Sunday, March 07, 2010

உயிர்மை - [சிறுகதை]


 
விஞ்ஞானி திரு. கருணாகரனின் உயிலில் எழுதப்பட்டிருந்த முக்கியமான வரிகள்.

'எனது ஆராய்ச்சிக்கூடத்திலிருக்கும் அதிநவீன பொருட்களனைத்தும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக கொடுக்கிறேன். எனது அந்தரங்க அறையிலிருக்கும் மரப்பெட்டியை மட்டும் எனது நண்பனிடம் கீழ்காணும் முகவரியில் சீல் திறக்காமல் ஒப்படைக்க வேண்டுமாய் விரும்புகிறேன்.'

ஒரு வாரத்திற்கு பிறகு...

கணேசன் இதுவரை எத்தனையோ பார்சலை ட்ரிப் அடித்திருக்கிறான். அன்னை மேரிமாதா பார்சல் சர்வீஸ்-ல் 12 வருட அனுபவம் அவனுக்கு, ஆனால், இன்று, இந்த இரவு வேளையில் தனது சின்னயானை வண்டியில் ஏற்றியிருக்கும் பார்சலான 5x5 மரப்பெட்டிதான் அவனை உறுத்தியது. அந்த பெட்டியில் இருக்கும் விஷயம் என்னவென்று அவனுக்குள் ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருந்ததால் அவனால் வண்டியை கவனமாக ஓட்ட முடியவில்லை. அவனுடன் வரும் உதவியாளன் முத்து இதை கவனித்தான்.

'என்னண்ணே தூக்கமா..'

'டேய்... நான் என்னிக்குடா வண்டியோட்டச்சொல்ல தூங்கியிருக்கேன்..'

'அப்புறம் ஏன் ஒரு மாதிரியிருக்கே..? அண்ணி நினைப்பா..?'

'அதெல்லாம் இல்லடா' என்று கூறிக்கொண்டே ரியர்வியூ கண்ணாடியில் அந்த பெட்டியைப் பார்த்தான். அது வண்டியின் அசைவுக்கு ஏற்றபடி அசைந்துக் கொடுண்டிருந்தது.

எந்த ஒரு பொருளையும் மூடிவைத்தால்தான் அதைத் திறந்துப் பார்க்க ஆர்வம் அதிகமாகும், அதே ஆர்வம்தான் இப்போது கணேசனையும் தொற்றியிருந்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி பெட்டியை திறந்து பார்த்துவிடலாமா என்றிருந்தது.

வண்டியை ஓரமாக நிறுத்தினான். முத்துதான் முதலில் இறங்கினான், சோம்பல் முறித்துக்கொண்டே, அருகிலிருக்கும் புளியமரத்தடியில் போய் சிறுநீர் கழித்தான். அதே நேரம் கணேசன் இறங்கியதும் பின்பக்கமாக வந்து அந்த பெட்டியை உற்றுப் பார்த்தான். ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்தான். அந்த பீடி புகையில் அவனுக்குள் ஓடும் எண்ணங்கள் தெரிந்தது.

கணேசனின் தினசரி நடவடிக்கைகளில் எதை மறந்தாலும், பேப்பர் படிப்பதை மட்டும் மறக்கமாட்டான். அப்படி படித்ததில் அவனுக்கு விஞ்ஞானி கருணாகரனின் ஆராய்ச்சி பற்றி தெரிந்திருந்தது.

மனிதனை காற்றில் மறையவைக்கும் invisiblity என்னும் அரிய விஷயத்தை இந்திய மிலிட்டரிக்காக செய்து தோல்வியடைந்ததால் மிலிட்டரியிலிருந்து துரத்தப்பட்டவர். ஒரு தனி வீட்டில், ஆராய்ச்சிக்கூடம் அமைத்து ஏதேதோ செய்துக் கொண்டிருந்தார். அவரது ஆராய்ச்சி எப்படியாவது கைகூடவேண்டும் என்று நினைத்திருக்கும் பல பேர்களில் கணேசனும் ஒருவன். விஞ்ஞானி கருணாகரனின் மறைமுக விசிறி.

பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி பல காலமாக தொடர்ந்துக் கொண்டுதானிருக்கிறது. ஆனால், இதுநாள்வரை சில ஆங்கிலத் திரைப்படங்களைத் தவிர வேறு எங்கும் இந்த விஷயம் நிரூபித்து காட்டப்படவில்லை... ஆனால், கருணாகரன் நீரூபித்துக் காட்டுவார் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தது. இந்த நேரத்தில்தான்வர் எதிர்பாராவிதமாக ஆராய்ச்சிக்கூடத்தில் நடந்த தீவிபத்தில் இறந்துப்போனது கணேசனுக்கு மிகவும் வருத்தமளித்தது.

போலீசார் அவரது பொருட்களைக் கைப்பற்றினர். அவரது உயிலில் எழதியிருந்தபடி இந்த மரப்பெட்டி மட்டும் ஒரு குறிப்பிட்ட முகவரியில் சீல் உடைக்காமல் டெலிவர் செய்யுமாறு போலீசின் உத்தரவின்பேரில் இதோ இப்போது கணேசன் வண்டியில் டெலிவரிக்காக பயணித்துக் கொண்டிருக்கிறது.

பீடி முடிந்தது...

'அண்..ணே போ..ழா..மா..' கொட்டாவி விட்டுக்கொண்டே முத்து கேட்டபோதுதான் கணேசனுக்கு மீண்டும் நினைவு திரும்பியது.

'... போலாம்..' என்று அரைமனதுடன் வண்டியில் ஏறினான்.

மீண்டும் அமைதியாகப் பயணம்.

முத்து மீண்டும் மௌனத்தை கலைத்தான்

'அண்ணே, என்னாச்சு உனக்கு, எப்பவும் எம்.ஜி.ஆர், பாட்டு CD போட்டுக்கிட்டு சும்மா ஜம்முன்னு வண்டி ஓட்டுவே இன்னிக்கி என்னடான்னா, ஏதோ பிணத்தை ஏத்திக்கிட்டு ட்ரிப் அடிக்கிற மாதிரி இப்படி டல்லடிக்கிறே.?' என்று முத்து யதார்த்தமாக கூற, வண்டி ஓட்டிக்கொண்டே கணேசன் அவனை என்னவோ போல் பார்த்தான்.

'என்னண்ணே பாக்குறே..?'

'அந்த பெட்டில ஒருவேளை ஏதாவது பொணம் இருக்குமோ..?' என்று கணேசன் ஒருமாதிரியாக கேட்டது முத்துவை கலவரப்படுத்தியது.

'ஏன்னே, பயமுறுத்துறே..? நான் எதேச்சையாத்தான் சொன்னேன்..'

'இல்லடா முத்து, ஆராய்ச்சிக்கூடத்துல அந்த விஞ்ஞானியோட பிணம் முழுசா கிடைக்கவேயில்லை, கருகிய நிலையில சில துண்டுங்க மட்டும்தான் கிடைச்சுதுன்னு பேப்பர்ல போட்டிருந்தாங்க... நீ சொன்னமாதிரி ஒருவேளை அந்த பொட்டில அந்தாளோட.. சே..! நான் ஏன் இப்படி நினைக்கிறேன். அந்த பொட்டியில அந்தாளு என்னாத்தை வச்சிருப்பான்னு தெரியாம மண்டையே பொளந்துறும்போல இருக்குடா..? அந்தாளு சாதாரணமான ஆளில்லை...'

'.. அதான் மேட்டரா... அதுக்கு நீ ஏன் டல்லடிக்கிறேன்னே..! வா, பொட்டியை திறந்து பாத்துருவோம்.'

'எப்படிடா, சீலடிச்சியிருக்கிதே? சீலை உடைச்சா, போலீசுங்க நம்மளை சும்மா விடமாட்டாங்கடா..'

'அட வாண்ணே, ஒரு கை பாத்துருவோம்.'

வண்டி மீண்டும் நின்றது. இருவரும் இறங்க, முத்து கையில் ஒரு குட்டி கடப்பாரையை எடுத்துக் கொடுத்தான். கணேசன் கையில் கடப்பாரையுடன் ஒரு 2 விநாடிகள் எதையோ யோசித்துவிட்டு, உடைத்துவிடலாம் என்ற முடிவுடன் கையை ஓங்கினான்.

'ஏய்.. நிறுத்து... பெட்டியை திறந்தே..! கொன்னுடுவேன்' என்று ஒரு அமானுஷ்யக் குரல் மிரட்டல் தொணியில் கேட்டது.

கணேசன், முத்து இருவரும் ஸ்தம்பித்தார்கள்.

'அண்ணே? உனக்கு ஏதாச்சும் குரல் கேட்டுச்சா.?'

'ஆமாண்டா.. யாரோ மிரட்டுற மாதிரி கேட்டுச்சு'

முத்து கொஞ்சம் தொண்டையை கணைத்துக் கொண்டு 'ஏய் யாருடா அது?' என்றான்.

'ஏய் டிரைவர் உன் பேரு என்ன?' மீண்டும் அமானுஷ்ய குரல் மிரட்டலாக கேட்டது.

'..ய்... ..யாரு... என் பேரு கணேசன்.... ..ஏன் கேக்குறே.. நீ பேயா?' என்று கேட்கும்போது கொஞ்சமாக சிரித்துக் கொண்டான். ஒருமாதிரி நடுக்கம் கலந்த சிரிப்பு.

'நான் ஒருவகையில பேய்தான். ARTIFICIALLY GHOSTIFIED'

'அண்ணே, பேய் உங்களை இங்கிலீஷ்ல திட்டுதுண்ணே' முத்து கலாய்த்தான்.

'கணேசன், நான் சொல்றதைக் கேளு, கடப்பாரையை கீழ போடு, பயப்படாத நான் உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன்' என்று குரல் மீண்டும் பேசியது

பயத்தில் தானாக கடப்பாரை வண்டியில் கீழே விழுந்தது.

'நி..நீ யாரு..'

'சொல்றேன். முதல்ல வண்டியை எடு. போற வழியில சொல்றேன்.'

கணேசன் முத்துவைப் பார்க்க, அவன் என்ன செய்யலாம் என்பது போல் பார்த்தான்.

வண்டி கிளம்பியது. முத்து பின்பக்கமாக பெட்டிக்கு அருகில் அமர்ந்திருந்தான். கணேசன் வண்டி ஓட்டிக்கொண்டே, தனக்கு இடதுபுற சீட்டைப் பார்த்தான், காலியாக இருந்து.

'என் பேரு கருணாகரன்' என்று அந்த காலி சீட்டிலிருந்து குரல் வந்தது.

'என்னது நீதானா... நீங்கதானா அந்த விஞ்ஞானி?' என்று கணேசன் முகம் மலர்ந்தான்.

'ஆமா'

'நீங்க இறந்துட்டதா பேப்பர்ல படிச்சேனே..?'

'ஆமா, ஒருவகையில அது உண்மைதான், என் ஆராய்ச்சி முழுவதுமா வெற்றியடையாததால நான் கிட்டதட்ட இறந்தவன்தான்.'

'ஒண்ணும் புரியலை சார்... உங்களை சார்..னு கூப்பிடலாம்ல..?'

'சிகரெட் இருக்கா..?'

'இல்ல.. பீடிதான் இருக்கு..'

'குடு..' என்று அந்த குரல் உரிமையாக கேட்க, கணேசன் எடுத்து பக்கத்து சீட்டுக்கருகே ஆள் அமர்ந்திருப்பதுபோல் நினைத்துக் கொண்டு தோராயமாக கொடுத்தான். பீடியை அந்த அருவம் வாங்கிக்கொண்டது. வத்திப்பெட்டி கொடுத்தான். வாங்கி பீடியை பற்றவைத்தது. புகை உள்ளே சென்று நுரையீரல் போன்ற வடிவத்தில் அமுங்கி மீண்டும் வெளியேறியதும் நாசித்துவாரத்திலிருந்து கசிந்த புகைக்கு மத்தியில் அந்த உருவம் தெரிந்தது. இதைப் பார்த்த கணேசனுக்கு என்னவோ போலிருந்தது.

'பயமாயிருக்கா..?'

'இல்ல சார், எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், நீ ஆளை மறையவைக்கிறேன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்ததெல்லாம் பேப்பர்ல படிச்சிருக்கேன். இப்பத்தான் காத்துல மறைஞ்சிட்டியே அப்படியே பேப்பர்ல சொல்லவேண்டியதுதானே..?'

'எந்த ஒரு ஆராய்ச்சிக்கும் மாத்து மருந்து இல்லாம வெளியிடக்கூடாது, அது பெரிய ஆபத்துல கொண்டு போய் விட்டுடும்.'

', அப்ப உன்னால திரும்பவும் மனுஷனாக முடியாதா..?'

'இதுவரைக்கும் முடியல..'

'அடப்பாவமே.. அப்ப என்னதான் பண்ணப்போறே..?'

'எனக்கு தனிமை தேவை, மக்களோட கேள்விகள், ரசிகர்களோட எதிர்ப்பார்ப்பு, எதிரிகளோட குடைச்சல், பணம் போட்டவங்களோட வற்புறுத்தல் இதெல்லாம் என்னை துரத்திக்கிட்டு இருக்கும்போது என்னால என் ஆராய்ச்சியில முழுமையா ஈடுபட முடியல, அதான், எனக்கு தேவையான விஷயங்கள் எல்லாத்தையும் ஒரு பெட்டில போட்டு அடைச்சிவச்சிட்டு, ஒரு உயிலை எழுதிவச்சிட்டு, ஒரு சின்ன ஏற்பாடு பண்ணிக்கிட்டேன். எனக்கு கொடைக்கானல் மலையில ஒரு தனி பங்களா இருக்கு, அங்கே போய் தனியா ஆராய்ச்சியை தொடரலாம்னு இருக்கேன்.'

'அங்கே உங்களை யாரும் வந்து தேடமாட்டாங்களா..?'

'நான்தான் உலகத்தைப் பொறுத்தவரைக்கும் இறந்தவனாயிட்டேனே..? என்னை யார் வந்து அங்க தேடப்போறாங்க... அப்படியே வந்தாலும், ஆவின்னு நினைச்சி பயந்து போயிடுவாங்க'

'நல்ல ஐடியாத்தான். ஆனா, இதையெல்லாம் ஏன், எங்கிட்ட சொல்றே.. சார்?'

'ஒருவேளை ஆராய்ச்சி பண்றப்போ, நான் உண்மையிலேயே இறந்துட்டா, ஒரு மனுஷனுக்காவது, நான் காத்துல மறைஞ்சது தெரியணும்மில்லியா.. அதான் சொன்னேன்'

'உண்மைதான் சார், பயங்கரமான ஆளு நீ..! உன்னை ஒண்ணு கேக்கலாமா..?'

'என்ன?'

'நீ எப்படி மாயமா மறைஞ்சேன்னு சொல்ல முடியுமா..?'

'சொன்னா உனக்கு புரியுமா..?'

'புரியறமாதிரி சொல்லேன், கேட்டுக்குறேன்'

'உனக்கு புரியமாதிரி சிம்பிளா சொல்றேன். நம்ம உடம்புல இருக்கிற இரத்தம்ங்கிற சிகப்பு திரவம்தான் உனக்கு திட உருவமும் வண்ணங்களையும் கொடுக்குது. உன்னை அடுத்தவன் பாக்கும்போது, உன்னை அவன் கண்ணுக்கு காட்டிக்கொடுக்கிறது இந்த இரத்தம்தான். நான் செஞ்சதெல்லாம் இரத்தத்துக்கு இணையான ஒரு செயற்கை திரவத்தை உருவாக்கினேன், அதுக்கு பேருஉயிர்மை’ன்னு வச்சிருக்கேன். அது உன் உடம்புல கொஞ்சம் கொஞ்சமா செலுத்தப்பட்டு அது உன் உடம்புல முழுமையா ஓட ஆரம்பிக்கும்போது, அடுத்தவன் கண்ணுக்கு உன்னோட நிறங்களை அனுப்பாது, அதனால உன் உருவமோ நரம்போ, கண்களோ எதுவுமே முன்னாடி நிக்கிறவனுக்கு தெரியாது... உனக்கு பின்னாடி இருக்கிற விஷயங்களின் நிறங்கள் உனக்குள்ள ஊடுருவி தெரியும். ஒரு மாதிரி ட்ரான்ஸ்பரன்ஸி ஸ்டேஜ். நான் சொல்றது உனக்கு புரியுதா..'

'புரியுது.. சார்? ஆனா, இரத்ததுல A க்ரூப், B க்ரூப்-னு எவ்வளவோ இருக்குதே.. அது எல்லாத்தையும் உன்னோட உயிர்மை மறைய வைக்குமா..?'

'கண்டிப்பா முடியும், இப்ப உதாரணத்துக்கு உன்னை நான் மறைய வைக்கணும்னா, உன் இரத்ததோட சேம்பிளும், உன் முதுகுத்தண்டுல ஒரு மாதிரி திரவம் வழியும், அதுதான் உனக்கு பேட்டரி மாதிரி, அதுலருந்து ஒரு சொட்டும் எடுத்துக்கிட்டு, உன் இரத்ததுல நிறங்கள் கொடுக்கக் கூடிய ஹீமோக்ளோபின்களை நீக்கிட்டு, என்னால உன் உடம்புக்கு எவ்வளவு வேணும்னாலும் உயிர்மை தயாரிக்க முடியும்'

'சரி, எதுல உயிர்மையை செய்வே.. அதாவது இப்ப எனக்கு 6 லிட்டர் தேவைன்னா, தண்ணில கலக்குவியா?'

'பரவாயில்லியே... ஸ்டியரிங் பிடிக்கிறதைத் தவிர பல விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கே..! சொல்றேன்... உயிர்மைக்கு மூலப்பொருள் தண்ணிதான், ஆனா குடிக்கிற தண்ணியில்ல... பதப்படுத்தப்பட்ட கடல்தண்ணி..'

'கடல் தண்ணியா..?'

'ஆமா, கடல்தண்ணில உருவான பாக்டீரியாவிலருந்துதான் இந்த பூமியில பரிணாமம் ஆரம்பிச்சிருக்கு, நாம எல்லாருமே ஒருவகையில கடல் தண்ணியிலருந்துதான் பிறந்திருக்கோம். அதனாலதான் நம்ம இரத்தமும் உப்புக்கரிக்குது. அதனால, கடல்தண்ணியத்தான், நான் இரத்தத்துக்கு மூலப்பொருளா உபயோகிக்கிறேன்'

'செம்ம மேட்டரு சார்.. ஆனா, நீங்க தயாரிக்கிற உயிர்மையை உடம்புலருந்து நீக்கிட்டு இரத்தத்தை செலுத்துனா காத்தலு மறைஞ்சியிருக்கிற நீ, மனுஷனா மாற முடியாதா..?'

'அதுதான் நடக்கமாட்டேங்குது... அங்கதான் இடிக்குது. இவ்ளோ கஷ்டப்பட்டு நான் செஞ்ச உழைப்பெல்லாம் வீணா போயிடுமோன்னு பயமாயிருக்கு' என்று புலம்பியவாறே கருணாகரன் அருவமாய் மிகவும் ஃபீல் செய்து கொண்டிருந்ததை கணேசனால் உணர முடிந்தது.

'ஃபீல் பண்ணாத சார்... இந்தா இன்னொரு பீடி அடி' என்று இன்னொரு பீடியை கொடுத்தான்.

மீண்டும் புகைக்குள் கருணாகரன் தெரிந்தார்.

'சார், நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்கமாட்டீங்களே..?'

'கேளுப்பா?'

'இல்லை! நீங்க என் உடம்புலருந்து சில சொட்டுக்களை மட்டும் எடுத்துக்கிட்டு எவ்வளவு வேணும்னாலும் உயிர்மைங்கிற திரவத்தை தயாரிக்கலாம்னு சொன்னீங்க இல்லியா..?'

'ஆமா..?'

'அதுல நிறம் கொடுக்கிற விஷயங்களை நீக்காம, அப்படியே உயிர்மையை நீ தயாரிச்சா, அது கிட்டத்தட்ட ஒரு மாற்று இரத்தம்தானே..?'

'அ..ஆமா'

'அதை நீங்க செலுத்தி, யாரையும் மாயமா மறையவைக்க முடியாவிட்டாலும், ஒருத்தரை உயிர்வாழ வைக்கமுடியும் இல்லியா..?'

'முடியும். கண்டிப்பா முடியும் ஆனா, அதனால என்ன..?'

'சார், உங்களுக்குத்தான் நான் கேக்குறது புரியலைன்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் உலகத்துல, யாராவது இரத்தத்துக்கு மாற்று திரவத்தை கண்டுபிடிச்சியிருக்காங்களா..?' என்று கணேசன் கேட்டதும் ஒரு சின்ன நிசப்தம் நிலவியது.

'..இல்ல..' என்று அருவம் பதில் சொன்னது.

'நீங்க அப்போ இரத்தத்துக்கு மாற்று திரவத்தை கண்டுபிடிச்சியிருக்கீங்க அப்படித்தானே..?'

'..ஆமா..' என்றது அந்த அருவம் குதூகலத்துடன்.

'அப்போ, இனிமே யாருக்காவது இரத்தம் தேவைப்பட்டா, இரத்த வங்கில இல்லன்னாலும், நீங்க சொல்ற உயிர்மையை செலுத்தி அவங்களை காப்பாத்த முடியுமில்லியா..?'

'கண்டிப்பா..! கண்டிப்பா முடியும்..', மீண்டும் குதூகலம்.

'இதுதானே நம்ம மனுஷங்களுக்கு அத்தியாவசியத் தேவை..'

'.........

‘இது வரைக்கும் மனுஷனுக்குள்ளியே பகிர்ந்துக்கிட்டிருந்த ஒரு விஷயத்துக்கு மாற்று கிடைச்சிருக்கு..! நீ ஒருத்தரை காத்துல மறையவைக்கிறதுகூட பெரிசில்ல சார், மாற்று இரத்தம்தான் சார் பெரிய மேட்டரு...’ என்று பீடி இழுத்தபடி கணேசன் சாதாரணமாக சொல்ல... சில சமயம், பயங்கரமாக யோசிக்க ஆரம்பித்து சாதாரணமாக யோசிக்கவேண்டியதை கோட்டைவிடுவது பற்றி எண்ணி அந்த அருவம் அலுத்துக்கொண்டது.

சே! இது எனக்கு தோணாம போயிடுச்சே..! நான் பாட்டுக்கு கடிவாளம் கட்டுனமாதிரி ஒரே கோணத்துல யோசிச்சிட்டிருந்திருக்கேன். நீ டிரைவரா இருக்க வேண்டிய ஆளே இல்லப்பா, உண்மையிலேயே எனக்கு சரியான கோணத்தை காமிச்சிருக்கே.!' என்று அந்த அருவம் கணேசனை கட்டிப்பிடித்தது. கணேசன் வண்டி ஓட்டிக்கொண்டே தொடர்ந்தான்.

'மிலிட்டரிக்கு வேணும்னா உங்க அருமை தெரியாம போயிருக்கலாம். ஆனா, எனக்கு தெரியும் சார்.'

'கணேசன்?'

'சொல்லு சார்..'

'இப்போ எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா..? ஒவ்வொரு விஞ்ஞானியும் தன் வாழ்நாள்ல ஏதாவது புதுசா செஞ்சிட்டுத்தான் சாகணும்னு வைராக்கியத்தோட இருப்பாங்க. நானும் அதே வைராக்கியத்துல இராத்திரி பகலா தூங்காம உழைச்சேன், ஆனா, குருட்டுத்தனமா இருந்திருக்கேன்னு இப்பத்தான் புரியுது. ஆனா, நீ கேஷூவலா எனக்கு உணர்த்தியிருக்கிற விஷயம், எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா..?’

‘என்ன சார் சொல்றே, நீ தூங்கி பல நாளாச்சா..?’

‘ஆமாப்பா, நான் ஒரு INSOMNIAC’

‘அப்படின்னா சார்..’

‘அது வந்து..’ என்று சொல்ல வாயெடுத்தவர் என்ன நினைத்தாரோ... அதைப்பற்றி சொல்லாமல், ‘விடுப்பா, ஒண்ணுமில்ல. என்னைப் பொறுத்தவரைக்கும் அர்ஜீனுக்கு சாரதி உபதேசம் செஞ்சமாதிரி நீ எனக்கு செஞ்சிருக்கே’

'அதெல்லாம் விடு சார், நீ அப்படியே ஜம்முன்னு தூங்கு சார், நாளைக்குள்ள, உன்னை உன் கொடைக்கானல் பங்களாவுல இறக்கிவிடுறேன். உன் உழைப்பு வீண்போவாது சார், நீ மறுபடியும் உருவத்தோட அலையத்தான் போறே..' என்று கணேசன் கூற, மீண்டும் அமைதியான பயணம், அந்த அருவம் அமைதியாக தூங்கிப்போயிருந்ததை கணேசனால் உணரமுடிந்தது...

கணேசன் மீண்டும் ரியர்வியூ கண்ணாடியில் பார்த்தான், முத்து அந்த பெட்டியில் சாய்ந்தபடி தூங்கிக்கொண்டிருந்தான். ஒன்றுமே நடக்காததுபோல் கணேசன் வண்டியைத் தூங்காமல் தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருந்தான்...

- விடியும் -


Signature

15 comments:

அகல்விளக்கு said...

நல்லாருக்கு நண்பரே...

Raghu said...

ஹ‌ரிஷ், என்ன‌ இது, திடீர்னு ப‌திப்ப‌க‌ம் பேர்லாம் வெச்சு க‌தை எழுத‌றிங்க‌...:)

ஆர‌ம்ப‌த்துல‌ருந்து ந‌ல்ல‌ ஃப்ளோ, ஆனா முடியும்போது கொஞ்ச‌ம் dryயா இருக்க‌ற‌ மாதிரி ஒரு ஃபீல்

வேங்கை said...

நல்லாருக்கு ஹ‌ரிஷ்,

தொடர்ந்து எழுதவும்

வாழ்த்துக்கள்

DREAMER said...

வாங்க ராஜா,
பாராட்டுக்கு நன்றி...

--------------------

வாங்க ரகு,
எல்லாக்கதையையும் Twistஓட முடிக்கவேண்டாமேன்னு, SCI-FI ECSTASYயோட முடிச்சிட்டேன்.

--------------------

வாங்க வேங்கை..
வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி,
//தொடர்ந்து எழுதவும்//
கண்டிப்பா எழுதுறேன்...

-
DREAMER

KVPS said...

கதை நல்லா இருக்கு! தத்ரூபமா இருக்கு!

DREAMER said...

வாங்க கிருலா...
வாழ்த்துக்கும் வாசிப்புக்கும் நன்றி...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என் கதைக்கு பின்னூட்டமிட்டு என்னை encourage செய்ததற்கும் ஒரு நல்ல எழுத்தாளனை (நீங்க தான்) எனக்கு அறிமுகம் செய்ததற்கும் நன்றி. நான் அனுபவித்து எழுதிய கதை. இத்தனை பேர் பார்த்தும் ஏன் பின்னூட்டம் குறைவாய் இருக்கிறதுன்னு எண்ணிக் கொண்டிருந்தேன். உங்கள் வார்த்தைகள் நிறைவு செய்து விட்டன. நன்றி. கதையின் ஹீரோ கருனாகரனா இல்லை இல்லை கணேசன் தான் . நல்ல கதை.

"உழவன்" "Uzhavan" said...

கதை ரொம்ப நல்லாருக்கு :-)

தேவன் மாயம் said...

நல்ல கதை!! பிரமாதமான சிந்தனை!!

DREAMER said...

நாய்க்குட்டி மனசு,
வாங்க, வருகைக்கும் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

-------------

வாங்க உழவன்,
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

-------------

வாங்க தேவன் மாயம்,
மிக்க நன்றி... நீங்கள்லாம் படித்து பாராட்டுவதால்தான் எழுத்து தொடர்கிறது... நன்றி, தொடர்ந்து வாருங்கள்.

-
DREAMER

Raghu said...

//Twistஓட முடிக்கவேண்டாமேன்னு, SCI-FI ECSTASYயோட முடிச்சிட்டேன்//

ப்ளிஸ், எதுவாயிருந்தாலும் த‌மிழ்ல‌ திட்டுங்க‌:))

DREAMER said...

வாங்க ரகு..!
ட்ஹேமல்(tamil)ல்ல திட்னும்னா... Well... எப்படி சொல்றெது... ஆங்.. ஆக்சுவலி... ட்ஹேமல்ல்ல... வாட் யூ சே தட்... சாரி, என்க்கி ட்ஹேமல்(tamil) டெரியாதூ...

வாழ்க தமிழ்..!

-
DREAMER

பத்மஹரி said...

ஹரீஷ்,
கலக்கலோ கலக்கல்! என் வலைப்பக்கத்துல உங்க தன்னடக்க மறுமொழியைப் பார்த்துட்டு உங்க சிறுகதையைப் படிக்க வந்தா......யப்பா, Sci-Fi-ல சும்மா பின்னிப் பெடலெடுக்குறீங்க நண்பரே!
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! வருங்கால "தமிழ்நாட்டு" டான் பிரவுனாக வர வாழ்த்துக்கள்!
ஆமா, உங்களோட மத்த சிறுகதைகள் எல்லாம் புத்தகமா/இ-புக்கா கெடைக்குமா? அப்படி கிடைக்கும்னா சொல்லுங்க ஹரீஷ்!
மீண்டும் சந்திப்போம்! நன்றி.

DREAMER said...

வாங்க ஹரி சார்...
முதல்வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இதுதான் நான் எழுதுற முதல் SCI-Fi கதை... நல்லாயிருக்குன்னு உங்களை மாதிரி நண்பர்கள் ஊக்கம் கொடுப்பதால், இனி தைரியமா நிறைய எழுதுவேன். மிக்க நன்றி...
என்னோட மற்ற கதைகளை தொகுப்பெடுத்து PDFஆ உங்களுக்கு இமெயில் அனுப்பியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது படிச்சிப்பாருங்க...

-
DREAMER

ranjitha said...

hii..ur story is good..bt it is more like "The Invisible" novel by H.G.Wells.

Popular Posts