரோவுக்கு மாத்திட்டாங்க. வழக்கம் போல நம்மூருல ஹீரோயினை பாட்டுக்கும் க்ளாமருக்கும் மட்டும் யூஸ் பண்ணிக்கிட்டாங்க, காமெடியவேற திணிச்சி சொதப்பியிருக்காங்க...' என்றான்

'தம்பி இன்னும் கொஞ்சம் ஓட்டுப்பா..' என்று கஸ்டமர் கேட்டார்

'என்ன சார்.?' என்று வேலு புரியாமல் கேட்க...

'இன்னும் கொஞ்சம் இந்தபக்கம் மெஷினை ஓட்டுப்பா' என்று கஸ்டமர் தெளிவாக கூற மீண்டும் மெஷினை ஓட்டினான்...

கடையில் வலது மூலையில் மேல்பக்கமாக வைக்கப்பட்டிருந்த அரசாங்க தொலைக்காட்சியில், லோக்கல் கேபிள் சேனல் புதுப்பட டிரெயிலரை காட்டிக்கொண்டிருந்ததுஅதில் ஒரு ஹாரர் படத்தின் ட்ரெய்லர் ரொம்பவும் மிரட்டலாக ஓடிக்கொண்டிருந்தது. என் கவனம் பேப்பரிலிருந்து அந்த தொலைக்காட்சியில் தாவியது...

'சே..! செம்ம ட்ரெய்லர்... பேய்படம் போலிருக்கே! போய் பாக்கணும்... ட்ரெய்லரே மிரட்டலா இருக்கு... படம் சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்..' என்று கூற, வேலு, மீண்டும் மெஷினை கஸ்டமர் தலையிலிருந்து எடுத்துவிட்டு என் பக்கம் திரும்பி

'நீ வேற..! ட்ரெய்லர்தான் நல்லாயிருக்கும்... படம் சுத்த வேஸ்ட்டா இருக்கும். இவங்களுக்கெல்லாம் த்ரில்லர் ஹாரர்-னா என்னான்னே தெரியமாட்டேங்குது..' என்று புலம்பினான்.

'தம்பி போதும்..! ஷேவ் பண்ணிட்டு மீசையை டீப் ட்ரிம் பண்ணிடு..' என்று கஸ்டமர் கலந்துரையாடலில் ஆர்வமில்லாதவராய் கேட்டார்.

'சரி சார்..' என்றபடி வேலு அவர் கன்னங்களுக்கு சோப்பு நுரையை தடவ ஆரம்பித்தான்

'என்ன வேலு, நீ சொல்றதைப் பார்த்தா நம்மூருல, த்ரில்லர் படம் எதுவுமே வந்திராத மாதிரி பேசறே..!' என்று கிளறினேன். எனக்கு பொழுது போக வேண்டுமல்லவா...

வேலு, சவரக்கத்தியை எடுத்து தீட்டியபடி, 'உண்மைதான்... ஆனா அந்த காலத்துல... அதே கண்கள்... நெஞ்சம் மறப்பதில்லை.... புதிய பறவை... இதெல்லாம் என்னா மாதிரி இருந்தது... இப்பவும் வருதே... பொண்ணுங்க சதைய வச்சிக்கிட்டு த்ரில்லர்ங்கிற பேர்ல செக்ஸ் படம் எடுத்து ஏமாத்திட்டிருக்காங்க.. இங்கிலீஷ்ல ஏதோ சில படங்கள் நல்லதா வருது... பாக்கும்போது நமக்கே ஒரு மாதிரி ஆயிடுது... அட்லீஸ்ட் அந்த மாதிரியாவது இருக்கணும் இல்லியா..!'

'எந்த மாதிரி..?'

'அதாவது... பாக்குற நமக்கே உயிர் பயம் வரணும்... பயமுறுத்தணும்... வித்தியாசமா இருக்கணும்... அந்தளவுக்கு இருந்தாத்தான் நல்ல த்ரில்லர்னு என்னால ஏத்துக்க முடியும்..' என்று புலம்பித் தள்ளினான்.

வேலுவை 7 வருடமாக எனக்குத் தெரியும்... +2 வரை படித்தவன். அவனிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், தினமும் இரவு நேரம் தூங்கப்போவதற்கு முன் ஒரு த்ரில்லர் படம் பார்க்காமல் தூங்கமாட்டான், டிவிடியிலாகட்டும், தியேட்டரிலாகட்டும், இல்லையென்றால் டிவிசேனலிலாவது தவறாமல் தினம் ஒரு படம் பார்ப்பதால் அவனுக்கு திரைப்படங்களின் மீது, குறிப்பாக த்ரில்லர் படங்களின் மீது ஒரு அதீத ஆர்வமிருந்ததை எண்ணி நான் பலமுறை வியந்திருக்கிறேன். இன்றும் வியந்தேன். எந்த படமாக இருந்தாலும் அதைப் பற்றி தொழில்நுட்ப விவரங்கள் உட்பட பல விஷயங்களை புட்டு புட்டுவைப்பான்.

அவன் நினைத்தால் ஒரு த்ரில்லர் சினிமா டைரக்டராகியிருக்கலாம் என்று என்னுள் சில நேரம் தோன்றும்.

'எப்படி வேலு, எந்த படத்தை பத்தி கேட்டாலும் கரெக்டா சொல்றே..!'

'அட விடுப்பா... ஏதோ தெரிஞ்சதை சொல்றேன்...' என்று மீண்டும் கஸ்டமரில் அவன் கவனம் சென்றது

'நீ மட்டும் கத்திரி எடுத்தில்லேன்னா, பெரிய த்ரில்லர் பட டைரக்டராயிருக்கலாம்...' என்று எதேச்சையாக கூறிவிட்டு மீண்டும் பேப்பரில் புதைந்தேன்.

'அதுதான் என் ஆசை... லட்சியம்... எல்லாமே..! எப்படியாவது ஒரு பயங்கரமான த்ரில்லர் படத்தை டரைக்ட் பண்ணி, த்ரில்லர்னா எப்படியிருக்கும்னு மக்களுக்கு காட்டணும்..' என்று தீர்க்கமான குரலில் சொன்னான்.

எனக்கு அவன் கூறியது மெல்லிதாய் சிரிப்பு வரவழைத்தது... மெதுவாக சிரித்துவிட்டேன்.

வேலு கவனித்துவிட்டான்... என்னை திரும்பி பார்த்தான்... அவன் கண்கள் வேறு மாதிரியிருந்தது.

'ஏய்... இப்ப எதுக்கு.. சிரிச்சே..' என்றான். திடீரென்று அவன் மரியாதை குறைச்சலாக என்னை அழைத்தது, ஏதோபோல் இருந்தது.

'என்ன வேலு..! என்ன திடீர்னு ஏய்ங்கிறே..'

'டேய்... எதுக்குடா இப்ப சிரிச்சே..' என்று கோபமாகவே கேட்டான்.

'வேலு... ரிலாக்ஸ்.. நா..ன்... சும்மாத்தான் சிரிச்சேன்..'

'த்தா... நான் படம் எடுத்து காட்டுவேன்னா, உனக்கு சிரிப்பா இருக்கா.. ஏன்? என்னால படம் எடுக்க முடியாதா..' என்று அவன் குரல் உயர்ந்துக் கொண்டே வந்தது. கையில் சவரக்கத்தியுடன் என்னை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தான்.

நான் எழுந்துவிட்டேன்.

'வேலு... நில்லு... ரிலாக்ஸ்... திரைப்படம் எடுக்குறது ஒன்னும் சாதாரண விஷயமில்ல... அதுக்கு நிறைய பணம் வேணும்...' என்று எனக்கு தெரிந்த சினிமா அறிவை வைத்து பொதுவாக சொன்னேன்.

'பணம் இல்லன்னா எடுக்க முடியாதா..' என்று தனது கையிலிருக்கும் சவரக்கத்தியை குனிந்து பார்த்தபடி தடவிக்கொண்டிருந்தான்.

'ஒரு சீரியல் கில்லர் கதையை, ரியாலிட்டி எஃபெக்டுல எடுத்து... ஒருத்தன் சாகிறதை படத்துல உண்மையா காமிக்க எவ்வளவு பணம் தேவைப்படும்..?'

'....' நான் முழித்தேன்.

'சொல்லுடா..' என்று குரலை பயங்கரமாக உயர்த்தினான். அமர்ந்திருந்த கஸ்டமர் தனது சேரிலிருந்து எழுந்துவிட்டான். திடீரென்று மாறிய வேலுவின் நடவடிக்கையால் கலவரமடைந்த அவன் கடை வாசலை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தான். ஆனால் வெளியேறவில்லைவாசலிடம் நின்றான்.

'எவ்..ளோ.. தேவைப்படும்... த்..தெ...தெரியில...' என்றேன்.

மீண்டும் ஒரு அடி முன்னுக்கு வந்தான்.

'பணமே தேவைப்படாது..! அதுவும்... இந்த மாதிரி புறநகர் ஏரியாவுல இருக்கிற ஒரு சலூன்ல, செவ்வாய் விடுமுறையன்னிக்கி பாதி ஷட்டரை திறந்து வச்சிருக்கிறப்போ வர்ற சில ரேர் கஸ்ஃடமர்ஸை, இதோ இதே சீட்டுல உக்காரவச்சி, அவங்களை கொல்றதை  லைவ்வா ஷூட் பண்றதுக்கு... சுத்தமா பணமே தேவைப்படாது... ஒரே ஒரு கேமிரா இருந்தா போதும்... கரெக்டா..?'

'_______'

'சொல்லுடா... கரெக்டா..?' மீண்டும் கத்தினான்...

'க்கக்க....கரெக்ட்..' என்றேன்.

'நீ கடைக்கு வந்ததும் படிச்சியே பேப்பர்ல, 18 காதுகள் மாலையாக கோர்த்தபடி கோவில் உண்டியலில் காணிக்கை... அது மந்திரவாதி யாரும் பண்ணதில்ல... நானே என் கடையில நடக்கிற கொலையோட எண்ணிக்கைக்கு பண்ணது... அதைக் கோவில் உண்டியல்ல போட்டு பரபரப்பாக்கி அது பேப்பர்ல வரணும்... அதையும் என் ரியாலிட்டி த்ரில்லர் படத்துல சேர்த்துக்கணும்னு செஞ்சேன்... நினைச்ச மாதிரியே பேப்பர்லயும் நியூஸ்லயும் வந்துடுச்சு... என் கதைக்கு இன்னொரு சீன் கிடைச்சது...'

'...என்..என்ன  சொல்ற வேலு... நீயா... இப்படி..?'


'ஆமா...! சும்மா பொறந்தோம், வேலை செஞ்சோம்... இறந்தோம்னு என்னால இருக்க முடியாது... ஏதாவது வித்தியாசமா செய்யனும்னு இப்படி ஒரு படத்தை லைவ்வா ரியாலிட்டி எஃபெக்டுல ஷூட் பண்ண ஆரம்பிச்சேன்... 90% முடிஞ்சிடிச்சி... நீயும், இதோ இந்தாளும்தான் என் படத்துக்கு க்ளைமேக்ஸ்... பொதுவா செவ்வாக்கிழமைதான் நான் கொலை செய்வேன்... இன்னிக்கு ஒரு நாள் முன்னாடி..' பரவாயில்ல...’ என்று தனது கையிலிருந்த சவரக்கத்தியை எடுத்து ஒரு பட்டையில் தீட்டினான்.

பின்னாலிருந்து ஷட்டர் விழும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பினோம். சேரிலிருந்து எழுந்த கஸ்டமர் இப்போது தனது கையில் துப்பாக்கியை ஏந்தியபடி ஷட்டரை மூடிவிட்டு நின்றிருந்தார்...

'வேலு... நான் போலீஸ்...! உன்னை 3 நாளா வாட்ச் பண்ணிட்டிருக்கோம். உன் கடையில மட்டும் அடிக்கடி ஏதோ ஒருமாதிரி துர்வாடை வர்றதாகவும், நீ டெலிவரி பண்ண 'குப்பை முடி'-யில சில ஹ்யூமன் டிஷ்யூஸ்-ம் இரத்தமும் இருந்ததாகவும் உன் மேல கம்ப்ளைண்ட் பதிவாயிருக்கு... 3 நாளா வேற வேற போலீஸ்காரங்க... மஃப்டில உன் கடைக்கு வந்துட்டு போயிட்டு இருக்காங்க... பட் தேங்க் காட்... இப்போத்தான் உண்மை தெரிஞ்சுது... நீ ஒரு சைக்கோ...! மரியாதையா கத்தியை கீழே போடு...' என்றார்.

இவ்வளவு நேரம் அமைதியாக உட்கார்ந்தபடி இருந்த அந்த கஸ்டமர் போலீஸா..? என்று எனக்குள் ஆச்சர்யமும், கொஞ்சமாக தைரியம் வந்தது.

ஆனால் வேலுவின் கண்கள் முற்றிலுமாக மிரண்டு காணப்பட்டது...


'சார்... நான் இப்ப அரெஸ்ட் ஆயிட்டேன்னா... என்னோட இத்தனை நாள் உழைப்பு வேஸ்ட்டாயிடும் சார்...' என்று திடீரென்று அப்பாவியாக பேசினான்.

'வேலு... ப்ளீஸ் கோ-ஆப்பரேட் வித் மீ... என்னை அநாவசியமா சுட வச்சிடாதே...! கத்தியை கீழே போடு..' என்றார்...

வேலு என்னை திரும்பி பார்த்தான்... நான் என் பயத்தை கண்களில் காட்டிக்கொண்டு நின்றேன்.


அந்நியாயமாக என் வாயிலிருந்து வார்த்தையை பிடுங்கி உண்மையை வரவழைத்துவிட்டாயே என்பது போல் அவன் பார்வை இருந்தது...

என்ன நினைத்தானோ... 'டேஏஏஏஏஏஏய்ய்ய்ய்யய்...' என்று ஆவேசமாக என் மேல் கத்தியுடன் அவன் பாய, போலீஸ் அவனை சுட்டார்...

டம்ம்ம்ம்ம்மம்....

நான் கண்களை இறுக்கி மூடியிருந்தேன். மெல்ல கண்களைத் திறந்து பார்க்க, வேலு கையில் கத்தியுடன் தரையில் விழுந்துக் கிடந்தான். மெல்ல அந்த டைல்ஸ் தரையில் இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.

போலீஸ் என்னை நெருங்கினார்...

'மிஸ்டர்... ஆர் யு ஆல்ரைட்..?' என்றார்.

'யெஸ் சார்...' என்றேன்.

எவ்வளவு நேரம் என்று தெரியாதபடி அப்படியே அமர்ந்திருந்தேன்.

ஷட்டர் திறக்கப்பட்டது... வெளியே போலீஸ் படை நின்றிருந்தது. சைரன் ஒலியுடன் மேலும் இரண்டு ஜீப்புகள் வந்து நின்றது.

சிலர் கையில் உறையணிந்து கடைக்குள் ஆங்காங்கே சோதனை செய்துக் கொண்டிருக்க, வெவ்வேறு கோணத்தில் வைக்கப்பட்டிருந்த 3 ஹேண்டி-கேமிராக்கள், மறைவிடங்களிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது... எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ரிப்போர்டர்கள் வெளியே குவிந்திருந்தனர்.

நானும் அந்த போலீஸ் கஸ்டமரும் வெளியேறினோம். ஃபோட்டோ ஃப்ளாஷ்கள் கண்களை கூசச்செய்தது


'ஸார், அக்யூஸ்டு ஷாட் & டெட்... ஸ்பாட்-ஐ அனலைஸ் பண்ணிட்டிருக்கோம். அவன் கடைக்கு பின்னாடி ஒரு ரூம்ல கம்ப்யூட்டர் ஒன்னு கிடைச்சிருக்கு... அதுலதான் கேமிராக் காட்சிகள் பதிவாயிருக்கும்னு தோணுது... 18 மர்டரும் கேமிராவுல ரெக்கார்ட் ஆயிருக்கான்னு தெரியில சார்... டெட்பாடிக்களை என்ன செஞ்சான்னு இன்னும் தெரியில சார்... ஓவர்..' என்று ஒரு போலீஸ் வயர்லெஸ்ஸில் தெரிவித்துக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டே கடந்துக் கொண்டிருக்க, கான்ஸ்டபிள் ஒருவர் வந்து என்னிடம் ஸ்டேட்மெண்ட் கேட்க ஆரம்பித்தார்... நான் மயிரிழையில் உயிர்தப்பித்த கதையை முதல் வரியிலிருந்து சொல்லி முடித்தேன்.

திரும்பி ஒருமுறை கடையின் போர்டை பார்த்தேன். 'ஹேர் வேவ்ஸ் சலூன்' என்று சிகப்பு கலரில் பெய்ண்ட் அடிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 7 வருடமாக நான் வந்துபோகும் சலூன், இப்படி ஒரு மர்ம மரணங்களுக்கு காரணமாகிப்போகும் என்று ஒரு நாளும் நான் நினைக்கவில்லை...

இன்றைய திங்கள் மறக்க முடியாத விடுமுறையாக மாறியதை எண்ணி வியந்துக் கொண்டே வீட்டிற்கு நடைபோட்டேன்.

- முடிவு -


Signature

13 comments:

Madhavan Srinivasagopalan said...

18 காதுகள், 9 கொலையாகக் கூட இருக்கலாம்.
ரொம்ப நாளைக்கப்புறம், வித்தியாசமான கதையினை படிக்கும் திருப்தி இருந்தது..

Raghu said...

//18 காதுன்னா, 18 பேரு இறந்திருக்காங்கன்னுதானே அர்த்தம்..'//

18 காதுன்னா, 9 பேர் இற‌ந்திருக்காங்க‌ன்னுதானே அர்த்த‌ம் வ‌ரும்

//ரிப்போர்டர்கள் வெளியே குவிந்திருந்தனர்//

அதுக்குள்ள‌ எப்ப‌டி ஹ‌ரீஷ்? லாஜிக்கா இது ஒத்துவ‌ர‌லைன்னு நினைக்கிறேன். ஒரு கொலையாளியை கைது செய்யும்போது போலீஸ் மீடியாவுக்கு சொல்ல‌ மாட்டாங்க‌ளே

நைஸ் த்ரில்ல‌ர் ஹ‌ரீஷ், இது மாதிரி த்ரில்ல‌ர்ல‌ அடிச்சு ஆடுங்க‌, கொஞ்ச‌ நாள் ஹார‌ர்லாம் ரெஸ்ட் எடுக்க‌ட்டும்......... நான் இனிமே ஞாயிறுக‌ள்ளேயே முடி வெட்டிக்க‌றேன் :)

DREAMER said...

நன்றி மாதவன்,
18 காதுகள் ஒன்சைடு காதுகள்னு எழிதினது. அந்த லைன்களை சரிபண்ணிடுறேன்.

//ரொம்ப நாளைக்கப்புறம், வித்தியாசமான கதையினை படிக்கும் திருப்தி இருந்தது..//
மிக்க நன்றி..!

தொடர்ந்து வாருங்கள்...

-------------------

நன்றி ரகு,
18 காதுகள் மேட்டர் சரி பண்ணிடுறேன்.
ரிப்போர்டர்ஸ் & கைது பற்றி கீழ்காணும் வரிகளில் ஒரு டைம் லேப்ஸ் கொடுத்திருக்கிறேன்.
//போலீஸ் என்னை நெருங்கினார்...
'மிஸ்டர்... ஆர் யு ஆல்ரைட்..?' என்றார்.
'யெஸ் சார்...' என்றேன்.
எவ்வளவு நேரம் என்று தெரியாதபடி அப்படியே அமர்ந்திருந்தேன்.//
இந்த கடைசி வரிகளில் கதையின்நாயகன் நீண்ட நேரம் நிலைமறந்து அமர்ந்திருப்பது போல் காட்சி. அதில் ஷூட்அவுட் & ப்ரெஸ் நியூஸ் ஃபார்மாலிட்டீஸ் அடங்கும் என்று நினைக்கிறேன்.

என்னை ஹாரரிலிருந்து தற்காலிகமாக ரிட்டையர் ஆக வைத்த பெருமை உங்களுக்கே சேரும். கண்டிப்பாக முடிந்தவரை சிறப்பாக எழுதுகிறேன்.

-
DREAMER

ஆரூர் சரவணா said...

பாதி கதைக்கப்புறம் ரொம்பவே அலற வெச்சுட்டீங்க. இது மாதிரி வித்தியாசமா நிறைய முயற்சி செய்யுங்க. வாழ்த்துக்கள்.

DREAMER said...

வாங்க சரவணன்,
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..! கண்டிப்பா எழுதுறேன்..!

லிவிங்ஸ்டன் said...

super & very thanks to this story

Unknown said...

நல்ல கதை .தொடருங்கள்

DREAMER said...

welcome livingston baba,
//super & very thanks to this story//
thanx for the appreciation.

வாங்க மின்னல்,
//நல்ல கதை .தொடருங்கள்//
மிக்க நன்றி..! கண்டிப்பாக தொடருகிறேன்..!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐயோ...சூப்பர்ங்க . நெஜமாவே thriller ஆக்கிடீங்க. இனிமே சலூன் போறப்ப கூட ரங்கமணிகிட்ட எதாச்சும் ஆயிதம் குடுத்து தான் அனுப்பனும் போல

DREAMER said...

வாங்க தங்கமணி,
இனிமே சலூன் போனா, நீங்க சொன்னா மாதிரி ஆயுதம் கொண்டு போகணும்,இல்லைன்னா, ஓடிப்போறதுக்கு ஏதுவா, எண்ட்ரன்ஸ் பக்கத்துலியே உக்காந்திரணும், முக்கியமா பேப்பர் படிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.

-
DREAMER

Veliyoorkaran said...

சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் பாஸ்.

உண்மையிலேயே பயம் வந்து விட்டது.

DREAMER said...

வாங்க வெளியூர்க்காரன்...
சைந்தவியின் கடைசி கடிதத்தை, கண்டிப்பாக படிக்கிறேன்.

வாங்க அக்பர்,
வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி..! தொடர்ந்து வாருங்கள்.

-
DREAMER

Popular Posts