Friday, March 26, 2010

நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் - 1 [தொடர்கதை]



பாகம் 1

'கிர்ர்ர் கிர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....'

'கிர்ர்ர் கிர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....'

திடீரென்று இதயத்தில் கிர்ர்ர் என்று ஏதோ ஒருவித நடுக்கம் ஏற்பட்டதும், பைக் ஓட்டிக்கொண்டிருந்த ரகு பதறிப்போனான். பாக்கெட்டிலிருக்கும் மொபைல் வைப்ரேட் ஆகிறது என்பதை அடுத்த கணமே உணர்ந்துக் கொண்டாலும், மேல்பாக்கெட்டில் ஃபோனை வைக்ககூடாது, அதுவும் இதுபோல் வைப்ரேஷன் இதயத்திற்கு அறவே ஆகாது என்று தந்தியில் 'தினம் ஒரு தகவல்' பகுதியில் படித்தது நினைவுக்கு வந்தது.

பைக்கை ஓரங்கட்டி நிறுத்தினான். ஆனால், செல்ஃபோன் தொடர்ந்து வைப்ரேட் ஆகிக்கொண்டிருந்தது.

'கிர்ர்ர் கிர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர....'

அவசரமாக பாக்கெட்டிலிருந்து ஃபோனை எடுத்து ஆன் செய்தான்.

'ஹலோ...' குரலில் கொஞ்சம் கோபம் காட்டினான்.

'மிஸ்டர் ரகு..'

'ஹோல்டிங்...'

'சார் நாங்க xxxxxx பாங்க்லருந்து பேசுறோம்... சார் நாங்க மிகவும் குறைஞ்ச இன்ட்ரஸ்ட்ல லோன் கொடுக்கிறோம்...' என்று அவள் பேசிக்கொண்டே போக...

'எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல, I am on Drive, do not disturb please.."

"சாரி சார்..' என்று மறுமுனையில் குரலில் அழகுகாட்டியவள் ஃபோனை வைத்துவிட்டாள்.

'ச்சே..! நேரங்காலமில்லாம ஃபோன் பண்றதே இவங்களுக்கு பொழப்பாயிடுச்சு..' என்று அங்கிருந்து கிளம்ப எத்தனித்தபோது... மீண்டும் செல்ஃபோன் ஒலித்தது. இம்முறை அவனது செல்ஃபோனில்லை...

அருகில் எங்கிருந்தோ ஒருவிதமான புல்லாங்குழல் இசைபோன்ற ரிங்டோன். கேட்டது... வேறெங்கிருந்து ஒலி வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் 'பைக்'குக்கு கீழே ரோட்டில் ஒரு காஸ்ட்லி செல்ஃபோன் விழுந்திருந்தது. அதுதான ஒலித்துக்கொண்டிருந்தது.

குழப்பத்துடன் குனிந்து அந்த ஃபோனை எடுத்துப் பார்த்தான். SAMSUNG 5230 டச் ஸ்க்ரீன் மாடல். இவ்வளவு காஸ்ட்லி ஃபோனை யாரோ தவறவிட்டிருக்கிறார்களே.. என்று யோசித்துக் கொண்டே எடுத்தான்... காலிங் நிரூபா.. என்றிருந்தது.

இணைப்பை உயிர்ப்பித்தான்.

'..லோ..' ஒரு இனிமையான பெண்குரல் கேட்டது.

'சொல்லுங்க...'

'என் பேரு நிரூபா.. இந்த ஃபோன் என்னோடதுதான் சார், நான் இதை மிஸ் பண்ணிட்டேன்.. நீங்க திருடரா..?' என்று அந்த குரல் கூறவும், ரகு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

ஆனாலும், குரலில் கடுமை காட்டியபடி, 'ஹலோ.. மேடம் மைண்ட் யுவர் வேர்ட்ஸ், நான்... வந்து... ரோட்டுல இந்த ஃபோன் கிடந்ததேன்னு எடுத்தேன். திருப்பிக்கொடுக்க யாருக்கு ஃபோன் பண்ணலாம்னு யோசிக்கிறதுக்குள்ள உங்க ஃபோன் வந்துச்சு..'

'சாரி சார், இது என்னோட ஃபோன்தான். SAMSUNG 5230 மாடல்டிஸ்ப்ளேல .ஆர்.ரஹ்மான் ஃபோட்டோ இருக்கும். Inbox 7 மெசேஜ் இருக்கும். நீங்க வேணும்னா செக் பண்ணி பாருங்க.. நேத்து நான் இந்த ஃபோனை மிஸ் பண்ணிட்டேன். அதான் ஒருவேளை யாராவது திருடியிருப்பாங்களோங்கிற டவுட்ல அப்படி கேட்டுட்டேன். அம் எக்ஸ்டீரீம்லி சாரி..'

'இட்ஸ் ஓகே.. நீங்க ஒண்ணு பண்ணுங்க, உங்க அட்ரஸ் கொடுங்க நானே வந்து கொடுத்துட்டு போயிடுறேன்...'

'ஐயோ, உங்களுக்கெதுக்கு சார் சிரமம்..'

'அப்ப நான் ஒரு இடத்தை சொல்றேன் வந்து வாங்கிக்கோங்க...'

'சரி சார், ஆனா இன்னிக்கி முடியாது...'

'ஏன்..?'

'நான் இன்னைக்கி அவுட் ஆஃப் ஸ்டேஷன்ல இருக்கேன். என் ஃப்ரெண்டு மேரேஜுக்காக நெல்லூர் வரைக்கும் வந்திருக்கேன். நான் 2 நாள்ல அங்க வந்துடுவேன். வந்ததும் நீங்க எங்க சொல்றீங்களோ அங்க வந்து வாங்கிக்கிறேன் சார்..'

'ஓகே..'

'ரொம்ப தேங்க்ஸ் சார்..'

'இட்ஸ் ஓகே... பை..' என்று ஃபோனை கட் செய்தான். செல்ஃபோனை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கிளம்பினான்.

ரகு, மதுரையை அடுத்துள்ள நெடுங்குளத்தை சேர்ந்தவன். 2 வருடத்திற்கு முன்புதான் சென்னைக்கு வந்தான். MSC... முடித்துவிட்டு MNC நல்ல உத்யோகம். மாதம் 25ஆயிரம் சம்பளம்... வீட்டிற்கு 10 ஆயிரம் அனுப்பிவிடுவான். மீதி 15 ஆயிரத்தில் பயங்கர செலவுகள் செய்பவன்... ஹமாம்(நேர்மையான) பேச்சுலர்...

தனது அபார்ட்மெண்ட் வாசலுக்கு வந்து பைக்கை பார்க்க செய்தான், மீண்டும் ஃபோன் வந்தது. அதே புல்லாங்குழல் சத்தம்.

காலிங் நிரூபா...

'ஹலோ...?'

'சார், சாரி உங்களை மறுபடியும் டிஸ்டர்ப் பண்றேன்னு நினைக்காதீங்க... உங்களுக்கு சிரமமா இருந்தா நான் வேணும்னா என் வீட்டு அட்ர்ஸ் சொல்றேன் கொரியர் அனுப்பிடுறீங்களா..?'

'எனக்கு ஒரு டிஸ்டர்பன்சும் இல்லை... நீங்க திரும்பி வந்தே ஃபோனை வாங்கிக்கோங்க..'

'அப்படியா..? சரி சார்... எனக்கு ஃபோன் தொலைஞ்சாலும் ஃபீல் பண்ணமாட்டேன். ஆனா, இந்த ஃபோன் நான் ரொம்பவும் பாத்து பாத்து வாங்குனது. அதுல என் ஃபோட்டோகிராஃப்ஸ், ஃப்ரெண்ட்ஸோட கான்டாக்ட் நம்பர் இதெல்லாமும் இருக்கு'

'இட்ஸ் ஓகே, கென் அண்டர்ஸ்டேன்டு...' என்று கூறியபடி ரகு, தனது 3வது தளத்திலிருக்கும் ஃப்ளாட்டுக்கு வந்து கதவைத்திறந்துக் கொண்டிருக்க, நிரூபா, பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.

'தூங்கும்போதுகூட, செல்ஃபோனை பக்கத்துல வச்சிட்டுத்தான் தூங்கியிருக்கேன், அந்தளவுக்கு ஒரு மெட்டீரியலிஸ்டிக் அட்டாச்மெண்ட்'

'பொதுவா பொண்ணுங்கள்லாம் கரடி பொம்மையத்தானே கட்டிபிடிச்சிக்கிட்டு தூங்குவாங்க..'

'அதெல்லாம் சும்மா சார், வெறும் சினிமா ஹீரோயின்ஸ்தான் அந்தமாதிரில்லாம் பண்ணுவாங்க... நிஜத்துல பொண்ணுங்க அந்த மாதிரியில்ல..'

'வேறெந்தமாதிரி..'

'
எக்ஸ்க்யூஸ்மி..?'

'சாரி, நான் ஏதோ ஞாபகத்துல கேட்டுட்டேன். கொஞ்சம் ஓவரா பேசிட்டேனோ..?'

'நோ, நோ, டோன்ட் மைண்ட்... நீங்க ஃப்ரெண்டலியா பேசுறது இன் ஃபாக்ட் எனக்கும் பிடிச்சிருக்கு..'

'ரியலி..'

'யெஸ், இங்க எல்லாரும் தெலுகுவாடு... எனக்கு பேச்சுத்துணையே யாருமில்ல... உண்மையச் சொல்லணும்னா, மொக்கை போடுலாமேன்னுதான் ஃபோன் பண்ணேன்...'

'போடுலாமே..'

'வாட்...'

'அதான், மொக்கை போடுலாம்னீங்களே.. அதான் போடுலாமே.. நானும் ஃப்ரீயாத்தான் இருக்கேன்னு சொன்னேன்..'

'.. அதுவா... ஷ்யூர்... சரி, நான் என் பேரு நிரூபான்னு சொல்லிட்டேன். உங்க பேரு என்ன..?'

'ரகு..' என்று தனது டிஷர்ட், பேண்ட்டை கழற்றி, ஷார்ட்சுக்குள் புகுந்தபடி பேசினான்.

'நைஸ் நேம்.. என்ன பண்றீங்க..?'

'நான் இப்போத்தான் பேண்ட்டை கழட்டி ஷார்ட்சுக்குள்ள புகுந்துட்டிருக்கேன்..'

'ஹே.. பாத்தியா... விளையாடாத ரகு... எங்க வேலை செய்றேன்னு கேட்டேன்..' என்று சிரித்தாள், அந்த சிரிப்பு ரகுவை என்னவோ பண்ணியது.

'நான் MNC Quality Analyst வர்க் பண்றேன்.. நீ..?'

'நான் E.E.E. படிக்கிறேன்... 5th Semester'

'... காலேஜ் போற பொண்ணா... உனக்கெதுக்கு இவ்வளவு காஸ்ட்லி ஃபோன்..'

'இதோ, உன்னோட இப்பை பேசிட்டிருக்கேன்ல, அதுக்குத்தான்..'

இருவரும் சுமார் 2 மணிநேரம் காது சூடாகிப் போகுமளவுக்கு பேசினார்கள். இந்த 2 மணிநேரம் அவர்கிளிடையே பயங்கர நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவள் குரலில் கிறங்கிப்போயிருந்த ரகுவிற்கு அவளைப் பார்க்கும் எண்ணம் பயங்கர ஆவலாக மாறியிருந்தது.

'ஹே நிரு, உன்னை இப்பவே நேர்ல பாக்கணும்டி..'

'எனக்கும்டா, உன்னை பாக்கணும்போல இருக்கு...'

'நீ எதுக்கு நெல்லூர் போனே, இப்பவே கிளம்பி வா..'

'வந்துடவா...'

'வா, என் அட்ரஸ் சொல்றேன், இப்பவே கிளம்பி வா..'

'ஆசையப் பாரு.... என்னைப் பாக்க அவ்வளவு ஆசைன்னா, என் ஃபோன் இமேஜ் கேலரில போனேன்னா எக்கச்சக்க ஃபோடோஸ் இருக்கு... நான் என் தம்பி, என் அப்பா அம்மா, எல்லாரோட ஃபோட்டோவும் இருக்கு.. ஆசைதீர பாத்துக்கோ.. சரியா..'

'அப்படியா.. இரு..' என்று கூறியவன் இணைப்பை ஹோல்டில் போட்டுவிட்டு, மொபைலில் அவளது ஃபோட்டோவைத் தேடிப்பிடித்தான். நிரூபா, ஓஹோவென்ற அழகியில்லையென்றாலும், வசீகரமான பார்வையுடன், களையாக இருந்தாள். ரகுவிற்கு அவளை மிகவும் பிடித்துப் போனது, கடவுளாகப் பார்த்து, அவளது செல்ஃபோனை இவனுக்கு கிடைக்குமாறு செய்திருப்பதாகவே நினைத்தான்.

இணைப்பை மீண்டும் உயிர்ப்பித்தான்.

'ஹே... உன்னைப் பாத்தேன்..' என்று குழறலாக சொன்னான்.

'நான் எப்படி இருக்கேன்..?'

'ரொம்ப அழகாயிருக்கே..'

'ஹே, பொய் சொல்லாத'

'நிஜமாடி, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..'

'சார், சார், ஏன் இப்படி வழியிறீங்க... இப்போத்தான் நாம பேச ஆரம்பிச்சிருக்கோம்..'

'ஆமா, அதுதான் லக்-னு சொல்றது. உன் செல்ஃபோன் தொலைஞ்சி, எனக்கு கிடைச்சு, நாம பேசி, ஃப்ரெண்டாகி... இதெல்லாம் எவ்வளவு க்ளியரா நடந்திருக்குப்பாரு..'

'ம்ம்... அதுதான்டா ஆச்சரியமாயிருக்கு..'

'சரி, அப்புறம் உனக்கு எப்போ ஃபோன் பண்றது..'

'நான் என் ஃப்ரெண்டு நம்பர்லருந்துதான் உங்கிட்ட பேசிட்டிருக்கேன். நீ எனக்கு எப்ப வேணும்னாலும் ஃபோன் பண்ணு, அவகூடதான் இருப்பா..'

'ஹே உன் ஃப்ரெண்டு பேரென்ன..?' என்று கொஞ்சம் தாழ்ந்த குரலில் கேட்க, நிரூபாவிற்கு மறுமுனையில் கோபம் வருவதை ரகுவால் உணர முடிந்தது.

'ரகு..! உதை வாங்குவ... என் ஃப்ரெண்டுக்கும் சேத்து ப்ராக்கெட் போட பாக்குறியா..? ஒழுங்கா எங்கிட்ட மட்டும் பேசு.. '

'சரி மேடம், உங்கிட்ட மட்டும்தான் பேசுவேன் போதுமா..?'

'குட்... நல்ல பையன்..'

'சரிடி, இப்போதைக்கு bye... மறுபடியும் கால் பண்றேன்... Take Care..'

'ஓகேடா bye..'  என்று ஃபோனை கட்செய்தான், காது வலித்தது. தடவிக்கொண்டான். இருந்தாலும் தனது உடம்புக்குள் ஆண்ட்ரோஜென், அட்ரினலின் போன்ற எல்லா காதல் ரசாயனங்களும் படபடப்பாக செயல்பட ஆரம்பித்தன...

காற்றில் மிதப்பது போல் உணர்ந்தான். அவனுக்கு ஏன் ஃபோனை வைத்தோம் என்றிருந்தது. மறுபடியும் எப்போது ஃபோன் செய்யலாம் என்று அதையே யோசித்துக் கொண்டிருந்தான்.

மாலை வந்தது.

காதலுக்கும், மாலைப்பொழுதுக்கும் எல்லாக் கவிஞர்களும் முடிச்சுப்போட்டிருந்ததால், ரகுவிற்கும் அது பயங்கர வேதனையளித்தது. செல்ஃபோனிலிருக்கும் நிரூபாவின் புகைப்படத்தை எவ்வளவு நேரம் பார்த்துக்கோண்டிருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஒரு நல்ல ஃபோட்டோவைத் தேர்ந்தெடுத்து அதையே மொபைல் வால்பேப்பராக வைத்தான்.

நடுவில் அவனது செல்ஃபோனில் கால் வந்தது. ஓடிச்சென்று எடுத்துப் பார்த்தான். அம்மா காலிங் என்று டிஸ்ப்ளேயில் தெரிந்தது

ஏனோ, ஃபோனை எடுக்கவில்லை... சைலண்ட்டில் போட்டுவிட்டு மீண்டும் கட்டிலில் போய் படுத்தபடி நிரூபாவின் ஃபோட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மணி இரவு 11.40...

ஃபோன் செய்து பார்ப்போம் என்று துணிவுடன், நிரூபாவின் தோழி நம்பருக்கு ஃபோன் செய்தான். சட்டென இணைப்புக் கிடைத்தது.

'ஹாய்டா ரகு..'

'ஹே... என்னடி ஒரு ரிங் கூட போல அதுக்குள்ள எடுத்துட்ட..'

'நீ ஃபோன் பண்ணமாட்டியான்னு எவ்வளவுநேரமா வெயிட் பண்ணிட்டிருக்கேன் தெரியுமா..?'

'அவ்வளவு வெயிட் பண்ணவ நீயே ஃபோன் பண்ணவேண்டியதுதானே..'

'ஹே, இது என் ஃப்ரெண்டோட ஃபோன்-டா, நான் ஏற்கனவே 2 மணிநேரத்துக்கு மேல பேசினதுல அவ டாக்டைம் பேலன்ஸ் கம்மியாயிடுச்சு... அவகிட்ட போய் நான் எப்படி இன்னொரு ஃபோன் பண்ணிக்கட்டுமான்னு கேக்குறது..'

'அதுவும் கரெக்ட்தான், ஒரு மிஸ்டு காலாவது கொடுக்கலாமில்ல..'

'சாரி, நான் யாருக்கும் மிஸ்டு கால் கொடுக்கமாட்டேன். எனக்கு அது பிடிக்காது..'

'.. குட்.. அப்புறம்..'

'அப்புறம்.. நீதான் சொல்லணும்..'

'நீ ரொம்ப அழகாயிருக்கே..'

'அதான் காலையிலியே சொல்லிட்டியே..'

'ஆனா, இரவு நேரத்துல இன்னும் அழகா தெரியிறியே..!'

'டேய்... ஏன் இப்படில்லாம்...'

'நிஜமா சொல்றேன்.. உன் ஃபோட்டோ பகலைவிட இரவுல பாக்குறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு...'

'இந்நேரத்திலயுமா என் ஃபோட்டோவைப் பாத்துட்டிருக்கே..'

'ஆமா..'

'அடப்பாவி, தூங்கமாட்டியா நீ..'

'இல்ல, வழக்கமா, நைட் டைம்ல ஏதாவது ஒரு பயங்கர திகில்பட டிவிடி போட்டு பாத்துட்டிருப்பேன். ஆனா, இன்னிக்கி, உன் ஃபோட்டோவைத்தான் பாத்துட்டிருந்தேன்.'

'அப்போ நான் அவ்வளவு டெர்ரரா இருக்கேனா..'

'ஹே நான் அப்படி சொல்லலை, என் தினசரி நடவடிக்கைய நீ மாத்திட்டேன்னு சொல்லவர்றேன்..'

'ம்ம்ம்.. குட்... ஆமா! அதென்ன பழக்கம் நைட்ல தூங்காம பேய்படத்தைப் பாக்குறது..?'

'அதுவா, தனியா பேய்படத்தை பாத்து பயந்துக்கிட்டே வியர்த்து வழிய தூங்கிட்டு காலையில எழுந்தா ஃப்ரெஷ்ஷா இருக்கும், ஒரு மாதிரி தைரியம் உடம்பெல்லாம் பரவி, நான்தான்டா தைரியசாலின்னு ஒரு கான்ஃபிடென்ஸ் வரும்..'

'என்ன கான்ஃபிடென்ஸோ போ...' என்று ஒரு சின்ன நிசப்த்ததிற்கு பிறகு மீண்டும் 'அப்புறம்' என்று கிறக்கமாக நிரூபா கேட்க, அதை ரகு ரசித்திருந்தான். அதன்பிறகு இருவரும் அதிகாலை 3 மணி வரை பேசினார்கள். வாழ்க்கையில் ரகு யாரிடமும் இதுவரை இவ்வளவு நேரம் பேசியதேயில்லை... நிரூபாவும்தான். இருவருக்குள்ளும், காதல், காமம், சிநேகம், இப்படி எல்லாம் கலந்து ஓடிக்கொண்டிருந்தது.

சத்தியமாக இவள் எனக்குத்தான் என்று இவனும், இவன் எனக்குத்தான் என்று அவளும் நினைத்துக்கொண்டார்கள்.


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

(தொடரும்...)

இந்தக் கதையின் அடுத்த பாகத்தைப் (பாகம் 2) படிக்க இங்கே சொடுக்கவும்


Signature

6 comments:

யாழ் பறவை said...

Superrrrrrrrrrr sir
unmai sampavama§

Anonymous said...

தொடருங்கள் .எல்லாம் ரெடி யா இருக்கு போல

DREAMER said...

வாங்க யாழ் பறவை...
//unmai sampavama//
ஹா ஹா..! இது முழுவதுமா உண்மை சம்பவமில்லைங்க..! PARTIALLY சொல்லலாம்! வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்..!

வாங்க A. சிவசங்கர்,
அடுத்த பாகம் கிட்டத்தட்ட ரெடியா இருக்கு..! சீக்கரமா போஸ்ட் பண்ணிடுறேன்..! வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

தொடருங்கள்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தொடங்கியாச்சா? ட்ரீமர் கதை இப்படி சாதாரண லவ் ஸ்டோரியா போகாதே. அடுத்த பாகத்தில் நிச்சயம் திசை மாறிடும். சிறப்பான ஆரம்பம்

DREAMER said...

வாங்க T.V.ராதாகிருஷ்ணன் சார்,
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி! தொடர்கிறேன்.

வாங்க நாய்க்குட்டி மனசு,
ட்ரீமரின் கதையெழுதும் பேட்டர்ன்-ஐ நல்லாப் புரிஞ்சி வச்சிருக்கீங்க...! உண்மைதான், அடுத்த பாகத்தில் கதை திசைமாறும்..! வாசிப்புக்கு நன்றி!

Popular Posts