பாகம் - 3
தந்தி பேப்பர் ஆஃபீசுக்கு ஃபோன் செய்து நெருங்கிய உறவினன் என்று பேசி அந்த விளம்பரம் கொடுத்தவர்களின் முகவரி வாங்கினான். பைக்கில் அந்த முகவரியில் இருந்த வீட்டிற்கு சென்று பார்க்க, அந்த வீட்டு ஹாலின் நடுவில், மேஜையில் அதே புகைப்படம், வீடே சூன்யமாக இருந்தது. உள்ளே செல்லாமல் திரும்பினான்.
அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல், தனக்கு முன்னாள் செல்ஃபோன் கண்டெடுத்த, அதே ரோட்டுக்கு விரைந்தான்.
செல்ஃபோன் கிடைத்த நாளன்று நின்ற அதே இடத்தில் பைக்கை நிறுத்தினான். ஒரு பத்தடி பின்னுக்கு நடந்துவந்து பார்க்க, அங்கே அடிப்பட்டு இறந்த ஒருவரின் உருவம் போன்ற க்ரைம்சீன்மேப் வரையப்பட்டிருந்தது.
சாலையின் மறுபக்கம், ஒரு இஸ்திரிக்கடை இருந்தது.
அதை நோக்கி சென்றான்.
'அண்ணே, இங்கே 2 நாள் முன்னாடி ஏதாவது விபத்து நடந்திச்சா..?'
'ஆமாப்பா... சரியா 2 நாள் முன்னாடி ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு, செல்ஃபோன்ல பேசிக்கிட்டே வந்துச்சு... லாரி மோதி ஸ்பாட்லியே இறந்துப்போச்சுப்பா... பாவம் அழகான பொண்ணு... வாழவேண்டிய வயசுல, பாழாப்போன செல்ஃபோன்னால செத்துப்போச்சு.. மனசே கேக்கலை, கடைய மூடிட்டு போயிட்டேன். இன்னிக்கித்தான் வர்றேன்.' என்று அவன் கூற, ரகுவிற்கு என்னவோ போலிருந்தது.
தனது பைக்கை நெருங்கினான். அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்க... செல்ஃபோன் ஒலித்தது. அதே புல்லாங்குழல் ரிங்டோன்.
நிரூபா காலிங்... என்று டிஸ்ப்ளேயில் தெரிந்தது.
ரகு பதறிப்போனான்.
எடுக்கலாமா..? வேண்டாமா..?
வேண்டாம்.. என்று தீர்மானித்து Callஐ சைலண்ட்டில் போட்டான்.
இதென்ன கொடுமை...? இறந்தவள் எப்படி என்னிடம் நேற்று பேசினாள். நானும் அவளிடம்.. சே..! என்னென்னமோ பேசிவிட்டோமே..!
மீண்டும் ஒலித்தது. தூரத்திலிருந்த அந்த இஸ்திரிக்கடைக்காரர் ரகுவை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ரகு திரும்பிக் கொண்டான்.
ஒருமாதிரியாக சுதாரித்துக் கொண்டு, மூச்சை பலமாக விட்டுக்கொண்டு Callஐ உயிர்பித்தான்.
'ஹ.....லோ...'
'ஹே ரகு, என்னடா ஃபோனே எடுக்கமாட்டேங்கிறே..?..'
'.....'
'ஹே ரகு.... இருக்கியா..'
'ஆ...ஆங்.... இரு...க்...கேன்..'
'என்னாச்சு உனக்கு..?'
'ஒண்ணு....யில்ல.... ஆஃபீஸ்...ல...ருக்கேன்.... நா.ன்... அப்றம்....பே...ஸ்...ரென்..'
'ஓ.. சரி... சரி... ஓகே.. பை..' என்று இணைப்பு கட் ஆனது
ரகுவிற்கு உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. முதலில் அங்கிருந்து கிளம்பினான். ஹெல்மெட்டை போடாமல் பெட்ரோல் டேங்கின்மீது வைத்தபடி பைக் ஓட்டிக்கொண்டு போனான்.
அவளிடம் பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது.
தினத்தந்தி பேப்பரில் கண்ணீர் அஞ்சலி ஃபோட்டோவிலிருந்து நிரூபா ரகுவைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது. பைக்கை நிறுத்தினான்.
அருகில் ஒரு கோவில் தெரிந்தது... ஆறுதலாக இருந்தது... சின்ன வயதிலிருந்து பார்த்த பேய் படத்தில் க்ளைமேக்ஸில் கோயில்களில் முடிவு சுபமாய் முடிவது போல் பார்த்ததெல்லாம் அவனுக்குள் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் ஓடிக்கொண்டிருந்தது.
பைக்கிலிருந்து இறங்கினான். கோயில் குளம் தெரிந்தது. பாக்கெட்டிலிருந்து ஃபோனை எடுத்துப் பார்த்தான். நிரூபாவின் ஃபோட்டோ தெரிந்தது. இறந்தவளை காதலித்துவிட்டோமே என்ற மடத்தனம், கோபம், பயம் எல்லாம் கலந்து ஓடிக்கொண்டிருக்க.. அந்த செல்ஃபோனை தூக்கி கோயில் குளத்தில் எறிந்தான். தூரத்தில் ஒருவர் மட்டும் அதை வித்தியாசமாக பார்த்தார். உடனே ரகுவை நோக்கி அவர் ஓடிவந்தார்.
'ஏய் தம்பி...நில்லு... ஏய்... என்னத்தை குளத்துக்குள்ள போட்டே..' என்று அந்த ஆள் ரகுவை நெருங்கிக் கொண்டிருக்க... ரகு பைக்கில் ஏறி வேகமாக அங்கிருந்து நழுவினான்.
மீண்டும் தனது அபார்ட்மெண்டுக்கு வந்தடைந்தான். பார்க்கிங்கில் பைக்கை பார்க்க செய்யும்போது, செல்ஃபோன் ஒலித்தது. அதே புல்லாங்குழல் ரிங்டோன் கேட்டது. திடுக்கிட்டு தனது பாக்கெட்டை பார்த்தான். அவனது செல்போன்தான் இருந்தது. அதுவும் அமைதியாக, வேறு எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்க்க, சற்று தள்ளி இன்னொருவர் பைக்கை பார்க் செய்து கொண்டிருக்க, அவரது செல்ஃபோனில் அதே ரிங்டோன் ஒலித்துக் கொண்டிருந்தது.
'ஆங்.. சொல்லுமா.. சரி, சரி, வரும்போது வாங்கிட்டு வந்துடுறேன்..' என்று அவர் சகஜமாக பேசியபடி நகர்ந்து செல்ல, ரகு அமைதியானான்.
வீட்டுக்குள் வந்தான். தந்தி பேப்பரில் மீண்டும் அந்த விளம்பரத்தை பார்க்க புரட்டினான். ஆனால், பார்க்காமல், அந்த பேப்பரை குப்பைக்கூடையில் எறிந்தான். திரும்பிச் சென்று ஃப்ரிட்ஜைத் திறந்து தண்ணீர் குடித்தான். குடித்துக் கொண்டே குப்பைக்கூடையைப் பார்த்தான். அந்த பேப்பர் அவன் கண்களை உறுத்தியது. மீண்டும் அந்த பேப்பரை குப்பைக்கூடையிலிருந்து உறுவியெடுத்தான்.
கிச்சனுக்கு சென்று, Gas Stoveஐப் பற்ற வைத்து அதில் தந்திபேப்பரை காட்டினான். எரிந்தபடியே அதை கொண்டுவந்து டாய்லெட் க்ளாஸெட்டுக்குள் போட்டு ஃப்ளஷ் செய்தான்.
ஹாலுக்கு சென்று சோஃபாவில் அமர்ந்தான். டிவியை உயிர்ப்பித்தான்.
'செல்ஃபோன் விளம்பரம் ஓடியது..'
கடுப்படைந்து டிவியை அணைத்தான். அப்படியே சோஃபாவில் சாய்ந்தபடி தூங்கிப்போனான்.
ஆழ்ந்த தூக்கம்...
திடீரென்று புல்லாங்குழல் ரிங்டோன் கேட்டது. பதறியபடி கண்விழித்தான்.
கடிகாரம் 2.30 என்று காட்டிக்கொண்டிருந்தது. அந்த புல்லாங்குழல் ரிங்டோன் வரும் திக்கை நோக்கி நடந்தான். பெட்ரூமில் தனது கட்டிலில் அவன் கோவிலில் தூக்கியெறிந்த செல்ஃபோன் முழுதாக சேதாரமில்லாமல் தலையணையில் படுத்திருந்தது.
குழம்பினான். ஒருவேளை தன்னை பைக்கில் கிளம்பும்போது துரத்திய கோவில் நபர் கொண்டுவந்து போட்டிருப்பாரோ.. அதெப்படி சாத்தியம். இப்படி பல எண்ணங்களுடன் செல்லை எடுத்துப் பார்த்தான்.
நிரூபா காலிங்.. என்றிருந்தது.
Callஐ கட் செய்தான்.
மீண்டும் ஒலித்தது.
இம்முறை டிஸ்ப்ளேயில் YOUR'S LOVELY NIRUPA Calling என்று வந்தது. பயந்தான். ஃபோனை எடுப்போமா வேண்டாமா என்று குழம்பினான்.
இப்போது I LOVE YOU என்று வந்தது. வெறுப்படைந்தான். ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.
அமைதியாகயிருந்தது.
ஃபோனை கட்டிலில் கடாசிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான். மீண்டும் ஃபோன் ஒலித்தது.
பயந்தபடி திரும்பிச் சென்று பார்த்தான்.
டிஸ்ப்ளேயில் DON'T PLAY WITH ME என்று வந்தது. கோபத்தில் செல்ஃபோனை தூக்கி தரையில் சிதறடித்தான்.
உடைந்து போய் துகள்கள் தனித்தனியே இருந்தது.
கட்டிலில் பொத்தென்று விழுந்தான்...அழுகை வந்தது... அழுதான்.
மீண்டும் ரிங்டோன் ஒலித்தது.
அடக்கடவுளே... என்று எழுந்து பார்த்தான். எல்லாத் துகள்களும் தனித்தனியேயிருக்க, அந்த புல்லாங்குழல் ரிங்டோன் மட்டும் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
தலையணையை எடுத்து முகத்தையும் காதையும் மூடிக்கொண்டான். உள்ளிருந்தபடி குலுங்கி குலுங்கி அழுதான்.
அழுதபடியே தூங்கிப்போனான்.
மறுநாள் விடிந்தது. ஏன்தான் விடிந்ததோ என்று ரகுவிற்கு தோன்றியது.
எல்லாம் கனவா, இல்லை உண்மையா என்ற நினைப்பில் கண்விழித்தவன், தனது கட்டிலுக்கருகே இருக்கும் மேஜையைப்பார்த்தான். முன்னாள் இரவு உடைந்திருந்த செல்ஃபோன், முழுசாய் மேஜையில் படுத்திருந்து. நடந்தவை அனைத்தும் நிஜம்தான் என்று நினைவூட்டி ரகுவைக் கலவரப்படுத்தியது.
எடுத்துப் பார்த்தான்.
ONE MESSAGE(S) RECIEVED என்றிருந்தது.
அதில்...
(தொடரும்...)
5 comments:
ஹர்ர்ர்ர்ர்ரீஷ்,
ஆஹா.... நம்மள எதுவும் காமெடி பீஸாக்கிடாதிங்க :)))
முதல் பாகத்துல இருந்து இந்த பாகம் வரை இப்பதான் படிச்சு முடிச்சேன். செம விறுவிறுப்பு....அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்!
வாங்க ரகு,
//ஆஹா.... நம்மள எதுவும் காமெடி பீஸாக்கிடாதிங்க //
நோ நோ, ஹாரர் (ரெஸ்ட் இன்) பீஸ்தான்..!
அன்பில், உங்கள் பேரையும் தினேஷ் பேரையும் யூஸ் பண்ணியிருக்கேன். மத்தபடி உங்க கேரக்டரைஸேஷனை இவங்களுக்கு அப்ளை பண்ணலை, (அது வேற கதைக்கு வச்சிருக்கேன்).
ஆனா, உண்மை என்னன்னா ரகு (உங்களுக்கு தெரிஞ்சதுதான்), உங்க பேச்சுலர் லைஃப் ஸ்டைல், நீங்க அந்த தனியா ரூம்ல தங்குறது, இதெல்லாம், நிறைய கதை யோசிக்க கருவா அமையுது... ஒருத்தன் மாடில அர்த்த ராத்திரியில சுடுதண்ணி ஊத்தி குளிக்கிற கதை சொல்லியிருக்கேனே..! அதையும் எழுதலாம்னு இருக்கேன்.
அடுத்த பாகத்தை சீக்கிரம் போடுகிறேன்..!
-
DREAMER
வேற ஒருத்தர் போனலயிருந்து போன் வரும் போது நிருபமா காலிங் எப்படி வரும்.. அப்பவே டவுட் வந்தது....
காதல் டயலாக்செல்லாம் கலக்கிட்டீங்க, மூன்று பாகமும் இப்பதான் படிச்சேன்... நல்லா கதை உடறீங்க... சூப்பர் :)
நன்றி அஷோக்,
சின்ன வயசுல, ஸ்கூல்ல லீவு போட்டுட்டு, அடுத்த நாள் டீச்சர் 'ஏண்டா நேத்து வரலே'ன்னு கேக்கும்போது, நாம கதை சொல்ல ஆரம்பிப்போம் பாருங்க..! அதுதான் இன்னி வரைக்கும் கன்டினியூ ஆகுது..!
வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி! அடுத்த பாகத்துல முடிச்சிடுறேன்..! தொடர்ந்து வாருங்கள்!
-
DREAMER
ஹலோ ட்ரீமர், கதை சூப்பரா போகுது. ஆனால் ஏனோ followers க்கு dashboard ல வரவில்லை. பட் அடுத்த பாகம் வந்திட்டுது. அதே பிரச்சினை எனக்கும் இருக்கு. ஒரு கதை போஸ்ட் பண்ணி இருக்கிறேன் dashboard ல வரவில்லை
Post a Comment